Sunday, September 4, 2011

துரும்புச் சீட்டான தூக்குத் தண்டனை?

சாந்தன், முருகன், பேரறிவாளன்..... கிட்டத்தட்ட 20 வருடங்களை சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலேயே கழித்தவர்கள் இவர்கள். இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜிவ் காந்தியின் கொலை வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டு தூக்குக்கயிற்றை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்,....அவர்களால் என்றோ இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு பல ஆண்டுகளாகக் கிடப்பிலே போடப்பட்டிருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டு  இம்மாதம் 9 ஆம் திகதி தூக்குத்தண்டனை என நிர்ணயம் செய்யப்பட்டது. வேலூர் மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. அவை ஒருபுறம் நடைபெற, மறுபுறம் தூக்குத்தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதங்களும் தீக்குளிப்புகளும் போராட்டங்களும் தீவிரமாக நடைபெற்றன. தமிழகம் முழுவதிலும் ஒரு கொந்தளிப்பு நிலை காணப்பட்டது.

அதற்கிடையில் அறிக்கையிடுதலில் ஆரம்பித்திருந்த தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுக்கிடையிலான பனிப்போர் இந்த ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் மீதான தூக்குத் தண்டனையை பிரதான ஆயுதமாகத் தூக்கியது. .

ஒரு மா நிலத்தின் முதல்வராக அத் தீர்ப்பை பிற்போடும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என கருணா நிதி கூறினார். தனக்கு அத்துணை அதிகாரம் இல்லை என ஜெயலலிதா பதிலறிக்கை வெளியிட்டார். இது தமிழகத்தில் ஒரு எதிர்ப்பலையைக் கிளப்பியது. அத்துடன் ஜெயலலிதாவுக்கான ஆதரவில் சிறு சரிவும் ஏற்பட்டது.

அதற்கிடையில் மூவர் மீதான தூக்குத்தண்டனையை இரத்து செய்யக் கோரி அவர்கள் சார்பில் சென்னை உச்ச நீதி மன்றிலே ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கொன்று நிலுவையில் இருக்கும் போது அவர்களை தூக்கில் போடுவது சாத்தியமாகாது. அத்துடன் அவசர தேவை கருதி அந்த மனு உடனே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தூக்குத்தண்டனையை நிறைவேற்ற 8 வாரங்கள் இடைக்காலத்தடையும் விதிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிப்பில் ஏற்பட்ட தாமதமே அந்த இடைக்காலத்தடை விதிக்கப்படக் காரணமாக அமைந்தது.

கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தடை உத்தரவு கிடைத்த அன்றே தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதிக பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் மாநில அரசொன்றினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை அலட்சியப்படுத்த முடியாத நிலைமை மத்திய அரசுக்கு இருக்கிறது. இந்திய மத்திய அரசு தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்குக் காரணமாக அமைந்ததும் ஜெயலலிதா அரசினால் தமிழக சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமே என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் தொடர்பிலான தீர்மானத்தை முன்மொழிவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். வாக்குப்பதிவையடுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இத் தீர்மானம் எவரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மேல் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டும் இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை, நாங்கள் பதில் ஏதும் கூற விரும்பவில்லை.எனினும் ராஜிவ் கொலையாளிகள் விடயத்தில் ஜனாதிபதியின் முடிவைத் தான் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் மேல் நீதி மன்றின் இடைக்கால தீர்ப்பு குறித்து, மத்திய அரசு தனது தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் சல்மான் குர்ஷித்.

தமிழ் நாட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பெருந்தோல்வி அதன் வரலாற்றில் கறை படிந்த மைல் கல்லாகும். காங்கிரஸ் மட்டுமன்றி அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்ட தி.மு.கவுக்கு கிடைத்ததும் அதிரடித் தோல்வி தான். தமிழரை அலட்சியப்படுத்தியமை, 2ஜி அலைக்கற்றை ஊழல் உட்பட தன் மீது படிந்திருக்கும் பல கறைகளைத் துடைத்தெறிந்தால் தான் தமிழகத்தில் தன் இருப்பை உறுதி செய்ய முடியும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்.

தேர்தல் காலங்களில் தி.மு.க வுடனான கூட்டணி தொடர்பில் இருதலைக் கொள்ளியெறும்பின் நிலையையே காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்து வந்தது. அக்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கிடையில் இடம்பெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளும் இரு தரப்பும் வெளியிட்ட அறிக்கைகளும் அந் நிலையைத் தெளிவாகக் காட்டும். தான் சேர்ந்து கொண்ட கூட்டணி, தனக்கே வினையாகப் போகிறது என்பதை காங்கிரஸ் ஓரளவு உணர்ந்திருந்தது என்பதும் உண்மை தான். தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, தி.மு.க வும் அ.தி.மு . க வும் தான் இரு பெரும் கட்சிகள். அங்கு தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மை ஆசனங்களை வெல்வதென்பது காங்கிரஸ் கட்சிக்கு இயலாத காரியம் . ஆனால் தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு அ.தி.மு.க வுடன் கை கோர்ப்பதும் இயலாமல் இருந்தது. அப்படி நடந்திருந்தால் தமிழ் மக்கள் அ.தி. மு.க வை ப் புறக்கணித்திருப்பார்கள். காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கு கடைசியில் கிடைத்தது ம் பெருந்தோல்வி தான்.

இவை இப்படி இருக்க காங்கிரசுடன் இணைந்தால் தான் தான் மத்திய அரசில் இடம் பிடிக்கலாமென்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். இரு தரப்பினருக்குமே நேரடியாக இணைய முடியாத நிலவரம் தான் தமிழகத்தில் காணப்படுகிறது. இப்போதும் காங்கிரசுடன் ஜெயலலிதா பகிரங்கமாகக் கை கோர்த்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க நேரிடும் என்பது கண்கூடு.

அதே வேளை பதினொன்றரை வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை ஜனாதிபதி பிரதிபா பட்டேல் இப்போது எதற்காக நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. குற்றவாளிகளின் கருணை மனுவை அவர் எந்த அடிப்படையில் நிராகரித்தார் என்பதும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தை எந்த அடிப்படையில் நோக்கப் போகிறார் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள்.

இவை இப்படியிருக்க , ஓரிரு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் முன்னணி பத்திரிகையான தினமலர், தகுந்த ஆதாரங்களுடனான செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அதாவது, 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இம்மூவரது கருணை மனுக்களும் 2005 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதிக்குக் கிடைத்திருக்கின்றன. தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அவை ஊர்ந்து சென்றனவா அல்லது வேண்டுமென்றே தாமதாகக் கிடைக்கச் செய்யப்பட்டனவா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. தினமலர் இணையத்தில் வெளியாகிச் சில மணி நேரங்களுக்குள்ளேயே அச் செய்தி நீக்கப்பட்டிருந்தது. இதுவும் பல சந்தேகங்களையே தோற்று வித்துள்ளது.

அதற்கிடையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் 11 ஆண்டு காலம் கடத்தியதற்கு தி.மு.க.தான் காரணம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதிலும் ஏதாவது திருவிளையாடல்கள் இருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் ஜனாதிபதியின் தீர்மானத்தையும் மேல் நீதிமன்றம் கேள்வி கேட்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இதற்கிடையில் அன்னா ஹஸாரே என்ற காந்தியவாதியின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசை உலுக்கிப்போட்டிருந்தது. ஹஸாரேக்கு ஆதரவாக இந்தியா முழுவது மக்கள் அலை திரண்டது. மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக ஒவ்வொரு மா நிலங்களிலும் திட்டமிடப்பட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றுள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டது தான் இந்த ராஜிவ் கொலைக் குற்ற வாளிகளின் தூக்குத்தண்டனை விவகாரம் எனவும் கூட ஆய்வாளர்கள் கருத்துக் கூறு கின்றனர். அதற்குச் சான்று பகரும் விதத்திலே இந்த மூவரது கருணை மனு நிராகரிப்பு விடயம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது தான் என ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது ஜூனியர் விகடன் சஞ்சிகை.

"உங்கள் வழிமுறைகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிப்பார்கள்" என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது. அதற்கு ஹஸாரே தான் உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளார்.

எது எப்படியோஜெயலலிதாவுக்கான ஆதரவலை தமிழகத்தில் இப்போது வலுவடையத் தொடங்கி விட்டது. ஒரு வேளை தூக்குத்தண்டனை இரத்தானால் அது அ.தி.மு.க வை தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் காங்கிரஸ் மீது வடுவாகப் படிந்திருக்கும் கறைகள் சிறிதளவிலாவது மறக்கச் செய்யப்படும் என்பது கண்கூடு. அப்படி நடந்தால், அது காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணி உருவாவதற்கு நிச்சயம் வழி வகுக்கும். அதே வேளை தூக்குத்தண்டனை உறுதியாகியிருந்தால் தமிழகத்தை மறக்க வேண்டிய நிலை தான் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும். அங்கு அத்துணை எதிர்ப்பலை காணப்பட்டதை எவரும் மறுக்க முடியாது.

மொத்தத்தில் ராஜீவ் கொலைக்குற்றவாளின் மரண தண்டனை விவகாரம் என்பது காங்கிரஸ் தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்துவதற்காகப் பயன்படுத்தும் துரும்புச் சீட்டாகவே தெரிகிறது.
உணர்வுகள்:

  • நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாமெனில் ஏன் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்குத்தண்டனை என்று கேட்கிறார் தாய் அற்புதம்மாள். ஸ்தலத்தில் இருந்த படியால் நளினி முதலாவது குற்றவாளி என்பதும் பேரறிவாளன் 18 ஆவது குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.


  • ராகுலும் பிரியங்காவும் அவர்களுக்கு கிடைத்த வலியைத் தனக்கும் தரமாட்டார்கள் என உறுதியாக நம்புவதாகக் கண்ணீர் மல்கினார் ஹரித்ரா. நளினி-முருகன் தம்பதியின் மகளாகிய ஹரித்ரா இலண்டனில் மருத்துவப்பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

  • தூக்குத்தண்டனையை இரத்துச் செய்யக்கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து உயிரை மாய்த்தார் .  • சென்னையில் மூன்று சட்டத்தரணி சகோதரிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.உதாரண வழக்குகள்

உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி என்று தீர்ப்பு வந்ததும் 99 ஆம் ஆண்டே ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பியுள்ளனர். இந்தக் கருணை மனு 11ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதைக் காரணமாக வைத்தே இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுளாகக் குறைக்க முடியும்.
  • கூத்தாநல்லூரில் 73-ம் ஆண்டு காஜாமொய்தீன் என்பவர் விஷ ஊசி போட்டு பல பேரைக் கொன்று நகை,பணத்தைக் கொள்ளையடித்தார் என்பது வழக்கு. இவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை மீதான கருணை மனு கால தாமதத்தைக் காரணமாக சுட்டிக்காட்டி நீதிபதிகள் ராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தண்டனைக் குறைப்பு செய்தது.
  • செங்கல்பட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில் ஜெயப்பிரகாஷ் என்பருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கும் கருணை மனு காலதாமதத்தைக் காரணம் காட்டி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்கள்.
  • மூன்று முறை தூக்குக் கயிற்றின் முன் சென்று, மேல்முறையீடு, கருணை மனு அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 24 மணிநேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்ட கட் டபொம்மனின் நேரடி வாரிசான குருசாமி இப்போது ஒரு நம்பிக்கையளிக்கும் உதாரணம்.தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனது. ஆனால்,அதுவே தண்டனைதான் என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பையும் குருசாமி வழக்கில் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்..


ராஜிவ் கொலையில் இவர்களின் பங்கு

பேரறிவாளன்: ராஜிவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டுக்கு 9 வோல்ற் கொண்ட இரண்டு மின்கலங்களை வாங்கிக் கொடுத்தார்

முருகன்: இவர் யாழ்ப்பாணத்திலிருந்து ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் என்கிற இரு இளைஞர்களை சதி வேலைகளுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார். சதிக்காக 91 மார்ச் மாதம் முருகனும் சென்னை சென்றார்.எல்லா சதிச்செயலும் முரு கனுக்குத் தெரிந்தே நடந்தது. ஆனால் தாம் கொல்லப்போவது ராஜிவை என்று அவருக்குத் தெரியாது.

சாந்தன்:விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு பொறுப்பாளராக சாந்தன் இருந்தார். ராஜிவ் கொலை வழக்கில் சிவராசனுக்கு உதவி செய்வதற்காக சாந்தன் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜிவ் கொலையானதும், கோடியக்கரை வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டார். அப்போது பின் தொடரப் பட்டு கைது செய்யப்பட்டார்.

**சிவராசன், தனு, சுபா மூவரைத் தவிர வேறு யாருக்கும் ராஜிவ் கொலை பற்றித் தெரியாது.இதை நீதிபதி வாத்வா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment