Friday, November 12, 2010

நம்பிக்கையையே மூலதனமாகக் கொண்டு வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறோம்!

 
வாடிக்கையாளர்: கதலி வாழைப்பழம் என்ன விலை?
வியாபாரி: கிலோ 80 ரூபா ஐயா, தம்புள்ள வாழைப்பழம்; நல்ல பழம்.
வாடிக்கையாளர்: தேங்காய் என்ன விலை?
வியாபாரி: இது ஒன்று 36 ரூபா இது 38 ரூபா. சிலாபத்து தேங்காய் நல்லது; வாங்கிப் பாருங்கோ.

இது கொழும்பு போன்ற நகரமொன்றில் நடந்த உரையாடலல்ல. தற்போதைய காலங்களில் கிளிநொச்சிச் சந்தையிலே வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் பொதுவாக நடைபெறும் உரையாடலின் ஒரு சிறு பகுதியாகும்.
அடிப்படை விவசாய உற்பத்திகளைப் பொறுத்தவரையிலே தன்னிறைவு கண்ட பிரதேசமாக கிளிநொச்சி விளங்கி வந்ததை எவராலும் மறுக்க முடியாது.

அப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பணிகள் ஏறத்தாழ பூரணப்படுத்தப்பட்டுவிட்ட நிலையை எட்டிவிட்டன. மக்களுடைய வாழ்வியலும் சகஜ நிலைமைக்குத் திரும்பத் தொடங்விட்டது.
அவர்களது வாழ்வியலிலே சந்தை என்பது ஒரு பிரதானமான அங்கமாகும். அம்மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மட்டுமன்றி மீன்பிடித்தொழில், ஏனைய சிறு உற்பத்திக் கைத்தொழில்கள் மற்றும் சிறு வர்த்தகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
கிளிநொச்சி மக்கள், தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு மையமாகவும் தமது அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாகவுமே சந்தையைக் கருதுகின்றனர்.
இச்சந்தை காலத்துக்குக் காலம் இடம்மாற்றப்பட்டு, தற்போது அம்பாள் குளத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்திலே, அச்சந்தையை ஒரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றும் திட்டங்களும் காணப்படுகின்றன. இத்தகையதோர் நிலையிலே இச்சந்தை கிளி நகரிலிருந்து தூரத்திலே அமைந்துள்ளது என்ற கருத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆயினும் கிளிநொச்சி பொதுச் சந்தை ஒரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படுவதை யாவரும் ஒருமித்து வரவேற்கின்றனர்.


‘மலைநாட்டு மரக்கறிகளும் தாராளம்’

 அவ்வியாபாரிகள் தமது வியாபாரத்தின் தற்போதைய நிலை பற்றி எம்முடன் பகிர்ந்துகொண்டனர். மரக்கறி விற்பனை செய்வோரில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘உள்ளூரில் இருந்து மட்டுமன்றி வெளியூரிலிருந்தும் இங்கு மரக்கறிகள் வருகின்றன. கிளிநொச்சிப் பிரதேசத்தின் 100 சதவீதமான உற்பத்தியை எதிர்வரும் சித்திரை மாதமளவில் எதிர்பார்க்கலாம்.
சந்தை மாறியதால், வருமானக் குறைவொன்று இருப்பதை மறுக்கமுடியாது. ஏனெனில் சந்தையின் அமைவிடம் பிரதான வீதியிலிருந்து சற்றுத் தூரமாக இருக்கிறது. ஆதலால் அது இன்னும் பிரபலமடையவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் சந்தை பிரபல்யமடையத் தொடங்க, இக்குறை தீர்க்கப்பட்டுவிடும் என்றே நம்புகிறேன்.
தெற்கில் விளைவிக்கப்படும் கரட் போன்ற விவசாய விளைபொருட்கள் நெடுங்காலத்துக்குப் பிறகு இப்போதுதான் கிளிநொச்சி சந்தைக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. தம்புள்ள பொருளாதார வர்த்தக மையத்தில் இருந்து பல விளைபொருட்கள் இங்கு கொண்டுவரப்படுகின்றன.
சமகால வருமானம் என்று கருதும்போது, எமது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நாளாந்தம் ரூ 500-1000/= போதுமானது. அது வியாபாரத்தால் கிடைக்கிறது. ஆயினும் விற்பனையைக் கருத்தில் கொண்டால், கொள்வனவில் அரைக்கரைவாசியே விற்பனையாகிறது.

சிறிதளவிலான விளை பொருட்களே உள்ளூரில் இருந்து வருகின்றன. குறிப்பாக நெடுங்கேணி, திருவையாறு, முழங்காவில் போன்ற பிரதேசங்களில் இருந்து சின்ன வெங்காயம், பம்பாய் வெங்காயம், கத்தரிக்காய் போன்றன கிடைக்கப்பெறுகின்றன என்றார்.

கிளிநொச்சி மீன்கறியின் சுவைக்கு எந்த ஊர் மீன்கறியும் ஈடாகாது என்பர் அதைச் சுவைத்தவர்கள், கிளிநொச்சிச் சந்தையிலே விற்கப்படுவன பதப்படுத்தப்படாத உடன் கடலுணவுகள் என்பது பொதுவான அபிப்பிராயம். முன்னைய காலங்களில் பதப்படுத்தல் வசதிகளுக்கிருந்த பற்றாக்குறைகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அத்துடன் கடலுணவு செறிந்துள்ள கடற்பகுதிகளை கிளிநொச்சியின் அயற் பிரதேசங்கள் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் மாறாக, இப்போது குளிரூட்டப்பட்ட கடலுணவுகளும் கிளிநொச்சிச் சந்தையில் கிடைக்கின்றன. பெருநகர மயமாக்கப்பட்ட பகுதிகளின் சந்தைகளைப் போலல்லாமல் இங்கு குளிரூட்டப்பட்ட மீனும், உடன் மீனும் தனித்தனியாகவே விற்கப்படுகின்றன.

‘விரும்பிய மீனை வாங்கி
செல்ல இப்போது அதிக வாய்ப்பு’



மீன் வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
'நாச்சிக்குடா, வலைப்பாடு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து உடன் கடலுணவு கிடைக்கப்பெறுகிறது. வவுனியாவில் இருந்து குளிரூட்டப்பட்ட கடலுணவு பெறப்படுகிறது.
மீனைப்பொறுத்த வரையிலே நாங்கள் விற்கும் அதியுயர் விலை கிலோவுக்கு 400 ரூபா மட்டுமே என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மீன் பிடிக்கப்படுவது குறைவாக இருக்கும் போது விலை உயர்வாக இருக்கிறது. ஆனால் விரதநாட்களில் மிக மலிவாகக் கிடைக்கும்.

பழைய சந்தையின் அமைவிடமோ என்னவோ, முன்னைய காலங்களில் மீன் சந்தை பிற்பகல் 3.00 மணி வரை நீடித்திருந்தது. ஆனால் தற்போது மதியம் 12.00 மணிக்கு மேல் நீடிப்பதே மிகவும் அரிதாக இருக்கிறது.
அத்துடன், தூர இடத்து மக்கள் அரைக் கிலோ மீனுக்காக 100 ரூபா செலவழித்து வரமாட்டார்கள் என்றார். இன்னொரு மீன் வியாபாரி தெரிவிக்கையில், ‘பதப்படுத்தப்பட்ட/குளிரூட்டப்பட்ட கடலுணவு சந்தையில் கிடைப்பது நல்லவிடயமே. அதனால் மக்கள் தமக்கு விரும்பிய கடலுணவைத் தெரிவு செய்து வாங்க முடிகிறது’ என்றார்.
தற்போது இவர்கள் தற்காலிகக் கொட்டகைகளிலேயே மீன்களை விற்றுவருகின்றனர். எதிர்காலத்தில் நிரந்தரக் கட்டடத் தொகுதிகளை அமைத்து விலைமனுக்களைக் கோர வேண்டி ஏற்பட்டால் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
‘முன்னைய காலங்களிலே, சுகாதாரப் பரிசோதகர் வந்து நச்சுத்தன்மையுடைய இரசாயனப்பதார்த்தம் இடப்பட்டு கடலுணவு பதப்படுத்தப்பட்டுள்ளதா? எனப் பரிசோதிப்பதுண்டு. சில வேளைகளில் அப்படிப்பட்ட கடலுணவைப் பறித்து கொட்டியும் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில், அத்தகைய பரிசோதகர்களின் தேவை அவசியமாகிறது’ எனச் சிலர் இரகசியமாகக் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.


கிளிநொச்சி, தென்னை வளம் நிறைந்த மாவட்டம். அந்நிலைமாறி தெற்கில் இருந்து தேங்காய்கள் கொண்டுவரப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதைக்காண முடிந்தது.

8-10 ரூபாவில் இருந்த தேங்காயொன்றின் விலை ஒருமாத இடைவெளியில் 30-35 ரூபாவுக்கு மாறிவிட்டிருந்தது. முன்னர், உள்ளூர்த் தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. ஆயினும் உற்பத்தியைச் சந்தைக்கு தொடர்ச்சியாக விநியோகிக்க முடியாத நிலையிலேயே தோட்டங்கள் காணப்பட்டன.
கடந்த கால இடப்பெயர்வுகளால் தென்னந் தோட்டங்கள் பராமரிக்கப்பட முடியாதனவாயின. விளைவு தேங்காய் விநியோகம் சீரற்றுப்போனது.
தேங்காய் உற்பத்தியில் அடுத்த
வருடம் உச்சத்தை எட்டி விடுவோம்’






தற்போது மக்கள் மீளக்குடியமர்ந்து, தமது பழைய வாழ்வியலுக்குத் திரும்புகின்றனர். ஆதலால் எதிர்வரும் காலங்களில் உள்ளூர்த் தேங்காய்கள் சந்தையில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்பது கண்கூடு.’ 10 ரூபா விற்கும் போது தேங்காய்கள் இங்கு கொள்வனவு செய்யப்பட்டு புத்தளம் கொண்டு செல்லப்பட்டன. நல்ல இலாபமும் கிடைத்தது.
இப்போது மரங்களில் காய்களில்லை. அத்துடன் உள்ளூர் கொப்பராத் தேங்காய்களுக்கு கிராக்கி அதிகம். ஆதலால் தேங்காய்களாக விற்காமல் கொப்பரா ஆக்கி விற்கிறார்கள்.
கடைசியில் நாங்கள் சிலாபத்திலிருந்து தேங்காயை வாங்குகிறோம். அதனால் பெரிய இலாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது’ என்றார் தேங்காய் வியாபாரி ஒருவர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையிலே பழவகைகளின் விலையும் எதிர்பார்த்ததை விடச்சற்று அதிகமாகவே இருந்தது. வெளியூர்ப் பயணிகளுக்காக, அதிக இலாபமீட்டும் நோக்கில் விற்கிறார்களோ என்ற எண்ணத்துடன் வினவிய போது தான் உண்மை புலப்பட்டது. பழக்கடைகளிலே விற்கப்படும் பழங்களில் பெரும்பாலானவை உள்ளூர் உற்பத்திகளல்ல. ‘அவையாவுமே, தம்புள்ள பொருளாதார வர்த்தக மையத்தில் இருந்து கொண்டுவரப்படுபவை’ என்றார் பழ வியாபாரி ஒருவர்.



‘வேறு பிரதேச வாழைப்பழம்
சித்திரைக்கு பின்னர் அவசியப்படாது’
 ‘கொய்யாப்பழத்தையும் மாம்பழத்தையும் தவிர ஏனைய பழங்கள் தம்புள்ளவிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. ஆதலால் எமக்கு பெரியளவில் இலாபம் கிடைப்பதில்லை. நீங்கள் எதிர்வரும் சித்திரை மாதத்துக்குப் பிறகு வந்தால் பழங்கள் மலிவாகக் கிடைக்கும் என்றார் அந்த வியாபாரி.

‘சித்திரைக்குப் பிறகு தான் உள்ளூர் உற்பத்திகள் வரத்தொடங்கும் அப்போது தான் எமக்கும் அதிக இலாபம் கிடைக்கும்’ என்றார் இன்னொரு பழவியாபாரி.
மினுவங்கொடையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர் ஒருவரும் பழங்கள் விற்றுக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
‘நம்பிக்கையை மூலதனமாக வைத்து இங்கு நாங்கள் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறோம்; எந்த ஒரு அபிவிருத்தியும் ஏட்டளவிலேயே நின்றுவிடாது செயற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது விருப்பம்’ என்றார் அலுமினியப் பாத்திரங்களை விற்பனை செய்யும் வியாபாரியொருவர்.
‘இருபது வருடங்களுக்கு பின்னர்
கிளிநொச்சியில் கால் பதித்திருக்கிறேன்’




‘1990 களில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வசித்து, தற்போது தான் மீளக்குடியமர்ந்துள்ளேன்’ என்றார் புடவை வியாபாரி அலியார். சந்தைக்கான போக்குவரத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட்டால் தமது பொருளாதாரநிலை மேலும் உயரும் என்பதே அவரது அபிப்பிராயமாக இருக்கிறது.





பனம்பொருள் உற்பத்திப் பொருட்களையும் மண்சட்டி பானைகளையும் சந்தையில் ஓரளவு தாராளமாகப் பெறக்கூடியதாக இருக்கிறது. குடிசைக் கைத்தொழிலாக உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. சிலர் தாமே உற்பத்தி செய்து விற்கிறார்கள். சிலர் உற்பத்தியாளரிடம் கொள்வனவு செய்து விற்கிறார்கள்.


மீளக்குடியமரும் போது கிடைத்த சிறுதொகைப் பணத்தை மூலதனமாக வைத்தே வியாபாரத்தை ஆரம்பித்திருப்பதாகப் பெண்ணொருவர் தெரிவித்தார்.
சில வேளைகளில் வியாபார, பொருளாதார நெருக்கடிகளும் தொழில்வாய்ப்புப் பிரச்சினைகளும் இவ்வியாபாரிகள் மத்தியில் தவிர்க்கமுடியாததாகவே இருக்கிறது.
ஆயினும் இன, மத, மொழிவேற்றுமையின்றி தளராத நம்பிக்கையுடன் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கும் இவர்கள் சாம்பலில் இருந்து மீண்டெழும் பீனிக்ஸ் பறவைகளாகவே தெரிந்தனர்.



கிளிநொச்சி பொதுச்சந்தை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.
நிரந்தர கட்டடங்களை அமைத்து சந்தையை விஸ்தரித்து மேம்படுத்தும் திட்டவரைவுகள் தயாரிக்கப்படுகின்றன.
1977களில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஒத்த தராதரத்தில் கிளிநொச்சிச் சந்தையும் இருந்ததைப் பலர் அறிந்திருப்பர். அக்காலகட்டத்தில் வாரத்தின் சில நாட்கள் அல்லங்காடியாகவும் சில நாட்கள் பகலங்காடியாகவும் தொழிற்பட்டு வந்தது.
கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்து தற்போது முடிவுக்கு வந்துவிட்ட யுத்தத்தால் சந்தையும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.



அதனால் கிளிநொச்சிச் சந்தையின் அபிவிருத்தியை பூச்சியமட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
நிதி ஒதுக்கீடுகளும் திட்டவரைவுகளும் பூர்த்திசெய்யப்பட்டவுடன் 2-3 வருட காலத்துக்குள் அபிவிருத்தியடைந்த பொதுச்சந்தையாக இது உருவாகும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இவ்வபிவிருத்தித் திட்டங்களுக்கிடையே உள்ளூர் உற்பத்திகளால் சந்தையை நிறைக்கப்போகும் புத்தாண்டை வியாபாரிகள் மட்டுமன்றி நுகர்வோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment