Sunday, March 27, 2011

எண்ணெய் மீது கொண்ட பேராசையா?

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழாமந்தரும்

என மற்றவருடைய பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறிய பின் அழியாத துன்பத்தைத் தரும் என்பதை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.
அது வளைகுடா நாடுகளின் இன்றைய நிலையை எண்ணி எமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் கூற்றும் கூட.
சமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்று அமைதி விரும்பி எனத் தன்னை உலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்ட மனிதரொருவர் மக்களைக் காப்பதற்காக எனும் பெயரில் மேற்கொண்ட முடிவு இன்று முழு உலகையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.
எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல அரபு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் மக்கள் போராட்டம் தொடர்கிறது. அந்த வரிசையில் லிபியாவும் விதிவிலக்காய் அமையவில்லை.
அங்கே 41 வருடங்களாக ஆட்சிபுரிந்து வரும் முஅம்மர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த மக்கள் போராட்டம் கிளர்ச்சியாய் உருமாறி இன்று மேற்கத்தைய நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்துமளவிற்கு பரிணமித்திருக்கிறது.
லிபிய இராணுவமும் காவல்துறையினரும் பொதுமக்களைச் சித்திரவதை செய்கின்றன. அங்கு மனித உரிமை மீறல்கள் சகஜமாய் நடக்கின்றன. பத்திரிகைச் சுதந்திரம் மீறப்படுகிறது. கடாபியோ கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவிக்கின்றார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு லிபியாவிலே உள்நாட்டுப் புரட்சியொன்று வெடித்தது.
புரட்சியை ஒடுக்குவதற்காக இராணுவ பலத்தை மக்கள் மீது பிரயோகித்தது லிபிய அரசு. அதையே சாடி, லிபிய வான் பாதுகாப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐ. நா. மக்களைப் பாதுகாப்பதற்காக என்ற காரணத்துடன் மேற்குலகின் கூட்டுப்படை லிபிய எல்லைக்குள் நுழைந்தது.
அமைதி விரும்பிகளாகத் தம்மை அடையாளப்படுத்தி ஆட்சி பீடம் ஏறிய ஒபாமாவும் டேவிட் கமரூனும் தமது யுத்த முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
லிபியா மீது மேற்குலகம் கொண்டிருக்கும் இந்த அதீத அக்கறையின் பின்னே இருப்பது இயற்கை தந்த எண்ணெய் வளமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
‘ஒடிசி டோன்’ என்ற பெயரில் மேற்குலகின் கூட்டுப்படை லிபியா மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உலகில் ஏறத்தாழ 60 சதவீத எண்ணெய் வள இருப்பைக் மத்திய கிழக்கு மத்திய ஆசிய நாடுகளே கொண்டிருக்கின்றன. அவற்றிடமிருந்து எண்ணெய் அகழும் உரிமையைக் கையகப்படுத்தும் பரந்த திட்டத்தை மேற்குலகு வகுத்திருக்கிறது அந்தப் பரந்த திட்டத்தின் ஒரு சிறு பகுதியாகவே ‘ஒடிசிடோன்’ நடவடிக்கையும் தெரிகிறது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் இருப்பினுள் மசகு எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எண்ணெய், வாயுக் குழாய் வழிகளும் அடங்குகின்றன.
சவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், யெமன், லிபியா, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா, கஸகஸ்தான், மலேசியா, இந்தோனேசியா புரூனைய் ஆகிய நாடுகள் மட்டும் 66.2 - 75.9 சதவீத எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவையும் அல்ஜீரியாவையும் அடுத்து ஆபிரிக்கப் பிராந்தியத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடாக இருந்தது லிபியா. அங்கே 46.5 பில்லியன் பரல்கள் (2008) அளவான எண்ணெய் இருப்பு காணப்படுகிறது. அந்த அளவானது எகிப்தில் இருக்கும் எண்ணெய் இருப்பின் 10 மடங்கினதாகும் என 2008 இல் கணிக்கப்பட்டது.
ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, லிபியாவில் 60 பில்லியன் பரல்கள் எண்ணெய் இருப்பு காணப்படுவதாகவும் 1500 பில்லியன் கன மீற்றர் அளவிலான இயற்கை வாயு இருப்பு காணப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது.
சாதாரண நாளொன்றிலேயே லிபியாவில் அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெய்யின் அளவு 1.3 - 1.7 மில்லியன் பரல்களாகும். இது லிபியாவின் நாள் எண்ணெய் வள அகழ்வு எல்லையிலும் குறைவான அகழ்வு ஆகும்.
இவையெல்லாம் தான் மேற்குலகின் கண்களை உறுத்தியிருக்கின்றன போலும். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற பழமொழியின் அர்த்தத்துக்கு லிபியா ஒரு நடைமுறை உதாரணம்.
மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரிலே மேற்குலகக் கூட்டுப்படை லிபியாவை ஆக்கிரமித்திருப்பதானது 2003இல் ஈராக்கில் நடந்ததை நினைவுபடுத்துகிறது. இந்த ஆக்கிரமிப்புக்களின் பின்னணியில் இருப்பது இயற்கை அன்னை தந்த கொடைமீது மேற்குலகு கொண்ட பேராசையன்றி வேறு என்ன?
மேற்குலகின் அடிப்படை நோக்கங்கள் லிபியாவின் எண்ணெய் இருப்புகளைக் கையகப்படுத்தி அந்நாட்டின் தேசிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தை நிலைகுலைத்து எண்ணெய்க் கைத்தொழிலை தனியார்மயப்படுத்தி லிபிய எண்ணெய்க் கிணறுகள் மீதான உரிமையை வெளிநாடுகளிடம் கைமாற்றும் தந்திரங்களாகவே தெரிகின்றன.
லிபியாவின் தேசிய எண்ணெய்க் கூட்டுத்த ¡பனமானது, உலகின் முதல் 100 எண்ணெய்க் கம்பனிகளின் தரப்படுத்தலில் 25ஆவது இடத்தை வகிக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் பரலொன்று 110 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மாறாக லிபிய எண்ணெய் பரலொன்று ஒரு அமெரிக்க டொலருக்கே விற்பனை செய்யப்படுகிறது.
லிபிய எண்ணெய் இருப்புக்களைக் கையகப்படுத்தலானது மேற்குலகுக்கு பரலொன்றுக்கு ஏறத்தாழ 109 அமெரிக்க டொலர் இலாபத்தைப் பெற்றுத் தரும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் பல வெளிநாட்டு எண்ணெய் கம்பனிகளும் லிபிய எண்ணெய் இருப்பிலே ஆர்வமாகத்தான் இருக்கின்றன. பிரான்ஸ், சீனா, இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் எண்ணெய்க் கம்பனிகள் இதற்கு விதிவிலக்கல்ல.
லிபிய எண்ணெய்க் கைத்தொழிலில் சீனாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது.
வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் சீனா காலூன்றுவதை அமெரிக்கா விரும்பவில்லை போலும்.
வட ஆபிரிக்கப் பகுதியில் சீனா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்கும் ஒரு முயற்சியாகவும் லிபியா மீதான மேற்குலகின் நடவடிக்கையைக் கருத முடியும். சீனா ஐக்கிய நாடுகள் சபையின் வான் பாதுகாப்புக்கு எதிராக வாக்களித்தமையானது இந்த ஊகத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
ஆபிரிக்கப் பிராந்தியத்தில் அதிகளவிலான எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடு லிபியா, அமெரிக்காவின் தலையாட்டு பொம்மையாக லிபியாவை மாற்றும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றனவோ என்றும் கூடத் தோன்றுகிறது.
லிபிய எல்லையிலே பிரான்ஸின் ஆதிக்கமுடைய அல்ஜீரியா, துனிசியா, நைகர் மற்றும் சாட் ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன.
அடிப்படையில் சாட் ஒரு எண்ணெய் வள நாடு. சாட்டின் தென்பகுதி சூடானின் டாபர் பகுதிக்கான நுழைவாயிலாகக் காணப்படுகிறது. சாட் மற்றும் சூடானிலுள்ள எண்ணெய் வளத்தில் சீனா மட்டுமன்றி பல மேற்குலக நாடுகளும் மிக ஆர்வமாக இருக்கின்றன. 2007 இல் சீன தேசிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் சாட் அரசுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல நைகரில் இருக்கும் யுரேனிய இருப்பிலே அமெரிக்காவும் ஒரு கண்வைத்திருக்கிறது. ஆனால் நைகரில் இருக்கும் யுரேனியக் கைத்தொழிலில் பிரான்ஸ் மற்றும் சீனாவின் ஆதிக்கமே காணப்படுகிறது.
சுருங்கக் கூறின் ஏலவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் இருந்த வட மத்திய மேற்கு ஆபிரிக்க நாடுகளை அமெரிக்கா குறி வைத்திருக்கிறது எனலாம்.
அந்நாடுகளில் சீனா, ஐரோப்பிய யூனியனின் ஆதிக்கம் மேலோங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஐரோப்பிய யூனியனோ, லிபிய எண்ணையிலே பெருமளவில் தங்கியுள்ளது. 85 சதவீதமான லிபிய எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கே விற்கப்படுகிறது.
லிபியாவில் தொடரும் அமைதியின்மையானது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பெற்றோலிய விநியோகத்தைப் பாதிக்கும் இந்நிலையில் அதிகளவில் பாதிக்கப்படுவது இத்தாலி, பிரான்ஸ் ஜேர்மனி ஆகிய நாடுகளே.
லிபியாவைப் பொறுத்தவரையிலே அங்கு தொடரும் அமையின்மையாகட்டும் கூட்டுப் படைகளின் நடவடிக்கைகளாகட்டும், அவை உலகளாவிய ரீதியிலே பாரிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கப் போகின்றன என்பது திண்ணம்.
நேட்டோ நாடுகளின் தலைமைத்துவமானது யுத்தம் மற்றும் அழிவின், வடிவமைப்பாளராக இருந்ததை ஈரானும் ஆப்கானிஸ்தானும் உணர்த்தி நிற்கின்றன.
நேட்டோ கூட்டுப் படைகள் எண்ணெய் என்ற வெற்றிக் கேடயத்தை எதிர்பார்த்தே மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் லிபியாவில் களமிறங்கியிருக்கின்றன.
அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை நியாயப்படுத்த உறுதிசெய்ய மனிதாபிமான நடவடிக்கையைப் பயன்படுத்துகிறது.
அத்துடன் லிபியா மத்திய வங்கியில் இருக்கம் 143.8 தொன் தங்க இருப்பும் மேற்குலக நாடுகளின் கண்களை உறுதியிருக்கிறது என்றே கூறவேண்டும்.
உலகளாவிய தங்க இருப்பிலும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் லிபியா அடங்குகிறது.
இந்த வல்லாதிக்க நாடுகள் எல்லாம் கடந்த கால வரலாற்றைச் சொல்லும் பாடங்களை கேட்பதில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தன்னகத்தே கொண்டிருந்த செவ்விந்தியக் குடிகள் இருந்த சுவடே இன்றி அழிந்துபோயின. அழிக்கப்பட்டன. மிக வளர்ச்சியடைந்தவை என்று பெயர்பெற்ற தென் அமெரிக்காவின் இன்கா, மாயா நாகரிகங்கள் அழிந்த காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
கிரேக்க சாம்ராஜ்யமாகட்டும்; உரோம சாம்ராஜ்யமாகட்டும், சேர சோழ பாண்டியப் பேரரசுகளாகட்டும் யாவும் ஒரே வரலாற்றைத் தான் சொல்கின்றன.
‘கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல’ என்ற சினிமாப் பாடலின் யதார்த்தத்தை கடந்த கால வரலாறு சுட்டி நிற்கிறது.
ஆனால் இயற்கை வளங்கள் மீது மேற்குலகு கொண்ட பேராசை எங்கு போய் முடியப் போகிறது என்பது மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment