வளங்களின் நுகர்வு குறைக்கப்பட்டதால் அந்நுகர்வினால் ஏற்படும் கழிவுகளின் உற்பத்தியும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக சுற்றுச் சூழல் மாசடையும் தன்மை குறைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை போன்ற பல நாடுகளில் வளி மற்றும் ஒலிமாசுக்குக் காரணமான மிகப் பிரதானமான துறை போக்குவரத்தாகும். பெருந்தொற்றுக் காலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டமை அம்மாசுக்கள் பெருமளவில் குறைவதற்கு வழிவகுத்தன. சுற்றுலாப் பயணிகளின் வரவு குறைவடைந்தமையால் இயற்கைச் சூழல் தொகுதிகள் மீதான அழுத்தங்கள் குறைவடைந்தமை பல நாடுகளில் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது.
கங்கைநதியின் நீர் தெளிவடைந்தமையும் பல நூறு மைல்களுக்கப்பாலிருந்து பார்க்கும் போதே இமயமலை தெரிகின்றமையும் என்றுமில்லாதவாறு நகரச் சதுப்பு நிலங்களில் வலசைப் பறவைகள் வந்து சேர்ந்தமையும், தாய்லாந்தின் கடற்கரைகளில் அபூர்வ ஆமையினம் முட்டையிட வந்தமையும் என இயற்கை சார் நற்செய்திகள் பலவற்றை இந்தப் பெருந்தொற்றுக் காலம் தர மறுக்கவில்லை.
நாடுகள் பொருளாதார ரீதியாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்த போதும், தற்சார்புப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை அவை மீள உணர ஆரம்பித்தமையும் கூட இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான்.
இவை இப்படியிருக்க, பெருந்தொற்றுக் காலத்தில் சில பொருட்களின் நுகர்வு மிகையாகியதும் கழிவுகள் சேர்தல் அதிகரித்தமையும் கூட நிகழ்ந்தன. அதை நாம் மறுக்க இயலாது. முகக்கவசம் உள்ளிட்ட சுயபாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொதியிடல் பதார்த்தங்களின் நுகர்வையும் பாவனையையும் அவை சார்ந்த கழிவுகள் அதிகரித்து வருகின்றமையையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் அவை பற்றி நாம் அதிகம் சிந்தித்ததில்லை. சிலவற்றைத் தவிர்க்க முடியாமலிருப்பினும் பலவற்றை எப்படி நாம் இழிவளவாக்கலாம் என்றேனும் நாம் சிந்தித்திருப்போமா? நாம் அப்படிச் சிந்தித்திருந்தால் வீதிகளிலும் இயற்கை வாழிடங்களிலும் பாவித்த முகக்கவசங்களை வீசியெறிந்திருக்க மாட்டோம்.
ஏனெனில் வாழும் மண் மீது, இயற்கைச் சூழல் மீது, அங்கு வாழும் அங்கிகள் மீது நாம் காதல் கொள்வதில்லை. அப்படிக் காதல் கொள்பவர்களையும் கூட சமூகத்துக்கு ஒவ்வாதவர்களாகவே பார்த்துப் பழகி விட்டோம். காதல் என்பது மனிதன்-மனிதன், ஆண்-பெண், மனிதன்- செல்லப் பிராணி, மனிதன்-அவன் உடைமைகள் என்ற மட்டுப்படுத்தல்களுக்குள் முடங்கி விடுவதைக் காண முடிகிறது.
பெப்ரவரி 14 ஆம் திகதியான நாளை கொண்டாடப்படும் காதலர் தினத்துக்காக முழு நுகர்வு உலகுமே பல உத்திகளைப் பாவித்து ஊக்கங்களை வழங்கியுள்ள இத்தருணத்தில் , பொறுப்புணர்வு மிக்க சந்ததியாக நாம் சில விடயங்களை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கடைசியாக நீங்கள் எப்போது வெற்றுக் கால்களுடன் மண்ணிலே நடந்திருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது மரமொன்றைத் தொட்டுக் கதை பேசியிருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது பறவையொன்றைப் பார்த்து அதன் வண்ணங்களை இரசித்திருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது உங்கள் கையிலிருந்த குப்பையை அக்கம் பக்கம் பார்த்து விட்டுத் தெருவிலே வீசியெறிந்திருக்கிறீர்கள்?
நீங்களே விடை தேடிப் பாருங்கள்! உங்களுக்கும் இயற்கைக்குமான தூரத்தையும் நீங்கள் இயற்கை மீது கொண்டிருக்கும் காதலையும் உங்கள் விடைகள் இரகசியமாக எடுத்தியம்பும்.
மிருதுவான புற்றரையிலே நீங்கள் சாய்ந்திருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அண்ணாந்து பார்த்தால் அழகிய நீலவானத்திலே மென்பஞ்சு போன்ற முகில் கூட்டங்கள் அசைந்து செல்கின்றன அல்லது அடர்ந்த வனப் பகுதியில் ஒற்றையடிப் பாதையொன்றில் நீங்கள் நடந்து செல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சலசலக்கும் நீரோடையும், கீச்சிடும் பறவைகளும், அசைந்தாடும் மரங்களும், உதிரும் சருகுகுகளும், உடலை மோதிச் செல்லும் தென்றலும் என உங்கள் கற்பனைகளை விரித்துச் செல்லுங்கள். மனதுக்கு இதமாக இருக்கிறதல்லவா? அதுதான் இயற்கை தரும் இன்பம். உள ஆரோக்கியம்.
இப்படியெல்லாம் நீங்கள் வாழ்ந்து எத்தனை வருடங்களாகின்றன? அதுதான் இயற்கைக்கும் உங்களுக்குமிடையிலான தூரம். எங்களுடைய நல்வாழ்வுக்கு இயற்கை ஆற்றும் அளப்பரிய பங்கை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். நாம் உண்ணும் உணவிலிருந்து சுவாசிக்கும் சுத்தமான காற்று, அருந்தும் நீர், உடுக்கும் ஆடை, உறையும் இல்லம் தொட்டு எமது கலாசாரம், பண்பாடு யாவற்றுடனும் இயற்கை பாரியளவில் தொடர்புபட்டுள்ளது. ஆனால் “இயற்கையின் முக்கியத்துவம் என்ன?” என்று வினவினால், பதில் சொல்வதற்குப் பலர் திக்குமுக்காடுவர். அந்த இயற்கையிலே ஒரு பகுதியாக மனிதன் இருப்பதை அவனே அங்கீகரிக்க மறுப்பதும், இயற்கை என்றால் அனைத்தும் இலவசமாக, தனக்காகவே படைக்கப்பட்டது, அது அள்ள அள்ளக் குறையாது என மனிதன் நினைப்பதும்தான் இயற்கையின் பெறுமதியை அவனால் உணர முடியாமல் செய்து விட்டது.
இங்ஙனம் இயற்கை மீது மனிதன் செலுத்தும் தொடர் ஆதிக்கம் காரணமாக காலநிலை மாற்றம் எனும் பெரும் அனர்த்தம் எம்மை நோக்கி மெதுமெதுவாக நெருங்கி வருகிறது. செறிவு கூடிய நீடித்த மழைவீழ்ச்சியும் குறையும் வருடாந்த மழை நாட்களும் தொடர் வரட்சி, சூறாவளி, பெருவெள்ளம் போன்ற பல இயற்கை அனர்த்தங்களும் பயிரழிவுகளும் நட்டஈடுகளும் எமக்கு பழகிப் போய்க் கொண்டிருக்கின்றன.கொவிட் பெருந்தொற்றை ஒரு அவசரகால நிலைமையாகக் கருதி உலக நாடுகள் அதனை அவசரமாக எதிர்கொண்டதைப் போல காலநிலை மாற்றத்தையும் அவசரமாக எதிர்கொள்ள வேண்டுமென உலக பொருளாதார மன்றம் கோரிக்கை விடுக்கிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியிலே அரசாங்கங்கள், வர்த்தகங்கள், தனிநபர்கள் என அனைத்துத் தரப்புகளும் இணைந்து அதன் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகையதோர் உத்தி ரீதியான வழியில் காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள முடியும் என இக்கூட்டிணைவு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
காலநிலை மாற்றமென்பது பொதுவாக ‘பூலோகம் வெப்பமயமாதல்’ எனும் பதத்தினால் விளக்கப்படுகிறது. பூகோள வெப்பநிலையில் ஏற்படும் நிலையான அதிகரிப்பினால் ஏற்படும் வெப்ப அலைகள் தொட்டு உறைபனி உருகுதல் வரை ஏற்படும் தொடர் மாற்றங்களை அது குறிக்கிறது. ஆயினும் புவியியல் தொட்டு தொல்லியல் வரை பல்துறை சார் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் காலநிலை மாற்றமென்பது தொடர்ந்து அதிகரித்து வருமொரு தோற்றப்பாடு அல்ல எனக் குறிப்பிடப்படுகிறது. மனித நாகரிகத்துக்கு முற்பட்ட காலங்களில் அது ஆர்முடுகப்பட்டிருக்கவில்லை. தற்போது மனித செயற்பாடுகளால் அதீதமாக உமிழப்படும் பச்சை இல்லை வாயுகள் காரணமாகவே அது ஆர்முடுகப்பட்டிருக்கிறது.
புவியின் உயிர்க்கோளத்தின் நிலைப்புக்குப் பல இயற்கை வட்டங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் காபன் வட்டம் மிக முக்கியமானது. இந்த உயிர்க்கோளம் காபனைச் சேமித்து வைப்பதும் வெளியிடுவதுமாகத் தனது தொழிற்பாட்டை ஒரு சமநிலையில் மேற்கொள்ளும். பூகோள வெப்பமயமாதலுக்கு உயிர்க்கோளம் முகம் கொடுக்கும் போது ஒரு கட்டத்தில் காபன் வட்டத்தில் சமனற்ற நிலை தூண்டப்படும். இந்நிலைமை எல்லைப் புள்ளியைத் தாண்டும் போது காலநிலையிலே நேர்கோட்டுத் தொடர்பல்லாத மிகவும் பாரதூரமான மாற்றம் நிகழும்.
உயர்ந்த கற்கோபுரமொன்றை எண்ணிக் கொள்ளுங்கள். காலங்காலமாக நாமும் எமது முன்னோரும் அக்கோபுரத்தின் கற்களை ஒவ்வொன்றாக அகற்றி வருகிறோம் எனக் கொள்வோம் . ஒரு கட்டத்தில் மிக முக்கியமான மையக்கல்லை நாம் அகற்றும் போது அக்கோபுரம் இடிந்து வீழ்ந்து விடும். இதுதான் புவியின் உயிர்க்கோளத்திலும் நடைபெறுகிறது. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும் புவிக்கோபுரத்தின் கல்லொன்றை அகற்றுவதற்கு ஒப்பானது. அது பச்சை இல்ல வாயுகளின் உமிழ்வாக இருக்கட்டும், எம்மால் மேற்கொள்ளப்படும் பொறுப்பற்ற நுகர்வுகள் மற்றும் உற்பத்திகளாகவிருக்கட்டும். ஏன் காடுகளின் அழிவாகக் கூட இருக்கட்டும்.
அந்த மையக்கல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அகற்றுபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பெரும் அனர்த்தத்துக்கு வழிகோலுபவர்கள் நாமாக இருக்கக் கூடாது என நாம் ஒவ்வொருவரும் உறுதி பேண வேண்டும். காடழித்தலும் மரம் நாட்டுதலும் பல வேளைகளில் மிகை நிரப்பும் செயற்பாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அச்செயற்பாடுகளானவை வீட்டிலே வருமானமீட்டும் ஒருவரின் இழப்புக்குப் பதிலீடாக கைக்குழந்தையைக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும். மிக நீண்ட கால நோக்கத்திலே அது சில வேளைகளில் பொருத்தமான பதிலீடாக இருக்கலாம். ஆயினும் உடனடியான பதிலீடல்ல. காடு என்பது தனக்கேயுரித்தான இயக்கவியலையுடைய ஒரு சூழல் தொகுதியாகும். அதன் இயக்கவியலின் காரணமாகத்தான் எமக்கு பல சூழல் தொகுதிச் சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன.
அருவிகளிலும் நிலக்கீழ் சுனைகளிலும் காணப்படும் சுத்தமான நீர் அச்சேவைகளின் பிரதிபலனாக எமக்குக் கிடைப்பதாகும். காடுகளின் இயக்கவியல் மிகச் சிக்கலானது. அதன் இயக்கவியலைப் பிரதி பண்ணுதலென்பது மனிதனின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. மனிதனால் இயலாதது. ஆனால் காடழிக்கப்பட்ட பிரதேசத்தை மிகவும் இழிவளவான மனிதத் தலையீட்டுடன் சுயமாகவே மீள விட்டால் சில தசாப்தங்களின் பின்னர் மெல்ல மெல்ல அச்சூழல் தொகுதி தான் இழந்த இயக்கவியலை மீளப் பெற ஆரம்பிக்கும். அதற்கு தசாப்தங்களும் ஆகலாம். நூற்றாண்டுகளும் ஆகலாம். அதன் உயிர்ப் பல்வகைமைச் செறிவு மெல்ல மெல்ல அதிகரிக்க, அச்சூழல் தொகுதியின் உறுதித் தன்மையும் அதிகரிக்கும். இம்முறைமை காடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா சூழல் தொகுதிகளுக்குமே பொருந்தும். இன்று நாம் அழித்த காடுகள் எமக்கு வழங்கிய சூழல் தொகுதிச் சேவைகளை நாம் மீண்டும் பெற பல சந்ததிகள் காத்திருக்க வேண்டியேற்படும். அதுவரை அவை மனிதத் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டுமென்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
காடுகள் (கண்டல் காடுகள் உட்பட) சேமித்து வைத்திருக்கும் காபனின் அளவு மிக அதிகமாகும். அவை அழிக்கப்படும் போது அக்காபன் சூழலுக்கு வெளிவிடப்படுவதானது பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கிறது. அவை அழிக்கப்பட்ட பின் நிலப்பாவனை மாற்றம் பெற, அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கின்றன. இது ஒரு சிறு உதாரணமாகும் . இவ்வாறு நாம் நுண்ணியளவு தொட்டு பாரியளவு வரை மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கின்றன.
காலநிலை மாற்றம், உலகளாவிய வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் இனால் அதிகரிப்பு, வளங்களின் அதீத நுகர்வு, சூழல் மாசு என தகித்துக் குறைவடைந்து சென்று கொண்டிருந்த கொண்டிருந்த பூமியின் ஆயுட்காலத்தைத் சற்று நீடித்திருக்கும் இப்பெருந்தொற்றுக் காலத்தில் , நாளை கொண்டாடப்படவிருக்கும் காதலர் தினத்தன்று இயற்கை மீது நாம் கொள்ளும் காதலை ஏன் வெளிப்படுத்த ஆரம்பிக்கக் கூடாது?
எப்படியென்று யோசிக்கிறீர்களா?
அத்தியாவசியத் தேவையின்றி இயற்கையான சூழல் தொகுதியொன்றைக் குலைக்க முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு குலைக்க வேண்டியேற்படின் மாற்று வழியேதும் இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, காணியில் இருக்கும் மரங்களையெல்லாம் அழித்து துப்புரவாக்கிய பின்னர் வீட்டுக்கு அத்திவாரம் போட ஆரம்பிக்கும் பல மனிதர்களையும் மூட நம்பிக்கைகள், சாஸ்திர சம்பிரதாயங்களைப் பரிபூரணமாக நம்பிப் பல அரிய மரங்களைத் தறிக்கும் பெரியவர்களையும் அரிமரப்பெறுமதியில்லாதது என, பல தசாப்தங்கள் பழைமையான, பறவைகள் கூடி வாழும் மரங்களையும் நிழல் தரும் மரங்களையும் தறித்த கற்றவர்களையும் பொன் முட்டையிடும் வாத்தின் கதையாய் அரிமரம் பெறுமதியானது, நாம் இருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும் எனப் பல அரிய மரங்களை அரிந்து முடித்த புத்திசாலிகளையும் கூட நான் சந்தித்திருக்கிறேன். நாங்கள் அனுபவித்த இயற்கையை எமது எதிர்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டாமா? அந்த இயற்கை எமக்கு வழங்கிய சேவைகளை எமது எதிர்கால சந்ததிக்கும் வழங்க வேண்டாமா? மரங்களைத் தறிக்க விழையும் போது ஒருகணம் நிதானித்து சிந்தித்து உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள்.
மரங்களை நட விரும்பினால், சுதேச தாவரங்களை நடுங்கள். அவற்றை நம்பியே எம் தேசத்தின் உயிர்ப்பல்வகைமை அமைந்திருக்கிறது. நாடியவுடன் பலன் தர வேண்டும், துரிதமாக வளர வேண்டும், விரைவில் பயன் தர,வேண்டும் என்ற குறுகிய நோக்குகளுடன் அந்நியத் தாவரங்களை நாட்டுவதை அனுமதிக்காதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்து உங்களைச் சூழவிருக்கும் இயற்கைச் சூழலை அவதானித்துப் பாருங்கள். சிறுதாவரங்கள் தொட்டு மரங்கள், பறவைகள் முதல் பிராணிகள், விலங்குகள் வரை அனைத்துமே அழகாய்த் தெரியத் தொடங்கும். அவற்றின் அழகையும் வண்ணங்களையும் வண்ணங்கள் அமைத்திருக்கும் கோலங்களையும் அவதானித்து இரசியுங்கள். அவ்வுயிர்களை அடையாளப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவற்றின் இருப்பின் நோக்கம், மனித இனத்துக்கும் தாம் வாழும் சூழலுக்கும் அவை வழங்கும் சேவைகளை அறிய முயலுங்கள். சுய நலமாயினும் அவை மீது நீங்கள் காதல் கொள்வீர்கள். அக்காதல் இப்பூவுலகில் அவற்றின் நிலைப்பை மட்டுமல்ல எங்கள் அனைவரது இருப்பையும் உறுதி செய்யும். முயன்றுதான் பாருங்களேன்!
No comments:
Post a Comment