Thursday, March 3, 2011

உலகை உலுக்கியிருக்கும் மற்றொரு நிலநடுக்கம்

“குடந்தையில் நெருப்பால் இழந்தோம் 
சுனாமியில் நீரால் இழந்தோம் 
போபாலில் வாயுவால் இழந்தோம் 
ஆந்திராவில் வான் மழையால் இழந்தோம் 
குஜராத்தில் நிலடுக்கத்தால் இழந்தோம்
ஐந்தையும் பூதங்கள் என்றவன்
தீர்க்கதரிசிதான்”

என்கிறது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையொன்று.



சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை அண்மைக் காலமாக இயற்கையும் மெய்ப்படுத்திக் கொண்டே வருகிறது.
அதற்கமையவோ என்னவோ கடந்த செவ்வாயன்று நியூசிலாந்தின் தோட்ட நகரம் என்று பெயர்பெற்ற கிரைஸ்ட் சேர்ச் நகரிலே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரம் கிரைஸ்ட் சேர்ச். அதன் சனத்தொகை ஏறத்தாழ 377000 ஆகும். கன்டபரி சமவெளியிலே அமைந்திருக்கும் கிரைஸ்ட் சேர்ச் பகுதியிலே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 7.1 ரிச்டர் அளவிலான ஒரு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவால் ஏற்பட்ட பின் அதிர்ச்சியே கடந்த செவ்வாயன்று 6.3 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அனர்த்தங்களையும் தவிர கன்டபரி சமவெளிப் பகுதியானது ஆயிரக் கணக்கான வருடங்களாக எந்தவொரு பூமி அதிர்ச்சியையும் எதர்நோக்கவில்லை. கடந்த ஆண்டு பூமியதிர்ச்சி இடம்பெறும் வரை அப்பகுதியில் நிலக்குறை இருப்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கவும் இல்லை.
நகரின் பெரிய கட்டடங்களும் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயமும் முற்றாக இடிந்து போயுள்ளன. இடிபாடுகளுக்குள் இருந்து ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 164 பேர் அபாயகர நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2500க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கின்றனர் மீட்புப் பணியாளர்கள். இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்போரை உயிருடன் மீட்கும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக அவர்கள் அவநம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த நில நடுக்கத்தின் பின்னரும் 70 தடவைகள் அப்பகுதியில் அதிர்வு உணரப்பட்டதாகவும், இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கலாமெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்த அனர்த்தம் ரிச்டர் அளவில் சிறியதுதான். ஆயினும் கடந்த வருடம் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2010 இல் ஏறபட்ட நிலநடுக்கம் நிலத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏற்பட்டது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்றோ நிலத்தில் 4 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏறபட்டிருக்கிறது. அத்துடன் நெரிசல் மிகுந்த நேரத்திலே நடந்திருக்கிறது. விளைவு; நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்ச்சேதம், பல இலட்சங்கள் பெறுமதியான பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கின்றது.
இடிபாடுகளுக்குள் சிக்குண்டோரின் சிதைவடைந்த கைகளும் கால்களும் அந்த இடத்திலேயே முறையாக வெட்டி அகற்றப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த தசாப்தங்களில் நியூசிலாந்து சந்தித்த மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து குளிர்க் கால நிலையும் மழையும் மீட்புப் பணியாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நிலையில் துணிச்சலுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்குண்ட ஒருவரை மீட்பதற்காக வைத்தியர்கள் சுவிற்சலாந்து இராணுவக் கத்தியைக் கொண்டு அவரது கால்களை அகற்றி உயிருடன் மீட்டதாக வெளிவரும் தகவல்கள் மயிர்கூச்செறியச் செய்கின்றன.
‘இது மிகவும் பயங்கரமானது’ ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற எமக்கு வேறு வழியிருக்கவில்லை’ என்று வைத்தியரொருவர் அந்நாட்டின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
ஆங்கிலம் கற்கும் ஆசிய மாணவர்களின் சொர்க்கபுரியாக இருந்த ஆறு மாடிக் கட்டடம் தீப்பற்றியதுடன், இடிந்து போயுள்ளது. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்தே பெருமளவிலான உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
பல ஆசிய மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்காகவே நியூசிலாந்துக்குச் செல்கின்றனர். நியூசிலாந்தின் இயற்கை அழகு மட்டுமன்றி, அங்கு செலவு குறைவாக இருப்பதுவே மாணவர்கள் அவ்வாறு படையெடுக்கக் காரணமாகிறது. அத்துடன் நியூசிலாந்தைப் பொறுத்தவரையிலே வெளிநாட்டவர்களுக்கு கல்விச் சேவையை வழங்குவதானது, வருடாந்தம் 1.1 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுத்தரும் பெரிய வணிகத்துறையாகும். 2010இல் மட்டும் ஏறத்தாழ 72,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக நியூசிலாந்துக்குச் சென்றிருக்கின்றனர்.
ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களுடன் அவுஸ்திரேலியரும் இணைந்து தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த 6.3 ரிச்டர் அளவான நில நடுக்கத்தையடுத்து, நியூசிலாந்தின் மிக நீண்ட பனிமலையிலிருந்து 30 மில்லியன் தொன்கள் நிறைவுடைய பனி தளர்ந்து போயுள்ளது. அருகில் உள்ள தாஸ்மான் ஏரியை நோக்கி சிறிய பனிப் பாறைகளாக இப்பனி பயணிப்பதால் ஏறத்தாழ 11 அடி உயரமான அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
அண்மைக் காலமாக லாநினா காலநிலையால் நியூசிலாந்து எதிர்நோக்கிய பெருமழையாலும் டாஸ்மான் ஏரியின் இயக்கவியலில் நிகழ்ந்த சடுதியான மாற்றத்தாலும் பனிமலையில் தளர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
5 kசீ கீ 2 kசீ பரிமாணமுள்ள டாஸ்மான் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை பனிப் பாறைகள் நிரப்பியுள்ளன.
ஆங்கிலேய பாணியில் அமைக்கப்பட்ட தோட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் பெயர் போனது கிரைஸ்ட் சேர்ச் நகரம்.
தேனிலவு கொண்டாட வரும் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நியூசிலாந்தின் தென் தீவுக்கு நுழைவாயிலாகவும் கிரைஸ்ட் சேர்ச் நகரே காணப்படுகிறது.
ஆதிக் குடியேற்ற வாசிகள் இரு கண்டத்தட்டுக்களுக்கு இடைப்பட்ட வளைவான பகுதியிலே எதேச்சையாக இந்த நகரை அமைத்துவிட்டிருக்கிறார்கள்.
அந்த வளைவில் மேற்பரப்புக்கு அருகாமையிலேயே நிலக்கீழ் நீர் காணப்படுகிறது. 6 மாத கால இடைவெளியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கங்கள் காரணமாக நிலத்தின் உறுதித் தன்மை குலைக்கப்பட்டதால், வீதிகள் சிதைவடைந்துள்ளன. வாகனங்கள் புதைந்து போயுள்ளன. பாதிக்கப்பட்ட கட்டடங்கள் இன்னும் தளர்வடைந்துள்ளன.
அவுஸ்திரேலிய - இந்திய தட்டுக்கும் பசுபிக் தட்டுக்கும் இடையிலேயே நியூசிலாந்து அமைந்துள்ளது.
நிலத் தட்டுக்களின் எல்லைப் பகுதியில் மட்டுமன்றி பல இரண்டாம் நிலைத் தட்டுக்களுக்கு அருகாமையிலும் கிரைஸ்ட் சேர்ச் நகர் அமைந்திருக்கிறது. ஆகையால் கிரைஸ்ட் சேர்ச் பகுதியில் நிலநடுக்கங்கள் யாவுமே ஆழம் குறைந்த பகுதியிலேயே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றால் ஏற்படும் சேதங்களும் மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரை மீள் கட்டமைக்க மட்டும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தால் நியூசிலாந்தின் 15 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமன்றி 4.4 மில்லியன் சனத்தொகையும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி யிருக்கின்றது.
உருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரைத் துரிதமாக மீள் கட்டமைக்க வேண்டிய தேவையொன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், றக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நியூசிலாந்திலே நடைபெறவிருக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள றக்பி ரசிகர்கள் நியூசிலாந்தை நோக்கிப் படையெ டுக்கவிருக்கிறார்கள். கிரைஸ்ட் சேர்ச் நகரமும் இந்த றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்க இருந்தது.
இந்த நகரை முற்றாக வேறு இடத்துக்கு நகர்த்துதலே சிறந்தது என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார் நகரின் பிரதி மேயர். அது சாத்தியமாகாது விடின், நகரில் வர்த்தகப் பகுதியாவது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
முழு கன்டபரி மாநிலமுமே அதிர்ந்துகொண்டிருக்கும் போது, கிரைஸ்ட் சேர்ச் நகரை நகர்த்துவதென்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
19ம் நூற்றாண்டிலே கிரைஸ்ட் சேர்ச் நகரில் குடியேறி, அந்நகரை வடிவமைத்த வர்கள் புவியியல் விடயங்களில் அதிக ளவு கவனம் செலுத்தியிருக்கமாட்டார் கள். ஆதலால் பூகம்ப வலயங்களில் அமைந்திருக்கும் நகரங்களான சான்பிரான் சிஸ் கோ போன்றவற்றின் திட்டமிடல், வடிவமைப்புகளை கற்றறிந்து அவற்றை கிரைஸ் சேர்ச் நகரிலும் கைக்கொள்ள வேண்டும்.
உருக்குலைந்த நகரம் விரைவில் மீளெழுந்து விடும் என்ற நம்பிக்கையை கடந்த கால வரலாறு உணர்த்தி நிற்கிறது. ஆதலால், காலமே சிறந்த மருந்தாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment