Showing posts with label மீள்காடாக்கம். Show all posts
Showing posts with label மீள்காடாக்கம். Show all posts

Monday, January 7, 2019

பசுமைப்பந்து இயக்கம்: சொல்லிய வண்ணம் செயல்!



அண்மையில் இலங்கை விமானப்படையினரால் இலங்கையிலேயே முதன் முறையாக மீள்காடாக்கத்தைக் கருத்தில் கொண்டு விதைப்பந்துகள்  வீசப்பட்டமை பற்றி ஊடகங்களிலே அறிந்திருப்பீர்கள். மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் , பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை விமானப்படை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஏறத்தாழ 5000 விதைப்பந்துகளை வடமத்தியமாகாணத்தின் நொச்சியாகம பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலே வீசின. இலங்கை விமானப்படையின் ஊடகப்பிரிவின் தகவலுக்கமைய இலங்கையின் வனப்பகுதிகளின் சதவீதத்தை  அதிகரிக்கும் நோக்கிலேயே இச் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  அவ்விதைப்பந்துகளைத் தயாரித்து வீசும் நல்லெண்ணத்தை விதைத்த முன்னோடியாகத் திகழ்பவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.
சில வாரங்களுக்கு முன்னர் முக நூலிலே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சூழலிலியல் தொடர்பான கற்கை நெறியொன்றின் செயன்முறைக் கையேட்டை எதேச்சையாகக் காணக்கிடைத்தது. அதில் விதைப்பந்து தயாரிப்பும் ஒரு செயன்முறையாக க் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பின் பாடத்திட்டங்களிலே நடை முறை விடயங்களை உள்ளடக்கியதான செயன்முறைகளை அரிதாக க் காணும் சூழலே இலங்கையில் நிலவுகிறது. இந் நிலையில் காலத்தின் தேவையை ஒட்டியதாக மிகவும் பயன்மிக்கதான ஒரு செயன்முறை  பல்கலைக்கழக மாணவர் மத்தியில்   அக்கையேட்டினூடு அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையைக் கண்டு அது பற்றி மேலும் தேடியபோது விதைப்பந்துகள் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இவ்விதைப்பந்துகளை வீசும் பாரம்பரியம் கிரேக்க காலத்திலேய பின்பற்றப்பட்டிருந்தது . ஆயினும் நவீன உலகிலே ஜப்பானில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக இந்தியாவிலும் தாய்லாந்திலும் கூட இவ்விதைப்பந்துகளை வீசி மரம் நடும் முறைமைகள் மிகவும் பிரபலமானவை. இயற்கை முறைமைகள், சூழலைப்பாதுகாக் க க் கூடிய வாழ்க்கை முறைமைகள் என வேறொறு பரிணாமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சமூகங்கள் மத்தியிலே இவ்விதைப்பந்துகள் பிரபலமானவை.  மீள் காடாக்கல் எனவோ அல்லது மர நடுகை எனவோ மரங்களை நட்டு வளர்த்தல் போல பாதுகாப்பான வகையில் விதைகளை நடுகை செய்து எறிவதன் மூலம் மரங்களை வளர்க்கும் முறைமையே ‘விதைப்பந்து எறிதல்’ என அழைக்கப்படுகிறது. அத்தகையதோர் முறைமையை இலங்கையில் அதுவும் குறிப்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகம் செய்த பெருமை சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடை ச்  சாரும்.

இவ்விதைப்பந்துகள் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன்  அவரைத் தொடர்புகொண்டபோது இந்த நற்செயற்றிட்டம் கருக்கொண்ட விதம் தொட்டு அதன் வெற்றிப்பாதை, எதிர்காலம், நிலைத்திருக்கும் தன்மை வரை தெளிவாக விளக்கியிருந்தார்.  1990-2005 வரையான 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் மொத்த வனப்பகுதி 17.74 சதவீதத்தால்  குறைவடைந்திருக்கிறது. அதே 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் முதன்மைக் காடுகள் 35.02 சதவீத த்தால் குறைவடைந்திருக்கின்றன. பெருந்தோட்டங்களோ  12.81 சதவீத்தால் குறைவடைந்திருக்கின்றன. இத்தரவுகள் யாவும் செயற்கைக்கோள்களின் உதவியுடன் உலகளாவிய ரீதியிலே  பேணப்பட்டு இணைய வெளியிலே வெளியிடப்பட்டவையாகும்.  இலங்கையின் காடுகளைப் பொறுத்த வரையிலே அவை பெரும் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கி வருகின்றன. இத்தகையதோர்  நிலையில் காடழிப்பினால் நாமும் எமது எதிர் கால சந்தியும் எதிர் நோக்கி வரும், எதிர் நோக்கவுள்ள ஆபத்துகளை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டுமாயின் மீள்காடாக்கலும் மரங்களை மீள் நடுகை செய்தலும் அத்தியாவசியமானவை.   

இத்தகையோர் வருத்தமிகு சூழலில் தான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின் எண்ணத்திலும் விதைப்பந்துகள் பற்றிய எண்ணக்கரு உருவானது. ஆரம்பத்திலே அவர் விதைப்பந்துகள், அவற்றின் தயாரிப்பு, பயன் பாடு தொடர்பிலான சகல விபரங்களையும் திரட்டினார். பின்னர் விதைப்பந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தயாரித்த விதைப்பந்துகளைப் பரீட்சார்த்தமாக பல்கலைக் கழக வளாகத்திலேயே வீசி விதைப்பந்துகளின் தாங்கும் திறன், விதைகளின் முளைதிறனையும் பரீட்சித்தார். புளி, வேம்புபோன்ற மரங்களின் விதைகளைக் கொண்டு பத்து பத்து விதைப்பந்துகளைத்தயாரித்து வீசி,  மழை போன்ற தோற்றப்பாடை செயற்கையாக உருவாக்கி அவதானித்தார். விதைகள் முளைக்கத்தொடங்கின. வீசியெறிந்தவற்றுள் ஏறத்தாழ 90 சதவீதமானவை முளைத்தன. ஆதலினால் இச் செயற்பாட்டை பாரியளவிலே பிரதி பண்ண இயலும் என்றதோர் உறுதியான முடிவுக்கு வந்தார். விதை சேகரிப்பிலிருந்து  விதைப்பந்துகளை வீசியெறிதல் வரை இச் செயற்பாட்டின் ஒவ்வொரு அங்கமும் தவறி முயல்தலாலும் அனுபவத்தினாலுமே மேம்பட்டு வெற்றியளித்தன எனக் குறிப்பிடுகிறார் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட். 

இலங்கை சிறியதொரு தீவாக க் காணப்படுகின்ற போதும் பிராந்தியங்களின் கால நிலை, மண்வளம்,  நீர் வளம் என்பவற்றுக்கிணங்க அதன் தாவரப்பரம்பல்கள்  வெகுவாக வேறுபடுவதுடன் பல்வகைமையில் செறிந்தும் காணப்படுகின்றன. இலங்கையிலே அதிகளவு பரப்பளவிலான முதன்மைக் காடுகளைக் கொண்ட மாகாணமாக வடபகுதி  திகழ்கின்றது என்பதிலும் எதுவித ஐயமுமில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுசரணையுடன் மீள்காடாக்கல் நடை பெறும் போது மிகச் சில தாவர இனங்களே பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் அவை மீள்காடாக்கல் நடைபெறும் பிராந்தியத்திலே இயற்கையாக வளரக்கூடிய தாவர இனங்களாகக் காணப்படுவதில்லை. அப்பிராந்தியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் தாவர இனங்களாகவே காணப்படுகின்றன. அத்தகைய தாவர இனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமைக்குப் பல நியாயமான காரணங்களும் இல்லாமலில்லை. அவற்றின் அரிமரப் பயன்பாடு, தாக்குபிடிக்கும் இயல்பு, துரிதமாக வளரும் தன்மை , முதிர்ச்சிக்காலம் போன்ற பல காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

ஆயினும் இளமைக்காலங்களில்  நாம் காணும் இடங்க ளிலெல்லாம் நின்ற பல காட்டுமரங்களை இப்போது நாம் காண்பது அரிதாகிவிட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிராமங்களிலே காலத்துக்கு க் காலம் ஏதாவதொரு காட்டுப்பழமேனும் எம் கைகளுக்கு கிடைத்து விடும். அவை ஈச்சம்பழம், நாவற்பழம், ஏன்  பாலைப்பழமாக்ககூட இருக்கும். இன்று பல குழந்தைகள் இப்பழங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க க் கூட மாட்டார்கள்.

 இலங்கையின் பல பகுதிகளிலே  மரங்களின் பெயர்கள், நீர் நிலைகளின் வடிவங்கள் போன்ற இயற்கையின் தோற்றப்பாடுகளை இணைத்ததாகவே ஊர்களின் பெயர்கள் காணப்படும். உதாரணமாக தேத்தாத்தீவு, இலுப்பைக்குளம், கருவல கஸ் வெவ போன்ற ஊர்களின் பெயரைக் குறிப்பிடலாம். அவை மரங்களின் பெயர்கள் என்பதைக் கூட அறியாத சந்ததியாக நாம் வாழும் காலமிது.

இத்தகையதோர் சூழலிலே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்  அணுகுமுறையானது நிலைத்திருக்க க் கூடிய எதிர்காலமொன்றை இலங்கையில்  தோற்றுவிக்க வல்லதாகவே எனது பார்வையில் தென்படுகிறது. முதலாவது விடயம் விதைப்பந்துகள் தயாரிக்கும் செயன்முறைபோன்றவற்றை அவர்  விஞ்ஞான பீடத்தின்  பாடத்திட்டத்திலே உள்ளடக்கியமையாகும். இது உரிய பாடத்தைக் கற்கும் சகல மாணவர்களுக்கும் கட்டாயமானதாகையால் அவர்களின் பங்கு பற்றலை உறுதி செய்யும். சாதாரணமாக உயிரியல், பௌதிக விஞ்ஞானப் பட்டதாரிகளாகி மாணவர்கள் பல்கலைக்கழகத்தை  வெளியேறிய பின்னர் தாம் கற்ற விடயங்களையும் கோட்பாடுகளையும் எங்ஙனம் நடைமுறை வாழ்க்கையிலே பிரயோகிப்பதென்ற ஐயம் மாணவர்களுக்கு எழும். இத்தகைய நடைமுறை விடயங்கள் கற்பிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்படும் போது அவர்களால் பட்டக்கல்விக்குப்பின்னரான வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள இயலும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள்  நான்காவதான ‘தரமான கல்வி’ எனும் இலக்கின் மூன்றாம் , ஏழாம் அடைவுகளை அடவதற்கு வழி வகுக்கும்.

இரண்டாவதாக விதைகள் சேகரிப்பு தொடர்பிலான அவரது அணுகு முறை பற்றியும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.  அவர் கற்பிக்கும் பிரயோக விஞ் ஞான பீடத்திலே பெரும்பாலான மாணவர்கள் சிங்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்துடன் பெரும்பாண்மையானோர் பெண்பிள்ளைகளுமாவர். அம்மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாந்த அழகியற் கற்கை நிறுவனத்தின் மாணவர்களுக்கும் விடுமுறைக்கு வீடு செல்லும் போது விதைகளைச் சேகரித்துவரும் பொறுப்பு  வழங்கப்பட்டது. தற்போது காண்பதற்கு அரிதான மரங்களைப் பற்றி தத்தமது பெற்றோரிடமும் ஊரிலுள்ள முதியவர்களிடமும் கேட்டறிந்து அவற்றின் விதைகளைச் சேகரித்து அவற்றின் விபரம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தையும் பூர்த்தி செய்துகொண்டு கொண்டு வருதலே அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். அவ்வாறு காண்பதற்கு அரிதாகிக்கொண்டு வரும் மரங்களின் விதைகளைக் கொண்டு விதைப்பந்துகளைத் தயாரித்து அம்மரங்களின் பரம்பலை அதிகரிப்பதோடு மட்டுமன்றி வனப்பகுதிகளைப் பெருக்கி காட்டு விலங்கிங்களின் வாழிடத்தையும் விஸ்தரித்து அவற்றின்  நிலைப்பை உறுதி செய்தலே  இச்செயற்பாட்டின் நோக்கமாகும்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளிலே பதினைந்தாவதான ‘நிலம் மீதான வாழ்வு’ எனும் இலக்கின் இரண்டாம், ஐந்தாம், எட்டாம் இலக்குகளை இலங்கை அடைவதில் இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும்.
 

சிறு துளி பெரு வெள்ளமென்பர்.மாணவர்கள் விடுமுறை கழிந்து பல்கலைக்கழகம் திரும்பிய போது கொண்டு வந்த இலட்சக்கணக்கிலான விதைகள் அப்பழமொழியின் தார்ப்பரியத்தை  விளக்கின. ஏறத்தாழ 130 பாரம்பரிய இனத் தாவரங்களின் விதைப் புதையலே கிடைக்கப்பெற்றது எனலாம். இளைஞர்களின் சக்தி அளப்பரியது  என்ற விவேகாந்தரின் கூற்றின் பின்னாலிருந்த தீர்க்க தரிசனம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.  ஒய்வு நேரங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் இணைந்து விதைப்பந்துகளை உருவாக்கினர்.  விதைப்பந்துகளைப் பக்குவமாக உருவாக்குவதில் பெண்பிள்ளைகளின் பங்களிப்பு அதிகமாக இருந்து எனலாம்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் ஐந்தாவதான ‘பால் நிலை சமத்துவம்’ என்ற இலக்கின் ஐந்தாம், எட்டாம் அடைவுகளை அடைவதற்கு இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும். 


வனப் பாதுகாப்புத் திணைக்களமும் வன விலங்குகள் திணைக்களமும் கூட கை கோர்த்தன.  மாணவரின் சக்தியும் நல்லாசானின் வழிகாட்டலும் தற்போது  பிராந்திய ரீதியிலான பசுமைப்பந்து இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பெயரும் புகழும் தேவையில்லை. இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் கைங்கரியம் யார் குற்றியேனும் அரிசியாகட்டும் என்பதே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்   சிந்தனையாக இருக்கிறது,  அவரது  நல்லணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பலர் தாம் வாழும் பிராந்தியங்களிலெல்லாம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனித்து வருகின்றனர். இப்பசுமைப்பந்து இயக்கத்தை தேசிய ரீதியிலே முன்னெடுத்து இயற்கை அன்னையைக் காக்கும் நல்லெண்ணத்தை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடத்துவதே தன் கனவு எனக்கூறி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்  என்ற வள்ளுவன் வாக்கை  நிரூபிக்கிறார்
சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.

கல்வியின் வீரியம் பல மடங்குகளாய்ப் பெருகும் என்பதற்கும் மாற்றமொன்றை உருவாக்க, நாம் வாழும் வாழ்வை மாற்ற முயற்சிக்க உயர்கல்வி நிறுவன ங்களால் எத்தகைய பங்களிப்பைச் செய்ய இயலும் என்பதற்கும் இலவசமாக, மக்களின் வரிப்பணத்திலே இலங்கையில் நாம் கற்ற கல்வியை எங் ஙனம் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கும் இம்முயற்சி சிறந்தோர் உதாரணமாகும். இப்பசுமைப்பந்து இயக்கத்தின் பாதையில் நடந்து எம் வனங்களின் தலையெழுத்தையும் மாற்றிப் பார்ப்போமே?