மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’

தனக்கே உரித்தான தனித்துவமான கற்பித்தல் முறையாலும், தன் குழந்தைத்தனமான சிரிப்பாலும் பிறர் மீது கொண்ட அதீத அக்கறையா லுமே தன்னைச் சூழ உள்ளோரைக் கட்டிப் போட்ட மனிதர் பத்தர் என அன்பாய் அழைக்கப்படும் பத்மநாதன்.
கற்றோர் நிறைந்திருந்த குடும்பத்திலே நாகலிங்கம் என்பவருக்கும் மனோன்மணி என்பவருக்கும் 1950 ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த அருந்தவப் புதல்வன் பத்மநாதன். இவரின் தந்தை யாழ். மாவட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்தவர். தாயார் ஒரு ஆங்கில ஆசிரியர்.
தனது ஆரம்பக் கல்வியை பரமேஸ்வரா கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞானத் துறைக்குத் தெரிவானார். பின்னர் 1972 இல் பல்கலைக்கழகத்தில் விசேட சித்தி பெற்று வெளியேறிய பின் பிரயோக கணிதம், தூய கணிதம், பெளதிகவியல் ஆகிய பாடங்களைப் பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கத் தொடங்கினார். 1974 இன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கிய பின்னர் அதே ஆண்டே மானிப்பாய் இந்து கல்லூரிக்கு மாற்றம் பெற்று அங்கேயே தனது கற்பித்தலைத் தொடர்ந்தார். 1995 இல் உப அதிபராக அக்கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றார். யாழ். பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
பெளதிகவியல் மட்டுமன்றி தூய கணிதம் மற்றும் பிரயோக கணிதத்தையும் செவ்வனே கற்பிக்க வல்லவர் பத்மநாதன். யாழ்ப்பாணத் திலே இருக்கும் காலத்தில் பிரத்தியேக வகுப்புகளிலும் கற்பித்தவர்.
1995 இடப்பெயர்வுடன் கொழும்புக்கு வந்த பத்மநாதன் ஆசிரியர், 1997 இலே கொழும்பு இராம நாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் 1998 இலிருந்து கடந்த வாரம் வரை கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்திலும் பெளதிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி சுகயீனம் காரணமாக கடந்த சனியன்று (12.03.11) எம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறையடி சேர்ந்துவிட்டார்.
ஏறத்தாழ மூன்று சந்ததியினர் அவரிடம் பெளதிகவியல் கற்றவர்கள். நான்காவது சந்ததி தற்போது கற்றுக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையாய்க் கற்றால் தான் பெளதிகவியலை முழுமையாக அறிய முடியும் என்பது ஆசிரியர் பத்மநாதனின் அபிப்பிராயம். அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் அவர். பத்மநாதன் என்றதும் எமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அவரது குழந்தைத்தன மான சிரிப்பு.
அவரது பெளதிகவியல் அறிவு எதனுடனும் ஒப்பிடப்படமுடியாதது. தெரிந்த விடயத்தில் இருந்து வினாக்களைக் கேட்டுக் கேட்டே தெரியாத விடயத்தையும் இலகுவாகப் புரிய வைப்பவர். தனக்கே உரித்தான தனித்துவமான கற்பித்தல் நுணுக்கங்களை வைத்திருப்பார். அவர் பிரதி எடுத்துத் தரும் குறிப்புக்களாகட்டும், வினாத்தாள்களாகட்டும் யாவுமே தனித்துவமாக இருக்கும்.
ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பெளதிகவியல்நூல்களை மூலமாகக் கொண்டே அவரது பரீட்சை வினாத்தாள்களும் குறிப்புத்தாள்களும் அமைந்திருக்கும். அவை உயர்தரப் பரீட்சைக்கு எத்துணை பயனுடையதாய் அமைந்திருந்தன என்பதை அவரிடம் கல்வி கற்ற ஒவ்வொரு மாணவரும் உணர்ந்திருப்பர்.
அவர் எத்தனையோ இரவுகள் தன் சுகயீனங்களையும் பொருட்படுத்தாது மேசை மின் விளக்கின் வெப்பத்தில் ஈசல் பூச்சிகளுடன் போராடி தன் கைப்பட எழுதிப் பிரதியெடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கும் குறிப்புக்கள் கற்பிப்பதற்காய் அவர் எடுக்கும் அக்கறையையும் அவருக்கிருக்கும் ஆர்வத்தையும் எடுத்துரைக்கும். உயர்தரம் கற்று உயர் கல்வி முடித்து தொழிற்றுறைக்குச் சென்றாலும் இன்னும் பல மாணவர்களின் புத்தக அலுமாரிகளை அந்தக் குறிப்புத்தாள்கள் அலங்கரித்தபடி தான் இருக்கின்றன. அவரது குறிப்புத் தாள்களில் இருக்கும் ஆச்சரியக் குறிகளும் சிரிப்பு மற்றும் அழுகைக் குறிகளும் மறக்க முடியாதவை. அக்குறிகளை எங்கு கண்டாலும் இன்றும் ஆசிரியர் தான் நினைவுக்கு வருவார்.
தன்னிடம் கற்கும் மாணவர்கள் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டு கற்பிப்பவர் அவர். பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர் ஒருபோதும் பெளதிகவியலைக் கற்பித்ததில்லை. பெளதிகவியல் சார் துறையில் உயர் கல்வி கற்ற / கற்கும் மாணவர்கள் அதனை மனதார உணர்ந்திருப்பர். அவர் கற்றுத் தந்த நுணுக்கங்கள் எமக்கு பல்கலைக்கழகத்திலும் பயன்பட்டன. ஒரு கோப்பு மட்டையையும் இரு கைகளையும் கொண்டு முப்பரிமாணத்தில் புலங்களை உருவகிக்கப் பழக்கிய பத்மநாதன் ஆசிரியரின் திறமையை என்னவென்று சொல்வது?
ஆசான் என்ற வார்த்தைகளுக்குள் அவரை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. ஒரு நல்ல தந்தையாய் அவர் தன் மாணவர்கள் மீது கொண்ட அன்பு, வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அவரது கை அசைவுகளும் அவர் கற்பிக்கும் போது கேட்கும் கேள்விகளும் ஒரு ஆற்றுப்படுத்தல் வல்லுநராய் அவர் சொல்லும் அறிவுரைகளும் இன்றும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் நிலையற்ற இவ்வுலகிலும் நிலையான கல்விச் செல்வத்தைத் தேடி எம்¨மைப் பயணிக்க வைத்தவை.
தான் உடுக்கும் உடையிலிருந்து போடும் சப்பாத்து வரை யாவுமே செவ்வனே அமையும் வண்ணம் காணப்படுவார்.
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் என்பதற்கு முதல் நினைவுக்கு வருவது ஆசிரியரின் பிறந்த தினம் ஆகும். அவரிடம் கற்ற காலம் கடந்த பின்னும் அவரது பிறந்த தினத்திலாவது மாணவர்கள் ஒன்று கூடி அவரை வாழ்த்துவர். எப்போது அவருடன் தொடர்பிலிருப்பர். அவரது விசாரிப்புகள் யாவுமே கல்வியை ஒட்டியதாகவே இருக்கும். அந்த விசாரிப்பில் தன் மாணவனின் கல்வியிலும் எதிர்காலத்திலும் அவர் கொண்டிருக்கும் அக்கறை புரியும்.
தன் மாணவர்களின் மீது கொண்ட அன்பினாலோ என்னவோ, அவர்கள் சொல்வதையும் கருத்தில் கொண்டு கேட்டு நடக்கும் ஒரு ஆசிரியர் அவர். அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தீவிர விசுவாசி. அதனாலோ என்னவோ ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை தன் மாணவர்களுக்கும் கூறுவார். இன்றும் ஐன்ஸ்டீன் என்றதும் அடுத்த கணம் நினைவுக்கு வருவது பத்மநாதன் ஆசிரியர் தான்.
அநீதியோ அநியாயமோ நடப்பதைக் கண்டால் தட்டிக் கேட்கப் பின் நிற்க மாட்டார். எவருக்கும் பயந்தவரும் அல்லர். தான் சார்ந்த சூழலில் இருக்கும் சகல தரப்பினரையும் தன் அன்பாலேயே கட்டிப்போட்ட ஒரு மனிதர். அவர் தன்னிடம் இருக்கிறதோ இல்லையோ யாவருக்கும் உதவி செய்வார்.
பத்மநாதன் ஆசிரியருக்குப் பின்னால் இருக்கும் பெண் சக்தியைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அது அவரது துணைவியார் சந்திராதேவி. சக்தியின்றி சிவம் இல்லை என்ற உண்மையை நடைமுறையில் நாம் கண்டுணர்ந்தது இந்தத் தம்பதியரைப் பார்த்துத் தான். இருவரும் ஆசிரியர்களாக இருந்ததாலோ என்னவோ, தம்மிடம் கற்கும் பிள்ளைகளை எல்லாம் தமது குழந்தைகளாகவே பாராட்டியவர்கள், தம்மைக் காணவரும் மாணவர்களை சிற்றுண்டியுடன் வரவேற்பவர்கள் இந்த லட்சிய தம்பதியர்.
பத்மநாதன் ஆசிரியர் தன்னிடம் பெளதிகவியல் கற்று உயர்தரத்தில் சிறப்பாகச் சித்தி பெற்று மாணவர்களுக்கு கற்பிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கி நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பார். தங்களுக்கு எத்தனை பெரிய வேலை இருந்தாலும், அவர் கேட்கும் போதெல்லாம் தமது ஆசிரியருக்காக வந்து கற்பிப்பர் அவரது மாணவர்கள்.
அன்னாரின் பெளதிகவியல் அறிவுக்கும் ஆங்கில அறிவுக்கும் இணையேது? பாற்கடலை நக்கிக் குடித்து முடிக்க எண்ணும் பூனையின் முயற்சியைப் பற்றிக் கம்பன் கூறுவது போன்றது தான் பத்மநாதன் ஆசிரியரை பற்றி எழுத விழையும் முயற்சியும் அது விரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும்.
அவர் தன் மாணவர்களுடன் கொண்டிருந்த நல்லுறவு வார்த்தை களால் விபரிக்க முடியாதது. அதனை உணர மட்டுமே முடியும். தற்போது அந்த உறவினர் இல்லாமையையும் உணரத்தான் முடிகிறது. வார்த்தை களால் விபரிக்க முடியவில்லை. எம். பெளதிகவியல் உலகிலே இன்று ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதையும் உணர முடிகிறது.
பத்மநாதன் ஆசிரியர் உருவாக்கி விட்டிருக்கும் பல்துறை வல்லுநர்கள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்து நிற்கின்றனர். இன்று பெளதிகவியல் கற்பிக்கும் பிரபல ஆசிரியர்கள் பலர் அவரது மாணவர்கள். அவர் இப்போது எம் மத்தியிலே இல்லாவிடினும், எம் யாவரது உள்ளக் கோயிலிலும் நிச்சயம் நிலைத்திருப்பார் என்பது மட்டுமே நிதர்சனம், அன்னாரின் ஆத்மா பிறவிப் பெருங்கடலைக் கடந்து எல்லையில்லா நித்தியத்தை அடையட்டும்!
2 comments:
சக்தியின்றி சிவமில்லை..... என்பதனூடாக சாரதா கூறிய வார்த்தைகள் சத்தியமானதே!!!! பட்டு மாமியும் பத்து மாமாவும் பாடத்தொடங்கினால்.....கேட்டுக்கொண்டே இருப்பேன்!!
நன்றி... அதை விட வேறு எதுவுமே எனக்குத் தோன்றவில்லை... நீங்கள் யாரென்று சொல்லவில்லையே...??
Post a Comment