Sunday, September 11, 2011

தினையென நினைத்து விதைத்த வினை

அது மத்திய காலம். அப்போது திருச்சபை சொல்வது தான் வேத வாக்கு என்று கண்மூடித்தனமாக நம்பியிருந்த மேற்குலகம் மெல்ல மெல்ல விழித்தெழத் தொடங்கியிருந்தது.சகல துறைகளிலும் ஐரோப்பா முழுவதும் மறுமலர்ச்சி ஒன்று உருவாகத் தொடங்கியிருந்த காலம் அது. இன்றைய கண்டுபிடிப்புக்களுக்கு மூலாதாரமாய் இருக்கும் கொள்கைகளும் கண்டுபிடிப்புகளும் உருவாகிய காலம்..... இன்று நாம் அறிந்திருக்கும் பிரபல விஞ்ஞானிகள் பலர் தம் சிந்தனைகளுக்கு வித்திட்ட காலம்.... புதிய கருத்துக்களை தர்க்க ரீதியாக வெளியிட்டமைக்காக, தர்க்க ரீதியாகச் சிந்தித்தமைக்காக பல அறிஞர்கள் திருச்சபையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காலம்.....

அப்போது தான் பிரெஞ்சு தேசத்திலே நொஸ்ட்ராடமஸ் என்ற அறிஞரும் வாழ்ந்தார் (1503-1506). அடிப்படையில் ஒரு மருத்துவரான நொஸ்ட் ராடமஸ் உலகின் பிரபலமான கணிப்புக் களுக்குச் சொந்தக் காரர். Les Propheties என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகம் பல நூற்றாண்டுகளுக்குரிய முக்கிய நிகழ்வுகளை எல்லாம் எதிர்வு கூறியிருந்தது. ஒவ்வொரு எதிர்வு கூறலும் 4 வரிக் கவிதையாக இருக்கும்.

அத்தகைய ஒரு கவிதையிலே,

'கடவுளின் நகரில் பெரும் இடி ஒன்று தாக்கும்


இரட்டைச் சகோதர்கள் பிரிக்கப் படுவர். கோட்டை நிலை குலையும்


பெருந்தலைவர் நிலை குலைவார்


ஒரு பெரிய நகரம் எரியும் போது மூன்றாவது மகா யுத்தம் ஆரம்பமாகும்'
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்வுகூறல் ஒன்றைப் பொறுத்த வரையிலே அது நடக்க முன்னர், இப்படித் தான் நடக்கப்போகிறது என்பதைத் நிச்சயமாகக் கூற முடியாது. இதுவோ? அதுவோ ? என்ற நிச்சயமற்ற தன்மை ஒன்று காணப்படும். ஆனால் சம்பவம் ஒன்று நடந்து முடிந்த பின் அதை எதிர்வு கூறலுடன் ஒப்பிட்டால் தத்ரூபமாகப் பொருந்தும்.

ஜோதிடத்தில் நம்பிக்கையுடைய பலர் இந்த உண்மையை அடிக்கடி உணர்ந்திருப்பர். நொஸ்ட் ராடமஸின் எதிர்வு கூறலில் உண்மை இருக்கலாம் என்பதை உறுதிப் படுத்தும் வகையிலே ஒரு சம்பவம் இடம்பெற்றது. அது நடந்ததோ 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானம் மோதியது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலே தலை நிமிர்ந்து நின்ற வானளாவிய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அதை அமெரிக்கா மட்டுமன்றி முழு உலகுமே தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. எவருமே எதிர்பார்த்திராத நிகழ்வு அது.

உலகளாவிய பயங்கரவாதத்தின் உச்சகட்டம் என வர்ணிக்கப்பட்டது. அமெரிக்கா வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது என்றனர் அரசியல் ஆய்வாளர்கள். பயங்கரவாதத்தின் மீதான போருக்கு வழி வகுத்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தொடங்கி பாகிஸ்தானில் 9-11 தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட ஒசாமா கொல்லப்பட்டது தொட்டு இன்றும் பல யுத்தங்களைத் தொடர வைக்கிறது.

தன்னை எவரும் அசைக்க முடியாது என்றிருந்த அமெரிக்காவை ஆடவைத்த இந்த தாக்குதலால் பௌதிக ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புகள் விபரிக்க முடியாதவை. வரலாற்றாய்வாளர்கள் இத்தாக்குதலை நியூயோர்க் நகரின் வரலாற்றின் கறை படிந்த அத்தியாயம் என்பர்.

இந்தப் பேரனர்த்தத்தால் ஏற்பட்ட பௌதிக ரீதியான, அளவிடக்கூடிய சேதங்கள் தான் பலராலும் பேசப்பட்டன. ஆனால், அளவிடமுடியாத மறைமுகமான பாதிப்புக்கள் அளவிடக் கூடியவற்றிலும் அதிகமாகும். அத்துடன் இவை மிக நீண்டகாலத்துக்கு தாக்கம் செலுத்தக் கூடியவை.

உலக வர்த்தகமையக் கட்டடங்கள் இடிந்து விழுந்தமையால் ஏற்பட்ட புகை, தூசுகள், சாம்பல் துகள்கள் ஆகியன நியூயோர்க் நகரச் சூழல் மாசடைவதில் பெரும்பங்காற்றின எனலாம்.

இத் தாக்குதலால் சுற்றுச்சூழல் இரு வழிகளிலே பாதிக்கப்பட்டது. ஒன்று கட்டட இடிபாடுகளால் ஏற்பட்ட தூசு முகில். மற்றையது கட்டடம், அதனுடன் இணைந்த பொருட்களின் குறை தகனத்தால் வளிமண்டலத்தில் சேர்ந்த புகை. ஏனெனில் தாக்குதல் நடந்து 3-5 மாதங்களின் பின்னரே தீயை முற்றாக அணைக்க முடிந்தது. இடிபாடுகள் அகற்றப்பட்ட பாதைகளெங்கும் மாசாக்கிகள் படிந்து கிடந்தன. சம்பவ இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள பகுதிக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் கூட மாசாக்கிகள் கண்டறியப்பட்டன.

1000 பாகை செல்சியஸ் வரை தீப்பற்றி எரிந்த கோபுரங்களால் சூடாகிய புகையுடன் கூடிய வளி முகிலாகப் பரந்து நின்றது. வளி மண்டலத்துக்கு இருக்க வேண்டிய தரம் குறைவடைந்தது.விளைவாக ஓசோன் தரம் 60 ppm (மில்லியனில் ஒரு பங்கு) ஆகக் குறைக்கப்பட்டது. 9/11 தாக்குதலுக்கு முன்னர் ஓசோன் தரம் 60 ppm ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் வெப்ப நிலையிலே உருகிய கட்டடப் பொருட்கள் விஞ் ஞானிகள் கூட ஏதிர்பார்த்திராத புதிய சேர்வைகளையும் கலவைகளையும் உருவாக்கின. அங்கு நிலவிய உயரமுக்கம் தளங்களை நிலை குலையச் செய்தது.

மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லிலடங்கா.. 40,000 -90,000 தன்னார்வத்தொண்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள் என்றால் ஏற்பட்ட சேதம் எத்தகையது என்று கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறதல்லவா? அப்பகுதியில் காணப்பட்ட தூசால் அந்தத் தன்னார்வத்தொண்டர்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மருத்துவ வல்லு நர்கள் கூறுகின்றனர்.

அடித்தளத்திலே வேலை செய்த தன்னார்வத் தொண்டர்கள் பெருங்காயங்களுக்கும் சுகயீனங்களுக்கும் உள்ளானார்கள். ஏறத்தாழ 16 ஏக்கர் நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த 90 அரச முகவர் நிறுவனங்களின் மீதும் தனியார் கம்பனிகள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. காரணம் யாதெனில் அவை ஒழுங்கான முற்பாதுகாப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமையே யாகும். அந்த வழக்குகளின் விளைவாக மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் ஏற்பட்ட சுகயீனங்களைக் குணப்படுத்த, மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவென 7.4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதியமொன்று உருவாக்கப்பட்டது.

9/11தாக்குதலின் மீட்புப் பணியாளர்கள் இன்றும் ஒரு சிறப்பு சுகாதாரக் காப்புறுதிக்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். அப்படியொரு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறதாயின் அந்த 9/11 தாக்குதல் அத்தகைய பாரிய சுகாதார விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என விளங்கிக் கொள்ள முடியும்.

கட்டடங்கள் இடிந்து விழுந்தபோது எழுந்த தூசுப்படலமும் புகை மூட்டமும் அங்கு உருவாகிய நச்சுத் தன்மையான சூழலும் புற்று நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளாக மாறியமை குறித்தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவை 100 சதவீதம் உறுதி செய்யப்படவில்லை. அதிலும் அடித்தளத்தில் பணி புரிந்த மீட்புப் பணியாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அடித்தளத்திலே பணியாற்றிய மீட்புப் பணியாளர்களுள் புற்று நோயால் இறப்பவர்கள் தொடர்பில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பல ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தனி யார் குழுக்களும் அக்கருதுகோள் தொடர்பிலான ஆய்வுகளை முன்னின்று மேற்கொள்கின்றன.

அடித்தளத்தில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் மத்தியில் புற்று நோயின் தாக்கம் மட்டும் அதிகரித்துக் காணப்படவில்லை. ஆஸ்துமா மட்டுமன்றி பல சுவாச நோய்களின் தாக்கமும் காணப்படுகிறது. தீயணைப்புப் படைவீரர்களின் சுவாசப்பைகளின் வினைத்திறன் குறைவடைந்து செல்வதும் அவதானிக்கப்பட்டது.

உலக வர்த்தக மையக் கட்டடப்பகுதியில் காணப்பட்ட கண்ணாடி இழைகள், ஈயம். பல் சக்கர அரோமட்டிக் ஐதரோ காபன் கள், சீமெந்து, டையொக்சின்கள் போன்றவையெல்லாம் உயர் வெப்ப நிலையில் ஆவியாக மாறின. அவற்றை வளியுடன் சேர்த்து சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மீட்புப் பணியாளர்களுக்கு ஏற்பட்டது. இடிபாடுகளை அகற்றுவதற்குப் பாவிக்கப்பட்ட இயந்திரங்களும் பெருமளவில் புகையை வெளியிட்டன. இத்தகைய சூழல் சுவாச நோய்கள் உருவாகக் காரணமாயிற்று. ஆனால் அந்த மீட்புப்பணியாளர்கள் எவருக்குமே 9-11 தாக்குதலுக்கு முன்னர் சுவாச நோய்க்கான அறிகுறிகள் காணப்படவில்லை.

மீட்புப் பணியாளர்களுள் 37 சதவீதமானோருக்கு உளரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த முதலிரு நாட்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆவியாகிய அஸ்பெஸ்டஸ், ஈயம், பாதரசம் டையொக்சின் கள் போன்றவற்றால் மீட்புப் பணியாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொழிலாளர்களும் கூடப் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் அவை பரவியது சனத்தொகை அடர்த்தி மிகவும் கூடிய நியூயோர்க் நகரப்பகுதியாகும்.

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என 2753 பேருக்கு நியூயோர்க் மா நிலம் மரணச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அவர்களுள் 342 தீயணைப்புப் படைவீரர்களும் 60 பொலிஸ் வீரர்களும் அடங்குவர். நியோர்க் மா நிலத்தின் சனத்தொகையில் குறிப்பிடத்தகு வீழ்ச்சியொன்று ஏற்படவும் இந்த 9/11 தாக்குதல் காரணமாகியது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் 19,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியது.

யுத்தமோ தாக்குதலோ எதுவாயினும், அது ஏற்படுத்தும் நேரடிப் பாதிப்புகள் பாரதூரமானவைதான். ஆனால் சில காலங்களின் பின்னர் அல்லது ஒரு சந்ததி கடந்த பின்னர் அவற்றின் வடுக்களைக் காணமுடியாமல் போய்விடும். ஆனால் அந்தத் தாக்குதல்களும் யுத்தமும் ஏற்படுத்தும் மறைமுகமான பாதிப்புகள் ஆரம்பத்தில் சிறியனவாகத் தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவை. அந்தப்பாதிப்புகள் மிக நீண்ட காலத்துக்குத் தொடரும். ஆனால் எந்த வடிவில் தொடரும் என்பதை மட்டும் எதிர்வு கூற முடியாது.

ஏறத்தாழ மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த வியட் நாம் யுத்தத்தையும் அரை நூற்றாண்டுக்கு முன் ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத்தாக்குதல்களையும் கூட இங்கு உதாரணமாகக் கொள்ளலாம். இரண்டுக்குமே பொறுப்பேற்க வேண்டியது அமெரிக்காவாகும்.

வியட் நாம் யுத்தத்திலே அமெரிக்கா பாவித்த நச்சு ஆயுதங்களும் நச்சுக்குண்டுகளும் இன்னும் அம்மண்ணிலே புதைந்து கிடக்கின்றன. அவற்றின் அன்றைய பிரயோகத்தின் விளைவால் வியட் நாமில் இன்றும் குணப்படுத்தமுடியாத ஊனங்களுடன் பிள்ளைகள் பிறக்கின்றன. ஜப்பானிலும் அதே நிலைமை தான் தொடர்கிறது.

இன்று இரு சந்ததிகள் கடந்த பின்னர் கூட ஜப்பானும் வியட் நாமும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையை இன்னும் ஒரு தசாப்தத்தில் அமெரிக்கா கொடுக்க வேண்டி வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். தானே வினையை விதைத்ததால் அதை அறுவடை செய்யவும் அமெரிக்கா தயாராக இருக்குமோ என்னவோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment