இயற்கை அழகு தவழும் மத்திய மலைநாட்டிற்கு மணி மகுடம் சூடுபவை பூங்காக்கள். அவற்றிலும் சிறப்பு இடத்தைப் பெறுபவை தாவரவியல் பூங்காக்கள். பூங்காக்கள் என்றதுமே பலரது மனக்கண்ணில் கற்களாலான வாங்குகளில் அமர்ந்திருக்கும் காதலர்கள் தான் தெரிவர்.
ஆனால் இந்த நினைவுகளுக்கெல்லாம் அப்பால் ஒரு நாட்டின் இயற்கை வளத்தைப் பேணுவதிலும் ஏனைய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் இப்பூங்காக்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.அத்தகையதோர் பூங்காவாகத்தான் பேராதனைப் பூங்காவும் பார்க்கப்படுகிறது. இன்று தேசிய தாவரவியல் பூங்காவாகப் பரிணமித்திருக்கும் பேராதனைப் பூங்கா பல நூற்றாண்டுகளுக்கான வரலாற்றைத் தன்னுடன் காவி வந்திருக்கிறது.
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலே றோயல் தாவரவியல் பூங்கா (Royal Botanical Gardens) என அழைக்கப்பட்டது. அந்தத் தனித்துவமான பெயரே அதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும்.
இப்பூங்காவின் வரலாறு கி.பி. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிப்பதாகத் தெரியவருகிறது. மூன்றாம் விக்கிரமபாகு கி.பி. 1371 இல் தனது அரச மாளிகையை பேராதனையில் மகாவலி கங்கைக் கரையிலே அமைந்ததாகக் கூறப்படும் காலம் இப்பூங்காவின் தோற்றத்துக்குரிய காலமாகக் கருதப்படுகிறது.
பின்னர் கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னர்களின் முடிக்குரிய பூங்காவாக ராஜாதி ராஜசிங்கனின் காலம் (1780 – 1798) வரை இப்பூங்கா காணப்பட்டது.
இரண்டாம் இராஜசிங்கனின் காலத்திலே போர்த்துக் கேயருக்கும் மன்னனுக்கும் இடையே நடைபெற்ற கன்னொருவ போர் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போர் நடந்தது, பேராதனைப் பூங்காவின் வடக்குப் பிரதேசத்திலே மகாவலி கங்கைக்கு அக்கரையிலாகும். காலங்காலமாக மன்னர்களின் பராமரிப்பிலே இப்பூங்கா இருந்ததாகவும் வரலாறு உறுதி செய்கிறது.1815 இலே, கண்டிய இராசதானி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர் இப்பூங்கா ஆங்கிலேயரின் ஆளுமைக்குட்பட்டது.
இன்றும் றோயல் தாவரவியல் பூங்கா என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் பிரித்தானியாவின் கியூ தோட்டத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அது 1761 ஆம் ஆண்டளவிலே வேல்ஸ் இளவரசியால் 9 ஏக்கர் பரப்பளவிலே ஆரம்பிக்கப்பட்டு இன்று 288 ஏக்கர் பரப்பளவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இத்தோட்டம் உலகளாவிய ரீதியிலே பிரபலமடைந்திருப்பதன் பின்னணியில் பல காரணிகள் அமைந்திருக்கின்றன.
பொழுது போக்குக்குரிய பூங்காவாக மட்டுமன்றி, பல அரிய தாவரங்களை ஆவணப்படுத்துவதுடன் அவற்றைப் பேணிவரும் பூங்காவாகவும் கியூ பூங்கா காணப்படுகின்றது.உலகின் பல பாகங்களிலும் உள்ள தாவர இனங்களை ஒன்றாக கியூ தாவரவியல் பூங்காவில் காண முடியும். அவை மட்டுமன்றி வன ஜீவாரசிகளையும் கூட இங்கு காண முடியும். இப்பூங்கா மிகவும் சிறந்த முறையிலே பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. கியூதாவரவியல் பூங்காவிலுள்ள தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் மிகவும் பழைமையானது.
அத்துடன் உலகில் உள்ள தாவரங்களின் அடையாளங் காணக்கூடிய பாகங்களை மிகவும் சிறப்பான முறையிலே ஆவணப்படுத்தியும் வருகிறது. இக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணத் தொகுப்பு உலகின் நான்காவது பெரிய தாவர ஆவணத் தொகுப்பு ஆகும்.
இலங்கையில் பிரித்தானியரது ஆட்சி வேரூன்றியிருந்த கால கட்டத்திலே, கியூபூங்காவின் பணிப்பாளர் நாயகமாக இருப்பவரே பேராதனைப் பூங்காவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆதலால் கியூ பூங்காவை ஒத்த வடிவிலானதாக பேராதனைப் பூங்காவும் பரிணமித்தது. வெளிநாடுகளிலிருந்து பெறுமதிமிக்க பலதாவர இனங்கள் இப்பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன. பூங்காவின் தரம் மேம்படுத்தப்பட்டது. பூங்கா சர்வதேச ரீதியிலே புகழ்பெறத் தொடங்கியது.
அந்த வகையிலேயே தான் பேராதனை பூங்கா வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கும் தேசிய தாவரத் தொகுப்புக் கூடமும் முக்கியத்துவம் பெறுகிறது. தாவரத் தொகுப்புக் கூடம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டவர்கள் சில பேர் மட்டுமே! இலங்கையிலே அத்தகையதொரு கூடம் அமைந்திருக்கிறது என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
உலகிலே கண்டுபிடிக்கப்பட்ட பற்பல தாவர இனங்கள், குடும்பங்கள், பிரிவுகள் காணப்படுகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாதன அல்லது இனங் காணப்படாதன பலவும் காணப்படுகின்றன.
எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட ஆய்வுகளுக்காக அவற்றைப் பேணி ஆவணப்படுத்துவது அவசியமல்லவா? அந்த ஆவணப்படுத்துதலின் மையங்களாகச் செயற்படுபவைதான் இந்த தாவரத் தொகுப்புக் கூடங்கள். தாவரமொன்றை அடையாளப்படுத்தத் தேவையான பாகங்களும் அத்தாவரம் பற்றிய அடையாளங்களும் ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்டு கோப்புகளாக ஒழுங்கொன்றிலே பேணப்பட்டிருக்கும்.
பேராதனை பூங்கா வளாகத்தினுள்ளேயே பிரித்தானியர் கால வடிவமைப்பை ஒத்த வெள்ளை நிற மாளிகையையும் காணலாம். அது முன்னொரு காலத்தில் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்தின் மாளிகையாகக் காணப்பட்டது.
வாசல் கதவிலே ‘அனுமதி பெற்று உட்பிரவேசிக்கவும்’ என்ற அறிவித்தல் பலகையையும் காண முடியும். அதுதான் இலங்கையின் தேசிய தாவரத் தொகுப்புக்கூடம்.
பிரித்தானியர் காலத்துக்கட்டடங்கள் தமக்கேயுரித்தான பிரமாண்ட பாணியிலே வடிவமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் அருகில் செல்லும் போதே, நாமும் காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே வாழ்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படுவதை எவராலும் மறுக்க முடியாது. கதவைத் திறந்து எம்மை உள்ளே அழைத்துச் சென்றார் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி. எஸ். ஏ. விஜயசுந்தர.
அவரிடம் ஆழ்ந்த அறிவுடன் எளிமையும் சேர்ந்தே குடிகொண்டிருந்தது. தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் பற்றிய விளக்கங்களை மிகவும் தெளிவாக கூறினார் கலாநிதி டி. எஸ். விஜயசுந்தர.
கட்டடத்தின் உள்ளக வடிவமைப்பும் மரவேலைப்பாடுகளும் பிரமிக்க வைத்தன. உள்ளே நுழைந்ததும் உணரக் கூடியதாக இருந்த பழைய மரவாசனை, பழைமைமிக்க மாளிகைக்குள் இருக்கும் வித்தியாசமான உணர்வைத் தந்தது. கீழ் மண்டபத்திலே உள்ள அலுமாரிகளில் தாவரவியலுடன் தொடர்புடைய பல அரிய நூல்கள், அவற்றின் முதற்பிரதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. வாசிக்க வருபவர்களுக்கு வசதியாக நூலகத்தை ஒத்த அமைப்பு காணப்படுகிறது. மேல்மாடியிலே ஆவணப்படுத்தப்பட்ட தாவரப் பாகங்களின் தொகுப்புகள் கோவையாக்கப்பட்டு அலுமாரிகளிலே சீராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கியூதோட்டத்திலே இருக்கும் தாவரத் தொகுப்புக்கூடத்தின் உள்ளக வடிவமைப்பை ஒத்ததாகவே இந்தக் கூடமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இருக்கும் தாவரங்களுள் ஏறத்தாழ 148,000க்கும் அதிகமான தாவரக் குடும்பங்கள் இக்கூடத்திலே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கியூ தாவரத் தொகுப்புக் கூடத்திலேயே பயன்படுத்தப்படும் ஹச்சிசன் வகைப்படுத்தலே இங்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இனம், குடும்பம் ரீதியாக வகைப்படுத்தப்படும் தாவரங்கள் பின்னர் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இம்முறைமையை கியூ முறைமை எனவும் குறிப்பிடுவர்.
இவ்வாறு ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்ட பின்னர் அலுமாரிகளுள் அடுக்கப்பட்டு பேணப்படும். அவற்றின் கோப்பு இலக்கம் குறித்த அலுமாரியின் கதவிலே எழுதப்பட்டிருக்கும். ஒரு இலக்கத்துக்குரிய தாவரத்தின் ஆவணத்தைத் தேடும்போது, அதனுடன் கூடவே அத்தாவரக் குடும்பத்தை ஒத்த தாவரக் குடும்பங்களின் ஆவணங்களையும் பெற முடியும்.
தாவரமொன்றை அடையாளப்படுத்துவதற்கேற்ற வகையிலே அத்தாவரமோ அல்லது தாவரப்பாகமோ பெறப்பட்டு காயவைத்துப் பேணப்படும். பின்னர் பொருத்தமான கடதாசியில் ஒட்டப்பட்டு அத்தாவரம் தொடர்பான விடயங்களும் அக்கடதாசியிலே எழுதப்படும். அதன் பின்னர் அவ்விபரங்கள் கோப்புகளாகப்பட்டு பாதுகாப்பான முறையிலே பேணப்படும். உயிரியல் ரீதியிலான கோணங்களில் (holo type, electro type) அவை பேணப்படுவதும்குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணங்களை தாவரங்களின் பிறப்புச் சான்றிதழ்களாக கூடக் கருத முடியும். சில ஆவணங்கள் ஏறத்தாழ 160 – 170 ஆண்டுகள் பழைமையானவை.
உலக தாவரவியல் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் சில ஆய்வாளர்கள் தமது கைப்பட எழுதி ஆவணப்படுத்திய ஆவணங்களும் இந்தத் தாவரத் தொகுப்புக் கூடத்தில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.பூச்சிகள் அரிப்பதிலிருந்து இந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக அவை தேக்கு மரத்தாலான அலுமாரிகளில் பேணப்படுகின்றன. முன்னைய காலங்களிலே இந்த ஆவணங்களின் மீது இரசகுளோரைட் பூசப்பட்டு அவை பேணப்பட்டன. ஆனால் இரசகுளோரைட் பதங்கமாகும் இயல்புடையது. ஆதலால் வளி மண்டலத்திலே பரவிவிடுகிறது.
இது நச்சுத் தன்மையுடையதாகையால் சுகாதாரப் பிரச்சினைகள் உணரப்பட்டன. விளைவாக உலகளாவிய ரீதியிலே இரசகுளோரைட் தடை செய்யப்பட்டது. தற்போது ஐதாக நெய்யப்பட்டிருக்கும் துணியிலே சுற்றப்பட்ட நெப்தலின் உருண்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இந்த ஆவணக் கோப்புகள் கிரமமாக குளிர்சாதனப் பெட்டியிலேயே (defreezer) 48 மணி நேரங்கள் வைக்கப்பட்டு பின் வெளியே எடுக்கப்படுகின்றன.
நீங்கள் புதிதாக ஒரு தாவரத்தைக் கண்டறிந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அது இலங்கைக்குப் புதியதா? அல்லது விஞ்ஞானத்துக்கே புதியதா என்பதை இந்த தாவரத் தொகுப்புக் கூடங்களின் துணையுடன் அறிய முடியும். அதாவது இக்கூடத்தில் இருக்கும் மாதிரிகளுடன் அத்தாவரம் பொருந்தாவிடில், கியூ தாவரத் தொகுப்புக்கூடத்துக்கு அனுப்பப்படும். அங்கும் பொருந்தாவிடில் விஞ்ஞானத்துக்கே அத்தாவரம் புதியது என முடிவு செய்யப்படும்.
அதேபோல இந்த ஆவணத்தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களின் சிவப்புப் பட்டியலைத் தயாரிக்க முடியும். அதே அடிப்படையில் இலங்கைக்கே உரித்தான தாவரங்களின் சிவப்புப் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆவணங்களின் உதவியால் காலத்துடன் தாவரங்களின் பிரதேச ரீதியிலான பரம்பலையும் ஆராய முடியும்.
உலகளாவிய ரீதியிலே காணப்படும் தாவரத் தொகுப்புக் கூடங்கள் தமக்கிடையிலான ஆவணப் பரிமாற்றங்களிலும் ஈடுபடுகின்றன. பல சமயங்களில் அவை வெற்றிகரமாக அமைவதில்லை என கலாநிதி டி. எஸ். ஏ. விஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
இன்றைய நவீன யுகத்திலே தகவல்கள் யாவுமே மின்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வழியிலே, தாவரத் தொகுப்புக் கூடத்தின் ஆவணங்களும் மின்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. மின்மயப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பரிமாற்றத்துக்கும் சேமிப்புக்கும் மிக இலகுவானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையிலே, தாவரங்களின் சரியான தாவரவியல் பெயர்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அரச நிறுவனம் இத்தேசிய தாவரத் தொகுப்புக் கூடமாகும். தாவரங்களைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றை இனங்கண்டு, அவற்றின் மாதிரி உருக்களைத் தயாரித்து ஆவணப்படுத்தும் செயற்பாட்டை இக்கூடம் மேற்கொண்டு வருகிறது.
விஞ்ஞான ரீதியான வகைப்படுத்தலுடன் தொடர்புடைய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் வசதிகளை வழங்குவதோடு தாவரங்கள் தொடர்பில் சட்ட முறையான சிக்கல்கள் தோன்றுகின்றவிடத்து தாவர இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது தொற்றுநோய்த் தடை காப்பு நிறுவனத்திற்கும் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கும் சேவையை வழங்கி வருகின்றது.
இலங்கைக்கான இந்த தாவரத் தொகுப்புக் கூடத்தை 2016 ஆம் ஆண்டுக்குள் தென் ஆசியாவின் தாவரத் தொகுப்புக்கூடமாக மாற்றுவதே மஹிந்த சிந்தனையின் பத்தாண்டு (2006 – 2016) திட்டமாகும். அது மட்டுமன்றி இலங்கையின் இயற்கைத் தாவர வலயங்கள் தொடர்பில் பல அபிவிருத்தித் திட்டங்களும் காணப்படுகின்றன.
பேராதனைப் பூங்கா, கல்லாலான வாங்குகளையும் இந்த தாவரத் தொகுப்புக் கூடத்தையும் மட்டும் கொண்டிருக்கவில்லை. அங்கேயே திணைக்களத்தின் கல்வி நிலையம் காணப்படுகிறது. பல கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன. இலங்கையின் பெரிய அந்தூரியம் பண்ணை, இழைய வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் போன்ற பல கட்டமைப்புக்களை இப்பூங்கா தன்னகத்தே கொண்டுள்ளது.
பேராதனை பூங்காவில் இருக்கும் ஒவ்வொரு மரத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான வரலாறு, கதை இருக்கும். ஒவ்வொரு மரமும் அங்கு நாட்டப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கும். அங்கு காணப்படும் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த மற்றும் பிரமாண்டமான, விதவிதமான, விசித்திரமான மரங்கள் இயற்கையின் படைப்பை வியக்க வைக்கும்.
அங்குவரும் இளைஞர்களின் நடத்தைகள் கெளரவமாக இருக்க வேண்டும். பூங்காவின் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்திய அறிவித்தல் பலகைகளை பூங்கா முழுவதும் பரவலாக காண முடியும்.
பச்சைப்பசேலென்ற புல் வெளிகளிலே பொலித்தீன் குப்பைகளை வீசிச் செல்லும் சுயநலவாதிகளும் அறிவித்தல் பலகையைச் சற்றேனும் மதிக்காத இளைய தலைமுறையினர் சிலரும் பேராதனை பூங்காவின் யதார்த்தங்களாகவே தெரிந்தனர்.
பேராதனைப் பூங்காவின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆழச் சிந்தித்து அனுபவித்து இரசிப்பதில் கிடைக்கும் பேரின்பம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அவ்வண்ணம் அனுபவித்தவர்களால் மட்டுமே உணரக்கூடியது.
இயற்கையின் அழகை வியாபிக்கச் செய்து எமை வியப்பில் ஆழ்த்தும் பேராதனைப் பூங்கா ஒரு தேசிய சொத்து எனலாம். அதை நன்றே பாதுகாத்து மேலும் வளப்படுத்தி எமது எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
6 comments:
good one akka :)
அரிய தகவல்களுடன் கூடிய மிக நல்ல பதிவு. நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள்.
bahi>> thanks a lot sis...
Dr.எம்.கே.முருகானந்தன்>> நன்றி... உங்கள் தீபாவளியும் இனியதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்..
REALLY R U WENT TO COLLECT THE INFORMATION ABOUT PERADENIYA GARDEN O....
YEAH.. I DO...WHY THAT SORT OF A QUESTION CAME?
can i use your artical for my magazin
http://www.facebook.com/pages/Varieties/129069977167548?ref=ts
You can contact me on shanjeev@hotmail.co.uk
Post a Comment