Sunday, June 20, 2010

யானை - மனிதன் முரண்பாடு - ஒரு மீள்பார்வை


யானை - மனிதன் முரண்பாடுகள் முறையாகத் தீர்க்கப்படாததால் அவை இன்று யானை- மனிதன் என்ற எல்லையையும் தாண்டி மனிதன் - மனிதன் என்ற புதிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

மனித முரண்பாடுகள் பல ஏற்கெனவே தீர்க்கப்படாமல் இருக்கும் இன்றைய நிலையில் யானைகள் உருவாக்கிவிட்டிருக்கும் இப்புதிய முரண்பாடுகளுக்கான தீர்வு எப்போது கிடைக்குமென்ற வினாவுக்கான விடை எவரிடமாவது இருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

யானை - மனிதன் முரண்பாட்டை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சூழலியல் பேராசிரியரான சரத் கொட்டகம ஒரு வேறுபட்ட, வித்தியசமான கோணத்திலே நோக்குகிறார்.

பேராசிரியர் சொல்கிறார் என்பதற்கப்பால், தர்க்கரீதியாக அவர் கூறும் விளக்கங்கள் நியாயமாகவே தெரிவதுடன், யானை - மனிதன் முரண்பாடு வித்தியாசமான கோணத்திலே அணுகப்பட வேண்டியதன் அவசியமும் தெளிவாகிறது.

இலங்கையிலுள்ள யானைகள் ஆசிய யானை இனத்தைச் சேர்ந்தவை. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் வாழிடத்தை இழந்து மனிதனுடன் முரண்படத் தொடங்குகின்றன என்ற கருத்தே பொதுவாக நிலவி வருகிறது.

ஆனால் ஆசிய யானைகளின் குடித்தொகையில் 1 சதவீதம் மட்டுமே அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன எனத் தரவுகள் தெரிவிப்பதாக பேராசிரியர் சரத் கொட்டகம குறிப்பிட்டிருந்தார்.

மிகுதி 99 சதவீதமான யானைகளும் அடர்த்தி குறைந்த வனப்பகுதிகளிலே, தமக்குத் தேவையான தாவரங்களும் நிரந்தரமான நீர் நிலைகளும் உள்ள பகுதியிலேயே செறிந்து வாழ்கின்றன.

இங்கு தான், யானை - மனிதன் முரண்பாட்டிற்கான காரணம் காடழிப்பு என்ற கருத்து தொடர்புபடுத்தப்படுகின்றது. பெருகிவரும் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டது. மனிதன் வாழ்வதற்கும் கூட தாவரங்களும் நிலையான நீர்நிலைகளுமே அத்தியாவசியமாக அமைக்கின்றன.

அழிக்கப்பட்ட இந்த வனப்பகுதிகளின் அயலை வாழிடமாகக் கொண்ட யானைகள், தமக்குத் தேவையான உணவும் நீரும் சுலபமாகக் கிடைக்கும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கிச் செல்கின்றன.

காடுகளை அழித்து குடியேற்றப்பட்ட சமுதாயங்கள் பொதுவாக விவசாயத்தை மூலாதாரமாகக் கொண்டவை. விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பகுதிகளிலே, நிலையான நீர்நிலைகள் நிச்சயம் காணப்படும். யானைகளுக்குத் தேவையானவையும் அவ்விரண்டுமே!

அவை சுலபமாகக் கிடைக்கும் இடம் அருகிலேயே இருக்கும் போது யானைகள் ஏன் வனப்பகுதிகளை நோக்கி நகர வேண்டும்? ஆறறிவுள்ள மனிதனே, எதனைப் பற்றியும் கவலைப்படாமல், சுலபமாகக் கிடைக்கும் வளங்களைத் தேடிச் செல்கையில் ஐந்தறிவுள்ள யானை மட்டும் விதிவிலக்கா? அதற்குத் தேவை உணவும் நீரும் மட்டுமே!


இலங்கையில் இதனை விளக்கத்தக்க நிகழ்வுகள் பல ஏற்கெனவே நடைபெற்றிருக்கின்றன. உடவளவைப் பகுதியின் 70 சதவீதமான நிலப்பரப்பு ஒரு காலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது.

பல்வேறு தேவைகளுக்காகக் காடு அழிக்கப்பட, 70 சதவீதமாக இருந்த வனப்பகுதி 4 சதவீதமாகக் குறைவடைந்தது. இதையடுத்து 1974 ஆம் ஆண்டு உடவளவை தேசிய வனப்பூங்கா உருவாக்கப்பட்டு அநாதை யானைகள் தற்காலிகமாக அங்குவைத்துப் பேணப்பட்டன.

பின்னர் அழிந்த வனப்பகுதியில் மீள் காடாக்கலை மேற்கொள்வதா அல்லது அப்படியே இருக்கவிடுவதா என்ற சிந்தனை உருவாகியது.

ஆனால் யானைகள் வாழ்வதற்கேற்ற சூழல் உடவளவை தேசிய வனப்பூங்காவில் காணப்பட்டமையாலும் தற்காலிகமாகப் பேணப்பட்ட யானைகளின் குடித்தொகை பெருகியமை அறியப்பட்டதாலும் மீள்காடாக்கல் எண்ணம் கைவிடப்பட்டு அப்பகுதி யானைகளின் வாழிடமாகவே ஆக்கப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் யானை இனமே இருக்காது என்றே எதிர்வு கூறப்பட்டது. மாறாக இந்தப் போக்கு எதிர்த்திசையில் திரும்பி இன்று யானைகளின் குடித்தொகை அதிகரித்துள்ளது.

இது யானைகளின் வாழ்வதாரத்துக்குச் சாதகமான சூழ்நிலையொன்று தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதையே சுட்டி நிற்கிறது.

இலங்கையிலே ஒவ்வொருவருடமும் ஏறத்தாழ 950 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு யானைகள் தமக்கான எல்லைகளை விட்டு வெளியேவராத வண்ணம் கட்டுப்படு த்தப்படுகின்றன.

இத்தகைய பல விடயங்கள் தொடர்பாக நாம் சிந்திக்கத் தவறிவிடுகின்றோம். யானை -மனிதன் முரண்பாட்டை வெவ்வேறு கோணங்களில் நோக்கி அதற்கான தீர்வை விரைவில் கண்டுபிடிக்காவிடில் உருவாக்கப்போகும் புதிய பிரச்சினைகளும் முரண்பாடுகளும் தீர்வற்றவையாகவே மாறிவிடும்.

தலையிடியைத் தீர்ப்பதற்கு தலையணையை மாற்றும் கதையாகவே யானை - மனிதன் முரண்பாட்டை தற்போது நாம் அணுகும் முறை அமைகிறது!

No comments:

Post a Comment