அது 2001 ஆம் ஆண்டு. க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள் வெளி வந்து நாமெல்லாம் உயர்தரப்பிரிவில் அடியெடுத்து வைத்த காலம். தலை நகரில் உள்ள பெண்களுக்கான ஒரேயொரு தமிழ் மொழி மூல, பகுதி அரச பாடசாலை அது. பாடசாலையின் தவணைக்கட்டணம் அப்போது 1000.00 ரூபாவாகியிருந்தது. அதைவிட மேலதிகமாக வெவ்வேறுகட்டணங்களும் இருக்கும். 1996 இடப்பெயர்வும் நாம் இழந்தவையும் எம்மை எப்போதும் ஒரு அழுத்தத்துக்குள்ளேயே வைத்திருந்தன. அம்மா அரச உத்தியோகம் பார்த்தாலும், பாடசாலைக்கட்டணம் கூட சில வேளைகளில் பெரும் சவாலாகத் தான் இருந்திருக்கிறது.
முதல் வாரத்திலேயே தனியொருவரைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் என எம்மில் சிலரை வகுப்பாசிரியரே அடையாளப்படுத்தியிருந்தார். தனியாக வந்து சந்திக்கச் சொன்னார். விபரங்களைக் கேட்டறிந்தார். முதலாம் தவணையிலிருந்து இறுதித் தவணை வரை நாம் பாடசாலையில் எதுவித கட்டணங்களும் செலுத்தவில்லை. எல்லாக் கட்டணத் தொகையும் கழிக்கப்பட்டு ஒவ்வொரு தவணையும் மீதமாக அறு நூற்றுச் சொச்சம் எமக்கு கைகளில் கிடைக்கும். பழைய மாணவிகள் சங்கத்தின் புலமைப்பரிசிலின் பயனாளிகள் நாங்கள். அதை வழங்குவதற்காக எமக்கு பழைய மாணவிகள் சங்கம் எந்தவொரு நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை. " நல்லாய்ப் படிக்க வேணும்!". ஆசிரியர் சொன்னது அது மட்டும் தான். அதுவும் அந்த ஒரு தடவை மட்டும் தான். கடைசித் தவணைகளிலெல்லாம் என் புள்ளிகள் 50 ஐத் தாண்டியதில்லை. ஆனால் , வகுப்பாசிரியர் கடிந்தது கூட இல்லை.
இன்றும் எனது உயர்தரக் கல்விக் காலத்தை மீட்டுப்பார்க்கிறேன். நாங்களெல்லாம் சராசரி மாணவர்கள் தான். எதற்காக எங்களைத் தேர்வு செய்து அந்தப் புலமைப் பரிசிலை வழங்கவேண்டும்?. வகுப்பில் முதலாவதாக வரும் மாணவியொருவருக்கு வழங்கியிருந்தால் சில நேரங்களில் அவரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கச் செய்திருக்கலாம் தானே? அங்கு அந்த புலமைப்பரிசிலின் நோக்கம் கல்விக்கான அணுகல் தொடர்பில் எல்லாருக்கும் சம வாய்ப்பினை வழங்க வேண்டும்; வகுப்பில் காணப்படும் ஏற்றத் தாழ்விடைவெளி குறைய வேண்டுமென்பதாகத் தான் இருந்ததே தவிர ஏற்கெனவே அணுகல் காணப்படுபவர்களுக்கு மேலும் சிறப்பான அணுகலை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஒருவேளை, பழைய மாணவிகள் சங்கம் அப்படி நினைத்திருந்தால், இன்று நாம் வகிக்கும் இடங்களைச் சில வேளைகளில் எம்மால் அடைய முடியாமல் கூடப் போயிருக்கலாம்.
அந்த நிலை மாறி, இன்று நாமெல்லாம், சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலைகளை எட்டியிருக்கிறோம். எமக்கு முந்திய சந்ததியினர் தீர்மானங்களை எடுப்பதற்காய்த் துணை புரிகிறோம். ஆனாலும் கூட, 'கல்வியில் சமத்துவம் தேவை' என்பதை எம்மால் அங்கீகரிக்க க் கூட முடியவில்லை. மின் கல்வி என்கிறோம். 63% அணுகல் இருக்கிறது என்கிறோம். மீதி 37% க்கும் தொலைக்காட்சி, வானொலி மூல அணுகல் இருக்கிறது என் கிறோம். முக நூலில் தரவேற்றினால் 95% அணுகல் கிடைக்கும் என்கிறோம். அந்த 95% அணுகலுக்குரியவர்கள் யார் என்பது பற்றிய தரவுகள் எம்மிடம் இல்லை. வறுமையே இல்லை என்கிறோம். மின் கல்விக்கான அணுகலை வறுமை தடுக்கவில்லை என்கிறோம். பிரச்சினை எல்லாம் இணைய இணைப்பின் செறிவிலும் புலப்பரப்பிலுமே இருக்கிறது என்கிறோம். பாடசாலை ஆரம்பித்ததும் மின் கற்பித்தல் மூலம் நடைபெற்றவை அனைத்தும் மீளக் கற்பிக்கப் படும் என்கிறோம். கோவிட் 19 போன பின், மின் கல்வியும் ஆறிய கஞ்சியாகி விடும் என்கிறோம். எம்மை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. இலக்கேயில்லாமல் பயணிக்கிறோமா என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகளை எல்லாம் விதிவிலக்குகள் என எப்படி எம்மால் இலகுவாகக் கூறிவிட முடிகிறது? அவர்களை மற்றவருக்குச் சமமாக நடாத்த வேண்டியது சமூகம் சார்ந்து எமக்கிருக்கும் பொறுப்பு என ஏன் எம்மால் எண்ணக்கூட முடியவில்லை?
வைத்தியசாலையில், நோயாளியைப் பரிகரிக்கும் போது பாரபட்சம் நடந்தால் கொதித்தெழுகிறோம். 67% நோயாளிகளைப் பரிகரித்து விட்டு மீதமானோரைப் பரிகரிக்க முடியாது என்று கூறினால், அமைதியாய்ச் சென்று விடுவோமா என்ன? கேட்டால் , அது மனித உயிர் சார்ந்தது. சமத்துவம் தேவை என்று விளக்கமும் வைப்போம். ஆனால், கல்வியில் சமத்துவம் என்பது ஒரு சந்ததியின் இருப்பையே தீர்மானிக்கும் என்பதை எம்மால் உணரக் கூட முடிவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
ஆட்சி (GOVERNANCE) சார்ந்து பயணிக்க வேண்டியவர்களுள் நானும் ஒருத்தி என்ற வகையில், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளும் அவற்றை அடைவதற்காக எம்முன் குவிந்திருக்கும் கடப்பாடுகளும் அடிக்கடி மனக்கண்ணில் வந்து செல்கின்றன. சமத்துவமும் (EQUITY) ஒருவரையும் பின்னிற்க விடக்கூடாது (LEAVING NO ONE BEHIND) என்ற அடிப்படையும் மனவெளியில் அடிக்கடி எட்டிப்பார்க்கின்றன. 37 சதவீதத்துக்கு தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படுமாயின் மின் கல்வி க் கான அணுகல் காணப்படும் 67% க்கும் அதே தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படத்தானே வேண்டும். அப்படியாயின், ஏன் நாம் தொலைக்காட்சி வழிக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த எண்ணவில்லை? 67 சதவீதமானோர் மின் வழியில் கற்றாலே போதும் என எண்ணுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இப்படி என்னுள்ளே எழும் பல கேள்விகள் விடை காண முடியாமல் தவிக்கின்றன.
கோவிட் 19 இன் பெயரால் கல்விக்கான அணுகல் தடுக்கப்பட்டமை ஒரு சில மாதங்கள் மட்டுமே. இந்தக் காலத்தை ஏன் நாம் மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கப் பயன்படுத்தக் கூடாது. சூழலை அவதானிப்பதற்காக இயற்கை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கிய காலமாக ஏன் பார்க்க க் கூடாது? ஆசிரியர்கள் இணைந்து ஓரிரு பாடங்களை இணைத்து ஏன் மாணவர்களுக்கு செயற்பாடுகளை வழங்க க் கூடாது? தமக்குக் கிடைக்க க் கூடிய வளங்களைக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் ஆக்கங்களை உருவாக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களாக இதை ஏன் பாவித்திருக்க க் கூடாது? அப்படிச் செய்திருந்தால், மாணவர்களிடம் காணப்படும் எத்தனை விசேட திறமைகள் வெளிப்பட்டிருக்கும். அவர்களது ஆக்கங்களை எல்லாம் நிலமை சுமுகமான பின்னர் காட்சிப் படுத்தியிருந்தால்...புத்தகமாக வெளியிட்டிருந்தால்... எத்தனை ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டிருக்கும்? அறிவுப்பகிர்வுகளுக்காக எவ்வளவு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்?
உலகின் தொழில் நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இயற்கையை அவதானித்தமையால் உருவானவையே தவிர, வெறும் ஏட்டுக்கல்வியால் உருவானவையல்ல. ஏட்டுச் சுரைக்காய் பல வேளைகளில் கறிக்கு உதவுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாம் பரீட்சைகளில் பெற்ற புள்ளிகளை எவரும் நோக்குவதில்லை. சித்தியெய்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பரீட்சித்திருக்கிறார்கள். இதை நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், புறக்கிருத்திய நடவடிக்கைகளால் கிடைக்கும் திறன்களும் அனுபவங்களும் தான் எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளத் துணை நிற்கும் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். மாணவர்கள் மீது ஏட்டுக்கல்வியை மேலும் மேலும் திணித்து, கோவிட் 19 இன் பின்னரான காலப்பகுதியில் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்காமல், கோவிட் 19 இன் பின்னரான காலத்தை எதிர்கொள்ள அவர்களை நாம் தயார்படுத்த வேண்டும்.
தரம் 5 புலமைப்பரிசில், கட்டாயமானதல்ல என அரசே அறிவித்த பின்னரும் கூட, பத்தே வயதான மாணவர்கள் பெரும் அழுத்தங்களின் மத்தியில் மின் வழிக் கல்வியில் இணைந்திருக்கிறார்கள். உண்மையிலேயே புலமைப்பரிசில் தேவைப்படுபவர்களுக்கு அந்த மின்வழிக்கல்விக்கான அணுகல் இருக்கிறதா என ஆராய்ந்தால் எம் எவரிடமும் தரவுகள் இல்லை. பல இடைவெளிகளை வெறும் இலக்கங்களால் நிரப்பிவிடத்தான் நாம் துடிக்கிறோம். பொது வெளியில் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. தரவுகள் சார்ந்து விஞ்ஞான பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கான வல்லமை இன்னும் எம்மிடம் உருவாகவில்லை. அதற்கான தரவுகளும் எம்மிடத்திலில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மொத்த ஆசிரியர் தொகையை மொத்த மாணவர் தொகையால் பிரித்தே விளக்கம் சொல்லிப் பழகிவிட்டோம். ஆதலினால் எமக்கு ஏற்றத்தாழ்வுகளை உணர முடிவதில்லையோ என்னவோ?
A9 வீதியால் பயணித்தபடி, "வன்னி எப்படி அபிவிருத்தியடைந்து விட்டது தெரியுமோ?" என தொலைபேசியில் விளக்கம் சொல்பவர்கள் தான் நாங்கள்.
அவ்வீதியிலிருந்து சில மீற்றர்கள் உள்ளே சென்றாலே எமக்கு உண்மை நிலவரம் புரிந்துவிடும். ஆனால், பொதுவாக நாம் அப்படிச் செய்வதில்லை. அகன்று விரிந்த வன்னியின் நிலப்பரப்பின் அந்தங்களிலுள்ள பாடசாலைகளும் மீளக் குடியமர்ந்த, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் வாழ்வியலும் எமக்கு எப்போதும் புரிவதில்லை என்பதால் பிராந்தியம் சார்ந்த எமது நிர்வாக முடிவுகளில் அவை தாக்கம் செலுத்துவதில்லை. எங்கள் முடிவுகள் எப்படி மெறுபேற்றை நோக்கிச் செல்லும்? எங்களாலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்க முடியாவிட்டால், யார் தான் அங்கீகரிக்கப் போகிறார்கள்? யாரிடம் நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்?
மீண்டும் மீண்டும் என் நினைவுகளை மீட்கிறேன். சைவ மங்கையர் வித்தியாலயமும் அதன் தூர நோக்கும் எட்ட முடியா உயரத்தில் நின்று புன்னகைக்கின்றன.
1 comment:
கல்வி என்பது கற்றல் (திருக்குறள் - கற்க கசடு அற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக.)
அறிவு என்பது (திருக்குறள் - எப்பொருள் யார் வாய் செல் கேற்பினும் அப் பொருளில் மொய்பொருள் காண்பது அறிவு.)
மனிதனுக்கு கற்றலும் அறிவும் மிகவும் முக்கியமானது என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது. நன்றி
Post a Comment