Thursday, June 17, 2010

ஊருக்கே உணவு வழங்கிய நிலம் இன்று கட்டாந்தரையான பாலைவனமாய்..தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையிலே, பெருங்காப்பியம் செய்யும் புலவர்கள், ஐவகை நிலங்களையும் பாடவேண்டுமென்பது சட்டமாகும். காப்பியமொன்று பெருங்காப்பியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதில் எல்லா நில வர்ணனையும் பாடப்பட்டிருக்க வேண்டும்.

கம்பராமாயணத்தைப் பாடத் தொடங்கிய கம்பனுக்கு இது பெருஞ்சிரமமாக இருந்தது. ஏனெனில், கம்பராமாயணத்திலே மூன்று இடங்கள் பாடப்படுகின்றன. ஒன்று அயோத்தி; மற்றையவை இலங்கையும் கிஷ்கிந்தையுமாகும்.

இவை மூன்றிலும் பாலையைப்பாடும் வசதி கிடைக்கவில்லை அயோத்தியிலே தசரதன் நேர்மையுடன் அறம் ஓங்க நல்லாட்சி புரிந்து வந்தான். அங்கு மழை பொய்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே அயோத்தியிலே பாலை நிலத்தைப் பற்றிப் பாடமுடியாமல் இருந்தது. இலங்கையிலும் கிஷ்கிந்தையிலும் அரசர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தனர்.

தேவர்களையும் மிரட்டி ஆட்சி புரிந்தனர். ஆதலால் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருணபகவானே நினைத்தாலும் மழையைப் பொய்ப்பிக்க முடியாது. ஆதலால் அந்தப் பகுதிகளிலும் பாலை நிலத்தைப் பாட முடியாத நிலை கம்பனுக்கு ஏற்பட்டது.

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை யென்பதோர் வடிவமாகும்’ எனத் தமிழிலக்கியம் கூறுகிறது.

முல்லை நிலமும் குறிஞ்சிநிலமும் மழைபொய்த்தால், பாலை நிலமாகுமெனத் தெரிவிக்கிறது. மருத நிலத்திலே விவசாயிகள் நீரைத்தேக்கி வைத்திருப்பர். ஆகையால் மருத நிலத்தின் நிலக்கீழ் நீர்வளம் சிறந்ததாகக் காணப்படும். எனவே அது ஒருபோதும் பாலையாகாது.

நெய்தல் நிலத்திலே எப்போதும் நீர் காணப்படும் ஆகையால் அதுவும் பாலையாகாது. ஆனால் குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்கள் அத்தகையனவல்ல. அந்நிலங்களில் மழை பொய்த்தால், அவை பாலையாக மாறிவிடும்.

கம்பன் ஒன்றும் சளைத்தவனல்லவே! வசிஷ்டரிடம் அரண்மனைக் கல்வியை முடித்த இராம இலக்குமணர் விசுவாமித்திரரிடம் குருகுலக் கல்வியைக் கற்பதற்காக அவருடன் குருகுலத்தை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் பசுமையான சோலைகளையும் வனங்களையும் கடந்தபின் பாலைநிலத்தை அண்மிப்பதாக கம்பன் பாடுகிறான்.

தாடகையெனும் அரக்கியால் சோலைவனம் பாலை வனமாகியதாகக் குறிப்பிட்டு தாடகையின் அறிமுகத்துடன் பாலைநில வர்ணனையையும் பாடி முடிக்கிறான்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கம்பன் தர்க்க ரீதியாகச் சிந்தித்துப்பாடிய விடயம் தான் இன்று உலகளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்டிருக்கும் ‘பாலைவனமாதல்’ என்ற பதத்தின் வரைவிலக்கணத்திலும் காணப்படுகிறது.

கிறிஸ்துவுக்குப்பின் 3 ஆம் நூற்றாண்டளவிலே, சகாராப் பாலைவனப் பகுதியில் சில நீரூற்றுக்கள் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்றோ, இந்த நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகிறது.

இன்றைய உலகிலே காணப்படும் எந்த ஒரு பாலை நிலமும் இயற்கையாக உருவானதல்ல. அவை ஒவ்வொன்றும் தாம் ஒரு காலத்தில் பசுமையாக இருந்த வரலாற்றைக் காவியப்படி இன்று பாலை நிலங்களாகக் காட்சிதருகின்றன. அவை இயற்கையின் செயற்பாடுகளால் உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், பாலைநிலங்கள் உருவாவதற்கு மனிதனே காரணமாகின்றான்.

அதற்கு மிகவும் சிறந்த உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவின் ஷிouth கிowl பாலைவனம் காணப்படுகிறது. 1920 களில் ஐக்கிய அமெரிக்கா பொருளாதார நெருக்கடியொன்றை எதிர்கொண்டது.

அந்நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள விவசாயிகள், அதிக இலாபத்தை ஈட்டுமுகமாக பரந்த நிலப்பரப்பிலே புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொண்டனர். ஒரு தசாப்தத்திற்குள்ளேயே நாடு முழுவதும் வரட்சி ஏற்படத் தொடங்கியது. சம வெளிகளில் பலத்தகாற்று வீசியதால் மண் அள்ளிச் செல்லப்பட்டது.

மிகையாக உழப்பட்டதாலும் மந்தைகளால் மிகையாக மேயப்பட்டதாலும் தளர்ந்து போயிருந்த மண்ணின் மேற்படையை காற்று இலகுவாக அள்ளிச் சென்றது. நகரங்களெங்கும் தூசுப்படலம் நிறைந்து காணப்பட்டது. விளைவு பல சந்ததிகளுக்கு உணவு வழங்கிய வளமான மண்ணையுடைய சமநிலங்கள் இன்று உயிர்களேயற்ற பாலைவனங்களாகக் காட்சி தருகின்றன.

ஆபிரிக்காவின் சில பகுதிகள், மேற்கு அமெரிக்காவின், மத்திய ஆசியா, இலத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளின் அமைவை அடிப்படையாகக் கொள்ளும் போது, வரட்சியைத் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது.

பாலைவனமாதல் என்பது அடிப்படையில் மனித, மற்றும் இயற்கைக் காரணிகளால் உலர் நிலமொன்றின் தரம் இழக்கப்பட்டு அதன் சூழல் தொகுதிகள் நிலைகுலைதலைக் குறிக்கிறது. ஆயினும் இவ்வாறு நிலைகுலைந்த சூழல்தொகுதிகள் கூட பல நூறு ஆண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றனவென்பதும் ஆரோக்கியமான விடயமாகும்.நிலங்கள் பாலைவனமாவதற்கு இயற்கை ஒரு காரணமாக அமைந்தாலும், மனிதனே பிரதான காரணியாக அமைகின்றான். நிலத்திலிருந்து பெறப்படும் வளங்களை அவன் மிகையாக நுகர்ந்து வளமான நிலங்கள் பாலை நிலங்களாகிப் போகக்காரணமாகினான். ஒரு மனித உயிர் வாழ்வதற்காக பல மில்லியன் ஆண்டுகளாகச் செறிந்திருந்த வளங்கள் அழிந்து போயின.

இன்று நாம் புதியநிலங்கள் பாலை வனமாவதை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட முனைகிறோம். ஆனால் ஏற்கனவே இருக்கின்ற பாலைநிலங்களின் எல்லைகள் விரிவடைந்து வருவதைக் கருத்திற் கொள்ளத்தவறி விடுகின்றோம்.

ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 20,000 சதுரமைல் அளவான பாலைநிலம் புதிதாய் உருவாகி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் நிலப்பகுதியில் 50 சதவீதமானது உலர் நிலச் சூழல் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் மிகவும் தாழ்ந்த வருடாந்த மழை வீழ்ச்சியையும் மிகவும் உயர்ந்த வெப்பநிலையையும் உடையனவாகவும் இருக்கின்றன. 10-20 சதவீதமான இத்தகைய நிலங்கள் உயிரினங்கள் வாழ முடியாத வகையில் மாறிவிட்டனவெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதே உலர் நிலப்பகுதிகள்தான், உலகிலே வாழும் பல பில்லியன் வறிய மக்களின் வாழ்விடங்களாகவும் காணப்படுகின்றன. பாலைவனமாதல் தொடர உருவாகும் பட்டினிச்சாவுகளும் அடிப்படை வளப்பற்றாக்குறையும் மக்களை அந்நிலங்களை விட்டு இடம் பெயரச் செய்யும்.

மிகவும் முக்கியமான சூழல் பிரச்சினைகளுள் ஒன்றான பாலைவனமாதல் நிகழும் போக்கை எதிராகத் திருப்பமுடியாது என்பது இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

வருடாந்த மழை வீழ்ச்சி 250க்கும் குறைவாக இருக்கும் நிலப் பகுதிகளைப் பாலை நிலங்கள் என்பர். இவை உயர்வெப்பநிலையையும் உயர் ஆவியாதல் வீதத்தையும் உடையனவாக இருக்கும். மிகவும் நலிய மண் பேணல் முறைமைகளால் நிலங்கள் தம் தரத்தை இழத்தலே பாலைவனமாதலுக்கான அடிப்படைக் காரணமாக அமைகிறது. நல்ல ஆரோக்கியமான மண்ணின் உற்பத்தித்திறன் மிகவும் அதிகமாக இருக்கும். அங்கே சேதனப்பதார்த்தங்கள் நிறைந்து காணப்படும்.

அந்த சேதனப் பதார்த்தங்கள், அடிப்படையில் அழியும் சேதனங்களாகிய இறந்த தாவர விலங்குப்பாகங்கள் நுண்ணங்கிகளுடன் தாக்கமுறுவதால் உருவாக்கப்பட்டவை. ஆதலால் மண்ணானது காபன், நைதரசன், பொஸ்பரஸ், கந்தகம் மற்றும் பல மூலங்களைத் தன்னத்தே கொண்டிருக்கும்.

எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாத விவசாயமுறைகள் காரணமாக, இந்த வளமான மண் தனது தரத்தை இழக்கிறது. அவை மட்டுமன்றி விவசாய உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மிகைபாவனை போன்றனவும் தாக்கம் செலுத்துகின்றன.

இவை பயிர்களின் இயற்கையான சுழற்சிக்காலத்தை மாற்றுகின்றன. இயற்கைக்கு அமைவாக பயிர்களின் சுழற்சிக்காலம் பேணப்பட்டால் மண்வளம் ஒருபோதும் பாதிப்படையாது.

ஆனால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், கிருமி நாசினிகளின் மிகை பாவனையானது, பயிர்களின் சுழற்சிக் காலத்தைக் குறைத்து உச்ச விளைச்சலைத் தருகின்றன.

அதேசமயம் மேலதிகமானவை மண்ணிலே செறிந்து, மண்ணிலுள்ள கனிப்பொருட்களுக்கு இடையிலான சமநிலையைக் குலைத்து மண் வளத்தைக் குன்றச் செய்கின்றன.

மேல் மண்ணிலுள்ள சேதனப்பதார்த்தங்கள் குறைவடைய, மண் துணிக்கைகள் தளர்வடையத் தொடங்கும் அல்லது மேலும் இறுக்கமடையும். இவ்விரண்டு சந்தர்ப்பங்களுமே மண்ணரிப்புக்கு வழிவகுக்கும்.

வளம் குறைந்த மண்ணிலே, தாவரங்கள் வளரமாட்டாது. தாவரங்கள், விலங்குகளின் உணவுத்தேவை பூர்த்தி செய்யப்படாது. வளமற்ற மேல்மண்ணுக்கு எவ்வளவு மழை பெய்தாலும் அது பயனில்லாமல் வீணாகுமே தவிர மீண்டும் வளம் பெறாது. விளைவு, பாலைவனமாதலை நோக்கிய நகர்வாகவே அமையும்.

பாலைவனமாதல் நிகழ்வதற்கான உபகாரணமாகக் கூறப்படுவது, குறிப்பாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சியாகும். 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் உலர் வலயப் பிராந்தியங்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 18.5 சதவீதமாக இருந்தது.
இப்பிராந்தியங்களில் இருப்பவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதுடன், பெரும்பாலானவை வறியநாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுச்சூழல் பெரும் அழுத்தத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் மிருகங்களோ மேல் மண்ணின் கவசமாக இருக்கும் புற்களையும் மேய்ந்து விடுகின்றன. இதனால், சடுதியாக ஏற்படும் காற்று, புயல்மழை ஆகியவற்றினால் மண் அரித்துச் செல்லப்படுதல் அதிகரிக்கிறது.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வசிக்கும் மக்களின் பிரதான எரிபொருளாக இருப்பது விறகாகும். விறகுகளுக்காகவே காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட, உலர் நிலச் சூழல் தொகுதிகளின் சமநிலை, குலைக்கப்படும். இவ்வாறு நிலத்தில் உள்ள தாவரங்கள் உணவுக்காகவோ, விறகுக்காகவோ அழிக்கப்பட, நில மேற்பரப்பு, சூரிய ஒளியைத் தெறிப்படையச் செய்யும்.

இதனால் சூழலின் வெப்ப நிலை அதிகரிக்கும். காற்றுத்தடைகளாகத் தொழிற்பட்டு வந்த மரங்கள் அழிக்கப்பட்டதால் புயற்காற்றும் தூசியும் அதிகமாக இருக்கும்.

அதே அரைகுறை வறள் வலயங்களின் உயர் வெப்பநிலையால், நீரின் ஆவியாதல் அதிகரிக்கும். மழை வீழ்ச்சி குறைவடையும். மந்தைகளால் உருவாக்கப்படும் தூசும், காட்டுத்தீயால் உருவாக்கப்படும் புகையும் பாரமான துணிக்கைகளை வளிமண்டலத்திலே உருவாக்கிவிடுகின்றன. இதனால் மழைத்துளிகள் உருவாக முடியாமல் போய்விடுகிறது.

அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும் கூட பாலைவனமாதலுக்குப் பங்களிப்புச் செய்கின்றன. யுத்தத்தால் அகதியாக்கப்பட்டவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புகளில் இருந்து விலகிப் புதிய இடத்துக்கு இடம்பெயர்கின்றனர். அத்துடன் தமது சுதேச விவசாய, மந்தை வளர்ப்பு முறைகளையே புதிய இடத்திலும் பிரயோகிக்க முயலுவர்.

அவை புதிய இடங்களுக்கும் பொருத்தமாக இருக்குமென எதிர்பார்க்க முடியா து. பொருந்தாத பட்சத்தில், சிலகாலங்களின் பின்னர் அப்புதிய இடம் பாலைவனமாதலுக்கு உட்படத் தொடங்கும். இன்றைய காலகட்டத்தில், பாலைவனமாதலானது பாலை நிலங்களின் எல்லைப் பகுதிகளிலே நிகழ்ந்து வருகிறது. சூடான், சகாராவின் தென்பகுதி, சீனாவின் கோபிப் பாலைவனம், தென்னாபிரிக்காவின் கலகாரி பாலைவனம் போன்றவற்றின் எல்லைகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

பாலைவனமாதலின் வேகத்தைக் குறைத்து, அதனை முற்றாகத் தடுக்க முடியும். ஆனால் அதற்கு உலகளாவிய ரீதியிலான செயற்றிட்டங்கள் அவசியமாகின்றன.

அத்தகைய நிலைப்பாட்டிலே, அந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தீர்மானம் ஒன்று 1994ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்டது. அதாவது 1995 ஆம் ஆண்டு முதல் பாலைவனமாதலையும் வறட்சியையும் தடுப்பதற்கான தினமாக ஜூலை 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்று முதல், பல இலக்குகளையும் தொனிப்பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வறட்சி மற்றும் பாலைவனமாதலைத் தடுக்கக்கூடிய வகையிலான வழிமுறைகளும் தீர்வுகளும் இலகுவானவையே! ஆனால் சகல மட்டங்களிலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்த செயற்பட்டாலன்றி வேறு எந்த வகையிலும் பாலைவனமாதலைத் தடுக்க முடியாது.

அதனைத் தடுப்பதற்காக, அப்பகுதிகளில் தாவரங்களை மீள உயிர்ப்பிப்பதுடன், மண் வளத்தையும் பாதுகாப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளின் அடிப்படையாகும். அவற்றின் முதற்படியாக, அழிவைத்தரக் கூடிய விவசாய நுட்பங்கள் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வசிக்கும் வறிய விவசாயிகளுக்கு பயிர்களின் சுழற்சி தொடர்பான அறிவு மட்டுமன்றி அதனைக் குலைக்காமல் விடுவதால் கிடைக்கக் கூடிய நீண்டகால நன்மைகள் பற்றிய அறிவும் ஊட்டப்பட வேண்டும்.

நைதரசன் பதிக்கும் தாவரங்களின் பயிர்ச்செய்கை ஊக்குவிக்க ப்படுவதுடன், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட வினைத்திறன் மிக்க நீர்ப்பாசனத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நீர் வடிந்தோடுவதையும் மண்ணரிப்பையும் தடுக்கக் கூடிய வகையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாலை வனங்களின் எல்லைகளிலே, பல மில்லியன் எண்ணிக்கையிலான மரங்களை நாட்டுவதன் மூலம் அவற்றின் எல்லைகள் விஸ்தரிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

சீனாவிலே, கோபி பாலைவனத்தின் எல்லைகள் விஸ்தரிக்கப்படாமல் இருக்க சீன அரசு 4828 கிலோ மீட்டர் நீளத்துக்கு மரங்களை நாட்டி வருகிறது. இத்தகைய நடைமுறையை பசுமைச்சுவர் அமைத்தல்’ என்பர். சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பசுமைச் சுவர்களைப் போலவே சகாரா பாலை வனத்தின் எல்லையிலும் மரங்கள் நாட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு பசுமைச்சுவர்களை அமைப்பதால் பாலை வனத்தின் எல்லைகள் விஸ்தரிக்கப்படாமல் தடுக்கப்படும். அதுமட்டுமன்றி, பாலை வனத்தில் உருவாகும் தூசுப்புயல்கள் ஏனைய இடங்களுக்குச் செல்வதும் தடுக்கப்படுகிறது.

பாலைவனமாதலைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளில் தொழில் நுட்பங்களின் பாவனை மிகவும் குறைவாகும். வறட்சியை எதிர்நோக்கும் சிறிய நிலப்பரப்புகளிலேயும் மரங்களை நாட்டி வளித்தடையை உருவாக்குவதன் மூலம், மேல் மண் அரிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

இழந்த மண்ணின் வளத்தை மீள உருவாக்குவதற்காக சிறப்பானகலவையொன்றினால் நிரப்பப்பட்ட சாக்குமூட்டைகளைப் பயன்படுத்த முடியுமென ஜேர்மன் நாட்டிலுள்ள ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இந்த சாக்குகளுக்குள் மண்ணுடன் உரக்கலவை, விதைகள், பஞ்சு போன்று செயற்படக் கூடிய பதார்த்தம் ஆகியவை இட்டு நிரப்பப்பட்டிருக்கும். அச்சாக்கு மூடைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மழை நீரைச் சேமித்து வைக்கும் தன்மையனவாக இருக்கும். அவை வளம் குறைந்த நிலப்பகுதிகளில் பரவலாக அடுக்கப்படும்.

சாக்குகளுக்குள் மழை நீர் ஊறியபின் நுண்ணங்கிகளின் தாக்கத்தால் சாக்கு உக்கத்தொடங்கும். உள்ளே முளைத்து வேர்விட்டிருந்த வித்துக்கள் வெளியே பரவி, வளர தொடங்கும். இதனால் வறண்டபகுதி மீண்டும் தாவரங்களால் வளம் பெற ஆரம்பிக்கும்.

பாரம்பரிய விவசாய நுட்பங்களும் நில முகாமைத்துவ முறைமைகளும் மீள நடைமுறைப்படுத்தப்பட்டால் பாலைவனமாதல் தடுக்கப்படலாமெனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலர்வலயத்தில் வாழும் மக்களை ஒரேவாழ்வாதாரத்தை நம்பி வாழ விடாது வேறுபட்ட அணுகுமுறை களையுடைய வாழ்வாதாரங்களை நம்பி வாழச்செய்யும் வழிமுறைகளையும் கையாளலாம். உலர் மற்றும் பாலை நிலப்பகுதிகளை சுற்றுலாத்தலங்களாகவும் மாற்ற முயலலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே பாலைவனமாதல் சடுதியாக நிகழ்வது தென்படாவிடினும் வரட்சிக்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றன. அவற்றை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அவற்றின் விளைவுகள் பாரதூரமாக மாறா வண்ணம் தடுப்பது மட்டுமன்றி அவை இனிமேல் நிகழா வண்ணம் பாதுகாப்பதும் எமது கடமைகளாகும்.

No comments:

Post a Comment