உலக சுற்றாடல் தினம் இன்று
உலகம் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறதோ அதைவிட இன்னும் வேகமாக மாற்றங்களை எதிர்கொள்கிறது. அதைவிட அதீத வேகத்தில் இயற்கை வளங்கள் பாவனைக்குட்படுத்தப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானவை தாவரங்கள்.அத் தாவரங்களின் பல்வகைமை நிறைந்து காணப்படும் வளம் வன வளம். எத்தனையோ மில்லியன் உயிரினங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக இருப்பதும் இந்த வன வளம் தான். தாவரம் என்ற ஒரு பிரதான இனம் நிலைத்து நிற்காவிட்டால் அதில் தங்கியிருக்கும் ஏனைய உயிரினங்கள் யாவற்றின் நிலைப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஆனால் மனித சமுதாயம் காலங்கடந்த பின்னர் தான் அதை உணர்ந்திருக்கிறது.
காடுகள் இருப்பதால் உலகிற்குக் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றவை. அவற்றை வகைப்படுத்துதல் மிகக் கடினம். சுத்தமான குடி நீராகட்டும், தாவர, விலங்குகளுக்கு வாழிடமாகட்டும், பொருளாதார வளர்ச்சியாகட்டும், சுத்தமான வளியாகட்டும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளாகட்டும், ஏன் சிறந்த எதிர்காலமாகட்டும்.. அவை எவையுமே இந்த காடுகளின் துணையின்றி சாத்தியமாகாது. மரங்களால் எமக்குக் கிடைக்கும் மிகப் பிரதானமான நன்மை ஒட்சிசன் எனலாம். எமக்கு ஒட்சிசனைத் தருவதற்கு மரங்களே இல்லை என்றால் நாம் உயிர் வாழ்வதும் சாத்தியப் பட்டிருக்காது.
அவை மட்டுமன்றி மண்ணரிப்பு, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பல அனர்த்தங்கள் னிகழாமல் காப்பதிலும் காடுகளுக்கு பெரும்பங்குண்டு.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச்செய்யக் கூடிய பல வளங்களை காடுகள் கொண்டிருக்கின்றன. மனித சமுதாயம் இதை உணர்ந்த காலத்திலிருந்து அந்த வளங்களைப் பாவிக்கத்தொடங்கி விட்டிருந்தது. ஆனால் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கிய சனத்தொகையும் வாழ்க்கைத்தரத்தைப் பேணுவதற்கான கேள்வியும் புதிய போக்கினைத் தோற்றுவித்தன. வளங்களின் அளவு அதிகரிக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் மாறாக இருக்கும் வளங்கள் மிக வேகமாக அருகத் தொடங்கின. வனவளங்கள் அழிக்கப்பட்டு அந்த நிலம் பல்வேறு பட்ட அபிவிருத்தித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படத் தொடங்கியது.
மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் மரங்களின் பயன் பாடு இருக்கும். மரங்களை வெட்டுதல்/காடுகளை அழித்தலானது மரக்காலை மற்றும் கடதாசிக் கைத் தொழிலுடன் நேரடியாகத் தொடர்பு பட்டது. உதாரனமாக வீடு கட்டுவதாகட்டும், கடற்தொழில் நுட்பப்பொருட்களின் தயாரிப்பாகட்டும், தளபாட தயாரிப்பாகட்டும்.. எவையாயினும், அவற்றிற்கான கேள்வி முடிவுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. பிளாஸ்டிக்கிலான மேசை ஒன்றை விட மரத்தாலான மேசையையே மனித மனம் அதிகம் விரும்புகிறது. மாடிப்படிகளுக்கு வைக்கப்படும் இரும்பினாலான பிடிகளை விட மரத்தினாலான பிடிகளே அதிகம் விரும்பப்படுகின்றன. அப்படி விரும்பும் மனித மனம் அப்பொருட்களைத்தயாரிக்க / நாம் விரும்பும் சுகபோக வாழ்வை அனுபவிக்க எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என ஒருபோதும் சிந்திப்பதில்லை.
காடுகள் வகை தொகையின்றி அழிக்கப்படுவதற்கான மற்றொரு பிரதான காரணம் பயிர்ச்செய்கை நிலங்களுக்கான தேவையாகும். காடுகளை எரிப்பது மிகச்சுலபம். அதே நேரம் காடுகள் இருக்கும் நிலப்பகுதி வளம் மிக்கது. விவசாயத்துக்கு ஏற்ற சூழ் நிலைகளை (மண்வளம்)கொண்டிருக்கும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் அயன வலய மழைக்காடுகளையுடைய நாடுகளிலும் இன்னும் இந்த நிலைமை தொடர்வதைக் காண முடியும். இந்த நாடுகளைச் சேர்ந்த வறிய விவசாயிகள் தமது விவசாயம், பண்ணைவளர்ப்புத் தேவைகளுக்கான நிலத்தை காடுகளை எரித்து பெற்றுக்கொள்கிறார்கள்.
இவை இப்படி இருக்க, பாரிய கம்பனிகள் பல்லாயிரம் சதுரமைல் பரப்பளவிலான வனப்பகுதிகளை எரிக்கத்தொடங்க, பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. உலக உணவுச் சந்தையில் உருவான பெரும் போட்டியை அடுத்து பாரிய அளவில் விவசாய முயற்சிகளை மேற்கொள்ள அக்கம்பனிகள் முயன்றமையே அதற்கான காரணமாகும்.
ஆனால் எவருமே தங்கள் நிலத்தில் கரிசனை கொள்ளவில்லை. விவசாய நிலத்தின் வளம் குன்றும் போது அதை மேம்படுத்த முயற்சிக்கவில்லை. மேலும் காடுகளை அழித்து புதிய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வளங்குன்றிய நிலம் அப்படியே இருந்தது. ஆக்குவதை விட அழிப்பது இலகு என்பது வெளிப்படை உன்மை. காடழிப்பிலே அக்கூற்றின் யதார்த்தை நன்கு உணர முடியும்.
ஒரு காலத்தில் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 75 சதவீதம் காடுகளாகக் காணப்பட்டன. பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்துடன் துரித கதியிலே அதிகரித்த காடழிப்பு காரணமாக இன்று 23 சதவீத நிலப்பகுதி (2004)மட்டுமே காடுகளாகக் காணபடுகிறது. இனியும் காடழிப்பு மேற்கொள்ளப்படவேண்டுமாயின் அது இலங்கையின் வடபகுதியில் மட்டுமே சாத்தியமாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் சரத் கொட்டகம. அதாவது, இலங்கையின் தென் பகுதியைப் பொறுத்தவரையிலே எஞ்சியிருக்கும் வனப்பகுதிகள் யாவுமே பாதுகாக்கப்பட்டவை. பாரிய அளவில் அவற்றை அழிப்பதானது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் இதற்கு மாறானதொரு நிலமையே வடக்கில் காணப்படுகிறது என்பது தான் பேராசிரியர் சரத் கொட்டகம சொல்ல விழையும் விடயமாகும்.
அவரது கூற்றில் உண்மை இல்லாமலில்லை. இலங்கையின் செய்மதிப் புகைப்படத்தை நோக்கினால் தென் பகுதியுடன் ஒப்பிடுகையில், வட பகுதி பசுமை மிக்கதாகத் தெரியும். தென் பகுதியுடன் ஒப்பிடுகையில் வடபகுதியில் நகரமயமாக்கலின் ஆதிக்கம் மிகவும் குறைவாகக் காணப்பட்டமையே அதற்கான காரணமாகும். ஆதலால் அங்கு பாரியளவில் காடழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் வடப்குதியின் கைவிடப்பட்ட காணிகளிலும் வனப்பகுதிகளிலும் பெறுமதி மிக்க மரங்கள் சட்டவிரோதமாகத் தறிக்கப்படுவதாக செய்திகள் வெளியான வண்ணமிருக்கின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும். பொது மக்கள் கூட இந்த சட்டவிரோத மரத் தறிப்பு தொடர்பாக எந்த வித அக்கறையும் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். வடபகுதி நில வளம் மிக்கது. அதன் நிலவளத்திலும் கால நிலை, மழை வீழ்ச்சியிலும் மரங்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. இவ்வாறு மரங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வந்தால் வடபகுதி பாலையாகும் காலமும் வெகு விரைவில் வந்து விடும் என்பதே நிதர்சனம்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசன் காடு. அது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தென் அமெரிக்காவிலே அமைந்திருக்கிறது. விவசாயத்துக்கும் பல்வேறுபட்ட மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குமென இந்த அமேசன் காடு அழிக்கப்பட்டு வருகிறது. 1978-1988 வரையான ஒரு தசாப்த காலத்துக்குள் 230,000 சதுர மைல் பரப்பளவிலான அமேசன் காடு அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பிறேசிலின் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக அமேசன் காட்டின் மத்தியிலே நீர் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க கடந்த மூன்று தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்டு வந்தது. பல்வேறுபட்ட எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது பிறேசிலின் சுற்றாடல் ஏஜென்சி.
நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கான நீர் பெலோ மொன்டே என்ற அணையைக் கட்டுவதன் மூலம் பெறப்படவிருக்கிறது. இதனால் அமேசன் பழங்குடியினர் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அமேசன் காட்டின் சம நிலையும் குலைக்கப்படும் என பல்வேறு எதிப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால் பிறேசிலோ எதையும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. இதே பிரேசிலின் நகர்ப் புறங்களில்தான் வளியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே மிகப்பெரிய மழைக்காட்டைக் கொண்டிருக்கும் நாடு தனக்குக் கிடைத்த இயற்கையின் கொடையைப் பற்றி அதீத அக்கறை கொள்ளாமல் இருப்பது வருந்துதற்குரிய விடயமே.
இத்தகைய மனித மனப்பாங்குகள்தான் காடழிப்பிற்கான அடிப்படைக் காரணங்களாயின என்பது கண்கூடு.
ஏலவே குறிப்பிட்டது போன்று தாவரங்களிலிருந்தே பெருமளவிலான ஒட்சிசன் கிடைக்கப்பெறுகிறது. தாவரங்கள் செறிந்து காணப்படுவது வனப்பகுதிகளிலேயேயாகும். ஆதலால் காடழிப்பானது நாம் சுவாசிக்கும் வழியின் தரத்தில் எத்தகைய எதிர்மறையான விளைவைத் தோற்றுவிக்கும் என நாம் உணரவேண்டும். பச்சை இல்ல விளைவுக்குக் காரணமாய் அமையும் பிரதான வாயு காபனீரொட்சைட்டு ஆகும். உண்மையில் பச்சை இல்ல விளைவு எனப்படுவது காபனீரொட்சைட்டு உற்பத்தியாளர்களுக்கும் (வாகனங்கள், மனிதன்) காபனீரொட்சைட்டு நுகரிகளுக்கும் (தாவரங்கள்)இடையிலான சம நிலை எனலாம். உலகளாவிய காபன் வட்டமும் இதனுள் அடங்கும். உலகளாவிய ரீதியிலே அயனவலயக் காடுகளிலே இருக்கும் தாவரங்களும் மண்ணும் மட்டும் வருடாந்தம் பல நூற்றுக்கணக்கான பில்லியன் தொன் காபனை உறிஞ்சுகின்றன. காடழிப்பு அந்த அளவைக் குறைக்கிறது. அதேவேளை சுவட்டு எரிபொருட்களை எரிப்பதாலும் ஏனைய செயற்பாடுகளாலும் பல பில்லியன் தொன் காபன் வளிமண்டலத்திற்கு வெளிவிடப்படுகிறது. பூகோளம் வெப்பமயமாதலிலும் சுத்தமான வளி கிடைப்பதிலும் காடழிப்பு எவ்வளவு பெரிய தாக்கத்தைச் செலுத்துகிறது என்பது கண்கூடு.
கால நிலைமாற்றத்துக்கு எதிராக மனிதன் தொழிற்படுகிறானோ இல்லையோ காடுகள் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றன. காபனைச் கேமிப்பதாகட்டும்; காபனீரொட்சைட்டை உறிஞ்சி தமது உயிர்த்திணிவினுள் சிறைப்படுத்துவதாகட்டும். காடுகள் செய்யும் பணி அளப்பரியது. வெறும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.
இன்று உலகில் வாழும் 60 மில்லியன் பழங்குடி மக்களின் புகலிடமாக இருப்பவையும் இந்தக் காடுகளே. அதேகாடுகள் தான் 1.6 பில்லியன் மக்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றன.
காடுகள் அழிக்கப்படுவதானது உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதற்கான பிரதான காரணியாகும். சூழற்தொகுதிகள், அவற்றுடன் தொடர்புடையனவான விவசாயம், மருத்துவம், பொழுதுபோக்கு, போன்ற பல விடயங்கள் நிலைத்து நிற்பதற்கு உயிர்ப்பல்வகைமையே காரணமாகிறது. உலகிலே ஏறத்தாழ 5 தொடக்கம் 80 மில்லியன் உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள்)காணப்படுகின்றன. அந்த குடித்தொகையில் 7 சதவீதமானவற்றை அயனவலய மழைக்காடுகள் உள்ளடக்குகின்றன. காடுகள் இல்லாமல் பல உயிரினங்கள் வாழ முடியாது. காடுகள் அழிக்கப்பட அவை அழிந்தே போகும். விளைவாக உயிர்ப்பல்வகைமை அழிக்கப்பட சூழலின் சமநிலை குலைந்து மனித இனத்திற்கே வினையாக முடியும்.
காடழிப்பும் காடுகள் தரமிழத்தலும் தடுக்கப்பட்டால் தற்போது வளிமண்டலத்திலிருக்கும் 20 சதவீத பச்சை இல்ல வாயுக்கள் உறிஞ்சப்படலாம் என்கின்றன ஆய்வுகள். காடழிப்பும் காடுகள் தரமிழத்தலும் வெவ்வேறானவை. காடழிப்பு என்பது காடுகளில் மரங்கள் முற்றாக அழிக்கப்படுவதைக் குறிக்கும். வர்த்தக நோக்கிலும் பல்வேறு தேவைகளுக்காகவும் மரங்கள் வெட்டப்படுதலும் காட்டுத்தீயால் மரங்களளழிக்கப்படுவதும் கூட காடழிப்பு நடவடிக்கைகளாகவே கருதப்படுகின்றன. ஆனால் முறையான முகாமைத்துவத்தின் கீழ் வனப்பகுதிகள் பேணப்பட்டால் காடழிப்பு தடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
காடுகளின் தரமானது அவை அமைதிருக்கும் சூழல் தொகுதிகள் நிலைத்திருக்கும் வீதத்தைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. காடுகளின் மண்வளம், உயிர் வளம், தாவரப் படைகள் போன்றவற்றின் அடிப்படையில் அது மதிப்பிடப்படும். விறகுக்காக காடுகளைப் பயன்படுத்துவதும் பூச்சிகள், பீடைகளின் தாக்கமும் கூட காடுகள் தரமிழப்பதற்கு வழி வகுக்கும்.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றுகூடிய ஐ. நா சபை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே காடழிப்பு, காடுகள் தரமிழத்தலைத் தவிர்க்கும் நோக்கில் REDD (Reducing Emissions from Deforestation and forest Degradation ) என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தது.
இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலே பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இத்திட்டத்திலே ஆபிரிக்க, ஆசிய-பசுபிக், இலத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த 29 நாடுகள் இணைந்துள்ளன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.
சுற்றாடல் தொடர்பான பல ஒப்பந்தங்கள், இணக்கப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதில் இலங்கை பின் நின்றது உண்மை தான். ஆனால் இந்த உடன்பாடு செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் சுற்றாடல் சட்டத்தரணி ஜெகத் குண்வர்தன.
காடுகள் அழிக்கப்படுவதன் தாக்கம் கையை மீறிச்செல்வதை உணர்ந்த ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டம் 2011 ஆம் ஆண்டை காடுகளுக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அதை ஆதரிக்கும் முகமாக இவ்வருடத்திற்குரிய உலக சுற்றாடல் தினமானது (இன்று) காடுகள்:உங்களுக்கான சேவையில் இயற்கை எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் அதைக் கொண்டாடும் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டிருக்கிறது. துரிதமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அதன் பொருளாதாரத்தை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முதலடியே அத்தெரிவின் நோக்கமாகும்.
உலக சுற்றாடல் தினம் 1972 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டி உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் மேற்கொள்ளப்படும் சிறு முயற்சிகள் கூட பெரும் பயனைத் தர முடியும் என்பதே இந்த செயற்பாடுகளின் உள்ளார்ந்த நோக்கமாகும்.
வன வளத்தைப் பாதுகாப்பதன் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையில் முழு உலகையும் திருப்புவதே இன்றைய தினத்துக்கான தொனிப்பொருளாகும். 7 பில்லியனைத் தாண்டிக்கொண்டிருக்கிறது உலக சனத்தொகை. மனிதர் ஒவ்வொருவரதும் வாழ்க்கைத்தரம் உயரவேண்டுமாயின் காடுகளின் ஆரோக்கியமும் பேணப்படவேண்டும் என்பது அடிப்படை. ஆதலால் காடுகளைப் பாதுகாக்கவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
நாடுகளின் பொருளாதாரம், சனத்தொகை அதிகரிப்பு மற்றும் ஏனைய சமூகக் காரணங்களால் காடழிப்பிற்கான காரணங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன எனலாம். ஆயினும் அவற்றை எல்லாம் இலகுவாக வெற்றிகொள்ளும் வழிகளும் இல்லாமல் இல்லை. அவற்றை நடைமுறைப் படுத்த வெவ்வேறுபட்ட மக்கள் தரப்பினதும் அமைப்புகளது ஒத்துழைப்பே அவசியமாகிறது. வனப்பகுதிகளைப் பாதுகாத்தல் என்பதே காலங்காலமாக நடைமுறையிலிருக்கும் பிரதான முறைமையாகும். சகல தரப்பினரும் இணைந்து சர்வதேச, பிராந்திய, தேசிய ரீதியிலே கொள்கைகளை உருவாக்கி கைத்தொழில்களில் தலையிட்டு காடுகளின் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், வனப்பகுதிகள் பாதுகாக்கப்படுவதுடன் ஒழுங்காக முகாமை செய்யப்படும்.
காடுகளை அழிப்பதன் மூலம் உற்பத்திசெய்யப்படும் பொருட்களின் பாவனையைக் குறைக்க வேண்டும். மீள்சுழற்சி செய்யக் கூடிய பொருட்களின் பாவனை ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் மரப்பொருட்களின் பாவனை மட்டுப்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது. இதனால் அரப்பொருட்களின் வி நியோகமும் கேள்வியும் மட்டுப்படுத்தப்படும்.
நிலங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தக்க வழியிலே வினைத்திறன் மிக்க விவசாய முறைமைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதே வேளை காடழிப்பினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றி மக்கள் அறிவூட்டப்பட வேண்டும். அத்தகைய அறிவூட்டல் செயற்றிட்டங்களுக்கான் முதலீடு அதிகரிக்கப்படவேண்டும்.
அண்மையில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டப்பின் கல்வி மாணவர்கள் யகிரல பகுதியில் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அப்பகுதி சிங்கராஜ வனத்தின் எல்லையோரக் கிராமங்களை உள்ளடக்கியது. அவர்களது வாழ்வாதாரத்தில் சிங்கராஜ வனத்துக்கு பெரும்பங்குண்டு. மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வும் அவ்விடயத்துடன் தொடர்புடையதேஅத்தகைய கிராமங்களில் ஒரு கிராம மக்கள் தாம் எந்த ஒரு தேவைக்காகவும் மரங்களை வெட்டுவதில்லை என்ற ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருந்தனர். அதற்கான காரணத்தை வினவினர் பல்கலைக் கழக மாணவர்கள். மரங்களை வெட்டக்கூடாது என பாடசாலைகளில் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் மரங்களை வெட்ட தம் பிள்ளைகள் அனுமதிப்பதில்லை என்பதுவுமே அந்த பாமர மக்கள் முன்வைத்த காரணங்களாகும். அறிவூட்டல் நடவடிக்கைகள் எத்துணை பயனுடையவை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமெனலாம்.
.முழுக் காடுகளையும் தனியொருவர் எப்படிப் பாதுகாக்கமுடியும் என்ற கேள்வி எம் ஒவ்வொருவர் மத்தியிலும் எழலாம். அதற்கு இலகுவான வழியொன்று இருக்கிறது. பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டிய தேவை இல்லை. எமது வாழ்க்கை முறைமையை மாற்றியமைத்தால் மட்டுமே போதுமானது. ஆனால் பலருக்கு அது தான் கடினமான காரியமாக இருக்கிறது.
இன்று மரத்தாலான பல பொருட்கள் பாவனையில் இருக்கின்றன. உலகளாவிய ரீதியிலே பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து செல்கிறது. அதே போக்கில் நடுத்தரவர்க்கமும் வளர்கிறது. நடுத்தர வர்க்கம் வளர்ச்சியடையும் போது மர உற்பத்திப்பொருட்களுக்கான கேள்வியும் அதிகரிக்கத்தான் செய்கிறது. மர உற்பத்திப் பொருட்களுக்குப் பதிலாக சூழலைப் பாதிக்காத மாற்றுத்தயாரிப்புகளை நாட வேண்டும். பலருக்கு அது இலகுவான ஒரு விடயமாகத் தெரியவில்லை. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமானது. அத்துடன் இன்னும் சில காலங்களில் தவிர்க்கமுடியாததும் ஆகிவிடும். மரத்துக்கு இருக்கும் தேவையை வெகுவாகக் குறைக்க வல்லதும் கூட. பாதுகாப்பான சூழல் ஒன்று உருவாக இந்த நடைமுறை நிச்சயம் வழிவகுக்கும்.
கேரளாவிலே, விளம்பரப் பதாகைகளைத் தொங்க விடுவதற்காக மரங்களில் ஆணி அறைவதை தடுக்கவேண்டும் என பாடசாலை மாணவர்கள் மேல் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். கடிதத்தை மனுவாக ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது மேல் நீதி மன்றம். நாம் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
No comments:
Post a Comment