Sunday, April 24, 2011

ஆவதும் அழிவதும் பஞ்சபூ தங்களாலே!


காட்டுத் தீ என்பது வனப் பகுதிகளில் அல்லது தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் ஏற்படும் கட்டுப்படுத்தமுடியாத தீயாகும். பொதுவாக எரியக் கூடியத் (எரிபொருளாகத் தொழிற்படக் கூடிய) தாவரங்கள் இருக்கும் பகுதிகளிலேயே காட்டுத் தீ ஏற்படும்.
அந்தாட்டிக்கா கண்டம் தவிர ஏனைய கண்டங்கள் யாவற்றிலும் இது ஏற்படுகிறது. உலக வரலாற்றிலே ஒரு குறித்த கால இடைவெளியில் காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதை சுவட்டு ஆதாரங்கள் நிரூபித்திருக்கின்றன.
காட்டுத்தீ தாவரங்கள் உள்ள இடங்களில் பரவினாலும் அயற் சூழலில் வாழும் சமூகங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. அதனால் அங்கு மனித உயிருக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதம் தவிர்க்க முடியாததாகிறது.
சில வேளைகளில் காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கும். காட்டுத் தீ உருவாவதற்கு மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழும் போது ஏற்படும் தீப்பொறி மற்றும் சாதகமான குறை தகனம் போன்றனவே பிரதான இயற்கைக் காரணிகளாகும். அது காற்றாலும் தாவரங்களின் தன்மையாலும் பரவுகிறது. ஆனால் தற்போது மனிதச் செயற்பாடுகளாலேயே அதிகளவில் காட்டுத் தீ ஏற்படுகிறது.
வட அமெரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளையும் வட மேல் சீனாவையும் பொறுத்தவரையிலே காட்டுத்தீயை ஏற்படுத்தும் பிரதான காரணி மின்னலாகும். மெக்சிக்கோ, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, தென் கிழக்காசியா, பிஜி மற்றும் நியூஸிலாந்தைப் பொறுத்த வரையிலே காட்டுத்தீயை மனித நடவடிக்கைகளே ஏற்படுத்துகின்றன.
வனப் பகுதிகளைப் பொறுத்தவரையிலே காட்டுத்தீயால் பல நன்மைகளும் ஏற்படுகின்றன. சில தாவர இனங்கள் தமது வளர்ச்சிக்காகவும் இனப் பெருக்கத்துக்காகவும் காட்டுத்தீயையே நம்பியிருக்கின்றன. அதேவேளை, காட்டுத்தீயினால் எதிர்மறையான சூழல் விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.





இந்த உலகம் காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் கூட காலத்தின் விளைவுதான். காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்கபொருள் உலகில் வேறொன்றுமில்லை என்கிறது மகாபாரதம்.
இவ்வுலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது என்பர். ஆற அமர்ந்து இயற்கையின் விந்தையைச் சில நிமிடங்கள் சிந்தித்தாலே அக்கூற்றின் அர்த்தம் புரியும்.
இவ்வுலகில், யாவுமே பஞ்சபூதங்களால் ஆனவை என்பர். ஆக்குவதும் அவையே. அழிப்பதும் அவையே என்பதை யதார்த்தமாக உணர்த்தி நிற்கிறது காலம்.
‘நிலமைந்து நீர்நான்கு நீடங்கிமூன்றே
உலவை இரண்டு ஒன்று விண்’
என்கிறது ஒளவையின் குறள். அதாவது, ஆகாயம் - முதல் பூதம், காற்று - இரண்டாம் பூதம், நெருப்பு - மூன்றாம் பூதம், நீர் - நான்காம் பூதம், நிலம் - ஐந்தாம் பூதம் என்கிறார் ஒளவையார். உலகம் கண்ட பரிணாம வளர்ச்சியை அவர் இக்குறளால் குறிப்புணர்த்தியிருக்கிறாரோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.
இந்தப் பஞ்ச பூதங்களின் சமநிலையை மனிதன் குலைக்க முயலும் போது தான் அவை உக்கிரமடைந்து அவனுக்கு எதிராகவே திரும்பி விட்டன போலும். உண்மையில் உடல் நிலையில் ஐம் பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப் பெற்றவன் மனிதன். ஆனால் அவன் அவற்றை உணர்வதில்லை.
கடந்த வருடம் தான் இயற்கை அனர்த்தங்களால் நிறைந்து போய்க் காணப்பட்டது என்றால், இந்த வருடம் கடந்த வருடத்தைவிட மோசமானதாக இருக்குமோ என்றும் அஞ்ச வேண்டி இருக்கிறது.
நிலமும் நீரும் உக்கிரம் கொண்டு பின் கதிர்வீச்சின் பெயரால் காற்றும் தீயும் கைகொடுக்க வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருக்கிறது ஜப்பான்.
நிலம் அதிர நீர் பொங்கி சுனாமியாய் மேலெழுந்தது. நிலம் அதிர்ந்ததன் விளைவாய் அணு உலைகளின் பிளப்பான்கள் வெடித்தன. பற்றி எரிந்தன. கதிர்வீச்சின் தாக்கம் காற்றில் மட்டுமன்றி, நிலத்திலும் நீரிலும் கூடக் காணப்பட்டது.
மொத்தத்தில் பஞ்ச பூதங்களும் ஜப்பானுக்கு எதிராகத் திரும்பின என்றால் கூட மிகையில்லை.
பல அணு உலைகள் மூலம் மின்சாரத்தைப் பிறப்பிக்கும் புகுஷிமா என்ற பெருநகரத்தினுள் மக்கள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நகரின் நிலைமையைக் கணப்பொழுதுகளில் புரட்டிப் போட்டு விட்டன இந்தப் பஞ்ச பூதங்கள்.
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் பேரனர்த்தத்தால் பல உலக நாடுகள் அதிர்ந்து போயிருக்கின்றன. அணு உலைகள் பலவற்றைக் கொண்டுள்ள நாடுகள் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. புதிய அணுசக்தி உடன் படிக்கைகளைக் கைச்சாத்திடவிருந்த நாடுகளும் அணுசக்திப் பயன்பாடு பற்றிய பிரேரணைகளை நிறைவேற்ற விருந்த நாடுகளும் அவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
அணு உலைகளை அமைத்திராத நாடுகளும் ஜப்பான் அனர்த்தத்தையடுத்து அச்சங் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அது ஜப்பான் அனர்த்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சு தமக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமாகும்.
இவை எல்லாம் இப்படி இருக்க தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை பெரும் காட்டுத் தீ பாத்திருக்கிறது.
டெக்ஸாஸ், ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலம். ஒஸ்டினைத் தலை நகராக கொண்ட டெக்ஸாஸ் 678,054 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது.
இது அமெரிக்காவில் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதான விவசாய மாநிலமாகும். அத்துடன் கைத்தொழில்களிலும் சிறந்து விளங்குகிறது. பரப்பளவைப் பொறுத்த வரையில் அலஸ்கா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இருந்தாலும் எண்ணெய், பண்ணை, மந்தைத் தொழில்களிலும் பஞ்சு உற்பத்தியிலும் முன்னணியில் திகழ்கிறது.
பண்ணை உற்பத்திப் பொருட்கள், முட்டைகள், பாற்பொருட்கள் மட்டுமன்றி கோதுமை, நெல், கரும்பு, நிலக்கடலை, பல்வேறுபட்ட மரக்கறிகள் மற்றும் பழங்களும் உற்பத்தி செய்விக்கப்படுகின்றன. விளைவிக்கப்படுகின்றன.
கந்தகம், உப்பு, ஹீலியம், கிராபைட், புரோமின், இயற்கை வாயு, களிமண் போன்றவை இம்மாநிலத்தின் பெறுமதிமிக்க வளங்களாகக் கருதப்படுகின்றன. இரசாயனப் பொருட்களின் உற்பத்தி, உணவுத் தயாரிப்பு, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களின் உற்பத்தி போன்றன அவ்வளங்களைச் சார்ந்து நடைபெறுகின்றன.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் டெக்ஸாஸ் மாநிலத்தில் கோடைக்காலம் நிலவுகிறது. அத்தகைய காலங்களில் மழை வீழ்ச்சியினளவு குறைவாக இருக்கும் அதே வேளை காட்டுத்தீ அனர்த்தம் உருவாகும் சாத்தியக் கூறுகளும் அதிகமாகக் காணப்படுவது வழமையே.
தற்போது அவ்வாறு ஏற்பட்ட காட்டுத்தீயால் கடந்த இருவார காலப் பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாயிற்று. 244 வீடுகளும் எரிந்து போயின.
டெக்ஸாஸின் ஒரு பகுதியில் மட்டும் இந்த அனர்த்தம் நிகழவில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என 4 திசைகளிலும் தீபரவுகிறது. 4 இடங்களில் பரவிய காட்டுத்தீ, பின்னர் ஒன்றாக இணைந்தும் பரவியிருக்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் வாரத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயல் ஏற்படலாமென தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
மழையின்றி மின்னலும் புயலும் ஏற்பட்டால் காட்டுத்தீ இன்னும் அபாயகரமாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. டெக்ஸாஸின் மலைப் பாங்கான பகுதிகளும் பெருமளவில் காட்டுத் தீ அபாயத்தை எதிர்நோக்குகின்றன.
அந்த மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 7000க்கும் அதிகமான இடங்களில் இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
பசுமையாய் இருந்த புல்வெளிகள் காணாமலே போய் விட்டன. நிலம் தனது ஈரப்பற்றை முற்றாக இழந்து பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சகல மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கும் தீயணைப்புப் படை வீரர்கள் காட்டுத் தீயுடன் போராடுகிறார்கள். அவர்களுள் இருவர் பலியாகியும் இருக்கிறார்கள்.
காட்டுத்தீக்கு எதிராக நிலத்தில் புல்டோசர்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு போராடும் வீரர்கள் வானில் உலங்கு வானூர்திகளையும் சில நவீன உபகரணங்களையும் கொண்டு போராடுகிறார்கள்.
இனிவரும் காலங்களில் காற்று வீசுவது குறைந்தாலோ அல்லது மழை பெய்தாலோ மட்டுமே இந்த அனர்த்தத்தின் தன்மையை அறியலாம். அது காலாகாலமாக நிகழும் அனர்த்தம்தான். ஆனால் இம்முறை இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவு முன்னைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவற்றை விட மிக அதிகமாகும்.
கடந்த ஆறு மாத காலமாக இங்கு உலர் கால நிலை நிலவி வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியில் பதிவான மிக மோசமான காலநிலையும் இதுவாகும்.
இந்த காட்டு தீயால் மக்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை விட டெக்ஸாஸின் இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.
நிலம் தனது ஈரப்பற்றை இழந்து வரண்டு கொண்டிருக்கிறது. மழை ஒன்று பெய்தாலன்றி நிலம் இழந்த ஈரப்பற்றை வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது. நிலத்தின் ஈரபற்று அதன் வளத்தைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கிறது. ஈரப்பற்று துரிதமாக மீளாவிட்டால் விவசாயம் பாதிக்கப்படும். ஒரு மிகப் பெரிய விவசாய மாநிலத்தில் வேளாண்மை பாதிக்கப்படுவதானது தேசிய ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
விவசாயத்தையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாபவை மந்தைகளாகும். காட்டுத்தீ மந்தைகளை நேரடியாகவும் பாதித்துள்ளது. அதன் வெப்பத்தால் அவற்றின் பாதங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொக்களங்கள் உருவாகியிருக்கின்றன. காட்டுத்தீயால் ஏற்படும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
காலங்கடந்தால் மந்தை வர்த்தகமும் பாதிக்கப்படுமென நம்பப்படுகிறது. மந்தைகளின் பிரதான உணவு மூலமாக இருக்கும் புற்றரைகள் காட்டுத்தீயினால் அழிந்து போயுள்ளன. உடனடியாக மழை பெய்யாவிடில், அவற்றிற்கான உணவு மூலம் கேள்விக் குறியாகிவிடும்.
அத்துடன், அவற்றிற்காக உற்பத்தி செய்யப்படும் வைக்கோல் போன்ற மீதங்களாலான உணவின் தரமும் குன்றிவிடும் என நம்பப்படுகிறது. இவற்றிற்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவையொன்றும் காணப்படுகிறது.
கடந்த வருடம் கூட இத்தகையதொரு நிலை காணப்பட்டது உண்மையே. டெக்ஸாஸில் ஏற்பட்ட பருவம் முந்திய மழையினால் புற்றரைகளும் விவசாயமும் பாதிக்கப்பட்டது. மழையைத் தொடர்ந்து ஆரம்பித்தது பனிக்கலாம். பயிர்களெல்லாம் பனியிலே உறைந்து அழிந்து போயின. அந்த அழிவைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் வரண்ட கால நிலையும் வீசும் உலர்காற்றும் உணவுப் பயிர்களை எல்லாம் எரிபொருளாக மாற்றியிருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பஞ்சபூதங்களால் ஏற்பட்டிருக்கும் அழிவைச் சீர்செய்ய மீண்டும் பஞ்சபூதங்களையே நம்பியிருக்கிறான் மனிதன்.
தொழில்நுட்பத்தில் என்னதான் வளர்ச்சி கண்டாலும் எத்தகைய பலம் பொருந்திய தேசமாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தாலும் இயற்கையின் முன்னே அவை எல்லாம் வெறும் தூசுதான். இயற்கை பாரபட்சம் அறியாதது. தனது சமநிலை குலைகிறது என உணரும் போது அதை மீண்டும் சீராகப் பேண நினைக்கிறது. அதற்காக செயலில் இறங்கி விடுகிறது. எமக்கோ அது பேரனர்த்தமாகத் தெரிகிறது.
எமது பாதுகாப்பையும் சமநிலையையும் மனிதர்களாய் நாம் உறுதி செய்வதற்காக என்னெல்லாமோ செய்கிறோம். இயற்கையையே அழிக்கிறோம்.
ஆனால், தனது சமநிலையைப் பேணும் உரிமை இயற்கைக்கும் இருக்கிறது என்பதை மட்டும் நாம் உணர்வதில்லை. அத்துடன் இயற்கையின் சமநிலை குலைக்கப்பட்டால், அழிந்து போவது நாங்களும் தான் என்ற நிதர்சனத்தை யும் நாம் உணரத்தலைப்படுவதில்லை.
இயற்கை அனர்த்தம் என்றால் எமக்குத் தெரிந்தவை சேதங்களும் அழிவுகளும் மட்டுமே. இங்கும் மனிதனின் சுயநலம் தான் முன்னிலை வகிக்கிறது.

No comments:

Post a Comment