Tuesday, August 30, 2011

காலம் கடந்த பின் வருந்த வேண்டுமா?

அது இவ்வருடத்தின் வைகாசிப்பொழுது.. வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ/பொங்கல் காலம். என்றுமில்லாத சனத்திரள் ஆலயச்சூழலில் நிறைந்து காணப்பட்டது. ஆலய மஹோற்சவங்களிலே பூசை வழிபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கடைவீதிக்கும் கொடுக்கப்படுகிறது என்பதை மறுப்பவர் எவருமிலர்.

அதற்கு வற்றாப்பளை அம்மனும் விதிவிலக்கல்லவே.. உள்ளூர் வர்த்தகர்களுடன் சேர்ந்து தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலரும் கடை வீதியை நிறைத்திருந்தனர். சிறிதும் பெரிதுமாக பல கடைகள்.. பல்வேறு பட்ட வியாபாரங்கள்.. அவற்றிலே அலை மோதும் சனத்திரளுக்கும் குறைவிருக்கவில்லை.. அங்கே ஒரு சிறிய தற்காலிகக் கடை.. வாசலிலேயே உடலில் ஒட்டும் ஸ்டிக்கர்களான டட்டூஸ் (Tatoos) தொங்க விடப்பட்டிருந்தன. இளைஞர் கூட்டம் மொய்த்துகொண்டிருந்தனர். அது வேறு எந்த வியாபாரமும் அல்ல. பச்சை குத்தும் வியாபாரம் தான்..

பச்சை குத்துவதொன்றும் எமக்கு புதிது அல்லவே.. அது பல கீழைத்தேய கலாசாரங்களுடன் ஒன்றித்துப் போனதொன்று.அக்குபஞ்சர் போல ஊசியால் பச்சை குத்துவதால், நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உற்சாகமாக செயற்பட முடியும். பச்சை குத்த பயன்படுத்தப்படும் மருதானி உள்ளிட்ட பச்சிலைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்றெல்லாம் கூறப்படுகின்றன. ஆனால் என்று எச்.ஐ.வி தொற்று உட்பட்ட பாரதூரமான தொற்றுகள் உருவாக பச்சை குத்துவதும் ஒரு காரணம் என்று அறியப்பட்டதோ, அன்றிலிருந்து தான் அது தொடர்பான சர்ச்சைகள் பலவும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகத் தொடங்கின. ஆயினும் எம் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதை வற்றாப்பளை அம்மன் பொங்கல் உற்சவமும் அதைத் தொடர்ந்து நல்லூர் திருவிழாவும் புடம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

கடந்த வாரங்களுக்கு முன்னர் நல்லூர் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டிருந்தது. ஐயன் முருகனின் அருளொளி வெள்ளத்தில் மூழ்கவென பக்தர்கள் வயது வேறுபாடின்றி கூடத் தொடங்கினர். கடை வீதிகளும் கூடக் களை கட்டின. இளைஞர் கூட்டத்திற்கும் குறைவில்லை. வர்த்தகர்கள் சகல தரப்பினரையும் அதிலும் குறிப்பாக சிறுவர்கள், இளை ஞர்களைக் கவரக்கூடிய வியாபார முயற்சிகள் பலவற்றை ஆரம்பித்திருந்தனர் . அவற்றிலே இந்த பச்சை குத்தும் வியாபாரம் இளை ஞர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் எவருமே அதனால் உருவாகப்போகும் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.

இளை ஞர்கள் ஆர்வமாக இருந்தாலும், பெரியவர்கள் விழிப்படைந்தனர். பல தரப்புகளிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. மருத்துவ சமூகம் எச்சரிக்கை செய்தது. சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு இரவுப் பொழுதிலே பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டோர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களடு பச்சை குத்தும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பச்சை குத்துதல் என்பது அம் மத்தியில் காலங்காலமாக நிலவி வரும் ஒரு பாரம்பரியம். ஆனால் நவ நாகரிக மோகம் தழைத்தோங்கியிருக்கும் இன்றைய காலப் பகுதியில் பச்சை குத்தும் செயற்பாடும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து விட்டது.

தென்னிந்தியாவின் கொங்கு நாட்டுப் பகுதியில் காணப்படும் கைவினைக் கலைகளில் பச்சை குத்துதலுக்கு முக்கியயைடம் இருக்கிறது. கலைத்தன்மையும், தொழில் தன்மையும் இணைந்த. கைவினைக் கலை (Folk craft) எனவும் இது கூறப்படுகிறது. இந்தப் பச்சை குத்தும் கலை தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பல உலக நாடுகளிலும் இன்றும் கூடக் காணப்படுகின்றது. பழங்குடி மக்களிடம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா பொலினீசியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இந்த வழக்கம் காணப்படுகிறது.
மஞ்சள் பொடியை அகத்திக் கீரையோடு அரைத்துத் துணியில் வைத்துத் திரியாக்கி எரித்த கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து மையாக்கி ஊசிகளைக் கொண்டு உடலில் பச்சை குத்துவர். கரும்பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகை மையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல் பச்சை குத்துதல் என்று விளக்கம் தருகிறது க்ரியாயின் தமிழ் அகராதி. குறவர் இனத்தவர் பச்சை குத்துதலை ஒரு தொழிலாகவே செய்து வந்தனர்.
வெவ்வேறு நம்பிக்கைகளுக்காகப் பேணப்பட்டு வந்த பச்சை குத்தும் வழக்கத்தின் எச்சங்களாக இன்றைய மருத்தாணியிடலும் டட்டூக்கள் ஒட்டுவதும் மிஞ்சியிருக்கின்றனவோ என்றும் சில வேளைகளில் சிந்திக்கத் தோன்றும். பச்சை குத்துதல் என்பது தற்போது அழகுக் கலையாகவே மாறி விட்டிருக்கிறது. அழகுணர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பச்சை குத்திக் கொள்ளும் பலரைக் காண முடிகிறது.

ஊசியிலே வர்ண மையை இட்டு உடலிலே கீறுவதன் மூலம் பச்சை குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட சில பச்சிலைகளின் சாற்றை எடுத்து, அவற்றை ஊசி மூலம் கை பெருவிரல் அல்லது மணிக்கட்டின் மேல்பகுதி, மார்பு ஆகிய இடங்களில் பச்சை குத்துவர்.

முன்பு, பச்சை குத்துவதற்கென்றே ஒரு இனம் இருந்தது. தற்போது அப்படி இருப்பது மிக அரிதாகும். வெளிநாடுகளில், 'டட்டூ' என்ற பெயரில் பச்சை குத்தும் தொழில் அமோகமாக நடக்கிறது. விதம் விதமான உருவங்களை உடல் முழுவதும் வரைந்து கொள்வதை, மேலை நாட்டினர், நாகரிகமாக கருதுகின்றனர். தற்போது இந்த கலாசாரம் எமது நாட்டிலும் பரவி விட்டது.
பாவிக்கப்படும் மையைப் பொறுத்து பச்சை குத்திய வடிவத்தை அழிக்கவும்/இல்லாமல் செய்யவும் முடியும். ஆனால் இது மிகுந்த வலியைத் தோற்றுவிக்கும்.
பச்சை குத்துதல் ஒன் றும் தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்வதனால் இருக்கும் அபாயங்களையும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளையும் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். பச்சை குத்துதல் அபாயகரமானதாக மாறுவதற்குரிய பிரதான காரணம் அதற்குப் பாவிக்கப்படும் ஊசியாகும். சுகாதாரமற்ற ஊசிகளாலும் ஒரே ஊசியைப் பலருக்குப் பயன்படுத்துவதாலும் பாவித்த ஊசிகளைச் சரியாக அப்புறப்படுத்தாமையாலும் பல பார தூரமான தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு ஏற்படும். ஆதலால் அந்த ஆபத்தை நாம் உணர வேண்டும். பச்சை குத்தத் தான் வேண்டுமென்றால் இந்த அபாயங்களைத் தவிர்க்கக் கூடிய வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நல்லூர் ஆலயச் சூழலிலே பச்சை குத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரித்து விடுவிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணமாகும். ஆலயச் சூழலில் இத்தகைய பச்சை குத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லையென்றும் மறைமுகமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் யாழ். மாநகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கூறியிருந்தனர். இந்த விடயம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவிழாக்காலங்களில் ஆலய வெளி வீதிகளில் கடைகளை அமைக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் , அக்கடைகளி எத்தகைய வியாபாரங்கள் மேற்கொள்ளப்படப்போகின்றன என அறிந்து அவை சமூகத்துக்கு பாதகமற்றவை என அறியப்படும் பட்சத்தில் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும்.
அதே வேளை நவ நாகரிகம் தான் உலகம் என்ற மனப்பாங்கை எம் இளை ஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். எமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் தான் எமது அடையாளங்கள். நாம் எமது மனப்பாங்கை மாற்றியமைக்காவிடில் அவை யாவுமே எதிர்காலசந்ததிக்குக் கடத்தப்படாமல் எம்முடன் முடிந்து போய் விடும். அடையாளமின்றிய எதிர்காலசந்ததியை உருவாக்கியவர்கள் என்ற அவப்பெயர் மட்டும் தான் எமக்கு மிஞ்சும்.
ஆலயச் சூழலில் பச்சை குத்தும் விடயம் தொடர்பாக விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு நோயாளர் மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் விசுவலிங்கம் கந்தவேள் பொதுமக்களை எச்சரித்திருந்தார். இளை ஞர்கள் மட்டுமன்றி பெற்றோரும் விழிப்பாக இருக்க வேண்டும். தம் பிள்ளை என்ன செய்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். ஆனால் அத்தகைய நிலைமை எம்மவர் சமூகத்தில் சற்றுக் குறைவாக வே காணப்படுகிறது.
இத்தகைய விழிப்புணர்வை ஊட்டுவதில் வெகுசனத் தொடர்பூடகங்களுக்கு தலையாய் கடமை ஒன்று இருக்கிறது. நல்லூர் ஆலயச் சூழலில் பச்சை குத்தும் வியாபாரம் நடை பெறுவது கூட வெகு சனத் தொடர்பு ஊடகங்களால் தான் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.
எச்.ஐ.வி தொற்று தொடர்பில் பலத்த சவால்களை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது எம் வடபுலச் சமூகம்.அத்தகையதோர் சூழலில் பச்சை குத்துதல் போன்ற விடயங்களை அலட்சியப்படுத்துதல் எத்துணை பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் காலம் கடந்த ஞானத்தைப் பெற்று கடந்து போன காலத்துக்காக வருந்துவதில் பயனேதுமிருக்காது. வருத்தம் மட்டுமே எஞ்சும். வெள்ளம் வந்த பின் அணையைக் கட்டி என்ன பயன் ?

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
தோலின் மேற்படையில் ஊசியால் கீறுவதன் மூலம் பச்சை குத்தப்படுகிறது. தற்போது கையால் இயக்கப்படும் சிறிய ரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய இயந்திரத்தில் பொருத்தப்படும் ஊசி அல்லது ஊசிகள் தோலின் மேற்படையில் தொடர் துளைகளைப் போடும். அத்துளைகளில் மை பரவும் . பச்சை குத்தப்படும். சிறிதளவிலான நோ கூட உருவாகலாம்.இரத்தமும் வரலாம்.
1. அபாயத்தை உணருங்கள்!
  • ஒவ்வாமைத் தாங்கங்கள் ஏற்படலாம். பாவிக்கப்படும் மையின் ஒவ்வாமை காரணமாககதோல் தொற்று ஏற்படும். பச்சை குத்திப் பல காலங்கள் ஆன பின்னர் கூட இது ஏற்படக் கூடும்.
  • தோலில் பக்டீரியா தொற்று ஏற்படலாம். பச்சை குத்திய இடத்தில் சீழ் வடியலாம்.
  •  ஏனைய சில தோல் நோய்களும் ஏற்படலாம். இழையங்கள் மிகையாக வளரலாம்.
  • குருதியால் பரவும் நோய்களின் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும். பச்சை குத்தும் ஊசியி லே நோய்த்தொற்றுள்ள குருதி படிந்திருந்தால், ஹெப்பட்டைட்டிஸ்-B,ஹெப்பட்டைட்டிஸ்- C , எச்.ஐ.வி போன்ற தொற்றுக்கள் ஏற்படலாம்.
  •  பச்சை குத்தியபின்னர் வேறு ஏதோ ஒரு தேவைக்காக நீங்கள் MRI ஸ்கான் செய்து கொள்ள நேரும் போது அப்பகுதியில் எரிவுகள் ஏற்படலாம். அத்துடன் நீங்கள் பச்சை குத்திருப்பதானது திருத்தமான ஸ்கான் முடிவுகளைப் பெறுவதில் தடையாக இருக்கும்.  
  • பச்சை குத்திய பின்னர் அந்த ஊசிகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிடில் அவை கூட நோய்த் தொற்றுகள் உருவாகக் காரணமாகி விடும். 
2. பாதுகாப்பைக் கவனியுங்கள்! 
  • பச்சை குத்துவது யார்?
அங்கீகரிக்கப்பட்ட, பயிற்சியைப் பெற்றவர்களிடம் சென்று பச்சை குத்துங்கள். அவர்களிடம் தேவையான அனுமதிப் பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
  •  கையுறை அணிந்திருக்கிறாரா?பச்சை குத்துபவர் கையுறைகளை அணிந்திருக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். பச்சை குத்த ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர் தனது கைகளைக் கழுவுகிறார் என்பதையும் புதிய கையுறைகளைத் தான் அணிகிறார் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்!
  • சரியான உபகரணமா?பச்சை குத்துபவர் சரியான உபகரணத்தைத் தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் புதிய ஊசி/ஊசிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் உறுதி செய்யுங்கள். அவர் பாவிக்கும் வர்ணங்கள், பாத்திரங்கள் கூட முன்னர் பாவிக்கப்பட்டிருக்காதவை (புதியவை) என் பதை உறுதி செய்யுங்கள்.
  • தொற்று நீக்கப்படுகின்றனவா? பாவித்தபின் எறிய முடியாத உபகரணங்கள் தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீளப்பாவிக்கப்படுகின்றனவா என்பதை அவதானியுங்கள்.
  •   உங்களையே கேளுங்கள்!பச்சை குத்தத் தான் வேண்டுமா என உங்களையே ஒன்றுக்கு இரண்டு தடவைகள் கேட்டுக்கொள்ளுங்கள். ஆம் எனின் பச்சை குத்த வேண்டிய இடத்தைக் கவனமாகத் தேர்வுசெய்யுங்கள். மது பானம், மருந்துகள் படக்கூடிய பகுதிகளில் பச்சை குத்தாதீர்கள்.
 பச்சை குத்திய பின்...
  •  அப்பகுதியில் சுற்றப்பட்டிருக்கும் பந்தனத்தை 24 மணி நேரத்துக்குக் கழற்றாதீர்கள். புண் இருந்தால் அதற்குரிய மருந்தை வைத்திய ஆலோசனையுடன் தடவுங்கள்.
  • பச்சை குத்திய பகுதியை எப்போது துப்புரவாக வைத்திருங்கள். அப்பகுதியில் சொறியாதீர்கள்.
  • பச்சை குத்திய பின் சில காலங்களுக்கு அப்பகுதியில் சூரிய ஓளி நேரடியாகப் படுவதைத் தவிருங்கள்,தேவையெனில் தோல் வைத்திய நிபுணரை நாடுங்கள்.

யானைகள் எத்தனை தெரியுமா?

 


ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கும் விலங்குகளுக்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு இருந்து தான் வருகிறது. விலங்குகள் அவற்றின் தன்மைகளுக்கும் இயல்புகளுக்குமேற்ப மனிதனால் வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையிலேயே யானைகளும் ஆதிகாலத்தில் இருந்து மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. அடிப்படையில் யானைகள் இரு இனங்களைச் சார்ந்தவை. ஒன்று ஆபிரிக்க யானை இனம். இரண்டாவது ஆசிய யானை இனம். பாரமான பொருட்களைத் தூக்குவதற்கும், பயணிப்பதற்கும், யுத்த முனைகளிலும் யானைகள் பயன்படுத்தப்பட்டன. யானைகளின் தந்தமும் மயிரும் விலையுயர்ந்த பொருட்களாக வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. யானைகள், அவை செறிந்து வாழும் சில நாடுகளின் அடையாளமாகவும் வணக்கத்துக்குரிய விலங்காகவும் இருக்கின்றன. இலங்கையிலும் அத்தகைய பாரம்பரியங்களைக் காணலாம். பெரஹராக்களிலும் சில இந்துக் கோயில் திரு விழாக்களிலும் யானைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளமையை நாம் அறிவோம். சில பெரிய நில உரிமையாளர்களைப் பொறுத்த வரையிலே யானைகளை வைத்திருப்பது கௌரவத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.

முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியா, மற்றும் சில தீவுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளெல்லாம் பரவியிருந்த யானைகள் இன்று ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டுமே காணப்படுகின்றன. அதற்கு உலகு அடைந்து வரும் அபிவிருத்தி பிரதான காரணாமாகும். அதே வேளை தந்தத்துக்காக யானைகளைக் கொல்லும் கொடூரம் இன்னும் நடந்தேறிய வண்ணம் தான் உள்ளது. ஆதலால் தான் அழிவடையும் விலங்குகளின் பட்டியலிலிருந்து தந்தத்தைக் கொண்டுள்ள யானைகளின் பெயர் மட்டும் இன்னும் நீக்கப்படவில்லை.

காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் வாழிடத்தை இழந்து மனிதனுடன் முரண்படத் தொடங்குகின்றன என்ற கருத்தே பொதுவாக நிலவி வருகிறது.ஆதலால் காடுக ளை அழிக்கும் மனிதனுக்கும் அதனால் வாழ்விடத்தை இழக்கும் யானைகளுக்கும் இடையிலே முரண்பாடுகள் எழத்தொடங்கின. அவை அத்துடன் நின்று விடவில்லை. காலத்துக்குக் காலம் அதிகரித்த படி தான் செல்கின்றன.

காடுகள் அழிக்கப்பட்டதால் தான் யானை-மனிதன் முரண்பாடு தோன்றியது என நாம் எண்ணிக்கொண்டிருக்க , மாறுபட்ட கருத்தொன்றை முன் வைக்கிறார் பேராசிரியர் சரத் கொட்டகம.

ஆசிய யானைகளின் குடித்தொகையில் 1 சதவீதம் மட்டுமே அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன எனத் தரவுகள் அவர் கூறுகிறார்.

மிகுதி 99 சதவீதமான யானைகளும் அடர்த்தி குறைந்த வனப்பகுதிகளிலே, தமக்குத் தேவையான தாவரங்களும் நிரந்தரமான நீர் நிலைகளும் உள்ள பகுதியிலேயே செறிந்து வாழ்கின்றன. இங்கு தான், யானை - மனிதன் முரண்பாட்டிற்கான காரணம் காடழிப்பு என்ற கருத்து தொடர்புபடுத்தப்படுகின்றது. பெருகிவரும் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டது. மனிதன் வாழ்வதற்கும் கூட தாவரங்களும் நிலையான நீர்நிலைகளுமே அத்தியாவசியமாக அமைக்கின்றன.
அழிக்கப்பட்ட இந்த வனப்பகுதிகளின் அயலை வாழிடமாகக் கொண்ட யானைகள், தமக்குத் தேவையான உணவும் நீரும் சுலபமாகக் கிடைக்கும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கிச் செல்கின்றன. அத்துடன் மனிதர்கள் சமைக்கும் உணவின் மணமும் சுவையும் யானைகளுக்குப் பிடித்து விடுவதால் அவை மனிதக் குடியிருப்புகளை நோக்கிச் செல்வதாக இந்திய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவிலே அத்தகைய பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. காடுகளை அழித்து குடியேற்றப்பட்ட சமுதாயங்கள் பொதுவாக விவசாயத்தை மூலாதாரமாகக் கொண்டவை. விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பகுதிகளிலே, நிலையான நீர்நிலைகள் நிச்சயம் காணப்படும். யானைகளுக்குத் தேவையானவையும் அவ்விரண்டுமே!

அவை சுலபமாகக் கிடைக்கும் இடம் அருகிலேயே இருக்கும் போது யானைகள் ஏன் வனப்பகுதிகளை நோக்கி நகர வேண்டும்? ஆறறிவுள்ள மனிதனே, எதனைப் பற்றியும் கவலைப்படாமல், சுலபமாகக் கிடைக்கும் வளங்களைத் தேடிச் செல்கையில் ஐந்தறிவுள்ள யானை மட்டும் விதிவிலக்கா? அதற்குத் தேவை உணவும் நீரும் மட்டுமே. இலங்கையில் இதனை விளக்கத்தக்க நிகழ்வுகள் பல ஏற்கெனவே நடைபெற்றிருக்கின்றன.

உடவளவைப் பகுதியின் 70 சதவீதமான நிலப்பரப்பு ஒரு காலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பல்வேறு தேவைகளுக்காகக் காடு அழிக்கப்பட, 70 சதவீதமாக இருந்த வனப்பகுதி 4 சதவீதமாகக் குறைவடைந்தது. இதையடுத்து 1974 ஆம் ஆண்டு உடவளவை தேசிய வனப்பூங்கா உருவாக்கப்பட்டு ஆதரவற்ற யானைகள் தற்காலிகமாக அங்குவைத்துப் பேணப்பட்டன. பின்னர் அழிந்த வனப்பகுதியில் மீள் காடாக்கலை மேற்கொள்வதா அல்லது அப்படியே இருக்கவிடுவதா என்ற சிந்தனை உருவாகியது. ஆனால் யானைகள் வாழ்வதற்கேற்ற சூ ழல் உடவளவை தேசிய வனப்பூங்காவில் காணப்பட்டமையாலும் தற்காலிகமாகப் பேணப்பட்ட யானைகளின் குடித்தொகை பெருகியமை அறியப்பட்டதாலும் மீள்காடாக்கல் எண்ணம் கைவிடப்பட்டு அப்பகுதி யானைகளின் வாழிடமாகவே ஆக்கப்பட்டது. அதே போல பின்னவலை யானைகள் புகலிடத்தையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் ஆதரவற்ற யானைகள் அங்கே கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்குள்ள யானைகள் அச் சரணாலயத்திலேயே பிறந்து வளர்ந்தவை. ஆதலால் பின்னவலை யானைகள் புகலிடத்தை இனியும் அ நாதை /ஆதரவற்ற யானைகளுக்கானது என்று குறிப்பிடல் பொருந்துமா என்பது தெரிய வில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் யானை இனமே இருக்காது என்றே எதிர்வு கூறப்பட்டது. மாறாக இந்தப் போக்கு எதிர்த்திசையில் திரும்பி இன்று யானைகளின் குடித்தொகை அதிகரித்துள்ளது.

இது யானைகள் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையொன்று தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதையே சுட்டி நிற்கிறது. நிலைமை இப்படி இருக்கும் போது தான் யானைகளின் தொகைக் கணக்கெடுப்பும் முக்கியத்துவம் பெறுகிறது . அத்துடன் அது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

இம்மாதத்தின் நடுப்பகுதியில் ஓரிரு நாட்களுக்கு இலங்கையில் உள்ள விலங்குகள் சரணாலயங்கள் பல மூடப்பட்டன. ஏன் தெரியுமா? இலங்கையில் இருக்கும் யானைகளைக் கணக்கெடுக்கும் பணி நாடளாவிய ரீதியிலே ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பணிக்கு இடையூறு விளைவிக்காமலிருக்கவே வில்பத்து , யால, வஸ்கமுவ உள்ளிட்ட 22 சரணாலயங்கள் சில நாட்களுக்கு மூடப்பட்டிருந்தன. தற்போது இலங்கையிலே 5000 க்கும் அதிகமான யானைகள் இருக்கலாமென எதிர்வுகூறப்படுகிறது. அவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன என்பதை அண்ணளவாக மதிப்பிடவே இந்த கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

1993 இலேயும் இத்தகைய மதிப்பீடு ஒன்று நடாத்தப்பட்டது.ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை. 18 வருடங்களின் பின்னர் தற்போது இந்த மதிப்பீடு மீண்டும் நடைபெறுகிறது. அதிலும் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திலே முதன் முறையாக இலங்கை முழுவது ம் நடாத்தப்படும் முதற் கணக்கெடுப்பும் இதுவாகும். நீண்ட கால அடிப்படையிலே தரவுகளை ஆராய்ந்தால்இ யானைகளின் குடித்தொகை அதிகரிக்கும் போக்கையே காட்டுகிறது. அதை உறுதிப்படுத்தும் செயற்பாடாக இந்த கணக்கெடுப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாக ஒரு கணக்கெடுப்பு எனப்படுவது குறித்த குடித்தொகை ஒன்றிலே உள்ள அங்கத்தவர்கள் தொடர்பான தரவுகளை ஒழுங்கான படி முறை மூலம் பெற்றுக்கொள்ளுதலைக் குறிக்கும். இது மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் மத்தியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பை சனத்தொகைக் கணக்கெடுப்பு என்பர்.

தற்போது யானைகளின் எண்ணிக்கையை அறிய மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு சற்று மாறுபட்டது. யானைகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு நீரருந்தச்செல்லும் யானைகளின் கூட்டத்தை அவதானித்தே இது மேற்கொள்ளப்பட்டது. இது யானைகளை நேரடியாகக் கணக்கிடும் ஒரு முறைமையாகும். காட்டு யானைகள் பொதுவாக மாலை வேளைகளில் அதிலும் வறண்ட காலப்பகுதியில் நீர் நிலைகளைத் தேடிச்செல்லும். ஆதலால் வறட்சி நிலவும் காலப்பகுதியொன்றின் உச்ச கட்டத்திலே இக்கணக்கெடுப்பை மேற்கொள்வது உசிதமானது. ஏனெனில் அத்தகைய கால கட்டத்தில் தான் பல நீர் நிலைகள் வறண்டு ஒரு சில நீர் நிலைகள் மட்டும் எஞ்சி இருக்கும். ஆதலால் கணக்கெடுப்பையும் இலகுவாக மேற்கொள்ளலாம்.

யானை – மனிதன் இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதற்கும் யானைகளுக்கென தனியான இடம் ஒதுக்குவதற்காகவும் இந்தக் கணிப்பீடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் முப்படையினர் கிராம மக்கள் போன்றௌரும் வனவள அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் துணையுடன் கணக்கெடுப்புப் பணி முடிவடைந்து விட்டது.

திரட்டப்படும் விபரங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தினூடாக விஞ்ஞானபூர்வமாக ஆராயப்பட்டு அறிக்கையாகத் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. . ஆண் யானை , பெண் யானை ,தனியான யானை, கூட்டமாக உள்ள யானைகள், அவற்றின் வயது வேறுபாடுகள், அவை தங்கியிருக்கும் பகுதிகள், அவற்றின் பாதை, அவை கொண்டிருக்கும் நோய்கள், காயங்கள் என யானைகள் பற்றிய சகல விதமான விபரங்களும் திரட்டப்பட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்படும். நாட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ள மற்றும் அவற்றினால் தொல்லைகள் ஏற்படும் பகுதிகளை அடையாளம் காணவும் இந்த கணக்கெடுப்பு வழி வகுக்கும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் இலங்கைக்குப் பொருந்தக் கூடிய யானைகளின் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயன் படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இக்கணக்கெடுப்பு முறைமையிலும் பல சிக்கல்கள் காணப்படத்தான் செய்கின்றன. இம்முறைமையின் வினைத்திறன் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை ஆய்வறிக்கை தான் சொல்ல வேண்டும். இந்த ஆய்வுஎங்ஙனம் யானை-மனிதன் முரண்பாட்டைத் தீர்க்கப்போகிறது என்பதையும் அதே ஆய்வறிக்கை தான் சொல்ல வேண்டும்.








இலங்கை யானைகள்

இலங்கை யானை ஆசிய யானையின் உப இனமாகும். 1986 வரை இலங் கை யானைகள் அழிவடைந்து செல்லும் அச்சுறுத்தலையே கொண்டிருந்தன. அதற்கான முக்கிய காரணமாக வாழ்விடம் இழக்கப்படுதலும் காடழிப்பும் கருதப்பட்டது. 1758 இலேயே இந்த யானை இனம் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உடவளவை, யால, வில்பத்து, மின்னேரியா போன்ற தேசிய வனப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலேயே அவற்றிலும் உலர் வலயத்திலேயே அவற்றின் இருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


ஆபிரிக்க யானைகளுடன் ஒப்பிடும் போது ஆசிய யானைகள் பருமனில் சிறியவை. பெண் யானைகள் ஆண் யானைகளை விடச் சிறியவையாக இருக்கும். கிட்டத்தட்ட 7 சதவீதமான ஆண் யானைகளுக்கே தந்தங்கள் இருக்கும். யானைகள் சமுதாய விலங்குகளாகும். அவை கூட்டமாக வாழ்வதில் அதிக விருப்புடையவை. ஆசிய யானைகளைப் பொறுத்தவரையிலே அவை பழைய நட்பை ஒரு போதும் மறப்பதில்லை எனவும் அவற்றின் சமூக வலையமைப்பு விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடப் பெரியது எனவும் தெரிவிக்கப்படுகிறது. யானைகளும் மனிதர்களைப் போலவே சமூக விரும்பிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய யானைகளில் ஆண் யானைகள் தனித்து வாழ்வதையே விரும்புகின்றன. பெண் யானைகள்ம் குட்டி யானைகளும் கொண்டிருக்கும் உறவூ வலையமைப்பு மிகவும் சிக்கலானது. சாதாரண மனிதர்கள் மத்தியில் காணப்படும் உறவுகளும் நட்புகளும் யானைகள் மத்தியிலும் காணப்படுகின்றன.


அவை அவற்றிற்கே உரித்தான மணத்தைக்கொண்டும் ஒன்றையொன்று கூப்பிட்டும் மிக நீண்ட தூரத்திலிருக்கும் சகபாடியை இலகுவாக இனங்காண வல்லவை.


மிகப்பெரிய சமூகக் குழுவின் ஒரு சிறிய தொகுதியே நாம் காணும் யானைக்கூட்டம் எனலாம். நீண்ட காலத்தின் பின் சந்தித்தாலும் தம் உறவூகளை அவை இலகுவாக இனங்காணும். நட்பைப் புதுப்பித்துக்கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளார்கள். நண்பர்கள் என்று அமையூம் போது அவற்றின் முகத்தை இந்த ஆசிய யானைகள் ஒரு போதும் மறக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.


உடவளவை தேசிய வனப்பூங்காவில் கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. யானைகளுக்கிடையிலிருக்கும் இந்தப் பிணைப்பு கோடைக்காலங்களில் மிகவும் இறுக்கமாக இருக்குமாம். அவ்வாறு இருப்பதன் மூலம் தமக்கான உணவு மற்றும் நீரின் பாதுகாப்பை அவை உறுதி செய்து கொள்ளுமாம். ஏனெனில் நாளொன்றுக்கு யானை ஒன்று 16 மணித்தியாலங்கள் உண்ணும். 225 லீற்றர் நீரை அருந்தும்.


நீர் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை பெரிய குழுக்களாகத் திரியூம். தாம் நீரருந்தும் இடங்களில் பழக்கமற்ற யானைகளை நீரருந்த விடாது கலைக்கும். அத்துடன் இந்த யானைகள் தம் உறவு, நட்பு வட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை.

Wednesday, August 17, 2011

இக்கரைக்கு அக்கரை பச்சை?

எம்மவருக்கு இலண்டன் ஒரு சொர்க்கபுரி. என்ர பிள்ளை இலண்டனிலென்றுபெருமிதமாய்ச் சொல்லும் தாய்மார் பலரைக் கண்டிருப்போம். தன் பிள்ளை அங்கு வீதியைத் துப்புரவு செய்கிறானா? ஹோட்டலில் பாத்திரம் கழுவுகிறானா? படிக்கச் சென்றவன் படிப்பை முடித்து அதனுடன் தொடர்புடைய தொழிலைத் தான் மேற்கொள்கிறானா என்பது பற்றியெல்லாம் இங்கிருக்கும் பெற்றோர் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. தலையை அடமானம் வைத்தேனும் ஒரு சிறிய கல்லூரியிலாவது அனுமதியைப் பெற்று தம் பிள்ளையை இலண்டனுக்கு அனுப்பிவிடுவதில் அவர்கள் வல்லவர்களாகத் தான் இருக்கிறார்கள். காலம் அவர்களை அப்படி மாற்றிவிட்டிருக்கிறது.
 
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இவர்கள் விடயத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு பாதுகாப்பில்லை; உயிருக்கு அச்சுறுத்தல் என்று எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் கடல் கடந்து சென்றவர்கள் பலர். எந்த நாடு தமக்கு பாதுகாப்பாக இருக்கும் என நம்பி அகதி அந்தஸ்து கோரி தம் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டார்களோ, இன்று அதே நாட்டிலே அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இலங்கையில் வசிக்கும் குடும்பத்தவர்களுக்கோ தம் உறவுகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது கூடத் தெரியவில்லை என்பது தான் வெளிப்படை உண்மை.

கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்த கலவரமும் தொடர் கொள்ளை, தீவைப்புச் சம்பவங்களும் பிரித்தானியாவையே உலுக்கிப்போட்டிருந்தன. கடந்த 4 ஆம் திகதி வடக்கு இலண்டனின் டொட்டன் ஹாம் பகுதியில் மார்க் டக்கன் என்ற 29 வயது இளைஞர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த இளைஞர் ஸ்தலத்திலேயேபலியானார். அதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடந்த 6 ஆம் திகதி டொட்டன் ஹாம் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் நிலையம் முன்பாக நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாகிப் பின் கலவரமாகியது. வடக்கு இலண்டனில் தொடங்கிய கலவரம் அங்கேயே முடிந்து போகவில்லை. மத்திய இலண்டன், கிழக்கு இலண்டன், தெற்கு இலண்டன் மட்டுமன்றி பிரித்தானியாவின் முக்கிய வர்த்தக நகரங்களுக்கும் பரவியது. முகமூடிகளை அணிந்த இளைஞர் கூட்டம் களத்தில் இறங்கியது. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. ஏ.டி.எம் இயந்திரங்கள், வணிக வளாகங்கள் உட்பட அசையாச்சொத்துக்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. பொலிஸ் வாகனங்களும் பொலிஸ் நிலையங்களும் கூடத் தப்பவில்லை. எல்லா இடங்களிலும் பதற்றம் நிலவியது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
விடுமுறையை கழிக்கவென இத்தாலி சென்றிருந்த இங்கிலாந்து பிரதமர் கமரூன் உடனடியாக நாடு திரும்பினார். பாராளுமன்றை அவசரமாகக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பொலிசாரின் விடுமுறைகள் யாவும் இரத்துச்செய்யப்பட்டன. நான்காம் நாள் இரவு 16 ஆயிரம் பொலிசார் வீதிகளில் இறக்கப்பட்டனர். இலண்டனின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆயினும்இ ஏனைய நகரங்களில் பதற்ற நிலைமை தொடர்ந்த வண்ணமே இருந்தது.

சில கொள்ளைக்காரர்கள் பொது மக்கள் சிலரின் உடைகளைக் கழற்றச்சொல்லி அவற்றையும் பணப்பை, அலை பேசி உட்பட்ட பொருட்களையும் கூட கொள்ளையடித்துச் சென்றனர். மக்களைக் காயங்களுக்குள்ளாக்கினர்.

இங்கு கொள்ளை என்று குறிப்பிடும் போது ஒருவரே அதிகளவிலான பொருட்களைக் கொள்ளையடித்தார் என்று அர்த்தப்படாது. சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே.. அது போல பெரும்பாலான கொள்ளைக்காரர் ஒவ்வொருவரும் குறைந்தளவிலான பொருட்களையே கொள்ளையடித்துச் சென்றனர். ஆனால் கூட்டாகக் கருதும் போது ஒவ்வொரு சம்பவத்தையும் பெருங்கொள்ளைச்சம்பவமாகக் கருதலாம். கொள்ளையடித்தவர்களுள் வெள்ளை, கறுப்பு என்ற இன பேதமோ வயது வேறுபாடோ வேறு எந்த வித பாகுபாடுகளோ காணப்படவில்லை. 11 வயதுச் சிறுவர் முதல் பாடசாலை ஆசிரியர், அமைசரின் பிள்ளைக்ள்  தொட்டு தபால் உத்தியோகத்தர் , பிரித்தானியாவின் ஒலிம்பிக் தூதர், இலட்சாதிபதியின் மகள் வரை சகல தரப்பினரும் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலைமையானது இக்கலவரம் தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் சிந்திக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்துடன் இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒருவர் காயம் காரணமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். அவர்கள் காரினால் வேண்டுமென்றே இடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 1500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுள் 11 வயதுச் சிறார்களும் அடக்கம் என்ப¬¬து தான் கவலைக்குரிய விடயமாகும்.

தொடரும் பதற்ற நிலைமையை அடுத்து தமது நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் பொலிசாருடன் கை கோர்த்திருக்கிறார்கள். சீக்கியர்களும் முஸ்லிகளும் தமது வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் காவல் காக்கிறார்கள். தன்னார்வத்தொண்டர்கள் தத்தமது நகரைத் துப்புரவு செய்து பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் அல்லவா? கொள்ளையர்களின் ஆதிக்கம் ஓய்ந்து நீதியின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. வீதிகளெங்கும் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் பதியப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றிலே ஆஜர் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்கலவரத்தை அடக்குவதில் பொலிசார் நடந்து கொண்ட விதம் தொடர்பாகப் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்ப கட்டத்தில் கொள்ளைகள் நடக்கும் போது பொலிசார் பார்வையாளர்களாகவே இருந்திருக்கின்றனர். கொள்ளையரின் முகமூடிகளை அகற்றக் கூட பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்த கலவரம் பொலிசார் எதிர்பார்த்திராத ஒன்றாக இருந்ததால் அது அவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்திருந்தது. இக்கலவரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டது. அவ்விவாதத்தில் கலகத்தை அடக்குவதற்கு பொலிசார் பாவித்த உத்திகள் பெரியளவில் பயனளிக்கவில்லை என்பதை கமரூனும் ஒத்துக்கொண்டிருந்தார். அத்துடன் நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் பழைய நிலையைத் தோற்றுவிப்பதற்காகப் பல உறுதி மொழிகளையும் வழங்கியிருந்தார்.

பிரித்தானியா தொடர்பில் உலக நாடுகள் மத்தியிலே நல்லபிப்பிராயத்தைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஒன்று அவர்களுக்கு இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக உலக நாடுகள் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அந்த நாடு மிகவும் அவதானமாக உள்ளது.

 

2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டன் மாநகரிலே நடக்கவிருக்கின்றன. தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் பற்றி பலரும் சந்தேகங்களை வெளியிட்டிருக்கின்றனர். போட்டியின் பாதுகாப்பு நிலைமைகளும் கேள்விக்குறியாகியுள்ளன. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பேச்சாளர் பிரித்தானியா மீது தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார். இதேவேளை இந்தக் கலவரங்கள் 2012 ஒலிம்பிக் போட்டிகளை ஒரு போதும் பாதிக்காது என பிரித்தானிய அரசாங்கம் உறுதி கூறியுள்ளது.

அதே வேளை அடுத்தவருடம் எலிசபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டங்களும் நடைபெறவிருக்கின்றன. இக்கலவரங்கள் அக்கொண்டாட்டங்களைக் கெடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாமெனப் பலர் சந்தேகிக்கின்றனர்.

பிரித்தானியாவில் இனமுரண்பாடுகளால் கலகம் ஏற்படுவது இதுவே முதற்தடவையல்ல.அத்துடன் இது ஒரு குற்றவாளியான மார்க் டக்கன் கொலை செய்யப்பட்டதற்கான எதிர்ப்பலையாகவும் தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம் பொருளாதார ரீதியில் மிகக் கீழ்நிலையில் உள்ள சமூகம் தனது எதிர்ப்பை ஒருவகையில் வெளிப்படுத்த முயன்றுள்ளது. இவை அவ்விளைஞர்களை வேலையற்றவர்களாக மாற்றி குற்றச்செயல்களை நோக்கித் தள்ளுகின்றது. தற்போதைய கலகங்கள் திட்டமிட்ட முறையில் களவு கொள்ளைக்கும் பயன்படுத்தப்படுகிறது. கலகக் காரர்களுள் இனபேதம் காணப்பட்டதாகத் தெரியவில்லை.

பொருளாதார நிலையில் மிகவும் கீழ்நிலையில் உள்ள மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் இவ்வாறான கலகங்கள் இன்னும் அதிக பாதிப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. இப்பகுதிகளில் புதிய பொருளாதார முயற்சிகள் மேற்கொள்வது மேலும் கடினமாகும். இது வேலைவாய்ப்பின்மைகளை அதிகரிக்கும்.

அத்துடன் பிரித்தானிய அரசு பல்வேறு பொதுத்துறைசார் விடயங்களிலும் நிதிக்குறைப்பைச் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் அப்பகுதி மக்களுக்கு நீண்டகால அசௌகரியத்தை ஏற்படுத்த வல்லவை எனவும் அஞ்சப்படுகிறது.

அத்துடன் பிரித்தானியா ஒரு பல்லின கலாசார நாடாகும். ஆனால் பல்லின கலாசாரத்தின் பிரதான பண்பான மனிதம் என்பது அங்கு தொலைந்து போய்விட்டதோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.

இக்கலவரம் கறுப்பு - வெள்ளை இனத்தவர் மத்தியில் நடைபெற்றது என பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை பூச்சியம் என்பதை CCTV கமரா காணொளிகள் நிஷரூபித்திருக்கின்றன. அத்துடன்இ கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களுக்கு இன, மத வேறுபாடின்றி அஞ்சலி செலுத்திய பொது மக்களும் எந்த பாகுபாடுமின்றி ஒன்றிணைந்த தன்னார்வத்தொண்டர்களும் உண்மையை விளக்கப் போதுமானவர்கள்.

பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களிடமிருந்து பலரும் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அங்கு எந்த ஒரு பிரதான ஊடகமுமே கலவரத்தைத் தூண்டும் வகையில் அறிக்கையிடவில்லை. ஆனால் உண்மையை இலாவகமாக வெளிப்படுத்தின. நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு செய்திகளை அறிக்கையிட்டன. இது ஊடகங்களின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுகிறது. அவற்றின் இணையத்தளங்களிலே இன முரண்பாட்டைத் தூண்டும் வகையிலே குறிப்பிடப்பட்டிருந்த பொது மக்கள் கருத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் ஓய்ந்து இலங்கை அபிவிருத்திப்பாதையை நோக்கி நடை பயிலத் தொடங்கி விட்டது. தாய்மடியை விட வேறு சுகமேது? எமது தாய் நாட்டிலே பல்வேறு சுய தொழில் வாய்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. மேற்குலகை விட்டால் வேறு சொர்க்கம் இல்லை என்ற மனப்பாங்கு தான் அம்மத்தியில் காணப்படுகிறது. தாய் நாட்டில் விவசாயம் செய்வதை விட இலண்டனில் கோப்பை கழுவலாம் என்கிறது எம் பேதை மனம். அதற்கு பணம் மட்டும் தான் பெரிதாகத் தெரிகிறது.



‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் ‘

என்று வள்ளுவன் காரணமின்றிச் சொல்லவில்லை. அதற்காக விவசாயம் தான் ஒரே வழி என்று கூறவில்லை. தாய் நாட்டில் நாம் எத்தனையோ சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவற்றிற்கான முயற்சியாண்மையும் எம்மிடம் தாராளமாக இருக்கிறது. ஆனால் எமது மனப்பாங்கு அதற்கு இடங்கொடுப்பதில்லை.அதிலிருந்து இருந்து நாம் மாறாவிட்டால் எம்மை எவராலுமே காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்பது தான் நிதர்சனம்.


யார் இந்த மார்க் டக்கன்?

3 பிள்ளைகளின் தந்தையான மார்க் டக்கன் 29 வயது கறுப்பின இளைஞராவார். டொட்டன் ஹாம் பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்களில் இவர் தொடர்புபட்டிருந்ததால் பொலிசாரினால் நன்கு அறியப்பட்டவர். இவருடைய மைத்துனர் ஒருவருடைய கொலையிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாகப் பொலிசார் நம்புகின்றனர்.

லண்டனில் கறுப்பின சமூகத்திடையே காணப்படுகின்ற துப்பாக்கி வன்முறை மற்றும் போதைவஸ்துக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவு மார்க் டக்கனைக் கண்காணித்து வந்துள்ளது. அவர்கள் மார்க் டக்கனைக் கைது செய்யத் திட்டமிட்டனர்.


பிரித்தானியாவில் பொலிசார் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதில்லை. துப்பாக்கிகள் அவசியமெனக் கருதும் பட்சத்தில் ஸ்கொட்லண்ட் யாட் இன் துப்பாக்கிப் பிரிவு வரவழைக்கப்படும்.


மார்க் டக்கன் அறியப்பட்ட ஒரு குற்றவாளியாக இருந்ததாலும் அவர் துப்பாக்கியை தன்னுடன் வைத்திருப்பதாக பொலிஸாரின் புலனாய்வுப்பிரிவு கூறியதால் விசேட துப்பாக்கிப் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டது. சம்பவதினத்தன்று சிறிய டக்சியில் தன் காதலி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மார்க் டக்கனை பொலிசார் பின் தொடர்ந்தனர்.


அதை மார்க் டக்கனும் உணர்ந்தார். உடனேயே தான் பொலிசாரால் பின் தொடரப்படுவதைத் தன் காதலிக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தவும் செய்தார். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் அவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்க் டக்கன் பொலிசாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை என்பதை சுதந்திர பொலிஸ் விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.

அத்துடன் மார்க் டக்கனின் குடும்ப அங்கத்தவர்கள் இக்கலவரத்தைக் கண்டித்திருக்கிறார்கள்.



தூபம் போட்ட இணையத் தொழில் நுட்பம்?


டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களினூடும் பிளாக் பெரி மெசஞ்சர் போன்ற அலைபேசித் தொழில் நுட்பங்களின் உதவியுடனும் கலவரக் காரர்கள் தொடர்புகளை மேற்கொண்டனர். அவர்கள் ஒருங்கிணைந்த கொள்ளைகளையும் கலவரங்களையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதற்கு இந்த இணையத் தொழில் நுட்பம் காரணமாய் அமைந்து விட்டதாக பல தரப்புகளிலிருந்தும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய நபர்களைப் பிடிப்பதற்கு தம்மால் இயன்ற சகல உதவிகளையும் செய்வோம் என பிளாக் பெரி நிறுவனத் தலைவர் உறுதி கூறியிருக்கிறார். சமூக வலைத்தளங்கள் கலவரத்தைத் தூண்டுவதிi; பெரும் பங்களிப்பை ஆற்றியதால் அவற்றைத் தடை செய்யும் யோசனையை கமரூன் முன் வைத்திருக்கிறார்.




உலகம் போகும் போக்கு

எந்த வித பாகுபாடுகளுமின்றி சிறுவர் முதல் பெரியவர் யாவரும் கொள்ளைகளில் ஈடுபட்டமையானது உலகின் போக்கு எதிர்ப்பக்கமாகச் செல்வதையே காட்டி நிற்கிறது. மேலைத்தேய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தில் எவருமே தலையிடுவதில்லை. அதே நிலைமையை பிரித்தானியாவிலும் காணலாம். சட்டம், உரிமை, ஒழுங்கு என்பவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அதிகார வர்க்கம் தீவிரமாக இருக்கிறதோ என்றும் சில வேளைகளில் கருத முடியும். ஆதலால் தான் ஆரம்பத்தில் கடைகள் கொள்ளையிடப்பட்ட போது பொலிசார் தடுக்கவில்லை.
 

கொள்ளையர்கள் மத்தியில் கற்றவர்கள் மற்றவர்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை. வயது வித்தியாசம் இருக்கவில்லை. சிறுவர்கள் விளையாட்டுக்காகக் கொள்ளையடித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பல பொது மக்கள் கலகக் காரரால் தாக்கப்பட்டார்கள். சிலரது ஆடைகள் கூட விட்டுவைக்கப்படவில்லை. 3 பாகிஸ்தானியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.


இவையெல்லாமே அற்பத் தேவைகளுக்காகத்தானா? மானுடம் மரணித்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.



குடிபெயர்ந்த ஆசியர்களின் நிலை என்ன?





பிற நாடுகளிலலிருந்து பிரித்தானியாவிற்குக் குடிபெயர் ந்தவர்களில் கணிசமான தொகையினர் ஆசியர்கள். 2001-2009 வரையான 8 வருட காலத்தில் பிரித்தானியாவின் சனத்தொகை 37 சதவீதத்தால் அதிகரித்தது. அதற்கு குடிபெயர்ந்தோரே காரணம் என அறியப்பட்டுள்ளது. அது அப்படி இருக்க, இந்த கலவரங்களால் இலண்டனில் வசிக்கும் ஆசியர்கள் பெரும் அச்சத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் கடைத்தொகுதிகளை அமைத்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமது கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே பெரும்பாலானோர் காணப்பட்டனர். அத்துடன் 3 பாகிஸ்தானியர்கள் மீது காரை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். அந்த சகோதரர்கள் கொல்லப்பட்ட இடத்திலே இன பேதமின்றி மக்கள் மௌன அஞ்சலி செலுத்து கிறார்கள்


அந்த அச்சத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை என்பதற்கு சிவகரன் கந்தையா என்ற இலங்கைத் தமிழரின் நிலை ஒரு சிறந்த உதாரணம்.


1996 ஆம் ஆண்டிலே குடிபெயர்ந்து அகதி அந்தஸ்தும் பெற்று வாழ்க்க்கையில் மெல்ல மெல்ல உயர்ந்தவர் சிவகரன். ஹக்னீயில் உள்ள அவரது பல்பொருள் அங்காடி சில நிமிடங்களிலே துவம்சம் செய்யப்பட்டது. சம்பவத்தை ஸ்கை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். கடையைக் கொள்ளையடிக்க முடியாமல் போனதால் அடித்து நொறுக்கி விட்டுச்சென்றிருந்தனர் கலகக் காரர்கள். அதனால் சிவ கரனுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 50,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கும் அதிகமாகும்.


"இலண்டன் தான் பாதுகாப்பு என்று கருதி வந்தேன். இன்று எல்லாவற்றையும் இழந்து போய் நிற்கிறேன் .எனது 11 வருட உழைப்பு கணப்பொழுதில் காணாமல் போய் விட்டது. எனது கையில் 25 பென்சுகள் மட்டுமே இருக்கின்றன.வாடிக்கையாளர்களே எனது கடையைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது தான் வருத்தத்திற்குரியது"எனப் புலம்புகிறார் சிவ கரன். 83 ஆடிக் கலவரத்துடன் ஒப்பிடுகையில் இதொன்றும் பெரிதல்லவே எனப் பெரு மூச்சு விட்ட இலங்கையர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


நிரஞ்சனா யோகேஷ் பட்டேல் என்பவரின் கடைத்தொகுதி தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. மனு பாய் என்பவரின் நகைக் கடை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பல இலங்கையரின் கடைகள் துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றன.அவர்கள் எவருக்குமே தமக்கான நட்ட ஈடுகள் கிடைக்குமா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.இவர்களைப் போல இன்னும் எத்தனை ஆசியர்கள் இருக்கிறார்களோ?



வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பு?

பிரித்தானியாவில் வெளி நாட்டு மாணவர்களுக்குப் பஞ்சமில்லை எனலாம். வெளி நாட்டவருக்கோ பிரித்தானியக் கல்வி மீது மோகம். பிரித்தானியாவுக்கோ வருமானம். இரு தரப்பினருமே பரஸ்பரம் நன்மை பெறுவதால் மாணவர்கள் உயர் கல்விக்காக பிரித்தானியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படவிருப்பதால் புதிய பல மாணவர்களும் பிரித்தானியா நோக்கி படையெடுக்க விருக்கிறார்கள். இந்த நிலையில் இக்கலவரங்கள் ஒரு அச்ச நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றன. பிரித்தானியாவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் வெளி நாட்டு மாணவர்களை தமது இருப்பிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாமெனவும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதே வேளை கலகக் காரரின் தாக்குதலில் காயமடைந்த மலேசிய மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளான். தற்போது அவனது உடல் நிலை தேறி வருகிறது. அவனுக்கு பிரித்தானிய அரசு ஆறுதல் செய்தியொன்றையும் அனுப்பியிருந்தது.




முன்னரும் பின்னரும் பொருளாதார நெருக்கடி?

உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் ஆதிக்கத்தின் கீழ் தான் பிரித்தானியாவும் இருக்கிறது. இதை எவருமே மறுக்க முடியாது. அத்தகையதோர் சிக்கலான நிலையில் இந்தக் கலவரங்கள் ஏற்பட்டன. பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. அதே வேளை இந்தக் கலவரங்களால் ஏற்பட்ட சேதம் 200 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களிலும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவாக மதிப்பிடப்பட்டிருக்கும் தொகை 3.6 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாகும். இவையெல்லாம் மீட்கப்படாவிட்டால் பிரித்தானிய மக்கள் மீதான கடன் சுமை அதிகரிக்கும். அது நாட்டை அதளபாதாளத்துக்குள் கொண்டு போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம் .இந்த கலவரம் மற்றும் வன்முறைகளால் தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் அதை மீண்டும் கட்டியெழுப்ப உதவ வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. இந்த துன்பியல் நிகழ்வுகளுக்கு முன்னரே இளைஞரில் ஒரு சாரார் மத்தியில் வேலையின்மை காணப்பட்டது. ஒரு தொழிலை மேற்கொள்வதற்கான திறனோ கல்வியோ அவர்களிடம் காணப்படவில்லை. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. இந்த வன்முறைகள் திறனுடைய, தொழில் புரிபவர்களின் வயிற்றிலும் அடித்துவிட்டுச் சென்றிருக்கின்றன. இந்த கலவரத்தைப் பொறுத்தவரையிலே உள்ளீடாகவும் வெளியீடாகவும் இருப்பது பொருளாதார நெருக்கடியே எனலாம்.

Monday, August 8, 2011

கிழக்கு ஆபிரிக்காவின் தலை விதி:

உலகின் மிகப்பெரிய அகதி முகாம் கென்யாவில்.....
ஆபிரிக்காவின் கொம்பு என வர்ணிக்கப்படுபவை வட கிழக்கு ஆபிரிக்க நாடுகளும் சோமாலிய குடா நாடுமாகும். எரித்ரியா, எதியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளும் இப்பகுதியிலேயே அடங்குகின்றன. ஏறத்தாழ 2,000,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இப்பகுதியில் 100 மில்லியன் பேர் வரை வாழ்கிறார்கள்.

இப்பிராந்தியம் மத்திய கோட்டுக்கு மிக அண்மையில் இருக்கிறது. இப்பிராந்தியத்தைக் கடக்கும் பருவக்காற்றுகள் தம் ஈரப்பற்றை இழந்து உலர் காற்றுக்களாகவே கடக்கின்றன. ஆதலால் இப்பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே இங்கு மனிதர்கள் (ஆதி மனிதர்கள்) வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புராதன காலத்திலே எகிப்து உரோம சாம்ராஜ்யங்களோடு இப்பகுதி அரசுகள் நல்லுறவைப் பேணி வந்தன. உரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் பெரும் பங்கு வகித்தன.

இந்த கொம்புப் பிராந்தியத்தின் எதிர்ப்பக்கத்திலே இஸ்லாம் சமயம் தோன்றிய போது அராபிய குடா நாட்டில் வசித்த உள்ளூர் வர்த்தகர்களும் படகோட்டிகளும் இஸ்லாமியரானார்கள். இஸ்லாம் மதம் தோன்றியதன் ஆரம்ப கால கட்டங்களிலே முஸ்லிம்கள் இந்த கொம்புப் பிராந்தியத்துக்கு குடிபெயர்ந்தார்கள். இப்பிராந்தியத்தின் ஆதிக் குடிகளும் காலத்துக்குக்காலம் மதம் மாறினார்கள்.

பின்னர் இப்பிராந்தியம் மத்திய காலப்பகுதியிலே முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கும் பின்னர் சுயஸ் கால்வாய் வெட்டப்பட்ட பின்னர் மேற்கு ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கும் உட்படுத்தப்பட்டிருந்தது.
காலப்போக்கிலே இப்பிராந்திய நாடுகள் சுதந்திர நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டாலும், அப்பிராந்தியத்தின் கால நிலை காரணமாக உலகின் வேகத்துக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.

எதியோப்பியாவைப் பொறுத்த வரையிலே அதன் 80% பொருளாதாரம் கோப்பி ஏற்றுமதியிலே யே தங்கியிருக்கிறது. சோமாலியாவைப் பொறுத்தவரையிலே வாழைப்பழம் மற்றும் கால் நடை ஏற்றுமதியே முக்கிய இடத்தை வகிக்கிறது.

எவை எப்படி இருந்தாலும் வறட்சி என்பது இந்த நாடுகள் தவிர்க்க முடியாத நிலைமையாக மாறி விட்டது. இப்பிராந்தியத்தின் தலை விதியே வறட்சி தான் என்றாலும் மிகையில்லை. காலத்துக்குக் காலம் வறட்சியை இல்லாதொழிக்க பல நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வேகமாக அதிகரிக்கும் கால் நடைகள், மனிதர்களின் குடித்தொகையின் முன்னே அவை செயலிழந்து போயின எனலாம்.

1983–85, 1991–92 மற்றும் 1998–99 காலப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின. இது இயற்கையின் விளையாட்டோ எனவும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும். ஏனெனில் இயற்கையானது தனது சம நிலை குலைக்கப்படும் போது அதனைச் சீர் செய்ய முயலும். அதற்காக சில அனர்த்தங்களைத் தோற்றுவித்து சம நிலையைச் சீர் செய்யும். கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும் குடித்தொகையைக் கட்டுப்படுத்தத்தான் இயற்கை தன் விளையாட்டைக் காட்டி வருகிறதோ எனவும் எண்ணத்தோன்றும். ஏனெனில் மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டமையே பெருந்தொகை உயிர்கள் பலியானமைக்கு மூல காரணமாகும்.

ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில் ஏலவே அடையாளங்காணப்பட்ட மிகவும் சிக்கலான காலப்பகுதிகளையொட்டிய நிலை தற்போது மீண்டும் உருவாகியிருக்கிறது. கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் பரவியிருக்கும் அக்கொடிய நிலைமை முழு உலகையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது. ஏனெனில் இந் நிலைமையை ஆபிரிக்காவுக்கே உரிய நிலைமையாக எவராலும் பார்க்க முடியவில்லை. மாறாக உலகளாவிய நெருக்கடி ஒன்றுக்கான சமிக்ஞையாகவே பார்க்கின்றனர். கிழக்கு ஆபிரிக்காவில் சமத்துவமின்மை, உணவுப்பாதுகாப்பு, கால நிலை மாற்றம் ஆகியன ஒருங்கே சேர்ந்து நிலை கொண்டுள்ளன என்றாலும் மிகையில்லை.

ஏலவே வறுமையாலும் பாதுகாப்பின்மையாலும் தவித்துப்போயிருந்த கிழக்கு ஆபிரிக்க மக்களை இவ்வாண்டின் (2011) நடுப்பகுதியிலே ஏற்பட்ட கடும் வறட்சி பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. சோமாலியாவின் இரு மாவட்டங்கள் பஞ்ச வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் சோமாலியாவிலிருந்து எதியோப்பியா தாண்டி, வட கென்யா மற்றும் மேற்கிலே சூடான், உகண்டாவின் வட கிழக்கு மாவட்டமான கராமோ வரை இந்த வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது.


இது 1950 இலிருந்தான 60 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சியாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு பட்டினியின் விளிம்பிலே நிற்கிறார்கள்.

கென்யாவின் வடக்கு மாவட்டமான டேர்க்கானாவின் மொத்த சனத்தொகை 850,000 ஆகும். அங்கு 385, 000 சிறுவர்கள் மிக மோசமான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஐநாவின் சிறுவர் நிதியம் உதவிப் பணியில் ஈடுபடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. போஷாக்கின்மை விகிதம் 2010ல் 15 விகிதமாகவும் 2011ல் 37 விகிதமாகவும் உயர்ந்துள்ளது. போஷாக்கின்மை மெதுவான உயிர்க்கொல்லி என்று யூனிசெப் இயக்குநர் அந்தோனி லேக் (Antony Lake) கூறுகிறார். யூனிசெப் செய்த மதிப்பீடுகளின் படி இரண்டு மில்லியன் சிறுவர்கள் ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளில் போசாக்கின்மையால் வாடுகின்றனர். உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால் சிறுவர் உயிரிழப்பு பெருக வாய்ப்பு உள்ளது.

போசாஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட இரண்டு மில்லியன் சிறுவர்களில் 500,000 சிறுவர்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் யூனிசெப் கருதுகிறது. அடுத்த மூன்று மாத காலத்தில் சிறுவர் மற்றும் பெண்களைப் பராமரிப்பதற்கு 31.8 மில்லியன் டொலர் உனடியாகத் தேவை என்று சென்ற வாரம் யூனிசெப் அறைகூவல் விடுத்துள்ளது. மேற்கு நாடுகளும் உதவி நிறுவனங்களும் இந்தத் தொகையைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.

கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியானது மீள மீள உருவாகும் ஒரு நிலைமையாகவே தெரிகிறது. ஏலவே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் போசாக்கின்மை மற்றும் பஞ்ச நிலை ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அந்த அறிகுறிகளுள் கால நிலை தொடர்பிலான காரணிகள், அதிகரித்த எண்ணெய் விலை, வசதிபடைத்தவர்கள் மத்தியில் இறைச்சிக்கு ஏற்பட்ட கேள்வியில் அதிகரிப்பு, விவசாய நிலங்களில் உயிர் எரிபொருளைப் பெறக்கூடிய தாவரங்களைப் பயிரிடத்தொடங்கியமை போன்ற பல விடயங்களும் உள்ளடங்கும்.

பேரழிவொன்று நடந்தால் அதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு இனி வரும் காலங்களிலே அத்தகைய பேரழிவுகள் நடக்கவிருப்பதைத் தவிர்க்கமுயலும் குணம் மனிதனுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. 1983–85, 1991–92 மற்றும் 1998–99 காலப்பகுதிகளில் கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்ட கொடிய வறட்சியை சம்பந்தப்பட்ட தரப்பினர் படிப்பினையாகக் கொண்டு தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டிருக்கலாம். ஆனால் எவரும் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. விளைவாக முன்னையதிலும் கொடிய வறட்சி நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் தன் இராணுவத்தேவைகளுக்கு ஒதுக்கும் நிதியின் 2 சதவீதத்தை விவசாய ஆராய்ச்சிகளுக்கு வழங்குமாறு ஐ. நா பொதுவாகக் கோரியிருந்தது. ஆனால் அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிதியிலே 1/3 பங்கு நிதி தான் கிடைக்கப்பெற்றது.

கடந்த இரு வருடங்களாக கிழக்கு ஆபிரிக்கப் பகுதியில் அதிலும் கொம்பு நாடுகளில் வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் படுத்துவிட்டது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் பாரிய உணவு நெருக்கடி தோன்றியுள்ளது.

இத்துன்பியல் நிலைக்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணம் என அறியப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் கால நிலை மாற்றத்தின் விளைவுகள் பல எதிர்வு கூறப்பட்டன. எதிர்வு கூறப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தசாப்தங்களில் வெப்ப வலயங்களின் வெப்ப நிலை உலகின் சராசரி வெப்ப நிலையின் 3 மடங்குகளாக இருக்கும் எனத்தெரிவிக்கப்படுகிறது. உயர் அந்தீஸ், இமயம் போன்ர நீரைத்தேக்கிவைத்திருக்கும் மலைகளில் இருக்கும் பனி உருகும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆசியாவின் பனிமலைகளால் தான் பல ஆற்றுத்தொகுதிகள் வளம் பெறுகின்றன. அவ்வாற்றுத்தொகுதிகளை நம்பி பல மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் உணவுத்தேவை ஈடு செய்யப்படுகிறது. வெப்ப நிலை அதிகரிக்க, ஆறுகள் கொண்டு செல்லும் நீரின் அளவு குறைவடையும்.உணவுப்பயிர்கள் நீரின்றி பெரும் அழுத்தத்துக்குள்ளாகும். விளைவு உணவுப் பற்றாக்குறையாக வெளிப்படும். இது ஏலவே எதிர்வு கூறப்பட்ட நிலைமையாகும்.

அத்தகையதோர் நிலையையே இன்று கிழக்கு ஆபிரிக்கா எதிர் நோக்கியுள்ளது. இன்று காணப்படும் போக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்தால் நிலைமை விபரீதமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை இது இயற்கையின் நியதி எனச் சுலபமாக விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் கடந்தகால அலட்சியப்படுத்தல்கள், ஒதுக்கல்களினால் ஏற்பட்ட விளைவு தான் இந்த வறட்சி. அதன் உச்சத்தினால், பெரும்பாலான நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

வன்முறையும், உள்நாட்டுப் போரும் சோமாலியாவை உருக்குலைத்து விட்டது. அங்கு இஸ்லாமிய ஷபாப் இயக்கத்துக்கும் பெயரளவிலான அரசாங்கத்துக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள் அனர்த்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. தற்போது 3.7 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். பஞ்ச நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை ஷபாப் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளாகும். சோமாலியாவின் பரிதாப நிலைக்குக் காரணம் என யாவரும் ஒருங்கே சுட்டுவது இந்த ஷபாப் கிளர்ச்க்சியாளர்களைத் தான். சோமாலியாவிலே நடக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் இதே கிளர்ச்சியாளர்கள் தான் தடையாக இருக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக மாறியது.

பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் தமக்குக் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், பிறக்கும் ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் மட்டும் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.வட கென்யாவின் டடாப் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே அப்பிராந்தியத்தில் நிலவும் வறட்சியின் கொடூரத்தைப் படம்பிடித்துக்காட்டப் போதுமானதாகும். 90,000 பேரைக் கொள்ளக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட இந்த முகாமிலே கடந்த சில மாதங்களுக்குள் மக்கள் தொகை 380,000 ஆகி விட்டிருந்தது. அதை விட அங்கு தினமும் சராசரியாக 1300 பேர் வந்து சேர்ந்த படி இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நீரைப் பேணும் நடவடிக்கைகளையும் வறட்சியைத்தாக்குப்பிடிக்கக்கூடிய பயிரினங்களை உருவாக்குவதையும் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதே போல சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய வகையிலே உலக பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். தாழ் காபன் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதிலும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீத நிதியை விவசாயத்துக்கு ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது இலேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாது என்று ஐ.நா. தெரிவிக்கிறது.உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும் என் கிறது ஐ. நா.

21 ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரையிலே பட்டினி நிலை என்பது தேவையற்ற ஒன்று எனலாம். ஆபிரிக்காவில் முன்னைய காலங்களிலும் பட்டினி நிலை ஏற்பத்தான் செய்தது. ஆனால் அந்த நேரங்களில் கிடைத்த சர்வதேச உதவிகள் அவசரகாலத்தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில் அத்தகைய நிலை ஒன்று மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளுக்கு அவ்வுதவி பயன் படுத்தப்படவில்லை. அத்தகைய முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமைக்கான குறிப்பிடத்தகு ஆதாரங்களும் இல்லை. அந்த நீண்ட காலத் திட்டங்கள் தொடர்பிலான ஏற்பாடுகள் அன்றே மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று இந்த அவல நிலை தோன்றியிருக்காது.

இனியாவது சர்வதேச சமூகம் விழிப்படைய வேண்டும். ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளில் காலத்திற்குக் காலம் ஏற்படும் வறட்சியையும், பட்டினிச் சாவையும் தூரநோக்குத் திட்டத்தின் மூலம் சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மழையை வரவழைக்க எம்மால் முடியாவிட்டாலும் வறட்சியால் ஏற்படும் மனித அவலங்களைத் திட்டமிட்டுத் தவிர்க்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியத்தின் (International Fund For Agricultural Development) அதிகாரி ஜோன் கிளீவர் (John Cleaver) கிழக்கு ஆபிரிக்காவின் வறட்சி தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்ச்சி. இந்த அடிப்படையில் நாம் திட்டமிடவேண்டும். என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நீண்ட வறட்சியைத் தாங்கக் கூடிய உணவுப் பயிர்களை நாம் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அது மாத்திரமல்ல நீண்ட வறட்சியைத் தாங்கக் கூடிய கால்நடைகளையும் கால்நடை உணவுப் பயிர்களையும் உருவாக்கினால் தான் நிலமை கட்டுக்குள் வரும் என்றார். அவர் கூறுவதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் , ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளிலுள்ள விவசாய நிலங்கள் உயிர் எரிபொருளை உற்பத்தி செய்ய வல்ல தாவரங்களைப் பயிரிடும் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறு மாற்றும் போது எதிர்காலம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதே வெளிப்படை.

எதிர் பார்த்தோ எதிர் பாராமலோ பட்டினி நிலை தோன்றிவிட்டது. இனியும் கடந்த காலங்களை அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதில் பயனில்லை. அதே வேளை இனியொரு காலமும் இத்தகைய அவலநிலை ஏற்படாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

உலகளாவிய ரீதியிலே தொடரும் நிதி நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள், பட்டினி நிலைமைகள் போன்றன எம்மை எங்கு கொண்டு போய் விடப்போகின்றன என்பதை எவராலும் மதிப்பிட முடியாது.

கிழக்கு ஆபிரிக்காவை, அதுவும் கொம்பு நாடுகளைப் பொறுத்தவரையிலே விவசாயமும் பண்ணை வளர்ப்புமே மக்களின் ஜீவனோபாயமாக இருந்தன. ஆதலால், மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்ட போது அவர்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கான காப்புறுதிகள் எவையுமே அந்த நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால் இனியாவது விவசாயிகளுக்கும் பண்ணைத் தொழிலாளர்களுக்குமான காப்புறுதித்திட்டம் ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது.மழை பொய்த்து அவர்களது தொழிலிலே நட்டம் ஒன்று ஏற்பட்டால் அத்திட்டத்தின் கீழ், அந்த நட்டத்தின் ஒரு பகுதியையாவது ஈடு செய்யக்கூடியதாக இருக்கும்.

அதனுடன் நின்று விடுதல் பயனளிக்காது. அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் போது அதற்கான மாற்றீடுகள் அல்லது பிரதியீடுகளின் தேவையும் அவசியமாகிவிடுகிறது. ஆனால் இக்கருத்தைப் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் இம்மக்களைப் பொறுத்தவரையிலே வாழ்வாதாரம் என்பது தொழில் அல்லது வருவாய்க்குரிய வழி மட்டுமல்ல. அவர்களது வாழ்க்கைப்பாங்கே அந்த வாழ்வாதரத்தையொட்டியதாகத்தான் அமைந்திருக்கிறது. ஆதலால் அவர்கள் பழக்கப்படாத வாழ்வாதரமொன்றை அவர்கள் மீது திணித்தல் நியாயமன்று என்கின்றன வாதங்கள். வாழ்வாதாரம் மாற்றப்படாவிடினும், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வழிகளாவது மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் மறுப்புக் கூற முடியாது.

இங்கு தான் அரசியல் தலை தூக்குகிறது. தளம்பிக்கொண்டிருக்கும் அரசியல் நிலைமைகள் ஒரு னாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து முழு நாட்டையுமே அவல நிலைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் படைத்தவை. அத்தகையதோர் நிலைமையைத்தான் நாம் சோமாலியாவிலே காண்கிறோம். சோமாலிய முரண்பாடுகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அந் நாட்டின் வறுமை, பட்டினி, பஞ்ச நிலையில் பாதியை ஒழித்துவிட முடியும்.

.அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடு சோமாலியா. உலகிலே நட்பு என்று சொல்லும் அளவுக்கு சோமாலியா எந்த நாட்டுடனுமே உறவைப் பேணவில்லை எனலாம். அங்கு சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஆக்க பூர்வமான நீண்ட காலத்தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டாலன்றி சோமாலியாவுக்கு விடிவு ஏற்படாது எனலாம்.

இந்த நீண்ட காலத்தீர்வுகள் எல்லாம் ஆற அமர யோசித்து மெதுவாக அமுல் படுத்தப்பட வேண்டியவை. ஆனாலும் குறுகிய கால நோக்கிலே, பல அவசரகால உதவிகளைச் செய்யவும் நாம் தவறக்கூடாது.

பசிக்கொடுமையில் இருக்கும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்க உணவுப் பொருட்கள் தேவையாக இருக்கிறது. இந்த நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்து செயற்படும் போது பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் இறந்து போயிருப்பர் என்பது நிதர்சனம்.

கிழக்கு ஆபிரிக்காவின் எண்ணெய் வளத்திலே அதிக கரிசனை கொண்ட சர்வதேசம் , மக்களின் அவல நிலை என்று வரும் போது சற்று மந்த கதியிலான போக்கையே கடைப்பிடிக்கிறது. ஆயினும் பல மனிதாபிமான நிறுவனங்களின் உதவியுடன் நிவாரணப்பணிகள் இயன்றளவு சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன.

இந்த கிழக்காபிரிக்க வறட்சி என்பது கடந்த வாரமோ அல்லது கடந்த மாதமோ ஏற்பட்ட விடயமல்ல. கடந்த ஆண்டே அந் நாடுகளில் வறட்சி ஆரம்பித்து விட்டது. ஆனால் எவரும் கண்டு கொள்ளவில்லை. நிலைமை கையை மீறிப்போன பின்னரே அதை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்பதுதான் வருந்துதற்குரிய விடயம்.

முக்கியமான குறிகளாகக் கருதப்படும் இறப்பு வீதம், போஷாக்கின்மை ஆகியவை மட்டுமன்றி உணவுப்பொருட்களின் விலை பற்றியும் நாம் கரிசனை செலுத்த வேண்டும். உணவுப்பொருட்களின் விலை செல்லும் போக்கை ஆராய்ந்தால், எதிர்காலத்தை அதுவே குறி காட்டும்.

இந்த மக்களின் எதிர்காலம் கூட மழையை நம்பித்தான் இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டு ஐப்பசியளவில் பெய்யும் வழக்கமான மழை பெய்தால் தான் , 2012 ஆம் ஆண்டு தை, மாசி மாதங்களில் நிலைமை சுமுகமடையும் என எதிர்பார்க்கலாம். சொன்ன படி ஐப்பசி மாதம் மழை பெய்யாவிடில், கிழக்கு ஆபிரிக்க மக்களின் எதிர்காலத்தை எல்லாம் வல்ல இயற்கையின் கையிலேயே விட்டு விட வேண்டியது தான்.

எங்கோ கிழக்காபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பஞ்ச நிலைமையை எமக்கு எடுத்துச் சொல்வதனால் என்ன பயன் என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எமது நாடும் ஆசிய நாடு தான். உலகில் எந்தவொரு மூலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது ஏதோ ஒரு வழியில் எம்மைப் பாதிக்கும்.

இயற்கை எமக்கு த் தந்திருக்கும் அரிய வளங்களை வீணடித்தால், கொம்பு நாடுகளுக்கு நேர்ந்திருக்கும் நிலைமை நாளை எமக்கும் கூட ஏற்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் பல இங்கும் காணப்படுகின்றன. ஆனால் நாம் அனைவரும் முயன்றால் அத்தைகைய நிலைமை எப்போதுமே ஏற்படாதவாறு எம் வளங்களைப் பேணமுடியும். முயன்று தான் பார்ப்போமே?