Friday, June 18, 2010

அடையத் தவறிய இலக்குகளால் அழிந்து போகும் உயிரினங்கள்



இயற்கை தொடர்பாக நாம் தவறான முடிவொன்றையெடுத்து அது தவறாகவே முடியும் போது இயற்கை பல்வேறு முறைகளில் எம்மைத் தண்டிப்பதை அடிக்கடி கண்கூடாகப் பார்க்கிறோம். மாறாக அதே இயற்கை தொடர்பாக நாம் நல்லதோர் முடிவையெடுத்து அதனை அரவணைத்துச் செல்லும் போது அது மேலும் பல சேவைகளை வழங்கி எம்மை மகிழ்விக்கிறது.

எமக்கெல்லாம் அப்பாற்பட்ட வலிமைமிகு சக்தியாகவே இயற்கை தெரிகிறது. அந்த இயற்கை உயிர்ப்பாய் நிலைப்பதற்கு உயிர்களுக்கிடையிலான பல்வகைமை அவசியமாகிறது. இப்பூவுலகின் உயிர்ப்பல்வகைமையானது வேகமாகச் சிதைந்து அழிவுறும் போக்கை இன்று அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கு இற்றைக்கு ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னரே உணர்ந்து எதிர்வுகூறப்பட்டது.

2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல நாடுகள் இணைந்து அப்போது உயிர்ப்பல்வகைமை இழக்கப்பட்டுவரும் வீதத்தை 2010ஆம் ஆண்டளவில் குறைவடையச் செய்வதாக, ஏற்பாடொன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தன.

அந்த ஏற்பாடானது, உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய ரீதியிலான வறுமை ஒழிப்பிலே பங்களிக்கு முகமாக, உயிர்ப்பல்வகைமை அழிவடையும் வீதத்தைக் குறைத்து இப்பூவுலகில் வாழும் சகல உயிரினங்களுக்கும் நன்மை பகரும் நோக்கை அடிப்படையாகக் கொண்டது.

பேண்தகு அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற உலக மாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திலும் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான புதிய குறுகியகால இலக்காக உள்வாங்கப்பட்டது.

ந்த ஏற்பாட்டை முன்னெடுப் பதற்கான செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை ‘மிlobal கிioனீivலீrsity லிutlook (மிகிலி)’ எனும் பெயரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதைக் குறைப்பதற்கான கால இலக்காக 2010 ஆம் ஆண்டினைக் கொண்டிருந்தமையினால், 2010ஆம் ஆண்டு உயிர்ப் பல்வகைமைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் உயிர்ப்பல்வகைமை ஏற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பாகவும் 2010ஆம் ஆண்டிற்கான இலக்குகள் அடையப்பட்டனவா என்பது தொடர்பாகவும் ‘Global Biodiversity Outlook (GBO)’ என்ற அறிக்கையின் மூன்றாவது பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் ஆரம்பத்திலேயே, ‘2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் எவையுமே அடையப்படவில்லை’ என்ற கூற்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையதோர் முடிவு எடுக்கப்படுவதற்கு பல காட்டிகள் காரணமாயின.

ஏற்கெனவே அருகிவரும் அபாயத்தை எதிர்நோக்கி வந்த இனங்கள் இன்னும் அருகியுள்ளன. ஈரூடகவாழிகள் கூடியளவிலான அபாயத்தை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, பவள இனங்களும் மிகவேகமாக அழிவடைந்து வருகின்றன. ஏறத்தாழ 25 சதவீதமான தாவரங்கள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றன.

அனுமானிக்கப்பட்ட குடித்தொகைகளின் அடிப்படையில் முள்ளந்தண்டுள்ள விலங்கினங்களின் எண்ணிக்கை, 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2006 ஆம் ஆண்டு மூன்றிலிரண்டு பகுதியாகக் குறைந்து விட்டிருந்தது. அயனவலயம் மற்றும் நன்னீர் நிலைகளில் வாழும் இனங்கள் பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன.

உலகின் பல பாகங்களிலுமுள்ள இயற்கை வாழிடங்கள் அவற்றின் சமநிலை குலைக்கப்பட்டு அழிவடைந்து செல்கின்றன. சில பிராந்தியங்களில் தாழைகள் மற்றும் அயன வலயக் காடுகள் அழிவடையும் வீதம் மட்டுமே குறைந்துள்ளது.

நன்னீர் நிலைகளுடனான சேற்று நிலங்கள், கடல்களிலுள்ள பனிப் போர்வைகள், மீன்களின் வாழிடமாக இருக்கும் பாறைகள் ஆகியன பாரதூரமான அழிவை எதிர்நோக்கி வருகின்றன.

காடுகள் சிதைக்கப்பட்டு பாகங்களாகப் பிரிக்கப்படல் மற்றும் காடுகள், ஆறுகள், அவற்றுடன் தொடர்புடைய சூழல் தொகுதிகளின் தரம் இழக்கப்படல் ஆகிய செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

விவசாயத் தொகுதியிலுள்ள பயிர்கள் மற்றும் கால்நடைகளின் மரபுரிமை ரீதியிலான பல்வகைமை இழக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதற்குக் காரணமான அழுத்தங்களென, வாழிடங்கள் மாற்றப்படல், மிகை பாவனை, மாசுறுதல், ஆக்கிரமிப்பு இயல்புடைய வேற்று இனங்கள், மற்றும் காலநிலை மாற்றம் ஆகியன இனங்காணப்பட்டிருந்தன. இந்த ஐந்து அழுத்தங்களும் 2002 இலிருந்து தொடர்ந்து ஒரே அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றனவே தவிர அவற்றின் பாதிப்பு குறைவடையவில்லை.

மொத்தத்தில் உயிர்ப்பல்வகைமை இழக்கப்பட்டு வரும் வீதம் எந்த ஒரு மனித செயற்பாட்டாலும் குறைவடையவில்லை. மாறாக அதிகரித்து, மனிதனின் ஆரோக்கியமான எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காகத் திறக்கப்பட்ட பாதைகளில் ஒன்று 90 சதவீத வெற்றியை அளிக்கவில்லை என்பதே இந்த அறிக்கை வெளிப்படுத்தும் விடயங்களின் அடிப்படையாக இருக்கிறது. இது நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணமாகும். ஏனெனில் உலகளாவிய ரீதியிலே நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஏற்பாட்டை அந்த நாடுகளாலேயே நடைமுறைப்படுத்த முடியாமல் போயிற்று.

உயிர்ப் பல்வகைமை இழக்கப்பட்டால், சூழல் தொகுதிகள் மனிதனுக்கு வழங்கும் சேவைகள் யாவுமே பாதிக்கப்படும்.

அவை பாதிக்கப்பட்டால், உணவு, தூய நீர், நார்ப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான வழி முற்றாகத் தடை செய்யப்பட்டுவிடும். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, மாசுக்களை வடிகட்டுதல், இயற்கை அனர்த்தங்களிலிருந்தான பாதுகாப்பு போன்ற பல சேவைகள் பாதிக்கப்படும். அவை மட்டுமன்றி ஆன்மீக, சமய ரீதியான மகத்துவங்கள், அறிவையும் கல்வியையும் தேடுவதற்கான சந்தர்ப்பங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற கலாசார விடயங்களும் குறைவடைந்துவிடும்.

இவற்றை உலக நாடுகள் உணராமல் இருக்கவில்லை. அதேபோல முயற்சிகளையும் எடுக்காமல் இருக்கவில்லை. ஆனால், முயற்சிகள் உண்மையான அக்கறையுடன் மேற்கொள்ளப்படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

2010 ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக நாடுகளைத் தூண்டியதை எவராலும் மறுக்கமுடியாது. ஏறத்தாழ 170 நாடுகள் அவ்வாறு உயிர்ப்பல்வகைமையைப் பேணுவதற்கான உத்திகளையும் செயற்றிட்டங்களையும் உருவாக்கியுள்ளன. சர்வதேச மட்டத்திலான நிதி உதவிகளும் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி புதிய பொறிமுறைகளை உருவாக்கி விஞ்ஞான முறையிலான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் சர்வதேச உதவிகள் கிடைத்து வருகின்றன.

இவ்வாறு உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகள் சில குறிப்பிட்ட பிரதேசங்களிலும், சில குறிப்பிட்ட இனங்கள் தொடர்பாகவும் அளவிடக்கூடிய பெறுபேறுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான இலக்கு அடையப்படாவிட்டாலும் இந்தப் பெறுபேறுகள் முழு உலகுக்குமே ஒரு உண்மையை உணர்த்தியிருக்கின்றன. அதாவது, தேவையான வளங்களும் அரசியல் உறுதிப்பாடும் இருந்தால் உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுதலை பெரிய அளவில் குறைக்க முடியுமென்பதே அவ்வுண்மையாகும்.

ஆக்கிரமிக்கும் இயல்புடைய வேற்று இனங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியானது பல இனங்களின் அழிவடையும் வீதத்தைக் குறைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பரந்த அளவிலே அக்கறையுடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய போக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்தால் உயிர்ப்பல்வகைமை இன்னும் வேகமாக இழக்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அயனவலயக் காடுகள் விவசாயத்துக்காகவும் உயிர் எரிபொருளுக்காகவும் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றமோ, ஆக்கிரமிப்பு இயல்புடைய இனங்களின் அறிமுகத்துக்கும் சூழல் மாசுக்கும் காரணமாக அமைவது மட்டுமன்றி பாரிய அணைக் கட்டுகளின் உருவாக்கத்துக்கும் வழி வகுக்கிறது. புதிய அணைக்கட்டுகளால் நன்னீர் நிலைகளின் உயிர்ப்பல்வகைமை பாதிப்புக்குள்ளாகிறது.

மீன்களை மிகையாகப் பிடித்தலானது கடற் சூழல் தொகுதிகளின் சமநிலையைக் குலைப்பதுடன், மீன்களின் குடித்தொகை அழிவுறவும் வழிசமைக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், மீன்பிடித் தொழிலுக்கான வாய்ப்பு இல்லாமலே போய்விடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இனங்களின் பரம்பலில் நிகழும் இத்தகைய சடுதியான மாற்றங்கள் இனங்களை இடம்பெயரச் செய்கின்றன. இதனால் சூழல் தொகுதிகளின் சமநிலை குலைக்கப்படுகிறது.

சூழல் தொகுதிகள் தமது தரத்தை இழக்கும் வாய்ப்புகளும் பெருமளவில் அதிகரித்துவருகின்றன. காடழிப்பு, காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தால் உயிர்ப்பல்வகைமை செறிந்த அமேசன் காடு பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

17 சதவீதத்தையும் தாண்டியுள்ள அமேசன் காடழிப்பு வீதம் 20 - 30 சதவீதத்தை அண்மித்தால், உருவாகப் போகும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்குமென எச்சரிக்கப்படுகிறது.

நன்னீர் ஏரிகளில் கலக்கப்படும் பொஸ்பரஸ் மற்றும் நைதரசன் கழிவுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் உணவுப் பாதுகாப்பைச் சிதைத்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அவற்றின் சுற்றுலாத்துறை வருமானத்திலும் பாரிய வீழ்ச்சியைக் காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் கொடுமையான நோய்களும் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றன.

உயிர்ப் பல்வகைமையும் சூழல் தொகுதிகளும் நிலையானவையல்ல. அவை கணத்துக்கணம் மாற்றங்களை எதிர்நோக்குபவை. ஆகையால் அங்கே விஞ்ஞான ரீதியாக நிச்சயமற்ற தன்மையொன்றும் காணப்படுகிறது. ஆனால் எமது அக்கறையீனத்துக்காக நாம் கூறும் காரணம் அந்த நிச்சயமற்ற தன்மையாக அமைந்துவிடக்கூடாது.

இனிவரும் காலங்களிலேயாவது நாம் வினைத்திறன் மிக்க செயற்றிட்டங்களை அக்கறையுடன் செயற்படுத்த முயல வேண்டும். நிலப் பாவனை, சக்தி, நன்னீர் ஆகியவற்றுக்கான கேள்வி ஒழுங்கான வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

வளங்களின் வினைத்திறனற்ற, பேண்தகு தன்மையற்ற பாவனை மற்றும் கழிவுகளின் வெளியேற்றம் ஆகியன இழிவளவாக்கப்பட வேண்டும்.

நிலப் பாவனை முறைமைகள், நீர்நிலைகள் மட்டுமன்றி கடல் வளங்களும் உயிர்பல்வகைமை பேணப்படக்கூடிய வகையிலே பேணப்பட வேண்டும்.

இனங்களின் மரபு ரீதியான இயல்புகளின் அடிப்படையில் பெறப்படும் பட்டறிவும் நன்மைகளும் சகல நாடுகளிடத்திலும் சமமாகப் பகிரப்பட வேண்டும்.

தொடர்பாடல், கல்வி, மற்றும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், உயிர்ப்பல்வகைமை பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

உயிர்ப்பல்வகைமையால் கிடைக்கும் உண்மையான நன்மைகள் பொருளாதாரச் சந்தையில் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மையன. ஆனால், அதனைப் பலர் உணர்வதில்லை. உயிர்ப்பல்வகைமையின் பொருளாதார ரீதியிலான பெறுமதி உணரப்பட வேண்டும்.

உயிர்ப்பல்வகைமை இழக்கப்படக் காரணமாகும் நேரடியான காரணிகள் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

இழக்கப்பட்ட வளங்களையும் சூழல் தொகுதிகளையும் மீள உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர்ப் பல்வகைமை இழக்கப்படும் வீதம் இனியும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென முழு உலகுக்கும் விடுக்கும் எச்சரிக்கையாகவே இந்த அறிக்கை தெரிகிறது.

இன்னும் இரண்டொரு தசாப்தங்களுக்கு நாம் உயிர்ப்பல்வகைமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளே மனித நாகரிகத்தின் நீடிப்பு தொடர்பான முடிவை எடுப்பனவாக அமையும்.

ஏனெனில் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாக நீடித்து வந்த மனித நாகரிகம் சூழலில் தங்கியிருந்தமையினாலேயே இதுவரை காலமும் நிலைத்திருந்தது.

எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தத் தவறினால், மனித இனம் மட்டுமன்றி சகல இனங்களும் அழிந்து உயிர்களே அற்ற கோளாக பூமி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment