Showing posts with label வன்னி. Show all posts
Showing posts with label வன்னி. Show all posts

Friday, July 31, 2020

காலம் மாறிப்போச்சு!

 (ஜூலை மாத ஜீவ நதி சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை: எனது இயற்கை வள முகாமைத்துவ முதுமானி ஆய்வின் முதலாவது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது)


“அது ஒரு காலம். உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமோ தெரியாது. இலங்கையிலே இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு சவர்க்காரம் கொண்டுசெல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வன்னியிலே ஒற்றைச் சவர்க்காரம் வாங்குவதற்காக எம்மில் பலர்  40 மைல் தூரம் சைக்கிளில் பயணித்திருக்கிறோம். ஒரு சவர்க்காரத்தின் விலை சிலவேளைகளில் எங்கள் நாட்கூலியின் அரைவாசியிலும் அதிகமாக இருக்கும்.  ஆதலால் ஆடைகளைத் துவைப்பதற்காக பெரும்பாலும் நாம் பனரங்காய்களை மட்டுமே நம்பியிருந்தோம். உலர்ந்த பனரங்காய்களை துணியிலே கட்டி நீரினுள் ஊறவைத்து சவர்க்காரம் போல் பாவித்திருக்கிறோம். சவர்க்காரத்தைப் போல அதுவும் நன்றாக நுரைக்கும். மெலிதாக நறு மணமும் வீசும். இப்போது அந்தக்காலம் எல்லாம் மாறிவிட்டது. வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட கட்டுப்படியாகும் விலையில் சவர்க்காரம் கிடைக்கிறது. அன்று தேடித்திரிந்து சேகரித்த பனரங்காய்கள் இன்று இடைஞ்சலாகி விட்டன. கீழே விழுந்து, காய்ந்து, முற்றம் முழுவதும் பரவிக் கிடக்கும் இக்காய்களைக் கூட்டி அள்ளுவதும் எரிப்பதும் ஒரு வேலையாகி விட்டது. இடைஞ்சல் எனக் கூறி பலர் இம்மரத்தை தறித்தே விட்டார்கள். ஆனாலும் அரிதாய் ஒரு சில மரங்கள் கிராமத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. தற்போதைய இளைஞர்களுக்கு இப்படியொரு மரம் இருப்பதோ, யுத்த காலத்து சவர்க்காரத் தடையை வெற்றி கொள்ள அது உதவிய விதமோ எதுவும் தெரியாது. அவற்றை அறிந்து கொள்ள எவரும் ஆர்வம் கூட காட்டுவதில்லை” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்  பொன்னம்பலம் தாத்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  கடந்த ஆண்டு கள ஆய்வொன்றிற்காக வன்னிப் பெரு நிலப்பரப்பிலே காடுகளை அண்டிய கிராமங்களுக்கு சென்றபோது நான்  உரையாடியவர்களின் வெளிப்பாடுகளுள் இப்படிப்பட்ட ஆதங்கங்கள் பற்பல.

“முன்பெல்லாம் பனை காய்க்கத் தொடங்கினால் குதூகலம் தான். நாங்கள் அரிவரி படிக்கும் காலங்களில் பனம் பழத்துக்காக பெருஞ்சண்டைகள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பள்ளி செல்லும் வீதியோரமெங்கும்  பனைமரங்கள் காய்த்துக் கிடக்கும். கீழே விழுந்த பழத்தை புழு வைக்க முதல் பொறுக்குவதற்காகவே ஓடி வருவோம். அந்தக் காலத்தில் பள்ளி மாணவர் மத்தியில் பனம்பழத்துக்கான போட்டி மிக அதிகம். பனம்பழங்களுக்காக பனை மரங்களை எல்லை பிரித்துக் கூட ஆட்சி செய்திருக்கிறோம். பனை விதைகளைச் சேகரித்தலும் பாத்தி போட்டு அவற்றை நாட்டுதலும் கிழங்குக்காகக் காத்திருப்பதும் கூட எங்கள் பால்ய காலப் பொழுதுபோக்குகளுள் ஒன்று. இப்போது என் சந்ததி அதனை என் கடமையாக மாற்றி விட்டது. எனக்கு எண்பத்து மூன்று வயதாகிறது. ஐந்து பிள்ளைகளும் எட்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். இப்போதும் நான் தான் பனங்கொட்டைகளைச் சேகரித்து, பாத்தி போட்டு , கிழங்கெடுத்து, அவித்து  என் பிள்ளைகளுக்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து உண்பார்கள். பாத்தி போடக் கூப்பிட்டால் நேரமில்லையாம் கேட்டியளோ! பேரப்பிள்ளைகளோ கிழங்கைத் தொடுகிறார்கள் கூட இல்லை. எனக்கோ முன்னர் போல இப்போது உடல் இடம் கொடுப்பதில்லை. ஆனால் மனம் மட்டும் சொல்வழி கேட்பதில்லை. இம்முறையும்  பாத்தி போடுவதற்காக பனங்கொட்டைகளைச் சேகரித்துத் தான் வைத்திருக்கிறேன். இதுவே கடைசியாக இருக்குமென நினைக்கிறேன்” என்றார் சிவசேகரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 


தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் சாதாரண மக்களின் போக்குவரத்து ஊடகமாக மாட்டு வண்டிலே காணப்பட்டது. “ஆரம்ப காலங்களில் குடும்பமாகப் பயணிப்பதற்கும் சரக்குகளையும்  பொருட்களையும் ஏற்றிச்செல்வதற்கும்  மாட்டு வண்டியிலேயே நாம் அதிகளவில் தங்கியிருந்தோம். வீட்டுக்கு வீடு மாடுகளும் வண்டிகளும் இருந்தன. வண்டியை சரிக்கட்டுவதென்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. மாட்டு வண்டில் எந்த மரத்தால் செய்யப்படுகிறது என்றால் எவரிடமும் பதிலிருக்காது. ஏனெனில் அதன் ஒவ்வொரு பாகங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை.  அவை ஒவ்வொன்றையும் தயாரிக்க ஒவ்வொரு இனமரப்பலகை வேண்டும். ஒவ்வொரு பகுதியும் தன் இயல்பில் சீராகப் பேணப்பட்டால் மாத்திரமே மாட்டு வண்டில் செவ்வனே இயங்கும். நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். மாட்டின் மூக்கணாங்கயிற்றுக்குக் கூட நாங்கள் பிளாஸ்டிக் கயிற்றைப் பாவித்ததில்லை. ஆத்தி நாரை அழுகவைத்துத் திரித்த கயிற்றைத்தான் பாவித்திருக்கிறோம். மாட்டு வண்டில் செய்வதற்கு இயந்திரவியல் பற்றிய அறிவு மட்டுமல்ல மரங்கள் பற்றிய அறிவும் மிக மிக அவசியம்” என்றார் ஒரு காலத்தில் வண்டில் சவாரி செய்த இராமலிங்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“ காலம் மாறிப்போச்சு பிள்ளை! மாட்டு வண்டில்களும் புழக்கத்தில் இல்லை. வண்டில் பாகங்களின் பெயர்களும் பலருக்குத் தெரியாது. வண்டில் தயாரிப்பதற்குப் பயன்பட்ட ஆத்தி, மஞ்ச நூனா, கடம்பு, நறுவிலி போன்ற மரங்களின் தேவைகளும் குறைந்து மறைந்தே போய்விட்டன. இப்படிப்பட்ட மரங்களின் பாவனை இல்லாமல் போக அவை ஒன்றுக்கும் பயனற்ற மரங்களாகவே தற்போது பார்க்கப்படுகின்றன.   பயனில்லை என்று சும்மா நிற்கும் மரத்தைக் கூடத் தறித்துவிடுகிறார்கள் . இதே நிலை தொடர்ந்தால், காலப்போக்கில் அம்மரங்கள் அழிந்தே போய்விடும்!” என்று வருத்தப்பட்டார் ஓய்வு பெற்ற அதிபர்  கனகசபை  (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“ சாதாரணமாக   நாம் சுகயீனமுற்றால், வீட்டிலுள்ள பாட்டி சொல்லும் கை மருந்தைத்தான் முதலில் உட்கொள்வோம். அப்படியும் குணமாகாவிட்டால் தான் ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்வோம். ஆனால் இப்போது  இருமல், சளி, காய்ச்சல் என்று சிறார்கள்  நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில்  நாம் கை மருந்தைப் பாவித்த பின் சென்றால் சில ஆங்கில மருத்துவர்கள் எம்மை சிகிச்சை நிலையத்திற்குள்ளே கூட எடுப்பதில்லை” என்றார் ஓர் இளம் தாய் சரண்யா பெயர் மாற்றப்பட்டுள்ளது).  “சிறுவயதிலே எனக்கு இருமல் இருந்தது.  குக்கல் என்று கூடக் கூறினார்கள். எனது பூட்டி புங்கங்காயை எடுத்து கறுத்தக் கயிற்றிலே கோர்த்து கழுத்திலே  நிரந்தரமாகக் கட்டி விட்டார். சில காலங்களில் இருமல் போன இடம் தெரியவில்லை” என்று பெருமையாகக்  கூறினார் பட்டம் பெற்ற எழுபது வயது மருத்துவர் ஒருவர். புங்கந்தாழ்வையும் புங்கங்குளத்தையும் தெரிந்த பலருக்குக் கூட  புங்கை மரத்தை அடையாளம் காட்டத்தெரியாது என்பது தான் இன்றைய யதார்த்தம்.






அதேபோல தேத்தாத் தீவை அறிந்த பலருக்கு தேத்தா (தேற்றா) மரத்தைத் தெரியாது. காடுகளுக்கு வேட்டையாடவும் வேறு தேவைகளுக்காகவும் செல்பவர்களின் குடி நீர்த் தேவையைப் போக்க இம்மரம் ஆற்றிய அரும்பங்கு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படாமலே மறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.  “முன்பெல்லாம் பூட்டுத் தடி வெட்டக் கூட நாங்கள் காட்டுக்குத் தான் போவோம். நாம் குடி தண்ணீர் எல்லாம் கொண்டு போவதில்லை. ஆங்காங்கே ஆறுகளிலும்  நீர் நிலைகளிலும் காணப்படும் நீரையே பருகுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் யானை போன்ற விலங்குகள்  நடமாடுவதால் அவற்றின் காலடி பட்டு நீர் கலங்கியே காணப்படும். எம்மிடம் எப்போதும் மண் சட்டி இருக்கும். தேற்றா விதைகளையும் சேகரித்து வைத்திருப்போம்.  மண்சட்டியிலே தேற்றா விதைகளைத் தேய்த்த பின்னர், நீர் நிலைகளிலிருக்கும் கலங்கிய நீரை ஏந்தினால் சில நிமிடங்களில் நீர் தெளிந்து குடிப்பதற்கு ஏதுவானதாக மாறிவிடும். இப்போது தடி வெட்டுவதற்காக காட்டுக்கும் போக முடியாது. அப்படிப்போனாலும் எல்லோரும் கையில் ஒரு பிளாஸ்டிக் போத்தலில் குடி நீரைக் கொண்டு செல்கிறார்கள்” என்றார் குமாரசுவாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“கிணற்று நீர் பாசி பிடித்தால் கூட தேற்றாக் கட்டையை வெட்டிப் போட்டு விடுவோம், தெளிந்து விடும். இப்போதெல்லாம் யார் தான் அப்படிச் செய்கிறார்கள்?. பருத்த தேற்றா மரங்களை ஊர் வெளியில் காணக்கூட முடிவதில்லை. பிரயோசனமற்ற மரம் என்று பலர் தறித்தே விட்டார்கள். தேற்றா மரம் மட்டுமல்ல. பெரிய விட்டமுள்ள மரங்களை எல்லாம் இப்போது ஊரில் காணக்கூட முடியாது” என்று  அவர் மேலும் ஆதங்கப்பட்டார்.  “தேற்றா விதைகளை மாவாக்கி கலங்கிய நீரினுள் இட்டால் தெளிந்துவிடுமென வேதங்களில் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்றார் உள்ளூர் பூசகர்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு, அதற்குத் தாமும் பங்களித்து இன்றும் நிலைத்து நிற்கும் சாட்சிகளுள் தாவரங்களுக்கு மிகப்பிரதானமான இடம் இருக்கிறது. மனித இனமும், அதன்  அடிப்படைத் தேவைகள், ஆரோக்கியம், கலாசாரம், பண்பாடு என யாவுமே தாவரங்களுடன் பின்னிப்பிணைந்து பரிணமித்தவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. என்ன தான் நவீனமும் நுகர்வுக் கலாசாரமும் எம் ஒவ்வொருவரது கதவினுள்ளும் நுழைந்து எட்டிப்பார்த்தாலும்,  இந்தத் தாவரங்கள் இல்லாமல் அவை எவையுமே இல்லை என்பது உலகம் உணராத உண்மை. இன்றும் கூட உலகெங்கிலும் பல மில்லியன் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக தாவரங்களையே அதிகளவில் நம்பியிருக்கின்றனர்.  அந்த வகையில் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழர் நாகரிகமும் தாவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் சமுதாயத்தின் வாழ்வியலிலே தாவரங்களை இழையோடச் செய்து நின்று நிலைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.  நான் சந்தித்த ஊரவர்கள் கூறியதும் அதனையே பிரதி பலிக்கிறது.

சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் போது அது இயற்கையுடன் இயைந்திருந்த தன்மையை மட்டும் பதிவு செய்யவில்லை. தாவரங்களின் பல்வகைமை, பயன்பாடு பற்றிய பல குறிப்புகளையும் கூட  அவை பதிவு செய்திருக்கின்றன. குறிப்பு என்பதற்கப்பால், சங்க கால வாழ்வியலில் தாவரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவனவாக அவ்விலக்கியங்கள் அமைந்திருந்தன.  சங்க இலக்கியம் கூறும் அகவாழ்வாகட்டும்.. புற வாழ்வாகட்டும்… எங்கேனும் தாவரங்களைக் குறிப்பிடாமல் அமைந்த பாக்கள் அரிது எனக்கூறலாம். வாழ்வின் செயல்களை விளிக்கப்பயன்பட்ட  கொடி ,விதை,முளை, மலர், காய்,  கனி போன்ற சொற்பதங்களின் பிரயோகம் தொட்டு சடங்குகள், கையுறைகள் என தாவரப்பகுதிகளின் பிரயோகம் விரிந்து சென்ற வண்ணமே காணப்படுகிறது. போரின் ஒவ்வொரு நிலைகளையும் உணர்த்த பலவித பூக்கள் பயன்படுத்தப்பட்டதாக  செய்யுள்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  போரிலே வெற்றி பெற்றுத் திரும்பும் போர் வீரர் வாகை மரத்தின் பூவைச் சூடி வருவதாகவும்   அப்பூவைத் தொலை தூரத்திலிருந்தும் கூட அடையாளப்படுத்தலாமெனவும் வன்னியின் கிராமங்களில் முதியவர்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். ‘வாகை சூடி’ என்ற சொற்றொடர் வெற்றியைக் குறிப்பிடப்பயன்படுவதில் எதுவித ஆச்சரியமுமில்லை.


தமிழர் வாழ்வியலின் ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இயற்கை வழிபாடாகட்டும், பின்னர் தொடர்ந்து வந்த  சமய வழிபாடாகட்டும்.. உருவகிக்கப்பட்டு வந்த தெய்வ வழிபாடுகளாகட்டும்.. யாவற்றிலுமே தாவரங்களுக்கு அதி முக்கிய வகிபாகம் காணப்படுவதை எம்மால் மறுக்க இயலாது. மரவழிபாட்டுடன் இணைந்து காணப்பட்ட காவல் மரங்களின் நிர்ணயமும் இதற்கு விதிவிலக்கல்லவே.

தாவரங்களின் வகிபாகம் வெறுமனே அத்துடன் நின்றுவிடவில்லை. தமிழரின் மருத்துவம் என அறியப்படும் சித்த மருத்துவமாகட்டும், உணவுப்பழக்கவழக்கங்களாகட்டும்..தொழில் சார் துறைகளாகட்டும், அன்றாடத்தேவைகளுக்குப் பயன்படும் உபகரணங்களாகட்டும், யாவுமே தாவரங்களில்லாமல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனலாம். தமிழர் வாழ்வியலும் தாவரங்களும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றமையை வார்த்தைகளால் விவரிக்க முற்படல் கடினம். தொகுக்கின் அவை எஞ்சி நிற்கும். விரிக்கின் பெருகி நிற்கும் என்பது தான் யதார்த்தம். தமிழரின் தாயகங்களுள் ஒன்றான வட இலங்கையிலும் கூட மக்களின் வாழ்வும் தாவரங்களும் பின்னிப்பிணைந்தே காணப்பட்டு வந்தன.


 இலங்கையின் இட அமைவும் தீவாக அமைந்து விட்ட தன்மையும் அதனை உயிர்ப்பல்வகைமைச் செறிவுமிக்க நிலமாக அறியப்படக் காரணமாகி விட்டன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையுடனொத்த சாயலையுடைய உயிர்ப்பல்வகைமையை இலங்கையிலும் உயிரியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இலங்கை தனித்தீவாக பரிணமித்தமையால் இலங்கைக்கேயுரித்தான, தனித்துவமான தாவர விலங்குகள் பல இங்கு காணப்படுகின்றன. தென்மேற்கு பகுதியின் உயிர்ப்பல்வகைமைச் செறிவு, அதன் தனித்துவமான தன்மை, அவ்வுயிர்ப்பல்வகைமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உலகிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டிய உயிர்ப்பல்வகைமைச் செறிவு மிக்க பகுதிகளுள் இலங்கையும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆதலினால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுள் பெரும்பாலானவை தென்பகுதியுடனே மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன.

 அதற்கு வழிசமைப்பது போல்,  இலங்கையின் வடக்கு , கிழக்குப் பகுதிகளில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தம் உயிர்ப்பல்வகைமை ஆய்வுகளுக்கான அணுகலைத் தடுத்திருந்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பல ஆய்வாளர்கள் இவ்வுண்மையை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுள் சிலர் இலங்கையின் வட எல்லையிலுள்ள காடுகளில் பல்தேவைக்குப்பயன்படுத்தப்படக் கூடிய மருத்துவ குணமுள்ள மரங்கள் பல  இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் கூட இம்மரங்கள் ‘அரிமரம்’ என்ற கண்கொண்டு மாத்திரமே பார்க்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையிலேயே பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதிகளின் பரப்பளவு உயர்வாக உள்ள மாகாணம் வட மாகாணமாகும். யுத்த காலத்திலும் இவ்வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவையென்பது பல போர் வரலாறுகளில் குறிப்பிடப்படாத விடயமாகும். வட இலங்கையின் காடுகள் வன்னிப்பகுதியிலே,  அதாவது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலே செறிந்து காணப்படுகின்றமையை வான் வரைபடங்கள் மூலம் எளிதில் அறியமுடியும். வன்னி மக்களின் வாழ்வியலும் இந்த மரங்களைச் சுற்றியே அமைந்திருந்தமையை கள ஆய்வுகளின்  போது மேற்கொள்ளப்பட்ட  குழுச்சந்திப்புகளின் மூலம் என்னால் அறிய முடிந்தது. ஆயினும், அவற்றை ஆய்வு செய்வதற்கு உசாத்துணை  நூல்களைத் தேடிய போது அறிவு வெளியிலே யுத்தம் நடைபெற்ற காலத்துக்கும் மேலானதோர் இடைவெளி காணப்படுவதை உணர முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலனித்துவ உயிரியலாளர்களாலும் நிர்வாகிகளாலும் எழுதப்பட்ட   நூல்களையும் பிற்காலத்தில் தென்னிலங்கையில் எழுதப்பட்ட மிகச் சொற்பளவிலான நூல்களையும் தவிர வேறு எந்தவோர் ஆவணத்துக்குமான அணுகல் எனக்குக்கிடைத்திருக்கவில்லை. இந்த இடைவெளியின் தாக்கத்தை கடந்த ஒரு தசாப்த காலத்தில் வெளியான பல ஆய்வறிக்கைகளில் காணலாம். உதாரணமாக, தாவரங்கள் பற்றிய பல ஆய்வறிக்கைகளில்  இலங்கையில் வழக்கிலிருக்கும் தமிழ் பொதுப் பெயர்கள் அரிதாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தகாலம் முற்றாகக் கடந்துவிட்டது. போருக்குப்பின்னரான மீள் குடியேற்றங்களும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திகளும் நடந்தேறிய வண்ணமேயுள்ளன. இந் நிலையில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் காடுகளும் மரங்களும் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளன. அபிவிருத்தியின் முன்னே காடுகள் உயர்வாக மதிக்கப்படும் நிலைமை காணப்படுவதில்லை. ஆனால், அக்காடுகளுள் பொதிந்திருக்கும் அரிய செல்வங்கள் தாம் எம் தமிழர் கலாசாரத்தின் அடி வேர் என்பதைக் காலப்போக்கில் நாம் மறந்துவிட்டோம் என்றே தான் கூற வேண்டும்,

பொதுவாக இலங்கையிலே “இடப்பெயர்களின் கருவூலம் இயற்கையே!” என கலாநிதி.இ.பாலசுந்தரம் குறிப்பிட்டிருக்கிறார். வடஇலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் வன்னிப்பகுதியை எடுத்து நோக்கினால், பெரும்பாலான கிராமங்களின் பெயர்களில் பகுதி  தாவரமொன்றின் பெயராகவும்  விகுதியானது நீர்ப்பரப்பின் வகையாகவும் (ஆறு, குளம், மோட்டை போன்றன) இணைந்து அமைந்திருக்கும். இந்தக் கிராமங்களின் பெயர்களைத் தொகுத்துப்பார்த்தாலே வன்னிப்பகுதியில் காணப்படும் தாவரங்களின், அதிலும் குறிப்பாக உயர் வகுப்பான மரங்களின் பல்வகைமை புரியும். ஆரம்ப காலங்களில் இத்தகைய ஒவ்வொரு மரங்களும் ஏதோவொரு வகையில் வன்னி மக்களின் வாழ்வுடன், கலாசாரத்துடன்  பின்னிப்பிணைந்த வண்ணம் தான் காணப்பட்டிருக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் மரங்களினால் பூர்த்தி செய்யப்பட்ட தேவைகள் பலவற்றை  நவீன நுகர்வுப் பொருட்கள் பதிலீடு செய்யத் தொடங்கியதால் அம்மரங்கள் பயனற்றவையாகிப் போயின. அரிமரத்துக்குரிய மரங்கள் மட்டும் இன்னமும் பெறுமதிமிக்கனவாய்ப் பார்க்கப்படுகின்றன.

 நான் மேற்கொண்ட கள ஆய்விலே இவற்றை நிரூபிக்கும் சில வருந்தத்தகு முடிவுகள் விஞ்ஞான பூர்வமாக உறுதியாயின. இந்த ஆய்வானது வன்னிப்பகுதியில் காணப்படும் மூன்று மீற்றரிலும் அதிகளவு உயரமாக வளரக்கூடிய மருத்துவ குணம் மிக்க நூற்றுறைம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் பற்றி கிராமத்து மக்களிடம் காணப்படும் பாரம்பரிய அறிவினை அடிப்படையாகக் கொண்டதாகும்.  அம்மரங்களுள் நூற்றுப்பதினேழு மரங்களைப் பற்றி அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள். அவற்றிலும் தொன்னூற்றெட்டு மரங்களைப் பற்றி மாத்திரமே அவர்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தார்கள். இம்மரங்களானவை அவற்றின் மருத்துவப் பயன்பாடு, வீட்டுத்தேவைக்கான பயன்பாடு, தற்போதும் பாவனையிலிருக்கும் தன்மை, பொருளாதார, சுற்றுச் சூழல், சமய, கலாசார முக்கியத்துவம், மற்றும் வரட்சி, வெள்ளம் யுத்தம் போன்ற கஷ்ட காலங்களின் போதான ஆதரவு ஆகிய விடயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.

ஆய்வு முடிவுகளின் படி, மரங்களின் மருத்துவத் தேவை மற்றும் வீட்டுத்தேவைகளுக்கான பாவனைகளும் கலாசார முக்கியத்துவமும் அற்றுப்போகும் போது அம்மரங்கள் மக்களுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. அதாவது, மரங்கள் வீட்டுப்பாவனைக்கோ அல்லது மருத்துவத் தேவைக்காகவோ அல்லது உபகரணங்கள், உணவு, சமயம், நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற கலாசாரத்தேவைகளுக்கோ பயன்படுத்தப்பட்டு வரும்போது மாத்திரமே  அவை தொடர்பிலான  அறிவு மக்கள் மத்தியில் காணப்படும் என்பதை ஆய்வு முடிவு எடுத்துரைத்தது. கள ஆய்வின் போது கிராம மக்கள் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் இவ்வாய்வு முடிவினை உறுதி செய்வதாயும்  அமைந்துவிட்டன.

ஏலவே குறிப்பிட்டது போல், பெரும்பாலான மரங்கள் காடுகளிலும் ஏனையவை வீதியோரங்களிலும் வீட்டுத்தோட்டங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் பொதுவாகக் காணப்படுபவையாகும். வன்னிப் பெரு நிலப்பரப்பிலே அபிவிருத்தியின் பெயரால் காடழிப்பு  நியாயப்படுத்தப்பட்ட வண்ணமே செல்கிறது. அபிவிருத்தி மேலும் தொடர, புதிய வீதிகள் உருவாக, காடழிப்பு மீண்டும் அதிகரிக்க என சுழற்சியாய் செயற்பாடுகள் நடந்த வண்ணமே உள்ளன. பல சந்தர்ப்பங்களில் இது தவிர்க்கமுடியாததோர் நிலமையாகக் காணப்பட்டாலும் அழிவடையும் தாவரங்களின் நிலையைக் கருத்தில் கொள்ளும் போது, எமக்கான கடப்பாடுகள் ஓங்கி நிற்கின்றன. அத்துடன் சீதனம், வீட்டுத்திட்டம், வர்த்தக நோக்கங்கள் காரணமாக காணிகள் துண்டாடப்படுவதும் கூட மரங்கள் தறிக்கப்பட்டு அழிந்து போகக் காரணமாகிவிடுகின்றன.

தாவரங்கள் தம் வாழ்விடத்தினை இழக்கும் போது அவை அழிந்து விடும் அபாயத்திற்குள் தள்ளப்படுகின்றன. அத்துடன் அவற்றுடன் இணைந்த பாரம்பரிய அறிவும் அதனுடன் இணைந்த கலாசாரமும் மொழியும் என யாவுமே மெல்ல மெல்ல அழிந்து விடும். அதே போல நவீனத்தின் பெயரால் பல தாவரங்களின் பாவனைகள் தேவையற்றுவிடுதலும் மனிதனை தாவரக் குருடனாக மாற்றி விடும். சில சிறு மரங்களைப் பற்றி விசாரித்தபோது, “முந்தி இந்தப்பக்கமெல்லாம் அவைதான் இருந்தன. இப்ப மருந்துக்கும் கூட அவற்றைக் காண இயலாது. காடு தள்ளும்போது எல்லாவற்றையும் சேர்த்தே தள்ளி விட்டார்கள்” என்று கிராமத்து மக்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். நோயாளிகள் விடுதி கட்டுவதற்காக ஒரு மரத்தைக் கூட மீதம் விடாமல் கனரக வாகனம் வைத்துத் தள்ளிய காணியையும்  அணை கட்டியதால் காணி இழந்தவர்களுக்கு புதிய காணி வழங்குவதற்காக தள்ளப்பட்ட பெரும் கருங்காலிக் காட்டையும் கூட நான்  தொழிலனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

வன்னியின் சுதேச மரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் மற்றொரு காரணிகளுள் ஒன்று தேர்ந்தெடுத்த மரங்களை மட்டும் அரிந்து செல்லலாகும். பனையும் பாலையும் முதிரையும் காட்டாமணக்கும் என மரக்குற்றிகள் வண்டி வண்டியாக வன்னியை விட்டுச் செல்வதைக் காணாதவர்கள் அரிது. பாலைப் பாணியையும்  வீரைப் பாணியையும் குரக்கன் உரொட்டியுடன் உண்டு வளர்ந்த சமூகம் அம்மரங்களை இன்று அரிமரக் கண் கொண்டு பார்க்கிறது என்பதை ஏற்க  சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது. இம்மரங்களின் வளர்ச்சி வீதம் மிகக்  குறைவு. எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவற்றை அரிமரத்துக்குப் பயன்படுத்துதலானது அவை அரிதாகி நிரந்தரமாகவே அழிந்து போகும் நிலையைக் கூட ஏற்படுத்தலாம். “முன்பெல்லாம் இங்கு முதிரை மரங்கள் இருந்தன. யாவற்றையும் வெட்டி ஏற்றியாயிற்று. இப்போ பனை மரங்கள் மாத்திரம் தான் எஞ்சியுள்ளன. அவற்றிலும் கண் வைத்து விட்டார்கள்.  இன்னும் சில நாட்களின் பின் உயரமும் விட்டமும் கூடிய பனை மரங்களை எல்லாம் எமது ஊரில் காண்பது அரிதாகி விடும்“ என்று வருத்தப்பட்டார் இயக்கச்சியைச் சேர்ந்த கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“ஊர்மனையில் கட்டிப்பிடிக்க இயலாதளவு விட்டமுள்ள பெரு மரங்களை இப்போதெல்லாம் காண முடியாது. அவை பலரது கண்களை உறுத்தியிருக்கின்றன போலும். விறகுக்காயினும் அவற்றை அரிந்து தறித்துச் சென்று விடுகிறார்கள். அத்தகைய மரங்களைத் தறிக்க க் கூடாது என்று சட்டம் இல்லை போலும்! பெருமழைக்கெல்லாம் நனையாமல் அம்மரங்களின் கீழ் நாம் ஒதுங்கியிருக்கிறோம். அந்தக் காலமெல்லாம் இனி வரப்போவதுமில்லை” என்பது  நாகேஸ்வரி என்ற பாட்டியின் ஆதங்கம்.

“கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டமொன்று வந்திருந்தது. கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான என்னை அழைத்த பொறுப்பதிகாரி, வீதியோரமாக நின்ற பெரிய விளாத்தி மரத்தை தறித்து அகற்றி விடுமாறும் அது அபிவிருத்திக்கு இடைஞ்சல் எனவும் பலமுறை என்னிடம் கூறிச் சென்றார். அம்மரத்தை அகற்றாமல் அபிவிருத்தி செய்யக்கூடிய எத்தனை தீர்வுகளை நான் முன் மொழிந்தும் பயனிருக்கவில்லை. இறுதியில், இன்று  நீங்கள் தறிக்காவிட்டால் நாளை நான் தொழிலாளரைக் கூட்டி வந்து தறிப்பேன் என  எச்சரித்து விட்டுச் சென்றார்.  நாம் சிறுவர்களாக விளாங்காய் அடித்து உண்ட  மரம். அதைத் தறிப்பதற்கு  மனம் உடன்படவில்லை. இரவோடு இரவாகச் சென்று மரத்தடியில் கல்லை வைத்தேன். பல கற்பூரங்களைக் கொழுத்தினேன். திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகிவற்றை இட்டேன். வீட்டுக்கு வந்து விட்டேன். காலையில் அதிகாரி தொழிலாளர்களுடன் சென்றார். எவருக்கும் அம்மரத்தைத் தறிக்குமளவுக்கு தைரியம் வரவில்லை. அவர்களது நம்பிக்கையை மீறி முடிவெடுக்கும் தைரியம் அதிகாரிக்கும் இருக்கவில்லை. மரத்துக்கு பங்கமில்லாமல் புதிய வீதியும்  போடப்பட்டது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் தளைய சிங்கம்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்படியும் மரங்களைக் காக்க முயற்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  மரங்களை அழியவிடாமல் காப்பது ஒருபுறம் இருக்க, அம்மரங்களைச் சார்ந்து காணப்படும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டிய தேவை இன்னொரு புறம் இருக்கிறது.

தாவரங்களும் அவை சார்ந்த பாரம்பரிய அறிவும் நாணயமொன்றின் இரு பக்கங்கள் போன்றவை. இலங்கையிலே தாவரங்கள் எத்தகைய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனவோ அதிலும்  அதிக அச்சுறுத்தலை அவை சார்ந்த பாரம்பரிய அறிவு எதிர் நோக்குகிறது. இவ்வறிவு தொடர்பில் சந்ததிகளுக்கிடையே சமத்துவம் காணப்படாமையை இவ்வாய்வின் மூலம் தெளிவாக அறிய முடிந்தது. இப்பாரம்பரிய அறிவானது 70 வயதை எட்டிய முதியவர்களிடமே பெரும்பாலும் குடிகொண்டிருப்பதால் அது மிக வேகமாக மறைந்து வருகிறது. நேற்று சந்திக்க எண்ணியவர்கள் சிலர் இன்று உயிரோடு இல்லை. ஆதலினால், அவர்களிடம் மட்டுமே குடிகொண்டிருக்கும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டிய அவசர தேவை தற்போது உருவாகியிருக்கிறது. அவ்வாறு ஆவணப்படுத்தும் போது அதனை எதிர்கால சந்ததிகளும் அறிய வழி ஏற்படுவதோடு அல்லாமல் பல புத்தாக்கங்களுக்கும் அது வழி வகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  அத்துடன் இலங்கைக்கே உரித்தான தாவரங்கள் சார்ந்த பாரம்பரிய அறிவும் இலங்கைக்கே உரித்தானதாகும். தத்தமது பாரம்பரிய அறிவுக்குச் சொந்தமான நாடுகள் பல பெரும்பாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவே காணப்படுகின்றன. அவை அதன் பெறுமதியை இன்னும் உணரவில்லை. . மாறாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் பல அவ்வறிவின் பெறுமதியை நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. வலுவான சட்டங்கள் காணப்படாத காரணங்களால் இலங்கையின்  பாரம்பரிய அறிவுடன் தொடர்புடைய காப்புரிமைகள் ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இதனால் ஒரு நாடாக இலங்கையும்  இங்கு பாரம்பரிய அறிவைக் கொண்டிருக்கும் சமூகங்களும் இழந்து வரும் நன்மைகள் சொல்லிலடங்கா. இவ்வாறு சமூகங்கள் தமக்கே உரித்தான மரபுப் பதார்த்தங்கள் மீதான காப்புரிமையை இழந்துவிடாமல் இருப்பதற்காக  உயிரியல் பல்வகைமை மாநாட்டின் செயலகத்தினால் ‘நாகோயா நெறிமுறை’ உருவாக்கப்பட்டது. ஆயினும் அதில் இலங்கை இன்னும் கைச்சாத்திடவில்லை. இந்த பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை ‘நாகோயா நெறிமுறை’ யில் கைச்சாத்திடும் போது அதன் நன்மைகளை எமது சமூகம்  அனுபவிக்க இயலும். இனிமேலும் தாமதித்தால்,  நாம் இழந்தவைகளின் வலிகளை விட இழந்துகொண்டிருப்பவைகளின் வலியும் பெறுமதியும் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பது கண்கூடு.


Thursday, July 30, 2020

மரங்களை அரிமரமாய்ப் பார்க்கும் கண்களெல்லாம் குருடாகிப் போக!

அது வன்னிப்பெரு நிலப்பரப்பின் நுழைவாயில். களம் பல கண்ட தேசம். ஒரு காலத்தில் அடர்வனமாய் இருந்தது. காலத்தின் கட்டாயம்.. அடர் வனத்திலிருந்த பெரு மரங்களெல்லாம் மனித நோக்கங்களின் முன்னே தோற்றுப்போயின. அவை தோற்றதன் விளைவாய் படித்த நடுத்தர வர்க்கத்துக்கான புதிய கிராமமொன்று தோற்றம் பெற்றது.  வீதிகளும் வீடுகளுமாய் குடியிருப்புகள் நிலை பெற்றன. ஆனாலும் அடர்வனத்தின் சாட்சிகளாய் வெட்ட வெட்டத் தழைத்து காய்த்துக் குலுங்கும் அத்தி மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தலைகளைக் காட்டும் பாலை மரங்களும்  கீச்சிட்டுத் திரியும் பலவினப் பறவைகளும் தம் பரம்பரையின் கதைகள் சொல்ல எமக்காய் இன்னும் காத்திருக்கின்றன.  அக்கிராமத்துக்குச் செல்லும் எவராலும் இதை இலகுவில் காண முடியும். 

அன்றொரு நாள் காலை 9 மணியிருக்கும். புல் வெட்டும் இயந்திரத்தின் சத்தம் விட்டு விட்டு விட்டுக் கேட்டபடியே இருந்தது. வீட்டிலிருந்த எல்லோரும் ஏதோ அயலில் புல் வெட்டப்படுவதாக தமக்குள் கதைத்துக் கொண்டார்கள். பின்வாசலால் எட்டிப் பார்த்தேன்.  எதிர் வளவிலே கம்பீரமாய் நின்றது அந்த ஒற்றைப் பாலை மரம்.   திடீரெனெ மைனாக்களும் கிளிகளும் கிளிகளும் ஆர்ப்பரித்தன. அந்தரப்பட்டன. அங்குமிங்குமாய்ப் பறந்தன. பாதி தறித்த பாலைமரக்கிளை முறிந்து கீழே விழுந்தது.  அல்லோலகல்லோலப்படும் குருவிகளைப் பார்த்தபோது  வீட்டை விட்டுத் திடீரெனக் கிளம்பி வந்து மீண்டும் வீடு செல்ல முடியாது  என உணரும் போதெல்லாம்  மனதில் ஏற்பட்ட வலியும்  பின்னர்  கையில் திறப்புடன் மீண்டபோது அத்திவாரமாய்க் கிடந்த வீட்டைப் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வும் அடிக்கடி எட்டிப் பார்த்துச் சென்றன.  சங்கிலி அரிவாளின் சத்தம் அதன் அருகில் தான் கேட்டது. 

ஒருவரால் கட்டிப் பிடிக்க இயலாத  மார்பளவு விட்டம் கொண்ட நேர்த்தியான அந்த மரத்தில், உயரத்திலிருந்து  மஞ்சள் சரக்கொன்றைப் பூக்கள்  தொங்கிக் கொண்டிருந்தன.  பாலையை அண்டி சரக்கொன்றை வளர்ந்திருக்கிறது போலும். மரத்தின் கிளைகளில் வடக்கயிறு கட்டப்பட்டிருந்தது. கீழே சங்கிலி அரிவாள் எனப்படும் சாதனம் தன் கடமையைச் செவ்வனே செய்ய பகீரதப்பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது.  என் பரம்பரையின் கதை சொல்ல நானாவது எஞ்சியிருக்கிறேனே என்ற அடங்கா மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற அந்தப் பாலை மரம்  தன் நிலைப்பையும் இருப்பையும் உறுதி செய்வதற்காய் சங்கிலி அரிவாளுடன்  போராடிக்கொண்டிருந்தது.  நேரமும் கடந்தது. 

அந்த இரண்டு பரப்புக் காணிக்குள் இருந்த ஒற்றை மரமது. அக்காணிக்குள் புதிதாய்க் கட்டப்பட்டு வரும் வீட்டுக்கோ அயலுக்கோ அம்மரம் இடையூறாய் இருப்பதாகவும் தெரியவில்லை. கூடி நின்ற  நபர்களைப் பார்த்தால், உரிமையாளர் மரத்தைத் தீர்த்திருப்பாரோ என்றே எண்ணத் தோன்றியது.  ஏறத்தாழ 6 மணி நேரப் பெரு முயற்சியின் பின்னர் தோற்ற பல மரங்களைப் போல் அந்தப் பாலை மரமும் தோற்றுப்போனது. மைனாக்களும் குருவிகளும் சலசலத்துக் களைத்து ஓய்ந்து போயின. 

உணவு வலையின் ஆரம்பப் படி நிலையின் அங்கங்கள் சில சமாதியாக்கப்பட்டிருந்தன.  அழிக்கப்பட்ட காட்டில் இருந்திருக்கக் கூடிய மரங்களையும் அவற்றையே புகலிடமாகக் கொண்டிருந்த உயிரினங்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.  இன்னும் தம் எதிர்த்தெறியும் திறன் காரணமாக மீண்டெழுந்து காய்த்து நிற்கும் பெருமரக்கன்றுகளையும் அப்ப்ழங்களை நாடி வரும் சின்னஞ்சிறு வண்ணக்குருவிகளையும் கூட எண்ணிப்பார்க்கிறேன். இயற்கையும் அதன் தன்னலமற்ற தன்மையும்  மனிதனுக்கு அப்பாற்பட்டடு எல்லாவற்றையும் இயக்கும் அந்த சக்தியையும் என்னால் வியக்கத் தான் முடிகிறது. 

சுய நலமிக்க என் சக மனிதனின் மனப்பாங்கை எண்ணித் தலை குணிகிறேன். மீண்டும் என் எண்ண அலைகள் அவன் சார்ந்து விரிந்து செல்கின்றன.  அத்துணை நேர்த்தியான பருத்த மரம். எதற்காகத் தறிக்கிறான்?  அவனது கண்ணுக்கு அரி மரம் மட்டும் தானே தெரிந்திருக்கும். எனக்கு நானே பல வினாக்களைத் தொடுத்து விடைகளைத் தேடத் தொடங்குகிறேன். அந்த மரத்தை நம்பி வாழும் உயிர்களும்  மானிடக் கண்களுக்குத் தெரியாமல் அந்த மரம்  வழங்கும் இன்னோரன்ன சேவைகளும் தறிக்க நினைத்தவனுக்கோ தறிப்பவனுக்கோ  தெரிந்திருக்காது தானே?   எப்படி அனுமதி எடுத்திருப்பான்? தான் வளர்த்த மரம் என்றிருப்பானா? அந்த மரத்துக்கு தனது பாட்டன், முப்பாட்டனை எல்லாம் பார்த்திருக்கக் கூடிய வயதிருக்கும் என எண்ணித்தான் இருப்பானா? தனது காணிக்குள் நிற்கும் மரம் என்றிருப்பானா? அது வீட்டிற்கு இடைஞ்சல் என்றிருப்பானா? அம்மரத்தில் பொந்து வைத்து விட்டதால் மழைக் காலத்தில் முறிந்து விழுந்து விடும்  அல்லது வேரெல்லாம் உக்கி விட்டது என்று நொண்டிச் சாட்டுகள் சொல்லியிருப்பானா? தறிக்கும் மரத்துக்கு பதிலாக ஏதேனும் மரக்கன்றுகளை நாட்டித்தான் இருப்பானா?  அனுமதி வழங்கியவர்கள் அப்படியேதெனும் சிபாரிசு தான்  செய்திருப்பார்களா?  இவையாவும் இன்றும் விடைகாணா வினாக்களாக  மனதில் வந்து மோதிச் செல்கின்றன. 

எங்கள்  நிலமும் வீடும் சந்ததியும் சிதைக்கப்பட்டால் தான் கொடுமையா? அந்த மைனாக்களும் கிளிகளும் என்ன பாவம் செய்தன? இழப்பின் வலிகளை உணர்ந்த நாமே இந்தக் கொடூரங்களின் மூலகர்த்தாக்களாக மாறலாமா?  நாம் விதைக்கும் வினைகளை நாமும் எமது சந்ததியும் அறுக்கும் காலம் வந்தால் கூட நாமெல்லாம் திருந்தப் போவதோ இல்லை என்பது மட்டும் கண்கூடு. நாம் செய்த பாவங்களுக்கு  இன்றே பிராயச்சித்தம் தேடாவிட்டால்  வரண்ட பாலைவனங்களை மட்டும் தான் எமது சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம்  என்பது திண்ணம். 

அந்தரித்த குருவிகளின் அழுகுரல் மாத்திரம் இன்னும் என் காதுகளில் எதிரொலித்தபடி என் மீளக்குடியமர்வு நினைவுகளையும் மீட்க வைத்தன.  அது 2010 ஆம் ஆண்டு. ஒவ்வொரு வார இறுதி நாட்களும் பரவிப்பாஞ்சானிலேயே கழிந்தன. எத்தனை துன்பங்களைச் சந்தித்தும் தம் கூரைகளை மட்டுமே தொலைத்து நிமிர்ந்து நின்ற வீட்டுச் சுவர்களைப் பார்த்துப் பெருமிதம் கொண்டிருக்கிறேன். சில வாரங்கள் கடந்தன. மீண்டும் வார இறுதியின்று வந்தது. நிமிர்ந்து  நின்ற சுவர்களையும் காணவில்லை. அயலவர் எவருக்கும் தெரியவில்லை. அதிகாரம் இருந்தால் கட்டிய வீட்டை இடித்துக் கற்களை ஏற்றி புதிதாகக் கட்டும் வீட்டுக்கு அத்திவாரம் போடலாம் எனப் பின்னர் தான் அறிந்து கொண்டேன். அதிகாரம் எம் வீட்டு சுவர்களை மாத்திரம் விட்டு வைக்கவில்லை. 

உயர்ந்து வளர்ந்திருந்த பயன் தரு மரங்கள் பல அரி மரத்துக்காய் காணாமல் ஆக்கப்பட்டன.  சிலவேளைகளில் காலையில் செல்லும் போது மரம் தறித்து விழுத்தப்பட்டிருக்கும். மாலையில் சென்றால் காணியில் மரம் இருக்காது.  அக்காலத்தில் அதிகாரத்தரப்புக்கு மட்டுமே அது சாத்தியமானதாக இருக்கும்.  காவல் துறையில் முறைப்பாடு கூட மேற்கொள்ள முடியாது.  எமது கொடுப்பினைகளை எண்ணி நாமே  நொந்து கொண்டது மட்டும் தான்  நடந்தது. 

எம்மில் பலருக்கு மரங்களை உயிர்களாகப் பார்க்கத்தெரிவதில்லை.  நாம் சுவாசிக்கும் ஒட்சிசன் தொட்டு நாம் குடிக்கும் சுத்தமான குடி நீர் வரை எம் வாழ்வு இவ்வுலகில் நிலைப்பதற்கு ஆதாரமான யாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் மரங்களின் வகிபாகம் புரிவதில்லை. மரங்கள் வழங்கும் சேவைகளின் பெறுமதி விலைமதிப்பிட முடியாது என்பதை நாங்கள் அறிய எத்தனிப்பதில்லை.  அத்தகைய சில சேவைகளை மனித முயற்சியால் பிரதியீடு செய்யக் கூட முடியாது என்பதையும் நாம் அறிய வாய்ப்பில்லை. மரங்களைப் பணம் ஈட்டும் மூலமாக மட்டுமே பார்க்கும்  மனிதப்பேய்கள் ஒழியும் வரை உயிரினங்களின் அலறலும் எதிரொலித்தபடியேதான் இருக்கும் என்பது திண்ணம். 

Sunday, June 7, 2020

இது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்?




அது 2001 ஆம் ஆண்டு. க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள் வெளி வந்து நாமெல்லாம் உயர்தரப்பிரிவில் அடியெடுத்து வைத்த காலம். தலை நகரில் உள்ள பெண்களுக்கான ஒரேயொரு தமிழ் மொழி மூல, பகுதி அரச பாடசாலை அது. பாடசாலையின் தவணைக்கட்டணம் அப்போது 1000.00 ரூபாவாகியிருந்தது. அதைவிட மேலதிகமாக வெவ்வேறுகட்டணங்களும் இருக்கும். 1996 இடப்பெயர்வும் நாம் இழந்தவையும் எம்மை எப்போதும் ஒரு அழுத்தத்துக்குள்ளேயே வைத்திருந்தன. அம்மா அரச உத்தியோகம் பார்த்தாலும், பாடசாலைக்கட்டணம் கூட சில வேளைகளில் பெரும் சவாலாகத் தான் இருந்திருக்கிறது. 

முதல் வாரத்திலேயே தனியொருவரைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் என எம்மில் சிலரை வகுப்பாசிரியரே அடையாளப்படுத்தியிருந்தார். தனியாக வந்து சந்திக்கச் சொன்னார். விபரங்களைக் கேட்டறிந்தார். முதலாம் தவணையிலிருந்து இறுதித் தவணை வரை நாம் பாடசாலையில் எதுவித கட்டணங்களும் செலுத்தவில்லை. எல்லாக் கட்டணத் தொகையும் கழிக்கப்பட்டு ஒவ்வொரு தவணையும் மீதமாக அறு நூற்றுச் சொச்சம் எமக்கு கைகளில் கிடைக்கும். பழைய மாணவிகள் சங்கத்தின் புலமைப்பரிசிலின் பயனாளிகள் நாங்கள்.  அதை வழங்குவதற்காக எமக்கு பழைய மாணவிகள் சங்கம் எந்தவொரு  நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை. " நல்லாய்ப் படிக்க வேணும்!". ஆசிரியர் சொன்னது அது மட்டும் தான். அதுவும் அந்த ஒரு தடவை மட்டும் தான்.  கடைசித் தவணைகளிலெல்லாம் என் புள்ளிகள்  50 ஐத் தாண்டியதில்லை. ஆனால் , வகுப்பாசிரியர் கடிந்தது கூட இல்லை. 


இன்றும் எனது உயர்தரக் கல்விக் காலத்தை மீட்டுப்பார்க்கிறேன். நாங்களெல்லாம் சராசரி மாணவர்கள் தான். எதற்காக எங்களைத் தேர்வு செய்து அந்தப் புலமைப் பரிசிலை வழங்கவேண்டும்?. வகுப்பில் முதலாவதாக வரும் மாணவியொருவருக்கு வழங்கியிருந்தால் சில நேரங்களில் அவரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கச் செய்திருக்கலாம் தானே? அங்கு அந்த புலமைப்பரிசிலின் நோக்கம் கல்விக்கான அணுகல் தொடர்பில் எல்லாருக்கும் சம வாய்ப்பினை வழங்க வேண்டும்; வகுப்பில் காணப்படும் ஏற்றத் தாழ்விடைவெளி குறைய வேண்டுமென்பதாகத் தான் இருந்ததே தவிர ஏற்கெனவே அணுகல் காணப்படுபவர்களுக்கு மேலும் சிறப்பான அணுகலை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஒருவேளை, பழைய மாணவிகள் சங்கம் அப்படி நினைத்திருந்தால், இன்று நாம் வகிக்கும் இடங்களைச் சில வேளைகளில் எம்மால் அடைய முடியாமல் கூடப் போயிருக்கலாம். 

அந்த நிலை மாறி, இன்று நாமெல்லாம், சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்  நிலைகளை எட்டியிருக்கிறோம். எமக்கு முந்திய சந்ததியினர் தீர்மானங்களை எடுப்பதற்காய்த் துணை புரிகிறோம். ஆனாலும் கூட, 'கல்வியில் சமத்துவம் தேவை' என்பதை எம்மால் அங்கீகரிக்க க் கூட முடியவில்லை.  மின் கல்வி என்கிறோம். 63% அணுகல் இருக்கிறது என்கிறோம். மீதி  37% க்கும் தொலைக்காட்சி, வானொலி மூல அணுகல் இருக்கிறது என் கிறோம். முக நூலில் தரவேற்றினால் 95% அணுகல் கிடைக்கும் என்கிறோம். அந்த 95% அணுகலுக்குரியவர்கள் யார் என்பது பற்றிய தரவுகள் எம்மிடம் இல்லை. வறுமையே இல்லை என்கிறோம். மின் கல்விக்கான அணுகலை வறுமை தடுக்கவில்லை என்கிறோம். பிரச்சினை எல்லாம் இணைய இணைப்பின் செறிவிலும் புலப்பரப்பிலுமே இருக்கிறது என்கிறோம். பாடசாலை ஆரம்பித்ததும் மின் கற்பித்தல் மூலம் நடைபெற்றவை அனைத்தும் மீளக் கற்பிக்கப் படும் என்கிறோம். கோவிட் 19 போன பின், மின் கல்வியும் ஆறிய கஞ்சியாகி விடும் என்கிறோம். எம்மை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. இலக்கேயில்லாமல் பயணிக்கிறோமா என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.  பெற்றோரை இழந்த பிள்ளைகளை எல்லாம் விதிவிலக்குகள் என எப்படி எம்மால் இலகுவாகக் கூறிவிட முடிகிறது? அவர்களை மற்றவருக்குச் சமமாக நடாத்த வேண்டியது சமூகம் சார்ந்து எமக்கிருக்கும் பொறுப்பு என ஏன் எம்மால் எண்ணக்கூட முடியவில்லை?

வைத்தியசாலையில், நோயாளியைப் பரிகரிக்கும் போது பாரபட்சம் நடந்தால் கொதித்தெழுகிறோம். 67% நோயாளிகளைப் பரிகரித்து விட்டு மீதமானோரைப் பரிகரிக்க முடியாது என்று கூறினால், அமைதியாய்ச் சென்று விடுவோமா என்ன? கேட்டால் , அது மனித உயிர் சார்ந்தது. சமத்துவம் தேவை  என்று விளக்கமும் வைப்போம்.  ஆனால், கல்வியில் சமத்துவம் என்பது ஒரு சந்ததியின் இருப்பையே தீர்மானிக்கும் என்பதை எம்மால் உணரக் கூட முடிவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

ஆட்சி (GOVERNANCE) சார்ந்து பயணிக்க வேண்டியவர்களுள்  நானும் ஒருத்தி என்ற வகையில், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளும் அவற்றை அடைவதற்காக எம்முன் குவிந்திருக்கும் கடப்பாடுகளும் அடிக்கடி மனக்கண்ணில் வந்து செல்கின்றன.  சமத்துவமும் (EQUITY) ஒருவரையும் பின்னிற்க விடக்கூடாது (LEAVING NO ONE BEHIND) என்ற அடிப்படையும் மனவெளியில் அடிக்கடி எட்டிப்பார்க்கின்றன. 37 சதவீதத்துக்கு தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படுமாயின் மின் கல்வி க் கான அணுகல் காணப்படும் 67% க்கும் அதே தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படத்தானே வேண்டும். அப்படியாயின், ஏன் நாம் தொலைக்காட்சி வழிக் கல்வியில் மட்டும் கவனம்
செலுத்த எண்ணவில்லை? 67 சதவீதமானோர் மின் வழியில் கற்றாலே போதும் என எண்ணுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இப்படி என்னுள்ளே எழும் பல கேள்விகள் விடை காண முடியாமல் தவிக்கின்றன. 

கோவிட் 19 இன் பெயரால் கல்விக்கான அணுகல் தடுக்கப்பட்டமை ஒரு சில மாதங்கள் மட்டுமே. இந்தக் காலத்தை ஏன் நாம் மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கப் பயன்படுத்தக் கூடாது. சூழலை அவதானிப்பதற்காக இயற்கை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கிய காலமாக ஏன் பார்க்க க் கூடாது? ஆசிரியர்கள் இணைந்து ஓரிரு பாடங்களை இணைத்து ஏன் மாணவர்களுக்கு செயற்பாடுகளை வழங்க க் கூடாது? தமக்குக் கிடைக்க க் கூடிய வளங்களைக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் ஆக்கங்களை உருவாக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களாக இதை ஏன் பாவித்திருக்க க் கூடாது?  அப்படிச் செய்திருந்தால், மாணவர்களிடம் காணப்படும் எத்தனை விசேட திறமைகள் வெளிப்பட்டிருக்கும். அவர்களது ஆக்கங்களை எல்லாம் நிலமை சுமுகமான பின்னர் காட்சிப் படுத்தியிருந்தால்...புத்தகமாக வெளியிட்டிருந்தால்... எத்தனை ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டிருக்கும்? அறிவுப்பகிர்வுகளுக்காக எவ்வளவு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்?

உலகின் தொழில் நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இயற்கையை அவதானித்தமையால் உருவானவையே தவிர, வெறும் ஏட்டுக்கல்வியால் உருவானவையல்ல. ஏட்டுச் சுரைக்காய் பல வேளைகளில் கறிக்கு உதவுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாம் பரீட்சைகளில் பெற்ற புள்ளிகளை எவரும் நோக்குவதில்லை. சித்தியெய்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பரீட்சித்திருக்கிறார்கள். இதை நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், புறக்கிருத்திய நடவடிக்கைகளால் கிடைக்கும் திறன்களும் அனுபவங்களும்  தான் எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளத் துணை நிற்கும் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். மாணவர்கள் மீது ஏட்டுக்கல்வியை மேலும் மேலும் திணித்து, கோவிட் 19 இன் பின்னரான காலப்பகுதியில் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்காமல்,  கோவிட் 19 இன் பின்னரான காலத்தை எதிர்கொள்ள அவர்களை நாம்  தயார்படுத்த வேண்டும். 

தரம் 5 புலமைப்பரிசில், கட்டாயமானதல்ல என அரசே அறிவித்த பின்னரும் கூட,  பத்தே வயதான மாணவர்கள் பெரும் அழுத்தங்களின் மத்தியில் மின் வழிக் கல்வியில் இணைந்திருக்கிறார்கள். உண்மையிலேயே புலமைப்பரிசில் தேவைப்படுபவர்களுக்கு அந்த மின்வழிக்கல்விக்கான அணுகல் இருக்கிறதா என ஆராய்ந்தால் எம் எவரிடமும் தரவுகள் இல்லை. பல இடைவெளிகளை வெறும் இலக்கங்களால் நிரப்பிவிடத்தான் நாம் துடிக்கிறோம். பொது வெளியில் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. தரவுகள் சார்ந்து விஞ்ஞான பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கான வல்லமை இன்னும் எம்மிடம் உருவாகவில்லை. அதற்கான தரவுகளும் எம்மிடத்திலில்லை.  அன்றிலிருந்து இன்றுவரை மொத்த ஆசிரியர் தொகையை மொத்த மாணவர் தொகையால் பிரித்தே விளக்கம் சொல்லிப் பழகிவிட்டோம். ஆதலினால் எமக்கு ஏற்றத்தாழ்வுகளை உணர முடிவதில்லையோ என்னவோ?

A9  வீதியால் பயணித்தபடி, "வன்னி எப்படி அபிவிருத்தியடைந்து விட்டது தெரியுமோ?" என தொலைபேசியில் விளக்கம் சொல்பவர்கள் தான் நாங்கள். 
அவ்வீதியிலிருந்து சில மீற்றர்கள் உள்ளே சென்றாலே எமக்கு உண்மை நிலவரம் புரிந்துவிடும். ஆனால், பொதுவாக நாம் அப்படிச் செய்வதில்லை. அகன்று விரிந்த வன்னியின் நிலப்பரப்பின் அந்தங்களிலுள்ள பாடசாலைகளும் மீளக் குடியமர்ந்த, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் வாழ்வியலும் எமக்கு எப்போதும் புரிவதில்லை என்பதால் பிராந்தியம் சார்ந்த எமது நிர்வாக முடிவுகளில் அவை தாக்கம் செலுத்துவதில்லை.  எங்கள் முடிவுகள் எப்படி மெறுபேற்றை நோக்கிச் செல்லும்? எங்களாலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்க முடியாவிட்டால், யார் தான் அங்கீகரிக்கப் போகிறார்கள்? யாரிடம் நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்?


மீண்டும் மீண்டும் என் நினைவுகளை மீட்கிறேன். சைவ மங்கையர் வித்தியாலயமும் அதன் தூர நோக்கும் எட்ட முடியா உயரத்தில் நின்று புன்னகைக்கின்றன. 

Monday, January 7, 2019

சாணேற முழம் சறுக்கியதோ?


அண்மையில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட சுட்டி ஒன்று தொடர்பில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. அச்சுட்டி வேறெதுவுமல்ல. ‘ஜேர்மன் வொச்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான  நீண்டகால கால நிலை அபாயச்சுட்டியேயாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 20 வருட காலப்பகுதியில் வெள்ளம், வரட்சி, புயல் போன்ற வானிலை சார் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பின் அடிப்படையில் இச்சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கால நிலை உச்சி மா நாட்டிலே வெளியிடப்பட்ட உலகளாவிய கால நிலை அபாயச்சுட்டி 2019 என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இச்சுட்டி தொடர்பில் நான்காம் இட த்தை வகித்த இலங்கை 2019 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது ஒரு முன்னேற்றத்துக்கான அறிகுறியன்று. இலங்கையின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துச் செல்வதற்கான அபாய அறிகுறியேயாகும். கால நிலைக்கும்.

அதிகூடிய வெப்பமும் எதிர்பாரா மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் என இலங்கை தொடர்ந்து பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந் நிலைமை தவிர்க்கமுடியாததாகி விட்டமையையும் உணர முடிகிறது.

கால நிலை மாற்றத்தை மனிதன் கையாளத்தவறும் ஒவ்வொரு கணமும் குறிப்பாக சிறுதீவுகளாக க் காணப்படும் நாடுகளின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்த வண்ணமே செல்கிறது.  உலகளாவிய சராசரி வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க இந்த மோசமான நிலைமைகள் உருவாகும் நிகழ்தகவும் அதிகரித்துச் செல்வதாக எதிர்வு கூறப்படுகிறது. ஆயினும் சில வானிலை நிகழ்வுகளுக்கும் கால நிலை மாற்றத்துக்குமான தொடர்புகளை இன்னும் விஞ் ஞான ரீதியாக உறுதி செய்ய முடியவில்லை. புவிக்கோளத்தின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க சில வானிலை நிகழ்வுகளின் மீடிறனும் செறிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் செல்கின்றமையை மட்டும் விஞ்ஞானத்தால்அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமன்றி ஒரு தனிப்பட்ட வானிலை நிகழ்விலே கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்டறிதலானது மிகவும் சிக்கலானதாகும். வேறுபட்ட பிராந்தியங்களில் நிலைமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவை தொடர்பான நீண்டகாலத்தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக க் காணப்படுகின்றன. கடந்த சிலகாலமாக  திடீரெனெ நிகழும் அதி தீவிர வானிலை  நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதும் உண்மையே. 

கால நிலை மாதிரிகளை உருவாக்கிப் பரீட்சித்து இத்தகைய அதீதமான வானிலை நிகழ்வுகளை எதிர்வு கூறுவதும் அவை   இடம்பெற்ற பின்னர் அவற்றுடன் ஒப்பிட்டு கால நிலை மாதிரிகளை மேலும் செம்மைப்படுத்துவதும் உலகளாவிய ரீதியிலே நடைபெற்ற வண்ணம் உள்ளன.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வானிலை அறிக்கைகள், அவற்றின் விவரணம் கூட இத்தகைய கால நிலை மாதிரிகள் எதிர்வு கூறுபவற்றை அடிப்படையாக க் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.  இத்தகைய கால நிலை மாதிரிகள் மூலம் புவி வெப்பமயமாதலினால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் வெப்ப நிலை நீர்ச் சக்கரத்தை மேலும் செறிவுற்றதாக மாற்ற வல்லது. ஆதலினால் அதிகளவிலான ஆவியாதல் நடை பெற்று அதீத வரட்சியும் அவ்வாவியாதலுக்கேற்ற அதீத வீழ்படிவினால் பெரு வெள்ளங்களும் ஏற்படுகின்றமை சகஜமாகி விட்டது.வளி மண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படுவதையும் பல சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.  இலங்கையில் நாம் அதிகளவில் கேள்விப்படும் சொற்களாக மாறிவிட்ட வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் இக்கணத்தில் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இவை யாவுமே வானிலை நிகழ்வுகள் நடை பெறும் நிகழ்தகவுகளை தினம் தினம் மாற்றிய வண்ணமே செல்கின்றன . 2016 ஆம் ஆண்டு  நிகழ்ந்த அதீத வானிலை நிகழ்வுகளை கால நிலை மாற்றத்தின் பார்வையில் அவதானித்து புதிய அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றம் என்பது மனிதனது செயற்பாடுகளின் விளைவே என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆக இந்த அதீத வானிலை நிகழ்வுகளுக்கும் மனிதனே காரணியாகிறான்.  அதீத வானிலை நிகழ்வுகளின் உருவாக்கம் கால நிலை மாற்றமன்றி சாத்தியமற்றது என்கிறது அவ்வறிக்கை.

உலகளாவிய கால நிலை அபாயச் சுட்டி அறிக்கை 2019 இன் அடிப்படையில், அதீத மழை வீழ்ச்சியென்பது தவிர்க்க முடியாததோர் நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாகிறது. தென்னாசிய, தென் கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட வானிலைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அதீத மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளம், சரிவும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. இங் ஙனம் தனித்தனி அதீத மழை வீழ்ச்சியின் நிகழ்வு தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படும் எனத் தெளிவாக எதிர்வு கூறப்படுகிறது.

ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் பெருக்கெடுக்கின்றமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்படும் பல பில்லியன் டொலர் சொத்தழிவும் வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.   

எத்தகைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கால நிலை மாற்றம் இத்தகைய அதீத வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது என்பதை அறியமுடியாதளவு இந் நிலைமை கற்பதற்குச் சிக்கலானது.

கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகி வரும் வன்னி நிலப்பரப்பும் இத்தகையதோர் தோற்றப்பாட்டுக்கான உதாரணமாகும். திடீர் பேரனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமையில் பல காரணிகள் தாக்கம்  செலுத்துகின்றன. போதுமான தயார்படுத்தலின்மை தொட்டு வறுமை போன்ற பாதிக்கப்படும் தன்மை, கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகள் என அக்காரணிகள் இரு வெவ்வேறு அந்தங்கள் வரை வேறுபடுகின்றன. இயற்கையும் இரங்காத நிலையில் சாணேற முழம் சறுக்கிய கதையாக வன்னி மண் தொடர்ந்து அழிவுகளைப் பார்த்த வண்ணமே உள்ளது. 

தொடர்ந்து பெய்த செறிவான மழையாலும் வான் பாய்ந்த குளங்களாலும் கதிர் வந்த பருவத்தில் காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமான வயற்கானிகளை மூடி வெள்ளம் பாய்ந்தது. தொடர்மழைக்கு முன்னரே வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்தமையால் உருவாகிய நோய்களுக்கும் பீடைகளுக்குமாக 3 சதவீத மாதாந்த வட்டிக்கு கிருமி நாசினிகளைக் கொள்வனவு செய்து பிரயோகித்த விவசாயிகளையும் காண முடிந்தது. வட பகுதியிலே அதிகளவில் காணப்படுகின்றன என விமர்சிக்கப்பட்ட குறு நிதி நிறுவனங்களையும் தாண்டி இக்கிருமி நாசினி வியாபாரங்களும் கடன் விற்பனை மூலம் விவசாயிகளைச் சுரண்டும்   உத்தியைப் பயன்படுத்துகின்றமையைக் கண்கூடாகக் காண முடிந்தது. தனியார் வங்கிகள் ஒன்றும் சளைத்தவை அல்லவே. 1.5 சத வீத மாத வட்டி எனும் கவர்ச்சிகர விளம்பரத்துடன் விவசாயிகளைத் தேர்வு செய்து விவசாயக் கடன் எனும் பெயரில் வர்த்தக க் கடனை அவர்கள் பெற்றுகொள்ள ஆவன செய்கின்றமையும் கூடக் காண முடிந்தது. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ என்டர்பிறைஸ் லங்கா’ இலகு கடன் கொடுப்பனவுகள் பற்றி விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் சூழல் வன்னியின் விவசாயி- வங்கி உறவிலே காணப்படாத நிலைமையையும் உணர முடிந்தது. நடந்து முடிந்த அரசியல் குழப்பங்களும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களும் இத் தனியார் வங்கிகளின் நியாயப்படுத்தல்களாகின.  10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகள் ஆக க் குறைந்த மாதாந்த வட்டியாகிய 3 சதவீத வட்டியில கடனைப் பெற்றும் கடன் கொள்வனவை மேற்கொண்டும்  நகைகளை அடகு வைத்தும் தமது உழைப்புடன் சேர்த்து வயலிலே மேற்கொண்ட இலட்ச ரூபா பெறுமதியான முதலீடு ஒற்றை வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 

ஒவ்வொரு போகத்தின் போதும் காப்புறுதி செய்தல்  எனப்படுவது தேவையற்றதோர் செலவு என்ற கருத்தையே வன்னிப்பெரு நிலப்பரப்பின்  பெரும்பாலான பெரு விவசாயிகள்  அனேகர் கொண்டிருக்கின்றனர்.  இம்முறை பாரிய இழப்புகளைச் ச்சந்தித்திருக்கும் பெரு விவசாயிகளுள் பெரும்பாலானோர் தாம் விதைத்த நிலங்களுள் 10 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வீஸ்தீரணத்துக்கு காப்புறுதி செய்யாமல் விட்ட நிலைமையே காணப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஏக்கர் வயலுக்கு குறைந்த வட்டியுடனான விவசாயக்கடன்  அரசினால் வழங்கப்படுவதால் அதற்கு காப்புறுதி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தாலும் அதீத வானிலை நிகழ்வுகளாலும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையிலே காப்புறுதியின் அவசியம் பற்றிய தெளிவு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை  இலங்கையின் விவசாயக் காப்புறுதிக்கான சேத மதிப்பீடு தொடர்பில் காணப்படும் சிக்கலான, நீண்ட நேரமெடுக்கும்  முறைமைகள் இலகு படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் ஒன்றை வவுனியா  நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் திரையிலே காணக்கிடைத்தது. ‘ட்ரோன்’  எனப்படும் சிறு வலவன் ஏவா வான ஊர்திகளைக்கொண்டு பெறப்படும் வான் புகைப்படங்களைக் கொண்டும்  அகச்சிவப்பு படங்களைக்கொண்டும் சேத விபரம், அவற்றின் விஸ்தீரணம், அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கணித்து விவசாயக் காப்புறுதி வழங்கும் முறைமை இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவ்விளம்பரத்தினூடாக அறிய முடிந்தது.

உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது பசளை மானியத்தை விட கட்டாயக் காப்புறுதி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதெனலாம். இதில் அரசின் தலையீடு நிச்சயமாக அவசியமாகிறது. பெரு வெள்ளத்தால்  ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு அரசையே சார்ந்ததாகி விடும். அச்செலவுடன் ஒப்பிடுகையில் கட்டாயக் காப்புறுதிக்காக அரசினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு குறைவானதாகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். அல்லாவிடில் திடீர் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளும் மொத்த உள் நாட்டு உற்பத்தி, சமூகச் சுட்டிகளில் ஏற்படும் மாற்றமும் ஈடு செய்ய முடியாதனவாகிவிடுவன.

முன்னைய தசாப்தங்களைப் போலல்லாது வானிலையை ஒரளவு துல்லியமாக எதிர்வு கூறும் கால நிலை மாதிரிகள் புழக்கத்தில் வந்து விட்டன. விவசாயத்தை அடிப்படையாக க் கொண்ட பல நாடுகள் அம்மாதிரிகளை அடிப்படையாக க் கொண்டு விவசாயிகளின் பயிர் நாட்காட்டித் தரவுகளையும் இணைத்து வழிகாட்டும் செயலிகளை உருவாக்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கென இலவசமாக வெளியிட்டிருக்கின் றன. 

ஆனால் வன்னியிலே இவ்வானிலை எதிர்வுகூறலில் நம்பிக்கை வைத்து, அதனைக் கருத்தில் கொண்டு தொழிற்படும் விவசாய சமூகத்தைக் காண்பது அரிதாகவே இருக்கிறது.வயல் நிலத்தின் மீது  இலட்சக் கணக்கிலான முதலீட்டை மேற்கொள்ள முன்னர் சிந்தித்துச் செயற்பட இவ்வெதிர்வுகூறல்கள் நிச்சயமாக விவசாயிக்கு உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  கால நிலை மாதிரிகளை ஒட்டி, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான செயலிகள் பல அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தகவல் தொழில்  நுட்ப விழிப்புணர்வை யாழ் மண்ணின் இளையோர் மத்தியில் பரப்பி வரும் ‘சுடர்’, ‘ஊக்கி’ போன்ற செயற்பாட்டு அமைப்புகள் இத்தகைய சமூகப் பொறுப்புள்ள செயற்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்த முன் வர வேண்டும்.

அரச இயந்திரங்களும் தம் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கால நிலை மாற்றத்தையும் அதீத வானிலை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க க் கூடிய வகையிலே அவற்றை மேற்கொள்ளவேண்டும். மேலிருந்து கீழான கட்டளை நடைமுறைகளாலும்  மட்டுப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீடுகளாலும் இற்றைவரைப்படுத்தப்படாத திறன் விருத்தியாலும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம். அரச தொழில் என்பது சவால்கள் நிறைந்ததே. களத்தின் நிலைமையை உயர் மட்டத்துக்கு  எடுத்துச் சொல்லி தேவைக்கேற்ற அபிவிருத்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதென்பது ஒவ்வொரு அரச ஊழியனதும் பொறுப்பாகும். இன்றேல் யாவருக்குமான அபிவிருத்தி என்பதும் , நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பதும் வெறும் வாய்ச்சொற்களாக காற்றிலே பறந்துவிடுவன. 

வீடு தொட்டு வீதி வரை சகல கட்டுமானங்களும்  காலநிலை மாற்றத்தையும் அதீத  வானிலை நிகழ்வுகளையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.  கட்டுமான வேலைகளில் ஈடுபடும் சகலதரப்பினரும் இத்தகைய தாங்குதிறன் மிகு கட்டுமானம் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரையும் அதை அண்டிய பகுதிகளிலும்  காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட மழை  நீர் வடிகால்களின் அகலம், ஆழத்துடன் தற்காலத்தில் அமைக்கப்படும் அத்தகைய வடிகால்களின் அகலத்தையும் ஆழத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் தீர்க்கதரிசனம் மிகு அபிவிருத்தியின் தேவையையும் நிலையையும் உங்களால் உணர முடியும்.  

வடக்கின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இன்றைய   நிலை எம் மத்தியில்  சிக்கலான பல வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பாரிய பொறுப்பை முன் வைத்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து இயங்கினால் மாத்திரமே அவ்விடைகளுக்கான தேடல்களை எம்மால் ஆரம்பிக்க முடியும்!

கால நிலை மாற்றம் விதித்த சாபத்திலிருந்து இவ்வழகிய தீவை மீட்கும் பாரிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் கையிலுமே தங்கியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்திலேயே நாம் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்கிறோம்.  ஓரிரு வருடங்களேனும் நாம் கற்ற கல்வியை எம் தாய் நாட்டிலேயே பிரயோகித்தால் எதற்கும் சளைக்காத உறுதியான தேசமாக இலங்கையும் மாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

Thursday, November 18, 2010

வரப்புயர வன்னி உயரும்!


‘வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்’

என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியதை நாம் அறிவோம். ‘வரப்புயர’ என்ற ஒற்றை வார்த்தையால் மன்னனை வாழ்த்திப் பாடிய ஒளவையின் மதிநுட்பம் வார்த்தைகளால் விபரிக்கப்பட முடியாதது.
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.

வரப்பு உயர்ந்து அரசு சிறப்பதற்கு அடிப்படையாக அமைபவை ஆறுகளும் குளங்களுமே யாகும். அவற்றை உருவாக்குதல், உருவாக்கிய வற்றை காலத்துக்குக் காலம் புனர்நிர்மாணம் செய்து பாது காத்தல் ஒரு தேசத்துக்கு மிகவும் முக்கிய மானவை.
இலங்கை யைப் பொறுத்த வரையிலே கிளிநொச்சியை வடக்கின் நெற் களஞ்சியம் என்பர். கிளிநொச்சியின் வரப்புயர்வதில் பெருந் துணை புரிபவை இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் ஏனைய பல நடுத்தர மற்றும் சிறிய ரகக் குளங்களுமாகும்.

கடந்த 3 தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தினால் இக் குளங்களும் பாதிக்கப் பட்டனவென் பதை எவராலும் மறுக்க முடியாது. போதிய பராமரிப் பின்றியும் வேறுபல காரணங்களாலும் அவற்றின் கட்டமைப்புகள் குலைந்து போயிருந்தன.




உடைப்பெடுத்த கல்மடு
குளத்தின் வெவ்வேறு கோணங்கள்


இத்தகைய தோர் நிலையில் அக்கொடூர யுத்தமும் முடிவுக்கு வந்தது. மீள் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் இருக்கின்றன. கிடைக்கும் வளங்களை கொண்டு அபிவிருத்தித் திட்டங்களும் புனர் நிர்மாண வேலைகளும் துரித கதியிலே மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 38 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத் திட்டமும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 169 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் கல்மடுக் குளமும் புனரமைப்புச் செய்யப்படுவதற்கான திட்டங்கள் கட்டங்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அவற்றின் சில கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டும்விட்டன.
அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டவற்றுள் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டமும்,  ஒன்றாகும்.

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் 1902 ஆம் ஆண்டிலிருந்து கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அக்குளத்தின் இடது கரையினால் நீரைப் பெறும் 3ம் வாய்க்காலின் நீர்க்கட்டுப்படுத்திகளும் விழுத்திகளும் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டன.
3ம் வாய்க்கால் எனப்படுவது, வட்டக்கச்சியின் கோவிந்தன் கடைச் சந்தியிலிருந்து பூநகரியின் ஊரியான் வரை மிக நீண்ட தூரத்துக்கு இரணைமடு நீரைக் காவிச் செல்லும் வாய்க்கால் ஆகும்.
அதன் நீர்க்கட்டுப் படுத்திகளும் விழுத்திகளும் ஏறத்தாழ 38மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மிகவும் குறுகிய காலத்துக்குள் செவ்வனே முடிக்கப்பட்ட இவ்வபிவிருத்திப் பணி கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த வழிவகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

கல்மடுக் குளமானது கிளிநொச்சியி லிருந்து 18 km கிழக்காக அமைந்திருக்கிறது. 1951 – 1953 காலப் பகுதியிலே மீள்கட்டமைக்கப்பட்டது.
இக்குளத்தின் வான் கதவுகளூடு நீர் பாய்வது கிளிநொச்சி மாவட்டத்துக்காக இருக்கின்ற போதிலும் நீரேந்து பரப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டளவிலே நிகொட் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இக்குளம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.கடந்த காலங்களின் கொடூர யுத்தம் இக்குளத்தையும் விட்டு வைக்கவில்லை.
நீரியல் ரீதியான அல்லது கட்டமைப்பு ரீதியான செயலிழப்புக்கள் எவையுமின்றி இக்குளம் உடைப்பெடுத்த விடயம் நாம் யாவரும் அறிந்ததே.வான் கதவுகளை உள்ளடக்கிய அணையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது.
நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முழுவதும் வெளியில் பாய்ந்தபோது மண்ணையும் அள்ளிச் சென்றது. அதனால் ஏறத்தாழ 10 சீ ஆழமான பள்ளம் உருவாகியது.
மீளக் குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதும் போது நீர்ப்பாசனத் திட்டங்கள் செவ்வனே அமைய வேண்டியது அவசியமாகியது.


கல்மடுக்குளத்தின் புனர்நிர்மாணம் -
மீள்நிரப்பப்படும் மண் அணை





இத்தகையதோர் நிலையில் கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப்பட்ட கல்மடுக் குளத்தின் தேவையும் உணரப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் 169 மில்லியன் ரூபா நிதி மதிப்பீட்டில் என்ரெப் திட்டத்தின் கீழ் கடந்த ஒகஸ்ட் மாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிய வான் கதவுகள் கட்டப்படும் அதேவேளை புனர்நிர்மாணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது 40 சதவீதப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட இறுதிக்குள் இத் திட்டம் பூரணப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.புவியீர்ப்பினாலான நீர்ப்பாசனத்தின் கீழ் முன்றாம் வாய்க்காலினால் 7500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் தற்போது பயன்பெறத் தொடங்கிவிட்டது.

கல்மடுக் குளத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் போது ஏறத்தாழ 1350 ஹெக்ரயர் விவசாய நிலம் வளம் பெறும் என்பதில் எதுவித ஐயப்பாடுமில்லை.கிளிநொச்சி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிரதேசமாகும். இரணைமடு மற்றும் கல்மடு ஆகிய குளங்கள் மட்டுமன்றி ஏனைய பெரிய, நடுத்தர மற்றும் சிறியளவிலான குளங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் வெற்றியில் தான் கிளிநொச்சி மண்ணின் உச்ச வளப் பாவனையும் தங்கியிருக் கிறது. சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய கிளிநொச்சியின் பாதையில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் ஒரு மைல் கல்லே!

Thursday, August 26, 2010

பச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி மண்!



சிறுவயதிலே பார்த்த பண்டாரவன்னியன் நாடகத்திலே வந்த ‘வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு’ என்ற வரி, யதார்ததமானதே எனக் காலம் பல தடவைகள் யோசிக்க வைத்திருக்கிறது.

யார் தன்னடிக்கு வந்தாலும் அவர்களை வேற்றுமை பாராட்டாது அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அற்புதமான மண் வன்னி மண். அந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் மாவட்டம் கிளிநொச்சியாகும்.

இலங்கையின் முதற் பத்து பெரிய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றான இரணைமடுக்குளத்தாலும் அக்கராயன் குளம் போன்ற இன்னோரன்ன குளங்களால் நீர் வளத்தையும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மண்வளத்தையும் கொண்ட விவசாயப் பிரதேசம் கிளிநொச்சி.

உலர் வலயத்தில் அமைந்த பிரதேசமாயினும், மரங்களும் வயல் வெளிகளும் நீர் நிலைகளும் நிறைந்துள்ளமையாலோ என்னவோ, அங்கு வறட்சியின் கொடுமை தெரிவது மிக மிக அரிதாகும்.

கிளிநொச்சியையே சந்ததி சந்ததியாக, பூர்வீகமான வாழ்விடமாக கொண்டவர்கள் மிகச் சிலரே. 1958களின் பின்னர் அமைக்கப்பட்ட குடியேற்றங்களும் காலத்துக்குக் காலம் உருவான சில காரணங்களுமே, கிளிநொச்சியின் சனத்தொகையை அதிகரித்தன.

அங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் மாறியது. பல நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் கிளிநொச்சியை ஒரு விவசாயப் பிரதேசமாகவே மாற்றி, இயற்கை அன்னை அருளிய வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டன.

குடியேறிய மக்கள் அங்கேயே நிலைத்திருப்பதற்கு கிளிநொச்சியின் வளங்கள் காரணமாய் அமைந்திருந்ததைக் காலம் உணர்த்தி நிற்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு என்ற சொற்றொடர் உணர்ந்தி நிற்கும் யதார்த்தமும் அதுவேயாகும்.

பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளையும் எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் வாய்க்கால்களையும் சிறிதும் பெரிதுமாய் நிறைந்து காணப்படும் குளங்களையும் அடர்ந்த நிழல் தரு மரங்களையும் கொண்ட அழகிய சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களால் எப்படி அவற்றையெல்லாம் விட்டு வரமுடியும்?

ஒரு கொடூர யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட இன்றைய கால கட்டத்திலேயே கிளிநொச்சிப் பிரதேசத்திற்குரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. ஒரு பேரழிவிலிருந்து மீண்ட மக்கள், முற்றிலும் புதியதாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். விதைக்க விவசாயிகளின்றி, விளையாமல் கிடந்த வயல் நிலங்களுள் பல விதைக்கப்பட்டு இன்று அறுவடையும் கண்டு விட்டன.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சளாய் தெரியும் நெற்கதிர்களைத் தாங்கியபடி அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல்வெளிகளையும், வயல்வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் காணும் போது எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பதாய் உருவகிக்கப்படும் பீனிக்ஸ் பறவை மட்டுமே நினைவுக்கு வந்தது.

கிளிநொச்சியின் நெற்பயிர்ச் செய்கை தொடர்பான விடயங்களை, திட்டமிடலுக்கான நிறைவேற்று அதிகாரி மோகனபவன் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இம்முறை கிளிநொச்சியிலே சிறுபோகப் பயிராகவும் பருவம் பிந்திய பயிராகவும் நெல் விதைக்கப்பட்டது. ஏறத்தாழ 6000க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பிலே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறுபோகத்தின் போது, சில குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டதால் மீளக்குடியமர்ந்த விவசாயிகளின் மத்தியில் குடும்பம் ஒன்றுக்கு 2 ஏக்கர் நிலப்பகுதிகளாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

4000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர் பெறப்பட்டுள்ளது. அது தவிர வன்னெரிக்குளம், அக்கராயன் குளம், கரியாலை நாகபடுவான் குளம் ஆகியவற்றிலிருந்து மிகுதி விளை நிலங்களுக்கும் நீர் பெறப்பட்டது.

யாவற்றையும் இழந்து தற்போது மீளக்குடியேறியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையிலே, கமநலசேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் உழுது கொடுக்கப்பட்டது.



கமநல சேவைகள் திணைக்களத்திடம் இருப்பிலிருக்கும் உழவு இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவ்வாறு விளைநிலத்தை உழுது கொடுக்க முடியாத பட்சத்தில் ஒரு ஏக்கருக்கான உழவுக் கூலியாக ரூபா 4000/- வழங்கப்பட்டது. இது தவிர, 2 ஏக்கர் விளைநிலத்துக்குத் தேவையான விதை நெல்லும், மானிய விலையில் உரமும் வழங்கப்பட்டன.

இவற்றுடன் ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனும் விவசாய அமைச்சின் உதவியுடனும் மானிய விலையில் சிறிய ரக உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபோகத்துக்கே உரித்தான விளைச்சலும் கிடைக்கப் பெற்றுள்ளது. சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவடைக் காலத்திலே விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் ஒன்று மனிதவளப் பற்றாக் குறையாகும். நெற்பயிரைப் பொறுத்தவரையிலே, அரிவிவெட்டு, குறித்த காலப் பகுதியில் நடந்து முடிய வேண்டும். ஆனால் அதற்கான வேலையாட்களைத் தேடிப்பிடிப்பது பெருஞ்சிரமமாக இருந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அறுவடை இயந்திரம் ஒன்று பரவலாகப் பாவனைக்கு வந்துள்ளது. அது வன்னி மக்களுக்கு ஏலவே பரிச்சயமானது தான்.

மிக இலாவகமாக அரிவி வெட்டி நெல்லைப் பிரித்தெடுத்து தூற்றித்தரும் அந்த இயந்திரம் ஒரு இந்தியத் தயாரிப்பாகும். 1/4 ஏக்கர் விளை நிலத்தின் அறுவடையை 10 - 15 நிமிடத்தில் பெற்றுத் தரும் இவ்வியந்திரம் கடந்த சிறு போகத்திலே கிளிநொச்சி பிரதேசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது.

இவ்வியந்திரத்தின் பயன்பாட்டால் செலவையும் நேர விரயத்தையும் குறைக்க முடியுமென விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆயினும் விளைநிலம் ஈரப்பற்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வியந்திரத்தைப் பயன்படுத்த முடியாததொரு நிலை காணப்படுவதாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் இவ்வியந்திரம் பெரிய பார இயந்திரமாக இருப்பதால் அதன் சில்லுகள் சேற்றினுள் புதையத் தலைப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரிவு வெட்டுக்கு மனித வளமே பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 48 இலட்சம் ரூபா பெறுமதியான அவ்வியந்திரங்களைத் தனியார் கொள்வனவு செய்து, விவசாயிகளிடம் வாடகைக்கு விடுகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கான வாடகையாக ஏறத்தாழ ரூ. 5000 அறவிடப்படுகிறது.

கமநல சேவைகள் திணைக்களத்திடமோ அல்லது விவசாயத் திணைக்களத்திடமோ அத்தகைய அறுவடை இயந்திரங்கள் இருந்தால் விவசாயிகள் குறைந்த செலவில் அறுவடையை மேற்கொள்ள முடியுமென்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆயினும் இந்திய அரசிடமும் சில நிறுவனங்களிடமும் இந்த இயந்திரம் தொடர்பான உதவிகள் திணைக்களத்தினால் கோரப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அத்தகைய உதவிகள் கிடைத்தால் எதிர்வரும் காலப் போகத்தின் அறுவடைக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இயந்திரத்தினால் அறுவடை செய்யப்படும் நெல், காய விடப்பட்டு மூடைகளில் சேகரிக்கப்படுகிறது.

இம்முறை கிளிநொச்சிப் பிரதேசத்திலே அறுவடை செய்யப்பட்ட நெல்லானது, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது.



ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலமே நெற் செய்கைக்காக வழங்கப்பட்டதால் அவர்களிடமிருந்து தலா 4000 கிலோ கிராம் நெல் அச்சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது. இவை தவிர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாலும் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. தத்தமது பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு வழங்கும் பணத்தைக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்கின்றன.

விவசாயிகளின் நலன் கருதி, தனியாரின் கொள்விலையுடனும் தற்போதைய விற்பனை விலையுடனும் ஒப்பிடுகையில் சற்று அதிகமான விலைக்கே கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றன. அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை, கொழும்பிலோ வவுனியாவிலே விற்பதாயின், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அவை நட்டமடைய வேண்டிய நிலையே காணப்படுகிறது. ஆதலால் ஒன்றில் அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை அவர்கள் சேமித்து வைக்க வேண்டும். இல்லையேல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்ய வேண்டும்.

யுத்தத்தின் கொடூரத்தால் தமது உடைமைகளை இழந்திருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் களஞ்சிய வசதியின்மையாலும் அரிசி ஆலை வசதியின்மையாலும் பெருச்சிரமங்களை எதிர்நோக்கு கின்றன. தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கள் திருத்தப்பட்டு, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் கொள்வனவு செய்யப்படும் நெல் மூடைகள் அங்கே சேமித்து வைக்கப்படுகின்றன.

இத்தகையதோர் நிலையில் விவசாயிகளிடம் மீதமாக இருக்கும் நெல் மூடைகளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்வதன் சாத்தியப்பாடுகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஆயினும் விவசாயிகளின் நலன் கருதியும், தமக்குக் கிடைக்கும் அரச உதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தம்மால் இயன்றவரை அவை நெற்கொள்வனவை மேற்கொள்கின்றன.

எதிர்வரும் காலபோகத்துக்காக, இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலே விளைநிலங்கள் விதைக்கப்படவிருக்கின்றன. கைவிடப்பட்ட விளை நிலங்களையும் விதைக்கும் திட்டங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் ஏறத்தாழ 40,000 ஏக்கர் நிலத்திலே நெற் செய்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சிறுபோகத்தைப் போலவே, எதிர்வரும் காலபோகத்துக்கும் விவசாயிகளுக்கு உரமானியம், விதைநெல், உழவு உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், அத்துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்களை தனியாரிடம் குத்தகைக்குப் பெறக்கூடிய சூழலொன்று உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் உழைப்பை நோக்காகக் கொண்டு, வெளிமாவட்ட மக்கள் கிளிநொச்சியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எந்த ஒரு உடைமையும் இல்லாமல், கிடைத்த சில உதவிகளுடன் மீளக்குடியமர்ந்து தமது பழைய வாழ்வைத் தொடங்க முயல்கின்றனர் கிளிநொச்சி விவசாயிகள். அவர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் உதவிகள், அறுவடையின் பின்னர் தமது பழைய வாழ்வை மீட்பதற்கான ஒரு சிறு முதலீட்டை சேமிப்பாகத் தரும் என எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.

தற்போது என்றுமில்லாத அமைதியொன்று குடி புகுந்திருக்கும் கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல் வெளிகளைத் தழுவி வரும் தென்றலின் காலடியில் மனம் தானே சரணடைந்துவிடும் என்பதும் கண்கூடு.

இந்த வயல் வெளிகளும் அடர்ந்த மரங்களும், சிதையாத குளங்களும் தான் கிளிநொச்சிப் பிரதேசத்தின் செழுமையை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றன. எனினும் நிலையான, நிறைவான அபிவிருத்திக்காக கிளிநொச்சிப் பிரதேசம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் அபிவிருத்தித் திட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும்போது கிளிநொச்சியின் அழகும் செழுமையும் மேன்மேலும் மிளிரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.