உனது கைத்தடியைச் சுழற்ற உனக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அந்த உரிமை அடுத்தவரின் மூக்கு நுனி வரை மட்டுமே என்ற ஒரு சொல் வழக்கு ஆங்கிலத்தில் உண்டு. வீதியில் நடந்தபடி ஒருவர் சுழற்றிய கைத்தடி அருகே சென்றவரின் மூக்கு நுனியைப் பதம் பார்த்து விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் கைத்தடியைச் சுற்றியவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘எனது கைத்தடியை நான் சுழற்ற எனக்கு உரிமையில்லையா? என்று சுழற்றியவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு தான் இப்படி ஒரு சொல் வழக்கு உருவான கதை. இப்படித்தான் சுதந்திரம் வரையறுக்கப்படுகிறது.
இது யாவருக்கும் பொருந்தும். அப்படி இருக்கையில் பத்திரிகைகள் ஒன்றும் விதிவிலக்கல்லவே. ஊடகம் என்பதற்காக சமூக பொறுப்புணர்வின்றி யாவற்றையுமே வெளியிட வேண்டும் என்று ஒரு நாளும் கருத முடியாது. இது ஒட்டுக்கேட்டலுக்கும் பொருந்தும்.
ஒட்டுக்கேட்டல் என்பது இப்போது சகஜமாகிவிட்டது. ஆசியாவிலேயே மிகவும் மோசமான ஊழல் என வர்ணிக்கப்படும் தென்னிந்தியாவின் 2 ஜி அலைக்கற்றை மோசடி அம்பலமானதற்குக் கூட, சில தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டமையே பிரதான காரணமாகும்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு, பொதுமக்களின் நன்மை என்ற காரணங்களைக் கருதும் போது இந்த ஒற்றுக் கேட்டல்களை நியாயப்படுத்தலாம். அவற்றைத் தவிர ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. அத்துடன் தனி நபர்களின் சுதந்திரத்தில், அந்தரங்கத்தில் தலையிட வழிவகுக்கும் ஒற்றுக்கேட்டல்களை இம்மியளவேனும் நியாயப்படுத்த முடியாது.
இந்த ஒட்டுக்கேட்டல் செயற்பாடு தான் 165 ஆண்டுகளாக வெளிவந்த பத்திரிகையொன்றுக்கு மூடுவிழாவையும் நடத்தியிருக்கிறது. இப்போது இந்த ஒற்றுக்கேட்டல் செயற்பாடு எத்துணை பாரதூரமானது என்று புரிகிறதா? பிரித்தானியாவின் பாரம்பரிய பத்திரிகையான ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கடைசி இதழை வெளியிட்டு அச்சு ஊடகத் துறையிலிருந்து பிரியாவிடை பெற்றது.
இன்றைய இலத்திரனியல், தகவல் தொழில் நுட்ப காலத்திலே 168 வருடங்களுக்கு முன்னர் (01.10.1843) ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையொன்று நிலைத்து நிற்பதென்பது இலகுவான காரியமல்ல. அதை ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ சாதித்துக் காட்டியது. பொதுவாக பத்திரிகையொன்று அச்சு ஊடகத் துறையிலிருந்து வெளியேறுகிறதெனின், டிஜிட்டல் உலகிலே எதிர் நீச்சல் போட முடியாமல் பணத்தை இழந்துபோவதே அதற்குரிய பிரதான காரணமாக இருக்கும். ஆனால் மிகவும் பிரபலமான, அதிக இலாபத்தில் நடத்தப்பட்ட ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ பத்திரிகையைப் பொறுத்த வரையில் விதி வேறுவிதமாக விளையாடியது.
உரிமையாளரைக் காப்பாற்ற வேண்டும். அவரது சாம்ராஜ்யத்தின் ஏனய பிரிவுகளுக்கு எந்த வித பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணங்களுக்காகத் தன்னை மாய்த்துக் கொண்டது. ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ இந்தப் பத்திரிகையை நெள (NOW) என்று சுருக்கமாக அழைப்பர்.
நெள வின் கடைசி வெளியீடும் அது தனது வாசகர்களுக்குக் கூறியிருந்த செய்தியும் மனதை உருக்கும் விதமாக அமைந்திருந்தது. ‘நன்றி சென்று வருகிறோம்’ (THANK YOU & GOOD BYE) என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையிலே அதன் முதல் பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
உள்ளே ‘நாங்கள் உயர்ந்த தரத்தைப் பேணி வந்திருக்கிறோம். ஆனால் 2006 இலிருந்து கடந்த சில ஆண்டுகளாக எமக்காகப் பணி புரிந்தோர் அல்லது எமது பெயரால் தொழிற்பட்டவர்கள் அந்த தரத்தைப் பேணவில்லை என்பதை நாம் மிகுந்த வருத்தத்துடன் அறியப்பெற்றோம். இதுவரை காலமும் பேணி வரப்பட்ட எம் பத்திரிகையின் தரம் வீழ்ச்சியடைந்தமைக்காக நாம் வெட்கப்படுகிறோம். நாம் சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து விலகி விட்டோம் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன. அதற்காக பத்திரிகையின் சார்பில் மன்னிப்புக் கோருகிறோம் என மிகவும் உருக்கமாக நீண்டு சென்றது ஆசிரியத் தலையங்கம்.
தொலைபேசி ஒட்டுக் கேட்புகள், அவற்றிற்காக அரச அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் கொடுத்த இலஞ்சங்கள் என இப்பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மீது பெருங் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சிகள் மிகவும் மந்த கதியில் இருந்த ஒரு காலகட்டத்திலே (1843) பத்திரிகையொன்றை ஆரம்பித்து நடத்துவதென்பது எவ்வளவு சிரமமான காரியம் தெரியுமா? ஆனால் அந்த மூலகர்த்தாக்கள் மனம் தளரவில்லை. தாம் கண்ட தடைக் கற்களையெல்லாம் படிக்கற்களாக்கி எண்ணற்ற மணி நேரங்களைச் செலவழித்து பிரித்தானிய அச்சு ஊடகத்துறையில் வலுவாகக் கால் ஊன்றினர்கள். அந்தக் காலத்துப் பத்திரிகைகள் மேல்வர்க்கத்தவரான பணக்காரரை மட்டுமே இலக்காகக் கொண்டு ஆச்சிடப்பட்டன. ஆனால் நெள பத்திரிகையோ உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் மிகவும் மலிவான பத்திரிகையாகவும் காணப்பட்டது.
காலப் போக்கில் புலனாய்வு அறிக்கையிடல் என்ற உன்னத பாரம்பரியத்தைக் கொண்ட பத்திரிகையாகப் பரிணமித்தது. இது ஒரு வாராந்தப் பத்திரிகையாகும். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 12,000 பிரதிகள் வரை விற்பனையாகின. காலப்போக்கில் 1912 அளவிலே அதன் விற்பனை 2 மில்லியன் பிரதிகளாகி 1939 இல் 4 மில்லியன் பிரதிகளாகியது. 1950 களில் உலகிலேயே அதிகளவு விற்பனையாகும் பத்திரிகை (9 மில்லியன் பிரதிகள்) என்ற சாதனையையும் நிலை நாட்டியது.
1969 இலே அவுஸ்திரேலியரான மேர்டொக் இப்பத்திரிகைக்கு விலை பேசினார். முடிவில் உரிமையாளருமானார். பாலியல் குற்றச்சாட்டுக்கள், விளையாட்டு, குற்றவியல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இப்பத்திரிகை மாற்றப்பட்டது. குறிப்பாக 2006 களின் பின் பல பிரபலங்களின் அந்தரங்கங்கள் இப்பத்திரிகையின் முன் பக்கத் தலையங்கமாயின. அட்டைப் படங்களாயின. அவற்றில் பெரும்பாலானவை சர்ச்சைகளுக்குள்ளாயின.
அதேவேளை இப்பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளுக்காக விருதுகள் பலவும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் பிற்காலத்தில் தொழில் நுட்பங்கள் கண்ட அபரிமித வளர்ச்சி பத்திரிகை கொண்டிருந்த பாரம்பரியமிக்க புலனாய்வு அறிக்கையிடலின் போக்கை மாற்றியது.
ஊடகவியலாளர் சிலர் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து பிரபலங்களினதும் முக்கிய நபர்களினதும் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டனர். பொலிசார் வழங்கிய சேவைக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சத் தொகை ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை வரை சென்றது. பலர் முறையீடு செய்தனர். பிரச்சினை பெரிதாகியது.
நெள பத்திரிகையின் தலைவரான மேர்டொக் ஒன்றும் சாதாரணமானவரல்ல ஊடக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர். பிரித்தானியாவில் இயங்கும் நியூஸ் கோப்பரேஷனின் தலைவர். அந்த நிறுவனத்தின் கீழ் உள்ள வலையமைப்பில் பல பிரபல ஊடக நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்தக் குழுமத்திலே லண்டனின் டைம்ஸ் பத்திரிகை, த சண் பத்திரிகை, ஸ்கை தொலைக்காட்சி நிறுவனம் போன்றவையும் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரித்தானியா, அமெரிக்கா, ஆசியா என இவரது வலை விரிந்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான பொக்ஸ் பிரோட்காஸ்டிங் கம்பெனி, சென் ஆன்டோனியா எக்ஸ்பிரஸ் நியூஸ்’ ‘ஸ்டார்’, ‘சூப்பர் மார்க்கெட்’, ‘நியூயோர்க் போஸ்ட்’, ‘வால் ஸ்டிரீட் ஜேர்னல்’ மற்றும் அவுஸ்திரேலியாவின் 146 பத்திரிகைகள் என இவரது வலை விரிகிறது.
கடந்த 1993 ஆம் ஆண்டில் ‘ஸ்டார் தொலைக்காட்சியை வாங்கினார். இதன் மூலம் ஆசிய நாடுகளில் காலடி எடுத்து வைத்தார். ஆசியா முழுவதும் ஸ்டார் தொலைக்காட்சி மூலம் ஆதிக்கம் செலுத்திய மேர்டோக்கால், சீனாவில் பெரியளவில் காலடி பதிக்க முடியவில்லை. காரணம் சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தமையேயாகும்.
நெள பத்திரிகை மீதான ஒற்றுக்கேட்புக் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துச் செல்லத் தொடங்கின சர்ச்சைகள் நாடாளுமன்றம் வரை தொடர்ந்தன. பலர் கைது செய்யப்படும் அபாய நிலை தோன்றியது. அந்த நேரம் தலைமை ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அத்துணை பாரம்பரியமிக்க பத்திரிகையை மூடிவிடத் தீர்மானித்து கடைசி வெளியிடு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதன் தலையங்கமே பார்ப்போர் மனதை உருக்கும் வகையில் அச்சிடப்பட்டிருந்தது. கடைசிப் பதிப்புடன் கடந்த காலங்களில் வெளியாகிய முக்கியமான கட்டுரைகளை உள்ளடக்கிய 48 பக்க இணைப்பிதழும் சேர்த்து வெளியிடப்பட்டது. வழக்கத்தை விடவும் கூடுதலான பிரதிகளை முகவர்கள் கோரியிருந்தனர். கடைசி இதழின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாகவே இருந்த. அந்த விற்பனையால் கிடைக்கும் இலாபம் மூன்று சமூக சேவை அமைப்புகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் என கடைசிப் பதிப்பிலே உறுதியும் அளிக்கப்பட்டிருந்தது.
கடைசிப் பதிப்பை அச்சிட்ட பின்னர் அப்பத்திரிகைக்காக வேலை செய்த 200 ஊடகவியலாளர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கனத்த மனதுடன் விடை பெற்றனர்.
பத்திரிகையின் மூடு விழாவையடுத்து தொலைபேசி ஒட்டுக்கேட்புக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஏழாவது நபராக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஸ்கொட்லந்து யார்ட் கவால்துறை அறிவித்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நபர் 60 வயதானவர் என்றும் தற்போது அவர் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நபரின் பெயரை வெளியிட காவல்துறையினர் முதலில் மறுத்துவிட்டனர். பின்னர் அந்த நபர் நியூஸ் ஒப் த வேர்ல்ட் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் நீல் வாலிஸ் என்று தெரிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் அன்டி கூல்ஸன் என்ற ஆசிரியரின் கீழ் பணியாற்றி வந்தார் என்றும் 2007 இல் நிறைவேற்று ஆசிரியராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்டிகூல்ஸன் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விட்டார். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், இதில் பல காலமாக அலட்சியப்படுத்தப்பட்டு வந்த ஒரு பரந்துபட்ட பிரச்சினை இருப்பதைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கருத்து வெளியிட்டுள்ளார். தான் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், அது குறித்து இரண்டு விசாரணைகளை அறிவிப்பதன் மூலம், தான் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கமரூன் கூறினார். ஆனால், அன்டி கூல்சனை தனது மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்க எடுத்த முடிவுக்கு வருத்தம் தெரிவிப்பதைத் தவிர்த்தார் கமரூன்.
மேர்டொக்கின் ஊடாக சாம்ராஜ்யத்துடன் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும், இந்த விவகாரத்தில் ஒரு நல்ல சந்தர்ப்பம் தனக்கு வாய்த்திருப்பதாகவே தற்போதைய எதிர்க்கட்சியான, தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் நினைக்கிறார். இந்த விவகாரத்தை பிரதமர் சரியாகப் புரிந்துகொள்ளவேயில்லை. என்று கூறும் மிலிபாண்ட் இந்த விவகாரத்தின் விளைவாக ஒரு பெரும் மாற்றம் விளைந்திருக்கிறது என்கிறார்.
நியூஸ் கோப்பரேஷன் நிறுவனத்தின் தாய் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. ஆதலால் இந்த விசாரணைக் களத்தில் அமெரிக்காவும் இறங்கிவிட்டது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், அல்கைதா பயங்கரவாத அமைப்பினரால் தகர்க்கப்பட்டது. இது தொடர்பான அமெரிக்காவின் பலவேறு கட்ட விசாரணைகளை, நியூஸ் கார்ப்ரேசன் எனும் செய்தி நிறுவனம் ஒட்டு கேட்டதாக அமெரிக்க அமுலாக்கத் துறையினர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்தே அமெரிக்காவும் விசாரணையை முடுக்கியுள்ளது. பிரபலங்கள் மட்டுமல்லாமல், மிகவும் வருத்தத்திலிருந்த, மிகவும் பலவீனமான நிலையில் இருந்த சாதாரண பொதுமக்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டன என்ற உண்மை தெரிய வந்த கடந்த வாரத்தில், இந்த விவகாரத்தில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் இந்த கதை இன்னும் முடிந்துவிடவில்லை. தொடர் கதையாக நீண்டு செல்கிறது. பொலிஸ் விசாரணைகள் மிகவும் உச்ச கட்டத்தில் இருப்பதையே இந்த சமீபத்திய கைதுகள் காட்டுகின்றன. நீண்ட இரண்டு விசாரணைகள் நடக்க இருக்கின்றன. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் பிரித்தானியாவில் தன் திடீர் முடிவால் 200 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளார். மேர்டொக் இது எவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதை எதிர்வுகூற முடியவில்லை. அதேவேளை பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருந்த நெள பத்திரிகையின் இடத்தை தெ சண் பத்திரிகை நிரப்பும் என நம்பப்படுகிறது. மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் குறித்து ஏராளமான விவாதங்கள் நடக்கின்றன. விளைவுகள் அந்த ஊடக சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வித்திடப் போகின்றனவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமக்குக் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயலும் ஊடகங்களுக்கு நெள பத்திரிகையின் கதை ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment