Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts

Saturday, February 13, 2021

இயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்?





 கொவிட்19 என்ற பெருந்தொற்றுக் காலம் கடந்த ஒரு வருடமாக வாழ்வின் யதார்த்தத்தை எமக்கு உணர்த்தி வருகிறது. அன்றாட வாழ்விலே மிக அவசியமானவை என நாம் கருதிய பெரும்பாலான விடயங்கள் அவசியமற்றதாகி விட்டன. அவசியமற்றவை என நாம் கருதிய பல விடயங்கள் அத்தியாவசியமாக மாறி விட்டன. நவீனத்தின் பின்னே தடம் மாறிச் சென்று கொண்டிருந்த எமக்கு யதார்த்தத்தை உணர்த்திய பெருமை இந்தப் பெருந்தொற்றையே சாரும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

அது அப்படி என்னதான் செய்தது? என நாம் சிந்திக்கக் கூடும். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளான போக்குவரத்து மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சுவட்டு எரிபொருளின் பாவனையும், அதனால் ஏற்படும் பச்சை இல்ல வாயுக்களின் உமிழ்வும் குறைக்கப்பட்டிருக்கின்றன.

வளங்களின் நுகர்வு குறைக்கப்பட்டதால் அந்நுகர்வினால் ஏற்படும் கழிவுகளின் உற்பத்தியும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக சுற்றுச் சூழல் மாசடையும் தன்மை குறைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை போன்ற பல நாடுகளில் வளி மற்றும் ஒலிமாசுக்குக் காரணமான மிகப் பிரதானமான துறை போக்குவரத்தாகும். பெருந்தொற்றுக் காலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டமை அம்மாசுக்கள் பெருமளவில் குறைவதற்கு வழிவகுத்தன. சுற்றுலாப் பயணிகளின் வரவு குறைவடைந்தமையால் இயற்கைச் சூழல் தொகுதிகள் மீதான அழுத்தங்கள் குறைவடைந்தமை பல நாடுகளில் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது.

கங்கைநதியின் நீர் தெளிவடைந்தமையும் பல நூறு மைல்களுக்கப்பாலிருந்து பார்க்கும் போதே இமயமலை தெரிகின்றமையும் என்றுமில்லாதவாறு நகரச் சதுப்பு நிலங்களில் வலசைப் பறவைகள் வந்து சேர்ந்தமையும், தாய்லாந்தின் கடற்கரைகளில் அபூர்வ ஆமையினம் முட்டையிட வந்தமையும் என இயற்கை சார் நற்செய்திகள் பலவற்றை இந்தப் பெருந்தொற்றுக் காலம் தர மறுக்கவில்லை.

நாடுகள் பொருளாதார ரீதியாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்த போதும், தற்சார்புப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை அவை மீள உணர ஆரம்பித்தமையும் கூட இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான்.

இவை இப்படியிருக்க, பெருந்தொற்றுக் காலத்தில் சில பொருட்களின் நுகர்வு மிகையாகியதும் கழிவுகள் சேர்தல் அதிகரித்தமையும் கூட நிகழ்ந்தன. அதை நாம் மறுக்க இயலாது. முகக்கவசம் உள்ளிட்ட சுயபாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொதியிடல் பதார்த்தங்களின் நுகர்வையும் பாவனையையும் அவை சார்ந்த கழிவுகள் அதிகரித்து வருகின்றமையையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் அவை பற்றி நாம் அதிகம் சிந்தித்ததில்லை. சிலவற்றைத் தவிர்க்க முடியாமலிருப்பினும் பலவற்றை எப்படி நாம் இழிவளவாக்கலாம் என்றேனும் நாம் சிந்தித்திருப்போமா? நாம் அப்படிச் சிந்தித்திருந்தால் வீதிகளிலும் இயற்கை வாழிடங்களிலும் பாவித்த முகக்கவசங்களை வீசியெறிந்திருக்க மாட்டோம்.

ஏனெனில் வாழும் மண் மீது, இயற்கைச் சூழல் மீது, அங்கு வாழும் அங்கிகள் மீது நாம் காதல் கொள்வதில்லை. அப்படிக் காதல் கொள்பவர்களையும் கூட சமூகத்துக்கு ஒவ்வாதவர்களாகவே பார்த்துப் பழகி விட்டோம். காதல் என்பது மனிதன்-மனிதன், ஆண்-பெண், மனிதன்- செல்லப் பிராணி, மனிதன்-அவன் உடைமைகள் என்ற மட்டுப்படுத்தல்களுக்குள் முடங்கி விடுவதைக் காண முடிகிறது.

பெப்ரவரி 14 ஆம் திகதியான நாளை கொண்டாடப்படும் காதலர் தினத்துக்காக முழு நுகர்வு உலகுமே பல உத்திகளைப் பாவித்து ஊக்கங்களை வழங்கியுள்ள இத்தருணத்தில் , பொறுப்புணர்வு மிக்க சந்ததியாக நாம் சில விடயங்களை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கடைசியாக நீங்கள் எப்போது வெற்றுக் கால்களுடன் மண்ணிலே நடந்திருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது மரமொன்றைத் தொட்டுக் கதை பேசியிருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது பறவையொன்றைப் பார்த்து அதன் வண்ணங்களை இரசித்திருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது உங்கள் கையிலிருந்த குப்பையை அக்கம் பக்கம் பார்த்து விட்டுத் தெருவிலே வீசியெறிந்திருக்கிறீர்கள்?

நீங்களே விடை தேடிப் பாருங்கள்! உங்களுக்கும் இயற்கைக்குமான தூரத்தையும் நீங்கள் இயற்கை மீது கொண்டிருக்கும் காதலையும் உங்கள் விடைகள் இரகசியமாக எடுத்தியம்பும்.

மிருதுவான புற்றரையிலே நீங்கள் சாய்ந்திருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அண்ணாந்து பார்த்தால் அழகிய நீலவானத்திலே மென்பஞ்சு போன்ற முகில் கூட்டங்கள் அசைந்து செல்கின்றன அல்லது அடர்ந்த வனப் பகுதியில் ஒற்றையடிப் பாதையொன்றில் நீங்கள் நடந்து செல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சலசலக்கும் நீரோடையும், கீச்சிடும் பறவைகளும், அசைந்தாடும் மரங்களும், உதிரும் சருகுகுகளும், உடலை மோதிச் செல்லும் தென்றலும் என உங்கள் கற்பனைகளை விரித்துச் செல்லுங்கள். மனதுக்கு இதமாக இருக்கிறதல்லவா? அதுதான் இயற்கை தரும் இன்பம். உள ஆரோக்கியம்.

இப்படியெல்லாம் நீங்கள் வாழ்ந்து எத்தனை வருடங்களாகின்றன? அதுதான் இயற்கைக்கும் உங்களுக்குமிடையிலான தூரம். எங்களுடைய நல்வாழ்வுக்கு இயற்கை ஆற்றும் அளப்பரிய பங்கை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். நாம் உண்ணும் உணவிலிருந்து சுவாசிக்கும் சுத்தமான காற்று, அருந்தும் நீர், உடுக்கும் ஆடை, உறையும் இல்லம் தொட்டு எமது கலாசாரம், பண்பாடு யாவற்றுடனும் இயற்கை பாரியளவில் தொடர்புபட்டுள்ளது. ஆனால் “இயற்கையின் முக்கியத்துவம் என்ன?” என்று வினவினால், பதில் சொல்வதற்குப் பலர் திக்குமுக்காடுவர். அந்த இயற்கையிலே ஒரு பகுதியாக மனிதன் இருப்பதை அவனே அங்கீகரிக்க மறுப்பதும், இயற்கை என்றால் அனைத்தும் இலவசமாக, தனக்காகவே படைக்கப்பட்டது, அது அள்ள அள்ளக் குறையாது என மனிதன் நினைப்பதும்தான் இயற்கையின் பெறுமதியை அவனால் உணர முடியாமல் செய்து விட்டது.

இங்ஙனம் இயற்கை மீது மனிதன் செலுத்தும் தொடர் ஆதிக்கம் காரணமாக காலநிலை மாற்றம் எனும் பெரும் அனர்த்தம் எம்மை நோக்கி மெதுமெதுவாக நெருங்கி வருகிறது. செறிவு கூடிய நீடித்த மழைவீழ்ச்சியும் குறையும் வருடாந்த மழை நாட்களும் தொடர் வரட்சி, சூறாவளி, பெருவெள்ளம் போன்ற பல இயற்கை அனர்த்தங்களும் பயிரழிவுகளும் நட்டஈடுகளும் எமக்கு பழகிப் போய்க் கொண்டிருக்கின்றன.கொவிட் பெருந்தொற்றை ஒரு அவசரகால நிலைமையாகக் கருதி உலக நாடுகள் அதனை அவசரமாக எதிர்கொண்டதைப் போல காலநிலை மாற்றத்தையும் அவசரமாக எதிர்கொள்ள வேண்டுமென உலக பொருளாதார மன்றம் கோரிக்கை விடுக்கிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியிலே அரசாங்கங்கள், வர்த்தகங்கள், தனிநபர்கள் என அனைத்துத் தரப்புகளும் இணைந்து அதன் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகையதோர் உத்தி ரீதியான வழியில் காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள முடியும் என இக்கூட்டிணைவு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

காலநிலை மாற்றமென்பது பொதுவாக ‘பூலோகம் வெப்பமயமாதல்’ எனும் பதத்தினால் விளக்கப்படுகிறது. பூகோள வெப்பநிலையில் ஏற்படும் நிலையான அதிகரிப்பினால் ஏற்படும் வெப்ப அலைகள் தொட்டு உறைபனி உருகுதல் வரை ஏற்படும் தொடர் மாற்றங்களை அது குறிக்கிறது. ஆயினும் புவியியல் தொட்டு தொல்லியல் வரை பல்துறை சார் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் காலநிலை மாற்றமென்பது தொடர்ந்து அதிகரித்து வருமொரு தோற்றப்பாடு அல்ல எனக் குறிப்பிடப்படுகிறது. மனித நாகரிகத்துக்கு முற்பட்ட காலங்களில் அது ஆர்முடுகப்பட்டிருக்கவில்லை. தற்போது மனித செயற்பாடுகளால் அதீதமாக உமிழப்படும் பச்சை இல்லை வாயுகள் காரணமாகவே அது ஆர்முடுகப்பட்டிருக்கிறது.

புவியின் உயிர்க்கோளத்தின் நிலைப்புக்குப் பல இயற்கை வட்டங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் காபன் வட்டம் மிக முக்கியமானது. இந்த உயிர்க்கோளம் காபனைச் சேமித்து வைப்பதும் வெளியிடுவதுமாகத் தனது தொழிற்பாட்டை ஒரு சமநிலையில் மேற்கொள்ளும். பூகோள வெப்பமயமாதலுக்கு உயிர்க்கோளம் முகம் கொடுக்கும் போது ஒரு கட்டத்தில் காபன் வட்டத்தில் சமனற்ற நிலை தூண்டப்படும். இந்நிலைமை எல்லைப் புள்ளியைத் தாண்டும் போது காலநிலையிலே நேர்கோட்டுத் தொடர்பல்லாத மிகவும் பாரதூரமான மாற்றம் நிகழும்.

உயர்ந்த கற்கோபுரமொன்றை எண்ணிக் கொள்ளுங்கள். காலங்காலமாக நாமும் எமது முன்னோரும் அக்கோபுரத்தின் கற்களை ஒவ்வொன்றாக அகற்றி வருகிறோம் எனக் கொள்வோம் . ஒரு கட்டத்தில் மிக முக்கியமான மையக்கல்லை நாம் அகற்றும் போது அக்கோபுரம் இடிந்து வீழ்ந்து விடும். இதுதான் புவியின் உயிர்க்கோளத்திலும் நடைபெறுகிறது. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும் புவிக்கோபுரத்தின் கல்லொன்றை அகற்றுவதற்கு ஒப்பானது. அது பச்சை இல்ல வாயுகளின் உமிழ்வாக இருக்கட்டும், எம்மால் மேற்கொள்ளப்படும் பொறுப்பற்ற நுகர்வுகள் மற்றும் உற்பத்திகளாகவிருக்கட்டும். ஏன் காடுகளின் அழிவாகக் கூட இருக்கட்டும்.

அந்த மையக்கல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அகற்றுபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பெரும் அனர்த்தத்துக்கு வழிகோலுபவர்கள் நாமாக இருக்கக் கூடாது என நாம் ஒவ்வொருவரும் உறுதி பேண வேண்டும். காடழித்தலும் மரம் நாட்டுதலும் பல வேளைகளில் மிகை நிரப்பும் செயற்பாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அச்செயற்பாடுகளானவை வீட்டிலே வருமானமீட்டும் ஒருவரின் இழப்புக்குப் பதிலீடாக கைக்குழந்தையைக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும். மிக நீண்ட கால நோக்கத்திலே அது சில வேளைகளில் பொருத்தமான பதிலீடாக இருக்கலாம். ஆயினும் உடனடியான பதிலீடல்ல. காடு என்பது தனக்கேயுரித்தான இயக்கவியலையுடைய ஒரு சூழல் தொகுதியாகும். அதன் இயக்கவியலின் காரணமாகத்தான் எமக்கு பல சூழல் தொகுதிச் சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன.

அருவிகளிலும் நிலக்கீழ் சுனைகளிலும் காணப்படும் சுத்தமான நீர் அச்சேவைகளின் பிரதிபலனாக எமக்குக் கிடைப்பதாகும். காடுகளின் இயக்கவியல் மிகச் சிக்கலானது. அதன் இயக்கவியலைப் பிரதி பண்ணுதலென்பது மனிதனின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. மனிதனால் இயலாதது. ஆனால் காடழிக்கப்பட்ட பிரதேசத்தை மிகவும் இழிவளவான மனிதத் தலையீட்டுடன் சுயமாகவே மீள விட்டால் சில தசாப்தங்களின் பின்னர் மெல்ல மெல்ல அச்சூழல் தொகுதி தான் இழந்த இயக்கவியலை மீளப் பெற ஆரம்பிக்கும். அதற்கு தசாப்தங்களும் ஆகலாம். நூற்றாண்டுகளும் ஆகலாம். அதன் உயிர்ப் பல்வகைமைச் செறிவு மெல்ல மெல்ல அதிகரிக்க, அச்சூழல் தொகுதியின் உறுதித் தன்மையும் அதிகரிக்கும். இம்முறைமை காடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா சூழல் தொகுதிகளுக்குமே பொருந்தும். இன்று நாம் அழித்த காடுகள் எமக்கு வழங்கிய சூழல் தொகுதிச் சேவைகளை நாம் மீண்டும் பெற பல சந்ததிகள் காத்திருக்க வேண்டியேற்படும். அதுவரை அவை மனிதத் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டுமென்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

காடுகள் (கண்டல் காடுகள் உட்பட) சேமித்து வைத்திருக்கும் காபனின் அளவு மிக அதிகமாகும். அவை அழிக்கப்படும் போது அக்காபன் சூழலுக்கு வெளிவிடப்படுவதானது பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கிறது. அவை அழிக்கப்பட்ட பின் நிலப்பாவனை மாற்றம் பெற, அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கின்றன. இது ஒரு சிறு உதாரணமாகும் . இவ்வாறு நாம் நுண்ணியளவு தொட்டு பாரியளவு வரை மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கின்றன.

காலநிலை மாற்றம், உலகளாவிய வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் இனால் அதிகரிப்பு, வளங்களின் அதீத நுகர்வு, சூழல் மாசு என தகித்துக் குறைவடைந்து சென்று கொண்டிருந்த கொண்டிருந்த பூமியின் ஆயுட்காலத்தைத் சற்று நீடித்திருக்கும் இப்பெருந்தொற்றுக் காலத்தில் , நாளை கொண்டாடப்படவிருக்கும் காதலர் தினத்தன்று இயற்கை மீது நாம் கொள்ளும் காதலை ஏன் வெளிப்படுத்த ஆரம்பிக்கக் கூடாது?

எப்படியென்று யோசிக்கிறீர்களா?

அத்தியாவசியத் தேவையின்றி இயற்கையான சூழல் தொகுதியொன்றைக் குலைக்க முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு குலைக்க வேண்டியேற்படின் மாற்று வழியேதும் இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, காணியில் இருக்கும் மரங்களையெல்லாம் அழித்து துப்புரவாக்கிய பின்னர் வீட்டுக்கு அத்திவாரம் போட ஆரம்பிக்கும் பல மனிதர்களையும் மூட நம்பிக்கைகள், சாஸ்திர சம்பிரதாயங்களைப் பரிபூரணமாக நம்பிப் பல அரிய மரங்களைத் தறிக்கும் பெரியவர்களையும் அரிமரப்பெறுமதியில்லாதது என, பல தசாப்தங்கள் பழைமையான, பறவைகள் கூடி வாழும் மரங்களையும் நிழல் தரும் மரங்களையும் தறித்த கற்றவர்களையும் பொன் முட்டையிடும் வாத்தின் கதையாய் அரிமரம் பெறுமதியானது, நாம் இருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும் எனப் பல அரிய மரங்களை அரிந்து முடித்த புத்திசாலிகளையும் கூட நான் சந்தித்திருக்கிறேன். நாங்கள் அனுபவித்த இயற்கையை எமது எதிர்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டாமா? அந்த இயற்கை எமக்கு வழங்கிய சேவைகளை எமது எதிர்கால சந்ததிக்கும் வழங்க வேண்டாமா? மரங்களைத் தறிக்க விழையும் போது ஒருகணம் நிதானித்து சிந்தித்து உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள்.

மரங்களை நட விரும்பினால், சுதேச தாவரங்களை நடுங்கள். அவற்றை நம்பியே எம் தேசத்தின் உயிர்ப்பல்வகைமை அமைந்திருக்கிறது. நாடியவுடன் பலன் தர வேண்டும், துரிதமாக வளர வேண்டும், விரைவில் பயன் தர,வேண்டும் என்ற குறுகிய நோக்குகளுடன் அந்நியத் தாவரங்களை நாட்டுவதை அனுமதிக்காதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்து உங்களைச் சூழவிருக்கும் இயற்கைச் சூழலை அவதானித்துப் பாருங்கள். சிறுதாவரங்கள் தொட்டு மரங்கள், பறவைகள் முதல் பிராணிகள், விலங்குகள் வரை அனைத்துமே அழகாய்த் தெரியத் தொடங்கும். அவற்றின் அழகையும் வண்ணங்களையும் வண்ணங்கள் அமைத்திருக்கும் கோலங்களையும் அவதானித்து இரசியுங்கள். அவ்வுயிர்களை அடையாளப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவற்றின் இருப்பின் நோக்கம், மனித இனத்துக்கும் தாம் வாழும் சூழலுக்கும் அவை வழங்கும் சேவைகளை அறிய முயலுங்கள். சுய நலமாயினும் அவை மீது நீங்கள் காதல் கொள்வீர்கள். அக்காதல் இப்பூவுலகில் அவற்றின் நிலைப்பை மட்டுமல்ல எங்கள் அனைவரது இருப்பையும் உறுதி செய்யும். முயன்றுதான் பாருங்களேன்!

Friday, July 31, 2020

காலம் மாறிப்போச்சு!

 (ஜூலை மாத ஜீவ நதி சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை: எனது இயற்கை வள முகாமைத்துவ முதுமானி ஆய்வின் முதலாவது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது)


“அது ஒரு காலம். உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமோ தெரியாது. இலங்கையிலே இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு சவர்க்காரம் கொண்டுசெல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வன்னியிலே ஒற்றைச் சவர்க்காரம் வாங்குவதற்காக எம்மில் பலர்  40 மைல் தூரம் சைக்கிளில் பயணித்திருக்கிறோம். ஒரு சவர்க்காரத்தின் விலை சிலவேளைகளில் எங்கள் நாட்கூலியின் அரைவாசியிலும் அதிகமாக இருக்கும்.  ஆதலால் ஆடைகளைத் துவைப்பதற்காக பெரும்பாலும் நாம் பனரங்காய்களை மட்டுமே நம்பியிருந்தோம். உலர்ந்த பனரங்காய்களை துணியிலே கட்டி நீரினுள் ஊறவைத்து சவர்க்காரம் போல் பாவித்திருக்கிறோம். சவர்க்காரத்தைப் போல அதுவும் நன்றாக நுரைக்கும். மெலிதாக நறு மணமும் வீசும். இப்போது அந்தக்காலம் எல்லாம் மாறிவிட்டது. வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட கட்டுப்படியாகும் விலையில் சவர்க்காரம் கிடைக்கிறது. அன்று தேடித்திரிந்து சேகரித்த பனரங்காய்கள் இன்று இடைஞ்சலாகி விட்டன. கீழே விழுந்து, காய்ந்து, முற்றம் முழுவதும் பரவிக் கிடக்கும் இக்காய்களைக் கூட்டி அள்ளுவதும் எரிப்பதும் ஒரு வேலையாகி விட்டது. இடைஞ்சல் எனக் கூறி பலர் இம்மரத்தை தறித்தே விட்டார்கள். ஆனாலும் அரிதாய் ஒரு சில மரங்கள் கிராமத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. தற்போதைய இளைஞர்களுக்கு இப்படியொரு மரம் இருப்பதோ, யுத்த காலத்து சவர்க்காரத் தடையை வெற்றி கொள்ள அது உதவிய விதமோ எதுவும் தெரியாது. அவற்றை அறிந்து கொள்ள எவரும் ஆர்வம் கூட காட்டுவதில்லை” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்  பொன்னம்பலம் தாத்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  கடந்த ஆண்டு கள ஆய்வொன்றிற்காக வன்னிப் பெரு நிலப்பரப்பிலே காடுகளை அண்டிய கிராமங்களுக்கு சென்றபோது நான்  உரையாடியவர்களின் வெளிப்பாடுகளுள் இப்படிப்பட்ட ஆதங்கங்கள் பற்பல.

“முன்பெல்லாம் பனை காய்க்கத் தொடங்கினால் குதூகலம் தான். நாங்கள் அரிவரி படிக்கும் காலங்களில் பனம் பழத்துக்காக பெருஞ்சண்டைகள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பள்ளி செல்லும் வீதியோரமெங்கும்  பனைமரங்கள் காய்த்துக் கிடக்கும். கீழே விழுந்த பழத்தை புழு வைக்க முதல் பொறுக்குவதற்காகவே ஓடி வருவோம். அந்தக் காலத்தில் பள்ளி மாணவர் மத்தியில் பனம்பழத்துக்கான போட்டி மிக அதிகம். பனம்பழங்களுக்காக பனை மரங்களை எல்லை பிரித்துக் கூட ஆட்சி செய்திருக்கிறோம். பனை விதைகளைச் சேகரித்தலும் பாத்தி போட்டு அவற்றை நாட்டுதலும் கிழங்குக்காகக் காத்திருப்பதும் கூட எங்கள் பால்ய காலப் பொழுதுபோக்குகளுள் ஒன்று. இப்போது என் சந்ததி அதனை என் கடமையாக மாற்றி விட்டது. எனக்கு எண்பத்து மூன்று வயதாகிறது. ஐந்து பிள்ளைகளும் எட்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். இப்போதும் நான் தான் பனங்கொட்டைகளைச் சேகரித்து, பாத்தி போட்டு , கிழங்கெடுத்து, அவித்து  என் பிள்ளைகளுக்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து உண்பார்கள். பாத்தி போடக் கூப்பிட்டால் நேரமில்லையாம் கேட்டியளோ! பேரப்பிள்ளைகளோ கிழங்கைத் தொடுகிறார்கள் கூட இல்லை. எனக்கோ முன்னர் போல இப்போது உடல் இடம் கொடுப்பதில்லை. ஆனால் மனம் மட்டும் சொல்வழி கேட்பதில்லை. இம்முறையும்  பாத்தி போடுவதற்காக பனங்கொட்டைகளைச் சேகரித்துத் தான் வைத்திருக்கிறேன். இதுவே கடைசியாக இருக்குமென நினைக்கிறேன்” என்றார் சிவசேகரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 


தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் சாதாரண மக்களின் போக்குவரத்து ஊடகமாக மாட்டு வண்டிலே காணப்பட்டது. “ஆரம்ப காலங்களில் குடும்பமாகப் பயணிப்பதற்கும் சரக்குகளையும்  பொருட்களையும் ஏற்றிச்செல்வதற்கும்  மாட்டு வண்டியிலேயே நாம் அதிகளவில் தங்கியிருந்தோம். வீட்டுக்கு வீடு மாடுகளும் வண்டிகளும் இருந்தன. வண்டியை சரிக்கட்டுவதென்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. மாட்டு வண்டில் எந்த மரத்தால் செய்யப்படுகிறது என்றால் எவரிடமும் பதிலிருக்காது. ஏனெனில் அதன் ஒவ்வொரு பாகங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை.  அவை ஒவ்வொன்றையும் தயாரிக்க ஒவ்வொரு இனமரப்பலகை வேண்டும். ஒவ்வொரு பகுதியும் தன் இயல்பில் சீராகப் பேணப்பட்டால் மாத்திரமே மாட்டு வண்டில் செவ்வனே இயங்கும். நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். மாட்டின் மூக்கணாங்கயிற்றுக்குக் கூட நாங்கள் பிளாஸ்டிக் கயிற்றைப் பாவித்ததில்லை. ஆத்தி நாரை அழுகவைத்துத் திரித்த கயிற்றைத்தான் பாவித்திருக்கிறோம். மாட்டு வண்டில் செய்வதற்கு இயந்திரவியல் பற்றிய அறிவு மட்டுமல்ல மரங்கள் பற்றிய அறிவும் மிக மிக அவசியம்” என்றார் ஒரு காலத்தில் வண்டில் சவாரி செய்த இராமலிங்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“ காலம் மாறிப்போச்சு பிள்ளை! மாட்டு வண்டில்களும் புழக்கத்தில் இல்லை. வண்டில் பாகங்களின் பெயர்களும் பலருக்குத் தெரியாது. வண்டில் தயாரிப்பதற்குப் பயன்பட்ட ஆத்தி, மஞ்ச நூனா, கடம்பு, நறுவிலி போன்ற மரங்களின் தேவைகளும் குறைந்து மறைந்தே போய்விட்டன. இப்படிப்பட்ட மரங்களின் பாவனை இல்லாமல் போக அவை ஒன்றுக்கும் பயனற்ற மரங்களாகவே தற்போது பார்க்கப்படுகின்றன.   பயனில்லை என்று சும்மா நிற்கும் மரத்தைக் கூடத் தறித்துவிடுகிறார்கள் . இதே நிலை தொடர்ந்தால், காலப்போக்கில் அம்மரங்கள் அழிந்தே போய்விடும்!” என்று வருத்தப்பட்டார் ஓய்வு பெற்ற அதிபர்  கனகசபை  (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“ சாதாரணமாக   நாம் சுகயீனமுற்றால், வீட்டிலுள்ள பாட்டி சொல்லும் கை மருந்தைத்தான் முதலில் உட்கொள்வோம். அப்படியும் குணமாகாவிட்டால் தான் ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்வோம். ஆனால் இப்போது  இருமல், சளி, காய்ச்சல் என்று சிறார்கள்  நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில்  நாம் கை மருந்தைப் பாவித்த பின் சென்றால் சில ஆங்கில மருத்துவர்கள் எம்மை சிகிச்சை நிலையத்திற்குள்ளே கூட எடுப்பதில்லை” என்றார் ஓர் இளம் தாய் சரண்யா பெயர் மாற்றப்பட்டுள்ளது).  “சிறுவயதிலே எனக்கு இருமல் இருந்தது.  குக்கல் என்று கூடக் கூறினார்கள். எனது பூட்டி புங்கங்காயை எடுத்து கறுத்தக் கயிற்றிலே கோர்த்து கழுத்திலே  நிரந்தரமாகக் கட்டி விட்டார். சில காலங்களில் இருமல் போன இடம் தெரியவில்லை” என்று பெருமையாகக்  கூறினார் பட்டம் பெற்ற எழுபது வயது மருத்துவர் ஒருவர். புங்கந்தாழ்வையும் புங்கங்குளத்தையும் தெரிந்த பலருக்குக் கூட  புங்கை மரத்தை அடையாளம் காட்டத்தெரியாது என்பது தான் இன்றைய யதார்த்தம்.






அதேபோல தேத்தாத் தீவை அறிந்த பலருக்கு தேத்தா (தேற்றா) மரத்தைத் தெரியாது. காடுகளுக்கு வேட்டையாடவும் வேறு தேவைகளுக்காகவும் செல்பவர்களின் குடி நீர்த் தேவையைப் போக்க இம்மரம் ஆற்றிய அரும்பங்கு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படாமலே மறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.  “முன்பெல்லாம் பூட்டுத் தடி வெட்டக் கூட நாங்கள் காட்டுக்குத் தான் போவோம். நாம் குடி தண்ணீர் எல்லாம் கொண்டு போவதில்லை. ஆங்காங்கே ஆறுகளிலும்  நீர் நிலைகளிலும் காணப்படும் நீரையே பருகுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் யானை போன்ற விலங்குகள்  நடமாடுவதால் அவற்றின் காலடி பட்டு நீர் கலங்கியே காணப்படும். எம்மிடம் எப்போதும் மண் சட்டி இருக்கும். தேற்றா விதைகளையும் சேகரித்து வைத்திருப்போம்.  மண்சட்டியிலே தேற்றா விதைகளைத் தேய்த்த பின்னர், நீர் நிலைகளிலிருக்கும் கலங்கிய நீரை ஏந்தினால் சில நிமிடங்களில் நீர் தெளிந்து குடிப்பதற்கு ஏதுவானதாக மாறிவிடும். இப்போது தடி வெட்டுவதற்காக காட்டுக்கும் போக முடியாது. அப்படிப்போனாலும் எல்லோரும் கையில் ஒரு பிளாஸ்டிக் போத்தலில் குடி நீரைக் கொண்டு செல்கிறார்கள்” என்றார் குமாரசுவாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“கிணற்று நீர் பாசி பிடித்தால் கூட தேற்றாக் கட்டையை வெட்டிப் போட்டு விடுவோம், தெளிந்து விடும். இப்போதெல்லாம் யார் தான் அப்படிச் செய்கிறார்கள்?. பருத்த தேற்றா மரங்களை ஊர் வெளியில் காணக்கூட முடிவதில்லை. பிரயோசனமற்ற மரம் என்று பலர் தறித்தே விட்டார்கள். தேற்றா மரம் மட்டுமல்ல. பெரிய விட்டமுள்ள மரங்களை எல்லாம் இப்போது ஊரில் காணக்கூட முடியாது” என்று  அவர் மேலும் ஆதங்கப்பட்டார்.  “தேற்றா விதைகளை மாவாக்கி கலங்கிய நீரினுள் இட்டால் தெளிந்துவிடுமென வேதங்களில் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்றார் உள்ளூர் பூசகர்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு, அதற்குத் தாமும் பங்களித்து இன்றும் நிலைத்து நிற்கும் சாட்சிகளுள் தாவரங்களுக்கு மிகப்பிரதானமான இடம் இருக்கிறது. மனித இனமும், அதன்  அடிப்படைத் தேவைகள், ஆரோக்கியம், கலாசாரம், பண்பாடு என யாவுமே தாவரங்களுடன் பின்னிப்பிணைந்து பரிணமித்தவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. என்ன தான் நவீனமும் நுகர்வுக் கலாசாரமும் எம் ஒவ்வொருவரது கதவினுள்ளும் நுழைந்து எட்டிப்பார்த்தாலும்,  இந்தத் தாவரங்கள் இல்லாமல் அவை எவையுமே இல்லை என்பது உலகம் உணராத உண்மை. இன்றும் கூட உலகெங்கிலும் பல மில்லியன் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக தாவரங்களையே அதிகளவில் நம்பியிருக்கின்றனர்.  அந்த வகையில் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழர் நாகரிகமும் தாவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் சமுதாயத்தின் வாழ்வியலிலே தாவரங்களை இழையோடச் செய்து நின்று நிலைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.  நான் சந்தித்த ஊரவர்கள் கூறியதும் அதனையே பிரதி பலிக்கிறது.

சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் போது அது இயற்கையுடன் இயைந்திருந்த தன்மையை மட்டும் பதிவு செய்யவில்லை. தாவரங்களின் பல்வகைமை, பயன்பாடு பற்றிய பல குறிப்புகளையும் கூட  அவை பதிவு செய்திருக்கின்றன. குறிப்பு என்பதற்கப்பால், சங்க கால வாழ்வியலில் தாவரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவனவாக அவ்விலக்கியங்கள் அமைந்திருந்தன.  சங்க இலக்கியம் கூறும் அகவாழ்வாகட்டும்.. புற வாழ்வாகட்டும்… எங்கேனும் தாவரங்களைக் குறிப்பிடாமல் அமைந்த பாக்கள் அரிது எனக்கூறலாம். வாழ்வின் செயல்களை விளிக்கப்பயன்பட்ட  கொடி ,விதை,முளை, மலர், காய்,  கனி போன்ற சொற்பதங்களின் பிரயோகம் தொட்டு சடங்குகள், கையுறைகள் என தாவரப்பகுதிகளின் பிரயோகம் விரிந்து சென்ற வண்ணமே காணப்படுகிறது. போரின் ஒவ்வொரு நிலைகளையும் உணர்த்த பலவித பூக்கள் பயன்படுத்தப்பட்டதாக  செய்யுள்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  போரிலே வெற்றி பெற்றுத் திரும்பும் போர் வீரர் வாகை மரத்தின் பூவைச் சூடி வருவதாகவும்   அப்பூவைத் தொலை தூரத்திலிருந்தும் கூட அடையாளப்படுத்தலாமெனவும் வன்னியின் கிராமங்களில் முதியவர்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். ‘வாகை சூடி’ என்ற சொற்றொடர் வெற்றியைக் குறிப்பிடப்பயன்படுவதில் எதுவித ஆச்சரியமுமில்லை.


தமிழர் வாழ்வியலின் ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இயற்கை வழிபாடாகட்டும், பின்னர் தொடர்ந்து வந்த  சமய வழிபாடாகட்டும்.. உருவகிக்கப்பட்டு வந்த தெய்வ வழிபாடுகளாகட்டும்.. யாவற்றிலுமே தாவரங்களுக்கு அதி முக்கிய வகிபாகம் காணப்படுவதை எம்மால் மறுக்க இயலாது. மரவழிபாட்டுடன் இணைந்து காணப்பட்ட காவல் மரங்களின் நிர்ணயமும் இதற்கு விதிவிலக்கல்லவே.

தாவரங்களின் வகிபாகம் வெறுமனே அத்துடன் நின்றுவிடவில்லை. தமிழரின் மருத்துவம் என அறியப்படும் சித்த மருத்துவமாகட்டும், உணவுப்பழக்கவழக்கங்களாகட்டும்..தொழில் சார் துறைகளாகட்டும், அன்றாடத்தேவைகளுக்குப் பயன்படும் உபகரணங்களாகட்டும், யாவுமே தாவரங்களில்லாமல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனலாம். தமிழர் வாழ்வியலும் தாவரங்களும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றமையை வார்த்தைகளால் விவரிக்க முற்படல் கடினம். தொகுக்கின் அவை எஞ்சி நிற்கும். விரிக்கின் பெருகி நிற்கும் என்பது தான் யதார்த்தம். தமிழரின் தாயகங்களுள் ஒன்றான வட இலங்கையிலும் கூட மக்களின் வாழ்வும் தாவரங்களும் பின்னிப்பிணைந்தே காணப்பட்டு வந்தன.


 இலங்கையின் இட அமைவும் தீவாக அமைந்து விட்ட தன்மையும் அதனை உயிர்ப்பல்வகைமைச் செறிவுமிக்க நிலமாக அறியப்படக் காரணமாகி விட்டன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையுடனொத்த சாயலையுடைய உயிர்ப்பல்வகைமையை இலங்கையிலும் உயிரியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இலங்கை தனித்தீவாக பரிணமித்தமையால் இலங்கைக்கேயுரித்தான, தனித்துவமான தாவர விலங்குகள் பல இங்கு காணப்படுகின்றன. தென்மேற்கு பகுதியின் உயிர்ப்பல்வகைமைச் செறிவு, அதன் தனித்துவமான தன்மை, அவ்வுயிர்ப்பல்வகைமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உலகிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டிய உயிர்ப்பல்வகைமைச் செறிவு மிக்க பகுதிகளுள் இலங்கையும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆதலினால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுள் பெரும்பாலானவை தென்பகுதியுடனே மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன.

 அதற்கு வழிசமைப்பது போல்,  இலங்கையின் வடக்கு , கிழக்குப் பகுதிகளில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தம் உயிர்ப்பல்வகைமை ஆய்வுகளுக்கான அணுகலைத் தடுத்திருந்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பல ஆய்வாளர்கள் இவ்வுண்மையை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுள் சிலர் இலங்கையின் வட எல்லையிலுள்ள காடுகளில் பல்தேவைக்குப்பயன்படுத்தப்படக் கூடிய மருத்துவ குணமுள்ள மரங்கள் பல  இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் கூட இம்மரங்கள் ‘அரிமரம்’ என்ற கண்கொண்டு மாத்திரமே பார்க்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையிலேயே பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதிகளின் பரப்பளவு உயர்வாக உள்ள மாகாணம் வட மாகாணமாகும். யுத்த காலத்திலும் இவ்வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவையென்பது பல போர் வரலாறுகளில் குறிப்பிடப்படாத விடயமாகும். வட இலங்கையின் காடுகள் வன்னிப்பகுதியிலே,  அதாவது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலே செறிந்து காணப்படுகின்றமையை வான் வரைபடங்கள் மூலம் எளிதில் அறியமுடியும். வன்னி மக்களின் வாழ்வியலும் இந்த மரங்களைச் சுற்றியே அமைந்திருந்தமையை கள ஆய்வுகளின்  போது மேற்கொள்ளப்பட்ட  குழுச்சந்திப்புகளின் மூலம் என்னால் அறிய முடிந்தது. ஆயினும், அவற்றை ஆய்வு செய்வதற்கு உசாத்துணை  நூல்களைத் தேடிய போது அறிவு வெளியிலே யுத்தம் நடைபெற்ற காலத்துக்கும் மேலானதோர் இடைவெளி காணப்படுவதை உணர முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலனித்துவ உயிரியலாளர்களாலும் நிர்வாகிகளாலும் எழுதப்பட்ட   நூல்களையும் பிற்காலத்தில் தென்னிலங்கையில் எழுதப்பட்ட மிகச் சொற்பளவிலான நூல்களையும் தவிர வேறு எந்தவோர் ஆவணத்துக்குமான அணுகல் எனக்குக்கிடைத்திருக்கவில்லை. இந்த இடைவெளியின் தாக்கத்தை கடந்த ஒரு தசாப்த காலத்தில் வெளியான பல ஆய்வறிக்கைகளில் காணலாம். உதாரணமாக, தாவரங்கள் பற்றிய பல ஆய்வறிக்கைகளில்  இலங்கையில் வழக்கிலிருக்கும் தமிழ் பொதுப் பெயர்கள் அரிதாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தகாலம் முற்றாகக் கடந்துவிட்டது. போருக்குப்பின்னரான மீள் குடியேற்றங்களும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திகளும் நடந்தேறிய வண்ணமேயுள்ளன. இந் நிலையில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் காடுகளும் மரங்களும் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளன. அபிவிருத்தியின் முன்னே காடுகள் உயர்வாக மதிக்கப்படும் நிலைமை காணப்படுவதில்லை. ஆனால், அக்காடுகளுள் பொதிந்திருக்கும் அரிய செல்வங்கள் தாம் எம் தமிழர் கலாசாரத்தின் அடி வேர் என்பதைக் காலப்போக்கில் நாம் மறந்துவிட்டோம் என்றே தான் கூற வேண்டும்,

பொதுவாக இலங்கையிலே “இடப்பெயர்களின் கருவூலம் இயற்கையே!” என கலாநிதி.இ.பாலசுந்தரம் குறிப்பிட்டிருக்கிறார். வடஇலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் வன்னிப்பகுதியை எடுத்து நோக்கினால், பெரும்பாலான கிராமங்களின் பெயர்களில் பகுதி  தாவரமொன்றின் பெயராகவும்  விகுதியானது நீர்ப்பரப்பின் வகையாகவும் (ஆறு, குளம், மோட்டை போன்றன) இணைந்து அமைந்திருக்கும். இந்தக் கிராமங்களின் பெயர்களைத் தொகுத்துப்பார்த்தாலே வன்னிப்பகுதியில் காணப்படும் தாவரங்களின், அதிலும் குறிப்பாக உயர் வகுப்பான மரங்களின் பல்வகைமை புரியும். ஆரம்ப காலங்களில் இத்தகைய ஒவ்வொரு மரங்களும் ஏதோவொரு வகையில் வன்னி மக்களின் வாழ்வுடன், கலாசாரத்துடன்  பின்னிப்பிணைந்த வண்ணம் தான் காணப்பட்டிருக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் மரங்களினால் பூர்த்தி செய்யப்பட்ட தேவைகள் பலவற்றை  நவீன நுகர்வுப் பொருட்கள் பதிலீடு செய்யத் தொடங்கியதால் அம்மரங்கள் பயனற்றவையாகிப் போயின. அரிமரத்துக்குரிய மரங்கள் மட்டும் இன்னமும் பெறுமதிமிக்கனவாய்ப் பார்க்கப்படுகின்றன.

 நான் மேற்கொண்ட கள ஆய்விலே இவற்றை நிரூபிக்கும் சில வருந்தத்தகு முடிவுகள் விஞ்ஞான பூர்வமாக உறுதியாயின. இந்த ஆய்வானது வன்னிப்பகுதியில் காணப்படும் மூன்று மீற்றரிலும் அதிகளவு உயரமாக வளரக்கூடிய மருத்துவ குணம் மிக்க நூற்றுறைம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் பற்றி கிராமத்து மக்களிடம் காணப்படும் பாரம்பரிய அறிவினை அடிப்படையாகக் கொண்டதாகும்.  அம்மரங்களுள் நூற்றுப்பதினேழு மரங்களைப் பற்றி அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள். அவற்றிலும் தொன்னூற்றெட்டு மரங்களைப் பற்றி மாத்திரமே அவர்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தார்கள். இம்மரங்களானவை அவற்றின் மருத்துவப் பயன்பாடு, வீட்டுத்தேவைக்கான பயன்பாடு, தற்போதும் பாவனையிலிருக்கும் தன்மை, பொருளாதார, சுற்றுச் சூழல், சமய, கலாசார முக்கியத்துவம், மற்றும் வரட்சி, வெள்ளம் யுத்தம் போன்ற கஷ்ட காலங்களின் போதான ஆதரவு ஆகிய விடயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.

ஆய்வு முடிவுகளின் படி, மரங்களின் மருத்துவத் தேவை மற்றும் வீட்டுத்தேவைகளுக்கான பாவனைகளும் கலாசார முக்கியத்துவமும் அற்றுப்போகும் போது அம்மரங்கள் மக்களுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. அதாவது, மரங்கள் வீட்டுப்பாவனைக்கோ அல்லது மருத்துவத் தேவைக்காகவோ அல்லது உபகரணங்கள், உணவு, சமயம், நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற கலாசாரத்தேவைகளுக்கோ பயன்படுத்தப்பட்டு வரும்போது மாத்திரமே  அவை தொடர்பிலான  அறிவு மக்கள் மத்தியில் காணப்படும் என்பதை ஆய்வு முடிவு எடுத்துரைத்தது. கள ஆய்வின் போது கிராம மக்கள் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் இவ்வாய்வு முடிவினை உறுதி செய்வதாயும்  அமைந்துவிட்டன.

ஏலவே குறிப்பிட்டது போல், பெரும்பாலான மரங்கள் காடுகளிலும் ஏனையவை வீதியோரங்களிலும் வீட்டுத்தோட்டங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் பொதுவாகக் காணப்படுபவையாகும். வன்னிப் பெரு நிலப்பரப்பிலே அபிவிருத்தியின் பெயரால் காடழிப்பு  நியாயப்படுத்தப்பட்ட வண்ணமே செல்கிறது. அபிவிருத்தி மேலும் தொடர, புதிய வீதிகள் உருவாக, காடழிப்பு மீண்டும் அதிகரிக்க என சுழற்சியாய் செயற்பாடுகள் நடந்த வண்ணமே உள்ளன. பல சந்தர்ப்பங்களில் இது தவிர்க்கமுடியாததோர் நிலமையாகக் காணப்பட்டாலும் அழிவடையும் தாவரங்களின் நிலையைக் கருத்தில் கொள்ளும் போது, எமக்கான கடப்பாடுகள் ஓங்கி நிற்கின்றன. அத்துடன் சீதனம், வீட்டுத்திட்டம், வர்த்தக நோக்கங்கள் காரணமாக காணிகள் துண்டாடப்படுவதும் கூட மரங்கள் தறிக்கப்பட்டு அழிந்து போகக் காரணமாகிவிடுகின்றன.

தாவரங்கள் தம் வாழ்விடத்தினை இழக்கும் போது அவை அழிந்து விடும் அபாயத்திற்குள் தள்ளப்படுகின்றன. அத்துடன் அவற்றுடன் இணைந்த பாரம்பரிய அறிவும் அதனுடன் இணைந்த கலாசாரமும் மொழியும் என யாவுமே மெல்ல மெல்ல அழிந்து விடும். அதே போல நவீனத்தின் பெயரால் பல தாவரங்களின் பாவனைகள் தேவையற்றுவிடுதலும் மனிதனை தாவரக் குருடனாக மாற்றி விடும். சில சிறு மரங்களைப் பற்றி விசாரித்தபோது, “முந்தி இந்தப்பக்கமெல்லாம் அவைதான் இருந்தன. இப்ப மருந்துக்கும் கூட அவற்றைக் காண இயலாது. காடு தள்ளும்போது எல்லாவற்றையும் சேர்த்தே தள்ளி விட்டார்கள்” என்று கிராமத்து மக்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். நோயாளிகள் விடுதி கட்டுவதற்காக ஒரு மரத்தைக் கூட மீதம் விடாமல் கனரக வாகனம் வைத்துத் தள்ளிய காணியையும்  அணை கட்டியதால் காணி இழந்தவர்களுக்கு புதிய காணி வழங்குவதற்காக தள்ளப்பட்ட பெரும் கருங்காலிக் காட்டையும் கூட நான்  தொழிலனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

வன்னியின் சுதேச மரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் மற்றொரு காரணிகளுள் ஒன்று தேர்ந்தெடுத்த மரங்களை மட்டும் அரிந்து செல்லலாகும். பனையும் பாலையும் முதிரையும் காட்டாமணக்கும் என மரக்குற்றிகள் வண்டி வண்டியாக வன்னியை விட்டுச் செல்வதைக் காணாதவர்கள் அரிது. பாலைப் பாணியையும்  வீரைப் பாணியையும் குரக்கன் உரொட்டியுடன் உண்டு வளர்ந்த சமூகம் அம்மரங்களை இன்று அரிமரக் கண் கொண்டு பார்க்கிறது என்பதை ஏற்க  சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது. இம்மரங்களின் வளர்ச்சி வீதம் மிகக்  குறைவு. எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவற்றை அரிமரத்துக்குப் பயன்படுத்துதலானது அவை அரிதாகி நிரந்தரமாகவே அழிந்து போகும் நிலையைக் கூட ஏற்படுத்தலாம். “முன்பெல்லாம் இங்கு முதிரை மரங்கள் இருந்தன. யாவற்றையும் வெட்டி ஏற்றியாயிற்று. இப்போ பனை மரங்கள் மாத்திரம் தான் எஞ்சியுள்ளன. அவற்றிலும் கண் வைத்து விட்டார்கள்.  இன்னும் சில நாட்களின் பின் உயரமும் விட்டமும் கூடிய பனை மரங்களை எல்லாம் எமது ஊரில் காண்பது அரிதாகி விடும்“ என்று வருத்தப்பட்டார் இயக்கச்சியைச் சேர்ந்த கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“ஊர்மனையில் கட்டிப்பிடிக்க இயலாதளவு விட்டமுள்ள பெரு மரங்களை இப்போதெல்லாம் காண முடியாது. அவை பலரது கண்களை உறுத்தியிருக்கின்றன போலும். விறகுக்காயினும் அவற்றை அரிந்து தறித்துச் சென்று விடுகிறார்கள். அத்தகைய மரங்களைத் தறிக்க க் கூடாது என்று சட்டம் இல்லை போலும்! பெருமழைக்கெல்லாம் நனையாமல் அம்மரங்களின் கீழ் நாம் ஒதுங்கியிருக்கிறோம். அந்தக் காலமெல்லாம் இனி வரப்போவதுமில்லை” என்பது  நாகேஸ்வரி என்ற பாட்டியின் ஆதங்கம்.

“கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டமொன்று வந்திருந்தது. கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான என்னை அழைத்த பொறுப்பதிகாரி, வீதியோரமாக நின்ற பெரிய விளாத்தி மரத்தை தறித்து அகற்றி விடுமாறும் அது அபிவிருத்திக்கு இடைஞ்சல் எனவும் பலமுறை என்னிடம் கூறிச் சென்றார். அம்மரத்தை அகற்றாமல் அபிவிருத்தி செய்யக்கூடிய எத்தனை தீர்வுகளை நான் முன் மொழிந்தும் பயனிருக்கவில்லை. இறுதியில், இன்று  நீங்கள் தறிக்காவிட்டால் நாளை நான் தொழிலாளரைக் கூட்டி வந்து தறிப்பேன் என  எச்சரித்து விட்டுச் சென்றார்.  நாம் சிறுவர்களாக விளாங்காய் அடித்து உண்ட  மரம். அதைத் தறிப்பதற்கு  மனம் உடன்படவில்லை. இரவோடு இரவாகச் சென்று மரத்தடியில் கல்லை வைத்தேன். பல கற்பூரங்களைக் கொழுத்தினேன். திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகிவற்றை இட்டேன். வீட்டுக்கு வந்து விட்டேன். காலையில் அதிகாரி தொழிலாளர்களுடன் சென்றார். எவருக்கும் அம்மரத்தைத் தறிக்குமளவுக்கு தைரியம் வரவில்லை. அவர்களது நம்பிக்கையை மீறி முடிவெடுக்கும் தைரியம் அதிகாரிக்கும் இருக்கவில்லை. மரத்துக்கு பங்கமில்லாமல் புதிய வீதியும்  போடப்பட்டது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் தளைய சிங்கம்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்படியும் மரங்களைக் காக்க முயற்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  மரங்களை அழியவிடாமல் காப்பது ஒருபுறம் இருக்க, அம்மரங்களைச் சார்ந்து காணப்படும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டிய தேவை இன்னொரு புறம் இருக்கிறது.

தாவரங்களும் அவை சார்ந்த பாரம்பரிய அறிவும் நாணயமொன்றின் இரு பக்கங்கள் போன்றவை. இலங்கையிலே தாவரங்கள் எத்தகைய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனவோ அதிலும்  அதிக அச்சுறுத்தலை அவை சார்ந்த பாரம்பரிய அறிவு எதிர் நோக்குகிறது. இவ்வறிவு தொடர்பில் சந்ததிகளுக்கிடையே சமத்துவம் காணப்படாமையை இவ்வாய்வின் மூலம் தெளிவாக அறிய முடிந்தது. இப்பாரம்பரிய அறிவானது 70 வயதை எட்டிய முதியவர்களிடமே பெரும்பாலும் குடிகொண்டிருப்பதால் அது மிக வேகமாக மறைந்து வருகிறது. நேற்று சந்திக்க எண்ணியவர்கள் சிலர் இன்று உயிரோடு இல்லை. ஆதலினால், அவர்களிடம் மட்டுமே குடிகொண்டிருக்கும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டிய அவசர தேவை தற்போது உருவாகியிருக்கிறது. அவ்வாறு ஆவணப்படுத்தும் போது அதனை எதிர்கால சந்ததிகளும் அறிய வழி ஏற்படுவதோடு அல்லாமல் பல புத்தாக்கங்களுக்கும் அது வழி வகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  அத்துடன் இலங்கைக்கே உரித்தான தாவரங்கள் சார்ந்த பாரம்பரிய அறிவும் இலங்கைக்கே உரித்தானதாகும். தத்தமது பாரம்பரிய அறிவுக்குச் சொந்தமான நாடுகள் பல பெரும்பாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவே காணப்படுகின்றன. அவை அதன் பெறுமதியை இன்னும் உணரவில்லை. . மாறாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் பல அவ்வறிவின் பெறுமதியை நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. வலுவான சட்டங்கள் காணப்படாத காரணங்களால் இலங்கையின்  பாரம்பரிய அறிவுடன் தொடர்புடைய காப்புரிமைகள் ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இதனால் ஒரு நாடாக இலங்கையும்  இங்கு பாரம்பரிய அறிவைக் கொண்டிருக்கும் சமூகங்களும் இழந்து வரும் நன்மைகள் சொல்லிலடங்கா. இவ்வாறு சமூகங்கள் தமக்கே உரித்தான மரபுப் பதார்த்தங்கள் மீதான காப்புரிமையை இழந்துவிடாமல் இருப்பதற்காக  உயிரியல் பல்வகைமை மாநாட்டின் செயலகத்தினால் ‘நாகோயா நெறிமுறை’ உருவாக்கப்பட்டது. ஆயினும் அதில் இலங்கை இன்னும் கைச்சாத்திடவில்லை. இந்த பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை ‘நாகோயா நெறிமுறை’ யில் கைச்சாத்திடும் போது அதன் நன்மைகளை எமது சமூகம்  அனுபவிக்க இயலும். இனிமேலும் தாமதித்தால்,  நாம் இழந்தவைகளின் வலிகளை விட இழந்துகொண்டிருப்பவைகளின் வலியும் பெறுமதியும் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பது கண்கூடு.


Thursday, July 30, 2020

மரங்களை அரிமரமாய்ப் பார்க்கும் கண்களெல்லாம் குருடாகிப் போக!

அது வன்னிப்பெரு நிலப்பரப்பின் நுழைவாயில். களம் பல கண்ட தேசம். ஒரு காலத்தில் அடர்வனமாய் இருந்தது. காலத்தின் கட்டாயம்.. அடர் வனத்திலிருந்த பெரு மரங்களெல்லாம் மனித நோக்கங்களின் முன்னே தோற்றுப்போயின. அவை தோற்றதன் விளைவாய் படித்த நடுத்தர வர்க்கத்துக்கான புதிய கிராமமொன்று தோற்றம் பெற்றது.  வீதிகளும் வீடுகளுமாய் குடியிருப்புகள் நிலை பெற்றன. ஆனாலும் அடர்வனத்தின் சாட்சிகளாய் வெட்ட வெட்டத் தழைத்து காய்த்துக் குலுங்கும் அத்தி மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தலைகளைக் காட்டும் பாலை மரங்களும்  கீச்சிட்டுத் திரியும் பலவினப் பறவைகளும் தம் பரம்பரையின் கதைகள் சொல்ல எமக்காய் இன்னும் காத்திருக்கின்றன.  அக்கிராமத்துக்குச் செல்லும் எவராலும் இதை இலகுவில் காண முடியும். 

அன்றொரு நாள் காலை 9 மணியிருக்கும். புல் வெட்டும் இயந்திரத்தின் சத்தம் விட்டு விட்டு விட்டுக் கேட்டபடியே இருந்தது. வீட்டிலிருந்த எல்லோரும் ஏதோ அயலில் புல் வெட்டப்படுவதாக தமக்குள் கதைத்துக் கொண்டார்கள். பின்வாசலால் எட்டிப் பார்த்தேன்.  எதிர் வளவிலே கம்பீரமாய் நின்றது அந்த ஒற்றைப் பாலை மரம்.   திடீரெனெ மைனாக்களும் கிளிகளும் கிளிகளும் ஆர்ப்பரித்தன. அந்தரப்பட்டன. அங்குமிங்குமாய்ப் பறந்தன. பாதி தறித்த பாலைமரக்கிளை முறிந்து கீழே விழுந்தது.  அல்லோலகல்லோலப்படும் குருவிகளைப் பார்த்தபோது  வீட்டை விட்டுத் திடீரெனக் கிளம்பி வந்து மீண்டும் வீடு செல்ல முடியாது  என உணரும் போதெல்லாம்  மனதில் ஏற்பட்ட வலியும்  பின்னர்  கையில் திறப்புடன் மீண்டபோது அத்திவாரமாய்க் கிடந்த வீட்டைப் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வும் அடிக்கடி எட்டிப் பார்த்துச் சென்றன.  சங்கிலி அரிவாளின் சத்தம் அதன் அருகில் தான் கேட்டது. 

ஒருவரால் கட்டிப் பிடிக்க இயலாத  மார்பளவு விட்டம் கொண்ட நேர்த்தியான அந்த மரத்தில், உயரத்திலிருந்து  மஞ்சள் சரக்கொன்றைப் பூக்கள்  தொங்கிக் கொண்டிருந்தன.  பாலையை அண்டி சரக்கொன்றை வளர்ந்திருக்கிறது போலும். மரத்தின் கிளைகளில் வடக்கயிறு கட்டப்பட்டிருந்தது. கீழே சங்கிலி அரிவாள் எனப்படும் சாதனம் தன் கடமையைச் செவ்வனே செய்ய பகீரதப்பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது.  என் பரம்பரையின் கதை சொல்ல நானாவது எஞ்சியிருக்கிறேனே என்ற அடங்கா மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற அந்தப் பாலை மரம்  தன் நிலைப்பையும் இருப்பையும் உறுதி செய்வதற்காய் சங்கிலி அரிவாளுடன்  போராடிக்கொண்டிருந்தது.  நேரமும் கடந்தது. 

அந்த இரண்டு பரப்புக் காணிக்குள் இருந்த ஒற்றை மரமது. அக்காணிக்குள் புதிதாய்க் கட்டப்பட்டு வரும் வீட்டுக்கோ அயலுக்கோ அம்மரம் இடையூறாய் இருப்பதாகவும் தெரியவில்லை. கூடி நின்ற  நபர்களைப் பார்த்தால், உரிமையாளர் மரத்தைத் தீர்த்திருப்பாரோ என்றே எண்ணத் தோன்றியது.  ஏறத்தாழ 6 மணி நேரப் பெரு முயற்சியின் பின்னர் தோற்ற பல மரங்களைப் போல் அந்தப் பாலை மரமும் தோற்றுப்போனது. மைனாக்களும் குருவிகளும் சலசலத்துக் களைத்து ஓய்ந்து போயின. 

உணவு வலையின் ஆரம்பப் படி நிலையின் அங்கங்கள் சில சமாதியாக்கப்பட்டிருந்தன.  அழிக்கப்பட்ட காட்டில் இருந்திருக்கக் கூடிய மரங்களையும் அவற்றையே புகலிடமாகக் கொண்டிருந்த உயிரினங்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.  இன்னும் தம் எதிர்த்தெறியும் திறன் காரணமாக மீண்டெழுந்து காய்த்து நிற்கும் பெருமரக்கன்றுகளையும் அப்ப்ழங்களை நாடி வரும் சின்னஞ்சிறு வண்ணக்குருவிகளையும் கூட எண்ணிப்பார்க்கிறேன். இயற்கையும் அதன் தன்னலமற்ற தன்மையும்  மனிதனுக்கு அப்பாற்பட்டடு எல்லாவற்றையும் இயக்கும் அந்த சக்தியையும் என்னால் வியக்கத் தான் முடிகிறது. 

சுய நலமிக்க என் சக மனிதனின் மனப்பாங்கை எண்ணித் தலை குணிகிறேன். மீண்டும் என் எண்ண அலைகள் அவன் சார்ந்து விரிந்து செல்கின்றன.  அத்துணை நேர்த்தியான பருத்த மரம். எதற்காகத் தறிக்கிறான்?  அவனது கண்ணுக்கு அரி மரம் மட்டும் தானே தெரிந்திருக்கும். எனக்கு நானே பல வினாக்களைத் தொடுத்து விடைகளைத் தேடத் தொடங்குகிறேன். அந்த மரத்தை நம்பி வாழும் உயிர்களும்  மானிடக் கண்களுக்குத் தெரியாமல் அந்த மரம்  வழங்கும் இன்னோரன்ன சேவைகளும் தறிக்க நினைத்தவனுக்கோ தறிப்பவனுக்கோ  தெரிந்திருக்காது தானே?   எப்படி அனுமதி எடுத்திருப்பான்? தான் வளர்த்த மரம் என்றிருப்பானா? அந்த மரத்துக்கு தனது பாட்டன், முப்பாட்டனை எல்லாம் பார்த்திருக்கக் கூடிய வயதிருக்கும் என எண்ணித்தான் இருப்பானா? தனது காணிக்குள் நிற்கும் மரம் என்றிருப்பானா? அது வீட்டிற்கு இடைஞ்சல் என்றிருப்பானா? அம்மரத்தில் பொந்து வைத்து விட்டதால் மழைக் காலத்தில் முறிந்து விழுந்து விடும்  அல்லது வேரெல்லாம் உக்கி விட்டது என்று நொண்டிச் சாட்டுகள் சொல்லியிருப்பானா? தறிக்கும் மரத்துக்கு பதிலாக ஏதேனும் மரக்கன்றுகளை நாட்டித்தான் இருப்பானா?  அனுமதி வழங்கியவர்கள் அப்படியேதெனும் சிபாரிசு தான்  செய்திருப்பார்களா?  இவையாவும் இன்றும் விடைகாணா வினாக்களாக  மனதில் வந்து மோதிச் செல்கின்றன. 

எங்கள்  நிலமும் வீடும் சந்ததியும் சிதைக்கப்பட்டால் தான் கொடுமையா? அந்த மைனாக்களும் கிளிகளும் என்ன பாவம் செய்தன? இழப்பின் வலிகளை உணர்ந்த நாமே இந்தக் கொடூரங்களின் மூலகர்த்தாக்களாக மாறலாமா?  நாம் விதைக்கும் வினைகளை நாமும் எமது சந்ததியும் அறுக்கும் காலம் வந்தால் கூட நாமெல்லாம் திருந்தப் போவதோ இல்லை என்பது மட்டும் கண்கூடு. நாம் செய்த பாவங்களுக்கு  இன்றே பிராயச்சித்தம் தேடாவிட்டால்  வரண்ட பாலைவனங்களை மட்டும் தான் எமது சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம்  என்பது திண்ணம். 

அந்தரித்த குருவிகளின் அழுகுரல் மாத்திரம் இன்னும் என் காதுகளில் எதிரொலித்தபடி என் மீளக்குடியமர்வு நினைவுகளையும் மீட்க வைத்தன.  அது 2010 ஆம் ஆண்டு. ஒவ்வொரு வார இறுதி நாட்களும் பரவிப்பாஞ்சானிலேயே கழிந்தன. எத்தனை துன்பங்களைச் சந்தித்தும் தம் கூரைகளை மட்டுமே தொலைத்து நிமிர்ந்து நின்ற வீட்டுச் சுவர்களைப் பார்த்துப் பெருமிதம் கொண்டிருக்கிறேன். சில வாரங்கள் கடந்தன. மீண்டும் வார இறுதியின்று வந்தது. நிமிர்ந்து  நின்ற சுவர்களையும் காணவில்லை. அயலவர் எவருக்கும் தெரியவில்லை. அதிகாரம் இருந்தால் கட்டிய வீட்டை இடித்துக் கற்களை ஏற்றி புதிதாகக் கட்டும் வீட்டுக்கு அத்திவாரம் போடலாம் எனப் பின்னர் தான் அறிந்து கொண்டேன். அதிகாரம் எம் வீட்டு சுவர்களை மாத்திரம் விட்டு வைக்கவில்லை. 

உயர்ந்து வளர்ந்திருந்த பயன் தரு மரங்கள் பல அரி மரத்துக்காய் காணாமல் ஆக்கப்பட்டன.  சிலவேளைகளில் காலையில் செல்லும் போது மரம் தறித்து விழுத்தப்பட்டிருக்கும். மாலையில் சென்றால் காணியில் மரம் இருக்காது.  அக்காலத்தில் அதிகாரத்தரப்புக்கு மட்டுமே அது சாத்தியமானதாக இருக்கும்.  காவல் துறையில் முறைப்பாடு கூட மேற்கொள்ள முடியாது.  எமது கொடுப்பினைகளை எண்ணி நாமே  நொந்து கொண்டது மட்டும் தான்  நடந்தது. 

எம்மில் பலருக்கு மரங்களை உயிர்களாகப் பார்க்கத்தெரிவதில்லை.  நாம் சுவாசிக்கும் ஒட்சிசன் தொட்டு நாம் குடிக்கும் சுத்தமான குடி நீர் வரை எம் வாழ்வு இவ்வுலகில் நிலைப்பதற்கு ஆதாரமான யாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் மரங்களின் வகிபாகம் புரிவதில்லை. மரங்கள் வழங்கும் சேவைகளின் பெறுமதி விலைமதிப்பிட முடியாது என்பதை நாங்கள் அறிய எத்தனிப்பதில்லை.  அத்தகைய சில சேவைகளை மனித முயற்சியால் பிரதியீடு செய்யக் கூட முடியாது என்பதையும் நாம் அறிய வாய்ப்பில்லை. மரங்களைப் பணம் ஈட்டும் மூலமாக மட்டுமே பார்க்கும்  மனிதப்பேய்கள் ஒழியும் வரை உயிரினங்களின் அலறலும் எதிரொலித்தபடியேதான் இருக்கும் என்பது திண்ணம். 

Tuesday, May 5, 2020

Let us unite for Food Security! உணவுப் பாதுகாப்புக்காய் ஒன்றிணைவோம்! - 01



Star Goose berry (Phyllanthus acidus), is also a medicinal tree native to Sri Lanka. It bears edible small yellow berries and considered as indigenous food resource. It is widely grown in the home gardens of Northern part of the country and has its contribution to the nutrition security of children. Fruits are considered as a source of improving immunity and used as a curry, pickle ingredient in Northern Sri Lanka. The wood is used to remove salinity in water. Although many of our childhood memories are tied around this tree, nowadays it is a neglected tree. It is widely used in food preparations across South East Asia.  Why not we plant the seedlings in schools and roadsides to create a culture of community orchards?  Let us unite for food security!

அரை  நெல்லி, அரி நெல்லி என்றழைக்கப்படும் பழங்களைக் கொண்ட இம்மரம் இலங்கையின் வடமாகாணத்து சுதேச மருத்துவ மரங்களில் ஒன்று. எம்மில் பலரின் சிறு பராய நினைவுகள் இத்தகைய மரங்களைச் சுற்றியும் இருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. வடமாகாணம் உட்பட கிராமத்து சிறுவர்களின் போசாக்கு பாதுகாப்பில் இம்மரத்தின் வகிபாகமும் காணப்படுவதாக பல ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. இலங்கையின் வடபகுதியின் வீட்டுத்தோட்டங்களில் இம்மரம் பொதுவாக க் காணப்படும். இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக பொதுமக்களால் நம்பப்டுகிறது. கறி காய்ச்சுவதற்குப் பயன்பட்டதோடு ஊறுகாய் செய்வதற்கும் பயன்பட்டிருக்கிறது. நீரின் உவர்த்தன்மையைப்போக்க இம்மரக்கட்டையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் எம்மக்கள். ஆயினும் தற்போது இம்மரம் புறக்கணிக்கப்பட்ட மரமாகவே கருதப்படுகிறது.   நவீன உணவுப்பழக்கங்களும் தொழில் நுட்பங்களும் இம்மரத்தைப் பயனற்றதாக்கி விட்டன . ஆனால் தென் கிழக்கு ஆசியாவிலோ இக்காய் இன்றும் சமையல் தேவைகளுக்காக ப் பயன்படுகிறது. இம்மரக்கன்றுகளை பாடசாலை வளாகங்களிலும் வீதியோரங்களிலும் நாட்டுவதன் மூலம் சமூகப் பழத்தோட்ட கலாசாரத்தை ஏன் எம்மால் உருவாக்க முடியாது? உணவுப் பாதுகாப்புக்காய் ஒன்றிணைவோம்!

Monday, January 7, 2019

பசுமைப்பந்து இயக்கம்: சொல்லிய வண்ணம் செயல்!



அண்மையில் இலங்கை விமானப்படையினரால் இலங்கையிலேயே முதன் முறையாக மீள்காடாக்கத்தைக் கருத்தில் கொண்டு விதைப்பந்துகள்  வீசப்பட்டமை பற்றி ஊடகங்களிலே அறிந்திருப்பீர்கள். மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் , பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை விமானப்படை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஏறத்தாழ 5000 விதைப்பந்துகளை வடமத்தியமாகாணத்தின் நொச்சியாகம பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலே வீசின. இலங்கை விமானப்படையின் ஊடகப்பிரிவின் தகவலுக்கமைய இலங்கையின் வனப்பகுதிகளின் சதவீதத்தை  அதிகரிக்கும் நோக்கிலேயே இச் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  அவ்விதைப்பந்துகளைத் தயாரித்து வீசும் நல்லெண்ணத்தை விதைத்த முன்னோடியாகத் திகழ்பவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.
சில வாரங்களுக்கு முன்னர் முக நூலிலே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சூழலிலியல் தொடர்பான கற்கை நெறியொன்றின் செயன்முறைக் கையேட்டை எதேச்சையாகக் காணக்கிடைத்தது. அதில் விதைப்பந்து தயாரிப்பும் ஒரு செயன்முறையாக க் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பின் பாடத்திட்டங்களிலே நடை முறை விடயங்களை உள்ளடக்கியதான செயன்முறைகளை அரிதாக க் காணும் சூழலே இலங்கையில் நிலவுகிறது. இந் நிலையில் காலத்தின் தேவையை ஒட்டியதாக மிகவும் பயன்மிக்கதான ஒரு செயன்முறை  பல்கலைக்கழக மாணவர் மத்தியில்   அக்கையேட்டினூடு அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையைக் கண்டு அது பற்றி மேலும் தேடியபோது விதைப்பந்துகள் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இவ்விதைப்பந்துகளை வீசும் பாரம்பரியம் கிரேக்க காலத்திலேய பின்பற்றப்பட்டிருந்தது . ஆயினும் நவீன உலகிலே ஜப்பானில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக இந்தியாவிலும் தாய்லாந்திலும் கூட இவ்விதைப்பந்துகளை வீசி மரம் நடும் முறைமைகள் மிகவும் பிரபலமானவை. இயற்கை முறைமைகள், சூழலைப்பாதுகாக் க க் கூடிய வாழ்க்கை முறைமைகள் என வேறொறு பரிணாமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சமூகங்கள் மத்தியிலே இவ்விதைப்பந்துகள் பிரபலமானவை.  மீள் காடாக்கல் எனவோ அல்லது மர நடுகை எனவோ மரங்களை நட்டு வளர்த்தல் போல பாதுகாப்பான வகையில் விதைகளை நடுகை செய்து எறிவதன் மூலம் மரங்களை வளர்க்கும் முறைமையே ‘விதைப்பந்து எறிதல்’ என அழைக்கப்படுகிறது. அத்தகையதோர் முறைமையை இலங்கையில் அதுவும் குறிப்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகம் செய்த பெருமை சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடை ச்  சாரும்.

இவ்விதைப்பந்துகள் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன்  அவரைத் தொடர்புகொண்டபோது இந்த நற்செயற்றிட்டம் கருக்கொண்ட விதம் தொட்டு அதன் வெற்றிப்பாதை, எதிர்காலம், நிலைத்திருக்கும் தன்மை வரை தெளிவாக விளக்கியிருந்தார்.  1990-2005 வரையான 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் மொத்த வனப்பகுதி 17.74 சதவீதத்தால்  குறைவடைந்திருக்கிறது. அதே 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் முதன்மைக் காடுகள் 35.02 சதவீத த்தால் குறைவடைந்திருக்கின்றன. பெருந்தோட்டங்களோ  12.81 சதவீத்தால் குறைவடைந்திருக்கின்றன. இத்தரவுகள் யாவும் செயற்கைக்கோள்களின் உதவியுடன் உலகளாவிய ரீதியிலே  பேணப்பட்டு இணைய வெளியிலே வெளியிடப்பட்டவையாகும்.  இலங்கையின் காடுகளைப் பொறுத்த வரையிலே அவை பெரும் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கி வருகின்றன. இத்தகையதோர்  நிலையில் காடழிப்பினால் நாமும் எமது எதிர் கால சந்தியும் எதிர் நோக்கி வரும், எதிர் நோக்கவுள்ள ஆபத்துகளை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டுமாயின் மீள்காடாக்கலும் மரங்களை மீள் நடுகை செய்தலும் அத்தியாவசியமானவை.   

இத்தகையோர் வருத்தமிகு சூழலில் தான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின் எண்ணத்திலும் விதைப்பந்துகள் பற்றிய எண்ணக்கரு உருவானது. ஆரம்பத்திலே அவர் விதைப்பந்துகள், அவற்றின் தயாரிப்பு, பயன் பாடு தொடர்பிலான சகல விபரங்களையும் திரட்டினார். பின்னர் விதைப்பந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தயாரித்த விதைப்பந்துகளைப் பரீட்சார்த்தமாக பல்கலைக் கழக வளாகத்திலேயே வீசி விதைப்பந்துகளின் தாங்கும் திறன், விதைகளின் முளைதிறனையும் பரீட்சித்தார். புளி, வேம்புபோன்ற மரங்களின் விதைகளைக் கொண்டு பத்து பத்து விதைப்பந்துகளைத்தயாரித்து வீசி,  மழை போன்ற தோற்றப்பாடை செயற்கையாக உருவாக்கி அவதானித்தார். விதைகள் முளைக்கத்தொடங்கின. வீசியெறிந்தவற்றுள் ஏறத்தாழ 90 சதவீதமானவை முளைத்தன. ஆதலினால் இச் செயற்பாட்டை பாரியளவிலே பிரதி பண்ண இயலும் என்றதோர் உறுதியான முடிவுக்கு வந்தார். விதை சேகரிப்பிலிருந்து  விதைப்பந்துகளை வீசியெறிதல் வரை இச் செயற்பாட்டின் ஒவ்வொரு அங்கமும் தவறி முயல்தலாலும் அனுபவத்தினாலுமே மேம்பட்டு வெற்றியளித்தன எனக் குறிப்பிடுகிறார் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட். 

இலங்கை சிறியதொரு தீவாக க் காணப்படுகின்ற போதும் பிராந்தியங்களின் கால நிலை, மண்வளம்,  நீர் வளம் என்பவற்றுக்கிணங்க அதன் தாவரப்பரம்பல்கள்  வெகுவாக வேறுபடுவதுடன் பல்வகைமையில் செறிந்தும் காணப்படுகின்றன. இலங்கையிலே அதிகளவு பரப்பளவிலான முதன்மைக் காடுகளைக் கொண்ட மாகாணமாக வடபகுதி  திகழ்கின்றது என்பதிலும் எதுவித ஐயமுமில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுசரணையுடன் மீள்காடாக்கல் நடை பெறும் போது மிகச் சில தாவர இனங்களே பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் அவை மீள்காடாக்கல் நடைபெறும் பிராந்தியத்திலே இயற்கையாக வளரக்கூடிய தாவர இனங்களாகக் காணப்படுவதில்லை. அப்பிராந்தியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் தாவர இனங்களாகவே காணப்படுகின்றன. அத்தகைய தாவர இனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமைக்குப் பல நியாயமான காரணங்களும் இல்லாமலில்லை. அவற்றின் அரிமரப் பயன்பாடு, தாக்குபிடிக்கும் இயல்பு, துரிதமாக வளரும் தன்மை , முதிர்ச்சிக்காலம் போன்ற பல காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

ஆயினும் இளமைக்காலங்களில்  நாம் காணும் இடங்க ளிலெல்லாம் நின்ற பல காட்டுமரங்களை இப்போது நாம் காண்பது அரிதாகிவிட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிராமங்களிலே காலத்துக்கு க் காலம் ஏதாவதொரு காட்டுப்பழமேனும் எம் கைகளுக்கு கிடைத்து விடும். அவை ஈச்சம்பழம், நாவற்பழம், ஏன்  பாலைப்பழமாக்ககூட இருக்கும். இன்று பல குழந்தைகள் இப்பழங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க க் கூட மாட்டார்கள்.

 இலங்கையின் பல பகுதிகளிலே  மரங்களின் பெயர்கள், நீர் நிலைகளின் வடிவங்கள் போன்ற இயற்கையின் தோற்றப்பாடுகளை இணைத்ததாகவே ஊர்களின் பெயர்கள் காணப்படும். உதாரணமாக தேத்தாத்தீவு, இலுப்பைக்குளம், கருவல கஸ் வெவ போன்ற ஊர்களின் பெயரைக் குறிப்பிடலாம். அவை மரங்களின் பெயர்கள் என்பதைக் கூட அறியாத சந்ததியாக நாம் வாழும் காலமிது.

இத்தகையதோர் சூழலிலே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்  அணுகுமுறையானது நிலைத்திருக்க க் கூடிய எதிர்காலமொன்றை இலங்கையில்  தோற்றுவிக்க வல்லதாகவே எனது பார்வையில் தென்படுகிறது. முதலாவது விடயம் விதைப்பந்துகள் தயாரிக்கும் செயன்முறைபோன்றவற்றை அவர்  விஞ்ஞான பீடத்தின்  பாடத்திட்டத்திலே உள்ளடக்கியமையாகும். இது உரிய பாடத்தைக் கற்கும் சகல மாணவர்களுக்கும் கட்டாயமானதாகையால் அவர்களின் பங்கு பற்றலை உறுதி செய்யும். சாதாரணமாக உயிரியல், பௌதிக விஞ்ஞானப் பட்டதாரிகளாகி மாணவர்கள் பல்கலைக்கழகத்தை  வெளியேறிய பின்னர் தாம் கற்ற விடயங்களையும் கோட்பாடுகளையும் எங்ஙனம் நடைமுறை வாழ்க்கையிலே பிரயோகிப்பதென்ற ஐயம் மாணவர்களுக்கு எழும். இத்தகைய நடைமுறை விடயங்கள் கற்பிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்படும் போது அவர்களால் பட்டக்கல்விக்குப்பின்னரான வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள இயலும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள்  நான்காவதான ‘தரமான கல்வி’ எனும் இலக்கின் மூன்றாம் , ஏழாம் அடைவுகளை அடவதற்கு வழி வகுக்கும்.

இரண்டாவதாக விதைகள் சேகரிப்பு தொடர்பிலான அவரது அணுகு முறை பற்றியும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.  அவர் கற்பிக்கும் பிரயோக விஞ் ஞான பீடத்திலே பெரும்பாலான மாணவர்கள் சிங்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்துடன் பெரும்பாண்மையானோர் பெண்பிள்ளைகளுமாவர். அம்மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாந்த அழகியற் கற்கை நிறுவனத்தின் மாணவர்களுக்கும் விடுமுறைக்கு வீடு செல்லும் போது விதைகளைச் சேகரித்துவரும் பொறுப்பு  வழங்கப்பட்டது. தற்போது காண்பதற்கு அரிதான மரங்களைப் பற்றி தத்தமது பெற்றோரிடமும் ஊரிலுள்ள முதியவர்களிடமும் கேட்டறிந்து அவற்றின் விதைகளைச் சேகரித்து அவற்றின் விபரம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தையும் பூர்த்தி செய்துகொண்டு கொண்டு வருதலே அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். அவ்வாறு காண்பதற்கு அரிதாகிக்கொண்டு வரும் மரங்களின் விதைகளைக் கொண்டு விதைப்பந்துகளைத் தயாரித்து அம்மரங்களின் பரம்பலை அதிகரிப்பதோடு மட்டுமன்றி வனப்பகுதிகளைப் பெருக்கி காட்டு விலங்கிங்களின் வாழிடத்தையும் விஸ்தரித்து அவற்றின்  நிலைப்பை உறுதி செய்தலே  இச்செயற்பாட்டின் நோக்கமாகும்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளிலே பதினைந்தாவதான ‘நிலம் மீதான வாழ்வு’ எனும் இலக்கின் இரண்டாம், ஐந்தாம், எட்டாம் இலக்குகளை இலங்கை அடைவதில் இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும்.
 

சிறு துளி பெரு வெள்ளமென்பர்.மாணவர்கள் விடுமுறை கழிந்து பல்கலைக்கழகம் திரும்பிய போது கொண்டு வந்த இலட்சக்கணக்கிலான விதைகள் அப்பழமொழியின் தார்ப்பரியத்தை  விளக்கின. ஏறத்தாழ 130 பாரம்பரிய இனத் தாவரங்களின் விதைப் புதையலே கிடைக்கப்பெற்றது எனலாம். இளைஞர்களின் சக்தி அளப்பரியது  என்ற விவேகாந்தரின் கூற்றின் பின்னாலிருந்த தீர்க்க தரிசனம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.  ஒய்வு நேரங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் இணைந்து விதைப்பந்துகளை உருவாக்கினர்.  விதைப்பந்துகளைப் பக்குவமாக உருவாக்குவதில் பெண்பிள்ளைகளின் பங்களிப்பு அதிகமாக இருந்து எனலாம்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் ஐந்தாவதான ‘பால் நிலை சமத்துவம்’ என்ற இலக்கின் ஐந்தாம், எட்டாம் அடைவுகளை அடைவதற்கு இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும். 


வனப் பாதுகாப்புத் திணைக்களமும் வன விலங்குகள் திணைக்களமும் கூட கை கோர்த்தன.  மாணவரின் சக்தியும் நல்லாசானின் வழிகாட்டலும் தற்போது  பிராந்திய ரீதியிலான பசுமைப்பந்து இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பெயரும் புகழும் தேவையில்லை. இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் கைங்கரியம் யார் குற்றியேனும் அரிசியாகட்டும் என்பதே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்   சிந்தனையாக இருக்கிறது,  அவரது  நல்லணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பலர் தாம் வாழும் பிராந்தியங்களிலெல்லாம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனித்து வருகின்றனர். இப்பசுமைப்பந்து இயக்கத்தை தேசிய ரீதியிலே முன்னெடுத்து இயற்கை அன்னையைக் காக்கும் நல்லெண்ணத்தை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடத்துவதே தன் கனவு எனக்கூறி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்  என்ற வள்ளுவன் வாக்கை  நிரூபிக்கிறார்
சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.

கல்வியின் வீரியம் பல மடங்குகளாய்ப் பெருகும் என்பதற்கும் மாற்றமொன்றை உருவாக்க, நாம் வாழும் வாழ்வை மாற்ற முயற்சிக்க உயர்கல்வி நிறுவன ங்களால் எத்தகைய பங்களிப்பைச் செய்ய இயலும் என்பதற்கும் இலவசமாக, மக்களின் வரிப்பணத்திலே இலங்கையில் நாம் கற்ற கல்வியை எங் ஙனம் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கும் இம்முயற்சி சிறந்தோர் உதாரணமாகும். இப்பசுமைப்பந்து இயக்கத்தின் பாதையில் நடந்து எம் வனங்களின் தலையெழுத்தையும் மாற்றிப் பார்ப்போமே?