Showing posts with label பரராசசேகரன். Show all posts
Showing posts with label பரராசசேகரன். Show all posts

Friday, December 2, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-07

ஆரோக்கிய வாழ்வியலை
அவசர யுகம் முடக்கிவிட்டதா?
 

அடுத்த அரங்கமானது சித்த மருத்துவத்துறைக்குரியது. தமிழர்களுக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் என சித்த மருத்துவத்தை விபரிப்பர். மருத்துவம் என்ற எல்லைக்கும் அப்பால் இதை ஒரு உன்னத வாழ்வியல் எனலாம். அத்தகைய உன்னத வாழ்வியலை சித்தர்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். வாதம், வைத்தியம், ஞானம், யோகம் என்ற உன்னத படி நிலைகளை உள்ளடக்கிய சித்த மருத்துவம்.
எம்மவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதுவாயினும் உடனடி நிவாரணி தேவை. அவசர யுகத்திலே அல்லாடும் நாம், அதை எதிர்பார்ப்பதில் தவறில்லையோ என்றும் தான் எண்ணத்தோன்றுகிறது. அதனால் தான் ஆங்கில மருத்துவம் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. அது சித்த மருத்துவம் மீதான நாட்டத்தைக் குறைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இந்த அல்லாடல்கள், அந்தரிப்புகள் எல்லாம் எதற்காக? சுகமாக வாழத்தானே? அந்த உன்னதமான வாழ்வு மட்டும் இன்று தொலைந்து போய்விட்டது. அப்படி அவசர உலகில் நாம் தொலைத்து விட்ட வாழ்வைத் தான் சித்த மருத்துவம் வலியுறுத்தி நிற்கிறது. அன்றைய குமரிக்கண்டத்தில் தென்பகுதிகளான தமிழ் நாடு, கேரளம், இலங்கை ஆகிய பகுதிகளில் சித்தமருத்துவம் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் இருக்கிறது.
வரலாறும் அதைத்தான் கூறுகிறது. இலங்கையை ஆண்ட இராவணன் சிறந்த சிவபக்தனாக மட்டுமன்றி சிறந்த வைத்தியனாகவும் இருந்துள்ளான். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் சித்தர் மருத்துவம் எனவும், தமிழ்க் கடவுளாகிய முருகனால் அகத்தியர், திருமூலர் போன்றவர்க்குச் சொல்லப்பட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் தமிழ் மருத்துவம் எனவும் கூட அழைக்கப்படுகிறது.

ஆதிகாலத்தில் சித்தமருத்துவம் இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. பொலன்னறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையிலே சித்த மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிலை காணப்படுவதாகக் கூறுகின்றனர். புத்த தாச மன்னன் சிறந்த மருத்துவன் என்று வரலாறு கூறுகிறது. புராதன இராசதானிகள் பரந்திருந்த பகுதிகளில் மருத்துவத் தொட்டிகளும் குடுவைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
15 ஆம் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட ‘வைத்திய சிந்தாமணி பைசாஜ் சங்கிரகம்’ என்னும் நூல் ‘வைத்திய சிந்தாமணி’ எனும் தமிழ் மருத்துவ நூலை தழுவி எழுதப்பட்ட நூல் என்ற கருத்தும் உள்ளது.

சித்த மருத்துவம் கூறும் நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் திருகோணமலையில் சித்தியடைந்தார் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது.

அதேபோல போகர் கதிர்காமத்தில் சித்தியடைந்தார் என்றும் கூட கூறப்படுகிறது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான புலத்தியர் சிங்கள நாட்டை சேர்ந்தவரென குறிப்பிடப்படுகின்றது. இங்கு சிங்கள நாடு என்பது இலங்கை என்பர்.
பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்கள் குடிமக்களின் பிணிகளை நீக்குவதையும் பெரும் பணியாகக் கொண்டிருந்தனர். இதற்கு அவர்கள் சித்தமருத்துவத்தையே நம்பியிருந்தார்கள். யாழ்ப்பாண மன்னன் பரராஜஜேகரனின் சகோதரன் பரநிருபசிங்கன் சிறந்த மருத்துவனாக திகழ்ந்துள்ளான். அவன் இலங்கை தமிழர்களுக்கு உரித்தான செகராஜசேகரம், பரராஜசேகரம் என்னும் சுதேச மருத்துவ நூல்களை வெளியிட்டார்.
பிற்பட்ட காலத்தில் சித்தமருத்துவமானது இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே பெருமளவு கையாளப்பட்டு வருகிறது. அதிலும் இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது என்று கவிப்புயல் நவரத்தினமும் சித்த மருத்துவமானது அதன் தூய்மையுடனும் தனித்துவத்துடனும் இன்றுவரை (யாழ்ப்பாணத்தில்) கையாளப்பட்டு வரப்படுகின்றது என்று பேராசிரியர் உரகோடவும் எடுத்து கூறியுள்ளமை பற்றி இணையம் வாயிலாக அறிய முடிந்தது.
கதிர்காம யாத்திரையை முருகன் அருளால் தொடங்கி கதிர்காம இயந்திரத்தை ஸ்தாபித்தவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அங்கு இன்றும் மூலிகைச் சந்தை காணப்படுகின்றது.

முக்கியமாக கடலிராஞ்சிப்பட்டை, மரமஞ்சள், புலிநகம், சீந்தில், செஞ்சந்தனம், உருத்திராட்சை என்பன பெருமளவில் காணப்படுகின்றன என்றெல்லாம் கூறப்படுகிறது. அத்துடன் சித்தமருத்துவ யாழ்ப்பாண நூலான பரராஜசேகரத்தில் “மருந்து மாத்திரைகள் பிழைத்தால் கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிவிடும்” என்று நூலின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வழிகளிலும் இலங்கையில் காணப்பட்ட சித்தமருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இங்கு வாழ்ந்த மன்னர்களாலும், மக்களாலும், சித்தமருத்தவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலுவான சித்தமருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய பாரம்பரியம் இன்றைய இளஞ்சந்ததியை விட்டுத் தூரச் சென்று கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியிலே, சித்த மருத்துவத்திற்கென அமைக்கப்பட்ட கூடம் இளைஞர்கள் மத்தியில் அந்த அரிய பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கக்கூடிய வகையிலே அமைக்கப்பட்டிருந்தது.

பாரம்பரிய வைத்திய முறைமைகளுடன் தொடர்பு பட்ட உபகரணங்கள், ஓலைச் சுவடிகள், மருந்து வைக்கும் பெட்டிகள், குடுவைகள் என அந்த இயற்கைப் பொருட்களைப் பார்த்த போது எம் முன்னவரின் கை நுட்பங்களும் தூர நோக்கான கொள்கைகளும் எம்மைப் பெருமிதங்கொள்ளச் செய்தன. அவை தவிர, சித்த மருத்துவப் பயன்பாட்டில் இருக்கும், தாவரங்கள், பூக்களின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. எமது அன்றாட உணவுப் பழக்கத்துடன் சித்த மருத்துவம் எவ்வாறு இயைந்திருந்தது என்பதையும் மாணவர்கள் மிக அழகாக விளக்கினர். காட்சிக் கூடத்தை யாழ். பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையினர் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
இன்று காண்பதற்கே அரிதாகி விட்ட கண்டறிந்திராத விடயங்கள் பல அந்த கூடத்தில் வைக்கப்பட்டு போதியளவு விளக்கங்கள் வழங்கப்பட்டன. தொடக்கத்திலே ஒரு மாதிரி சமையலறையும் அன்றாடம் எமது சமையல்களில் பாவிக்கப்படும் வாசனை திரவியங்கள் உட்பட்ட பல திரவியங்கள் மண் குடுவை தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் யாவுமே இயற்கையுடன் ஒன்றிணைந்ததாகக் காணப்பட்டன.

பனை மட்டைகள், ஓலைகள், மட்பாண்டங்கள் என அங்கு வைக்கப்பட்டிருந்த அடிப்படைப் பொருட்கள் ஒரு பசுமைக் காட்சிக் கூடத்தையே உருவாக்கி விட்டிருந்தன எனலாம். இன்றைய சந்ததியைப் பொறுத்தவரையிலே பல விடயங்கள் அதிசயமாய்த் தெரிந்தன. முன்னைய காலங்களில் பாவனையில் இருந்த சமையலறை பண்டங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. அக்கலங்கள் யாவுமே மட்பாண்டங்களாகவே இருந்தன. மட்பாண்டங்கள் சூழலுக்குத் தீங்கில்லாதாவை.

அத்துடனும் அவற்றுள் வைக்கப்படும் பதார்த்தங்கள் பாண்டத்துடன் இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் இல்லை. அத்துடன் மட்பாண்டங்களிலிருக்கும் நுண் துளைகள் காரணமாக அவற்றுள் இருக்கும் பதார்த்தங்கள் குளிர்மையான சூழலில் பேணப்படுகின்றன. மிளகு, கடுகு போன்ற வாசனை திரவியங்கள் கூட மட்பாண்டங்களில் வைத்தே பேணப்பட்டன. அப்படிப் பேணும் போது அவை பழுதடைவதும் இல்லை. அவற்றின் வாசனையும் கெடுவதில்லை. எம்மவரைப் பொறுத்தவரையிலே இந்த வாசனை திரவியங்கள் மருத்துவப் பொருட்களாகவும் பயன்படுகின்றன. ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் சிறப்பான செயற்பாடு இருக்கும்.

கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிளகு தண்ணீர் குடிப்பது எதனால் என்று இப்போது விளங்குகிறதா? உணவிலே வெங்காயம் சேர்ப்பது எதனால் தெரியுமா? வெங்காயம் இரத்தத்தைச் சுத்திரகரிப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. அதைவிட அதற்கென வேறு பல மருத்துவ குணங்களும் கூட இருக்கின்றன. இரத்தம் முறையாக சுத்திகரிக்கப்பட்டால் எம்மை எந்தவித நோய்களும் அண்டாது. வெந்தயம் உடலுக்கு குளிர்மையைத் தரும். கொத்தமல்லியை பனங்கட்டியுடன் அவித்துக் குடித்தால் காய்ச்சல் பறந்துவிடும். இப்படி சின்னச் சின்ன விடயங்கள் பலவற்றை சித்த மருத்துவ மாணவர்கள் எடுத்தக் கூறினர்.

முன்னைய காலங்களில் ஒரு சிறிய நோய் நொடி ஏற்பட்டால் வீட்டிலே பரிகரிக்கக் கூடியவாறான நிலைமை காணப்பட்டது. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு நோய்க்கான நிவாரணி தெரிந்திருந்தது. வீட்டுச் சூழலிலேயே பிரதானமான மூலிகைகளைப் பெறக்கூடியதாக இருந்தது. முக்கிய பதார்த்தங்கள் வீடுகளில் காணப்பட்டன. இன்றும் இவை எதுவுமே இல்லாத நிலைதான் காணப்படுகிறது.

அவசர யுகமும் ஆங்கில மருத்துவமும் எம்மவர் வாழ்வியலில் உட்புகுந்து வேரூன்றத் தொடங்கிவிட்டன. சிறிய தலைவலியாயினும் மருந்து வில்லைகளை உண்டாவது உடனடியாகப் போக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு தான் எம்மவரிடத்தே அதிகளவில் காணப்படுகிறது. அந்த மனப்பாங்கு வீட்டு வைத்திய முறைமைகளை முட்டாள் தனமானவை என மூலையில் முடக்கி விட்டன. ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணியாக அமைந்தாலும், பக்கவிளைவுகளை ஏற்படுத்த வல்லது.

உண்மையிலேயே அவர்களது உடலை ஒரு பாரதூரமான நோய் தாக்கும் போது ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்கையில் அவர்கள் உயர் செறிவுடைய மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது அதிகமான பக்க விளைவுகளைத் தோற்றுவிக்கும். இது எதனால் தெரியுமா? பாரதூரமற்ற வியாதிகளுக்கெல்லாம் பெரியளவிலே ஆங்கில மருந்துகளை உட்கொண்டமையாலேயேயாகும்.

அறிந்தோ அறியாமலோ இந்த வாசனை திரவியங்கள் எம்மவர் வாழ்வியலில் பிணைந்து விட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த வில்வம் குடுவையும் மருந்து வில்லைகளைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டியும் இன்னும் சிதையாமல் இருக்கும் நூற்றாண்டுகள் பழைமையான ஏடுகளும் வியக்க வைத்தன.

யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களிலே சித்த மருத்துவத்துறைக்குரிய அரங்கத்தில் தான் சலிப்பேதுமின்றி போதியளவு விளக்கங்கள் வழங்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.