சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமிலே கடந்த ஏப்ரல் மாதம் மாநாடொன்று நடைபெற்றது. 173 நாடுகள் பங்கேற்றிருந்தன. கொடிய நச்சுத் தன்மைமிக்க சேதன மாசாக்கிகளின் பயன்பாட்டைத் தடை செய்வது பற்றி விவாதித்தன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஸ்டோக்ஹோமில் கூடும் இந்த நாடுகள், இவ்வாறு விவாதிப்பது சகஜமானது. விவாதத்துக்குரிய கருத்தை பல நாடுகள் ஆமோதிக்கும் சில நாடுகள் மெளனம் சாதிக்கும் சிலவோ ஒரேயடியாக மறுக்கும்.
இம்முறை நடைபெற்ற மாநாடு ஸ்டோக்ஹோம் உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் நடைபெறும் 5 ஆவது மாநாடாகும். அதில் என்டோசல்பன் எனப்படும் நச்சுத்தன்மையான பூச்சிக்கொல்லியைத் தடை செய்வது தொடர்பாக நாடுகள் விவாதித்தன. தமது மக்களின் நல்வாழ்விலே அதிக கரிசனை கொண்ட 125 நாடுகள் என்டோ சல்பனுக்கு தடை விதித்தன. 47 நாடுகள் மெளனமாகவே இருந்தன. எமது அயல் நாடான பாரதம் மட்டும் தடை செய்ய அடியோடு மறுத்தது. அந்த மறுப்பின் எதிரொலியாய் ஊடகங்கள் விழித்துக்கொண்டன. என்டோசல்பன் விவகாரம் பூதாகரமானது என்ற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவை இந்த ஊடகங்கள் தான் என்றால் மிகையாகாது.
இந்தியாவின் கேரள மாநிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்பர். சலசலத்து ஓடும் ஆறுகள், அழகான குளங்கள், சுற்றிலும் தென்னை மரங்கள், பாரம்பரியம் மாறாமல் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் காட்சி நிறைந்து காணப்படும் மாநிலம் கேரளா. துரித நகரமயமாக்கலின் ஆதிக்கத்தை அங்கு காண்பது மிக அரிது எனலாம்.
அந்த இயற்கை கொஞ்சும் மாநிலத்திற்கு கிடைத்த சாபக்கேடு இந்த என்டோசல்பன். கேரளாவின் காசர் கோடு பகுதியிலே இந்தப் பூச்சி கொல்லி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி முத்தளமரடா பகுதிகளில் உள்ள மாம்பழத் தோட்டங்களில் உலங்கு வானூர்தியிலிருந்து என்டோசல்பன் பூச்சிகொல்லி தெளிக்கப்பட்டது.
சில காலங்களின் பின், என்டோசல்பன் அதிகளவு பாவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டது. சிறுவர், சிறுமியர் மத்தியில் வளர்ச்சிக்குறைபாடு, பிறக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சிக் குறைபாடு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்றன அறியப்பட்டன.
என்டோசல்பனின் விளைவுகளை உணர்ந்த கேரள மாநில அரசு 2005 ஆம் ஆண்டு அப்பூச்சிகொல்லி மருந்துக்கு முற்றாகத் தடை விதித்தது. ஆனால் என்டோ சல்பனின் விபரீதத்தை இந்திய மத்திய அரசு உணரவில்லை போலும். ஆதலால் கேரள மாநிலம் தவிர்ந்த ஏனைய மாநிலங்களிலெல்லாம் என்டோசல்பன் பாவனையிலிருந்தது. இதற்கு தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. விளைவு கேரள - தமிழ்நாடு எல்லையோரக் கிராமங்களில் என்டோசல்பனின் பாவனை தாராளமாகி, கேரளாவுக்குள்ளும் இலகுவாக ஊடுருவியது.
நிலைமை இப்படி இருக்கையில் தான் 5ஆவது ஸ்டோக்ஹோம் மாநாடும் நடந்து முடிந்திருக்கிறது. அம்மாநாட்டில் இந்தியா நடந்து கொண்டவிதம், தற்போது பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியா இவ்வாறு என்டோசல்பனைத் தடை செய்ய மறுத்தமைக்கும் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், இந்தியா இந்த பூச்சிகொல்லி மருந்தை ஒரேயடியாகத் தடை செய்வதற்குத்தான் மறுத்தது எனலாம். பாவனையைப் படிப்படியாகக் குறைத்து மெதுவாக இல்லாமல் செய்யும் நடைமுறைக்கு உடன்பட முயற்சித்தது.
ஏனெனில், என்டோசல்பனளவு வினைத்திறன் மிக்க வேறெந்த பூச்சி கொல்லி மருந்தையும் இந்தியா உருவாக்கியிருக்கவில்லை. அதே வேளை இன்றைய விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்துக்குப் பழக்கப்பட்டவர்களுமல்லர்.
என்டோசல்பனை இந்தியாவே தயாரிக்கிறது. ஒரு வருடத்துக்கு 900 தொன் உற்பத்தி செய்யப்படுகிறது. அரைவாசி தேசிய பாவனைக்கும் மிகுதி ஏற்றுமதிக்கும் பயன்படுகிறது. விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும் நாடான இந்தியாவிலே 75 சதவீதமான விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த என்டோசல்பனை நம்பியே இருக்கிறது.
இம் மருந்தை உடனடியாகத் தடை செய்தால் 75 சதவீத இந்திய விவசாயிகளும் நட்டாற்றில் விடப்படுவர் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. ஏலவே உலக உணவுப் பிரச்சினை, தண்ணீர் பற்றாக்குறை, எல்லைப் பிரச்சினை, சனத்தொகை அதிகரிப்பு, பயங்கரவாதம் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் அட்டதிக்குகளிலும் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் விவசாயத்துறையில் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்துவதானது இந்தியாவின் வல்லரசுக்கனவை கணப்பொழுதில் சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும் என்பது நிதர்சனம்.
என்டோசல்பன் பாவனையால் உருவாகிய பிரச்சினைகள் இந்தியாவின் கேரள மாநிலத்தில் மட்டும் அறியப்படவில்லை. கர்நாடகாவுடன் விவசாயத்துக்குப் பெயர் போன பஞ்சாப் மாநிலத்திலும் இதை ஒத்த பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டிண்டா பகுதியில் என்டோசல்பனின் மிகை பாவனையால் மண்வளம் குன்றி நச்சுத்தன்மை அதிகரித்திருக்கிறது.
ஏறத்தாழ 35 வருடங்களுக்கு முன்னர் 1976 இலே கேரள மாநிலத்தின் காசரகோடு மாவட்டத்தில் இருக்கும் முந்திரித் தோட்டங்களுக்கு பூச்சி கொல்லியொன்று தெளிக்கப்பட்டது. வானிலிருந்து விசிறப்பட்ட நச்சுத்தன்மையான அந்தப் பூச்சிக் கொல்லிதான் என்டோசல்பனாகும். அப்போதிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை வருடமொன்றுக்கு 3 தடவைகள் அதே முறையிலே என்டோசல்பனை விசிறும் நடைமுறை வழக்கிலிருந்தது.
காற்றிலே பரவும் சேதன குளோரினான இந்தப் பூச்சிக் கொல்லி நச்சுத் தன்மையானது. போபால் அனர்த்தத்தை ஒத்த இரசாயன அனர்த்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.
என்டோ சல்பனின் பாவனை ஆரம்பித்து 3 வருடங்களின் பின்னர் தான் அதன் தாக்கங்கள் உணரப்பட்டன. 1979 இல் பிறந்த குழந்தைகளில் வளர்ச்சிக் குறைவும் கால்முடமாதலும் அவதானிக்கப்பட்டது.
1990 களிலே இந்தக் குறைபாடுகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தன. அதிகளவில் பாதிக்கப்பட்டது கர்ப்பிணிப் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளுமே. பிறவிக்குறைபாடுகள் மட்டுமன்றி பல்வேறுபட்ட நோய்களும் கண்டறியப்பட்டன. அவற்றுள் பல மையநரம்புத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்புடையவையாகும். புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டமையும் அறியப்பட்டது.
2002 இல் கேரள மேல் நீதிமன்று என்டோ சல்பனைத் தடை செய்வதற்கும் இந்த நிலைமை தான் காரணமாகிறது.
இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். என்டோ சல்பன் பாவனையிலிருக்கும் சகல நாடுகளும் கேரளம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒத்த பலவற்றை எதிர்நோக்குகின்றன.
மனிதன் விரும்பியோ விரும்பாமலோ இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். தான் வாழும் சூழற் தொகுதியில் பிரதான அங்கமாக இருக்கிறான். சூழற்தொகுதி ஒன்றின் அங்கங்களுக்கிடையே இடைத் தொடர்புகள் காணப்படும். அவை எல்லாம் சீராகப் பேணப்பட்டால் தான் சூழல் தொகுதி சமநிலையில் இருக்கும். அதன் அங்கங்களாக இருக்கும் அங்கிகளும் நிலைக்க முடியும்.
என்டோசல்பனானது, தான் பிரயோகிக்கப்படுகின்ற சூழலிலிருக்கும் அங்கிகள் யாவற்றையும் பாரபட்சமின்றிப் பாதிக்கிறது என்றே கூறுவேண்டும்.
விளைவு, உணவுச் சங்கிலியின் உயர்படியாகக் கருதப்படும் மனிதனின் உடலில் அதிக செறிவில் என்டோசல்பன் சேர்ந்துவிட, அது பல்வேறு உடற் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியது. என்டோசல்பனாது உடற் கலங்களைப் பிறழ்வடையச் செய்ய வல்லது ஆகையால், அதனால் உருவாகும் குறைபாடுகளை மனிதக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் இயலாமல் போனது.
இந்நிலையிலே, 2001 இல் ஸ்டோக்ஹோம் நகரிலே கூடிய உலக நாடுகள் நச்சுத்தன்மையான சேதன மாசாக்கிகளை தடை செய்வதும் தடை செய்யும்/இல்லாதொழிக்கும் உடன்பாட்டை எட்டின. 2004 இலிருந்து அந்த உடன்பாடு கட்டாயப்படுத்தப்பட்டது. அதனடிப்படையிலே உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலே என்டோசல்பன் தடைசெய்யப்பட்டது.
எப்படி ஒரு காலத்தில் டி.டி.ரி புழக்கத்திலிருந்து பின் என்ன காரணத்துக்காகத் தடை செய்யப்பட்டதோ அதை ஒத்த காரணத்துக்காகவே என்டோசல்பனும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டோக்ஹோம் உடன்பாட்டில் இலங்கையும் கைச்சாத்திட்டது. 2005 இலிருந்து என்டோசல்பனை உள்நாட்டில் தடை செய்தது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை சிறிய நாடு. இங்கு என்டோசல்பன் தடை செய்யப்பட்டபோது பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியா பரப்பளவில் பெரியது. என்டோ சல்பனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்தால் தான் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுமோ என அது அஞ்சுகிறது. ஆதலால் தான், அதன் பாவனையைப் படிப்படியாகக் குறைக்கும் தீர்மானத்தை எட்டியிருக்கிறது.
ஆரோக்கியமான சூழலில் உயிர் வாழ்தல் என்பது இவ்வுலகில் வாழும் சகல ஜீவராசிகளதும் உரிமையாகும். அந்த உரிமையைப் பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. பொருளாதார நெருக்கடியை மனதில் கொண்டு, பல உயிர்களின் உரிமையைப் பறிப்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எமது சமூகம் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இயற்கையுடன் இயைந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வாழ்ந்தமையால் தான் இத்தனை தொன்மையான வரலாறு இருக்கிறதோ என்றும் சிலவேளைகளில் எண்ணத் தோன்றும், ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் மனித ஆசைகளும் ஒன்றுக்கொன்று போட்டியாக அதிகரித்துச் சென்றன. அதன் பயனாக உருவான வைதான் இந்த இரசாயனப்பூச்சி கொல்லிகள்.
அதிகரித்து வரும் கேள்வியையும் இலாபநோக்கையும் திருப்திப்படுத்தி உயர் விளைச்சலைப் பெறும் இலகு வழிகளாக இப்பூச்சிகொல்லிகளும் இரசாயன உரங்களும் காணப்படுகின்றன. இவற்றின் அறிமுகமும் பயன்பாடும் இயற்கை விவசாய முறைமைகளை இல்லாதொழித்து விட்டன என்றே கூறவேண்டும்.
ஆனால் இந்த இரசாயனப் பொருட்களின் எதிர்மறையான விளைவுகள் இனியும் தோன்றாமல் இருக்க வேண்டுமாயின் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதே சிறந்த நடைமுறையாகக் கொள்ளப்படுகிறது.
இலங்கையின் புத்தளம் பகுதியில் மிகை இரசாயனப் பசளைகளின் பாவனை பாரிய தாக்கத்தைச் செலுத்துவதாகத் தெரிகிறது. கற்பிட்டியை அண்டிய பகுதிகளில், நிலம் மணற்பாங்கானது. பேராசை மிக்க விவசாயிகள் உயர் விளைச்சலை மட்டுமே கருத்தில் கொண்டு தேவைக்கும் அதிகமான அளவு இரசாயன உரங்களைப் பாவித்தனர். பாவிக்கின்றனர். அப்பகுதிகளில் வெங்காயம், மிளகாய் போன்ற உயர் வருமானம் தரும் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மிகை இரசாயன உரங்களின் பிரயோகத்தால் உரிய காலத்துக்கு முன்னரே உயர் விளைச்சல் கிடைத்து வருகிறது.
பொதுவாகப கற்பிட்டி பகுதியில் உலர் காலநிலையே நிலவும். இரசாயன உரங்களை மிகையாக இட்டு நாள் முழுவதும் நீர்பாய்ச்சினர் அந்த பாமர விவசாயிகள். எந்தத் தாவரமாயினும் தனது தேவைக்கு மேலதிகமான எந்த ஒரு கனிப் பொருளையும் உள்ளெடுக்காது. அது நியதி. அதேவேளை புத்தளத்தில் நிலக்கீழ் நீர்மட்டம் ஆழமற்றது. மிகை இரசாயன உரங்களில் காணப்படும் நைத்திரேற்று, நைத்திரைற்று அயன்கள் நாள் முழுவதும் பாய்ச்சப்படும் நீரிலே கரைந்து நிலக்கீழ் நீரை மாசுபடுத்தின. கற்பிட்டி பகுதியின் பிரதான நீர்மூலம் நிலக்கீழ் நீராகும். விவசாயிகளின் மூடத்தனமான செயற்பாட்டின் வினை கிணற்று நீரிலே தெரிந்தது. கிணற்று நீரின் மணமும் சுவையும் மாறியது. அறியாமல் அருந்திய மக்கள் பல உடல் நலக்குறைவுளுக்கு ஆளாயினர். நீலக்குழந்தைகள் பிறந்தன.
இவ்விடயம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மத்திய மாகாண பிரதி பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர எம்முடன் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஏலவே குறிப்பிடப்பட்டது போல் கற்பிட்டி பகுதியின் நிலக்கீழ் நீர் மாசடைந்துள்ளதால், அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு குழாய் வழி நீரை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த மாசடைந்த நீரை குடித்தல், சமைத்தல் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
கற்பிட்டியின் சில பகுதிகளில் நிலக்கீழ் நீர் மாசடையவில்லை. ஆகையால் மக்கள் தமது குடிநீர், சமையல் தேவைகளுக்கான நீரை அப்பகுதிகளில் பணம் கொடுத்து வாங்குகின்றனர். தண்ணீர்காவு வண்டிகள் மூலமும் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இரசாயன உரங்களின் மிகை பாவனையால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இயற்கை முறை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
உவர் நீரை நன்னீராக்கி விநியோகத்தை மேற்கொள்ளும் திட்டங்களும் காணப்படுகின்றன. ஆனால் இன்னும் போதிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாமையால் அவை நடைமுறைக்கு வரவில்லை என்கிறார் தீப்தி சுமணசேகர.
நீர்வளம் நிறைந்த நன்னாடு என்று பெயர் பெற்ற தேசம் இலங்கை. ஆனால் உணவுத் தேவைக்கான நீர் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருவதாக இல்லையா? ஆழம் குறைந்த நிலக்கீழ் நீர்வளம் கொண்ட கற்பிட்டி பிரதேசத்தின் இன்றைய நிலை வருந்துவதற்குரியது. அதற்கு எமது பணத்தாசையும் தூரநோக்கற்ற செயற்பாடுகளுமே காரணங்களாகின்றன. இந்நிலை கற்பிட்டிக்கு மட்டுமே உரியதல்ல. கற்பிட்டி போன்ற பல பகுதிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். நாங்கள் சிந்தித்துச் செயற்படாவிட்டால் எதுவும் நடக்கப்போவதில்லை.
வெள்ளம் வந்தபின் அணைகட்ட முயன்றால் எந்த நன்மையும் விழையாது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment