Showing posts with label விலை. Show all posts
Showing posts with label விலை. Show all posts

Monday, February 21, 2011

உணவின்றியும் வாழ முடியுமா ?

எகிப்து, டுனிசியா என்று ஆரம்பித்து இன்று அரபு நாடுகள் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் பரவியிருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் மக்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதர ரீதியிலான நெருக்கடிகளே காரணமாக இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2010, 2011 ஆம் ஆண்டுகளிலே உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொடர் இயற்கை அனர்த்தங்கள் மக்கள் மீது பொருளாதார நெருக்கடி திணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
பல உணவுப் பொருட்கள் என்றுமில்லாதவாறு உச்ச விலையை அடைந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருக்கிறது. இதனால் உலக மக்களின் உணவுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது.
இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன் உலகளாவிய ரீதியில் 196.7 மில்லியன் தொன்களாக இருந்த கோதுமையின் இருப்பு தற்போது 175.2 மில்லியன் தொன்களாகக் குறைந்திருக்கிறது. சோளத்தின் இருப்பு கடந்த மாதம் 130 மில்லியன் தொன்களாக இருந்தபோதும் தற்போது 127.3 மில்லியன் தொன்களாகவே இருக்கிறது. அதேபோல சோயா அவரையின் இருப்பு, இவ்வருட ஆரம்பத்தில் 60.4 மில்லியன் தொன்களாக இருந்தது. இந்தப் பருவ காலத்தின் முடிவில் அது 58.78 மில்லியன் தொன்களாகக் குறைவடைந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்குள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் றெபேட் சொலிக் தெரிவித்துள்ளார்.
முதன் முறையாக உலகளாவிய விவசாய விளைச்சல் இம்முறை பெரு வீழ்ச்சி கண்டுள்ளது. கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுள் பெரும்பாலானவற்றிலே விளைச்சல் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, உக்ரெயின், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியனவே அந்த முன்னணி நாடுகள் ஆகும்.
2010 இன் இலைதுளிர் காலத்தில் சீனாவின் பல மாகாணங்களிலும் வியட்நாம் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடும் வரட்சி நிலவியதுடன் பனிப்புயலும் தாக்கியது. தென் மேற்கு சீனாவைப் பொறுத்தவரையிலே இது கடந்த ஒரு நூற்றாண்டில் நிலவிய மிக மோசமான வரட்சியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலே பதிவு செய்யப்பட்ட வெப்ப அலைகளின் தாக்கமும் அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் அரசியல், பொருளாதார ரீதியாகப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.
ரஷ்யாவிலே கடந்த 130 வருடங்களுள், என்றுமில்லாதவாறான உயர் வெப்பநிலை பதியப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பரவியிருந்த வரட்சியும் மொஸ்கோ உட்பட 7 பிராந்தியங்களில் பரவிய காட்டுத்தீயும் கோதுமை விளைச்சலில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கின.
கடந்த வருடம் நிலவிய கடும் வரட்சியாலும் குளிர்கால நிலையாலும் பிரான்ஸ் அரசு தனது கோதுமை உற்பத்தி 2.7 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறியிருக்கிறது.
கனடாவின் மேற்குப் பகுதியில் தானியங்கள் விளையும் பல மாநிலங்களில் நிலவிய வரட்சி விளைச்சலை வெகுவாகப் பாதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பார்லி அரிசி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் உக்ரெயின் கோதுமை உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. ரஷ்யாவைப் போலவே உக்ரெயினின் விளைச்சலை வரட்சியும் காட்டுத்தீயும் பாதித்தன. விளைவாக 2011 க்கான தானிய ஏற்றுமதியை உக்ரெயின் நிறுத்தியுள்ளது
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தம் தான் கோதுமைக்குப் பஞ்சம் ஏற்படப்போவதை உலகுக்கு உணர்த்தியது. ஏறத்தாழ பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பரப்பளவையுடைய பிரதேசங்களை வெள்ளம் மூடியது. கோதுமைப் பயிர்கள் அழிந்தே போயின.
பாகிஸ்தான் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தமானது 17 மில்லியன் ஏக்கர் விளைநிலங்களைப் பாதித்தது. வெள்ளத்துடன் 200,000 க்கும் மேற்பட்ட கால் நடைகளும் தானியங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த போகத்துக்கான விதைத் தானியங்கள் கூட இல்லாத நிலையில் தவித்துப் போய் நிற்கிறார்கள் பாகிஸ்தான் விவசாயிகள். இயற்கை அனர்த்தங்களால், கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிராந்தியமான தென் அமெரிக்காவும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை எதிர்கொண்டது. ஆர்ஜன்ரீனா பொலிவியா ஆகிய நாடுகள் கடும் வரட்சியை எதிர்நோக்கிய அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடான பிரேசில் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டது.
ஐக்கிய அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் 49 மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. புளோரிடாவில் நிலவிய மோசமான உறை பனிக்கால நிலையானது பயிர்களை வெகுவாகப் பாதித்தது. கலிபோனியாவில் பொழிந்த மழை காரணமாக பயிர்கள் பாரியளவில் அழிந்து போயின.
ஆசியாவிலே இறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தென் கொரியாவில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கால்வாய் நோயால் மில்லியன் கணக்கான கால்நடைகளை அழிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. மகரந்தச் சேர்க்கை இன்றி மரக்கறி மற்றும் பழவகைகளின் உற்பத்தி இல்லை என்பது வெளிப்படை உண்மை. மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு காரணமாய் அமையும் சில தேனி குடித்தொகைகள் ஐக்கிய அமெரிக்காவில முற்றாக அழிந்துபோயுள்ளன. அதேவேளை அமெரிக்காவின் வெளவால்களின் குடித்தொகையும் காரணமின்றி திடீரென அழிந்து போயுள்ளது. இவற்றிற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் அவற்றின் பின்னணியில் மனித செயற்பாடுகள் தான் எஞ்சியிருக்கப் போகின்றன என்பது தெளிவான உண்மை.
இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நடைபெறக் காரணமாகும் உயிரினங்களின் அழிவாலும் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடந்த 3 தசாப்தங்களுள் என்றுமில்லாதவாறு சீனியின் விலை உயர்ந்திருக்கிறது. அதற்கான பிரதான காரணம், அவுஸ்திரேலியாவைத் தாக்கிய யாசி என்ற சூறாவளியால் கரும்புப் பயிர்ச் செய்கை அழிந்து போனமையாகும்.
மலேசியா எதிர்கொண்ட வெள்ள அனர்த்தத்தால் மூன்றாம் உலக நாடுகளின் பிரதான சமையல் எண்ணெய்யாகிய பாம் எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
நாம் யாவரும் ஒருமித்து எதிர்கொள்ளவுள்ள இந்த உணவு நெருக்கடியால் வளர்முக நாடுகளில் மட்டும் 870 மில்லியன் மக்கள் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் பாதிக்கப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதே சமயம் அந்த எண்ணிக்கை 925 மில்லியனாக அதிகரிக்கும் என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பல நாடுகள் தற்போது தானிய இறக்குமதிக்கான வரியை இரத்துச் செய்துள்ளன. அதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் 820,000 தொன் அரிசியை இறக்குமதி செய்தது இந்தோனேசியா. அத்துடன் அரிசி, சோயா அவரை மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியையும் இரத்துச் செய்தது.
மக்கள் உண்பதற்கு உணவு இல்லாமல் போனால் மூன்று விடயங்கள் நடக்கலாம். ஒன்று மக்கள் புரட்சி வெடிக்கும் இல்லையேல் குடிபெயர்வர். அதுவும் இல்லையேல் அவர்கள் இறந்து போகக்கூடும் என்கிறார் உலக வங்கியின் தலைவர்.
இது விளையாட்டாகக் கருதக்கூடிய ஒரு நிலைமை அல்ல என்பதை நாம், நினைவில் கொள்ள வேண்டும். இன்று உண்ண உணவு இருக்கிறது. எதற்காக எதிர்காலத்தைக் எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடும் மனநிலையும் எம்மில் பலர் மத்தியில் காணப்படுவது உண்மை.
எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற அவசியம் இல்லைத் தான். ஆயினும் எதிர்காலத்தை எண்ணி அதற்காக எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு உண்டு.
நாகரிக வளர்ச்சியுடன் அதிகரித்த மனிதனின் தேவைகள் அடிப்படை, அத்தியாவசியம் எனப் பல நிலைகளைக் கடந்து எங்கோ சென்றிருக்கின்றன. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை உணவு அடிப்படைத் தேவையாகத்தான் இருந்து வருகிறது.
ஆதலால் எதிர்காலத்தில் முழு உலகுமே எதிர் நோக்கவிருக்கும் உணவு நெருக்கடியை நிதி நிலைமையின் அடிப்படையில் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையொன்று எமக்கு இருக்கிறது.
உலக உணவு நெருக்கடி அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலை தானாகவே உயரும். அத்தகையதோர் நிலையில் பெரும்பான்மையான மக்களால் அதற்கு ஈடு கொடுத்து வாழ முடியாமல் போகலாம். ஆகவே அத்தகைய நெருக்கடி உருவாவதற்கு முன்னரே எம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இதுவரை காலமும் நாம் கைக் கொண்டுவந்த பழக்கங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
எமது உணவுச் செலவுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து ஆராயவேண்டும். வீட்டிலே சமைக்கும் உணவு வகைகளுக்கும் உள்ளூர் விளைச்சலால் பெறப்படும் தானிய, மரக்கறி மற்றும் பழவகைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். அவசர உணவுக்கலாசாரத்தினுள் சிக்குண்டிருக்கும் பலருக்கு அது சிரமமாகத்தான் இருக்குப்போகிறது.
உணவுப் பழக்கங்களை மாற்றவேண்டும். சத்தான உணவை அளவாக உண்ணும் நடைமுறைகளைக் கைக் கொள்ளவேண்டும். 2ம் உலக மகாயுத்த காலங்களில் பல நாடுகளிலே உணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. அதனால் மக்களின் உணவுப் பழக்கங்களில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டது.
எதற்குமே இயலாத கட்டமொன்று ஏற்படும்போது இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகி விடுமென்பது கண்கூடு.
நாம் மழைக்காலங்களிலோ அல்லது வேறு சில நெருக்கடியான காலங்களிலோ எதிர்காலத்துக்காக உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். அந்த வழக்கம் இன்று மலையேறிவிட்டது. மாறாக அன்றாடப் பிரச்சினையை மட்டுமே நோக்கும் புதுவித வழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறோம்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் களஞ்சியப்படுத்தி வைக்கவேண்டிய கடப்பாடு எமக்கு உருவாகிவிட்டது. அதற்கு மேலதிகமான பணம் செலவாகும் தான். ஆயினும் நெருக்கடிக் காலத்துக்காக களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்பதே மனநிம்மதியைத் தரும். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு சிறு தொகைப் பணத்தைத் தனியாக சேமித்து வரவேண்டும். இந்த நடைமுறைகள் தான் உணவு நெருக்கடி எம்மை முற்றாகப் பாதிக்காமல் இருக்க உதவப் போகின்றன என்பது மட்டுமே நிதர்சனம்.