அது 2009 ஆம் ஆண்டு. 6 இத்தாலிய புவி விஞ்ஞானிகள் மீது பெருங்குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு லாகுயில்லா(L'Aquila) பகுதியில் நடந்த நில நடுக்கத்தை எதிர்வு கூறமுடியாமல் போய் விட்டதாம். அதுவே அந்தக் குற்றச்சாட்டு.
அவர்களுடன், அரச அதிகாரி ஒருவரையும் சேர்த்து 7 பேர் மீதும் மனிதரைக் கொலை செய்த குர்றத்துக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உண்மையில் பூமியதிர்ச்சியை எதிர்வு கூற முடியாது. விஞ்ஞானிகள் செய்வது என்னவென்றால்,
தமக்கு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பூமியதிர்ச்சி நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகளை ( நிகழ்தகவை) கணிப்பார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தரவுகளின் உண்மைத் தன்மையைப்பொறுத்து அவர்களது கணிப்பும் துல்லியமாக இருக்கும். அந்த நிகழ்தகவு மாறுபடலாம். ஆதலால் துல்லியமான உண்மைத்தன்மையான தரவுகளே அவசியமாகும்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலியில் ஏற்பட்ட லாகுயில்லா பூமியதிர்ச்சியால், 309 பேர் கொல்லப்பட்டனர். பூமியதிர்ச்சி ஏற்படப்போவதை எதிர்வுகூறாத விஞ்ஞானிகளும் ஒரு அரச அதிகாரியும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டனர்.
இத்தாலியானது புவித்தட்டுக்களின் எல்லைப்பகுதியிலே அமைந்திருக்கிறது. காலங்காலமாக இத்தாலிக்கும் பூமியதிர்ச்சிக்கும் இருக்கும் தொடர்பை அந் நாட்டின் வரலாறு சொல்லும். இத்தாலி மட்டுமல்ல.. சிலியாகட்டும். ஜப்பானாகட்டும். அந்த நாடுகள் எல்லாமே, பூமியதிர்ச்சி அபாயம் உள்ள வலயத்திலேயே அமைந்திருக்கின்றன. பூமியதிர்ச்சியால் அந் நாட்டு மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பகுதிகள்/நாடுகளுக்கு மாறாக வேறு சில பகுதிகள் வலயங்கள் இருக்கின்றன.
சில இடங்களில் கண்டத்தட்டுக்கள் ஒன்றுக்குள் ஒன்று கொழுவுப்பட்டுக் காணப்படும். அவ்வாறு இருந்தால் பூமியதிர்ச்சி அபாயம் இல்லை என்று அர்த்தமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பாரிய பூமியதிர்ச்சிக்கான ஆயத்தங்கள் தூங்கு நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றே அர்த்தப்படும். கனடாவி, மேற்குக் கடற்கரைப்பகுதி இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். அங்கே வட அமெரிக்கக் கண்டத்தட்டும் பசுபிக் சமுத்திரத் தட்டும் ஒன்றுடனொன்று கொழுவுப்பட்டுக் காணப்படுகின்றன.
2008/2009 காலப்பகுதியிலே இத்தாலியில் அப்ருசோ பகுதியில் தொடர்ந்து சிறிய நில நடுக்கங்கள் ஏற்பட்டன. பெரிய நில நடுக்கங்கள் ஏற்படலாமோ என்ற அச்சம் நிலவியது. 2009 மார்ச் 31 ஆம் திகதி அபாயக் குழுவினர் கூடி ஆராய்ந்தனர். அக்குழுவிலே இந்த கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் இருந்தனர். கூட்டத்தின் முடிவில் விஞ்ஞானிகள் தமது முடிவை அறிவித்தனர். தொடர்ந்து ஏற்பட்ட சிறிய நில நடுக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிக் கண்டறிவதற்கு எந்த ஒரு வி ஞ்ஞான அடிப்படையும் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் முடிவாக இருந்தது. அவர்களுடன் கூட இருந்த அரச அதிகாரி, உடனடியாகவே பத்திரிகையாளர் மா நாட்டைக் கூட்டினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதோ வேறு விதமாக இருந்தது. "நில நடுக்க அபாயம் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது எமக்கு சாதகமானதே" என்றார் பேர்னடோ என்றஅந்த அதிகாரி.
பாமர மக்களைப் பொறுத்தவரையிலே விஞ்ஞானிகள் குழுவாகட்டும் அரச அதிகாரியாகட்டும். இரு தரப்பினது கூற்றுமே ஒரு மாதிரியாக இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் நிலைமை அப்படியல்ல. விஞ்ஞானிகள் சொன்னது பெரும் பூமியதிர்ச்சி நிகழுமா? நிகழாதா? என்று கூறுவதற்குத் தம்மிடம் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்பதாகும். ஆனால் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட செய்தியோ பூமியதிர்ச்சி அபாயம் அதிகரிக்கவில்லை என்பதாகும். சற்று சிந்தித்துப் பாருங்கள்..இங்கு யாரை குற்றம் சொல்வது?
விஞ்ஞானம் 100 சதவீதம் உண்மையானது என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. விஞ்ஞான முடிவுகள் பல கருதுகோள்களின் அடிப்படையிலும் நிகழ்தகவுகளின் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி இருக்கையில் இயற்கையாய் நடக்கும் ஒரு நிகழ்வை விஞ்ஞானத்தால் ஒருபோதும் முழுமையாக எதிர்வு கூற முடியாது. மாறாக அந்த நிகழ்வு நடப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முடியும். அதுவும் பூமியதிர்ச்சியை ஒருபோதும் அறுதியிட்டுக் கூறமுடியாது.
இத்தாலியில் நடந்த அந்த சம்பவத்தின் அடிப்படையே தொடர்பாடல் எனலாம். ஏனெனில் விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பாடல் இடைவெளி என்பது மிகவும் பெரியது. அங்கே அரச அதிகாரி விஞ்ஞானிகளின் கருத்தை ஊடகங்களுக்குச் சொல்வதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவர் கருத்தை மாற்றிவிட்டார் என்றே தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிகளின் கருத்துக்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தரப்பினர் விஞ்ஞானிகளாக இருக்க மாட்டார்கள். அத்தரப்பினருள் ஊடகவியலாளர்களும் அடங்குவர். அப்படியிருக்கையில் பல தடைவைகள் அறிக்கையிடுபவரால் விஞ்ஞானம் பிழையாக விளங்கப்பட்டு விடும்.
இங்கு விஞ்ஞானிகளையோ ஊடகங்கள்/அறிக்கையிடுபவர்களையோ மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது. பொதுமக்களில் ஒரு பகுதியினருக்கு அடிப்படை விஞ்ஞானத்தை விளங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்காது. ஆதலால் விஞ்ஞானத் தகவல்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைவாகவே காணப்படும். விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு இது தான் காரணமாகிறது. ஆதலால் தான் விஞ்ஞானிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஊடகவியலாளர்களோ மக்கள் நல உத்தியோகத்தர்களோ நிற்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, விஞ்ஞானிகள் கூறுவதை இலகுபடுத்தி யாவருக்கும் விளங்கக் கூடிய வகையிலே அறிக்கையிடுவதாகும். அப்படி அறிக்கையிட முயலும் போது பல வேளைகளில் விஞ்ஞானிகள் கூறும் கருத்தின் துல்லியத்தன்மை இழக்கப்பட்டு விடும். சில வேளைகளில் வேண்டுமென்றோ அல்லது தவறுதலாவோ அது நடைபெற்றுவிடும். இது தான் இத்தாலியிலும் நடந்தது.
அதற்காகத்தான் இயற்கை அனர்த்தங்கள் குறித்து தவறாக அறிக்கையிடுவது தண்டனைக்குரிய குற்றமென இலங்கையிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான அபாயம் தொடர்பாக விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் அறிவு பற்றி பொதுமக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துக்கூறப்படுவதில்லை
அதே நேரம் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான உள்ளார்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுவதில்லை எனலாம். இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான அபாயமும் அத்தகைய நிலை ஒன்று ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் பற்றி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு இயற்கை அனர்த்தங்களின் அடிப்படை அவசியமாகிறது.
மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை ஏற்படுத்த எவருமே முனைவதில்லை. ஏனெனில் அது தேசிய, பிராந்திய ரீதியில் பல விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஓ நாய் ஒ நாய் என்று பொய்க்குக் கத்தி கடைசியில் உண்மையிலேயே ஒ நாய் வந்த போது எவரும் உதவிக்குச் செல்லாத இடையனின் கதையை அறிந்திருப்போம். அந்த ஈசாப்பின் கதை சொல்லும் நீதி இயற்கை அனர்த்தங்களுக்கும் பொருத்தமாகவிருக்கும்.
விஞ்ஞானத்தகவல்களை பொதுமக்களுக்கு சரியான முறையிலே வழங்குவதில் பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருப்பது உண்மை தான். இத்தாலியில் அத்தகைய தகவல் வழங்கியவருக்குத் தண்டனை கொடுத்தமை என்பது எவ்வளவு தூரம் நியாயமான செயல் என்பது தெரியவில்லை. அது அந்த சவால்களுக்கான தீர்வாக அமையாது. அதே வேளை தகவல் வழங்குபவர்கள் எதிர் நோக்கும் சவால்களை அதிகப்படுத்தும்.
இத்தாலியில் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரையிலே பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே தகவலை வழங்கியவர் ஒரு விஞ் ஞானியல்ல. இந்த சம்பவம் ஒரு பெரும் பாடத்தை எமக்கு உணர்த்துகிறது. அந்த விஞ்ஞானிகளுள் பேச்சாளராகத் தொழிற்பட்டவர் அந்தத் தகவலை ஊடகவியலாளர்களுக்குச் சொல்லியிருக்கலாம்.
அதே வேளை அச் சம்பவத்துக்காக 6 விஞ் ஞானிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றமானது, ஒரு எதிர்மறையான விளைவைத் தோற்றுவித்திருக்கிறது. விஞ் ஞானிகள் பொது மக்கள் தரப்பிலே தமது ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்கோ அல்லது தகவல்களைத் தெரிவிப்பதற்கோ அஞ்சுவார்கள். விருப்பப்பட மாட்டார்கள்.
பொதுமக்களுக்குப் பயன்படாத விஞ் ஞான ஆய்வுகளின் பயன் தான் என்ன? இப்படி எத்தனை வருட உழைப்புகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன தெரியுமா?
விஞ்ஞான ஆய்வுகள் என்பவை ஒரு சில நாட்களுடனோ ஒரு சில மாதங் களுடனோ முடிந்து விடுபவை அல்ல. பல வருடங்களாக, ஏன் சில தசாப் தங்களாகக்கூட ஒரே ஆய்வுகள் நடந்தபடி இருக்கின்றன. அவற்றுள் எத்தனையோ விஞ்ஞானிகளின் இரவு பகல் பாராத உழைப்பும் நேரமும் அடங்கியிருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் முடிவடைந்து அவற்றின் முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டுப்பின் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிடப்பட மிகவும் நீண்ட காலம் எடுக்கும். அத்துடன் விஞ்ஞான சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட படித்தவர்க்கத்தினரை மட்டுமே சென்றடைகின்றன.
இதனால் மிகவும் முக்கியமான, யாவராலும் அறியப்பட வேண்டிய பல விடயங்கள் சாதாரண பொதுமக்களைச் சென்றடைவதில்லை. அதற்கு பலரும் பலவிதமான நியாயப் பாடுகளை முன்வைக்கின்றனர். விஞ் ஞானமெனப்படுவது யாவருக்கும் பொதுவான விடயமாகக் கருதப்பட்டாலும் விஞ்ஞான மொழியைத் தெரிந்தவர்களால் மட்டுமே அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதான ஒரு நிலையே இன்று காணப்படுகிறது.
விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்படும், எதிர் கூறப்படும் விடயங்களின் பயனாளிகள் சாதாரண பொதுமக்களேயாகையால், விஞ்ஞானம் கூறும் விடயங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். இதையே தொடர்பாடல் விஞ்ஞானம் என்பர்.
இயற்கை அனர்த்தம் தொடர்பிலான அறிவு கிடைக்கப்பெறுமானால் அதன் முக்கிய பயனாளிகள் பொது மக்களே. ஏனெனில் இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் முதலில் மட்டுமன்றி நேரடியாகவும் பாதிக்கப் படப்போவது அவர்கள் தான்.
ஆனால் அந்த முக்கிய பங்காளிகளை விஞ்ஞான ஆய்வுகள் சென்றடைவதற்கு வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிக முக்கியமானது.சிக்கலான விடயங்களை பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையிலே வெளிப்படுத்தும் திறன் எல்லா விஞ்ஞா னிகளிடமும் காணப்படாது. அதேசமயம் சில சிறந்த ஊடகவியலா ளர்களால் கூட விஞ்ஞானம் தொடர்பான விடயங்களைத் தமது ஊடகங்களில் தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் போகும். இந்நிலையில் தான், சிக்கலான விடயங்களையும் தெளிவாக விளக்கக்கூடிய விஞ்ஞான ஆர்வலர்களின் தேவை அவசியமாகிறது.
பெரியளவிலான பொருட் செலவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட பல விஞ்ஞான ஆய்வுகள் கூட விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளி யிடப்பட்ட பின்னர் பெட்டிகளுக்குள்ளும் நூலகங்களிலும் முடங்கிப்போவது இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்ற விடயமாகும். இத்தகைய ஆய்வுகள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப் படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
அதேபோல விஞ்ஞான ஆய்வுகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகையில், அறிவைப் பெறும் ஒவ்வொருவரும் தமது நிலைகளுக்கமைய ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொள்வர். அவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் பாரதூரமான எதிர்விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும். அத்துடன் அவர்கள் மத்தியில் அவ்விடயம் தொடர்பான குழப்பம் ஏற்பட வழிவகுக்கும்.
பொதுமக்களுடனான தொடர்பாடல் விஞ் ஞானிகளின் முக்கிய பொறுப்பாகவும் கருதப்படுகிறது. அதே வேளை உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தும் கடப்பாடு ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆனால் இன்னும் அந்த இரு தரப்பினருமே இரு அந்தங்களின் எல்லையில் இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு விடயத்தை அவசரமாக/உடனடியாக வழங்க வேண்டுமென நினைக்கும் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் பல அந்த விடயத்தின் துல்லியத்தன்மையைப் பற்றிச் சிந்திக்கத்தவறி விடுகின்றன.
இன்று வாதத்திற்கெடுக்கப்படும் ‘தேங்காயெண் ணைய், உடல் நலத்துக்கு உகந்ததா? ‘தீங்கு விளைவிப்பதா?’ எனும் சந்தேகத்தை உதாரணமாகக் கூறலாம். இத்தகைய சந்தேகங்களுக்கான முடிவுகள் ஆய்வுகளின டிப்படையிலேயே பெறப்படுகின்றன. இன்று உண்மையெனக் கூறப்படும் விடயமொன்று நாளை பொய்யென நிருபிக்கப்படலாம்.
விஞ்ஞானம் அத்த கையது. அதன் எல்லைகள் வரையறுக் கப்படவில்லை. எனவும் வளவாளர்கள் தெரிவித்தனர். இந்த உண்மையை உணரும் பக்குவம் பாமரர் மத்தியில் ஊட்டப்பட வேண்டும். அதற்கு விஞ்ஞானிகளுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் பிரதான கடமையாகும்.
No comments:
Post a Comment