‘பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர்
வழியில்லையே’
என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் பாரதி வேதனையுற்றுப் பாடியிருந்தான். அன்றைய நிலையை எண்ணி பாரதி வேதனையுற்றானோ என்று எண்ணக்கூடியதாக இருக்கின்றபோதும் அவனது வேதனை இன்று நிதர்சனமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.காய்கறிகளின் விலை என்றுமில்லாத வகையில் உயர்ந்து செல்கிறது. அதற்காக அவற்றை வேண்டாமல் இருப்போர் என்று எவரையும் காணமுடியவும் இல்லை. உணவுப் பொருட்களின் விலை உயர்வு சாதாரண மக்கள் மீது பிரயோகிக்கும் அழுத்தம் ஒன்றும் சாதாரணமானது அல்ல.
அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் இயல்பை மக்கள் என்று தொலைத்துவிடு கிறார்களோ, அன்று நடக்கப்போகும் விளைவுகளை இன்றே எதிர்வுகூறுவதும் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவை நிச்சயம் எதிர்வினையானவை யாகத்தான் இருக்கும் என்பதை மட்டும் உறுதிபடக் கூறமுடியும்.
அத்தகைய எதிர்விளைவுகளின் சாய லைத்தான் வளைகுடா நாடுகள் அனுபவித்து வருகின்றன. எதிர்பாராத தொடர் இயற்கை அனர்த்தங்கள் உலகளாவிய ரீதியில் விவசாய உற்பத்தியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்து விட்டன.
தற்போது வளைகுடாநாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையை அதிகரித்துள்ளது. விளைவு விவசாய உற்பத்திகளுக்கான ஆரம்பச் செலவு மேலும் அதிகரிக்கும் என்பது கண்கூடு.
இவையெல்லாம் உலகளாவிய உணவு நெருக்கடியையும், அதனால் உருவாகும் பொருளாதார சமூகப் பிரச்சினைகளையும் தான் தோற்றுவிக்கப் போகின்றன என்பது நிதர்சனம்.
இன்று நாம் சந்தித்திருக்கும் மரக்கறிகளின் விலை உயர்வும் கூட உலகளாவிய உணவு நெருக்கடியின் தாக்கமென்றே கூறவேண்டும்.
இலங்கை நீர்வளம் நிறைந்த விவசாய நாடு. வெள்ளம், நிலச்சரிவு, புயல், வரட்சி என மாறி மாறி விளையாடிய இயற்கையின் சீற்றம் உள்நாட்டு விவசாய உற்பத்திகளிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
அதனால்
உழன்றும் உழவே தலை’ என
ஏர்த்தொழிலான விவசாயத்தின் பின் னால் தான் உலகம் இயங்குகிறது என்ற பெரிய தத்துவத்தை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.ஆதிமனித நாகரிகமே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுத்தான் இன்றைய நிலைக்குப் பரிணமித்திருக்கிறது.
தொழில்நுட்ப அறிவு வளர வளர விவசாயத்தில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகளும், பல்வேறு நிலப்பாவனைத் தேவைகளுக்காக மாற்றப்பட்ட விவசாய நிலங்களும் இயற்கையின் சமநிலையைக் குலைத்தன.
அவை ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தால் அதிகரித்த சனத்தொகையும் தேவைகளும் புவியின் சமநிலையை மேலும் குலைத்தன. விளைவு பல்வேறுபட்ட நெருக்கடிகளில் முடிவுற்றது.
உலகளாவிய ரீதியில் நிலத்துக்காகப் போராடிய யுகமொன்று முடிவடைந்து இன்று உணவுக்காகப் போராடும் யுகம் ஆரம்பித்திருக்கிறதோ என எண்ணுமளவிற்கு நிலைமைகள் மாறியுள்ளன.
இந்த நிலையில் தான் கிராமியப் பொருளாதாரத்தை விவசாயம் மூலம் உயர்த்தும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. வீட்டுக்கொரு தோட்டம் என்ற வகையிலே ஒரு மில்லியன் வீட்டுத் தோட்டத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இத்திட்டங்களெல்லாம் புதியவை என்று கூறுவதைவிட, நாம் ஏலவே கைக்கொண்டு பின் நவீன மோகத்தில் கைவிட்ட திட்டங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னொரு கா¡லத்திலே, வீடுகளில் உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கென்றே அறையொன்று இருக்கும். தானியங்கள், உலர் உணவுப் பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றனவெல்லாம் அங்கே சேமிக்கப்பட்டிருக்கும்.
மக்கள் தமக்குத் தேவையான மரக்கறிகளைத் தமது வீட்டுத் தோட்டங்களிலிருந்தே பெற்றுக் கொண்டனர். இந்த சேமிப்புதான், பட்டினி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ள காலங்களில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தது. ஆனால் இந்த முறைமைகள் யாவும் வழக்கொழிந்து போய்ப் பல வருடங்களாகி விட்டன.
வீட்டுத் தோட்டங்கள் எம்மக்கள் மத்தியில் பிரபலமானவை. தமக்குத் தேவையான காய்கறிகளை தமது வளவிலேயே பயிரிட்டு விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை தேவைக்கு மேலதிகமாக இருப்பவற்றை சந்தையில் விற்று வருமானத்தையும் ஈட்டினர். சில வேளைகளில் பண்டமாற்று முறை மூலம் வருமானத்தையும் பெற்றனர்.
விவசாயத்துடன் இயைந்து பழகிய எம் மக்களின் வாழ்வியல் காலத்துடன் மாறத் தொடங்கியது. மாறத் தொடங்கியது என்று கூறுவதை விட விவசாயத்திலிருந்து விலகத் தொடங்கியது.
வாழ்க்கைத் தரத்தின் தன்மையும் மாறியது. அன்று மருந்தடிக்காத காய்கறியை வீட்டுத் தோட்டத்திலிருந்து கைநிறையக் கொண்டு வந்த குடும்பத் தலைவன் இன்று மருந்தடித்த அரைக்கிலோ மரக்கறியைப் பொலித்தீன் பையிலே கொண்டு வருகிறான்.
அதனால் போஷாக்கின்மையும் தலைதூக்கியது. நகரமயமாக்கலின் ஆதிக்கம் அதிகரிக்க உணவுப் பழக்க வழக்கங்கள் மாறின. உணவுப் பயிர்களில் இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கம் அதிகரித்தது. அவற்றை உண்போரின் உடற் போஷாக்கின் சமநிலையும் பாதிக்கப்பட்டது.
இவையெல்லாம் தான் இன்று வீட்டுத் தோட்டமுறைமைகள் மீள் அறிமுகம் செய்து வைக்கப்படக் காரணமாகியுள்ளன. கிராமப்புறங்களிலும் சிறு நகர்ப் பகுதிகளிலும் இத்திட்டம் அதிகளவில் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொருவரிடமும் இருக்கும் நிலம் சகல பயிர்களையும் வளர்த்து பயனைப் பெறப் போதாமல் இருக்கலாம். ஆனால் இருக்கும் நிலத்தில் இருந்து உச்சப் பயனைப் பெறுவதே இந்த ‘1 மில்லியன் வீட்டுத் தோட்டத் திட்டத்தின் நோக்கமாகும்’.
இது ஒரு தனி நபருக்கோ அல்லது தனிப்பட்ட குடும்பத்துக்கோ பயன் தரவல்ல திட்டம் என்பது மட்டுமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையுமே மாற்றியமைக்க வல்லது என நம்பப்படுகிறது.
எந்தவித மேலதிக செலவுமின்றி கிராமசேவையாளர் அல்லது அக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர், வேளாண்சேவைகள் அதிகாரி, சுகாதார உத்தியோகத்தர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அதன் முதற்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 100 வீட்டுத் தோட்டங்களுக்குரிய பலவித விதைகள், உரம், விவசாய உபகரணங்கள் மட்டுமன்றி வல்லுநர்களின் அறிவுரையும் வழங்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுத் தோட்டங்களிலும் செய்கை பண்ணக்கூடிய பயிர் வகைகள் தொடர்பான அறிவுறுத்தலும் வழங்கப்படும்.
நாடாளாவிய ரீதியிலே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது ஒவ்வொரு கிராமமும் விழிப்புணர்வடை வதுடன் தன் விவசாய உற்பத்தியில் தன் னிறைவுமடையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
நிலம் உள்ளவர்களால் மட்டும்தான் வீட்டுத் தோட்டம் வைக்கமுடியும் என்ற எண்ணக் கரு தவறானது. மாடிவீட்டில் இருப்பவர்கள் பெரும் பண்ணையைக் கூட உருவாக்க முடியும் அவ்வெண் ணக்கருவை நிலைக்குத்தான பண்ணை முறைமை என்பர்.
வீட்டுத் தோட்டங்களை அமைத்தால், எமது விருப்பத்துக்கேற்ற உணவு வகைகளைப் பயிரிடலாம். சமச்சீரான சத்துணவைப் பெற முடியும். கிருமி நாசினிகளின் பாவனையைக் குறைக்கலாம். அதனால் நச்சுத்தன்மையற்ற உணவைப் பெறமுடியும். உணவு விநியோகம் தொடர்ச்சியானதாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். மண்வளம் பேணப்படும். தேவையான போது அறுவடையை மேற்கொள்ளலாம்.
இந்த வீட்டுத் தோட்டத்திட்டங்கள் அவற்றின் நன்மை உணரப்பட்டு செவ்வனே நடைமுறைப்படுத்தப்படுமாயின் மேற்கூறிய நன்மைகள் தாமே நடந்தேறும்.
ஏனைய கீழைத்தேய நாடுகளைப் போன்று விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபாடுகாட்டாத ஒரு நிலை இலங்கையிலும் காணப்படுகிறது. அந்த நிலை மாறுவதற்கும் இதுவரை காலமுமே விவசாயத்தில் ஈடுபடாதவர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்வதற்கும் இத்திட்டம் துணையாக இருக்கும் என்பது நம்பிக்கை.
எம்மத்தியில் வழக்கொழிந்து போய்க் கொண்டிருந்த வீட்டுத் தோட்ட முறைமைகள் மீண்டும் புத்துயிர் பெறப்போகின்றன என்பதில் யாவருக்கும் மகிழ்ச்சியே.
No comments:
Post a Comment