Friday, August 7, 2020

படிப்பது தேவாரம்!


எம் பால்ய காலங்கள் மின்சாரம் இல்லாமல் கழிந்தன என்று இன்றும் எம்மால் பெருமையாகக் கூற முடியும். சூரியாஸ்தமணத்தின் பின் எம் சூழல் இருள் சூழ்ந்ததாக இருந்தபோதும் வாழ்வு இருளினில் முடங்கியிருக்கவில்லை. இன்று போல் அன்று நாம் கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாக இருக்க வில்லை. கடிதத் தொடர்பு என்ற ஒற்றைத் தொடர்பாடலை நம்பி மட்டுமே வாழ்ந்திருந்தோம். வழியில் தொலையும் கடிதங்களும் மாதங்கள் கடந்து வந்து  சேரும் கடிதங்களும் எமக்கு சாதாரணமானவை. அவற்றை நாம் பெரிது படுத்திக் கொள்வதில்லை. அப்படியிருந்த போதும் வாழ்வினை யதார்த்தமாகக் கடந்து தான் சென்றிருக்கிறோம்.   நாங்கள் நகரத்தை அண்டி வசித்திருந்தாலும் எங்கள் கிராமத்தில் வீடுகள் அருகருகில் இருக்காது. ஆதலினால், குறிப்பாக மாலை மங்கியதும் எங்கள் பிரதான பொழுதுபோக்கு வாசிப்பாக மட்டும் தான் இருக்கும்.  பல சரக்குக் கடையில் பொருள் சுற்றிக்கொடுக்கும் பத்திரிகைத் துண்டைக் கூட நாம் விட்டு வைத்ததாக எனக்கு நினைவில்லை. 

1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போத எங்கள் வீட்டை ஆக்கிரமித்தவர்களால் எரிக்கப்பட்டவை போக மீதமான புத்தகங்கள் எல்லாம் இறாக்கைகளில் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன.  50 களில் வெளி வந்த சஞ்சிகைகள் தொட்டு எண்ணற்ற தமிழ், ஆங்கில புத்தகங்கள் வரை பலவிதமானவை அவற்றுள் அடங்கும். அவை தவிர, உள்ளூரிலே மாதாந்த, வாரந்த சஞ்சிகைகளும் புத்தகங்கள் பத்திரிகைகளும் கிரமமாக வெளிவந்த வண்ணம் தான் இருந்தன. அச்சிடும் கடதாசிக்கெல்லாம் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் கூட கோடடித்த அப்பியாசப் புத்தகங்கள் சஞ்சிகைகளாக அச்சிடப்பெற்று மாற்றம் பெற்றிருந்திருக்கின்றன. 

புத்தகம் வாசிக்கத் தொடங்கினால், எமக்கு பசி மறந்து விடும். காது செவிடாகி விடும். எழுத்தாளருடனேயே பயணித்த படி கற்பனையில் சஞ்சரிக்கும் அந்த இன்பத்தை வெறுமனே  வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. வாசித்த புத்தகத்தை எத்தனை தடவைகள் மீள வாசித்தபோதும் அலுத்ததில்லை. இன்று  தசாப்தங்கள் கடந்த போதும் பல சஞ்சிகைகளின் அட்டைப்படங்களைக் கூட என்னால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. 

இவை இப்படியிருக்க எம் சொல்வளத்தை வளர்த்த பெருமை உள்ளூர் பத்திரிகைகளையே சாரும் என்றால் மிகையாகாது. தலைப்புச் செய்தி தொட்டு மரண அறிவித்தல் தாண்டி இறுதிப் பக்கத்தின் கீழ்க்கரையில் உள்ள அச்சு விபரம் வரை நாம் எவற்றையேனும் வாசிக்கத் தவறியதாக  நினைவில்லை. முன்பெல்லாம்  குறிப்பாக 'தமிழ்' கற்பதாயின், தமிழறிவை வளர்க்க வேண்டுமாயின் பத்திரிகைகளை வாசிக்க வேண்டும். வானொலியின் செய்திகளைக் கேட்க வேண்டும் என்று தான் சிபாரிசு செய்வார்களே தவிர தனியார் வகுப்புக்குச் சென்று கற்க வேண்டும் என எவரும் சிபாரிசு செய்த்தில்லை. 

என்னிடம் அன்று காணப்பட்ட பத்திரிகைகளை வாசிக்கும் ஆர்வம் ஏன் இன்று இல்லாமலே போய்விட்டது என்று பல தடவைகள் எனக்குள்ளேயே நான் வினவியிருக்கிறேன். விடை மட்டும் கிடைத்திருக்கவில்லை.  கொரோனாவின் புண்ணியத்தால் கிடைத்த தனிமைப்படுத்தல் காலம் போதிய ஓய்வை வழங்கியிருந்தது. எந்த வித பொறுப்புகளும் சுமைகளுமே இல்லாத, பால்ய காலத்தை ஒட்டியது போல,   இருந்த இடத்தில் உணவும் ஏனைய அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த ஒரு மாத காலம், பழைய பத்திரிகைகளை எல்லாம் நூலக 
வலைத்தளத்தில் தேடி வாசிக்க வைத்தது.

கால ஓட்டத்தில் நான் தொலைத்துவிட்ட அதே ஆர்வமும்,   முன்னொரு காலத்தில் பத்திரிகை/ சஞ்சிகை முழுவதையும் வாசித்து முடித்ததும் கிடைத்த அதே திருப்தியும் தனிமைப்படுத்தல் காலத்தில் எனக்கு மீளக் கிடைத்தமையை உணர முடிந்தது.  பழையனவாயினும் அந்தப் பத்திரிகைகளின் மொழி நடையும், தலைப்பிடும் கலையும், தமிழ் வளமும், தொழில் தர்மமும்  இன்று எங்கே போய் ஓளிந்தன? என்ற வினா மட்டும் என் மனவோட்டத்தில் வந்து வந்து சென்றது. 

  தமிழின் ஆதி இலக்கண நூலான தொல்காப்பியத்திலுள்ள பலவிதிகளும் சொற்களும்  மலையாளத்திலும் வட இலங்கையின் தமிழிலும் மாத்திரமே இப்போதும் வழக்கில் இருப்பதாக அண்மைய ஆய்வுகள் கூட நிரூபித்திருக்கின்றன.  அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்கும் அவரது தமிழுக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் வரவேற்பும் மதிப்பும் எம்மவர்களுக்குத் தெரிவதில்லை போலும். தென்னிந்திய சினிமாப் பாணியிலும் வசனங்களிலும் எழுதப் பழகிவிட்ட இந்த எழுத்தாளர் எனப்படுவோர், எமக்கேயுரித்தான அடையாளமாகவிருந்த மொழி வளத்தை அருகச் செய்து விட்டார்கள்.. அக்கைங்கரியத்தை இன்னும் தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.  எம்  மொழிவளமானது ஆங்கிலத்தினதும் தென்னிந்திய சினிமாப்பாணியினதும் ஊடுருவலால் அருகி அருகி இன்று  தன் அடையாளத்தைத் தொலைத்து எம்மிடமிருந்து அந்நியப்பட்டுப்போய் இருக்கிறது. 

'ஆணியே பிடுங்க வேண்டாம்', 'தந்தைப் பெயர்'  என விசித்திர மொழி நடைகள் வழமைகளாகி விட்டன. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், அவை தம் அடைமொழிகள் , வேற்றுமை உருபுகளின் பாவனை என அடிப்படை இலக்கண விதிகள் கூட இந்தப் புதுமை விரும்பிகளின் எழுத்துப் பாணியில் தொலைந்து போயின.   தமிழில் பிரதியீடு செய்யக்கூடிய வார்த்தைகள் இருக்கும் போதே  வேற்று மொழி வார்த்தைகளை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதும் கலாசாரமும் உருவாகி விட்டது. கேட்டால் நவீன பாணி என்பார்கள். அல்லது  தம் வாசகர்களுக்கு இப்படி எழுதினால் தான் சென்றடையும் என்பார்களோ என்னவோ?

மொழியறிவைப் பிரதான பாடமாகக் கொண்ட ஊடகவியல் கற்கைகளை மேற்கொண்டவர்கள் கூட அதன் முக்கியத்துவத்தை மறந்து விட்டார்களோ என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.   'படிப்பது தேவாரம்; இடிப்பது சிவன் கோவில்' என்பதாக எங்கள் பத்திரிகைகளும் அதில் பணிபுரியும் பெரும்பாலானவர்களும் மாறிவிட்டனரோ? 

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அவ்வினத்தின்  கலாசாரம் மொழி சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இனம் சார்ந்த ஒவ்வொரு விடயமும் அதன் தாய் மொழியினாலேயே ரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன.  தாய் மொழியிலே  பிறமொழிக் கலப்புச் சொற்கள் ஊடுருவி ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை காலத்துக்குக் காலம் நடந்திருக்கின்றமையை வரலாறு சொல்கிறது.  மாற்றம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது தான். ஆயினும் பிற மொழி மீதான மோகம் தாய் மொழி மீதான விருப்பைத் தொலைப்பதற்குக் காரணமாகி விடலாகாது என்பது எண் எண்ணம்.  சிறு குழந்தைகளுக்கு தாய்மொழியைத் தவிர்த்து  முதலில் ஆங்கில மொழியைக் கற்பித்து  அதைப் பெருமிதமாய்ப் புகழும் பெற்றோரைக் கண்டிருக்கிறேன்.  " பிள்ளைக்குத் தமிழ் படிக்கக் கடினமாக இருக்கிறது" என்பது கூட அவர்களுக்குப் பெருமையான விடயமாகத் தான் இருக்கிறது. 

சிறுவர் நூல்கள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கான நூல்களிலும் கூட இந்தியத்தமிழின் ஆதிக்கம் விருட்சமாகி விட்டிருக்கிறது.  சகல ஊடகங்களும் இந்நிலைக்கு விதி விலக்கானவை அல்ல. எனது பார்வையில் மொழி வளத்தைத் தொலைத்தல் என்பது இனம் தன்னாலேயே அழிந்து செல்வதற்கான முதற்படியாகும்.  கள ஆய்வுகளிலும் இதனை நான் அவதானித்திருக்கிறேன். "மருக்காரை" என்ற தாவரம் இருப்பதை அறியாத  சிலர் அதனை " மரைக்கார்" என விளக்கி ஊருக்குப் பெயர் வந்த விதத்தை விளக்கியமையை என்னால் மறக்க இயலாது. இத்தகையோர் அடுத்த சந்ததிக்கு தவறான வரலாற்றையே உருவாக்கி விட்டுச் செல்லும் வாண்மை மிக்கவர்கள். 

எனது பேரன் - பேத்தி கற்ற காலங்களில் கல்வி முறைமை காலனித்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலமொழி மூலத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.  தாய்மொழி, ஒரு பாடமாக மாத்திரமே இருந்தது. ஆனால் அவர்களது இரு மொழி/ மும்மொழிப்புலமை கண்டு நான் வியந்திருக்கிறேன். நள வெண்பாவும் நாலடியாரும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் அவர்களது விரல் நுனியில்  சமமாக நர்த்தனமிட்டிருக்கின்றன.  சுதேச மொழிமூலக்கல்வி வந்தது. மீண்டும் பகுதி ஆங்கில மொழி மூலக் கல்விக்குத் தாவியது.  இன்று எட்டில் ஐந்து பாடங்கள் மட்டும் ஆங்கில மொழி மூலத்தில் கற்கும் மாணவர்கள் சிலர், தமிழில் மட்டும் விசேட சித்தி பெறத் தவறிய சந்தர்ப்பங்களும் காணப்படத் தான் செய்கின்றன. 

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. புத்தகம் ஒன்றை வாங்கித் தரமுதல் அம்மா பரீட்சிப்பது அதன் மொழி  நடையையே.  கலப்படமில்லாத மொழி நடை இருந்தால் மட்டும்  தான் அந்தப் புத்தகம் கைகளில் கிட்டும்.  இன்று, கலப்படத்தும் உண்மைக்கும் வேறுபாட்டைக் கண்டறியும் ஆற்றலே எம்மிடம் குறைந்து விட்டது. உண்மைக்கான அணுகல் எம்மை விட்டு விலகிச் சென்ற வண்ணமே இருக்கிறது. இப்படியிருக்க எம்மால் எப்படி எதிர்கால சந்ததிக்கு  கலப்படமில்லா மொழி நடையை விட்டுச் செல்ல முடியும் ?

இப்படிப் பத்தும் பலதுமாய் எல்லாக்காரணிகளும் இணைந்த நச்சு வட்டத்தினுள் தெரிந்து கொண்டே வீழ்ந்து தனித்துவத்தை இழந்து எம்மையே  நாம் தொலைத்து விடுவோமோ? என்ற அச்சம் மட்டும் விடை காணாத வினாவாக இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 






2 comments:

குருவடி பயிலகம் said...

உண்மை சகோதரி, இலங்கை வானொலியில் சிறுவயதில்  நான்  இலங்கைத்தமிழர்களின் சொல்லாடல்களை விரும்பிக் கேட்பதுண்டு.  இன்று கொடைக்கானலின் பண்பலையால் கேட்பதற்கு வாய்ப்புமில்லை.  தமிழ் என்றென்றும் தனிமைப்பட்டிடாது, தனித்துவமிக்கத்தமிழை தமிழார்வளர்கள் தவறவிடமாட்டார்கள்.

Unknown said...

“புத்தகம் வாசிக்கத் தொடங்கினால், எமக்கு பசி மறந்து விடும். காது செவிடாகி விடும். எழுத்தாளருடனேயே பயணித்த படி கற்பனையில் சஞ்சரிக்கும் அந்த இன்பத்தை வெறுமனே வார்த்தைகளால் விபரிக்க முடியாதது”
👍

Post a Comment