Sunday, June 7, 2020

இது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்?
அது 2001 ஆம் ஆண்டு. க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள் வெளி வந்து நாமெல்லாம் உயர்தரப்பிரிவில் அடியெடுத்து வைத்த காலம். தலை நகரில் உள்ள பெண்களுக்கான ஒரேயொரு தமிழ் மொழி மூல, பகுதி அரச பாடசாலை அது. பாடசாலையின் தவணைக்கட்டணம் அப்போது 1000.00 ரூபாவாகியிருந்தது. அதைவிட மேலதிகமாக வெவ்வேறுகட்டணங்களும் இருக்கும். 1996 இடப்பெயர்வும் நாம் இழந்தவையும் எம்மை எப்போதும் ஒரு அழுத்தத்துக்குள்ளேயே வைத்திருந்தன. அம்மா அரச உத்தியோகம் பார்த்தாலும், பாடசாலைக்கட்டணம் கூட சில வேளைகளில் பெரும் சவாலாகத் தான் இருந்திருக்கிறது. 

முதல் வாரத்திலேயே தனியொருவரைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் என எம்மில் சிலரை வகுப்பாசிரியரே அடையாளப்படுத்தியிருந்தார். தனியாக வந்து சந்திக்கச் சொன்னார். விபரங்களைக் கேட்டறிந்தார். முதலாம் தவணையிலிருந்து இறுதித் தவணை வரை நாம் பாடசாலையில் எதுவித கட்டணங்களும் செலுத்தவில்லை. எல்லாக் கட்டணத் தொகையும் கழிக்கப்பட்டு ஒவ்வொரு தவணையும் மீதமாக அறு நூற்றுச் சொச்சம் எமக்கு கைகளில் கிடைக்கும். பழைய மாணவிகள் சங்கத்தின் புலமைப்பரிசிலின் பயனாளிகள் நாங்கள்.  அதை வழங்குவதற்காக எமக்கு பழைய மாணவிகள் சங்கம் எந்தவொரு  நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை. " நல்லாய்ப் படிக்க வேணும்!". ஆசிரியர் சொன்னது அது மட்டும் தான். அதுவும் அந்த ஒரு தடவை மட்டும் தான்.  கடைசித் தவணைகளிலெல்லாம் என் புள்ளிகள்  50 ஐத் தாண்டியதில்லை. ஆனால் , வகுப்பாசிரியர் கடிந்தது கூட இல்லை. 


இன்றும் எனது உயர்தரக் கல்விக் காலத்தை மீட்டுப்பார்க்கிறேன். நாங்களெல்லாம் சராசரி மாணவர்கள் தான். எதற்காக எங்களைத் தேர்வு செய்து அந்தப் புலமைப் பரிசிலை வழங்கவேண்டும்?. வகுப்பில் முதலாவதாக வரும் மாணவியொருவருக்கு வழங்கியிருந்தால் சில நேரங்களில் அவரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கச் செய்திருக்கலாம் தானே? அங்கு அந்த புலமைப்பரிசிலின் நோக்கம் கல்விக்கான அணுகல் தொடர்பில் எல்லாருக்கும் சம வாய்ப்பினை வழங்க வேண்டும்; வகுப்பில் காணப்படும் ஏற்றத் தாழ்விடைவெளி குறைய வேண்டுமென்பதாகத் தான் இருந்ததே தவிர ஏற்கெனவே அணுகல் காணப்படுபவர்களுக்கு மேலும் சிறப்பான அணுகலை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஒருவேளை, பழைய மாணவிகள் சங்கம் அப்படி நினைத்திருந்தால், இன்று நாம் வகிக்கும் இடங்களைச் சில வேளைகளில் எம்மால் அடைய முடியாமல் கூடப் போயிருக்கலாம். 

அந்த நிலை மாறி, இன்று நாமெல்லாம், சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்  நிலைகளை எட்டியிருக்கிறோம். எமக்கு முந்திய சந்ததியினர் தீர்மானங்களை எடுப்பதற்காய்த் துணை புரிகிறோம். ஆனாலும் கூட, 'கல்வியில் சமத்துவம் தேவை' என்பதை எம்மால் அங்கீகரிக்க க் கூட முடியவில்லை.  மின் கல்வி என்கிறோம். 63% அணுகல் இருக்கிறது என்கிறோம். மீதி  37% க்கும் தொலைக்காட்சி, வானொலி மூல அணுகல் இருக்கிறது என் கிறோம். முக நூலில் தரவேற்றினால் 95% அணுகல் கிடைக்கும் என்கிறோம். அந்த 95% அணுகலுக்குரியவர்கள் யார் என்பது பற்றிய தரவுகள் எம்மிடம் இல்லை. வறுமையே இல்லை என்கிறோம். மின் கல்விக்கான அணுகலை வறுமை தடுக்கவில்லை என்கிறோம். பிரச்சினை எல்லாம் இணைய இணைப்பின் செறிவிலும் புலப்பரப்பிலுமே இருக்கிறது என்கிறோம். பாடசாலை ஆரம்பித்ததும் மின் கற்பித்தல் மூலம் நடைபெற்றவை அனைத்தும் மீளக் கற்பிக்கப் படும் என்கிறோம். கோவிட் 19 போன பின், மின் கல்வியும் ஆறிய கஞ்சியாகி விடும் என்கிறோம். எம்மை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. இலக்கேயில்லாமல் பயணிக்கிறோமா என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.  பெற்றோரை இழந்த பிள்ளைகளை எல்லாம் விதிவிலக்குகள் என எப்படி எம்மால் இலகுவாகக் கூறிவிட முடிகிறது? அவர்களை மற்றவருக்குச் சமமாக நடாத்த வேண்டியது சமூகம் சார்ந்து எமக்கிருக்கும் பொறுப்பு என ஏன் எம்மால் எண்ணக்கூட முடியவில்லை?

வைத்தியசாலையில், நோயாளியைப் பரிகரிக்கும் போது பாரபட்சம் நடந்தால் கொதித்தெழுகிறோம். 67% நோயாளிகளைப் பரிகரித்து விட்டு மீதமானோரைப் பரிகரிக்க முடியாது என்று கூறினால், அமைதியாய்ச் சென்று விடுவோமா என்ன? கேட்டால் , அது மனித உயிர் சார்ந்தது. சமத்துவம் தேவை  என்று விளக்கமும் வைப்போம்.  ஆனால், கல்வியில் சமத்துவம் என்பது ஒரு சந்ததியின் இருப்பையே தீர்மானிக்கும் என்பதை எம்மால் உணரக் கூட முடிவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

ஆட்சி (GOVERNANCE) சார்ந்து பயணிக்க வேண்டியவர்களுள்  நானும் ஒருத்தி என்ற வகையில், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளும் அவற்றை அடைவதற்காக எம்முன் குவிந்திருக்கும் கடப்பாடுகளும் அடிக்கடி மனக்கண்ணில் வந்து செல்கின்றன.  சமத்துவமும் (EQUITY) ஒருவரையும் பின்னிற்க விடக்கூடாது (LEAVING NO ONE BEHIND) என்ற அடிப்படையும் மனவெளியில் அடிக்கடி எட்டிப்பார்க்கின்றன. 37 சதவீதத்துக்கு தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படுமாயின் மின் கல்வி க் கான அணுகல் காணப்படும் 67% க்கும் அதே தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படத்தானே வேண்டும். அப்படியாயின், ஏன் நாம் தொலைக்காட்சி வழிக் கல்வியில் மட்டும் கவனம்
செலுத்த எண்ணவில்லை? 67 சதவீதமானோர் மின் வழியில் கற்றாலே போதும் என எண்ணுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இப்படி என்னுள்ளே எழும் பல கேள்விகள் விடை காண முடியாமல் தவிக்கின்றன. 

கோவிட் 19 இன் பெயரால் கல்விக்கான அணுகல் தடுக்கப்பட்டமை ஒரு சில மாதங்கள் மட்டுமே. இந்தக் காலத்தை ஏன் நாம் மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கப் பயன்படுத்தக் கூடாது. சூழலை அவதானிப்பதற்காக இயற்கை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கிய காலமாக ஏன் பார்க்க க் கூடாது? ஆசிரியர்கள் இணைந்து ஓரிரு பாடங்களை இணைத்து ஏன் மாணவர்களுக்கு செயற்பாடுகளை வழங்க க் கூடாது? தமக்குக் கிடைக்க க் கூடிய வளங்களைக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் ஆக்கங்களை உருவாக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களாக இதை ஏன் பாவித்திருக்க க் கூடாது?  அப்படிச் செய்திருந்தால், மாணவர்களிடம் காணப்படும் எத்தனை விசேட திறமைகள் வெளிப்பட்டிருக்கும். அவர்களது ஆக்கங்களை எல்லாம் நிலமை சுமுகமான பின்னர் காட்சிப் படுத்தியிருந்தால்...புத்தகமாக வெளியிட்டிருந்தால்... எத்தனை ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டிருக்கும்? அறிவுப்பகிர்வுகளுக்காக எவ்வளவு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்?

உலகின் தொழில் நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இயற்கையை அவதானித்தமையால் உருவானவையே தவிர, வெறும் ஏட்டுக்கல்வியால் உருவானவையல்ல. ஏட்டுச் சுரைக்காய் பல வேளைகளில் கறிக்கு உதவுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாம் பரீட்சைகளில் பெற்ற புள்ளிகளை எவரும் நோக்குவதில்லை. சித்தியெய்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பரீட்சித்திருக்கிறார்கள். இதை நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், புறக்கிருத்திய நடவடிக்கைகளால் கிடைக்கும் திறன்களும் அனுபவங்களும்  தான் எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளத் துணை நிற்கும் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். மாணவர்கள் மீது ஏட்டுக்கல்வியை மேலும் மேலும் திணித்து, கோவிட் 19 இன் பின்னரான காலப்பகுதியில் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்காமல்,  கோவிட் 19 இன் பின்னரான காலத்தை எதிர்கொள்ள அவர்களை நாம்  தயார்படுத்த வேண்டும். 

தரம் 5 புலமைப்பரிசில், கட்டாயமானதல்ல என அரசே அறிவித்த பின்னரும் கூட,  பத்தே வயதான மாணவர்கள் பெரும் அழுத்தங்களின் மத்தியில் மின் வழிக் கல்வியில் இணைந்திருக்கிறார்கள். உண்மையிலேயே புலமைப்பரிசில் தேவைப்படுபவர்களுக்கு அந்த மின்வழிக்கல்விக்கான அணுகல் இருக்கிறதா என ஆராய்ந்தால் எம் எவரிடமும் தரவுகள் இல்லை. பல இடைவெளிகளை வெறும் இலக்கங்களால் நிரப்பிவிடத்தான் நாம் துடிக்கிறோம். பொது வெளியில் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. தரவுகள் சார்ந்து விஞ்ஞான பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கான வல்லமை இன்னும் எம்மிடம் உருவாகவில்லை. அதற்கான தரவுகளும் எம்மிடத்திலில்லை.  அன்றிலிருந்து இன்றுவரை மொத்த ஆசிரியர் தொகையை மொத்த மாணவர் தொகையால் பிரித்தே விளக்கம் சொல்லிப் பழகிவிட்டோம். ஆதலினால் எமக்கு ஏற்றத்தாழ்வுகளை உணர முடிவதில்லையோ என்னவோ?

A9  வீதியால் பயணித்தபடி, "வன்னி எப்படி அபிவிருத்தியடைந்து விட்டது தெரியுமோ?" என தொலைபேசியில் விளக்கம் சொல்பவர்கள் தான் நாங்கள். 
அவ்வீதியிலிருந்து சில மீற்றர்கள் உள்ளே சென்றாலே எமக்கு உண்மை நிலவரம் புரிந்துவிடும். ஆனால், பொதுவாக நாம் அப்படிச் செய்வதில்லை. அகன்று விரிந்த வன்னியின் நிலப்பரப்பின் அந்தங்களிலுள்ள பாடசாலைகளும் மீளக் குடியமர்ந்த, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் வாழ்வியலும் எமக்கு எப்போதும் புரிவதில்லை என்பதால் பிராந்தியம் சார்ந்த எமது நிர்வாக முடிவுகளில் அவை தாக்கம் செலுத்துவதில்லை.  எங்கள் முடிவுகள் எப்படி மெறுபேற்றை நோக்கிச் செல்லும்? எங்களாலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்க முடியாவிட்டால், யார் தான் அங்கீகரிக்கப் போகிறார்கள்? யாரிடம் நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்?


மீண்டும் மீண்டும் என் நினைவுகளை மீட்கிறேன். சைவ மங்கையர் வித்தியாலயமும் அதன் தூர நோக்கும் எட்ட முடியா உயரத்தில் நின்று புன்னகைக்கின்றன. 

Thursday, May 7, 2020

மலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ !


அது  தொண்ணூறுகளின் போர்க்காலம். பாடசாலையும் வீடும் அயலுமாய்ச் சுழன்று செல்லும் வாழ்க்கை. அப்போதெல்லாம் தற்காலம் போல்  வீடுகள் அயலில் இருக்காது.  தனியார் காணிகள் என்றால் நகரத்திலும் கூட ஓர் ஏக்கருக்கு ஒரு வீடு தான் இருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். போர்க்காலம் ஆதலால் அம்மாவின் கட்டுப்பாடுகள் அதிகமிருக்கும். சைக்கிள் ஓடலாம். ஆனால் வளவிற்குள் மட்டும் தான் ஓட முடியும். “படலையைத் தாண்டினால் கால் அடித்து முறிப்பேன்” என்ற எச்சரிக்கை முன்னதாகவே வழங்கப்பட்டிருக்கும். இந்த விடயத்தில் அம்மா சொன்ன சொல் தவறமாட்டார் என்பதில் எமக்கும் உறுதியான நம்பிக்கையிருக்கும். ஆதலால் நாம் வளவை விட்டு வெளியே செல்வதில்லை. அம்மாவின் அடியின் உக்கிரத்தை மறந்தவர்கள் இல்லையே!  பாடசாலை நண்பர்கள் வீடுகளுக்கு வந்து புழங்கியதில்லை. அயல் வீடுகளில் இருக்கும் ஓரிரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் மாலையில் விளையாட வருவார்கள். நாமும் அவர்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கிறோம். மழைக் காலங்களைத் தவிர வீடுகளுக்குள் இருந்து நாங்கள் விளையாடியதில்லை. வளவு முழுக்க அலைந்து திரிவதும்  ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சைக்கிள் ஓடுவதும் மரங்களில் உள்ள எந்தவொரு பழத்தையும்  விட்டுவைக்காமல் அடித்துச் சாப்பிடுவதுமாக எங்களுடைய நாட்பொழுதுகள் ஓய்ந்து விடும்.

வளவு முழுவதும் பழ மரங்கள் நிறைந்து காணப்படும். சமையலுக்குப் பயன்படக்கூடிய பெரும்பாலான மரங்கள் வளவுக்குள் இருக்கும். அதிகளவிலான பழங்கள் பிஞ்சிலேயே எம் வயிற்றுக்குள் சரணாகதியடைந்து விடுவன. பிஞ்சுக் காய்களின் கயர்ப்புத் தெரியாமல், அவற்றை களவாகக் கொண்டு செல்லும் உப்புடன் சேர்த்துச்  சாப்பிடுவதில்  நாம் தனியின்பத்தையும் நிறைவையும் காண்போம். எமக்கு அறிவு தெரிந்த காலத்தில் இருந்து அம்மம்மா சந்தையில் பணம் கொடுத்து மரக்கறியும் மீனும் வாங்கியதாய் நினைவில்லை. தேங்காய், நெல்லிக்காய், ஜம்புக்காய், எலுமிச்சம்பழம், தோடம்பழம், மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம் என அவரின் பண்டமாற்றுக் கொள்கை வருடம் முழுவதும் நிலைத்திருக்கும். அம்மம்மா கொண்டு செல்லும் எலுமிச்சம்பழத்துக்காக சந்தையில் காத்திருக்கும் வியாபாரிகளும் இருந்தார்கள். குளிக்கும் அறையிலிருந்து சமையல் அறையிலிருந்தும் வெளியேறும்  நீர் எலுமிச்சை மரங்களுக்குச் செல்லும். பழம் பழுக்கத் தொடங்கிய பின்னர் மட்டும் தான் பிடுங்குவார். நிலத்தில் விழுந்த பழங்களை முட்களுக்குள் புகுந்து பொறுக்கிக் கொடுக்கும் பொறுப்பு எங்களதாக இருக்கும்.    வீட்டிலிருக்கும் இரு கால் குரங்குகளையும் தாண்டி அவர் சந்தைக்குப் இப்பழங்களையெல்லாம் கொண்டு செல்வது ஆச்சரியம் தான்.  ஆதலினால் நாம் வாழ்ந்த காலப்பகுதியில் உணவுப் பஞ்சத்தைக் கடவுள் எமக்குத் தந்திருக்கவில்லை. மரம் ஒன்று காய்த்தால், காய் முற்றிப் பழமாகிக் கனியும் வரை காத்திருக்கும் பொறுமை எமக்கு இருப்பதில்லை.  ஆதலினால் எங்கள் உயரத்துக்கு எட்டாத உயரத்தில்தான் பொதுவாக அம்மம்மாவின் ஆட்சி இருக்கும்.  இத்தகைய பண்பை நாம் இயற்கைச் சூழலிலும் காண முடியும் . இதை ஆங்கிலத்தில் ‘ ecological niche ' என்று சொல்வார்கள். 

சின்ன ஜம்பு காய்க்கும் காலத்திலே,  வார இறுதி நாட்களின்  காலை வேளைகளில் நாம் முழிப்பது அந்த மரத்திலாகத் தான் இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. பிறகு உருவாகும் தொண்டை அடைப்புக்கு,  கற்பூரவல்லிச் சாறும் பனங்கல்லாக்காரமும் தருவது  அம்மம்மாவின் பொறுப்பாகிவிடும். குருவி கொந்தின விலாட் மாம்பழமும் அப்படித்தான். அதற்கு மட்டும் அம்மம்மாவும் பங்குக்கு வருவார். செங்காய்ப் பதத்தில் தோலுரித்து வெட்டித்தரும் சேவை இலவசம் என்பதால் நாமும் சந்தோஷமாக அவரை எம் குழாத்தில் இணைப்பதுண்டு. இப்போதும் கூட குருவி கொந்தின விலாட் மாம்பழத்தை நான் விட்டு வைப்பதில்லை. 

அயலிலேயே இடை நிலைப் பாடசாலை ஒன்றிருந்தது. தற்போது உயர்தரப்பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு விட்டது. ‘கனிஷ்டா’ என்று  நாம் குறுக்கி அழைப்போம். மரங்கள் காய்க்கும் காலங்களில் எப்படியும்  மாணவர்கள் படலையில் நிற்பார்கள். எங்கள் வளவில் என்ன பழம் எப்போது காய்க்கும் என்று எம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.  சந்தைக்குக் கொடுத்தது போக எஞ்சியவற்றை அம்மம்மா அவர்களுக்காய் வைத்திருப்பார். அவர்கள் இலவசமாய் எடுத்துச் செல்லலாம்.

எங்கள் வீட்டுப் பெருநெல்லிக்கு  எப்போதும் பெரும் கிராக்கி இருக்கும். பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக்கே மொத்தமாகத் தீர்த்து விடுவோம். “கொம்மான்ர சீதன அட்டியல் எலுமிச்சம்பழமும் முட்டையும் வித்துச் செய்தது” என்று அம்மம்மா பல தடவைகள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எங்கள் வளவுக்கும் கனிஷ்டா மைதானத்துக்கும் ஒரே எல்லை வேலி தான் இருக்கிறது. எவ்வளவு தான் அடைத்தாலும்,  வேலியில் இடைவெளி வந்து விடும். பாடசாலை இடைவேளை நேரங்களில் பழ மரங்களுக்குக் கீழ் ஓரிரு சிறார்களாவது நிற்பர். அவர்களைக் கண்காணிப்பதுவும் அம்மம்மாவின் பிரதான கடமைகளில் ஒன்றாகி விடும். 

இன்று வீடுமில்லை. பெரும்பாலான மரங்களும் இல்லை. ஆனால் எவ்வளவு அடைத்தாலும் அந்த ஒற்றை வேலியில் இடைவெளி உருவாகிய வண்ணம் தான் இருக்கிறது. என் கண்களுக்குத் தெரியாத பழங்கள் எல்லாம் பள்ளிச் சிறார்களுக்குத் தெரிந்து தான் விடுகின்றன. அதுமட்டுமல்ல, இப்போது வளவின் ஆட்சி அவர்களுக்கும் குரங்குகளுக்கும் மட்டும் தான் இருக்கிறது. சில நேரங்களில் முயல்களும் வருவதுண்டு.   முன்பெல்லாம் பகலில் வந்து சென்ற குரங்குகள் இப்போது வளவிலே நிரந்தர குடித்தனம் நடாத்துகின்றன.   நாம் அங்கு வாழ்ந்த காலத்தில் குரங்குகளைக் கலைப்பதற்காக நாம் எவரிடமும் புகார்  செய்ததாக எனக்கு நினைவில்லை. குரங்குகளைக் கலைக்க  எங்களிடம் இருந்த ஒரே ஆயுதம் அம்மப்பாவின் கவணும் கற்களும் தான்.   நாம் அவரது உதவியாளர்களாக ஒரேயளவான கற்களைப் பொறுக்கிக் கொடுப்போம். அனுமதி இருந்த காலங்களில் துப்பாக்கியுடன் வேட்டையாடிய  நினைவுகளை மீட்டிய படி குரங்குகளைக் கலைக்க உதவுவார்.   


இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது பரவிப்பாஞ்சானில் அதிகளவு மரங்கள் நிற்கும் ஒரு சில வளவுகளுள் எங்களதும் ஒன்று. பல பெரிய வளவுகள் எல்லாம்  உரித்துகள் கை மாறி, விலைபோய், ஆகக்கூடிய விஸ்தீரணம் 2 பரப்பு எனும் அளவுக்கு சுருங்கி விட்டன. அயலவர்கள் பலர் 1996 இடப்பெயர்வுக்குப் பின்னர் வந்து குடியேறியவர்கள். அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் ஊருக்குப் புதியவர்கள். 
2009 க்குப் பின்னர் ஒவ்வொரு முறை  நான் வளவுக்குச்  செல்லும் போதும் யாராவது முறைப்பாடு சொல்லக் காத்திருப்பார்கள். “மரங்களை வெட்டி விடுங்கோவன். ஓரே குரங்குகளாய்க் கிடக்கு! ஓடுகளையெல்லாம் உடைச்சுத் தள்ளுதுகள்”, “காணி வெளியாய் இல்லாததால ஒரே பாம்பாய்க் கிடக்கு. ஒருக்காய் வெளியாக்கி விடுங்கோ”, “அப்பவே கேட்டனாங்கள்; எங்களுக்கு வித்திருக்கலாம் தானே. இப்ப பாருங்கோ பயனில்லாமல் கிடக்கு”, “ நீங்கள் கொழும்பு வாசியாகி விட்டீர்கள்; உந்தக் காணியை வைத்து என்ன செய்யப்போறீங்கள். பேசாம வித்துப்போட்டு தொடர்மாடி வீடொன்று வாங்கி விடலாமே? “ என்றெல்லாம் கோரிக்கைகளும் அறிவுரைகளும் இலவசமாய்க் கிடைக்கும். ஆனால் அந்த வளவையும் அங்குள்ள மரங்களையும் பின்னிப்பிணைந்த அந்தப் பசுமையான நினைவுகளிலே வாழ்தல் எத்துணை சுகம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த சுகத்தை இந்த நலன்விரும்பிகளிடம் விபரித்து விளக்குமளவுக்கு என்னிடம் வார்த்தைகள் இருக்காது. நான் விரும்புவதுமில்லை. எல்லாவற்றுக்கும் ‘ஓமோம்’ என்று தலையாட்டி விட்டு நான் விரும்பியதைச் செய்து விடுவதே கடந்த தசாப்தத்தில் நான் கைக்கொண்ட உத்தி.  

நடக்க நடக்கப் புதையும் நிலமும்  தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கப்படாமலேயே கோடையை வெற்றி கொண்ட பாரம்பரிய தென்னை இனங்களும் என் உத்தியை நியாயப்படுத்துவனவாக இருக்கின்றன. இந்த முறைப்பாட்டாளர்களின் கிணறுகளில் நீர் நிலைப்பதற்கும், அவர்கள் அனுபவிக்கும் குளிர்மையான நுண்காலநிலைக்கும் எனது வளவு ஆற்றும் அரும்பணிகளை விளக்கினால் அவர்கள் நம்பப்போவதில்லை. மரங்களை வெட்டி முடிக்கும் வரை நிழலின் அருமையையோ கிணறுகளில் நீர் வற்றிப்போகும் வரை மரங்களின் பயனையோ அவர்கள் உணரப்போவதுமில்லை. காலம் கடந்து ஞானம் வந்து என்ன பயன் தான் இருக்கப்போகிறது? எல்லாவற்றுக்கும் மேலாக, எனது பேரனாரும் பேத்தியாரும்  நாட்டி வைத்த மரங்களை வெட்டித்தள்ள எனக்கென்ன உரிமைதான் இருக்கிறது?

1990 களின் நடுப்பகுதி வரை அம்மண்ணிலே நாம் வாழ்ந்த காலங்கள் மட்டும் தான் எம் வாழ்வில் பசுமையானவை. அவை யுத்தத்தின் கொடூரத்தில் உயிர்களையும் சொத்துகளையும் இழந்த காலங்களாக இருந்த போதும், வான் பறவைகளாலும் நிலத்தில் பாய்ந்து வரும் எரிதழல்களாலும் எம் வாழ்வு அங்கு நிலையற்றதாக இருந்த போதும் கூட ஆர்ப்பரிப்பற்ற வாழ்வை எம்மால் அங்கு மட்டும் தான் தேடிப்பெற முடிந்தது. அக்காலத்தில் எம் தேவைகள் மிகவும் குறுகியதாக இருந்தன. பல காரணிகளால் அவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இல்லாத ஒன்றுக்காக  நாம் ஒருபோதும் அங்கலாய்க்கவோ வருத்தப்படவோ அடம்பிடிக்கவோ இல்லை. இல்லாமையை இல்லாமையாக நாம் உணரக் கூட இல்லை.  அதை உணர்வதற்கான சந்தர்ப்பத்தை போர்ச்சூழல் எங்களுக்கு வழங்கியிருக்கவில்லை. ஆதலினாலோ என்னவோ எந்தத் துன்பத்தையும் எதிர்கொண்டு விரைவாக அதிலிருந்து மீளும் வல்லமையை எம் சந்ததி இன்றும் கொண்டிருக்கிறது.
 அந்தப் போர்ச்சூழலில் மட்டுமல்ல, பிறகும் கூட எமக்குப் பெரிய நோய் நொடி வந்தது மிகக் குறைவு. பரவிப்பாஞ்சானில் 1992 இல் ஒரு தடவை மலேரியாக் காய்ச்சல் வந்ததைத் தவிர  வேறு ஏதும் காய்ச்சல் வந்து   வைத்தியசாலையில் மருந்தெடுத்ததாக எனக்கு நினைவில்லை.  சாதாரண தடிமனும் காய்ச்சலும் அம்மம்மாவின் கை மருந்துக்குப்  பயந்து அடிக்கடி எட்டிப்பார்ப்பதில்லை.  கண்ட பொழுதெல்லாம் நாம் உண்ட மேற்சொன்ன பழங்கள் கூட நோய் நொடியை இலகுவாக வெற்றிகொள்வதற்கு மறைமுக காரணங்களாக இருந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா  போன்ற சுதேச மக்கள் வாழும் தேசங்களிலெல்லாம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதை நிரூபித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமும் உலக விவசாய ஸ்தாபனமும் அவ்வாய்வு முடிவுகளை அங்கீகரித்திருக்கின்றன. ஸ்பெயின் உட்படப் பல ஐரோப்பிய நாடுகள் சமூகப்பழத்தோட்டங்களை நகரங்களில் உருவாக்கும் திட்டங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. தமது நகர்ப்புறக் குடிமக்கள் மத்தியில்  கால நிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர் கொள்ளும்  வல்லமையை வளர்த்து உணவுப்பாதுகாப்பை அதிகரிப்பதே  அத்திட்டங்களின் பிரதான நோக்கமாகும். 

ஆனால் எமது நிலைமையோ தலைகீழாக இருக்கிறது.  காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளூம் இலங்கையின் திட்டத்திலே இத்தகைய மருத்துவ குணமிகு பழங்களை ஈனும் தாவரங்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்படவேயில்லை என்பது வருந்தற்குரியது. ‘இலங்கையில் பட்டினி நிலைமையை எதிர்கொள்ள உதவும் மரங்கள்’ என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்ட அறிஞர் சமூகம் வாழ்ந்த காலம் மாறி அப்படி ஒரு விடயம் இருப்பதைக் கூட உணர மறுக்கும் அறிஞர் சமூகம்  வாழும் காலம் உருவாகி விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.  உலக விவசாய ஸ்தாபனம் உட்பட சகல தரப்பினரும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்திலே, அதுவும் இலங்கையிலே,  இம்மரங்களின் முக்கியத்துவம் உணரப்படாமையானது தாவரங்கள் மீதான குருட்டுத்தன்மையை அதிகரிப்பதோடல்லாமல், இலங்கையின் அரும்பெரும் சொத்தான வனவளத்தின் பெறுமதியைக் குறைவாக மதிப்பிட வழிவகுத்து விட்டது  என்றே கூறவேண்டும். இது காடழிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்து விடும் என்பது மட்டும் திண்ணம்.
 
பரவிப்பாஞ்சானை விட்டு நாமெல்லாம் இடம்பெயர்ந்து  ஏறத்தாழ இரண்டரை தசாப்தங்களில் பின்னர்,   கடந்த வருடம் கள ஆய்வுக்காக வன்னியின் கிராமங்களுக்குச் சென்ற போது எம் தற்போதைய  வாழ்வியலையும் நாம் தொலைத்து விட்ட வாழ்வியலையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பல முதியவர்களைச் சந்திக்கக் கிடைத்தது.

“முந்தியெல்லாம் கிளினிக் கொப்பி இருக்கிற ஆக்களை நாங்கள் ஊருக்குள்ள அரிதாய்த்தான் பார்த்திருக்கிறோம். இப்ப காலம்  எல்லாம் மாறிப் போச்சு பிள்ள. கிராமத்தில கிளினிக் கொப்பி இல்லாத வீடுகளை விரல் விட்டுத்தான் எண்ண வேணும்” . இது அந்த தாத்தாமாரின் பொதுவான ஆதங்கம். அந்தக் கூற்றின் பின்னே புதைந்திருக்கும் ஆழ்ந்த கவலையும் வருத்தமும் பலருக்கு விளங்குவதாய்த் தெரியவில்லை. ஏனெனில் ‘கிளினிக் கொப்பி’ யை  கௌரவமாக எண்ணுபவர்கள் ஏராளம்பேர் உருவாகிவிட்டார்கள். கண்ட பழங்களை எல்லாம் உண்டு வயிற்றை நிரப்பும் பண்பாடு இன்றைய சிறுவர் மத்தியில் அருகிக்கொண்டே வருகிறது. நுகர்வுக் கலாசாரத்தின் ஆதிக்கம் கிராமங்களின் பெட்டிக்கடைகளுக்கெல்லாம் ஊடுருவி விட்டது. பொதி செய்யப்பட்ட உணவுக்கு வழங்கப்படும் மதிப்பு காட்டுப்பழங்களுக்கு வழங்கப்படுவதாய்த் தெரியவில்லை. "அது எங்க எடுத்ததோ, என்ன ஊத்தையோ தெரியாது. வாங்காதே!" எனவும் " என்ர பிள்ளைகள் அப்பிள் ஆரஞ்சு, திராட்சையைத் தான் விரும்பிச் சாப்பிடுவினம்" எனப் பெருமையாய்க் கூறிக்கொள்ளும் பெற்றோர் பலரைக் கண்டிருக்கிறேன். வன்னியின் பழக்கடைகளில் சுதேச பழங்களை அரிதாகவே காண முடியும். இவை யாவற்றினதும் மிகப்பிரதான விளைவுகளில் ஒன்றுதான் இலங்கைச் சிறார்களின் போசாக்குக் குறைபாடு. மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைந்தமை ஆகட்டும்...  நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முயற்சிக்கின்றமையாகட்டும்.... அவற்றை அடைய இலங்கைக்குப் பெரும் சவாலாக இருந்த, இருக்கின்றவற்றில் சிறுவர்களின் போசாக்குக் குறைபாடும் ஒன்று.
 


தாகத்தைத் தீர்க்கவும்
  பசிக்காமல் இருக்கவும்  துணைபுரியும் பழங்கள்  கூட எம் வன்னிக்காடுகளிலே இன்னமும் காணப்படத்தான்  செய்கின்றன. "ஜாம்" என்ற பெயரில் பதப்படுத்திகள், நிறமூட்டிகள் எல்லாம் பாவித்துத் தயாரித்துப் போத்தலில் அடைத்து கவர்ச்சியாக விற்கப்படும் கலவையை  நுகரப்பழகிய பலர் பாலைப்பாணியையும் உலுவிந்தைப்பாணியையும் இலுப்பைப்பூப் பாணியையும் மறந்தே விட்டார்கள். மன்னார் முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் பாலைப்பாணி என்று ஓர் ஊர் கூட இருக்கிறது.  இத்தகைய மரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. வன்னிக் காடுகளில் இருக்கும் இந்த நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் உணவுப்பாதுகாப்புக்குத் துணை புரியும் வல்லமை மிக்க பல உப பொருட்களை விளைவிப்பவை. இத்தகைய பல காட்டு மரங்கள் இப்போது காடுகளில் அருகி விட்டன. காடுகள் எல்லாம் வீதிகளுக்கு வழிவிடச்செய்யப்பட்டமையால் சில மரங்கள் இப்போது வீதியோரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. சில மரங்கள்  காடுகளில் இல்லாமல் வீட்டு வளவுகளில் மாத்திரமே காணப்படுகின்றன.  கிராமங்களில் வாழும் முதியவர்களைத் தவிர வேறு எவருக்கும் இந்த அரிய மருத்துவ குணம் மிகு மரங்களின் பயன் தெரிவதாய் நான் உணரவில்லை.  பல இளஞ்சந்தியினருக்கு அவற்றை அடையாளப்படுத்தக்கூடத்தெரியாது.  இதற்கு நானும் கூட விதிவிலக்கல்ல. இந்த மரங்களின் பயன் தெரியாமல் போக எமது கலாசாரம், வாழ்க்கை முறைகளுக்கும் அம்மரங்களுக்குமான தொடர்பு அறுந்து கொண்டே செல்லும். அத்தொடர்பானது தற்போது  அழிவின் விளிம்பில், நூலிழையில் தொங்கிக்  கொண்டு நிற்கிறது என்று தான் கூற வேண்டும். 70 வயதைத் தாண்டிய அந்த முதியவர்கள் கொண்டிருக்கும் பாரம்பரிய அறிவை அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கொண்டுசெல்லப்போவது யார்? என்ற  வினா எம் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது!
சில மாதங்களுக்கு முன்னர் கள ஆய்விலே சேகரித்த சில சுதேச மரக்கன்றுகளை  நாட்டுவதற்காக என் வளவுக்குக் நான் கொண்டு சென்ற போது முன் வீட்டில் பாதுகாவல் பணியில் இருக்கும் அரச அலுவலர் இடையில் மறித்து சகோதர மொழியில் விளக்கம் வைத்தார். “ உந்தக் காணிக்குள்ள இருந்து  பாம்பு வந்து  எங்கட  நாயைக் கடித்து  நாய் இறந்து விட்டது. நெதர்லாந்தில் இருந்து கொண்டு வந்து 3 மாதம்  கூட ஆகவில்லை. அதனுடைய விலை இலட்சம் தாண்டும். பெரிய மரங்கள் இருக்கிறதால குரங்குகளும் கரைச்சல் தருகுது. ஒருக்கா வந்து எல்லாத்தையும் வெட்டி விடுங்கோ!” கையில் இருந்த மரக்கன்றுகளின் சுமையில் சிறு புன்னகையுடன் மட்டுமே என்னால் அவரைக் கடக்க முடிந்தது.Tuesday, May 5, 2020

Let us unite for Food Security! உணவுப் பாதுகாப்புக்காய் ஒன்றிணைவோம்! - 01Star Goose berry (Phyllanthus acidus), is also a medicinal tree native to Sri Lanka. It bears edible small yellow berries and considered as indigenous food resource. It is widely grown in the home gardens of Northern part of the country and has its contribution to the nutrition security of children. Fruits are considered as a source of improving immunity and used as a curry, pickle ingredient in Northern Sri Lanka. The wood is used to remove salinity in water. Although many of our childhood memories are tied around this tree, nowadays it is a neglected tree. It is widely used in food preparations across South East Asia.  Why not we plant the seedlings in schools and roadsides to create a culture of community orchards?  Let us unite for food security!

அரை  நெல்லி, அரி நெல்லி என்றழைக்கப்படும் பழங்களைக் கொண்ட இம்மரம் இலங்கையின் வடமாகாணத்து சுதேச மருத்துவ மரங்களில் ஒன்று. எம்மில் பலரின் சிறு பராய நினைவுகள் இத்தகைய மரங்களைச் சுற்றியும் இருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. வடமாகாணம் உட்பட கிராமத்து சிறுவர்களின் போசாக்கு பாதுகாப்பில் இம்மரத்தின் வகிபாகமும் காணப்படுவதாக பல ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. இலங்கையின் வடபகுதியின் வீட்டுத்தோட்டங்களில் இம்மரம் பொதுவாக க் காணப்படும். இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக பொதுமக்களால் நம்பப்டுகிறது. கறி காய்ச்சுவதற்குப் பயன்பட்டதோடு ஊறுகாய் செய்வதற்கும் பயன்பட்டிருக்கிறது. நீரின் உவர்த்தன்மையைப்போக்க இம்மரக்கட்டையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் எம்மக்கள். ஆயினும் தற்போது இம்மரம் புறக்கணிக்கப்பட்ட மரமாகவே கருதப்படுகிறது.   நவீன உணவுப்பழக்கங்களும் தொழில் நுட்பங்களும் இம்மரத்தைப் பயனற்றதாக்கி விட்டன . ஆனால் தென் கிழக்கு ஆசியாவிலோ இக்காய் இன்றும் சமையல் தேவைகளுக்காக ப் பயன்படுகிறது. இம்மரக்கன்றுகளை பாடசாலை வளாகங்களிலும் வீதியோரங்களிலும் நாட்டுவதன் மூலம் சமூகப் பழத்தோட்ட கலாசாரத்தை ஏன் எம்மால் உருவாக்க முடியாது? உணவுப் பாதுகாப்புக்காய் ஒன்றிணைவோம்!

Sunday, May 3, 2020

அவளின்றேல்…..?


கடந்த தசாப்தம் வலிகள் மிகுந்த தசாப்தம். அவளது அழிவு நெருங்கிக்கொண்டிருப்பதாய்ப் பலரும் எண்ணினர். கூட்டங்கள் கூடினர்…. ஒப்பந்தங்கள் உருவாகின… கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன…. கடப்பாடுகள்  உருவாகின… எல்லாவற்றின் பின்னணியிலும் பணம் மட்டும் இருந்தது. யாவரும் கதைத்தார்கள். எவரும் செவிமடுத்ததாய்த் தெரியவில்லை. இத்தனை கோடி ஆண்டுகள் நின்று நிலைத்து உயிரின் ஆதாரத்துக்கே துணை செய்தவளுக்கு கடந்த சில தசாப்தங்களை  மட்டும் இலகுவாய்க் கடக்க முடியவில்லை. ஒற்றை இனத்தின்  நிலைப்புக்காய் அவள் செய்த தியாகங்கள் எண்ணிலடங்கா. அவற்றை அங்கீகரிக்க க் கூட பலருக்கு மனம் வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். சில சமயங்களில் பொங்கியும் எழுந்தாள். மாற்றங்கள் உருவானதாய் அவள் உணரவில்லை. ‘கொரோனா’ என்ற தன் சேய் கொண்டு அமைதியாய்ச் சாதிக்கத் தொடங்கியிருக்கிறாள்.  


எதனையும் செவிமடுக்காமல் மேலாதிக்கத்தின் பாதையில் தம் காய்களை நகர்த்தியவர்களெல்லாம் ஸ்தம்பித்துப் போயினர். உண்மையை மறைப்பதா எடுத்துரைப்பதா என விழி பிதுங்கி நின்றனர்.  மானிடத்தின் மகத்துவமே பணத்தில் தான் இருக்கிறது என எண்ணியவர்களின் சிந்தனைகளை மீள் பரிசோதனை செய்யச் சொல்கிறாள். இங்கென்ன இருக்கிறது எனத் தம் தாயை நீங்கியவர்களை, தாயுடன் இருந்தால் வாழ்வே இல்லை என எண்ணியவர்களையெல்லாம் அங்கென்ன இருக்கிறது என யோசிக்கச்  சொல்கிறாள். மானிட வாழ்வின்  நிலையாமையையும் யதார்த்தத்தையும் எடுத்துரைக்கிறாள். தன்னிறைவையும் கலாசாரத்தையும் மீள நினைவூட்டுகிறாள். அவசர உலகில் ஓடி ஓடி உழைத்த பலரின் பாதையைத் திசை திருப்பியிருக்கிறாள்.  பல வாண்மையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறாள்.  எல்லாவற்றுக்கும் மேலாக, இது அவள் மீதான வடுக்கள் ஆறுவதற்கான ஓய்வு காலம். மானிடத்தின் உன்னதத்தை மனித இனம் உணரவேண்டிய அவசர காலம். அவளின்றேல் எவருமில்லை.  அவள் மானிடம் பற்றிக் கற்றுத் தரும் பாடங்கள் மனித இனம் திருந்தும் வரை தொடரும் என்பது மட்டும் திண்ணம்.

Sunday, February 3, 2019

அவளில்லா அபிவிருத்தி!நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள் ஐந்தாவது இலக்காக வரையறுக்கப்பட்டிருக்கும் பால் நிலை சமத்துவத்தை அடைதலும் பெண்களை வலுவூட்டலும் என்ற இலக்குடன் இயற்கை வளங்கள் வெகுவாகத் தொடர்பு பட்டவை. இவ்விலக்கானது ஏனைய பல இலக்குகளை அடைவதில் பால் நிலை சமத்துவம் மட்டுமன்றி பெண்களின் பங்களிப்பையும் வரையறுத்து  நிற்கிறது. உதாரணமாக வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு, போஷாக்கு, என  சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது இவ்வைந்தாம் இலக்கு.
அந்த வகையிலே உலக உணவு விவசாய ஸ்தாபனத்திடம் மிக முக்கியமான பொறுப்பொன்று வழங்கப்பட்டிருக்கிறது.  பொருளாதார வளங்கள் மட்டுமன்றி காணி , ஏனைய சொத்துகள் , நிதிச்சேவைகள், பரம்பரைச் சொத்துகள், இயற்கை வளங்கள் யாவற்றின் மீதுமான உரித்து, அதிகாரம் ஆகியவற்றில்  தேசிய சட்டங்களுக்கமைய பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கக் கூடியவாறு சட்ட 
சீர்திருத்தங்களை உருவாக்குவதே அப்பொறுப்பாகும்.
உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் பெண் விவசாயிகள், முயற்சியாளர்கள், தொழிலாளர்கள் ஆண்களுடன்  ஒப்பிடுகையில் உற்பத்தித்திறன் குறைந்தவர்களாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிய விழைந்தபோது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன.  ஏனெனில்  பொருளாதார வளங்கள் மீதான அதிகாரம்  ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு  மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றமையை  அவதானிக்க முடிந்திருக்கிறது.  உற்பத்தியைப் பொறுத்தவரையிலே ஆண்களுக்கு  கிடைக்கும் அதே பொருளாதார வளங்கள் மீதான அதிகாரம் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகரான வினைத்திறனுடன் பெண்களும் செயற்படுகின்றமையை ஆய்வு முடிவுகள் உறுதி செய்திருக்கின்றன.
பொருளாதார, நிதி வளங்களின் பால் நிலைப் பரம்பல் மீது மிக நீண்ட காலமாக நீடித்துவரும் சமத்துவமின்மை காரணமாக, அபிவிருத்தியில் பங்களிக்கின்றமை தொடர்பில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பாதகமான நிலைமையையே எதிர் நோக்குகின்றனர்.
பால் நிலை சமத்துவம் தொடர்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது இலக்கை அடைவதற்கு பொருளாதார வளங்கள், காணி உட்பட இயற்கை வளங்கள் மீது பெண்களுக்கு சமமான  உரித்தும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டியிருக்கின்றமை மிக அவசியமானதாகும். நாடொன்று நிலைத்து நிற்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமாயின்  அதன் பொருளாதார வளங்கள் பகிரப்படும் தன்மையில் பால் நிலை சமத்துவம் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட்டால் வறுமை ஒழிப்பு, வீட்டு அலகுகளின் நலனோம்பல், ஆரோக்கியம், போஷாக்கு போன்ற பல துறைகளில் பன் மடங்கு அபிவிருத்தி ஏற்படும் என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
 ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடைவுகளில் ஒன்று  ஒவ்வொரு நாடுகளும் எங் ஙனம் சீர்திருத்தங்களை உருவாக்கி  பொருளாதார வளங்கள், காணி உட்பட்ட இயற்கை வளங்கள், நிதிச் சேவைகள் ஆகியவற்றின் மீதான உரித்து, அதிகாரம் தொடர்பில் பெண்களுக்குசம உரிமையை வழங்கி அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கிண்றன என்பதை அளவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காணி தொடர்பில் பெண்களின் உரித்து, அதிகாரம் ஆகியன பெண்களின் நலனோம்பல், உற்பத்தித்திறன், சமத்துவம், வலுவூட்டல் ஆகியவற்றில் அதிக பங்களிப்பைச் செலுத்துவனவாகப் பார்க்கப்படுகின்றன.  முரண்பாடுகளுக்கு ப்பின்னரான சமூகங்கள்,  விவசாய சமூகங்கள் மத்தியிலே காணி மீதான உரிமை, அதிகாரம் என்பவை பெண்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களை வறுமை வலையில் சிக்க வைக்காத தடுப்பாகவும் பார்க்கப்படுகின்றன.  அதிலும் சமூகப்பாதுகாப்பு நடைமுறைகள், சமத்துவமான தொழில் சந்தைகள் குறைவாக க் காணப்படும் பகுதிகளிலே காணி மீதான  அதிகாரம், உரித்தற்ற பெண்கள் பாதிக்கப்படும் தன்மை அதிகம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.
காணி மீது பெண்ணுக்கு அதிகாரமும் உரித்தும் கிடைக்கப்பெறுதலானது அவள் உறுதி மிக்க வலுவூட்டலுடன் கூடியவளாக மாறுகிறாள்.  ஆண் துணை மீதோ அல்லது ஏனைய உறவினர் மீதோ அவள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது விடுகிறது.  வீட்டு அலகினுள்ளே அவளது பேரம் பேசும் திறன் அதிகரிக்கிறது. ஆதலினால் ஏனைய உற்பத்தித்திறன் மிகு வளங்களையும் நிதிச் சேவைகளையும் கூட அவளால் இலகுவாகப் பெற முடிகிறது.  காணி உரித்து கிடைக்கப்பெறுவதால் அவளிடம் உருவாகும் நம்பிக்கையுணர்வு அவளது முயற்சியாண்மைத் திறனை அதிகரிப்பதோடு மட்டுமன்றி விரிவடையவும் செய்கிறது. ஆதலினால் அவளால் உற்பத்தி சார், கூட்டுறவு சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அபிவிருத்திக்கு பங்களிக்க முடிகிறது.
காணி மீதான உரிமை, அதிகாரம் என்பன மனித உரிமைகளானவை. இங்கு   மனித உரிமைக்கும் அடிப்படை உரிமைக்குமான வேறுபாட்டை நாம் பார்க்க வேண்டும் . ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட உரிமைகள் யாவும் மனித உரிமைகள் எனப்படுவன. அவ்வுரிமைகளுள் இலங்கையின் அரசியல் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படுவன. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஒருவர் முறைப்பாடொன்றை அனுப்புகிறார் எனக் கொள்வோம்.  அவரது முறைப்பாடு இலங்கையின் அரசியலமைப்பினால் வரையறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகளுள் எவற்றையேனும் ஆட்சித்துறை மீறியிருக்கிறதா என்பதையே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரீட்சிக்கும். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கமைய உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையாக க் கருதப்படவில்லை. அந் நிலையில் அவ்வுரிமை மீறப்பட்டமைக்கு எதிராக எந்தவொரு முறைப்பாட்டையும் இலங்கையின் பிரஜையொருவர் முன் வைக்க இயலா த நிலை காணப்படும்.
அதே போல  2016 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் தகவலறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படிருக்கவில்லை. இந்நிலையில் பொதுத் தகவல் ஒன்றுக்கான விண்ணப்பதாரின் அணுகல் கோரிக்கை மறுக்கப்படும் போது அவரால் எங்கும் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளவோ வழக்குத் தொடரவோ இயலாதே நிலையே காணப்பட்டது. ஆயினும் இலங்கையின்  அரசியல் அமைப்பின் 19 ஆவது சீர்திருத்த த்தின் 14 (அ) உறுப்புரைக்கமைய தகவல் அறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
சிவில், அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச கூட்டு உடன்படிக்கையின் மூன்றாவது சரத்து ஆண், பெண் இரு பாலருக்குமிடையிலான சமத்துவத்தை உறுதி செய்கிறது. இரண்டாவது சரத்தோ  அதனடிப்படையிலான பாரபட்சங்களைத் தடை செய்கிறது. இருபத்து ஆறாவது சரத்தோ, சட்டத்தின் முன்னே யாவரும்  சமம் என்பதை வலியுறுத்துகிறது.
இவ்வுடன்படிக்கையில் பெரும்பாலான நாடுகள் கைச்சாத்திட்டிருக்கின்ற போதும்  சொத்தொன்றின் அல்லது இயற்கை வளமொன்றின் மீதான உரித்து, அதிகாரம் தொடர்பில் உலகின் பல பிராந்தியங்களிலும் பாரியளவிலான பாரபட்சங்கள் காணப்படுவதாகவே  ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன.
உலக விவசாய ஸ்தாபனத்தின் பால் நிலை, காணி உரிமைத் தரவுத்தளத்தில் உள்ள உலக நாடுகள் அனைத்திலும் காணி உரித்துடைய ஆண்களை விட பெண்கள் கணிசமானளவு குறைவாகவே காணப்படுகின்றனர். அதேவேளை விவசாயக்காணியின் உரித்து எனக் கருதும் போது  பெண்கள் சிறிய விஸ்தீரணமுடைய தரம் குறைந்த நிலங்களையே உடைமையாக க் கொண்டிருக்கின்றமையையும் ஆய்வுகளால் அவதானிக்க முடிந்திருக்கிறது.   ஆண்வழிச் சமூகமான பாரம்பரியத்தைக் கொண்ட பிரித்தானிய காலனித்துவ ஆட்சியுடன் இலங்கையின் காணிச் சட்டங்களும் வளர்ச்சியடைந்தன என்றே கூறவேண்டும்.
இலங்கையிலே 80 சதவீதத்துக்கும் அதிமான காணிகள் அரச காணிகளாகவே காணப்படுகின்றன என்பதை நாம் கடந்த வாரம் பார்த்தோம். நகர எல்லைகள் தவிர்த்து பிரதேச சபை எல்லைகளுக்குள் அமைந்திருக்கும் அத்தகைய காணிகள் பெரும்பாலும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தினூடாகவே ஏறத்தாழ 7 தசாப்தங்களுக்கும் மேலாக காணியற்றோருக்கு பல்வேறு நோக்கங்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் உரித்தாவணம் வழங்கப்பட்ட காணியொன்றின் உரித்தாளருக்கு மூன்றாம் அட்டவணை எனப்படும் அட்டவணைக்கமைய தான் விரும்பும் ஒருவரையோ அல்லது தனது வாழ்க்கைத்துணையையோ பின்னுரித்தாளராக நியமிக்க இயலும். அவர் அவ்வாறு நியமிக்காமல் இவ்வுலகை நீத்தால், அவரது வாழ்க்கைத்துணைக்கு அக்காணியின் நன்மைகளை அனுபவிக்க க் கூடிய வகையிலான சீவிய உரித்து கிடைக்கும் வகையில் சட்டம் இடமளிக்கிறது. ஆயினும் அக்காணியின்  பூரண உரித்து தொடர்பில் மூன்றாம் அட்டவணைக்கமைய உரிமை மாற்றம் மேற்கொள்ளப்பட சட்டம் அனுமதியளிக்கிறது. இங்கு பால் நிலை பாரபட்சம் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.ஏனெனில்  மூன்றாம் அட்டவணையில் முதல் நிலையில் இருப்பவர்கள் ஆண்பிள்ளைகளே. இத்தகைய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபரொருவர் பின்னுரித்தாளரை நியமிக்காமல் இறந்து போனால், அவரது முதலாவது ஆண்பிள்ளையே காணிக்கு உரிமையாளராக இயலும். மூத்த பிள்ளைகள் பெண்பிள்ளைகளாக இருந்து கடைசிப் பிள்ளை ஆண்பிள்ளையாகிலும் ஆண்பிள்ளைக்கே காணி மீதான உரிமை கிடைக்கப்பெறும்.  
கணவனை, பிள்ளைகளை யுத்த்திலே இழந்த பெண்ணொருவர் தனக்கான காணியின் பூரண உரித்தை இச்சட்டத்தின் கீழ் உறுதி செய்ய இயலாதவராகவே காணப்படுவார். காணியின் பூரண உரித்தானது உரிமையாளரான கணவரின் சகோதரர்களுக்கோ அல்லது பெறாமக்களுக்கோ தான் பகிரப்படுமே தவிர வாழ்க்கைத்துணைக்கல்ல. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டமானது காணி மீதான உரித்து, பால் நிலை சமத்துவம் தொடர்பில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான சிறு உதாரணம் மட்டுமே.பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளில் இயற்றப்பட்ட பல சட்டங்களில் இத்தகைய பாரபட்சங்கள் காணப்படத்தான் செய்கின்றன. காலத்துடன் கொள்கைகள் மாற மாற இச்சட்டங்களையும் இற்றைவரைப்படுத்த பல அபிவிருத்தியடைந்த நாடுகள் தவறி விடுகின்றன. இத்தகைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஏற்படும் தாமதங்கள் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தாமதங்களை ஏற்படுத்தும்.
சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாக அலகுகளிலே பால் நிலை சமத்துவத்தைப் பேணும் வகையிலே, பெண்ணுக்கான சொத்தின் மீதான உரித்தை உறுதி செய்யும் வகையிலே தீர்மானங்களை மேற்கொள்ள அலுவலர்கள் பயிற்றப்பட வேண்டும். தமக்கான உரித்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வல்லமை மிக்கவர்களாக பெண்களும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
 அபிவிருத்திக்கான உரிமை என்பது கூட மனித உரிமையாகவே பார்க்கப்படுகிறது. இது பொருளாதார அபிவிருத்தியை மட்டும் குறிக்கும் சொற்றொடர் அல்ல. இயற்கை வளங்கள் மீதான அதிகாரம், சுய ஆட்சி, அபிவிருத்திக்கான அர்த்தமுள்ள பங்களிப்பு, சம வாய்ப்புகளும் பாரபட்சமின்மையும், சகல மனித உரிமைகளையும் அனுபவித்தல் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அபிவிருத்திக்கான உரிமை பார்க்கப்படுகிறது.   நாடொன்றின் அபிவிருத்தியின் அடிப்படை அலகு வீடாகும். ஆதலினால் அபிவிருத்தியின் மையமாக பெண்களே கருதப்படுகின்றனர். அவ்வபிவிருத்தியில் பெண்கள் பங்களிக்கும் போது கிடைக்கும் நன்மைகள் பல மடங்கானவை என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. காணி உட்பட்ட இயற்கை வளங்கள் மீதான உரித்து உறுதிப்படுத்தப்படாமல் அபிவிருத்தியிலே பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்க இயலாது! அத்தகைய நிலை நாட்டின் மீதான சுமைகளை அதிகரிக்குமே தவிர, அபிவிருத்தி சார்ந்து நாட்டை முன்னகர்த்தாது என்பது கண்கூடு!

காணி நிலம் வேண்டும்!

உலகளாவியரீதியிலே பண்டைக்காலந்தொட்டு நடந்த போர் வரலாறுகளிலெல்லாம் நிலத்துக்கு பெரு முக்கியத்துவம் உள்ளது. தமிழர் வாழ்வியலும் காணியும் பின்னிப்பிணைந்ததெனலாம்.  காணியின் அறிமுகம் சோழர் காலத்தில் ஆரம்பிக்கிறது. காணியென்பது உரிமையின் மறு பொருளாக க் கருதப்பட்டாலும் 1/80 என்ற அலகை அடிப்படையாக க் கொண்ட முறையாக க் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் வரலாற்றிலே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னன்  இராஜ ராஜ சோழனுடைய காலத்தில் தான் முதன் முதல் நிலங்கள் அளவை செய்யப்பட்டன. எல்லைகள் வகைக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் உரித்தான நிலங்கள் கணக்கிடப்பட்டன. நிலங்கள் மீதான  விளைச்சலின் அடிப்படையில் அவை தரம்பிரிக்கப்பட்டன.  நில அளவையில் வேலி, மா, காணி, முந்திரி போன்ற சொற்பதங்கள் மிக முக்கியமானவை.
ஈழ தேசமும் ஜன நாதமங்கலம் எனவும் மும்முடிச் சோழ புரம் எனவும்  நெடுங்காலம் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தமையாலோ என்னவோ  எம்மவர்  வாழ்வியலிலும் காணிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
 நுகர்வை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகிலே  காணி எனப்படுவது நிலமாகக் கருதப்படுவதுடன் மிகவும் பிரதானமானதோர் பொருளாதார வளமாகப் பார்க்கப்படுகிறது.  ஏனெனில் காணி மீதான உரிமையை அடிப்படையாக க் கொண்டே ஏனைய பொருளாதார, உற்பத்தித்திறன் சார் வளங்கள் மீதான அதிகாரம் பிரயோகிக்க ப்படுகிறது. நகர்ப்புறமோ கிராமப்புறமோ அவ்வதிகாரம் தொடர்பில் ஒத்த போக்கே காணப்படுகிறது.   நிலமின்றி மேற்கொள்ளப்படும் விவசாயம் நடைபெற்றாலும் கூட அதிகரித்துவரும் உலக சனத்தொகையின் உணவுத் தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கின்றதென்றால் நிலமன்றி வேறேதும் துணை புரியாது. நிதி வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பிடியாக மட்டுமன்றி  திருமணங்களின் போதும் காணியின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது.
அடிப்படையில் வறுமையை ஒழிக்க வேண்டுமாயின், உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமாயின்,  நிலையான அபிவிருத்தியை  அடைய வேண்டுமாயின் நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியன  அத்தியாவசியமானவையாக மாறி விடுகின்றன. அதனால் தான் கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூட நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியவற்றுக்கும்  அவற்றின் மீது பெண்களின் பங்குக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.  இலங்கையைப் பொறுத்த வரையிலே ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும்  அதிகமான காணிகள் மீதான உரிமையை அரசே வைத்திருக்கிறது. ஆயினும் அவற்றுள் பெரும்பாலானவை  பல்வேறு தேவைகளுக்காக பொது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும்  நிபந்தனைகளின் பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் போன்று பிரித்தானியரின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட மாவட்டங்களில் தனியார் காணிகள் அதிக சதவீதத்திலும் அரச  காணிகள்  குறைவான சதவீதத்திலும் காணப்படுகின்றன. 
காணி உரிமை, அதிகாரம் போன்றவை இலங்கையைப் பொறுத்தவரையிலே ஆண்வழி சமூக க் கட்டமைப்பை அடிப்படையாக க் கொண்டவையாகவும் பெண்களைப் பின்னிறுத்தியவையாகவுமே காணப்படுகின்றன. 1970 களில் உருவாக்கப்பட்ட காணிச் சீர்திருத்தங்களின் பின்னரும் கூட அதிகளவு நில புலங்களை வைத்திருந்த பலர் வடக்கு கிழக்கு பகுதிகளை விட்டு புலம் பெயர்ந்து விட்டனர். இந் நிலையில்  அரச காணியாகிலும் சரி தனியார் காணியாகிலும் சரி காணி மீதான உரிமை, அதிகாரம் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் உருவாகியமை தவிர்க்கமுடியாததாகி விட்டது.  நாட்டில் நிலவிய அசாத்தியமான சூழ் நிலை காரணமாக பிரித்தளிக்கப்பட்ட அரச காணிகளை அபிவிருத்தி செய்ய முடியாது கைவிட்டுச் சென்றோர் மிகப்பலர்.  இந் நிலைமைக்கு தனியார் காணிகளும் விதி விலக்காக அமையவில்லை.
கைவிட்ட நிலையில் காணப்பட்ட காணிகள் பல காலத்துக்குக் காலம் பல்வேறு தரப்பினராலும் அத்து மீறிப் பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருகின்ற  நிலைமையும்  தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றே கூற வேண்டும். யுத்தமும் சுனாமி அனர்த்தமும் பல உரித்தாவணங்களும் கோவைகளும் அழிந்து போகவும் கைவிடப்படவும் காரணமாகி விட்டன. 1970 களின் பின்னர் காணி அத்து மீறல்கள் அளவை செய்யப்பட்டு வரைபடங்கள் இற்றைவரைப்படுத்தப்படவில்லை. கடந்த 3 தசாப்தகாலங்களுள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளும் பகிர்ந்தளிப்புகளும் கூட வரை படங்களில் இற்றை வரைப்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகிறது.
அசாத்திய சூழ் நிலைகளால் கைவிடப்பட்ட காணிகளை 3 தசாப்த காலம் கடந்து , ஆவணங்களை இழந்து உரிமை கோரும் போது அவை வேறு தேவைகளுக்காக பாவிக்கப்பட்டிருக்கின்றமையையும்  அவற்றின் நிலப்பயன்பாடு மாறி இருக்கின்றமையையும் அதன் காரணமாக அவை பல்வேறு பட்ட திணைக்களங்களின் அதிகார எல்லைக்குள் ஆட்பட்டிருக்கின்றமையையும் அவதானித்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளின் உரித்து, அவற்றின் மீதான அதிகாரம்  தொடர்பில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலைமைகள் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.  அத்துடன் ஆறு, குள ஒதுக்கீடுகளும் பாதை ஒதுக்கீடுகளும்  அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு நிலையான குடியிருப்புகளாக மாற்றப்பட்ட நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்துதல்  தொடர்பான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்தும் நீடித்த வண்ணமேயுள்ளன.
யுத்த சூழலில் உள் நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியமராதவர்களும் புலம் பெயர்ந்தவர்களுள் பெரும்பாலானோரும் தமக்கான காணி உரிமையை வட கிழக்கு மாகாணத்தில் கொண்டிருக்கின்ற அதேவேளை மீளக்குடியமர்வின் பின்னர் தற்போது குடியமர்ந்திருக்கும் பல புதிய, உப குடும்பங்களுடைய காணி உரிமை தொடர்பில் இன்னும் சிக்கலான நிலைமையே காணப்படுகிறது.
அரச காணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட இயலாதவையாக இருந்த போதும் விற்பனை உடன்படிக்கை மூலம் கைமாற்றுபவர்கள் இன்னும் வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர். மூன்று தசாப்த கால அசாதாரண சூழ் நிலைகளின் போது உருவாகிய இப்பழக்கத்தை எந்தவொரு தரப்பினரும் கைவிடுவதாக இல்லை. காணிகளை பிரிக்கப்படஇயலாத விஸ்தீரணங்களுக்கும் குறைவாகப் பிரிவிடை செய்து விற்பனை உடன்படிக்கைகள்  மூலம் கைமாற்றுபவர்களும் திருந்தாத நிலையே தோன்றியுள்ளது.  இவை யாவுமே அரச நிர்வாக இயந்திரங்களின்  எல்லைகளுக்கப்பால் தினந்தோறும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளன.  
ஏறத்தாழ ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னரே  அப்போது காணப்பட்ட அரச காணிகளுக்கு வெளிப்படுத்துகை உறுதிகளை எழுதி கைமாற்றும் முறைமைக்கு பழக்கப்பட்ட எம்மவர்கள் அதைத் தற்காலத்திலும் தொடர்கின்றமை  பல முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. மத்திய வகுப்பினருக்கென வழங்கப்பட்ட காணிகளும் கூட நிபந்தனைகளை மீறி பிரிவிடை செய்யப்பட்டும் உரிமை கோரப்படாமலும் பல்வேறு தரப்பினரால் அத்துமீறிப்பிடிக்கப்பட்டும் சிக்கலானதோர் நிலையில் காணப்படுகின்றன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் சிபாரிசுக்கமைய காணி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களின் அடிப்படையிலே அத்து மீறிப்பிடிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் ஆவணங்கள் தொலைந்த, ஏலவே பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் உரித்தாவணங்கள் வழங்கப்பட்டு பல்லாயிரக்கணக்காணோரின் காணி உரிமை உறுதி செய்யப்பட்டமையை ஒரு போதும் மறுக்க முடியாது.
மூன்று தசாப்த கால அசாத்திய சூழல் காரணமாக எந்தவித திட்டமிடலுமின்றி திடீரென பெரு நகரங்களாக வளர்ச்சியடைந்த பிரதேசங்கள் பலவும் வடகிழக்கிலே காணப்படுகின்றன. நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகள் நீண்ட கால க்குத்தகையில் வழங்கப்பட வேண்டியவை. ஆயினும் இப்புதிய நகரங்களுள் அவை இன்னும் முற்றாக ஒழுங்கமைக்கப்பட்டு குத்தகை அறவிடப்பட்டு வருகின்ற நிலைமை அரிதாகவே காணப்படுகிறது. ஆயினும் அக்காணிகளை மேட்டு நிலமாகப் பயன்படுத்த அனுமதி பெற்ற தனி நபர்கள்  பெருந்தொகை பணத்தை பெற்று அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குகின்றமையையும்   அரசினால் வழங்கப்படும் குத்தகை உடன்படிக்கைகளை கை மாற்றூகின்றமையையும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக இத்தகைய செயற்பாடுகள் அவற்றின் கைகளை மீறியவைகளாகவே இருக்கின்றன.
அரச காணிகள் தொடர்பிலான  நிலைமை இவ்வண்ணமிருக்க கடந்த கால அசாதாரண சூழ் நிலையால் அத்து மீறிப்பிடிக்கப்பட்ட தனியார் காணிகள் மீதான வழக்குகள் அரை தசாப்தத்துக்கும் மேலாக  நீதி மன்றுகளில் நடைபெற்று வருகின்றன.  காணிக்கான உண்மை உரித்தாவணங்களுடன் உரிமையாளரும் எந்தவித ஆவணங்களின்றி அத்துமீறிப்பிடித்தவர்களும் அரை தசாப்தங்களுக்கு வழக்காடுகின்றமை சிலவேளைகளில் யதார்த்தத்துக்கும் தர்க்கத்துக்கும் அப்பால் பட்டவைகளாகவே காணப்படுகின்றன. மாவட்டப் பதிவகங்களிலிலிருந்த காணி உரித்தாவணப்பதிவேடுகள் அழிவடைந்தமையால்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்த தனியார் உறுதிகள் சத்தியக்கடதாசியுடன் மீளவும் பதிவு செய்யப்படுகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வு  கற்றவரிடமும் மற்றோரிடமும் குறைவாகவே காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலே 80 சதவீதமான காணிகள் தனியார் காணிகளாதலால் தனியார் உறுதிகளைக் கைமாற்றிப் பழக்கப்பட்டோர் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச காணிகளையும் தனியார் காணிகள் என கல்வியறிவு வேறுபாடின்றி அனைவரும் நம்பி ஏமாறும் பல  நிகழ்வுகள் அன்றாடம் இடம்பெற்றவண்ணமே உள்ளன. 
குறித்த காணியொன்று தனியார் காணியா? அரச காணியா என்பதை அக்காணி அமைந்துள்ள பிரிவுக்குரிய பிரதேச செயலகத்தில் காணப்படும் நில அளவை வரைபடங்களை அடிப்படையாக க் கொண்டு அறிய முடியும். இலையேல் நில அளவைத் திணைக்களத்திலுள்ள இற்றைவரைப்படுத்தப்பட்ட நில அளவை வரைபடங்களைக் கொண்டும் அறிய இயலும். காணி தொடர்பிலான நிர்வாக இயந்திரங்களில் மூன்று தசாப்தகாலமாக ஏற்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்து  சம காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க இன்னும் சில தசாப்தங்களாகும் எனலாம்.
இவை இப்படி இருக்க பெண்களின் காணி உரிமை பற்றி எவரும் பெரிதளவில் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அடிப்படையில் நிலம் மீது பெண்ணுக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ காணப்படும் பட்சத்தில் பல அபிவிருத்தி இலக்குகளை இலகுவாக எட்டமுடியும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.பெண்களுக்கு காணிமீதான அதிகாரமும் உரிமையும் காணப்படும் போது  பொருளாதார ரீதியிலான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் நிலப் பாவனை தொடர்பாக பெண்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் வினைத்திறனானவையாக இருக்கும். அக்காணியிலிருக்கும் இயற்கை வளங்கள் நிலைத்திருக்க க் கூடிய வகையிலே பாவனையிலிருக்கும். ஆண்களுக்குக் கிடைப்பனவான பௌதிக வளங்கள் பெண்களுக்கும் கிடைக்கப்பெற்று அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் விளைச்சல் 20-30 சதவீத த் தால் அதிகரிக்கும்.  உணவுப் பாதுகாப்பு தானாகவே அதிகரிக்கும்  என்றெல்லாம் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆயினும் காணி மீதான உரிமை, அதிகாரத்தை பெண்களுக்கும் சமமாக வழங்க நாம் தயாராக இருக்கிறோமா என்பது பணப்பரிசுக்குரிய
கேள்வியாகவே இன்றும் இருக்கிறது.

ஊழலில்லா உலகு?

யாவரையும் உள்ளடக்கிய சுபிட்சமான உலக அபிவிருத்தியும் நிலையான, தாங்கும் சக்தி மிக்க புவித்தொகுதியும் என்ற  நெடுந்தூரக் கனவுடன் நாம் நிலத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் காலம்  இது. புதிய மாற்றம் என்பது சாத்தியமானதே. ஆயினும் எமது கனவை அடைவதற்கு நாம் பல்வேறு வழி வகைகளைக் கையாள முடியும். இனிமேலும் இப்பூமிப் பந்தை அழுத்தங்களுக்கு ஆளாக விடாமல் நாம் தற்போது வாழும் வாழ்க்கைப் பாங்கை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். அல்லது துரித பொருளாதார வளர்ச்சியினூடு நிலைத்து நிற்கும் தன்மையை எய்த வேண்டும். அல்லது சகல வழிகளிலும் இறுக்கமான நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.  அதுவுமில்லையேல் சாதுரியமான முறையிலான நிலைமாற்றத்தை உருவாக்க வேண்டும்.
இத்தகைய நாங்கு வழிமுறைகள் தொடர்பிலும் இயக்க மாதிரிகள் உருவாக்கப்பட்டு நோர்வே நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றினால் பரீட்சிக்கப்பட்ட து. அப்பரீட்சிப்பு அறிக்கையின் முடிவு  சற்று அதிர்ச்சியூட்டுவதாகத் தான் இருந்தது.  உலகளாவிய ரீதியிலே தற்போதைய வளர்ச்சிக்கொள்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை  2030 ஆம் ஆண்டளவில் அடைதலானது சாத்தியமற்ற ஒன்றாகவே  காணப்படுவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. 
துரித வளர்ச்சியை நாடும் போது பொருளாதார, சமூக விடயங்களுடன் தொடர்புடைய இலக்குகளையும் அடைவுகளையும் அடைய முடியும். ஆயினும் சுற்றுச்சூழலை விலையாக க் கொடுத்தே  அவற்றை அடைய முடியும்.
ஆயினும் நாம் சாதுரியமான நிலை மாற்றத்தை நாடும் போது பெரும்பாலான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை 2030 ஆம் ஆண்டளவிலே அடைய முடியும். சாதுரியமான நிலை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் நாம் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக புதுப்பிக்கத்த க்க சக்தி வழிவகைகளின் வளர்ச்சி துரிதமாக்கப்பட வேண்டும்.  அடுத்ததாக உணவுச் சங்கிலிகளின் உற்பத்தித்திறனும் துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.  மூன்றாவதாக வறுமை மிகு நாடுகளில் புதிய அபிவிருத்தி மாதிரிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.  அடுத்து சமத்துவமின்மை குறைக்கப்பட வேண்டும். இறுதியாக யாவருக்குமான கல்வி, பால் நிலை சமத்துவம், குடும்பத் திட்டமிடல் ஆகியவற்றின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

  நாடளாவிய ரீதியிலும் சரி, பிராந்திய ரீதியிலும் சரி உலகளாவிய ரீதியிலும் சரி  மேற்குறிப்பிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஆட்சித்துறை செயற்படுமாயின்  ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிராந்தியமும் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலகுவாக இருக்கும்.

இத்தகையதோர்  சாதுரியமான நிலை மாற்றம் உருவாவதற்கு நல்லாட்சி மிக மிக அவசியமாகிறது.  உதாரணமாக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் வளர்ச்சியைத் துரிதமாக்கவேண்டியதான தொரு சூழலில் நிலக்கரி மூலம் மின்னை உற்பத்தி செய்யும் புதிய செயற்றிட்டமொன்றை ஒரு நாடு அறிமுகம் செய்யுமாயின் எவ்வாறு அது தனக்கான இலக்கை எய்த முடியும்? அந்த செயற்றிட்டம் உருவாக உயர் மட்ட கொள்கைத் தீர்மானம் முக்கியதான தோர் இடத்தைப் பிடித்திருக்குமல்லவா? மாறாக  ‘எமது நாடு இனிமேல் புதுப்பிக்கத் தக்க சக்தி வளத்தை மாத்திரமே  பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்’ என்பது போன்ற கொள்கைத் தீர்மானம் காணப்படும்  நாட்டிலே நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்த்திட்டத்தை  நடைமுறைக்குக் கொண்டு வரத்தான் இயலுமா?
இவ்வினாக்களுக்கான விடைகளாய் நாம் ஒவ்வொருவரும் தேடவேண்டிய தருணம் இது.
அண்மையிலே டென்மார்க் னாட்டின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றிலே  எண்முறை சார் முறைமைகளினூடாக எங் ஙனம் தமது அரசு ஊழலைக் கையாள விழைகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன்  ஊழலுக்கு எதிராகப் போரிடுவதற்காக போது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது  ஆண்களும் பெண்களும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பிலும் அப்பிரசுரம் விளக்கியிருந்தது. ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் தொடர்பிலும் அதில் விளக்கப்பட்டிருந்தது.  இவ்விடயப்பரப்பிலே ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் விளக்குவதானது, ஊழலினால் விகிதசமனின்றி பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக எண்முறை ஆயுதங்களை (சாதுரிய கைத்தொலைபேசி, இணையம் )அணுகும் கிடைக்காமல் இருக்கும் என்பதாகும்.  ஆதலினால் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பால் நிலை சார் கூருணர்வு மிக்கவையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும்  ஆராயும் போது ஊழலும் ஊழலொழிப்பும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவையாக் காணப்படுகின்றன.
ஊழல் பலவகைப்படும். அவற்றிலொன்றே இலஞ்சமாகும். ஆயினும் எம்மில் பெரும்பாலானோர் ‘ஊழல்’ என்றால் இலஞ்சம் என்றே பொருள் கொள்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரசுரமானது சிறியளவிலான ஊழலையும் பாரியளவிலான ஊழலையும் பிரித்தறிகிறது.  ஏனெனில் அவை ஒவ்வொன்றையும் ஒழிப்பதற்கு வேறுபட்ட ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
 நவீன உலகிலே ஊழலை ஒழிப்பதற்கு நான்குவிதமான  வழிகளைக் கையாளலாம் என அப்பிரசுரம் குறிப்பிடுகிறது. அவையாவன, திறந்த தரவுகளும்வெளிப்படைத்தன்மையும், இலத்திரனியல் ஆட்சி மூலம் ஊழல் நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களைக் குறைத்தல், கட்டச் சங்கிலித் தொழில் நுட்பம் மூலம் உரிமைகளை உறுதி செய்தலும் இடைத் தரகர்களை இல்லாமல் செய்தலும், கூட்ட முதலீட்டினூடு ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களை ஊக்குவித்தல் என்பனவாகும். 
கடந்த வருட இறுதிப் பகுதியில் டென்மார்க்கின் கோப்பன் ஹார்கனில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மா நாட்டிலே இப்பிரசுரம்  முன்னளிக்கப்பட்டது.   .
அபிவிருத்தியடைந்த நாடுகளிலே இவை யாவும் சாத்தியமாக இருந்தாலும் வளார்முக நாடுகளிலும் வறிய நாடுகளிலும் நிலைமை தலை கீழாகவே உள்ளது.
யாவற்றுக்கும் முதன்மையான இயற்கை வளப்பரம்பலை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் எண்முறைத் தொழில் நுட்பத்துக்கான அணுகலில் பின்னிற்கிண்றமை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந் நிலைமையிலிருந்து வெளியே வருதலொன்றும் இலகுவான காரியமல்ல.அடிப்படையில் அதற்கான முதலீடுகள் மிக அவசியமாகின்றன.

ஆட்சியும் ஊழலும் வர்த்தக, நிதித் துறைகளுடன் பின்னிப்பிணைந்தவை என்பது வெளிப்படை உண்மையாகும். பெறுகை நடைமுறைகளில் ஊழலுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. நிலைத்து நிற்க க் கூடிய பெறுகை நடைமுறைகளின் தோற்றமென்பது ஊழலை ஒழிப்பதற்கான முதலடியாகப் பார்க்கப்படுகிறது.  அம்முதலடியை எடுத்து வைக்கும் ஒவ்வொரு நிறுவனமும்  நிலைத்து நிற்கும் இவ்வபிவிருத்தி இலக்குகளில் பதினாறாவது இலக்கை அடைவதில் தனது பங்களிப்பைச் செலுத்தும். இலங்கையிலும் ஆட்சித்துறையின் பெறுகை நடவடிக்கை முறைகளை இலத்திரனியல் படுத்தும் செயற்பாடுகள் நடந்த வண்ணமேயுள்ளன. 

ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமாயின் கண்ணுக்குப் புலப்படாதவற்றை புலப்படுத்துதல் வேண்டும் என்பர். தகவலுக்கான அணுகலையும் வெளிப்படைத்தன்மையையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவற்றைப் புலப்படுத்த இயலும்.
இங்கு  நான்காவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கான ‘தரமான கல்வி’ தொடர்பிலும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி சார் பெறுபேறுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது சில அடிப்படைத் திறன்களையும் நல்ல பெறுமானங்களையும் மாணவர்கள் மத்தியில் வளர்த்து விடுவதாக கல்வி முறைமைகள் மாற்றப்பட வேண்டும்.
ஊழல் என்பது சங்கிலித்தொடர் போன்றது. அது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த சங்கிலித்தொடரை இடையிலே அறுப்பதற்கு மாணவர்களால் இயலும்.
கடந்தவாரம் ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’  நிறுவனத்தினால் 2018 ஆம் ஆண்டுக்கான ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டிகள் வெளியாகியிருந்தன. 2017 இலிருந்து 22018 ஆம் ஆண்டுக்கிடையே இலங்கையைப் பொறுத்தவரை எந்தவொரு முன்னேற்றமும் நடைபெறவில்லை. அது தொடர்ந்தும் 38 புள்ளிகளையே  தக்கவைத்துக்கொண்டிருக்கின்றமையை அறிய முடிந்தது. நாடொன்று 0 புள்ளிகளாய்ப் பெற்றால் அது ஊழல்  நிறைந்ததாகவும் 100 புள்ளிகளைப் பெற்றால் ஊழலற்றதாகவும் தீர்மானிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலே இலங்கை 89 ஆவது இடத்தையும் தென்னாசியாவைப் பொறுத்தவரையிலே 3 ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது.  உலகளாவிய தரப்படுத்தலிலே 25 ஆவது இட த்தைப் பெற்று பூட்டான் தென்னாசியாவிலே முதலாம் இடத்தையும்  78 ஆவது இடத்தைப்  பெற்ற இந்தியா தென்னாசியாவிலே இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. 
2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையானது 36 ஆம் இடத்துக்கும் 38 ஆம் இட த்துக்கும் இடையேயே இருந்து வந்த மையை  ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’  நிறுவனத்தின் இலங்கைக் கிளை இங்கு சுட்டிக்காட்டுகிறது.  ஜன நாயகத்துக்கும் ஊழலுக்கு மான தொடர்பையும் அவ்வறிக்கை தெளிவு படுத்த விழைகிறது.
ஒரு சேவையொன்றைப் பெறுவதற்காக வரிசையில் பலர் நிற்கும் போது எமக்கும் சேவை வழங்கு நருக்குமான நல்லுறவைப் பயன்படுத்தி  முதலில் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. அதே போல சேவை வழங்கு நருக்குப் பரிச்சயமான ஒருவரின் சிபாரிசுடன் சென்று சேவையைப்பெறும் பழக்கமும் எம்மில் பலரிடம் உண்டு.  பெறுகைகளின் போது உறவினர்களையும் நண்பர்களையும் விண்ணப்பிக்ச் செய்து தேர்வு செய்யும் திறனும் பொது பெறுகை நடைமுறைகளின்றி தெரிந்தவருக்கே ஒப்பந்தத்தை வழங்கும் செயற்பாடுகளையும் பலர் மேற்கொள்கின்றனர்.  சேவை வழங்கு நரிடம் தாம் நாடிச் சென்ற சேவை பூரணமாக க் கிடைக்கப் பெற்றதும் ‘ சந்தோஷத்துக்காக’ என அன்பளிப்புகளை வழங்கும் சேவை நாடிகளும் இருக்கிறார்கள். இவை யாவுமே ஊழலின் வகைகளே. ஊழல் என்பது குற்றம் என்பதை அறிந்திருந்தும்  கேட்ட தைக் கொடுக்காவிட்டால், அல்லது அது பற்றி முறையிட்டால் தாம் நாடி வந்த சேவை தமக்கு க் கிடைக்காமல் போய்விடுமோ? அல்லது தமக்கு அச்சுறுத்தல் ஏதேனும் உருவாகுமோ என்பதற்காகவே ஊழலை ஊக்குவிப்பவர்களும் இல்லாமல் இல்லை.  இங்கு தான் சமூக அக்கறையும்  நா ன்காவது  இலக்கு தொடர்பில் நான் குறிப்பிட்ட பெறுமாங்கள் சேர் கல்வியும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு நாடு ஊழல் மிக்கதாக இருப்பதற்கும் ஊழலற்றதாக இருப்பதற்கும் ஆட்சி த்துறையின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது. ஆயினும் நான் ஏலவே குறிப்பிட்து போல ஊழல் எனப்படுவது சங்கிலித்தொடர் போன்றது. அதன் ஒரு இணைப்பையேனும் முறித்து விட்டால் ஊழல் தொடராது போகும். பொதுமக்களாக நாம் இருந்து கொண்டு ஆட்சித்துறையை மாத்திரம்  நாம் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில் இவ்வூழல் சங்கிலியின் இணைப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இணைந்திருக்கிறோம். ஏதேனும் ஒரு வகையில் எம்மால் அந்த இணைப்பை அறுத்தெறிய இயலுமானால்


ஊழல் ஒழிப்பு தொடர்பில் எமக்குக் கிடைக்கும் முதல் வெற்றி அதுவே. ஊழலுக்கு அடிமையாகாமல் இருக்கும் அதே வேளை ஊழலை ஊக்குவிக்காமல் இருக்கவும் நாம் உறுதி பூண வேண்டும்.  முயன்று தான் பார்க்கலாமே?