Sunday, September 18, 2011

மணிப்பூரின் இரும்புப் பெண்ணை நீதி தேவதை திரும்பிப் பாரப்பாளா?



 அன்னா ஹஸாரே....முழு இந்தியாவையுமே தன் பின்னால் அணிவகுக்க வைத்தவர்... கடந்த சில காலமாக பத்திரிகைகள் எங்கும் அடிபட்ட பெயர்... தலைப்புச் செய்தியாகிய பெயர்....வெள்ளைக்குல்லா... ஒரு மூக்குக் கண்ணாடி...வெள்ளை ஆடை ... ஒரு தாத்தாவின் தோற்றம்.... காந்திய வாதி என்றால் ஹசாரே தான் ஞாபகம் வருவார்... மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அத்துணை பிரபலமானவர்... உண்ணாவிரதம் தான் அவரைப் பிரபலமாக்கிய மூல கர்த்தா.... இலஞ்ச ஊழலை எதிர்த்து பாராளுமன்றத்தில் லோக்பால் என்ற பிரேரணையை நிறைவேற்றக் கோரி அவர் மேற்கொண்ட சாத்விக வழிப் போராட்டத்துக்கு (சாத்விக வழியாயினும், வன்முறையில் முடிந்த சம்பவங்களும் உள) ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்தன. அவர் உலகளாவிய ரீதியிலே பிரபலமானார்.
 அதே இந்தியாவில் தான் ரோம் சானு ஷர்மிளா வும் வசிக்கிறார்... முப்பத்தொன்பதே வயதான பெண் கவிஞர்....மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படுபவர்.... சுருண்ட தலை முடி..வெளிறிய முகம்...கொஞ்சம் நலிந்த உடல் வாகு.. தனிமைப்படுத்தப்பட்ட, வைத்திய சாலை வாழ்க்கை... மூக்கினூடாக ச் செல்லும் உணவு அனுப்பும் குழாய்.. அவர் வாயினால் உணவை உட்கொண்டு 11 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. அதாவது, தன் வழக்கமான வாழ்வியலைத் தொலைத்து பதினொரு வருடங்களாகிவிட்டன. ஷர்மிளா கொண்டிருக்கும் உண்ணா நோன்புக்கு என்ன காரணம் தெரியுமா? அதுவும் ஒரு பொது நோக்குக்காகத் தான். ஷர்மிளாவினுடையது யாதெனில், இந்தியாவின் தென் மேற்கு மூலையான மணிப்பூரிலே இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்றிடக் கோரும் அகிம்சை வழிப் போராட்டமாகும்.
 அண்மையிலே 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்த ஹஸாரே முழு இந்தியாவையும் உலுக்கியெடுத்தார். அவர் பின்னால் எந்த வேற்றுமைகளுமின்றி மக்கள் படை திரளத்தொடங்கியது. அதைக்கண்ட இந்திய மத்திய அரசாங்கம் அச்சமடைந்தது. ஹசாரே விடயம் தொடர்பில் உயர் நீதி மன்றம் கூட மத்திய அரசாங்கத்தை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் பாராளுமன்றத்தில் லோக் பால் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு ,உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
காந்தி என்ற மகாத்மாவைப் பிரசவித்த தேசம் இந்தியா. உலகமே அதிசயித்த அஹிம்சா வழிப்போராட்டத்தால் பிரித்தானியரைத் துரத்திய தேசம். தம் தாய் மண் மீதான பற்றை ஆழமாகக் கொண்டிருக்கும் மக்கள் வாழும் தேசம். அதே இந்தியாவில் தான் சாதிகள், கட்சிகள், மதங்களின் பெயரால் தொடரும் வன்முறைகள் அதிகரிக்கும் போக்கைக் கொண்டிருக்கும் காலம் இது. அப்படியிருந்தாலும் அந்த அஹிம்சைப் போராட்டங்கள் முற்றாக அழிந்து போய்விட வில்லை. காந்தியக் கொள்கைகளும் மறக்கப்பட்டு விடவில்லை. வன்முறைகள் தான் தீர்வு என்ற கருத்து மிகுந்துவிட்டதான ஒரு காலப்பகுதியிலும் ஆங்காங்கே அஹிம்சை வழிப்போராட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. அத்தகையதொரு போராட்டமாகவே ஹசாரேயின் போராட்டமும் கருதப்படுகிறது. அதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தால், முழு உலகும் ஹசாரே யின் போராட்டத்தைப் பற்றி அறிந்திருந்தது. அவர் பிரபலமாக 12 நாட்களே போதுமானதாக இருந்தது.

 ஆனால் இரோம் ஷர்மிளா 11 வருடங்களாக உண்ணாவிரதமிருக்கிறார். ஹசாரே பற்றித் தெரிந்தவர்களுக்கு ஷர்மிளா பற்றித் தெரியவில்லை. ஏனெனில் அவரை ஊடகங்கள் பிரபல்யப்படுத்தவில்லை. அவருக்கு அரசியல் வாதிகளின் பக்க பலம் இருக்கவில்லை.
 பொலிசார் புடை சூழ அம்புலன்ஸ் வண்டியிலே நீதிமன்றத்துக்குச் செல்கிறார். மூக்கினூடு செல்கிறது உணவைக் காவும் குழாய். நீதிமன்றத்தினுள்ளே செல்கிறார்.. நீதி பதியின் முன் நிறுத்தப்படுகிறார். இது கடந்த பதினொரு வருடங்களாக இரு வாரங்களுக்கொரு முறை ஷர்மிளா கைக்கொள்ளும் சம்பிரதாயம். உண்ணாவிரதத்தை இனியாவது முடிப்பாரா? என்றால் , தானே இல்லை என்று பதிலளிக்கிறார் ஷர்மிளா. " நான் உறுதியாக இருக்கிறேன். கடவுளின் நியாயமான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்" என்று தளர்வின்றிக் கூறுகிறார் ஷர்மிளா.
 இப்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஷர்மிளா ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். " என்னையும் ஹசாரேயைப் போலவே பாருங்கள் ! அன்னா ஹசாரேக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்! " என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது.

 இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அமுலில் இருந்து வரும் சிறப்பு இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரியே இரோம் ஷர்மிளா இந்த உயிர்ப் போராட்டத்தை செய்கிறார் . இந்த சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு இராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள், பாலியில் ன்முறைகள், காரணமே இல்லாத கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள் போன்றவற்றை எதிர்த்து இப்போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.
11 ஆண்டுகளுக்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கினார். இதையடுத்து அவரைக் கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தனர்.அங்கும் அவர் சாப்பிடவில்லை. அதனால் வலுக் கட்டாயமாக திரவ சத்துவை குழாய் மூலம் ஏற்றினார்கள். அப்படியும் ஷர்மிளா போராட்டத்தை விடவில்லை . தன்னை விடுதலை செய்த பின்னரும் கூட உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அவரை இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஒரு அறையில் நிரந்தரமாகச் சேர்த்து அங்கு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்களின் கலவையான திரவ உணவை அவருக்குக் கொடுத்து வருகிறார்கள்.

அவரால் தான் விரும்பிய எதையுமே செய்ய முடியாது. தன் கையால் சாப்பிட முடியாது. தன் புலன் களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்ய முடியாது. வழக்கமான சாப்பாட்டு முறையைத் தொடரவோ அல்லது அதைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கவோ, விரும்பியதை ண்ணவோ, வேண்டும் போது உண்ணவோ முடியாது.பற்களை கூட துலக்க முடியாது. பதினோரு வருட இந்த தீவிர உண்ணாவிரத போரட்டத்தால் அவருடைய மாத விடாய் சுழற்சி நின்று விட்டது. கொள்கைக்காக காதலையே தள்ளி வைத்திருக்கிறார்..இவையெலாம் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவை மரண வேதனையைத் தருபவை.. தன் மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக தன்னையே உருக்கிக்கொண்டிருப்பவர் ஷர்மிளா.
  அவர் ஒரு கைதி. ஆனால் தனக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அவர் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. சிறை அதிகாரிகள் வற்புறுத்து குழாயை மூக்கில் புகுத்தும் போதும் அவர் எதிர்க்கவில்லை. ஆனால் தன் நிலை குறித்து விபரிக்கும் போது "நான் செய்வது மனநிறைவைத் தருகிறது. அது என் செயல் குறித்துக் கர்வம் கொள்ள வைக்கிறது. என்னால் சாப்பிடவோ, அருந்தவோ முடியவில்லை என்றாலும் என் கண்கள் நான் நினைப்பதைப் பார்க்கவில்லை என்றாலும் நான் செய்வதில் உள்ள நிறைவு வற்றையெல்லாம் ஒன்றுமற்றவையாக்கி விடுகிறது." என்கிறார் அந்த வீரப்பெண்.
 ஷர்மிளாவின் வீரப் போராட்டத்தின் பக்க பலமாக ஊடகங்கள், அரசியல் வாதிகள் இருக்கவில்லை. அதனால் ஹசாரேக்குக் கிடைத்த பிரபல்யம் ஷர்மிளாவுக்குக் கிடைக்காமல் போய் விட்டது.

டில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு அவரது குழுவினர் ஷர்மிளாவுக்கு அழைப்பு விடுத்தனர். ஷர்மிளா ஒரு கைதியாக இருப்பதால் அவரால் அந்த நிகழ்வில் பங்கு பற்ற முடியவில்லை.

மணிப்பூர் மாநிலப் பெண்களின் நலனுக்காகவும், இராணுவக் கொடுமைகளுக்கு எதிராகவும் ஹஸாரே போராட வர வேண்டும் என்று ஷர்மிளா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஹசாரேயிடமிருந்தோ அவரது குழுவினரிடமிருந்தோ எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

 மணிப்பூர் மக்களுக்காக ஹசாரே போராடுவார் எனத் தான் நம்புவதாகவும் அதற்காக ஹசாரேயை தான் கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும் கூடக் கூறியிருக்கிறார் அந்த வீரப்பெண்.

மற்றவர்களைப் போல ஷர்மிளாவுக்கும் ஆசைகள் , கனவுகள், இலட்சியங்கள் இருக்காதா என்ன? அவரின் மன் உறுதி வியக்க வைக்கிறது. மற்றவர்களைப்போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதையே தானும் விரும்புவதாகக் கூறும் ஷர்மிளா, தனது போராட்டம் முடியும் வரை தன் இலட்சியங்கள் , கனவுகளை நினைத்துப் பார்க்கக் கூடப் போவதில்லை என உறுதி படக் கூறுகிறார்.

 ஹசாரேயின் 12 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வர எந்த மத்திய அரசு காரணமாக இருந்ததோ, அதே மத்திய அரசு தான் ஷர்மிளாவின் போராட்டம் நீடிக்கவும் காரணமாகியது. ஷர்மிளா காண்பதோ சிறை வாசம். அவரால் டில்லிக்கோ அல்லது பொது இடங்களுக்கோ சென்று போராட முடியாது.

அத்துடன் அரசியல்வாதிகளை நம்புவதற்கும் ஷர்மிளா தயாராகவில்லை. உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். விவாதம் நடத்துகிறோம் என்று வெறும்  வார்த்தைகளிலே உறுதி மொழிகளைக் கூறி விட்டு விடயத்தை கிடப்பிலே போட்டு விடும் கபட நாடகங்களை நம்பி ஏமாற ஷர்மிளா விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவதற்கு உறுதி தந்தால் போராட்டத்தை நிறுத்துவது பற்றிக் கருத்தில் எடுக்க முடியும் என் கிறார் ஷர்மிளா.

 முடிவு மத்திய அரசின் கையிலே தான் இருக்கிறது. எல்லையோரப் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்ட 53 வருடகால சட்டத்தால் அப்பாவி பொது மக்கள் படும் அவலத்தை மத்திய அரசு உணர்ந்து கொள்ளவில்லை போலும். நாட்டின் பாதுகாப்பின் முன்னே அப்பாவிகளின் துன்பம் பெரிதாகத் தெரிய வில்லையோ என்னவோ? ஆனால், அந்த இன்னல்களால் வட கிழக்கு இந்தியப் பிராந்தியம் மெல்ல மெல்ல அழிவடைந்து வருகிறது என்பது எவருக்கும் விளங்கவில்லை. மத்திய அரசு அப்பிராந்தியத்தை அலட்சியப்படுத்துகிறது. அத்தகையதோர் நிலைமை இந்தியாவின் கலாசாரப் பல்வகைமைக்கு ஏற்படப்போகும் பேரிழப்பாகும். அந்தப் பேரிழப்பால் ஏற்படப்போகும் அரசியல், சமூக ரீதியிலான தாக்கங்கள் பெரும் பின்னடைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதே நிதர்சனம் .

 இத்தகைய மக்கள் நலன் சார் போராட்டங்களிலே ஊடகங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் அளப்பரியது. அகில இந்திய ரீதியிலே ஹசாரேக்கு ஆதரவாகத் திரண்ட மக்கள் பேரணியின் பின்னணியில் வெகுசனத் தொடர்பு ஊடகங்களே இருக்கின்றன. அவை அந்தப் போராட்டத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் தான், ஊடகங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப் பாடுகளை விதிக்கவும் காரணமாகியது. ஏனெனில் அந்த ஊடகங்கள் மத்திய அரசை ஒரு கணம் ஆட்டங்காண வைத்தன என்று கூறினாலும் மிகையில்லை.

 ஆனால் அந்த வெகுசனத்தொடர்பு ஊடகங்கள் ஹசாரேக்கு வழங்கிய முக்கியத்துவத்தை ஷர்மிளாவுக்கு வழங்கியவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால் , இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்துக்கு என்றோ விடிவு கிடைத்திருக்கும். ஆனாலும், தற்போது தான் கால ஓட்டம் வெகுசனத் தொடர்பு ஊடகங்களை ஷர்மிளாவின் பக்கம் திருப்பியுள்ளது. அந்த வீரப்பெண்ணின் உண்ணாவிரதம் வெகு விரைவில் கூட முடிவுக்கு வரலாம். ஆயினும், உலகில் மிக நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்கும்/இருந்த நபர் என்ற பெருமை ஷர்மிளாவிடமே நிலைத்திருக்கும் எனலாம். ஏனெனில் அத்தகைய ஒரு மன உறுதி எல்லாருக்கும் கிடைத்து விடாது. நீதி தேவதை தன் பார்வையை எப்போது ஷர்மிளாவின் பக்கம் திருப்பப் போகிறாள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


வடகிழக்கு பிராந்தியத்தின் பிரச்சினை

வட கிழக்கு மாநிலங்கள்

  • மணிப்பூர்
  • அசாம்
  • அருணாச்சல பிரதேசம்
  • மெகாலயா
  • மிசோரம்
  • நாகலாந்து
  • திரிபுரா

என அடையாளம் காணப்படும்.  
இந்தியா விலே ஊடகங்கள் கூட கைவிட்ட ஒரு சூனிய பூமி இப்பிராந்தியம்.இந்த மாநில மக்கள் மொங்கோலியர்களை போன்ற முக தோற்றம் கொண்ட ப்பிராந்திய என்றுமே தங்களை இந்தியர்களாக உணர்ந்ததில்லை. உணர்வதற்கான எந்த வித அடிப்படை காரணிகளும் அவர்களிடம் இல்லை.மொழியாலும் சரி,வாழ்க்கை நடைமுறைகளாலும் சரி உணவு பழக்க வழக்கத்தாலும் சரி,மத அடிப்படயாலும் சரி,அவர்களை இந்தியர்கள் என கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.இந்த மாநிலங்களுக்குத் தனித்துவமான மொழிகளின் எண்ணிக்கை அளப்பரியது.இந்த மாநிலத்தவர்களின் ஒற்றை கோரிக்கை எங்களை தனியே விடுங்கள் என்பதாகும்.சுருங்க கூறின் இந்தியாவின் வட கிழக்கு மாநில மக்கள் தங்களை இந்தியர்கள் என கூறுவதற்கு சங்கடப்படுகிறார்கள்.

இந்தமாநிலங்களில் தனி நாடு கேட்டு போராடும் அமைப்புகளின் எண் ணிக்கை மிக அதிகம் . மணிப்பூரில் மாத்திரம் தனிநாடு கேட்டு போராடும் அமைப்புகளின் எண்ணிக்கை சுமார் 40 .  
அத்தகையோரை ஒடுக்க வல்ல சட்டம் தான் Armed Forces Special Powers Act (1958) என அறியப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் இராணுவத்துக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆணையின்றி எவரையும் கைது செய்ய முடியும். சந்தேகத்தின் பெயரில் சுட முடியும். 5 பேருக்கு மேல் கூட்டமாகக் கூடினால் இராணுவ பலத்தை உபயோகித்து அக்கூட்டத்தைக் கலைக்க முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக அப்பிராந்தியத்தில் கடந்த சில தசாப்தங்களாக இடம்பெறும் துஷ்பிரயோகங்களுக்கு இச்சட்டம் காரணமாகி விட்டது. 1000க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தகையதோர் நிலைமை தான் சாத்விகப் போராட்டத்தை முன்னெடுக்க ஷர்மிளாவைத் தூண்டியது.

No comments:

Post a Comment