Sunday, March 13, 2011

இப்போது புராதன சிவாலயத்தின் அத்திவாரம்; இன்னும் தோண்டினால் கல்வெட்டுக்களுக்கும் சாத்தியம்


யாழ்ப்பாணத்தில் 500 க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டதாக போர்த்துக்கேயர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இன்றைய சாவகச்சேரிப் பகுதியிலே வாரிவனேஸ்வரம் என்ற சிவன் கோயில் இருந்ததை தட்சிண கைலாச புராணக் குறிப்பொன்று உறுதி செய்கிறது.
ஆங்கிலேயர் காலம் தொட்டு இப்பகுதியில் இயங்கி வந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதி அகற்றப்பட்டு அங்கே புதிய நீதிமன்ற வளாகம் ஒன்றை அமைக்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதன் முதல் முயற்சியாக அத்திவாரம் வெட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
அப்பணிகளின் போது பல தொல்லியல் சின்னங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து விடயம் யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைக்கு அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு நேரில் சென்று பெறப்பட்ட சான்றுகளை அடையாளப்படுத்தினர். அச்சான்றுகள் தொடர்பான தகவல்களை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
ஏலவே 1990, 1993 களில் ஆய்வொன்றை மேற்கொண்ட போது இப்பகுதியிலிருந்து நான்கு கருங்கல் விக்கிரகங்கள் பெறப்பட்டன.
ஒன்று நீதிமன்ற வளவுக்குள் இருந்த கிணற்றிற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டது. மற்றையவை மலசல கூடமொன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்ட போது அருகாமையில் கிடைத்தன.
இவையெல்லாம் அப்பகுதியில் கோயிலொன்று இருந்திருக்கலாம் என்ற கூற்றை உறுதி செய்தன. ஆனால் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள காலம் இடங்கொடுக்கவில்லை.
ஏனெனில் அப்பகுதி நீதிமன்ற வளாகமாதலால் உயர் பாதுகாப்புடைய பகுதியாகக் காணப்பட்டது. தற்போது ஏலவே இருந்த நீதிமன்றக் கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடத் தொகுதிக்கான அத்திவாரம் வெட்டப்படுகிறது.
அப்பிரதேசத்தில் கோயில்களின் இடிபாடுகள் ஏதாவது கிடைக்கலாமென ஊகித்து அங்கு சென்றோம். எமது ஊகம் பிழைக்கவில்லை என்றார் பேராசிரியர்.
அத்திவாரம் வெட்டப்படும் பகுதியில் ஒரு பெரிய கோயில் இருந்ததற்குச் சான்றாக அமையும் பெரிய செங்கற்கள் பல கண்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் அத்தகைய கற்கள் பல கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அந்தப் பிரதேசம் முழுவதும் இத்தகைய கற்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தட்சிண கைலாச புராணத்திலும் அப்பகுதியில் இருந்த வாரிவணேஸ்வரர் ஆலயம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஆகவே 16 ஆம், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியத்திலும் அத்தகைய ஆலயம் ஒன்று இருந்ததற்கான குறிப்பு காணப்படுவதானது இச்சான்றுகள் தொடர்பான ஊகங்களை மேலும் உறுதி செய்கின்றது.
அது பெரும்பாலும் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் தற்போது நீதிமன்ற வளாகத்திற்கு முன்னே தேவாலயம் ஒன்று காணப்படுகிறது.
யாழில் 500 க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் போர்த்துக்கேயர் கால ஆவணங்களும் சில ஊகங்களுக்கு வழி சமைக்கின்றன.
தற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டு வரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குமுள்ளே செறிந்த அளவில் செங்கற்களும் பொழிந்த முருகைக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது. அவை ஆலயம் ஒன்றின் கட்டடப் பாகங்கள் என்பதை அவற்றின் வடிவ¨மைப்புக்கள் எமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
இக் கோயில் 13 ஆம், 14 ஆம், 15ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கலாம். புதிய அத்திவாரத்துக்காக நிலத்தை மேலும் வெட்டினால், கல்வெட்டுக்கள் கிடைக்கும் சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.
அங்கு கிடைக்கப்பெற்ற கல் ஒவ்வொன்றும் மிகப்பெரியதாக இருக்கிறது. அக்கற்கள் 6 அடி, 5 அடி, 3 அடி என வெவ்வேறு பரிமாணங்களை உடையவை.
அத்தகைய பரிமாணமுடைய கற்களை வீடுகளுக்கு வைத்துக் கட்டும் மரபு எம் மக்கள் மத்தியில் காணப்படவில்லையாதலால் அக்கற்கள் ஒரு கோயிலுக்குரியனவாகவே இருக்க முடியும்.
இந்த அகழ்வுகள் முற்றாக மேற்கொள்ளப்பட்டு அது வெளியே கொண்டுவரப்பட்டால் இதுவரை காலம் யாழ்ப்பாணத்திலே கண்டுபிடிக்கப்பட்ட புராதன கோயில்களுள் இது பழைமையானதாகவும் பெரியதாகவும் இருக்கும் என உறுதிபடக் கூறுகிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
1990க்கு முன்னர் பொதுமக்களால் இந் நீதிமன்ற வளவிலும் அருகில் உள்ள பஸ்தரிப்பு நிலையப் பகுதியிலும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட போது அம்மன், மனோன்மணி அம்மன், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், சூரியன் முதலான கருங்கற் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள் மிகுந்த கலை வேலைப்பாடும் அழகும் பொருந்திய அம்மன் விக்கிரகம் ஐந்தரை அடி உயரம் கொண்டது. இதுவே இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர்.
இச் சிலைகளைக் குழியில் இருந்து வெளியே எடுத்த போது அவை சில பாதிப்புகளுக்கு ஆளானாலும் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த பொதுமக்கள் அச்சிலைகளை பழைய வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இவ்விக்கிரகங்களை பொதுமக்கள் கண்டெடுத்தபோது இவ்விடத்திலேயே சிவன் ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பினர். அது முற்றிலும் உண்மை என்பதே தற்போது நீதிமன்ற வளவில் கிடைத்து வரும் ஆலய அழிபாடுகள் உறுதி செய்கின்றன.
வாரிவனம் அல்லது வாரிவனேஸ்வரம் என்னும் பதி சாவகச்சேரி நகரிலே அமைந்திருக்கிறது. அமிர்தபாஷணி சமேத சந்திரசேகர வாரிவன நாத சிவன் என்னும் நாமத்துடன் கோயில் கொண்டெழுந்தருளி சிவன் அருள்பாலித்து வருகிறார்.
இத்தலத்தை விருப்பாக்கன் என்றும் சோழமன்னன் வழிபட்டதாகவும் தட்சிணகைலாச மான்மியம் கூறுகின்றது- கோயிலைச் சார்ந்த திருக்குளத்தில் அருகில் சிவலிங்கத்தையும் அம்பாளையும் அக்காலத்து அன்பர்கள் புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஒல்லாந்தரின் ஆட்சியிலே இவ்வாறு செய்ய நேர்ந்தது. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியில் அவை தாமே வெளிப்பட்டதாகவும் வரலாறுகள் உள்ளன. எங்கும் நீர்வாழித் தடாகம் காட்சியளித்த படியால் வாரிவனம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
அருள் வாரியான அப்பன் ஆன்மகோயன் உய்யத் தம்மருள் வாரி வழங்கிய இடம் என்றும் கூறலாம். இங்குள்ள சிவலிங்கம் காசியில் கிடைத்த பாணலிங்க விசேடமுடையது.
முற்காலத்தில் இன்றைய சாவகச்சேரியினை வாரி வனநாத ஈசுரம் என்றே அழைப்பார்கள். வாரி என்ற புற்களைக் கூடுதலாகக் கொண்ட ஒரு பாதை இருந்ததாகவும் அதன் வழியே பால் கொண்டு போன ஒருவர் பல தடவை தடுக்கி விழுந்த போது ஓரே இடத்தில் பால் ஊற்றப்பட்டது.
அந்த இடத்தில் சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதில் எழுந்ததே வாரி – வனம் கோயில் ஆகும். அது பின்னர் வாரிவனநாதர் கோயில் ஆனது. இக் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. ஆனால் அதன் திருமஞ்சனக் கிணற்றில் லிங்கத்தையும், அம்பிகையையும் பக்தர்கள் எடுத்து ஒழித்துவிட்டனர்.
இந்தத் திருமஞ்சனக் கிணறு இன்றும் சாவகச்சேரி பேரூந்து வளவினுள் இருக்கிறது. அத்தோடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் கிராமக்கோட்டு வளவினுள் இப்பொழுதும் சில கோயிற் சிற்ப இடிபாடுகளைக் காணலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் ஐந்து அடி நீளமான அமீர்தபாலகால பூசணி அம்பாளும், சிவலிங்கமும் கண்டு எடுக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இதேவேளை சில சொரூபங்கள் குளத்துக்குள் இருந்தும் கண்டெடுக்கப்பட்டன என்றெல்லாம் கூறப்படுகிறது-
தற்போது புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகள் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை அறிவிக்கவிருக்கிறது.
இப்பகுதிகளில் மேலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் இன்னும் பல தொல்பொருட் சின்னங்கள் கிடைக்கப்பெறலாம். அது தொல்பொருள் திணைக்களத்தின் கைகளிலேயே இருக்கிறது-
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து நாடெங்கிலும் சமாதானக் காற்று வீசுகிறது.
அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்த மக்களின் வாழ்வியல் மீண்டும் ஸ்திரப்பட ஆரம்பித்திருகிறது. இந்நிலையிலே யாழ்ப்பாணத்தின் தொன்மைக்குச் சான்று பகரும் பிரதேசங்களிலெல்லாம் தொல்பொருள் திணைக்களம் வெவ்வேறு கூட்டு முயற்சிகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த தொல்லியல் சின்னங்கள் யாவும் எமக்கே உரித்தானவை.
அவை தான் எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு மட்டுமன்றி எமக்கும் கூட சொல்லப் போகும் ஆதாரங்கள். ஆனால் நவீனம் என்ற போர்வையில் நாம் அவை பற்றிய விழிப்புணர்வைத் தொலைத்துவிட்டிருக்கிறோமோ என்றும் எண்ணவே தோன்றுகிறது.
நாம் அறியாத எமது அரும் பெரும் சொத்துக்களைப் பற்றி யாரோ சொல்லி அறியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய விடயம்.
ஆயினும் யாரோ சொல்லியாவது அறிய முடிகிறதே என்பதை எண்ணி மகிழ்வடையத் தான் வேண்டும்.
இது தான் எமக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் முடியாத காரியம் எதுவுமே இல்லை. எமக்கே உரித்தான ஆனால் தற்போது நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் அரும்பெரும் சொத்துக்களை இனியாவது பாதுகாக்க ஒன்றிணைவோம்.

No comments:

Post a Comment