Monday, August 8, 2011

கிழக்கு ஆபிரிக்காவின் தலை விதி:

உலகின் மிகப்பெரிய அகதி முகாம் கென்யாவில்.....
ஆபிரிக்காவின் கொம்பு என வர்ணிக்கப்படுபவை வட கிழக்கு ஆபிரிக்க நாடுகளும் சோமாலிய குடா நாடுமாகும். எரித்ரியா, எதியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளும் இப்பகுதியிலேயே அடங்குகின்றன. ஏறத்தாழ 2,000,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இப்பகுதியில் 100 மில்லியன் பேர் வரை வாழ்கிறார்கள்.

இப்பிராந்தியம் மத்திய கோட்டுக்கு மிக அண்மையில் இருக்கிறது. இப்பிராந்தியத்தைக் கடக்கும் பருவக்காற்றுகள் தம் ஈரப்பற்றை இழந்து உலர் காற்றுக்களாகவே கடக்கின்றன. ஆதலால் இப்பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே இங்கு மனிதர்கள் (ஆதி மனிதர்கள்) வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புராதன காலத்திலே எகிப்து உரோம சாம்ராஜ்யங்களோடு இப்பகுதி அரசுகள் நல்லுறவைப் பேணி வந்தன. உரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் பெரும் பங்கு வகித்தன.

இந்த கொம்புப் பிராந்தியத்தின் எதிர்ப்பக்கத்திலே இஸ்லாம் சமயம் தோன்றிய போது அராபிய குடா நாட்டில் வசித்த உள்ளூர் வர்த்தகர்களும் படகோட்டிகளும் இஸ்லாமியரானார்கள். இஸ்லாம் மதம் தோன்றியதன் ஆரம்ப கால கட்டங்களிலே முஸ்லிம்கள் இந்த கொம்புப் பிராந்தியத்துக்கு குடிபெயர்ந்தார்கள். இப்பிராந்தியத்தின் ஆதிக் குடிகளும் காலத்துக்குக்காலம் மதம் மாறினார்கள்.

பின்னர் இப்பிராந்தியம் மத்திய காலப்பகுதியிலே முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கும் பின்னர் சுயஸ் கால்வாய் வெட்டப்பட்ட பின்னர் மேற்கு ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கும் உட்படுத்தப்பட்டிருந்தது.
காலப்போக்கிலே இப்பிராந்திய நாடுகள் சுதந்திர நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டாலும், அப்பிராந்தியத்தின் கால நிலை காரணமாக உலகின் வேகத்துக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.

எதியோப்பியாவைப் பொறுத்த வரையிலே அதன் 80% பொருளாதாரம் கோப்பி ஏற்றுமதியிலே யே தங்கியிருக்கிறது. சோமாலியாவைப் பொறுத்தவரையிலே வாழைப்பழம் மற்றும் கால் நடை ஏற்றுமதியே முக்கிய இடத்தை வகிக்கிறது.

எவை எப்படி இருந்தாலும் வறட்சி என்பது இந்த நாடுகள் தவிர்க்க முடியாத நிலைமையாக மாறி விட்டது. இப்பிராந்தியத்தின் தலை விதியே வறட்சி தான் என்றாலும் மிகையில்லை. காலத்துக்குக் காலம் வறட்சியை இல்லாதொழிக்க பல நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வேகமாக அதிகரிக்கும் கால் நடைகள், மனிதர்களின் குடித்தொகையின் முன்னே அவை செயலிழந்து போயின எனலாம்.

1983–85, 1991–92 மற்றும் 1998–99 காலப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின. இது இயற்கையின் விளையாட்டோ எனவும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும். ஏனெனில் இயற்கையானது தனது சம நிலை குலைக்கப்படும் போது அதனைச் சீர் செய்ய முயலும். அதற்காக சில அனர்த்தங்களைத் தோற்றுவித்து சம நிலையைச் சீர் செய்யும். கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும் குடித்தொகையைக் கட்டுப்படுத்தத்தான் இயற்கை தன் விளையாட்டைக் காட்டி வருகிறதோ எனவும் எண்ணத்தோன்றும். ஏனெனில் மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டமையே பெருந்தொகை உயிர்கள் பலியானமைக்கு மூல காரணமாகும்.

ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில் ஏலவே அடையாளங்காணப்பட்ட மிகவும் சிக்கலான காலப்பகுதிகளையொட்டிய நிலை தற்போது மீண்டும் உருவாகியிருக்கிறது. கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் பரவியிருக்கும் அக்கொடிய நிலைமை முழு உலகையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது. ஏனெனில் இந் நிலைமையை ஆபிரிக்காவுக்கே உரிய நிலைமையாக எவராலும் பார்க்க முடியவில்லை. மாறாக உலகளாவிய நெருக்கடி ஒன்றுக்கான சமிக்ஞையாகவே பார்க்கின்றனர். கிழக்கு ஆபிரிக்காவில் சமத்துவமின்மை, உணவுப்பாதுகாப்பு, கால நிலை மாற்றம் ஆகியன ஒருங்கே சேர்ந்து நிலை கொண்டுள்ளன என்றாலும் மிகையில்லை.

ஏலவே வறுமையாலும் பாதுகாப்பின்மையாலும் தவித்துப்போயிருந்த கிழக்கு ஆபிரிக்க மக்களை இவ்வாண்டின் (2011) நடுப்பகுதியிலே ஏற்பட்ட கடும் வறட்சி பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. சோமாலியாவின் இரு மாவட்டங்கள் பஞ்ச வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் சோமாலியாவிலிருந்து எதியோப்பியா தாண்டி, வட கென்யா மற்றும் மேற்கிலே சூடான், உகண்டாவின் வட கிழக்கு மாவட்டமான கராமோ வரை இந்த வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது.


இது 1950 இலிருந்தான 60 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சியாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு பட்டினியின் விளிம்பிலே நிற்கிறார்கள்.

கென்யாவின் வடக்கு மாவட்டமான டேர்க்கானாவின் மொத்த சனத்தொகை 850,000 ஆகும். அங்கு 385, 000 சிறுவர்கள் மிக மோசமான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஐநாவின் சிறுவர் நிதியம் உதவிப் பணியில் ஈடுபடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. போஷாக்கின்மை விகிதம் 2010ல் 15 விகிதமாகவும் 2011ல் 37 விகிதமாகவும் உயர்ந்துள்ளது. போஷாக்கின்மை மெதுவான உயிர்க்கொல்லி என்று யூனிசெப் இயக்குநர் அந்தோனி லேக் (Antony Lake) கூறுகிறார். யூனிசெப் செய்த மதிப்பீடுகளின் படி இரண்டு மில்லியன் சிறுவர்கள் ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளில் போசாக்கின்மையால் வாடுகின்றனர். உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால் சிறுவர் உயிரிழப்பு பெருக வாய்ப்பு உள்ளது.

போசாஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட இரண்டு மில்லியன் சிறுவர்களில் 500,000 சிறுவர்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் யூனிசெப் கருதுகிறது. அடுத்த மூன்று மாத காலத்தில் சிறுவர் மற்றும் பெண்களைப் பராமரிப்பதற்கு 31.8 மில்லியன் டொலர் உனடியாகத் தேவை என்று சென்ற வாரம் யூனிசெப் அறைகூவல் விடுத்துள்ளது. மேற்கு நாடுகளும் உதவி நிறுவனங்களும் இந்தத் தொகையைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.

கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியானது மீள மீள உருவாகும் ஒரு நிலைமையாகவே தெரிகிறது. ஏலவே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் போசாக்கின்மை மற்றும் பஞ்ச நிலை ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அந்த அறிகுறிகளுள் கால நிலை தொடர்பிலான காரணிகள், அதிகரித்த எண்ணெய் விலை, வசதிபடைத்தவர்கள் மத்தியில் இறைச்சிக்கு ஏற்பட்ட கேள்வியில் அதிகரிப்பு, விவசாய நிலங்களில் உயிர் எரிபொருளைப் பெறக்கூடிய தாவரங்களைப் பயிரிடத்தொடங்கியமை போன்ற பல விடயங்களும் உள்ளடங்கும்.

பேரழிவொன்று நடந்தால் அதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு இனி வரும் காலங்களிலே அத்தகைய பேரழிவுகள் நடக்கவிருப்பதைத் தவிர்க்கமுயலும் குணம் மனிதனுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. 1983–85, 1991–92 மற்றும் 1998–99 காலப்பகுதிகளில் கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்ட கொடிய வறட்சியை சம்பந்தப்பட்ட தரப்பினர் படிப்பினையாகக் கொண்டு தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டிருக்கலாம். ஆனால் எவரும் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. விளைவாக முன்னையதிலும் கொடிய வறட்சி நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் தன் இராணுவத்தேவைகளுக்கு ஒதுக்கும் நிதியின் 2 சதவீதத்தை விவசாய ஆராய்ச்சிகளுக்கு வழங்குமாறு ஐ. நா பொதுவாகக் கோரியிருந்தது. ஆனால் அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிதியிலே 1/3 பங்கு நிதி தான் கிடைக்கப்பெற்றது.

கடந்த இரு வருடங்களாக கிழக்கு ஆபிரிக்கப் பகுதியில் அதிலும் கொம்பு நாடுகளில் வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் படுத்துவிட்டது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் பாரிய உணவு நெருக்கடி தோன்றியுள்ளது.

இத்துன்பியல் நிலைக்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணம் என அறியப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் கால நிலை மாற்றத்தின் விளைவுகள் பல எதிர்வு கூறப்பட்டன. எதிர்வு கூறப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தசாப்தங்களில் வெப்ப வலயங்களின் வெப்ப நிலை உலகின் சராசரி வெப்ப நிலையின் 3 மடங்குகளாக இருக்கும் எனத்தெரிவிக்கப்படுகிறது. உயர் அந்தீஸ், இமயம் போன்ர நீரைத்தேக்கிவைத்திருக்கும் மலைகளில் இருக்கும் பனி உருகும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆசியாவின் பனிமலைகளால் தான் பல ஆற்றுத்தொகுதிகள் வளம் பெறுகின்றன. அவ்வாற்றுத்தொகுதிகளை நம்பி பல மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் உணவுத்தேவை ஈடு செய்யப்படுகிறது. வெப்ப நிலை அதிகரிக்க, ஆறுகள் கொண்டு செல்லும் நீரின் அளவு குறைவடையும்.உணவுப்பயிர்கள் நீரின்றி பெரும் அழுத்தத்துக்குள்ளாகும். விளைவு உணவுப் பற்றாக்குறையாக வெளிப்படும். இது ஏலவே எதிர்வு கூறப்பட்ட நிலைமையாகும்.

அத்தகையதோர் நிலையையே இன்று கிழக்கு ஆபிரிக்கா எதிர் நோக்கியுள்ளது. இன்று காணப்படும் போக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்தால் நிலைமை விபரீதமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை இது இயற்கையின் நியதி எனச் சுலபமாக விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் கடந்தகால அலட்சியப்படுத்தல்கள், ஒதுக்கல்களினால் ஏற்பட்ட விளைவு தான் இந்த வறட்சி. அதன் உச்சத்தினால், பெரும்பாலான நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

வன்முறையும், உள்நாட்டுப் போரும் சோமாலியாவை உருக்குலைத்து விட்டது. அங்கு இஸ்லாமிய ஷபாப் இயக்கத்துக்கும் பெயரளவிலான அரசாங்கத்துக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள் அனர்த்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. தற்போது 3.7 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். பஞ்ச நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை ஷபாப் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளாகும். சோமாலியாவின் பரிதாப நிலைக்குக் காரணம் என யாவரும் ஒருங்கே சுட்டுவது இந்த ஷபாப் கிளர்ச்க்சியாளர்களைத் தான். சோமாலியாவிலே நடக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் இதே கிளர்ச்சியாளர்கள் தான் தடையாக இருக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக மாறியது.

பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் தமக்குக் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், பிறக்கும் ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் மட்டும் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.வட கென்யாவின் டடாப் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே அப்பிராந்தியத்தில் நிலவும் வறட்சியின் கொடூரத்தைப் படம்பிடித்துக்காட்டப் போதுமானதாகும். 90,000 பேரைக் கொள்ளக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட இந்த முகாமிலே கடந்த சில மாதங்களுக்குள் மக்கள் தொகை 380,000 ஆகி விட்டிருந்தது. அதை விட அங்கு தினமும் சராசரியாக 1300 பேர் வந்து சேர்ந்த படி இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நீரைப் பேணும் நடவடிக்கைகளையும் வறட்சியைத்தாக்குப்பிடிக்கக்கூடிய பயிரினங்களை உருவாக்குவதையும் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதே போல சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய வகையிலே உலக பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். தாழ் காபன் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதிலும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீத நிதியை விவசாயத்துக்கு ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது இலேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாது என்று ஐ.நா. தெரிவிக்கிறது.உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும் என் கிறது ஐ. நா.

21 ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரையிலே பட்டினி நிலை என்பது தேவையற்ற ஒன்று எனலாம். ஆபிரிக்காவில் முன்னைய காலங்களிலும் பட்டினி நிலை ஏற்பத்தான் செய்தது. ஆனால் அந்த நேரங்களில் கிடைத்த சர்வதேச உதவிகள் அவசரகாலத்தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில் அத்தகைய நிலை ஒன்று மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளுக்கு அவ்வுதவி பயன் படுத்தப்படவில்லை. அத்தகைய முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமைக்கான குறிப்பிடத்தகு ஆதாரங்களும் இல்லை. அந்த நீண்ட காலத் திட்டங்கள் தொடர்பிலான ஏற்பாடுகள் அன்றே மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று இந்த அவல நிலை தோன்றியிருக்காது.

இனியாவது சர்வதேச சமூகம் விழிப்படைய வேண்டும். ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளில் காலத்திற்குக் காலம் ஏற்படும் வறட்சியையும், பட்டினிச் சாவையும் தூரநோக்குத் திட்டத்தின் மூலம் சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மழையை வரவழைக்க எம்மால் முடியாவிட்டாலும் வறட்சியால் ஏற்படும் மனித அவலங்களைத் திட்டமிட்டுத் தவிர்க்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியத்தின் (International Fund For Agricultural Development) அதிகாரி ஜோன் கிளீவர் (John Cleaver) கிழக்கு ஆபிரிக்காவின் வறட்சி தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்ச்சி. இந்த அடிப்படையில் நாம் திட்டமிடவேண்டும். என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நீண்ட வறட்சியைத் தாங்கக் கூடிய உணவுப் பயிர்களை நாம் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அது மாத்திரமல்ல நீண்ட வறட்சியைத் தாங்கக் கூடிய கால்நடைகளையும் கால்நடை உணவுப் பயிர்களையும் உருவாக்கினால் தான் நிலமை கட்டுக்குள் வரும் என்றார். அவர் கூறுவதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் , ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளிலுள்ள விவசாய நிலங்கள் உயிர் எரிபொருளை உற்பத்தி செய்ய வல்ல தாவரங்களைப் பயிரிடும் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறு மாற்றும் போது எதிர்காலம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதே வெளிப்படை.

எதிர் பார்த்தோ எதிர் பாராமலோ பட்டினி நிலை தோன்றிவிட்டது. இனியும் கடந்த காலங்களை அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதில் பயனில்லை. அதே வேளை இனியொரு காலமும் இத்தகைய அவலநிலை ஏற்படாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

உலகளாவிய ரீதியிலே தொடரும் நிதி நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள், பட்டினி நிலைமைகள் போன்றன எம்மை எங்கு கொண்டு போய் விடப்போகின்றன என்பதை எவராலும் மதிப்பிட முடியாது.

கிழக்கு ஆபிரிக்காவை, அதுவும் கொம்பு நாடுகளைப் பொறுத்தவரையிலே விவசாயமும் பண்ணை வளர்ப்புமே மக்களின் ஜீவனோபாயமாக இருந்தன. ஆதலால், மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்ட போது அவர்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கான காப்புறுதிகள் எவையுமே அந்த நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால் இனியாவது விவசாயிகளுக்கும் பண்ணைத் தொழிலாளர்களுக்குமான காப்புறுதித்திட்டம் ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது.மழை பொய்த்து அவர்களது தொழிலிலே நட்டம் ஒன்று ஏற்பட்டால் அத்திட்டத்தின் கீழ், அந்த நட்டத்தின் ஒரு பகுதியையாவது ஈடு செய்யக்கூடியதாக இருக்கும்.

அதனுடன் நின்று விடுதல் பயனளிக்காது. அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் போது அதற்கான மாற்றீடுகள் அல்லது பிரதியீடுகளின் தேவையும் அவசியமாகிவிடுகிறது. ஆனால் இக்கருத்தைப் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் இம்மக்களைப் பொறுத்தவரையிலே வாழ்வாதாரம் என்பது தொழில் அல்லது வருவாய்க்குரிய வழி மட்டுமல்ல. அவர்களது வாழ்க்கைப்பாங்கே அந்த வாழ்வாதரத்தையொட்டியதாகத்தான் அமைந்திருக்கிறது. ஆதலால் அவர்கள் பழக்கப்படாத வாழ்வாதரமொன்றை அவர்கள் மீது திணித்தல் நியாயமன்று என்கின்றன வாதங்கள். வாழ்வாதாரம் மாற்றப்படாவிடினும், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வழிகளாவது மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் மறுப்புக் கூற முடியாது.

இங்கு தான் அரசியல் தலை தூக்குகிறது. தளம்பிக்கொண்டிருக்கும் அரசியல் நிலைமைகள் ஒரு னாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து முழு நாட்டையுமே அவல நிலைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் படைத்தவை. அத்தகையதோர் நிலைமையைத்தான் நாம் சோமாலியாவிலே காண்கிறோம். சோமாலிய முரண்பாடுகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அந் நாட்டின் வறுமை, பட்டினி, பஞ்ச நிலையில் பாதியை ஒழித்துவிட முடியும்.

.அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடு சோமாலியா. உலகிலே நட்பு என்று சொல்லும் அளவுக்கு சோமாலியா எந்த நாட்டுடனுமே உறவைப் பேணவில்லை எனலாம். அங்கு சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஆக்க பூர்வமான நீண்ட காலத்தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டாலன்றி சோமாலியாவுக்கு விடிவு ஏற்படாது எனலாம்.

இந்த நீண்ட காலத்தீர்வுகள் எல்லாம் ஆற அமர யோசித்து மெதுவாக அமுல் படுத்தப்பட வேண்டியவை. ஆனாலும் குறுகிய கால நோக்கிலே, பல அவசரகால உதவிகளைச் செய்யவும் நாம் தவறக்கூடாது.

பசிக்கொடுமையில் இருக்கும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்க உணவுப் பொருட்கள் தேவையாக இருக்கிறது. இந்த நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்து செயற்படும் போது பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் இறந்து போயிருப்பர் என்பது நிதர்சனம்.

கிழக்கு ஆபிரிக்காவின் எண்ணெய் வளத்திலே அதிக கரிசனை கொண்ட சர்வதேசம் , மக்களின் அவல நிலை என்று வரும் போது சற்று மந்த கதியிலான போக்கையே கடைப்பிடிக்கிறது. ஆயினும் பல மனிதாபிமான நிறுவனங்களின் உதவியுடன் நிவாரணப்பணிகள் இயன்றளவு சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன.

இந்த கிழக்காபிரிக்க வறட்சி என்பது கடந்த வாரமோ அல்லது கடந்த மாதமோ ஏற்பட்ட விடயமல்ல. கடந்த ஆண்டே அந் நாடுகளில் வறட்சி ஆரம்பித்து விட்டது. ஆனால் எவரும் கண்டு கொள்ளவில்லை. நிலைமை கையை மீறிப்போன பின்னரே அதை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்பதுதான் வருந்துதற்குரிய விடயம்.

முக்கியமான குறிகளாகக் கருதப்படும் இறப்பு வீதம், போஷாக்கின்மை ஆகியவை மட்டுமன்றி உணவுப்பொருட்களின் விலை பற்றியும் நாம் கரிசனை செலுத்த வேண்டும். உணவுப்பொருட்களின் விலை செல்லும் போக்கை ஆராய்ந்தால், எதிர்காலத்தை அதுவே குறி காட்டும்.

இந்த மக்களின் எதிர்காலம் கூட மழையை நம்பித்தான் இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டு ஐப்பசியளவில் பெய்யும் வழக்கமான மழை பெய்தால் தான் , 2012 ஆம் ஆண்டு தை, மாசி மாதங்களில் நிலைமை சுமுகமடையும் என எதிர்பார்க்கலாம். சொன்ன படி ஐப்பசி மாதம் மழை பெய்யாவிடில், கிழக்கு ஆபிரிக்க மக்களின் எதிர்காலத்தை எல்லாம் வல்ல இயற்கையின் கையிலேயே விட்டு விட வேண்டியது தான்.

எங்கோ கிழக்காபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பஞ்ச நிலைமையை எமக்கு எடுத்துச் சொல்வதனால் என்ன பயன் என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எமது நாடும் ஆசிய நாடு தான். உலகில் எந்தவொரு மூலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது ஏதோ ஒரு வழியில் எம்மைப் பாதிக்கும்.

இயற்கை எமக்கு த் தந்திருக்கும் அரிய வளங்களை வீணடித்தால், கொம்பு நாடுகளுக்கு நேர்ந்திருக்கும் நிலைமை நாளை எமக்கும் கூட ஏற்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் பல இங்கும் காணப்படுகின்றன. ஆனால் நாம் அனைவரும் முயன்றால் அத்தைகைய நிலைமை எப்போதுமே ஏற்படாதவாறு எம் வளங்களைப் பேணமுடியும். முயன்று தான் பார்ப்போமே?


1 comment:

saarvaakan said...

வணக்கம் சகோ,
அருமையான பதிவு,
/ இயற்கை எமக்கு த் தந்திருக்கும் அரிய வளங்களை வீணடித்தால், கொம்பு நாடுகளுக்கு நேர்ந்திருக்கும் நிலைமை நாளை எமக்கும் கூட ஏற்படலாம். /
இதை நம்மை ஆளுபவர்கள் புரிந்து கொண்டால் நல்லது.இயற்கையை புரிந்து அதற்கேற்ற‌ வாழ்வாதாரங்களின் அடிப்ப்டையில் பொருளாதாரம் கட்டப்படவேண்டும். நம் நுகர்வு கலாச்சாரமான‌து மாற வேண்டும். சோமாலியாவில் இப்பிரச்சினை தீரவும், இந்நிலை திரும்பாமல் இருக்க உலக் நாடுகள் ஆவண செய்ய வேன்டும்.
நன்றி.

Post a Comment