Saturday, June 18, 2011

செவ்வாய் கிரகவாசிகள் என்றும் இளமையானவர்கள்!


செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்குமா? உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்குமா என போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் செவ்வாய்க்கிரக வாசிகள் பற்றிய தகவல்களை அடுக்கடுக்காக வெளியிடுகிறான் பொறிஸ்கா என்ற ரஷ்யச் சிறுவன். அவன் கூறும் தகவல்கள் உண்மையாக இருந்தால், எமது பூமியும் இன்றைய செவ்வாய் கிரகம் போல் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லையோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.
பிறந்த குழந்தை ஒன்றுக்கு 15 நாட்களிலே தலையைத் தூக்க முடியுமா? நான்கே மாதங்களாகும் போது பாப (அம்மம்மா ரஷ்ய மொழி) என அழைக்க முடியுமா? ஏழு மாதங்களில் ‘எனக்கு ஒரு ஆணி வேண்டும்!’ எனக் கேட்க முடியுமா? ஒரு வயதிலே எழுத்துக்களைப் படித்து ஒன்றரை வயதில் ஒரு பத்திரிகையை வாசிக்க முடியுமா? இரண்டரை வயதிலே வண்ண ஓவியந் தீட்ட முடியுமா?
இவை யாவற்றையும் பொறிஸ்கா செய்திருக்கின்றான் என்றால் ஆச்சரியமாக இல்லையா? இவையெல்லாம் வழக்கமாக எம் மூளையில் பதியப்படும் தகவல்களின் அடிப்படையில் நடந்தவையாக தெரியவில்லை. ஆனால் நடந்தது உண்மைதான் என்கிறார்கள் பொறிஸ்காவின் பெற்றோர். அவனுக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்து தான் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் என்று கூறி விஞ்ஞான உலகையே வியப்பில்ஆழ்த்தியிருக்கிறான், பொறிஸ்கா.

அவன் யார் தெரியுமா? ரஷ்யாவில் சைரினோவிஸ்க் என்ற நகரத்தில் 1996, ஜனவரி 11 ஆம் திகதி பிறந்தவன்.அவன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகள் புதிராக இருப்பதாகக் கூறுகின்றனர் பெற்றோர். யாரும் கற்றுக் கொடுக்காமலே அவனுக்கு அசாத்திய ஆற்றல்கள் கிடைத்திருக்கின்றன.

அவனை இரண்டு வயதில் பாலர் பாடசாலையில் சேர்த்த போது அவனது மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாக இருந்ததாக ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். பாடசாலைக்கு அனுப்பினால் ஆசிரியரிடம் எழுந்து ‘நீங்கள் கற்பிப்பது தவறு’ என்று சுட்டிக்காட்டி இருக்கிறான்.
தாமரை வடிவிலே சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம் பற்றியும், ஏனைய நாகரிகங்கள், கோள் தொகுதிகள் பற்றியும் பரபரப்பாக தெளிவாக விபரிக்கின்றான். இரண்டு வயதில் இருந்தே அவன் அப்படிக் கூறுவது தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

தான் செவ்வாய்க் கிரகத்திலே வாழ்ந்ததாகவும், அங்கே உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை இருந்தது எனவும் அக்கிரகம் வரலாறு காணாத அனர்த்தமொன்றைச் சந்தித்தாலும் இன்னும் நிலைத்து நிற்கிறது எனவும் கூறுகிறான்.செவ்வாய்க் கிரகம் சந்தித்த பேரனர்த்தத்தால் அதன் வளி மண்டலம் அழிந்து போய்விட்டதாகவும் நிலத்துக்குக் கீழ் இருக்கும் நகரங்களில் சில கிரக வாசிகள் இன்னும் வசிப்பதாகவும் கூறுகிறான் பொறிஸ்கா. தான் அங்கு வாழும் காலத்தில் வர்த்தக மற்றும் விஞ்ஞான ஆய்வுக்காக அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதாகவும் கூறுகிறான்.
தான் ஒரு விண்கலத்தின் விமானியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறான்.
இவையெல்லாம் நடந்தது லெமூரிய நாகரிக காலத்தில் எனவும் தனது லெமூரிய நண்பன் தன் கண் முன்னாலேயே இறந்து போவதைத் தான் கண்டதாகவும் கூறுகிறான் பொறிஸ்கா.

‘பூமியிலே ஒரு பேரனர்த்தம் நிகழ்ந்தது. மலைகள் வெடித்துச் சிதறின. பாரிய கண்டம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து நீரினுள் மூழ்கியது. பாரிய கல் ஒன்று எனது லெமூரிய நண்பன் இருந்த கட்டடத்தின் மீது விழுந்தது. என் கண் முன்னாலேயே அவன் இறந்துபோனான். தற்போது பூமியில் மீண்டும் நாம் இருவரும் சந்திக்க வேண்டும்’ என்று லெமூரியா கண்ட அழிவு அண்மையில் நடந்தது போல பரபரப்பாக விபரிக்கிறான் அந்தச் சிறுவன்.
ஒரு நாள் பொறிஸ்காவின் தாய் அழிந்துபோன லெமூரியா கண்டம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கி வந்தார். அதைப் பார்த்த பொறிஸ்காவின் கண்கள் அகல விரிந்தன. லெமூரியன்கள் தொடர்பான ஓவியங்களையும் திபெத்திய மேட்டு நிலங்களின் புகைப்படங்களையும் ஆர்வமாகப் பார்த்தான் பொறிஸ்கா.
‘லெமூரியாக் கண்டம் அழிந்து 800,000 வருடங்களாகிவிட்டன. அது உனக்கு தெரியுமா?’ என பேராசிரியர் ஒருவர் வினவிய போது ‘ஆம் எனக்கு ஞாபகமிருக்கிறது; ஆனால் இங்கு எவரும் இதுபற்றி எனக்கு சொல்லவில்லை’ என மிகவும் சகஜமாகப் பதிலளிக்கிறான் பொறிஸ்கா.
பெரிய பேராசிரியர்களோடு கூட மிகச் சரளமாக உரையாடுகிறான். அவர்கள் பல்லாண்டு காலம் ஆராய்ந்து கண்டறிந்த விடயங்களை எல்லாம் மிகச் சுலபமாக எடுத்துரைக்கிறான்.

புதைகுழிகள் மற்றும் பிரமிட்டுக்கள் பற்றிய புத்தகமொன்றை அவன் வாசிக்க ஆரம்பித்த போதுதான் பல சுவாரசியமான விடயங்கள் வெளிப்பட்டன.‘சியொப்ஸின் பிரமிட்டை ஆராய்வதால் எந்த அறிவும் கிடைக்காது. அதற்குப் பதிலாக வேறொரு பிரமிட்டை ஆராய வேண்டும். அந்த பிரமிட்டை இன்னும் எவரும் கண்டுபிடிக்கவில்லை. மனிதத்தலை சிங்க உடம்பு எனக் காட்சி தரும் ஸ்பின்க்ஸ் பிரமிட்டுக்கள் மனித வாழ்வின் இரகசியங்கள் பல புதைந்திருக்கின்றன. அதற்கான திறவுகோல் அந்த உருவத்தின் காதுப் பகுதியில் இருப்பது போல் தெரிகிறது’ என விபரிக்கிறான் பொலஸ்கா.
மாய நாகரிகம் பற்றியும் கூறுகிறான். தற்போது பூமியிலே விசேட ஆற்றல்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கத் தொடங்கியமைக்கு காரணமும் கூறுகிறான். பூமியிலே புதிய மாற்றங்கள் நிகழப் போவதாகவும் அதற்கு பூமி வாசிகளின் மன நிலைக்கு அப்பால் புதிய அறிவொன்று தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகின்றான். முனைவுகள் இடம்மாறலாம். பூமியிலே ஒரு பேரனர்த்தங்கள் நிகழும். 2013 அளவில் நடக்க இருப்பது மிகவும் பெரியதாக இருக்கும்’ என்கிறான்.
‘இதற்காக எல்லாம் நான் பயப்படவில்லை. நாங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எங்களைப் போன்ற பலர் செவ்வாய்க் கிரகத்தில் வாழந்தார்கள். அங்கு பெரும் அணு ஆயுதப் போரொன்று நடந்தது. அதில் யாவுமே எரிந்து போயின. வெகு சிலர் மட்டுமே தப்பித்தார்கள். வீடுகளைக் கட்டினார்கள். புதிய ஆயுதங்களை உருவாக்கினார்கள். அங்கும் கண்டங்கள் இடம் மாறின. செவ்வாய் வாசிகள் காபனீரொட்சைட்டையே சுவாசிப்பார்கள். ஆனால் பூமிக்கு வந்தால் இந்த வளியைச் சுவாசிப்போம்.

உண்மையில் எமக்கு இந்த வளியைச் சுவாசிக்க விருப்பமில்லை. ஏனெனில் அதுதான் மூப்படைதலுக்கு வழிவகுக்கிறது. செவ்வாய் வாசிகள் எப்போதும் இளமையாக இருப்பார்கள். அங்கே நாங்கள் ஒரு விசேட கண்ணாடியை அணிவோம். எப்போதும் சண்டை பிடிப்போம்’
‘ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் செவ்வாயில் ஒரு நிலையம் இருக்கிறது. அது உண்மையில் அழிக்கப்பட வேண்டும். செவ்வாய் மீண்டும் பழைய நிலைமை அடைவதற்கு அந்த நிலையமே தடையாக இருக்கிறது. நாங்கள் அதற்கு அருகில் இருந்திருக்கிறோம்’ என்று சுவைபட விபரிக்கிறான் பொறிஸ்கா.செவ்வாயில் தரையிறங்கும் பூமியின் விண் கலங்கள் செயலிழந்து போவதற்கும் பழுதடைவதற்கும் என்ன காரணம்?’ என்று போறிசிடம் வினவினார் பேராசிரியர் ஒருவர்.
செவ்வாயிலிருந்து ஒரு சமிக்ஞை வந்தபடி இருக்கிறது. அது விண் கலங்களைச் செயலிழக்கச்செய்கிறது என உறுதிப்படக் கூறுகிறான் பொறிஸ்கா.
பிரபல பெளதிகவியல் விஞ்ஞானியாக ஸ்டீபன் ஹொக்கின்ஸ் வேற்றுக் கிரக வாசிகள் பற்றி குறிப்பிட்டிருந்த விடயத்தையும் இங்கு நினைவுபடுத்துதல் வேண்டும்.
வேற்றுக் கிரகவாசிகள் என்பது பொய்யல்ல. பூமியிலிருந்து அவர்களைத் தொடர்புகொள்ள முயல்வது மிகவும் ஆபத்தானது. அது எமது இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுப்பது போலாகிவிடும் என அண்மையில் ஸ்டீபன் ஹொக்கின்ஸ் எச்சரித்திருந்தார்.இனங்காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO’s) அல்லது பறக்கும் தட்டுக்களை வரைபடம் வரைந்து விபரிக்கிறான் பொறிஸ்கா. அவற்றில் ஆறு படைகள் இருப்பதகாவும் அவற்றின் அளவுகளை சதவீத அடிப்படையிலும் கூறுகிறான். அவற்றைக் கேட்டுத் திகைத்துப் போய் நிற்கிறார்கள் பேராசிரியர்கள்.பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துபோன ப்ரொசெர்பைன் என்ற கோளைப் பற்றியும் அது அழிந்து போன விதம் பற்றியும் கோள்கள் அழிந்து போவதைத் தாம் செவ்வாயிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூட பொறிஸ்கா கூறுகிறான்.பூமியிலுள்ள மக்கள் எதற்காகத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்றும் விபரிக்கிறான் பொறிஸ்கா. அவன் கூறும் விடயங்களை எவராலும் மறுக்க முடியவில்ல¨.‘சரியாக வாழாததாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாததாலுமே பூமியிலுள்ள மக்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்.
மற்றவரின் விதியிலே ஒருநாளும் தலையிடக் கூடாது. உங்கள் பூரணத்துவத்தை சிதைக்கவோ அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. அபிவிருத்தி வட்டத்தை முடித்துக்கொண்டு அடுத்த பரிமாணத்துக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும். மக்கள் பரிவுள்ளவர்களாக மாற வேண்டும். யாரும் உங்களை அடித்தால் அதற்காக அவர்கள் சங்கடப்பட வேண்டும். உங்களை அவமானப்படுத்தினால் நீங்களே சென்று மன்னிப்பு கேளுங்கள். அவர்கள் உங்களை வெறுத்தாலும் நீங்கள் அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு, பரிவு, மன்னிப்புடன் இணைந்த உறவுதான் மக்களுக்கு முக்கியமானது. லெமூரியர்கள் அழிந்ததற்குக் கூட அதுதான் காரணம்’ என்கிறான் பொறிஸ்கா.
செவ்வாயிலே தண்ணீர்ப் பிரச்சினை ஏற்பட்டதால் விண் கலங்களில் பூமிக்கு வந்து தண்ணீர் எடுத்துச்சென்றதாகக் குறிப்பிடுகின்றான் பொறிஸ்கா. செவ்வாய் கிரக வாசிகள் லெமூரியர்களைப் போல உயரமானவர்கள் என்றும் கூறுகிறான்.

ஆனால் சமூகம் பொறிஸ்காவை அங்கீகரிக்க மறுக்கிறது. இதனாலே அவனது வாழ்க்கை சிக்கலானதாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் விஞ்ஞானம் கூட அவன் ஒரு வித்தியாசமான சிறுவன் என்பதை நிரூபிக்கத் தவறவில்லை. பொறிஸ்காவை சூழ இருக்கும் ஒளி வட்டமானது அவனது வயதை ஒத்த ஏனைய சிறுவர்களினதைவிடச் செறிந்ததாக வித்தியாசமானதாக காணப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீயசக்திகள் எவையும் தடுக்காவிட்டால் அவன் பூமிக்கு வந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வான் என நம்புகின்றனர் பேராசிரியர்கள். பொறிஸ்கா போன்றவர்களை இன்டிகோ ((INDIGO) சிறுவர்கள் என அழைப்பர். அவர்கள் சாதாரண மனிதர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள சக்திகளுடன் புவிச்சமூகத்தினுள் உள் நுழைக்கப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவர்களுக்குரிய இடம் எது என்பது இன்னும் கேள்விக்குரியாகவே இருக்கின்றது. ஆனால் இன்டிகோ சிறுவர்களை ஒருபோது புறக்கணிக்க முடியாது என்பது மட்டுமே உண்மையாகும்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பூமியில் இன்டிகோ சிறுவர்கள் பிறந்த படிதான் இருக்கிறார்கள். இரண்டாம் உலக மயா யுத்தத்தின் பின் குறிப்பிடத்தக்களவு இன்டிகோ குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இன்று ஏறத்தாழ 2, 3 சந்ததிகளைச் சேர்ந்த அத்தகைய 2000 பேர் உயிர் வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை பல் பரிமாணங்களையுடையது. பூமியில் பிறந்த மனிதர்கள் முப்பரிமாண உயிரினங்கள் என அழைக்கப்படுகின்றார் கள். அவர்கள் உலகியலுக் குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களது அறியும் ஆற்றலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.
அந்த அறியும் ஆற்றல் திறக்கப்பட்டால்தான் மனிதன் முப்பரிமாண உலகைக் கடந்து உயர் பரிமாணங்களுக்குள் நுழைய முடியும்.
ஆனால் இந்த இன்டிகோ சிறுவர்களே பல் பரிமாண ஆற்றலுக்கான திறவுகோலுடன் பிறக்கிறார்கள். அவர்கள் முப்பரிமாண உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் அவர்களது அறிவாற்றல் உணர் நிலை நான்காவது பரிமாணத்திலே இருக்கிறது. அதேபோல் ஐந்தாவது பரிமாணத்துக்குள் நுழையும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கிறது.

 உணர்நிலையானது நான்காவது பரிமாணத்தினுள் இருக்கும் போது பிரபஞ்ச ஒற்றுமை பற்றி அறிந்திருப்பார்கள். அது ஒன்றுபட்ட தன்மையைக் குறிக்கும். நாம் யாவரும் ஒருவரே. நாம் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கிறோம். ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு யாவரையும் பாதிக்கும். ஒருவரை விட மற்றவர் மேலானவரல்ல என்ற உண்மையை அறிந்து அதன் வழி நடப்பர். இன்டிகோ சிறுவர்களிடம் இந்த விழிப்புணர்வு இருக்கிறது. அதை பொறிஸ்காவின் கூற்றும் நிரூபிக்கிறது. அந்த விழிப்புணர்வு தான் ஐந்தவாது பரிமாணத்துக்கான திறவு கோலாகிறது. குறைந்த பரிமாணத்தில் இருக்கும் உயிரினங்களுக்கு ஐந்தாம் பரிமாணம் பற்றி அறியும் ஆற்றல் இருக்காது. இன்டிகோ சிறுவர்களால் அப்படியே தொடர்ந்து உயர் பரிமாணங் களுக்குச் செல்ல முடியும். பிரபஞ்சம் என்பது அற்புதங்கள் நிறைந்தது. அதை அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட மறுக்கவில்லை. சுயநலமற்ற அன்பு என்ற ஒரே மந்திரம் மட்டும் தான் பெருந்துன்பங்களிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றும் ஒரே ஆயுதம் என்பதை நாம் உணரும் வரை எமக்கு உய்வில்லை என்ற ஒன்றே நிதர்சனமாகும்.


மூலம் : ரஷ்ய பேராசிரியர் கென்னடி பெலிமோவின் ஆய்வுக் குறிப்பு (2004)

No comments:

Post a Comment