Sunday, July 24, 2011

நிலக்கரியின் முன்னே மதிப்பிழந்த தொல்லியல் சின்னம் மனா குகை

(அச்சு ஊடகத்தில் பிரசுரிக்கப்படவில்லை)
இன்று இந்தியாவின் மகாராஷ்ட்டிர மா நிலம் அதன் தலை நகர் மும்பையால் பிரபலம் பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் பௌத்த சமயத்துக்கு புகலிடம் வழங்கியமையால் புகழ் பெற்றிருந்தது. வட இந்தியாவிலே (இன்றைய நேபாள பகுதி) தோன்றி இன்றைய பீகார் மா நிலத்தில் நிலை கொண்டிருந்த பௌத்தத்துக்கு மகாராஷ்டிர மா நிலமும் புகலிடம் வழங்கியது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகள் பௌத்த துறவிகளின் வாழ்வியல் பாங்குக்கு வசதியாக அமைந்திருந்தன. அவர்கள் அங்கேயே தங்கத் தலைப்பட்டனர். குகைகளிலே வாழ்ந்தார்கள். குகைகளைக் குடைந்து பௌத்த கோயில்களை அமைத்தார்கள். உலக மரபுரிமைச்சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அஜந்தா , எல்லோரா குகைகளும் மகாராஷ்டிரா மா நிலத்திலேயே அமைந்திருக்கின்றன.

அத்தகைய பல குகைகளை அம்மா நிலத்திலே காணமுடியும். அவற்றிலே பௌத்த துறவிகள் வசித்து வந்த குகைகளுள் ஒரு தொகுதியாகக் கருதப்படுவது மனா குகைகளாகும். 2000 வருடங்கள் பழைமையான அக்குகைகள் நான்குமனிதர்களின் அலட்சியப்போக்கால் இடிந்து விழுந்துள்ளன. அதை அலட்சியப்போக்கு என்பதா? இல்லை இயற்கை வளம் மீது மனிதன் கொண்ட பேராசை என்பதா?

மகாராஷ்டிர மாநிலம் நிலக்கரிப்படிவுகளுக்குப் பெயர் போனது. அங்கே பாரியளவிலான நிலக்கரிப்படிவுகள் உள்ளன. தேசிய, சர்வதேச கம்பனிகள் ஒப்பந்தத்தின் மூலம் அவற்றின் உரிமத்தைப் பெற்று நிலக்கரி அகழ்வை மேற்கொள்கின்றன. இயற்கை தந்த வளத்துக்கான உரிமத்தை முனைப்புடன் பெற்று அகழ்வை மேற்கொள்ளும் அந்த நிறுவனங்கள் இந்த புராதன நினைவுச்சின்னங்களைப் பற்றிக் கவனத்தில் கொள்வதில்லை. இது தான் சந்திரபூர் மனா குகைகள் விடயத்திலும் நடந்திருக்கிறது.

ஓபென் காஸ்ட் மைன்ஸ் ஒஃப் வெஸ்டேர்ன் கோல் ஃபீல்ட்ஸ் (WCL)நிறுவனத்தின் தொடர் நிலக்கரி அகழ்கு நடவடிக்கைகளால் அக்குகைகள் இடிந்து விழுந்திருக்கின்றன. அவை இடிந்து விழுந்து சில நாட்களின் பின்னரே அச்சம்பவம் தொடர்பாக மக்கள் அறியத்தலைப்பட்டிருக்கின்றனர். அந்த குகைகள் இருக்கும் பகுதியுடன் கூடிய பெரிய நிலப்பகுதி WCL க்கு ஒதுக்கப்பட்டது.

2009 இலே சந்திரபூர் மாவட்ட கலெக்டராகவிருந்த பிரதீப் கல்பூர் என்பவர் WCL நிறுவனத்துக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதாவது மனா குகைகள் இருக்கும் பகுதியிலே நிலக்கரி அகழ்வுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அக்கடிதத்தை WCL நிறுவனம் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. வெடிபொருட்கள் மூலம் நிலக்கரி அகழ்வுகளை மேற்கொள்ளும் தன் பணியை தொடர்ந்தும் முனைப்புடன் செய்து வந்தது.

அக்குகைகள் இருக்கும் பகுதியில் ஒரு அனுமார் கோயிலும் இருந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத், பஜாரங் தால் போன்ற கட்சி/அமைப்புகளின் தலைவர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியால் கடந்த மார்ச் மாதமளவில் அக்கோயில் இடம்பெயர்க்கப்பட்டது. ஆயினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மனா குகைகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டன. கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைகளை பௌத்த துறவிகள் தியானம் செய்வதற்குப் பயன்படுத்தியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது தான் குகைகள் அழிக்கப்பட்ட விடயம் அதிகார மட்டங்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இக்குகைகள் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுரிமைச்சின்னங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. ஆயினும் WCL நிறுவனத்துக்கு அக்குகைகளை அழிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை என்கிறது தொல்லியல் திணைக்களம்.

அந்த நிறுவனம் அக்குகைகளை மீளமைக்க வேண்டும் அல்லது கொந்தளிக்கும் நிலையில் இருக்கும் பௌத்த மக்களின் மன உணர்வுகளை மதிக்கும் வகையிலே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.

இக்குகைகள் அமைந்திருக்கும் நிலப்பகுதியின் கீழே 1.5 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரிப்படிவுகள் காணப்படுவதாக ஆய்ந்தறியப்பட்டமையே இக்குகைகள் அழிக்கப்படுவதற்கான காரணமாகும். WCL நிறுவனத்தைப் பொறுத்தவரையிலே அந்த 1.5 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியின் பெறுமதியின் முன்னே 2000 ஆண்டுகள் பழைமையான குகைகள் மதிப்பிழந்து போயின போலும்.

நிலக்கரி என்பது தகனத்துக்குட்படுத்தப்படக்கூடிய கறுப்பு அல்லது கறுப்பு கலந்த செம்மண் நிறப் அடையற்பாறையாகும். இப்பாறைகள் நிலக்கரிப்படுக்கைகள் எனப்படும் படிவுகளாகக் காணப்படும். நிலக்கரியில் காணப்படும் பிரதான மூலகம் காபனாகும். அத்துடன் ஐதரசன் பெருமளவும் கந்தகம் , ஒட்சிசன், நைதரசன் போன்ற மூலகங்கள் சிறிதளவும் காணப்படுகின்றன.

உலகின் பிரதான சுவட்டு எரிபொருள் மூலம் இந்த நிலக்கரிப்படிவாகும். இப்படிவை அகழ்ந்து பாவனைக்குகந்த வகையிலே நிலக்கரியை மாற்றியமைத்து பல உற்பத்திக்கைத்தொழில்களில் சக்தி மூலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

நீர்ப்பரப்புக்குக் கீழே படியும் தாவரப் பகுதிகளே காலப்போக்கில் (பல நூற்றாண்டுகளின் பின்)நிலக்கரிப் படிவுகளாக மாறுகின்றன. கிரேக்க தேசத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டளாவிலேயே நிலக்கரியின் பாவனை அறியப்பட்டிருக்கிறது. நிலத்துக்குக் கீழே இருந்தும் அகழ முடியும் அதேவேளை நில மேற்பரப்பிலிருந்தும் பெற முடியும். எப்படிப் பெறுதல் என்பது நிலக்கரிப் படிவுகளின் தன்மைகளில் தங்கியிருக்கும். நிலக்கரியானது தற்போது எரிபொருளாக, வாயுவாக்கத்தின் மூலம் காபனோரொட்சைட்டு, ஐதரசன் வாயுக்கலவைகளைப் பெற, திரவமாக்கல் மூலம் காசொலைன், டீசல் போன்ற எரிபொருட்களைப் பெற, மற்றும் வேறுபல கலாசார, கைத்தொழில் தேவைகளுக்காக எனப் பல வழிகளிலே பயன்படுகிறது.

உலக சந்தை/ சர்வதேச வர்த்தகத்தைப் பொறுத்தவரையிலே ஒரு பிரதான பண்டமாகக் காணப்படுவதும் இந்த நிலக்கரியேயாகும். ஆயினும், நிலக்கரிப் பாவனையால் எதிர்மறையான பல விளைவுகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலும் மக்களின் சுகாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

நிலக்கரி அகழ்வு என்பது ஒலிமாசைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். அல்லும் பகலும் மேற்கொள்ளப்படும் நிலக்கரி அகழ்வின்போது கேட்கும் சத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் அயற்சூழலில் சமூகத்தவர் பெருமளவில் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்க்கைத்தரம் குறைவடையும் வாய்ப்பும் ஏற்படும். அத்துடன் அந்நிலை பல தசாப்தங்களுக்குத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல.

காட்டுயிர்கள் அழிவடைந்து செல்ல நிலக்கரி அகழ்வு ஒரு காரணமாய் அமைந்துவிடும். ஏனெனில் அச்செயற்பாடு தொடரும் போது அப்பகுதியின் இயற்கைச் சூழல், தாவரங்களின் பரம்பல் போன்றன அழிக்கப்படும். அல்லது சீர்குலைக்கப்படும். அதனால் சூழல் தொகுதியின் சம நிலை பாதிக்கப்பட, காட்டுயிர்கள் அழியும் நிலையை அல்லது அந் நிலைக்கான அச்சுறுத்தலை எதிர் நோக்கும்.

நிலக்கரி அகழ்வால் தாவரங்களின் வாழ்வு மட்டுமன்றி மண் வளமும் பாதிப்புறும். மிகவும் வளமிக்கதாகக் கருதப்படுவது மேல் மண் இழக்கப்படும். புழுதிப்புயல், மண்ணரிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

நிலக்கரி அகழ்வு, தயார் படுத்தல் நடவடிக்கைகளின் போது பல மில்லியன் கலன்கள் நச்சுத்தன்மையான அரைத்திண்ம கழிவு உருவாகும். நிலக்கரி அகழப்படும் மலைகளுக்கு இடையில் அக்கழிவுகளுக்காக பாரிய தேக்கங்கள் அமைக்கப்படும். அந்த தேக்கங்கள் செயலிழக்கும் போது அக்கழிவுகள் பெருக்கெடுக்கும். அது பாரிய சுற்றுச்சூழல் அழிவைத் தோற்றுவிக்கும். கடந்த காலங்களிலே இத்தகைய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
நிலக்கரி அகழ்வு, தயார்படுத்தல் நடவடிக்கைகளின் போது கிடைக்கும் அமிலத்தன்மையான கழுவு நீர் தனித் தேக்கங்களில் சேமிக்கப்படுகிறது. அது நிலத்தில் உட்புகுந்து நன்னீர் ஊற்றுக்களுடன் கலக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இதனால் உள்ளூரிலே நீர் வி நியோகம் பாதிக்கப்ப்படும். அயற் சூழலிலிருக்கும் நீர் நிலைகளின் pH சம நிலை பாதிப்படையும்.

நிலக்கரி தகனமடையக்கூடியது. ஆதலால் நிலக்கரி அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் பாரிய தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகும். ஒரு நிலக்கரிப் படுக்கையில் தீ ஏற்பட்டால் அது சில வருடங்களுக்கோ அல்லது சில தசாப்தங்களுக்கோ கூட நீடிக்கலாம், அத்துடன் அவ்வாறு தீப்பற்றி எரியும் போது நைதரசன் சேர்வை வாயுக்கள் வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும்.

நிலக்கரி மட்டுமன்றி, அதன் கழிவுகளும் மிகுந்த நச்சுத்தன்மையானவை. அவை பார . உலோகங்களான பாதரசம், ஈயம், ஆசனிக் போன்றவற்றைக் கொண்டிருக்கும்,. இவை தாவர, விலங்குயிர்களுக்கும் நச்சுத்தன்மையானவை.
நிலக்கரி அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் அமில மழை ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. நீரின் ஆவியாதல், ஒடுங்குதல் செயற்பாடுகளில் அமிலக்கழிவின் தாக்கம் காணப்படும். விளைவு அமில மழையாகும்.

நிலக்கரியில் யுரேனியம் , ரேடியம் போன்ற கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்கள் மிகவும் சிறிய அளவிலே காணப்படுகின்றன. அவை கதிர்த்தொழிற்பாட்டுக் கழிவுகள் உருவாகக் காரணமாகிவிடும். சுகாதர சீர்கேடுகளும் உருவாகும்.

இன்று நாம் எதிர் நோக்கும் பிரதான சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் ஒன்று கால நிலை மாற்றமாகும். நிலக்கரி அகழ்வும் கால நிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் காரணியாகவே இருக்கிறது. நிலக்கரி அகழ்வு நடவடிக்கைகளால் மெதேன் வாயு பெருமளவில் வெளியேற்றப்படுகிறது. ஒசோன் படலத்தை அரிப்படையச்செய்யும் பச்சையில்ல வாயுக்களுள் மெதேனும் ஒன்றாகும். தொழிற்சாலைகளில் சக்தி மூலமாக நிலக்கரியைப் பயன்படுத்தும் போது காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுகிறது. புவி வெப்பமாவதற்கு பங்களிப்பைச்செலுத்தும் பிரதான வாயு காபனீரொட்சைட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிலக்கரி அகழ்வின் போது உருவாகும் கழிவுகளால், புற்று நோய், சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

உலகளாவிய ரீதியிலே நிலக்கரி அகழ்வுகள் மேற்கொள்ளப்படும் பல பிரதேசங்கள் தொன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆதலால் அப்பகுதிகளில் காணப்படும் தொல்லியல், மரபுரிமைச்சின்னங்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கியிருக்கின்றன. அத்தகைய பல சின்னங்கள் ஒருவருக்கும் தெரியாமலே அழிந்தும் போயிருக்கின்றன. இது தான் மனா குகைகளுக்கு நேர்ந்த கதியாகவும் இருக்கிறது.

பல நூற்றாண்டுகாலமாகப் படிந்த நிலக்கரியை ஒரு சில நாட்களிலேயே அகழ்ந்து பணமாக்கிக் கொள்ள முயலும் பேராசை பிடித்த மனிதர்கள் எதற்காக தொல்லியல் சின்னங்களைப் பற்றி கவலைப்படப்போகிறார்கள்? என்றே எண்ணத்தோன்றுகிறது.


No comments:

Post a Comment