“அது ஒரு காலம். உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமோ தெரியாது. இலங்கையிலே இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு சவர்க்காரம் கொண்டுசெல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வன்னியிலே ஒற்றைச் சவர்க்காரம் வாங்குவதற்காக எம்மில் பலர் 40 மைல் தூரம் சைக்கிளில் பயணித்திருக்கிறோம். ஒரு சவர்க்காரத்தின் விலை சிலவேளைகளில் எங்கள் நாட்கூலியின் அரைவாசியிலும் அதிகமாக இருக்கும். ஆதலால் ஆடைகளைத் துவைப்பதற்காக பெரும்பாலும் நாம் பனரங்காய்களை மட்டுமே நம்பியிருந்தோம். உலர்ந்த பனரங்காய்களை துணியிலே கட்டி நீரினுள் ஊறவைத்து சவர்க்காரம் போல் பாவித்திருக்கிறோம். சவர்க்காரத்தைப் போல அதுவும் நன்றாக நுரைக்கும். மெலிதாக நறு மணமும் வீசும். இப்போது அந்தக்காலம் எல்லாம் மாறிவிட்டது. வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட கட்டுப்படியாகும் விலையில் சவர்க்காரம் கிடைக்கிறது. அன்று தேடித்திரிந்து சேகரித்த பனரங்காய்கள் இன்று இடைஞ்சலாகி விட்டன. கீழே விழுந்து, காய்ந்து, முற்றம் முழுவதும் பரவிக் கிடக்கும் இக்காய்களைக் கூட்டி அள்ளுவதும் எரிப்பதும் ஒரு வேலையாகி விட்டது. இடைஞ்சல் எனக் கூறி பலர் இம்மரத்தை தறித்தே விட்டார்கள். ஆனாலும் அரிதாய் ஒரு சில மரங்கள் கிராமத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. தற்போதைய இளைஞர்களுக்கு இப்படியொரு மரம் இருப்பதோ, யுத்த காலத்து சவர்க்காரத் தடையை வெற்றி கொள்ள அது உதவிய விதமோ எதுவும் தெரியாது. அவற்றை அறிந்து கொள்ள எவரும் ஆர்வம் கூட காட்டுவதில்லை” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பொன்னம்பலம் தாத்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஆண்டு கள ஆய்வொன்றிற்காக வன்னிப் பெரு நிலப்பரப்பிலே காடுகளை அண்டிய கிராமங்களுக்கு சென்றபோது நான் உரையாடியவர்களின் வெளிப்பாடுகளுள் இப்படிப்பட்ட ஆதங்கங்கள் பற்பல.
“முன்பெல்லாம் பனை காய்க்கத் தொடங்கினால் குதூகலம் தான். நாங்கள் அரிவரி படிக்கும்
காலங்களில் பனம் பழத்துக்காக பெருஞ்சண்டைகள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பள்ளி செல்லும்
வீதியோரமெங்கும் பனைமரங்கள் காய்த்துக் கிடக்கும்.
கீழே விழுந்த பழத்தை புழு வைக்க முதல் பொறுக்குவதற்காகவே ஓடி வருவோம். அந்தக் காலத்தில்
பள்ளி மாணவர் மத்தியில் பனம்பழத்துக்கான போட்டி மிக அதிகம். பனம்பழங்களுக்காக பனை மரங்களை
எல்லை பிரித்துக் கூட ஆட்சி செய்திருக்கிறோம். பனை விதைகளைச் சேகரித்தலும் பாத்தி போட்டு
அவற்றை நாட்டுதலும் கிழங்குக்காகக் காத்திருப்பதும் கூட எங்கள் பால்ய காலப் பொழுதுபோக்குகளுள்
ஒன்று. இப்போது என் சந்ததி அதனை என் கடமையாக மாற்றி விட்டது. எனக்கு எண்பத்து மூன்று
வயதாகிறது. ஐந்து பிள்ளைகளும் எட்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். இப்போதும் நான்
தான் பனங்கொட்டைகளைச் சேகரித்து, பாத்தி போட்டு , கிழங்கெடுத்து, அவித்து என் பிள்ளைகளுக்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால்
மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து உண்பார்கள். பாத்தி போடக் கூப்பிட்டால் நேரமில்லையாம்
கேட்டியளோ! பேரப்பிள்ளைகளோ கிழங்கைத் தொடுகிறார்கள் கூட இல்லை. எனக்கோ முன்னர் போல
இப்போது உடல் இடம் கொடுப்பதில்லை. ஆனால் மனம் மட்டும் சொல்வழி கேட்பதில்லை. இம்முறையும் பாத்தி போடுவதற்காக பனங்கொட்டைகளைச் சேகரித்துத்
தான் வைத்திருக்கிறேன். இதுவே கடைசியாக இருக்குமென நினைக்கிறேன்” என்றார் சிவசேகரம்
(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் சாதாரண மக்களின்
போக்குவரத்து ஊடகமாக மாட்டு வண்டிலே காணப்பட்டது. “ஆரம்ப காலங்களில் குடும்பமாகப் பயணிப்பதற்கும்
சரக்குகளையும் பொருட்களையும் ஏற்றிச்செல்வதற்கும் மாட்டு வண்டியிலேயே நாம் அதிகளவில் தங்கியிருந்தோம்.
வீட்டுக்கு வீடு மாடுகளும் வண்டிகளும் இருந்தன. வண்டியை சரிக்கட்டுவதென்பது ஒன்றும்
இலகுவான காரியமல்ல. மாட்டு வண்டில் எந்த மரத்தால் செய்யப்படுகிறது என்றால் எவரிடமும்
பதிலிருக்காது. ஏனெனில் அதன் ஒவ்வொரு பாகங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை. அவை ஒவ்வொன்றையும் தயாரிக்க ஒவ்வொரு இனமரப்பலகை
வேண்டும். ஒவ்வொரு பகுதியும் தன் இயல்பில் சீராகப் பேணப்பட்டால் மாத்திரமே மாட்டு வண்டில்
செவ்வனே இயங்கும். நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். மாட்டின் மூக்கணாங்கயிற்றுக்குக்
கூட நாங்கள் பிளாஸ்டிக் கயிற்றைப் பாவித்ததில்லை. ஆத்தி நாரை அழுகவைத்துத் திரித்த
கயிற்றைத்தான் பாவித்திருக்கிறோம். மாட்டு வண்டில் செய்வதற்கு இயந்திரவியல் பற்றிய
அறிவு மட்டுமல்ல மரங்கள் பற்றிய அறிவும் மிக மிக அவசியம்” என்றார் ஒரு காலத்தில் வண்டில்
சவாரி செய்த இராமலிங்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“ காலம் மாறிப்போச்சு பிள்ளை! மாட்டு வண்டில்களும் புழக்கத்தில் இல்லை. வண்டில்
பாகங்களின் பெயர்களும் பலருக்குத் தெரியாது. வண்டில் தயாரிப்பதற்குப் பயன்பட்ட ஆத்தி,
மஞ்ச நூனா, கடம்பு, நறுவிலி போன்ற மரங்களின் தேவைகளும் குறைந்து மறைந்தே போய்விட்டன.
இப்படிப்பட்ட மரங்களின் பாவனை இல்லாமல் போக அவை ஒன்றுக்கும் பயனற்ற மரங்களாகவே தற்போது
பார்க்கப்படுகின்றன. பயனில்லை என்று சும்மா
நிற்கும் மரத்தைக் கூடத் தறித்துவிடுகிறார்கள் . இதே நிலை தொடர்ந்தால், காலப்போக்கில்
அம்மரங்கள் அழிந்தே போய்விடும்!” என்று வருத்தப்பட்டார் ஓய்வு பெற்ற அதிபர் கனகசபை
(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“ சாதாரணமாக நாம் சுகயீனமுற்றால், வீட்டிலுள்ள பாட்டி சொல்லும்
கை மருந்தைத்தான் முதலில் உட்கொள்வோம். அப்படியும் குணமாகாவிட்டால் தான் ஆங்கில மருத்துவத்தை
நாடிச் செல்வோம். ஆனால் இப்போது இருமல், சளி,
காய்ச்சல் என்று சிறார்கள் நோய்வாய்ப்படும்
சந்தர்ப்பங்களில் நாம் கை மருந்தைப் பாவித்த
பின் சென்றால் சில ஆங்கில மருத்துவர்கள் எம்மை சிகிச்சை நிலையத்திற்குள்ளே கூட எடுப்பதில்லை”
என்றார் ஓர் இளம் தாய் சரண்யா பெயர் மாற்றப்பட்டுள்ளது). “சிறுவயதிலே எனக்கு இருமல் இருந்தது. குக்கல் என்று கூடக் கூறினார்கள். எனது பூட்டி புங்கங்காயை
எடுத்து கறுத்தக் கயிற்றிலே கோர்த்து கழுத்திலே
நிரந்தரமாகக் கட்டி விட்டார். சில காலங்களில் இருமல் போன இடம் தெரியவில்லை”
என்று பெருமையாகக் கூறினார் பட்டம் பெற்ற எழுபது
வயது மருத்துவர் ஒருவர். புங்கந்தாழ்வையும் புங்கங்குளத்தையும் தெரிந்த பலருக்குக்
கூட புங்கை மரத்தை அடையாளம் காட்டத்தெரியாது
என்பது தான் இன்றைய யதார்த்தம்.
அதேபோல தேத்தாத் தீவை அறிந்த பலருக்கு தேத்தா (தேற்றா) மரத்தைத் தெரியாது. காடுகளுக்கு
வேட்டையாடவும் வேறு தேவைகளுக்காகவும் செல்பவர்களின் குடி நீர்த் தேவையைப் போக்க இம்மரம்
ஆற்றிய அரும்பங்கு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படாமலே மறைந்து விட்டது என்றுதான் கூற
வேண்டும். “முன்பெல்லாம் பூட்டுத் தடி வெட்டக்
கூட நாங்கள் காட்டுக்குத் தான் போவோம். நாம் குடி தண்ணீர் எல்லாம் கொண்டு போவதில்லை.
ஆங்காங்கே ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் காணப்படும்
நீரையே பருகுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் யானை போன்ற விலங்குகள் நடமாடுவதால் அவற்றின் காலடி பட்டு நீர் கலங்கியே
காணப்படும். எம்மிடம் எப்போதும் மண் சட்டி இருக்கும். தேற்றா விதைகளையும் சேகரித்து
வைத்திருப்போம். மண்சட்டியிலே தேற்றா விதைகளைத்
தேய்த்த பின்னர், நீர் நிலைகளிலிருக்கும் கலங்கிய நீரை ஏந்தினால் சில நிமிடங்களில்
நீர் தெளிந்து குடிப்பதற்கு ஏதுவானதாக மாறிவிடும். இப்போது தடி வெட்டுவதற்காக காட்டுக்கும்
போக முடியாது. அப்படிப்போனாலும் எல்லோரும் கையில் ஒரு பிளாஸ்டிக் போத்தலில் குடி நீரைக்
கொண்டு செல்கிறார்கள்” என்றார் குமாரசுவாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“கிணற்று நீர்
பாசி பிடித்தால் கூட தேற்றாக் கட்டையை வெட்டிப் போட்டு விடுவோம், தெளிந்து விடும்.
இப்போதெல்லாம் யார் தான் அப்படிச் செய்கிறார்கள்?. பருத்த தேற்றா மரங்களை ஊர் வெளியில்
காணக்கூட முடிவதில்லை. பிரயோசனமற்ற மரம் என்று பலர் தறித்தே விட்டார்கள். தேற்றா மரம்
மட்டுமல்ல. பெரிய விட்டமுள்ள மரங்களை எல்லாம் இப்போது ஊரில் காணக்கூட முடியாது” என்று அவர் மேலும் ஆதங்கப்பட்டார். “தேற்றா விதைகளை மாவாக்கி கலங்கிய நீரினுள் இட்டால்
தெளிந்துவிடுமென வேதங்களில் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்றார் உள்ளூர் பூசகர்.
மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு, அதற்குத் தாமும்
பங்களித்து இன்றும் நிலைத்து நிற்கும் சாட்சிகளுள் தாவரங்களுக்கு மிகப்பிரதானமான இடம்
இருக்கிறது. மனித இனமும், அதன் அடிப்படைத்
தேவைகள், ஆரோக்கியம், கலாசாரம், பண்பாடு என யாவுமே தாவரங்களுடன் பின்னிப்பிணைந்து பரிணமித்தவை
என்பதை எவராலும் மறுக்க முடியாது. என்ன தான் நவீனமும் நுகர்வுக் கலாசாரமும் எம் ஒவ்வொருவரது
கதவினுள்ளும் நுழைந்து எட்டிப்பார்த்தாலும், இந்தத் தாவரங்கள் இல்லாமல் அவை எவையுமே இல்லை என்பது
உலகம் உணராத உண்மை. இன்றும் கூட உலகெங்கிலும் பல மில்லியன் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக
தாவரங்களையே அதிகளவில் நம்பியிருக்கின்றனர்.
அந்த வகையில் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழர் நாகரிகமும்
தாவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் சமுதாயத்தின் வாழ்வியலிலே தாவரங்களை
இழையோடச் செய்து நின்று நிலைத்திருக்கிறது என்றால் மிகையாகாது. நான் சந்தித்த ஊரவர்கள் கூறியதும் அதனையே பிரதி பலிக்கிறது.
சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் போது
அது இயற்கையுடன் இயைந்திருந்த தன்மையை மட்டும் பதிவு செய்யவில்லை. தாவரங்களின் பல்வகைமை,
பயன்பாடு பற்றிய பல குறிப்புகளையும் கூட அவை
பதிவு செய்திருக்கின்றன. குறிப்பு என்பதற்கப்பால், சங்க கால வாழ்வியலில் தாவரங்களின்
முக்கியத்துவத்தை உணர்த்துவனவாக அவ்விலக்கியங்கள் அமைந்திருந்தன. சங்க இலக்கியம் கூறும் அகவாழ்வாகட்டும்.. புற வாழ்வாகட்டும்…
எங்கேனும் தாவரங்களைக் குறிப்பிடாமல் அமைந்த பாக்கள் அரிது எனக்கூறலாம். வாழ்வின் செயல்களை
விளிக்கப்பயன்பட்ட கொடி ,விதை,முளை, மலர்,
காய், கனி போன்ற சொற்பதங்களின் பிரயோகம் தொட்டு
சடங்குகள், கையுறைகள் என தாவரப்பகுதிகளின் பிரயோகம் விரிந்து சென்ற வண்ணமே காணப்படுகிறது.
போரின் ஒவ்வொரு நிலைகளையும் உணர்த்த பலவித பூக்கள் பயன்படுத்தப்பட்டதாக செய்யுள்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. போரிலே வெற்றி பெற்றுத் திரும்பும் போர் வீரர் வாகை
மரத்தின் பூவைச் சூடி வருவதாகவும் அப்பூவைத்
தொலை தூரத்திலிருந்தும் கூட அடையாளப்படுத்தலாமெனவும் வன்னியின் கிராமங்களில் முதியவர்கள்
சொல்லவும் கேட்டிருக்கிறேன். ‘வாகை சூடி’ என்ற சொற்றொடர் வெற்றியைக் குறிப்பிடப்பயன்படுவதில்
எதுவித ஆச்சரியமுமில்லை.
தமிழர் வாழ்வியலின் ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வரும்
இயற்கை வழிபாடாகட்டும், பின்னர் தொடர்ந்து வந்த
சமய வழிபாடாகட்டும்.. உருவகிக்கப்பட்டு வந்த தெய்வ வழிபாடுகளாகட்டும்.. யாவற்றிலுமே
தாவரங்களுக்கு அதி முக்கிய வகிபாகம் காணப்படுவதை எம்மால் மறுக்க இயலாது. மரவழிபாட்டுடன்
இணைந்து காணப்பட்ட காவல் மரங்களின் நிர்ணயமும் இதற்கு விதிவிலக்கல்லவே.
தாவரங்களின் வகிபாகம் வெறுமனே அத்துடன் நின்றுவிடவில்லை.
தமிழரின் மருத்துவம் என அறியப்படும் சித்த மருத்துவமாகட்டும், உணவுப்பழக்கவழக்கங்களாகட்டும்..தொழில்
சார் துறைகளாகட்டும், அன்றாடத்தேவைகளுக்குப் பயன்படும் உபகரணங்களாகட்டும், யாவுமே தாவரங்களில்லாமல்
உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனலாம். தமிழர் வாழ்வியலும் தாவரங்களும் பின்னிப்பிணைந்து
காணப்படுகின்றமையை வார்த்தைகளால் விவரிக்க முற்படல் கடினம். தொகுக்கின் அவை எஞ்சி நிற்கும்.
விரிக்கின் பெருகி நிற்கும் என்பது தான் யதார்த்தம். தமிழரின் தாயகங்களுள் ஒன்றான வட
இலங்கையிலும் கூட மக்களின் வாழ்வும் தாவரங்களும் பின்னிப்பிணைந்தே காணப்பட்டு வந்தன.
இலங்கையின் இட அமைவும்
தீவாக அமைந்து விட்ட தன்மையும் அதனை உயிர்ப்பல்வகைமைச் செறிவுமிக்க நிலமாக அறியப்படக்
காரணமாகி விட்டன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையுடனொத்த சாயலையுடைய உயிர்ப்பல்வகைமையை
இலங்கையிலும் உயிரியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இலங்கை தனித்தீவாக பரிணமித்தமையால்
இலங்கைக்கேயுரித்தான, தனித்துவமான தாவர விலங்குகள் பல இங்கு காணப்படுகின்றன. தென்மேற்கு
பகுதியின் உயிர்ப்பல்வகைமைச் செறிவு, அதன் தனித்துவமான தன்மை, அவ்வுயிர்ப்பல்வகைமைக்கு
ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உலகிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட
வேண்டிய உயிர்ப்பல்வகைமைச் செறிவு மிக்க பகுதிகளுள் இலங்கையும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
ஆதலினால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுள் பெரும்பாலானவை
தென்பகுதியுடனே மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன.
அதற்கு வழிசமைப்பது
போல், இலங்கையின் வடக்கு , கிழக்குப் பகுதிகளில்
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தம் உயிர்ப்பல்வகைமை ஆய்வுகளுக்கான அணுகலைத்
தடுத்திருந்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பல ஆய்வாளர்கள் இவ்வுண்மையை வெளிப்படுத்தியிருந்தனர்.
அவர்களுள் சிலர் இலங்கையின் வட எல்லையிலுள்ள காடுகளில் பல்தேவைக்குப்பயன்படுத்தப்படக்
கூடிய மருத்துவ குணமுள்ள மரங்கள் பல இருப்பதை
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் கூட இம்மரங்கள் ‘அரிமரம்’ என்ற கண்கொண்டு
மாத்திரமே பார்க்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையிலேயே பாதுகாக்கப்பட்ட
இயற்கை வனப்பகுதிகளின் பரப்பளவு உயர்வாக உள்ள மாகாணம் வட மாகாணமாகும். யுத்த காலத்திலும்
இவ்வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவையென்பது பல போர் வரலாறுகளில் குறிப்பிடப்படாத விடயமாகும்.
வட இலங்கையின் காடுகள் வன்னிப்பகுதியிலே, அதாவது
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலே செறிந்து காணப்படுகின்றமையை
வான் வரைபடங்கள் மூலம் எளிதில் அறியமுடியும். வன்னி மக்களின் வாழ்வியலும் இந்த மரங்களைச்
சுற்றியே அமைந்திருந்தமையை கள ஆய்வுகளின் போது
மேற்கொள்ளப்பட்ட குழுச்சந்திப்புகளின் மூலம்
என்னால் அறிய முடிந்தது. ஆயினும், அவற்றை ஆய்வு செய்வதற்கு உசாத்துணை நூல்களைத் தேடிய போது அறிவு வெளியிலே யுத்தம் நடைபெற்ற
காலத்துக்கும் மேலானதோர் இடைவெளி காணப்படுவதை உணர முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு,
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலனித்துவ உயிரியலாளர்களாலும் நிர்வாகிகளாலும்
எழுதப்பட்ட நூல்களையும் பிற்காலத்தில் தென்னிலங்கையில்
எழுதப்பட்ட மிகச் சொற்பளவிலான நூல்களையும் தவிர வேறு எந்தவோர் ஆவணத்துக்குமான அணுகல்
எனக்குக்கிடைத்திருக்கவில்லை. இந்த இடைவெளியின் தாக்கத்தை கடந்த ஒரு தசாப்த காலத்தில்
வெளியான பல ஆய்வறிக்கைகளில் காணலாம். உதாரணமாக, தாவரங்கள் பற்றிய பல ஆய்வறிக்கைகளில்
இலங்கையில் வழக்கிலிருக்கும் தமிழ் பொதுப்
பெயர்கள் அரிதாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
யுத்தம் முடிந்து ஒரு தசாப்தகாலம் முற்றாகக் கடந்துவிட்டது.
போருக்குப்பின்னரான மீள் குடியேற்றங்களும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திகளும் நடந்தேறிய
வண்ணமேயுள்ளன. இந் நிலையில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் காடுகளும் மரங்களும் பெரும்
அச்சுறுத்தலை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளன. அபிவிருத்தியின் முன்னே காடுகள் உயர்வாக
மதிக்கப்படும் நிலைமை காணப்படுவதில்லை. ஆனால், அக்காடுகளுள் பொதிந்திருக்கும் அரிய
செல்வங்கள் தாம் எம் தமிழர் கலாசாரத்தின் அடி வேர் என்பதைக் காலப்போக்கில் நாம் மறந்துவிட்டோம்
என்றே தான் கூற வேண்டும்,
பொதுவாக இலங்கையிலே “இடப்பெயர்களின் கருவூலம் இயற்கையே!”
என கலாநிதி.இ.பாலசுந்தரம் குறிப்பிட்டிருக்கிறார். வடஇலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதிலும் வன்னிப்பகுதியை எடுத்து நோக்கினால், பெரும்பாலான கிராமங்களின் பெயர்களில் பகுதி
தாவரமொன்றின் பெயராகவும் விகுதியானது நீர்ப்பரப்பின் வகையாகவும் (ஆறு, குளம்,
மோட்டை போன்றன) இணைந்து அமைந்திருக்கும். இந்தக் கிராமங்களின் பெயர்களைத் தொகுத்துப்பார்த்தாலே
வன்னிப்பகுதியில் காணப்படும் தாவரங்களின், அதிலும் குறிப்பாக உயர் வகுப்பான மரங்களின்
பல்வகைமை புரியும். ஆரம்ப காலங்களில் இத்தகைய ஒவ்வொரு மரங்களும் ஏதோவொரு வகையில் வன்னி
மக்களின் வாழ்வுடன், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த
வண்ணம் தான் காணப்பட்டிருக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் மரங்களினால் பூர்த்தி செய்யப்பட்ட
தேவைகள் பலவற்றை நவீன நுகர்வுப் பொருட்கள்
பதிலீடு செய்யத் தொடங்கியதால் அம்மரங்கள் பயனற்றவையாகிப் போயின. அரிமரத்துக்குரிய மரங்கள்
மட்டும் இன்னமும் பெறுமதிமிக்கனவாய்ப் பார்க்கப்படுகின்றன.
நான் மேற்கொண்ட கள
ஆய்விலே இவற்றை நிரூபிக்கும் சில வருந்தத்தகு முடிவுகள் விஞ்ஞான பூர்வமாக உறுதியாயின.
இந்த ஆய்வானது வன்னிப்பகுதியில் காணப்படும் மூன்று மீற்றரிலும் அதிகளவு உயரமாக வளரக்கூடிய
மருத்துவ குணம் மிக்க நூற்றுறைம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் பற்றி கிராமத்து மக்களிடம்
காணப்படும் பாரம்பரிய அறிவினை அடிப்படையாகக் கொண்டதாகும். அம்மரங்களுள் நூற்றுப்பதினேழு மரங்களைப் பற்றி அவர்கள்
அறிந்திருந்திருந்தார்கள். அவற்றிலும் தொன்னூற்றெட்டு மரங்களைப் பற்றி மாத்திரமே அவர்கள்
மிகவும் நன்றாக அறிந்திருந்தார்கள். இம்மரங்களானவை அவற்றின் மருத்துவப் பயன்பாடு, வீட்டுத்தேவைக்கான
பயன்பாடு, தற்போதும் பாவனையிலிருக்கும் தன்மை, பொருளாதார, சுற்றுச் சூழல், சமய, கலாசார
முக்கியத்துவம், மற்றும் வரட்சி, வெள்ளம் யுத்தம் போன்ற கஷ்ட காலங்களின் போதான ஆதரவு
ஆகிய விடயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
ஆய்வு முடிவுகளின் படி, மரங்களின் மருத்துவத் தேவை மற்றும்
வீட்டுத்தேவைகளுக்கான பாவனைகளும் கலாசார முக்கியத்துவமும் அற்றுப்போகும் போது அம்மரங்கள்
மக்களுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. அதாவது, மரங்கள் வீட்டுப்பாவனைக்கோ அல்லது
மருத்துவத் தேவைக்காகவோ அல்லது உபகரணங்கள், உணவு, சமயம், நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற
கலாசாரத்தேவைகளுக்கோ பயன்படுத்தப்பட்டு வரும்போது மாத்திரமே அவை தொடர்பிலான
அறிவு மக்கள் மத்தியில் காணப்படும் என்பதை ஆய்வு முடிவு எடுத்துரைத்தது. கள
ஆய்வின் போது கிராம மக்கள் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் இவ்வாய்வு முடிவினை உறுதி செய்வதாயும்
அமைந்துவிட்டன.
ஏலவே குறிப்பிட்டது போல், பெரும்பாலான மரங்கள் காடுகளிலும்
ஏனையவை வீதியோரங்களிலும் வீட்டுத்தோட்டங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் பொதுவாகக் காணப்படுபவையாகும்.
வன்னிப் பெரு நிலப்பரப்பிலே அபிவிருத்தியின் பெயரால் காடழிப்பு நியாயப்படுத்தப்பட்ட வண்ணமே செல்கிறது. அபிவிருத்தி
மேலும் தொடர, புதிய வீதிகள் உருவாக, காடழிப்பு மீண்டும் அதிகரிக்க என சுழற்சியாய் செயற்பாடுகள்
நடந்த வண்ணமே உள்ளன. பல சந்தர்ப்பங்களில் இது தவிர்க்கமுடியாததோர் நிலமையாகக் காணப்பட்டாலும்
அழிவடையும் தாவரங்களின் நிலையைக் கருத்தில் கொள்ளும் போது, எமக்கான கடப்பாடுகள் ஓங்கி
நிற்கின்றன. அத்துடன் சீதனம், வீட்டுத்திட்டம், வர்த்தக நோக்கங்கள் காரணமாக காணிகள்
துண்டாடப்படுவதும் கூட மரங்கள் தறிக்கப்பட்டு அழிந்து போகக் காரணமாகிவிடுகின்றன.
தாவரங்கள் தம் வாழ்விடத்தினை இழக்கும் போது அவை அழிந்து விடும்
அபாயத்திற்குள் தள்ளப்படுகின்றன. அத்துடன் அவற்றுடன் இணைந்த பாரம்பரிய அறிவும் அதனுடன்
இணைந்த கலாசாரமும் மொழியும் என யாவுமே மெல்ல மெல்ல அழிந்து விடும். அதே போல நவீனத்தின்
பெயரால் பல தாவரங்களின் பாவனைகள் தேவையற்றுவிடுதலும் மனிதனை தாவரக் குருடனாக மாற்றி
விடும். சில சிறு மரங்களைப் பற்றி விசாரித்தபோது, “முந்தி இந்தப்பக்கமெல்லாம் அவைதான்
இருந்தன. இப்ப மருந்துக்கும் கூட அவற்றைக் காண இயலாது. காடு தள்ளும்போது எல்லாவற்றையும்
சேர்த்தே தள்ளி விட்டார்கள்” என்று கிராமத்து மக்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன். நோயாளிகள்
விடுதி கட்டுவதற்காக ஒரு மரத்தைக் கூட மீதம் விடாமல் கனரக வாகனம் வைத்துத் தள்ளிய காணியையும்
அணை கட்டியதால் காணி இழந்தவர்களுக்கு புதிய
காணி வழங்குவதற்காக தள்ளப்பட்ட பெரும் கருங்காலிக் காட்டையும் கூட நான் தொழிலனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
வன்னியின் சுதேச மரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும்
மற்றொரு காரணிகளுள் ஒன்று தேர்ந்தெடுத்த மரங்களை மட்டும் அரிந்து செல்லலாகும். பனையும்
பாலையும் முதிரையும் காட்டாமணக்கும் என மரக்குற்றிகள் வண்டி வண்டியாக வன்னியை விட்டுச்
செல்வதைக் காணாதவர்கள் அரிது. பாலைப் பாணியையும்
வீரைப் பாணியையும் குரக்கன் உரொட்டியுடன் உண்டு வளர்ந்த சமூகம் அம்மரங்களை இன்று
அரிமரக் கண் கொண்டு பார்க்கிறது என்பதை ஏற்க
சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது. இம்மரங்களின் வளர்ச்சி வீதம் மிகக் குறைவு. எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவற்றை
அரிமரத்துக்குப் பயன்படுத்துதலானது அவை அரிதாகி நிரந்தரமாகவே அழிந்து போகும் நிலையைக்
கூட ஏற்படுத்தலாம். “முன்பெல்லாம் இங்கு முதிரை மரங்கள் இருந்தன. யாவற்றையும் வெட்டி
ஏற்றியாயிற்று. இப்போ பனை மரங்கள் மாத்திரம் தான் எஞ்சியுள்ளன. அவற்றிலும் கண் வைத்து
விட்டார்கள். இன்னும் சில நாட்களின் பின் உயரமும்
விட்டமும் கூடிய பனை மரங்களை எல்லாம் எமது ஊரில் காண்பது அரிதாகி விடும்“ என்று வருத்தப்பட்டார்
இயக்கச்சியைச் சேர்ந்த கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“ஊர்மனையில் கட்டிப்பிடிக்க இயலாதளவு விட்டமுள்ள பெரு மரங்களை
இப்போதெல்லாம் காண முடியாது. அவை பலரது கண்களை உறுத்தியிருக்கின்றன போலும். விறகுக்காயினும்
அவற்றை அரிந்து தறித்துச் சென்று விடுகிறார்கள். அத்தகைய மரங்களைத் தறிக்க க் கூடாது
என்று சட்டம் இல்லை போலும்! பெருமழைக்கெல்லாம் நனையாமல் அம்மரங்களின் கீழ் நாம் ஒதுங்கியிருக்கிறோம்.
அந்தக் காலமெல்லாம் இனி வரப்போவதுமில்லை” என்பது
நாகேஸ்வரி என்ற பாட்டியின் ஆதங்கம்.
“கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டமொன்று வந்திருந்தது. கிராம
அபிவிருத்திச் சங்கத் தலைவரான என்னை அழைத்த பொறுப்பதிகாரி, வீதியோரமாக நின்ற பெரிய
விளாத்தி மரத்தை தறித்து அகற்றி விடுமாறும் அது அபிவிருத்திக்கு இடைஞ்சல் எனவும் பலமுறை
என்னிடம் கூறிச் சென்றார். அம்மரத்தை அகற்றாமல் அபிவிருத்தி செய்யக்கூடிய எத்தனை தீர்வுகளை
நான் முன் மொழிந்தும் பயனிருக்கவில்லை. இறுதியில், இன்று நீங்கள் தறிக்காவிட்டால் நாளை நான் தொழிலாளரைக்
கூட்டி வந்து தறிப்பேன் என எச்சரித்து விட்டுச்
சென்றார். நாம் சிறுவர்களாக விளாங்காய் அடித்து
உண்ட மரம். அதைத் தறிப்பதற்கு மனம் உடன்படவில்லை. இரவோடு இரவாகச் சென்று மரத்தடியில்
கல்லை வைத்தேன். பல கற்பூரங்களைக் கொழுத்தினேன். திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகிவற்றை
இட்டேன். வீட்டுக்கு வந்து விட்டேன். காலையில் அதிகாரி தொழிலாளர்களுடன் சென்றார். எவருக்கும்
அம்மரத்தைத் தறிக்குமளவுக்கு தைரியம் வரவில்லை. அவர்களது நம்பிக்கையை மீறி முடிவெடுக்கும்
தைரியம் அதிகாரிக்கும் இருக்கவில்லை. மரத்துக்கு பங்கமில்லாமல் புதிய வீதியும் போடப்பட்டது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்
தளைய சிங்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்படியும்
மரங்களைக் காக்க முயற்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மரங்களை அழியவிடாமல் காப்பது ஒருபுறம் இருக்க, அம்மரங்களைச்
சார்ந்து காணப்படும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டிய தேவை இன்னொரு புறம் இருக்கிறது.
தாவரங்களும் அவை சார்ந்த பாரம்பரிய அறிவும் நாணயமொன்றின்
இரு பக்கங்கள் போன்றவை. இலங்கையிலே தாவரங்கள் எத்தகைய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனவோ
அதிலும் அதிக அச்சுறுத்தலை அவை சார்ந்த பாரம்பரிய
அறிவு எதிர் நோக்குகிறது. இவ்வறிவு தொடர்பில் சந்ததிகளுக்கிடையே சமத்துவம் காணப்படாமையை
இவ்வாய்வின் மூலம் தெளிவாக அறிய முடிந்தது. இப்பாரம்பரிய அறிவானது 70 வயதை எட்டிய முதியவர்களிடமே
பெரும்பாலும் குடிகொண்டிருப்பதால் அது மிக வேகமாக மறைந்து வருகிறது. நேற்று சந்திக்க
எண்ணியவர்கள் சிலர் இன்று உயிரோடு இல்லை. ஆதலினால், அவர்களிடம் மட்டுமே குடிகொண்டிருக்கும்
பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டிய அவசர தேவை தற்போது உருவாகியிருக்கிறது. அவ்வாறு
ஆவணப்படுத்தும் போது அதனை எதிர்கால சந்ததிகளும் அறிய வழி ஏற்படுவதோடு அல்லாமல் பல புத்தாக்கங்களுக்கும்
அது வழி வகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. அத்துடன் இலங்கைக்கே உரித்தான தாவரங்கள் சார்ந்த
பாரம்பரிய அறிவும் இலங்கைக்கே உரித்தானதாகும். தத்தமது பாரம்பரிய அறிவுக்குச் சொந்தமான
நாடுகள் பல பெரும்பாலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவே காணப்படுகின்றன. அவை
அதன் பெறுமதியை இன்னும் உணரவில்லை. . மாறாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் பல அவ்வறிவின்
பெறுமதியை நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. வலுவான சட்டங்கள் காணப்படாத காரணங்களால் இலங்கையின்
பாரம்பரிய அறிவுடன் தொடர்புடைய காப்புரிமைகள்
ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இதனால் ஒரு நாடாக இலங்கையும் இங்கு பாரம்பரிய அறிவைக் கொண்டிருக்கும் சமூகங்களும்
இழந்து வரும் நன்மைகள் சொல்லிலடங்கா. இவ்வாறு சமூகங்கள் தமக்கே உரித்தான மரபுப் பதார்த்தங்கள்
மீதான காப்புரிமையை இழந்துவிடாமல் இருப்பதற்காக உயிரியல் பல்வகைமை மாநாட்டின் செயலகத்தினால் ‘நாகோயா
நெறிமுறை’ உருவாக்கப்பட்டது. ஆயினும் அதில் இலங்கை இன்னும் கைச்சாத்திடவில்லை. இந்த
பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை ‘நாகோயா நெறிமுறை’ யில் கைச்சாத்திடும்
போது அதன் நன்மைகளை எமது சமூகம் அனுபவிக்க
இயலும். இனிமேலும் தாமதித்தால், நாம் இழந்தவைகளின்
வலிகளை விட இழந்துகொண்டிருப்பவைகளின் வலியும் பெறுமதியும் அதிகரித்துக்கொண்டே செல்லும்
என்பது கண்கூடு.
No comments:
Post a Comment