Friday, June 4, 2010

சூழலை மாசுபடுத்த எவருக்கும் உரிமையில்லை!‘ஏ மனிதா!
நீ ஊதித்தள்ளும் புகையால் நாற்றம்,
கட்டி ஆலைப் புகையால்
மூச்சு முட்டும்!
நீ ஓட்டும்
வாகனக் கரிப்புகையால்
வாயு மண்டலம் மாசுபடும்!
இறைவன் படைத்த பூமியிது!
இதைத்
தூசுபடுத்த, மாசுபடுத்த
எவர்க்கு மிங்கே உரிமையில்லை!
மரத்தை வளர்த்திடுவாய்,
பரம்பொருள் கட்டளை
இது வென்பேன்’


என்கிறது எங்கோ இணையத்தில் வாசித்த கவிதையொன்று! நாம் வாழும் சூழலை நாமே அழித்து வருகிறோம் என்பது கூட எம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

எமது அன்றாடச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் சூழலைப் பாதிக்கிறது என நாம் சிந்திப்பதில்லை. இவற்றின் விளைவுகளெல்லாம் பூதாகரமாகி எம்மை அணுகும் போது கூட, அதை நாம் உணர்வோமோ தெரியவில்லை. இத்தகையதோர் சூழ்நிலையிலே, சூழல் தொடர்பான விழிப்புணர்வும் அவசியமாகிறது.

உலக மக்களை சூழலியல் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் தாபனம் பிரயோகிக்கும் பிரதான ஆயுதமாக உலக சுற்றுச் சூழல் தினம் அமைந்திருக்கிறது. ஆகையால் தான் பல அரசியல், மனித வளங்களைத் அது தன் பக்கம் இழுத்து, சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் முடிகிறது.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திலே வருடாந்தம் ஜூன் மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதேபோல அந்தக் கூட்டத்திலேயே ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் (ஸினிரிஜி) ஆரம்பத்துக்கும் வழிவகுக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியிலே, வட அமெரிக்கா - இலத்தீன் அமெரிக்கா, கரீபீய - ஆபிரிக்கா, ஆசியா - பசுபிக் - மேற்காசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலேயே அனுஷ்டிக்கப்படும் சுற்றுச் சூழல் தொடர்பான நிகழ்வாக உலக சுற்றுச் சூழல் தினம் அமைந்திருக்கிறது. 1972 ஆம் ஆண்டிலிருந்து 36 தடவைகள் தொடர்ச்சியாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வந்த உலக சுற்றுச் சூழல் தினம் 37 ஆவது தடவையாக நாளையும் கொண்டாடப்பட இருக்கிறது-

ஏலவே குறிப்பிட்ட அந்தப் பிராந்தியங்களிலிருந்து ஒரு பிராந்தியம் தெரிவு செய்யப்பட்டு அந்தப் பிராந்தியத்திலே உலக சுற்றுச் சூழல் தினம் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படும்.

உலக சுற்றுச் சூழல் தினமானது, சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனித முகமளிக்கும் நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது. இத்தினமானது, அடிப்படையில் சமத்துவமான, பேண்தகு அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கும் வகையில் உலக மக்களை ஊக்குவிப்பதுடன் சுற்றுச் சூழல் தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கும் பிற்போக்கான மனப்பாங்குகளை மாற்றும் நோக்கத்தையும் கொண்டது.

அவை மட்டுமன்றி சகலருக்கும் பாதுகாப்பான, சுபிட்சமான எதிர்காலமொன்றை இன, மத, மொழி வேறுபாடுகளின்றி யாவருக்கும் உறுதி செய்யக்கூடிய வகையிலே, உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பையும் நடைமுறைப்படுத்துகிறது.

உலக சுற்றுச் சூழல் தினத்தன்று, நாடுகளின் தலைவர்கள், பிரதம மந்திரிகள், சுற்றுச் சூழல் அமைச்சர்கள், ஆகியோர் தமது செய்திகளை வெளியிடுவர். பூமியைப் பாதுகாப்பதற்காகத் தம்மை அர்ப்பணிப்பர். புதிய பல செயற்றிட்டங்களை முன்னெடுப்பர். அதேபோல, சர்வதேச ரீதியான கொள்கைகளும் சட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு அவற்றின் மூலமும் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தினமானது உயர் மட்டத்தினரால் மட்டுமே கொண்டாடப்படும் தினமல்ல. இது ஒரு மக்கள் தினமாகும். ஓட்டப் போட்டிகள், வேக நடைப் போட்டிகள், விஞ்ஞான ஆய்வரங்குகள், சைக்கிளோட்டப் பந்தயங்கள், கட்டுரை மற்றும் சுவரொட்டிப் போட்டிகள், மர நடுகைத் திட்டங்கள், மீள் சுழற்சி, சுத்திகரிப்புச் செயற்றிட்டங்களெனப் பல்வேறு விதமான செயற்பாடுகள் பொதுமக்களாலும் அவர்கள் சார்ந்த அமைப்புகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வருடத்துக்கான சுற்றுச்சூழல் தினத்தின் தொனிப்பொருள் ‘பல இனங்கள், ஒரே கோள்; ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இந்தத் தொனிப் பொருளானது உயிரியல் பல்வகைமை, சூழல் தொகுதி முகாமைத்துவம், பசுமைப் பொருளாதாரம் ஆகிய துறைகளின் அடிப்படையில் நோக்கப்படுகிறது.

உயிரியல் பல் வகைமை தான் பூமி என்ற கோளிலே பலவகை உயிரினங்கள் நிலைத்து வாழ்வதற்குத் துணைபுரிகிறது. அதேபோல சூழல் தொகுதி முகாமைத்துவம் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு பசுமைப் பொருளாதாரக் கொள்கைகள் வலுப்பெற்றாலன்றி வேறு எந்த வகையிலும் ஒரேகோள்; ஒரே எதிர்காலம் என்ற கரு பூரணப்படுத்தப்படாது.

அருகிவரும் வளங்களுக்கும் அதிகரிக்கும் தேவைகளுக்குமிடையில் சமநிலை ஒன்று பேணப்படாத பட்சத்தில் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்குமெனக் கணக்கிடப்பட்டது. அத்தகையதொரு காலகட்டத்தில் தான், பேண்தகு வழிமுறைகள் தொடர்பான கொள்கைகளும் செயற்திட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

அதையடுத்து சூழல் தொகுதி முகாமைத்துவம் என்ற புதியதோர் துறை தோற்றம் பெற்றது. மனித செயற்பாடுகள் சூழல் தொகுதிகளை முன்னொருபொழுதுமில்லாத பாரிய அழுத்தத்துக்குட்படச் செய்தன. இதனால் பேண்தகு அபிவிருத்திக்கான பாதை அச்சுறுத்தலுக்குள்ளாகியது.

நிகழ்காலத்திலே வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமன்றி, அவற்றை எதிர்காலத்துக்காகப் பேணும் கொள்கையையே ‘பேண் தகு’ என்ற சொற்பதம் குறிக்கிறது. பேண்தகு அபிவிருத்தியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய விடயங்கள் பொதுமக்கள், அரச மற்றும் வர்த்தகத் துறையினருக்கு ஆக்கபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய வழிகளை வகுத்துக் கொடுத்தன.

அவ்வழிகள் சமூக, பொருளாதார, பூகோளச் சூழலின் நலனை அடிப்படையாகக் கொண்டவை. சுபிட்சம், சமத்துவம், ஸ்திரத்தன்மை ஆகிய அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொண்டு எவ்வளவு தூரம் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறதோ அதேயளவில் சூழல் ரீதியான சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

சர்வதேச சமூகம், அரசாங்கங்கள், தனியார் துறையினர், சிவில் சமூகம் மற்றும் சாதாரண பொதுமக்கள் உட்பட்ட சகல தரப்பினரும் தமது வகிபாகத்தை உணர்ந்து இந்தச் சவால்களை எதிர்நோக்க ஒன்றிணைய வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் நிகழ்ச்சித் திட்டம் (ஸினிரிஜி) உறுதுணையாக அமைகிறது.

இதற்கான அணுகுமுறையாக உருவாகியதே சூழல் தொகுதி முகாமைத்துவமாகும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த அணுகுமுறையின் வரையறை சற்றுப் பெரியது. சூழல் தொகுதி முகாமைத்துவத்தின் பிரதான இலக்குகளாக, உயிரினங்களின் வாழ்விடங்களை இயன்றவரை பாதுகாத்தல், வெவ்வேறு சூழல் தொகுதிகளுடக்கிடையிலான தொடர்புகளைப் பாதுகாத்தல் என்பன அமைகின்றன.

இத்திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் திட்டத்தின் இலக்குகளை அடைகின்றனவா என, உறுதிசெய்யப்படும். இத்திட்டத்தின் பங்குதாரர்களாக சூழல் தொகுதியைப் பேணுதல் மற்றும் பாதுகாக்கும் செயற்றிட்டங்களுடன் தொடர்புடைய, அவற்றில் அக்கறையுடைய அனைவரும் கருதப்படுகின்றனர். அரசாங்கம் தொட்டு, சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் சூழல் தொகுதிகளில் ஆர்வமுடையவர்களாகவே காணப்படுகின்றனர்

கட்டளையுடன் கட்டுப்பாட்டு முகாமைத்துவம் எனும் அணுகு முறையானது சூழல் தொகுதிகளைப் பேணுவதற்குப் பரந்தளவில் பயன்படுகிறது. அதாவது சூழல் தொகுதிகளைப் பேணுவதற்கு அரச கட்டளைகளாகிய சட்டதிட்டங்களைப் பயன்படுத்துவதையே இந்த அணுகுமுறை குறிக்கிறது.

அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக இயற்கை வளங்கள் அருகி வருகின்றன. சனத்தொகை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில் இயற்கை வளங்கள் அருகி வருவதையும் தடுக்க முடியாவிடில் இப்பூவுலகிலே மனித வாழ்வின் நிலைப்பு கேள்விக்குறியாகிவிடும்.

இந்த அணுகுமுறை இயற்கை வளங்களில் ஏற்படும் மாறல்களைக் கட்டுப்படுத்துவதற்கே பயன்படுகிறது.

உதாரணமாக, காட்டுத்தீ பரவுதல் தற்போதைய காலங்களில் கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் கைத்தொழில்களில் மரத் தேவைகளுக்கான மரங்களின் விநியோகம் சீராக நடைபெறுகிறது.

அடிப்படையில் காட்டுத்தீ என்பது காடுகளை அழித்து புதிய விதைகளை முளைக்கச் செய்யும் இயற்கைச் செயன்முறையாகவே கருதப்படுகிது. சில விதைகள் முளைப்பதற்கு ஆரம்பத்திலே மிக உயர்வான வெப்பம் தேவைப்படுகிறது. அத்தகைய உயர்வான வெப்பத்தைக் காட்டுத்தீ வழங்குகிறது. இந்த இயற்கைச் செயன்முறை கட்டுப்படுத்தப்படுவதானது, மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வழிவகுக்கிறது. அதேசமயம், வனவளமும் காட்டுத்தீயால் குறைவடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

சூழல் தொகுதி முகாமைத்துவத்தின் பரிசோதனை ரீதியிலான அணுகுமுறையாக, ஏற்றுக்கொள் முகாமைத்துவம் கருதப்படுகிறது. சூழல் தொகுதிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையையும், மக்களின் அலட்சியப் போக்கையும் கருத்தில் கொண்டு இந்த அணுகுமுறை உருவாக்கப்பட்டது.

முகாமையாளர்கள் சூழல் தொகுதிகள் தொடர்பான கருது கோள்களை உருவாக்கி அவற்றினடிப்படையில் சூழல் தொகுதிகளை முகாமைத்துவம் செய்யும் நுட்பங்களைப் பிரயோகிப்பர். அந்நுட்பங்களை ஆராய்வர். ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் புதிய நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, சூழல் தொகுதிகள் முகாமைத்துவம் செய்யப்படும். ஆனால் இந்த அணுகுமுறையின் பாவனை மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

இயற்கை வள முகாமைத்துவமென்பது சூழல் தொகுதி முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாகும். அது சூழல் தொகுதிகளோடு முழுமையாக ஈடுபடாமல், சூழல் தொகுதியின் வளமொன்று மனிதத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் போதே பிரயோகிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட வளத்திற்கான கேள்வியை அதனுடன் தொடர்புடைய சூழல் தொகுதி பாதிக்கப்படாத வகையிலே பூர்த்திசெய்தலை இவ்வணுகுமுறை இலக்காகக் கொண்டது. சில வளங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவை இயற்கையாகவே மீள உருவாக்கப்பட வழி செய்யப்படும். ஆயினும் வனங்கள் போன்ற சில வளங்கள் மனித முயற்சியால் எதிர்காலத்தின் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலே மீள உருவாக்கப்படும்.

இயற்கை வளங்கள் ஒழுங்காக முகாமைத்துவம் செய்யப்பட்டால், அவை தற்போதைய கேள்வியைப் பூர்த்திசெய்யும் அதே சமயம் எதிர்காலத்திற்கான கேள்வியையும் பூர்த்தி செய்யக்கூடியதாக அமைய வாய்ப்புண்டு.

ஆனால் நடைமுறையில், ஒழுங்கற்ற முகாமைத்துவம் காரணமாகப் பல இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டு அழிவடைந்து போகின்றன.

இங்குதான் சூழல் தொகுதி முகாமைத்துவம் உத்திரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் சூழல் தொகுதி சிறந்த முறையில் பேணப்படும். பொதுவாக இந்த முறைமை பாரிய நிலப்பரப்புக்களைப் பேணுவதையும் பாதுகாப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. முதலில் ஒரு இனத்தை முழுமையாக எடுத்து ஆய்வு செய்வார்கள். அவ்வாறு தெரிவு செய்யப்படும் இனம் பெரிய இடத்திலே பரம்பியிருப்பதாக அமைய வேண்டும்.

அந்த இனம், தான் வாழும் பகுதியில் உள்ள வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என முதலில் ஆராயப்படும். அவ்வினத்தின் நடத்தைக் கோலம் கண்டறியப்பட்டால் அது வளங்களைப் பயன்படுத்தும் விதமும் இலகுவில் அறியப்பட்டு விடும். அதன் மூலம் பாதுகாக்கப்பட, மற்றும் பேணப்பட வேண்டிய வளங்கள் தொடர்பாக அறியப்படும். அத்துடன் அவ்வளங்களின் பாவனை தற்போதைய நிலையில் எங்ஙனம் காணப்படுகிறது என அறியப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். பின்னர் வினைத்திறன் மிக்க முறையில் அச்சூழல் பாதுகாக்கப்படும்.ஆய்வுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இனம் பரந்த இடத்தில் வாழ்வதால், அதிலே தங்கியிருக்கும் ஏனைய இனங்களும் பாதுகாக்கப்படும்.

சூழல் தொகுதியொன்றின் தொகுப்பு, கட்டமைப்பு, தொழிற்பாடு ஆகிய மூன்று அடிப்படைப் பகுதிகளிலும் பேண்தகு வழிமுறைகளைப் பயன்படுத்துதலையே சூழல் தொகுதி முகாமைத்துவம் வெளிப்படுத்துகிறது.

சூழல் தொகுதியின் முகாமைத்துவம் சிறப்பாக அமைதலின் வெளிப்பாடே பசுமைப் பொருளாதாரம் என்ற புதிய பொருளாதார முறைமை உருவாக வழிவகுத்தது. பசுமைப் பொருளாதாரமே உலகின் உண்மையான பொருளாதாரமாகக் கருதப்படுகின்றது. இது வளமொன்றின் ‘பாவனைப் பெறுமதி’ பற்றியதேயன்றி பணம் பற்றியதோ அல்லது மாற்று விகிதம் தொடர்பான விடயமோ அல்ல.

இது தரம் பற்றியதே தவிர அளவு பற்றியதல்ல. இது தனிநபர்கள், சமுதாயங்கள் மற்றும் சூழல் தொகுதிகளில் மீள் உருவாக்கத்துடன் தொடர்புடையதே தவிர பொருட்களையோ பணத்தையோ சேர்த்தலுடன் தொடர்புடையதல்ல.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இருந்த பணத்தை அல்லது முதலை ஈட்டுவதற்கான தேவை. சக்திவாய்ந்த கைத்தொழிலாக்கத்துக்கு வித்திட்டது. இதனால் கிடைக்கப்பெற்ற நன்மைகள் சமமாகப் பகிரப்படவில்லை. பொருள், பண ரீதியான வளர்ச்சியானது, உண்மையான செல்வத்தைவிட அதிகமான அழிவைத் தரக்கூடிய நிலையை அடைந்திருக்கிறது.

கைத்தொழிலாக்கத்துக்குப் பின்னான உலகில், பணத்துக்கும் பொருட்களுக்குமான முக்கியத்துவம் குறைவடைந்து வருகிறது. அத்தகையதோர் நிலையிலேயே பசுமைப்பொருளாதாரத்தின் தேவையும் அதிகரித்தது. பசுமைப் பொருளாதாரமானது மனித மற்றும் சூழல் தேவைகளை எதிர்கொள்வதிலேயே நேரடியாகக் கவனம் செலுத்துகிறது.

‘இன்று நாம் எதிர்நோக்கும் சமூக, சூழல் பிரச்சினைகள் யாவுமே ஒழுங்கற்ற முகாமைத்துவத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளல்ல. மாறாக ஒழுங்கற்ற வடிவமைப்பால் உருவாகிய பிரச்சினைகளே’ என பசுமைப்பொருளியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

பசுமைப் பொருளாதாரமானது சூழல் தொடர்பானது மட்டுமல்ல. இயற்கைத் தொகுதிகளை இசைவாக்கி அதன் மூலம் பொருளாதாரம் பயணிக்கும் சிக்கலான பாதையைச் சுமுகமான பாதையாக மாற்றுவதே பசுமைப் பொருளாதாரம் ஆகும். இது தனியார் துறை யென்றோ இல்லை பொதுத் துறையென்றோ பிரித்துப் பார்க்காது. இவ்விரு துறைகளுமே சமூக, சூழலியல் விடயங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமெனவே எதிர்பார்க்கிறது. அரச துறை ‘பொலிஸ் காரர்’ போல செயற்படாமல் ‘இணைப்பாளர்’ போல செயற்பட வேண்டுமென இப்பொருளாதாரம் எதிர்பார்க்கிறது-

இயற்கையைப் பொறுத்த வரையிலே கழிவுகள் என்று எவையுமே இல்லை. ஒரு செயற்பாட்டின் முடிவுப் பொருள் இன்னொன்றின் மூலப் பொருளாகிறது. ஆகையால் செயற்பாடொன்றின் வெளியீடுகளும் உப விளைவுகளும் இன்னொன்றிற்கு ஏதோ ஒருவகையில் உணவாகக் கூடியவாறு போசணைமிக்கதாகவும் நச்சுத்தன்மையற்றதாகவும் காணப்படுவதாக பசுமைப் பொருளாதாரம் கூறுகிறது.

இப்பூவுலகின் நிலைப்பு பல்வகைமையிலேயே தங்கியுள்ளது. பசுமைப் பொருளாதாரத்தின் அடிப்படையும் இனங்கள், சூழல் தொகுதிகள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலான பல்வகைமையேயாகும்.

எமது இன்றைய பொருளாதாரம் பசுமைப் பொருளாதாரமாக மாற்றப்பட வேண்டும். அது மீள மீள நிகழ்வதோடு மட்டுமன்றி புதிய விடயங்கள் அறிமுகமாகும் போது அதனுடன் மேலும் இணைக்கப்படக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

நடைமுறைக்குச் சாத்தியமான செயற்பாடுகள், சூழல் தொகுதிகளுக்கு எந்தவித பங்கமுமின்றி மேற்கொள்ளப்படும் போது பசுமைப் பொருளாதாரமும் மெல்ல மெல்ல வேரூன்றத் தொடங்கும்.

No comments:

Post a Comment