Thursday, August 26, 2010

பச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி மண்!



சிறுவயதிலே பார்த்த பண்டாரவன்னியன் நாடகத்திலே வந்த ‘வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு’ என்ற வரி, யதார்ததமானதே எனக் காலம் பல தடவைகள் யோசிக்க வைத்திருக்கிறது.

யார் தன்னடிக்கு வந்தாலும் அவர்களை வேற்றுமை பாராட்டாது அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அற்புதமான மண் வன்னி மண். அந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் மாவட்டம் கிளிநொச்சியாகும்.

இலங்கையின் முதற் பத்து பெரிய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றான இரணைமடுக்குளத்தாலும் அக்கராயன் குளம் போன்ற இன்னோரன்ன குளங்களால் நீர் வளத்தையும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மண்வளத்தையும் கொண்ட விவசாயப் பிரதேசம் கிளிநொச்சி.

உலர் வலயத்தில் அமைந்த பிரதேசமாயினும், மரங்களும் வயல் வெளிகளும் நீர் நிலைகளும் நிறைந்துள்ளமையாலோ என்னவோ, அங்கு வறட்சியின் கொடுமை தெரிவது மிக மிக அரிதாகும்.

கிளிநொச்சியையே சந்ததி சந்ததியாக, பூர்வீகமான வாழ்விடமாக கொண்டவர்கள் மிகச் சிலரே. 1958களின் பின்னர் அமைக்கப்பட்ட குடியேற்றங்களும் காலத்துக்குக் காலம் உருவான சில காரணங்களுமே, கிளிநொச்சியின் சனத்தொகையை அதிகரித்தன.

அங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் மாறியது. பல நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் கிளிநொச்சியை ஒரு விவசாயப் பிரதேசமாகவே மாற்றி, இயற்கை அன்னை அருளிய வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டன.

குடியேறிய மக்கள் அங்கேயே நிலைத்திருப்பதற்கு கிளிநொச்சியின் வளங்கள் காரணமாய் அமைந்திருந்ததைக் காலம் உணர்த்தி நிற்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு என்ற சொற்றொடர் உணர்ந்தி நிற்கும் யதார்த்தமும் அதுவேயாகும்.

பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளையும் எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் வாய்க்கால்களையும் சிறிதும் பெரிதுமாய் நிறைந்து காணப்படும் குளங்களையும் அடர்ந்த நிழல் தரு மரங்களையும் கொண்ட அழகிய சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களால் எப்படி அவற்றையெல்லாம் விட்டு வரமுடியும்?

ஒரு கொடூர யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட இன்றைய கால கட்டத்திலேயே கிளிநொச்சிப் பிரதேசத்திற்குரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. ஒரு பேரழிவிலிருந்து மீண்ட மக்கள், முற்றிலும் புதியதாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். விதைக்க விவசாயிகளின்றி, விளையாமல் கிடந்த வயல் நிலங்களுள் பல விதைக்கப்பட்டு இன்று அறுவடையும் கண்டு விட்டன.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சளாய் தெரியும் நெற்கதிர்களைத் தாங்கியபடி அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல்வெளிகளையும், வயல்வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் காணும் போது எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பதாய் உருவகிக்கப்படும் பீனிக்ஸ் பறவை மட்டுமே நினைவுக்கு வந்தது.

கிளிநொச்சியின் நெற்பயிர்ச் செய்கை தொடர்பான விடயங்களை, திட்டமிடலுக்கான நிறைவேற்று அதிகாரி மோகனபவன் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இம்முறை கிளிநொச்சியிலே சிறுபோகப் பயிராகவும் பருவம் பிந்திய பயிராகவும் நெல் விதைக்கப்பட்டது. ஏறத்தாழ 6000க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பிலே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறுபோகத்தின் போது, சில குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டதால் மீளக்குடியமர்ந்த விவசாயிகளின் மத்தியில் குடும்பம் ஒன்றுக்கு 2 ஏக்கர் நிலப்பகுதிகளாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

4000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர் பெறப்பட்டுள்ளது. அது தவிர வன்னெரிக்குளம், அக்கராயன் குளம், கரியாலை நாகபடுவான் குளம் ஆகியவற்றிலிருந்து மிகுதி விளை நிலங்களுக்கும் நீர் பெறப்பட்டது.

யாவற்றையும் இழந்து தற்போது மீளக்குடியேறியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையிலே, கமநலசேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் உழுது கொடுக்கப்பட்டது.



கமநல சேவைகள் திணைக்களத்திடம் இருப்பிலிருக்கும் உழவு இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவ்வாறு விளைநிலத்தை உழுது கொடுக்க முடியாத பட்சத்தில் ஒரு ஏக்கருக்கான உழவுக் கூலியாக ரூபா 4000/- வழங்கப்பட்டது. இது தவிர, 2 ஏக்கர் விளைநிலத்துக்குத் தேவையான விதை நெல்லும், மானிய விலையில் உரமும் வழங்கப்பட்டன.

இவற்றுடன் ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனும் விவசாய அமைச்சின் உதவியுடனும் மானிய விலையில் சிறிய ரக உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபோகத்துக்கே உரித்தான விளைச்சலும் கிடைக்கப் பெற்றுள்ளது. சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவடைக் காலத்திலே விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் ஒன்று மனிதவளப் பற்றாக் குறையாகும். நெற்பயிரைப் பொறுத்தவரையிலே, அரிவிவெட்டு, குறித்த காலப் பகுதியில் நடந்து முடிய வேண்டும். ஆனால் அதற்கான வேலையாட்களைத் தேடிப்பிடிப்பது பெருஞ்சிரமமாக இருந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அறுவடை இயந்திரம் ஒன்று பரவலாகப் பாவனைக்கு வந்துள்ளது. அது வன்னி மக்களுக்கு ஏலவே பரிச்சயமானது தான்.

மிக இலாவகமாக அரிவி வெட்டி நெல்லைப் பிரித்தெடுத்து தூற்றித்தரும் அந்த இயந்திரம் ஒரு இந்தியத் தயாரிப்பாகும். 1/4 ஏக்கர் விளை நிலத்தின் அறுவடையை 10 - 15 நிமிடத்தில் பெற்றுத் தரும் இவ்வியந்திரம் கடந்த சிறு போகத்திலே கிளிநொச்சி பிரதேசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது.

இவ்வியந்திரத்தின் பயன்பாட்டால் செலவையும் நேர விரயத்தையும் குறைக்க முடியுமென விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆயினும் விளைநிலம் ஈரப்பற்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வியந்திரத்தைப் பயன்படுத்த முடியாததொரு நிலை காணப்படுவதாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் இவ்வியந்திரம் பெரிய பார இயந்திரமாக இருப்பதால் அதன் சில்லுகள் சேற்றினுள் புதையத் தலைப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரிவு வெட்டுக்கு மனித வளமே பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 48 இலட்சம் ரூபா பெறுமதியான அவ்வியந்திரங்களைத் தனியார் கொள்வனவு செய்து, விவசாயிகளிடம் வாடகைக்கு விடுகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கான வாடகையாக ஏறத்தாழ ரூ. 5000 அறவிடப்படுகிறது.

கமநல சேவைகள் திணைக்களத்திடமோ அல்லது விவசாயத் திணைக்களத்திடமோ அத்தகைய அறுவடை இயந்திரங்கள் இருந்தால் விவசாயிகள் குறைந்த செலவில் அறுவடையை மேற்கொள்ள முடியுமென்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆயினும் இந்திய அரசிடமும் சில நிறுவனங்களிடமும் இந்த இயந்திரம் தொடர்பான உதவிகள் திணைக்களத்தினால் கோரப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அத்தகைய உதவிகள் கிடைத்தால் எதிர்வரும் காலப் போகத்தின் அறுவடைக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இயந்திரத்தினால் அறுவடை செய்யப்படும் நெல், காய விடப்பட்டு மூடைகளில் சேகரிக்கப்படுகிறது.

இம்முறை கிளிநொச்சிப் பிரதேசத்திலே அறுவடை செய்யப்பட்ட நெல்லானது, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது.



ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலமே நெற் செய்கைக்காக வழங்கப்பட்டதால் அவர்களிடமிருந்து தலா 4000 கிலோ கிராம் நெல் அச்சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது. இவை தவிர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாலும் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. தத்தமது பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு வழங்கும் பணத்தைக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்கின்றன.

விவசாயிகளின் நலன் கருதி, தனியாரின் கொள்விலையுடனும் தற்போதைய விற்பனை விலையுடனும் ஒப்பிடுகையில் சற்று அதிகமான விலைக்கே கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றன. அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை, கொழும்பிலோ வவுனியாவிலே விற்பதாயின், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அவை நட்டமடைய வேண்டிய நிலையே காணப்படுகிறது. ஆதலால் ஒன்றில் அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை அவர்கள் சேமித்து வைக்க வேண்டும். இல்லையேல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்ய வேண்டும்.

யுத்தத்தின் கொடூரத்தால் தமது உடைமைகளை இழந்திருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் களஞ்சிய வசதியின்மையாலும் அரிசி ஆலை வசதியின்மையாலும் பெருச்சிரமங்களை எதிர்நோக்கு கின்றன. தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கள் திருத்தப்பட்டு, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் கொள்வனவு செய்யப்படும் நெல் மூடைகள் அங்கே சேமித்து வைக்கப்படுகின்றன.

இத்தகையதோர் நிலையில் விவசாயிகளிடம் மீதமாக இருக்கும் நெல் மூடைகளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்வதன் சாத்தியப்பாடுகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஆயினும் விவசாயிகளின் நலன் கருதியும், தமக்குக் கிடைக்கும் அரச உதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தம்மால் இயன்றவரை அவை நெற்கொள்வனவை மேற்கொள்கின்றன.

எதிர்வரும் காலபோகத்துக்காக, இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலே விளைநிலங்கள் விதைக்கப்படவிருக்கின்றன. கைவிடப்பட்ட விளை நிலங்களையும் விதைக்கும் திட்டங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் ஏறத்தாழ 40,000 ஏக்கர் நிலத்திலே நெற் செய்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சிறுபோகத்தைப் போலவே, எதிர்வரும் காலபோகத்துக்கும் விவசாயிகளுக்கு உரமானியம், விதைநெல், உழவு உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், அத்துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்களை தனியாரிடம் குத்தகைக்குப் பெறக்கூடிய சூழலொன்று உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் உழைப்பை நோக்காகக் கொண்டு, வெளிமாவட்ட மக்கள் கிளிநொச்சியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எந்த ஒரு உடைமையும் இல்லாமல், கிடைத்த சில உதவிகளுடன் மீளக்குடியமர்ந்து தமது பழைய வாழ்வைத் தொடங்க முயல்கின்றனர் கிளிநொச்சி விவசாயிகள். அவர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் உதவிகள், அறுவடையின் பின்னர் தமது பழைய வாழ்வை மீட்பதற்கான ஒரு சிறு முதலீட்டை சேமிப்பாகத் தரும் என எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.

தற்போது என்றுமில்லாத அமைதியொன்று குடி புகுந்திருக்கும் கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல் வெளிகளைத் தழுவி வரும் தென்றலின் காலடியில் மனம் தானே சரணடைந்துவிடும் என்பதும் கண்கூடு.

இந்த வயல் வெளிகளும் அடர்ந்த மரங்களும், சிதையாத குளங்களும் தான் கிளிநொச்சிப் பிரதேசத்தின் செழுமையை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றன. எனினும் நிலையான, நிறைவான அபிவிருத்திக்காக கிளிநொச்சிப் பிரதேசம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் அபிவிருத்தித் திட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும்போது கிளிநொச்சியின் அழகும் செழுமையும் மேன்மேலும் மிளிரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

No comments:

Post a Comment