Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Friday, October 28, 2011

சீன வெடி இல்லாத தீபாவளி!

தீபாவளி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை அது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. ஊரே இணைந்து கொண்டாடிய பண்டிகை. உள் நாட்டு யுத்தம் என்று வெடித்ததோ, அன்றோடு எம் பண்டிகைகளும்தம் தனித்துவத்தை இழக்கத்தொடங்கின என்று தான் கூற வேண்டும். அமைந்தியாய் இருந்த வாழ்வியல்பின்னர் இடப்பெயர்வு எப்போ என எதிர்பார்த்து, எப்போதும் தயாராக இருக்கும் வாழ்வியலாய்ப் பரிணமித்தது.  அக்காலப்பகுதிகளிலே ஜனித்த குழந்தைகள் தான் இன்றைய இளஞ்சந்ததியர். நாளை புதியதொரு சந்ததியை வழி நடத்தப் போகிறவர்கள். அவர்கள் உலகை அறியத்தொடங்கியிருந்த காலம் மிகவும் கொடியது என்றுதான் கூற வேண்டும். காலம் காலமாக சம்பிரதாய பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் எல்லாம் அக்காலத்தில் செயலிழந்து போயின. ஆதலினால் எம்பண்டிகைகள் காவி வந்த தார்ப்பரியங்களும் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆனால் பண்டிகைகள் மட்டும் நிலைத்திருந்து புதிய பல தார்ப்பரியங்கள் முளை விட வழிவகுத்து விட்டன என்றே கூற வேண்டும்.

இன்று இருந்த இடம் என்னவென்றே தெரியாமல் மறைந்துபோய்க்கொண்டிருக்கும் தார்ப்பரியங்களை எம் மூத்தவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எம்மால் அவற்றை அடுத்த சந்ததிக்கு க் கடத்த முடியாமல் போய்விடும். 80 களுக்கு முற்பட்ட காலங்களிலே தீபாவளி எப்படி களை கட்டியிருந்தது என்று பேராசிரியர் சிவச்சந்திரன் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
   இலங்கையிலே இந்தியாவைப்போல வெகு கோலாகலமாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப் படுவதில்லை. தீபாவளியை ஒட்டிய முரண்பாட்டுக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டிருந்தது. அதனால் தீபாவளியை ஒரு ஆரியப் பண்டிகையாகவும் ஆரியனாகிய கிருஷ்ண பரமாத்மா, திராவிடனாகிய நரகாசுரனை வதம் செய்த திருநாளாகையால் திராவிடர்களாகிய தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதென்பது ஆரோக்கியமானதல்ல என்ற கொள்கையொன்று தமிழ் நாட்டில் எழுந்தது. எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடன் தான் இருந்தாலும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட தமிழக மக்கள் பின்னிற்பதில்லை. இது இந்தியாவின் நிலைமை.

 ஆனால் இலங்கையிலோ நிலைமை சற்று மாறுபட்டது. தீபாவளியென்றால் கோயில்களை நோக்கிப் படையெடுத்து, சன நெரிசலில் மிதந்து அர்ச்சனை செய்து வீடும் திரும்பும் இன்றைய சம்பிரதாயம் அன்று காணப்படவில்லை. அது புதிதாக முளைத்தது என்று தான் கூற வேண்டும். முன்னர் தீபாவளி என்றால் கிராமங்கள் களை கட்டிப் போய் இருக்கும். மக்கள் நிச்சயம் ஆட்டிறைச்சி பங்கு போடுவார்கள். கள்ளின் பாவனை சற்றுத்தாராளமாகவே இருக்கும்.

  விடுமுறை தினமாகையால் வெளியூரில் இருப்பவர்கள் எல்லாம் தம் கிராமங்களுக்குச் செல்வார்கள். அதிலும் மணமாகி, கணவன் வீட்டுக்குச் சென்ற பெண்கள் குடும்பத்துடன் தாய்வீடு வருவர். விருந்தும் புத்தாடையும் இல்லாத தீபாவளி கொண்டாடப்பட்டதே இல்லை எனலாம். விருந்துகளில் இறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தமையால், கோயில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் குறைவாகவே இருந்தது.
  சீனவெடிக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. வெடியின் மூலம் சீனா. முன்னைய காலங்களிலே சீனாவிலிருந்து வெடி பெறப்பட்டமையால் சீன வெடி என்ற பெயர் நிலைத்து விட்டது. தீபாவளிப் பண்டிகையின் போது வெடி கொழுத்தும் வழக்கம் யுத்தம் தொடங்கிய பின்னர் தான் அற்றுப்போனதெனலாம்
  தலைத்தீபாவளி கொண்டாடும் வழக்கமும் எம்மவரிடத்தே இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப்போல இங்கு சீர் செய்து பிரமாண்டமாக எவரும் கொண்டாடுவதில்லை. ஆனாலும் புதுமணத்தம்பதியரின் மனம் மகிழ அவர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

   முக்கியமாக, அனைவரும் ஒன்று கூடும் திரு நாளாக இந்த தீபாவளி இருக்கும். கிராமங்களிலே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்த தினகரன் மாட்டுச் சவாரி கூட நடந்தேறியிருக்கிறது. கூத்துகள், நாடகங்கள் கூட அரங்கேறும்.
 மொத்தத்தில் அன்றைய சமூக நல்லிணக்கத்துக்கு , கிராமிய ஒற்றுமைக்கு வழிகோலும் பண்டிகையாக தீபாவளியும் அமைந்திருந்தது எனலாம்.
யுத்தம் துடைத்தெறிந்திருந்த இந்த இனிய நினைவுகளை மீட்பதிலும் கூட ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. யுத்த காலத்தில், வெடிகள் தடை செய்யப்பட்டிருந்தன. பல வேளைகளில் கொண்டிருக்கும் பதற்ற மன நிலையில் தீபாவளிப்பண்டிகை மறக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

  இன்று சமாதானம் தலை தூக்கி விட்டது. ஆனால், எம்மவர் போக்கு எதிர்த்திசையிலே பயணிக்கிறதோ என்ற அச்சமும் சேர்ந்தே நிலவுகிறது. நாம் கைக்கொண்டு வந்த தார்ப்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டமையால், அர்த்தமே இல்லாத புதிய தார்ப்பரியங்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் கூடவே தொலைக்காட்சிக் கலாசாரம் தொடர்கிறது . விசேட தினங்களிலே குடும்பத்திலுள்ள சகலரையும் வீட்டுக்குள்ளே முடக்கி வைப்பதில் அலை வரிசைகள் போட்டி போடுகின்றன. அப்போது, தீபாவளி மட்டும் என்னவிதி விலக்கா? ஒரு குறுகிய கற்பனை எல்லைக்குள் மனிதனை முடக்கும் தொலைக்காட்சி என்ற அரக்கனையாவது இன்று தவிர்த்துப் பார்ப்போமே?

நடந்து முடிந்த இந்த யுத்தம் எத்தனையோ பேரை ஒரு கணப்பொழுதில் ஆதரவற்றோர் ஆக்கியிருக்கிறது. இன்றைய நன்னாளில் அவர்களில் எவருக்காவது உதவ முயலாலாமே?முடியாது! சாத்தியமே இல்லை என்கிறீர்களா? மனம் இருந்தால், நிச்சயம் இடமும் இருக்கும். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இன்றே எழுவோம்! களத்தில் இறங்குவோம்!

Friday, November 5, 2010

தீபாவளி:மனிதம் நிறைந்த திருநாள்

தீபாவளி என்றதும் பொதுவாகவே நினைவுக்கு வருபவை இனிப்புப் பலகாரங்களும் புத்தாடையுமேயாகும். மணமாகிய தம்பதியர் முதலாவதாகக் கொண்டாடும் தீபாவளியான தலைத்தீபாவளி பற்றியும் நாம் அறிவோம்.
தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடும் பண்டிகையே தீபாவளி என்பர். ஐப்பசி மாதத்து அமாவாசையன்று இத்திருநாள் கொண்டாடப்படும்.
தமிழர்களைப் பொறுத்த வரையிலே, அதுவும் இலங்கையிலே தீபங்களை ஏற்றித் தீபாவளி கொண்டாடும் வழக்கம் பொதுவாக இல்லை என்றே கூற முடியும். ஆயினும் கார்த்திகை மாதப் பெளர்ணமியாக கார்த்திகை விளக்கீட்டை தீபங்களேற்றி கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடையே காலங்காலமாக நிலவி வருகிறது. இதையே நக்கீரர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறுகிறது.
தீபாவளித் திருநாளிலே தீபங்களை வரிசையாக ஏற்றிக்கொண்டாடும் வழக்கம் வட நாட்டுக்குரியது. அத்துடன் தீபாவளி இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான திருநாளல்ல. சீக்கியர்களும் சமணர்களும் கூட வேறுபட்ட காரணங்களுக்காக இத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவ்வசுரன், தான் இறந்த தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என வரங்கேட்டதாகக் கூறுவர். அவன் கேட்ட வரத்தை கிருஷ்ண பரமாத்மா அருளியதால், தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பர்.



இராமயணத்திலே, ஸ்ரீராமர் இராவணனை அழித்து, தன் வனவாசத்தை முடித்த பின் சீதை மற்றும் இலக்குமணனுடன் அயோத்தி திரும்பினார். அந்நாளை அயோத்தி மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நாளே, தீபாவளியாகக் கொண்டாடப்படு கிறது என்றும் கூறுவர். கந்தபுராணத்தின் படி, சக்தி இருந்த 21 நாள் கேதாரவிரதம் முடிவுற்றதும் இத்தீபாவளி தினத்திலேயேயாகும். அவ்விரதம் முடிவடைந்த பின்னரே சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற உருவமெடுத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவது அமிர்ததரஸில் அமைந்துள்ள பொற்கோயில் ஆகும். இக்கோயிலின் கட்டுமாணப்பணிகள் 1577 ஆம் ஆண்டின் தீபாவளி தினத்திலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஆதலால் தீபாவளித்திருநாளை சீக்கியர்களும் கொண்டாடத்தலைப்பட்டனர்.
சமணர்களின் மகாவீர் பரிநிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து இத்தினத்தை சமணர்களும் கொண்டாடுகின்றனர்.



இலங்கை, இந்தியா, கயானா, மொரீஷியஸ், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், பர்மா, பிஜி போன்றநாடுகளிலே தீபாவளித் திருநாள் ஒரு விடுமுறை நாளாகும். இந்துக்களைப் பொறுத்தவரையிலே தீபாவளியின் பின்னணியில் இருப்பது நரகாசுரவதம் என்ற புராணக் கதையாகும்.
தன் மரணத்தைத் துக்கநாளாகக் கொண்டாடாமல் அஞ்ஞானம், அறியாமை, அகங்காரம் ஆகியன அழிந்ததற்கு அடையாளமாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்பதே நரகாசுரன் கேட்ட வரமாகும். அவ்வரத்தினுள் ஆழ்ந்த பல கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன.

மனிதப் பிறவி கிடைத்ததற்கரிய பிறவி. மனிதனுள் அளப்பரிய ஆற்றல்களும் சக்தியும் பொதிந்து கிடக்கின்றன. ஆயினும் அவன் தன் பிறப்பின் பயனை மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் தானே மயங்கி, அழிந்து போகிறான்.
மனிதப் பிறவிக்கேயுரித்தான உயரிய குணங்களாகிய பகுத்தறிவும் விவேகமும் அவனது அகங்காரத்துக்குள் தொலைந்து போகின்றன. இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தையும் விவேகத்தையும் ஒளிரச் செய்வதே இத்தீபாவளியின் பயனாகும்.
பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் மாற்றும் வல்லமை படைத்தவை எம் இந்து சமயத் தத்துவங்கள், நாம் தெய்வமாக வேண்டியதில்லை. ஆனால் பண்புள்ளவர்களாகவாவது மாறலாமே?



தீபாவளியும் அதைத்தான் சுட்டுகிறது. எமது உள்ளத்திலே நரகாசுரனை ஒத்த தீய குணங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் விட்டொழித்தோ அல்லது அவற்றை அழிக்க உதவுமாறோ கிருஷ்ண பரமாத்மாவைப் பிரார்த்திக்க வேண்டுமென தீபாவளி வலியுறுத்துகிறது. நாம் இப்பூவுலகிலே எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? உண்மையில் நாம் என்ன செய்யவேண்டும் என ஒரு கணம் கண்ணைமூடி ஆழச் சிந்தித்தாலே போதும். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற உண்மை தெளிவாகத் தெரிந்துவிடும். அதுவே இத்தீபாவளித் திருநாளில் நாம் செய்யவேண்டியதாகும். இந்தியாவைப் பொறுத்த வரையிலே, ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவிதமாக தமக்கே உரித்தான பாணியில் தீபாவளியைக் கொண்டாடுவர். தென் மாநிலங்களைப் பொறுத்தவரையிலே, தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை இட்டு மகிழ்வர். பின் எண்ணெய் ஸ்நானம், கங்கா ஸ்நானம் செய்வர், நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.



பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேகர் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று நிறைய இனிப்புக்கள் செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்துபெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கெளரியும், பூமாதேவியும், மஹா விஷ்ணுவும் வசிப்பதாகக் கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம் நதிகள் ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும் நீர்நிலைகளும் ‘கங்கா தேவி’ வியாபித்து இருப்பதாகக் கருதுவது ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதிமத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடுவர்.

மேற்கு வங்காளம் போன்ற கிழக்கு மாநிலங்களிலே தீபாவளி வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. மஹாளய அமாவாசையன்று தொடங்கி, ‘துர்க்கா பூஜை’ கொண்டாடும் வங்காள மக்கள், பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் கொள்கின்றனர். மஹாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. இச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது.
சதுர்த்தசி இரவில் பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை வாழ்க்கையில் மனதில் ஏற்படக்கூடிய இருளைப் போக்கும் என நம்புகிறார்கள். இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள். மாலையில் இலட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் ‘பாயிபுட்கோ’ என்ற பெயரில் இவர்களும் அவர்களின் சகோதரர்கள் நலன் வேண்டி, சகோதரனுக்கு சந்தன பொட்டு இட்டு, புதிய ஆடை, பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரம் போன்ற மேற்கு மாநிலங்களிலே, தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி அன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள் தேய்த்து நீராடுகின்றனர். மாலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். இனிப்பு வகைகள் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தீபாவளிப் பூஜைக்கு தயார் செய்கின்றனர். வீட்டை சுத்தம் செய்து அனைத்து பாத்திரங்களையும் கழுவி, விதவிதமான இனிப்புகளை தயாரித்து, புது துணிமணிகளை வாங்கி பண்டிகை கொண்டாட முற்படுகின்றனர். சதுர்த்தசியன்று மாலை ‘தன்பூஜா’ எனப்படும் இலட்சுமி பூஜை நடத்துகின்றனர். இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவர் பூஜை செய்ய, வீட்டின் பெண்மணிகள் மராட்டிய பாணியில் புடைவை அணிந்து மூக்கில் ‘நாத்’ என்ற வளையம் அணிந்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மங்களகரமாக காட்சியளிக்கின்றனர். இனிப்பு வகைகளில் குறிப்பாக பால், பாயசம், பாசந்தி, பூரன், போளி ஆகியவை செய்வார்கள். இந்நாளை நரக சதுர்த்தசி என்று அனைவரும் அழைப்பதால் இம்மாநிலத்தினர் தென்னாட்டு மக்களைப் போல் நரகனை வதம் செய்த நாளென்று கருதுகின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். அமாவாசையன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை செய்து, நிவேதனம் செய்கின்றனர். அந்த இனிப்புகளை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுக்கின்றனர். மூன்று நாட்களும் மண் அகல்களில் விளக்குகளை ஏற்றிவீட்டை ஒளி மயமாக்குகின்றனர்.

உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலே தீபாவளி இன்னொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்து மதக் கடவுள்களாக வணங்கப்படும் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் பிறந்த பூமி இம் மாநிலங்களில் உள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிகச் சிரத்தையுடன், மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்குப் பெயர் பெற்றவர்கள். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து வெற்றிவாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்-லீலா என்ற நாடக வடிவக் கூத்துநடைபெறும். மேலும் தீபங்கள் ஏற்றி ஒளி தரும் நாளாக இவர்கள் இந்நாளைக் கருதுவதால் தீபஒளியே தீபாவளி என்கின்றனர். தீபாவளி அன்று காலை அலுவலகங்களில் லக்ஷ்மி பூஜை நடத்தி இனிப்பு, பரிசுகள் ஆகியவற்றை பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் வித வித உணவு வகைகள் சமைத்து குடும்பத்திலுள்ளோர் சேர்ந்து உண்டு மகிழ்கின்றனர். தீபாவளியன்று மாலை வீட்டில் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் படத்தை வைத்து பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிக மிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பு, வகைகளை கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். மேலும் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பரிசளிப்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தீபாவளி சமயம் நகர் முழுவதும், எங்கும் பரிசுப் பொருட்கள் மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கின்றன. தீபாவளியன்றைக்கு மறுநாள் ‘பையாதூஜ்’ என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து, சகோதரனின் நலனிற்காக பிரார்த்திக்கின்றனர். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சகோதரன் சகோதரிக்கு பரிசு தருகிறார்.
தீபாவளியன்றும் பரிசு, மறுநாளும் சகோதரரிடமிருந்து பரிசு என ஒரே பரிசு மழை பொழியும் பண்டிகைதான் இவர்களுக்கு தீபாவளி.

இலங்கையிலே இத்துணை விமரிசையாகத் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை ஒவ்வொரு தேசத்தவரும் தமது கலாசாரம், பண்பாட்டிற்கு ஏற்ற வகையிலே தீபாவளியைக் கொண்டாடுகின்றபோதும் தீபாவளி உணர்த்தும் தத்துவம் ஒன்றாகவே இருக்கிறது. அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து வாழ்பவர்களாக நாம் மாறவேண்டும்.

தீபாவளிக்காலங்களில் தொலைக்காட்சிச் சேவைகளும் கூட களைகட்டி விடுகின்றன. தம்முன்னே 24 மணிநேரமும் நேயர்களைக் கட்டிப்போடுவதில் அவை முனைப்புடன் செயற்படத் தொடங்கிவிடும்.
தீபாவளியென்றால் புத்தாடை, இனிப்புப் பலகாரங்கள், விடுமுறை என்ற காலம் போய் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடிகர்களின் பேட்டிகளுமே நினைவுக்கு வரும் காலம் வந்துவிட்டது.
இந்த நினைவுகளுக்கெல்லாம் அப்பால் இத்திருநாளில் நாம் செய்ய வேண்டியவை நிறையவே இருக்கின்றன. நாம் உறவினர்களுடன் பகிரும் பலகாரங்களை, இல்லாதவர்களுடனும் பகிரலாம். எம்மைக் கொஞ்சமும் எதிர்பாராத ஏழை வீட்டுக் கதவைத் தட்டி பலகாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே?

இன்றைய அவசரயுகம் உறவுகளைத் தூர அழைத்துச் சென்றுவிட்டது. இத்திருநாள் எம் உறவுகளைப் பலப்படுத்தும் திருநாளாக அமையட்டுமே? நண்பர்களுடனோ அல்லது உறவுகளுடனோ மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் இன்றைய தினத்தில் அவர்களுடன் இணைந்து, விடுபட்ட உறவை மீட்க முயற்சிக்கலாமே?
தொலைக் காட்சியிலேயே மூழ்கியிருக்காமல் நாம் குடும்பத்தினருடன் உறவாடி மகிழலாம். அப்போதுதான் நாம் இதுவரை காலமும் எதை இழந்துவிட்டிருந்தோம் என்பது தெளிவாகப் புரியும்.

யாவரிடமும் அன்பு செலுத்தி மனிதம் நிறைந்த திருநாளாக இத்தீபாவளித் திருநாளை எம்மால் மாற்றியமைக்க முடியும். எத்தனையோ உறவுகள் பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள்.
உடுக்க உடையில்லாததால் தற்கொலை முயற்சியை மேற்கொண்ட சிறுமியரும் இருக்கிறார்கள். கல்விச் செலவுக்கு மாதாந்தம் 1000 ரூபா பணம் கிடைக்காததால் கல்வியை நோக்கிய தமது எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் இருக்கிறார்கள். குடும்பப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு தமது பல்கலைக்கழக அனுமதியைக் கூட ஏற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்களும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் சமகாலத்திலே எமது நாட்டிலேயே வாழும் உறவுகள் அவர்கள் சம வயதினராகவோ, ஏன் வயதிற் சிறியவர்களாகவோ இருக்கலாம்.

உலகம் எங்கோ முன்னேறிச் சென்றுவிட்டது என்ற உண்மை கூடத் தெரியாமல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே சிரமப்படும் நிலையில் இருக்கிறார்கள்.ஆனால் நாமோ, அவர்களைப் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பது கூட இல்லை. எம் உறவுகள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்ற உண்மை கூட பலருக்குத் தெரிவதில்லை.

இன்றைய தீபாவளித் திருநாளிலே அத்தகைய உறவுகளின் வாழ்விலே குடிகொண்டிருக்கும் இருளை அகற்ற திடசங்கற்பம் பூணுவோம்! எம்மால் இயன்ற வழியிலே அவர்களின் வாழ்வையும் ஒளியூட்டுவோம்! இதுதான் இந்தத் தீபாவளித்திருநாள் எமக்கு விடுத்திருக்கும் அறைகூவலாகும்.

நாம் ஒன்றிணைந்தால், எம்மால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. முயன்றுதான் பார்ப்போமே?