Sunday, June 5, 2011

காட்டுயிர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டிருப்பவை!


தொழிற்படும் யன்னல்கள்

தாவரங்களின் பிரதான தொழிலாகிய ஒளித்தொகுப்பின் அடிப்படையிலே தொழிற்படக் கூடிய யன்னல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாதரண சூரிய கலங்கள் எந்த ஒரு செலவும் இல்லாமல் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தியைப் பிறப்பிக்கவில்லை. அவற்றில் காணப்படும் சிலிக்கன் மேற்பரப்பைத் தயாரிக்க அதிக செலவாகிறது. அதிக சக்தி தேவைப் படுகிறது. அந்த உற்பத்தியின் போது சூழலுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய உப பொருட்களும் உருவாகின்றன. அத்தகைய சூரிய கலங்களுக்கு மாற்றாக ஒளித்தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட சாயஉணர் சூரிய கலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. தாவரமொன்றில் இலை பச்சையத்தைக் கொண்டு சூரிய ஒளிக்கு எப்படி தொழிற்படுகிறதோ அதே போலவே இந்த சூரிய கலங்களும் தொழிற்படுகின்றன. குறைந்தளவு சக்தியுடன், எந்த ஒரு நச்சுப் பதார்த்தங்களையும் வெளி விடாமலே இவை தயாரிக்கப்படுகின்றன. அவை கட்டட மேற்பரப்பிலே பொருத்தப்படவும் கூடியவை.சிம்பன்சி கண்டுபிடித்த மருந்து

நவீன மருத்துவத்தில் பயன்படும் 25 சதவீதமான மருந்துகள் தாவரங்களிலிருந்து நேரடியாகப் பெறப்படுபவை. மருத்துவத்தில் பயன்படக் கூடிய பல நூற்றுக்கணக்கான தனித்துவமான இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்ட பல நூறாயிரம் தாவரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இன்னும் புதிய மருந்துகளைக் கண்டு பிடிக்க வேண்டுமாயின் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது. தாவரங்களின் வகையையும் அவற்றில் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்களையும் இனங்கண்டு பிரித்தெடுத்து மருத்தைக் கண்டு பிடிக்க பல மில்லியன் ஆண்டுகள் செல்லலாம். அதிஷ்டவசமாக சிம்பன்சி குரங்குகள் என்ன செய்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள். சிம்பன்சி போன்ற மனிதனல்லாத விலங்குகள் தம்க்கு சுகயீனமொன்று நேரும் போது எந்தத் தாவரங்களைப் பயன்படுத்தி குணமடைகின்றன என ஆய்வாளர்கள் அவதானிக்கிறார்கள். பின்னர் அவற்றை மனிதனுக்கும் பிரயோகிக்கிறார்கள்.

சிம்பன்சி குரங்குகள் சுகயீனமடையும் போது வெரோனியா சாதி மரத்தை நாடிச் செல்வது அவதானிக்கப்பட்டது. புழுக்களால் ஏற்படும் சுகயீனங்களைக் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அந்த மரத்துக்கு இருப்பது பின்னர் தானங்கண்டறியப்பட்டது.கார்களின் வடிவமைப்பு

மரங்கள் தமது பலத்தை உச்சப்படுத்தக் கூடிய வகையிலே தமது கட்டமைப்பை வடிவமைத்துக் கொள்கின்றன. அவை தமது நார்களை ஒழுங்குபடுத்தி தகைப்பைக் குறைப்பதும் பலம் தேவையான பகுதிகளுக்கு மேலதிக பதார்த்தங்களை அனுப்புவதும் கூட பலத்தை உச்சப்படுத்தவே!

பாரம் கூடிய கிளைகளிலே இதை அவதானிக்க முடியும். இதே நுட்பத்தை பொறியியலாளர்களும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். மரங்கள் எப்படி பலத்தை உச்சப்படுத்துகின்றனவோ அதே போன்ற வடிவமைப்பை தொழிற்சாலை வடிவமைப்பிலும் மேற்கொள்ள மென்பொருட்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கார்களும் அதே நுட்பத்திலே வடிவமைக்கப்படுகின்றன.


பாரங்குறைந்த உறுதியான தயாரிப்புகள்

தற்போது தயாரிக்கப்படும் இந்த புதிய தண்ணீர்ப் போத்தல்களில் மற்றைய பிளாஸ்டிக் போத்தல்களை விட குறைந்தளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை உறுதித் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் போத்தல்களை வடிவமைத்த நிறுவனத்துக்கு மாதிரியாக இருந்தவை மரங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

மரங்களில் பொதுவாகக் காணப்படும் சுருளி வடிவான கட்டமைப்பின் அடிப்படையிலேயே இந்த போத்தலும் வடிவமைக் கப்பட்டிருக்கிறது. இந்த வடிவமைப்பினால் வருடாந்தம் 250 தொன் மூலப்பொருளும் மீள் சுழற்சி செய்யத்தேவையான சக்தியும் பெருமளவில் மீதப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.


சுவட்டு எரிபொருள் இல்லாத எதிர்காலம்


ஐதரசன் அணுவானது எமது DNA மூலக்கூற்றின் வடிவத்தை பேணுகிறது . அதே வேளை விண்ணுக்கு ரொக்கட்டுகளை அனுப்புவதற்கான எரிபொருளாகவும் பயன்படுகிறது. சுவட்டு எரிபொருட்கள் நிச்சயம் ஒரு நாள் ஐதரசன் அணுக்களால் பிரதியீடு செய்யப்படும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தற்போது ஐதரசன் அணுவைப் பிரித்தெடுக்க சுவட்டு எரிபொருட்களே பயன்படுகின்றன. ஆனால் தாவரங்களோ சூரிய ஒளிமுன்னிலையில் அதனையொத்த தொழிற்பாட்டை மேற்கொள்கின்றன. தாவரங்கள் கொண்டிருக்கும் வியத்தகு இயல்பை அடிப்படையாகக் கொண்ட செயற்கை இலைகள் தயாரிக்கப்படுகின்றன. சூரிய ஒளி முன்னிலையில் இந்த செயற்கை இலைகளை நீரினுள் இட்டால் அவை ஐதரசன் வாயுவைத் தயாரிக்கின்றன. அது ஒரு எரிபொருள் கலத்திற்கு வழி நடத்தப்படுகிறது. அதன் மூலம் மின் சக்தி பிறப்பிக்கப் படுகிறது. இச்செயற்பாட்டின் மூலம் சுத்தமான நீர் மட்டுமேகழிவுப் பொருளாக . வெளியேற்றப்படு கிறது.


சாயமின்றிய நிறங்கள்

வண்ணப் பூச்சுகள், பிளாஸ்டிக்குகளில் சாயங்கள் பயன்படுகின்றன. அவற்றிலே பார உலோகங்களும் நச்சுத்தன்மையான இரசாயனப் பதார்த்தங்களும் காணப்படுகின்றன. நிறங்களை உருவாக்குவதற்கான மாற்றுவழியை வண்னத்துப் பூச்சிகள் கற்றுத் தந்திருக்கின்றன. மத்திய மற்றும் தென்னமெரிக்க பகுதிகளில் உள்ள நீல நிற வண்ணத்துப் பூச்சிகள் தமது சிறகுகளால் சமிக்ஞைகளை வெளியிட வல்லவை. அவற்றின் சிறகுகள் கொண்டிருக்கும் கவர்ச்சியான நிறம் சாயத்தால் உருவானதல்ல. சிறகுகளில் காணப்படும் நுண்ணிய ஒளி ஊடு புகும் படைகள் நீல ஒளியை மட்டும் தெறிப்படையச் செய்கின்றன. இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே சாயங்களைப் பயன்படுத்தாமல் கவர்ச்சியான நிறங்களுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
No comments:

Post a Comment