Sunday, April 24, 2011

ஆவதும் அழிவதும் பஞ்சபூ தங்களாலே!


காட்டுத் தீ என்பது வனப் பகுதிகளில் அல்லது தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் ஏற்படும் கட்டுப்படுத்தமுடியாத தீயாகும். பொதுவாக எரியக் கூடியத் (எரிபொருளாகத் தொழிற்படக் கூடிய) தாவரங்கள் இருக்கும் பகுதிகளிலேயே காட்டுத் தீ ஏற்படும்.
அந்தாட்டிக்கா கண்டம் தவிர ஏனைய கண்டங்கள் யாவற்றிலும் இது ஏற்படுகிறது. உலக வரலாற்றிலே ஒரு குறித்த கால இடைவெளியில் காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதை சுவட்டு ஆதாரங்கள் நிரூபித்திருக்கின்றன.
காட்டுத்தீ தாவரங்கள் உள்ள இடங்களில் பரவினாலும் அயற் சூழலில் வாழும் சமூகங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. அதனால் அங்கு மனித உயிருக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதம் தவிர்க்க முடியாததாகிறது.
சில வேளைகளில் காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கும். காட்டுத் தீ உருவாவதற்கு மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழும் போது ஏற்படும் தீப்பொறி மற்றும் சாதகமான குறை தகனம் போன்றனவே பிரதான இயற்கைக் காரணிகளாகும். அது காற்றாலும் தாவரங்களின் தன்மையாலும் பரவுகிறது. ஆனால் தற்போது மனிதச் செயற்பாடுகளாலேயே அதிகளவில் காட்டுத் தீ ஏற்படுகிறது.
வட அமெரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளையும் வட மேல் சீனாவையும் பொறுத்தவரையிலே காட்டுத்தீயை ஏற்படுத்தும் பிரதான காரணி மின்னலாகும். மெக்சிக்கோ, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, தென் கிழக்காசியா, பிஜி மற்றும் நியூஸிலாந்தைப் பொறுத்த வரையிலே காட்டுத்தீயை மனித நடவடிக்கைகளே ஏற்படுத்துகின்றன.
வனப் பகுதிகளைப் பொறுத்தவரையிலே காட்டுத்தீயால் பல நன்மைகளும் ஏற்படுகின்றன. சில தாவர இனங்கள் தமது வளர்ச்சிக்காகவும் இனப் பெருக்கத்துக்காகவும் காட்டுத்தீயையே நம்பியிருக்கின்றன. அதேவேளை, காட்டுத்தீயினால் எதிர்மறையான சூழல் விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.





இந்த உலகம் காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் கூட காலத்தின் விளைவுதான். காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்கபொருள் உலகில் வேறொன்றுமில்லை என்கிறது மகாபாரதம்.
இவ்வுலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது என்பர். ஆற அமர்ந்து இயற்கையின் விந்தையைச் சில நிமிடங்கள் சிந்தித்தாலே அக்கூற்றின் அர்த்தம் புரியும்.
இவ்வுலகில், யாவுமே பஞ்சபூதங்களால் ஆனவை என்பர். ஆக்குவதும் அவையே. அழிப்பதும் அவையே என்பதை யதார்த்தமாக உணர்த்தி நிற்கிறது காலம்.
‘நிலமைந்து நீர்நான்கு நீடங்கிமூன்றே
உலவை இரண்டு ஒன்று விண்’
என்கிறது ஒளவையின் குறள். அதாவது, ஆகாயம் - முதல் பூதம், காற்று - இரண்டாம் பூதம், நெருப்பு - மூன்றாம் பூதம், நீர் - நான்காம் பூதம், நிலம் - ஐந்தாம் பூதம் என்கிறார் ஒளவையார். உலகம் கண்ட பரிணாம வளர்ச்சியை அவர் இக்குறளால் குறிப்புணர்த்தியிருக்கிறாரோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.
இந்தப் பஞ்ச பூதங்களின் சமநிலையை மனிதன் குலைக்க முயலும் போது தான் அவை உக்கிரமடைந்து அவனுக்கு எதிராகவே திரும்பி விட்டன போலும். உண்மையில் உடல் நிலையில் ஐம் பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப் பெற்றவன் மனிதன். ஆனால் அவன் அவற்றை உணர்வதில்லை.
கடந்த வருடம் தான் இயற்கை அனர்த்தங்களால் நிறைந்து போய்க் காணப்பட்டது என்றால், இந்த வருடம் கடந்த வருடத்தைவிட மோசமானதாக இருக்குமோ என்றும் அஞ்ச வேண்டி இருக்கிறது.
நிலமும் நீரும் உக்கிரம் கொண்டு பின் கதிர்வீச்சின் பெயரால் காற்றும் தீயும் கைகொடுக்க வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருக்கிறது ஜப்பான்.
நிலம் அதிர நீர் பொங்கி சுனாமியாய் மேலெழுந்தது. நிலம் அதிர்ந்ததன் விளைவாய் அணு உலைகளின் பிளப்பான்கள் வெடித்தன. பற்றி எரிந்தன. கதிர்வீச்சின் தாக்கம் காற்றில் மட்டுமன்றி, நிலத்திலும் நீரிலும் கூடக் காணப்பட்டது.
மொத்தத்தில் பஞ்ச பூதங்களும் ஜப்பானுக்கு எதிராகத் திரும்பின என்றால் கூட மிகையில்லை.
பல அணு உலைகள் மூலம் மின்சாரத்தைப் பிறப்பிக்கும் புகுஷிமா என்ற பெருநகரத்தினுள் மக்கள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நகரின் நிலைமையைக் கணப்பொழுதுகளில் புரட்டிப் போட்டு விட்டன இந்தப் பஞ்ச பூதங்கள்.
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் பேரனர்த்தத்தால் பல உலக நாடுகள் அதிர்ந்து போயிருக்கின்றன. அணு உலைகள் பலவற்றைக் கொண்டுள்ள நாடுகள் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. புதிய அணுசக்தி உடன் படிக்கைகளைக் கைச்சாத்திடவிருந்த நாடுகளும் அணுசக்திப் பயன்பாடு பற்றிய பிரேரணைகளை நிறைவேற்ற விருந்த நாடுகளும் அவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
அணு உலைகளை அமைத்திராத நாடுகளும் ஜப்பான் அனர்த்தத்தையடுத்து அச்சங் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அது ஜப்பான் அனர்த்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சு தமக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமாகும்.
இவை எல்லாம் இப்படி இருக்க தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை பெரும் காட்டுத் தீ பாத்திருக்கிறது.
டெக்ஸாஸ், ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலம். ஒஸ்டினைத் தலை நகராக கொண்ட டெக்ஸாஸ் 678,054 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது.
இது அமெரிக்காவில் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதான விவசாய மாநிலமாகும். அத்துடன் கைத்தொழில்களிலும் சிறந்து விளங்குகிறது. பரப்பளவைப் பொறுத்த வரையில் அலஸ்கா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இருந்தாலும் எண்ணெய், பண்ணை, மந்தைத் தொழில்களிலும் பஞ்சு உற்பத்தியிலும் முன்னணியில் திகழ்கிறது.
பண்ணை உற்பத்திப் பொருட்கள், முட்டைகள், பாற்பொருட்கள் மட்டுமன்றி கோதுமை, நெல், கரும்பு, நிலக்கடலை, பல்வேறுபட்ட மரக்கறிகள் மற்றும் பழங்களும் உற்பத்தி செய்விக்கப்படுகின்றன. விளைவிக்கப்படுகின்றன.
கந்தகம், உப்பு, ஹீலியம், கிராபைட், புரோமின், இயற்கை வாயு, களிமண் போன்றவை இம்மாநிலத்தின் பெறுமதிமிக்க வளங்களாகக் கருதப்படுகின்றன. இரசாயனப் பொருட்களின் உற்பத்தி, உணவுத் தயாரிப்பு, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களின் உற்பத்தி போன்றன அவ்வளங்களைச் சார்ந்து நடைபெறுகின்றன.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் டெக்ஸாஸ் மாநிலத்தில் கோடைக்காலம் நிலவுகிறது. அத்தகைய காலங்களில் மழை வீழ்ச்சியினளவு குறைவாக இருக்கும் அதே வேளை காட்டுத்தீ அனர்த்தம் உருவாகும் சாத்தியக் கூறுகளும் அதிகமாகக் காணப்படுவது வழமையே.
தற்போது அவ்வாறு ஏற்பட்ட காட்டுத்தீயால் கடந்த இருவார காலப் பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாயிற்று. 244 வீடுகளும் எரிந்து போயின.
டெக்ஸாஸின் ஒரு பகுதியில் மட்டும் இந்த அனர்த்தம் நிகழவில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என 4 திசைகளிலும் தீபரவுகிறது. 4 இடங்களில் பரவிய காட்டுத்தீ, பின்னர் ஒன்றாக இணைந்தும் பரவியிருக்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் வாரத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயல் ஏற்படலாமென தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
மழையின்றி மின்னலும் புயலும் ஏற்பட்டால் காட்டுத்தீ இன்னும் அபாயகரமாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. டெக்ஸாஸின் மலைப் பாங்கான பகுதிகளும் பெருமளவில் காட்டுத் தீ அபாயத்தை எதிர்நோக்குகின்றன.
அந்த மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 7000க்கும் அதிகமான இடங்களில் இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
பசுமையாய் இருந்த புல்வெளிகள் காணாமலே போய் விட்டன. நிலம் தனது ஈரப்பற்றை முற்றாக இழந்து பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சகல மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கும் தீயணைப்புப் படை வீரர்கள் காட்டுத் தீயுடன் போராடுகிறார்கள். அவர்களுள் இருவர் பலியாகியும் இருக்கிறார்கள்.
காட்டுத்தீக்கு எதிராக நிலத்தில் புல்டோசர்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு போராடும் வீரர்கள் வானில் உலங்கு வானூர்திகளையும் சில நவீன உபகரணங்களையும் கொண்டு போராடுகிறார்கள்.
இனிவரும் காலங்களில் காற்று வீசுவது குறைந்தாலோ அல்லது மழை பெய்தாலோ மட்டுமே இந்த அனர்த்தத்தின் தன்மையை அறியலாம். அது காலாகாலமாக நிகழும் அனர்த்தம்தான். ஆனால் இம்முறை இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவு முன்னைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவற்றை விட மிக அதிகமாகும்.
கடந்த ஆறு மாத காலமாக இங்கு உலர் கால நிலை நிலவி வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியில் பதிவான மிக மோசமான காலநிலையும் இதுவாகும்.
இந்த காட்டு தீயால் மக்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை விட டெக்ஸாஸின் இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.
நிலம் தனது ஈரப்பற்றை இழந்து வரண்டு கொண்டிருக்கிறது. மழை ஒன்று பெய்தாலன்றி நிலம் இழந்த ஈரப்பற்றை வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது. நிலத்தின் ஈரபற்று அதன் வளத்தைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கிறது. ஈரப்பற்று துரிதமாக மீளாவிட்டால் விவசாயம் பாதிக்கப்படும். ஒரு மிகப் பெரிய விவசாய மாநிலத்தில் வேளாண்மை பாதிக்கப்படுவதானது தேசிய ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
விவசாயத்தையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாபவை மந்தைகளாகும். காட்டுத்தீ மந்தைகளை நேரடியாகவும் பாதித்துள்ளது. அதன் வெப்பத்தால் அவற்றின் பாதங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொக்களங்கள் உருவாகியிருக்கின்றன. காட்டுத்தீயால் ஏற்படும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
காலங்கடந்தால் மந்தை வர்த்தகமும் பாதிக்கப்படுமென நம்பப்படுகிறது. மந்தைகளின் பிரதான உணவு மூலமாக இருக்கும் புற்றரைகள் காட்டுத்தீயினால் அழிந்து போயுள்ளன. உடனடியாக மழை பெய்யாவிடில், அவற்றிற்கான உணவு மூலம் கேள்விக் குறியாகிவிடும்.
அத்துடன், அவற்றிற்காக உற்பத்தி செய்யப்படும் வைக்கோல் போன்ற மீதங்களாலான உணவின் தரமும் குன்றிவிடும் என நம்பப்படுகிறது. இவற்றிற்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவையொன்றும் காணப்படுகிறது.
கடந்த வருடம் கூட இத்தகையதொரு நிலை காணப்பட்டது உண்மையே. டெக்ஸாஸில் ஏற்பட்ட பருவம் முந்திய மழையினால் புற்றரைகளும் விவசாயமும் பாதிக்கப்பட்டது. மழையைத் தொடர்ந்து ஆரம்பித்தது பனிக்கலாம். பயிர்களெல்லாம் பனியிலே உறைந்து அழிந்து போயின. அந்த அழிவைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் வரண்ட கால நிலையும் வீசும் உலர்காற்றும் உணவுப் பயிர்களை எல்லாம் எரிபொருளாக மாற்றியிருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பஞ்சபூதங்களால் ஏற்பட்டிருக்கும் அழிவைச் சீர்செய்ய மீண்டும் பஞ்சபூதங்களையே நம்பியிருக்கிறான் மனிதன்.
தொழில்நுட்பத்தில் என்னதான் வளர்ச்சி கண்டாலும் எத்தகைய பலம் பொருந்திய தேசமாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தாலும் இயற்கையின் முன்னே அவை எல்லாம் வெறும் தூசுதான். இயற்கை பாரபட்சம் அறியாதது. தனது சமநிலை குலைகிறது என உணரும் போது அதை மீண்டும் சீராகப் பேண நினைக்கிறது. அதற்காக செயலில் இறங்கி விடுகிறது. எமக்கோ அது பேரனர்த்தமாகத் தெரிகிறது.
எமது பாதுகாப்பையும் சமநிலையையும் மனிதர்களாய் நாம் உறுதி செய்வதற்காக என்னெல்லாமோ செய்கிறோம். இயற்கையையே அழிக்கிறோம்.
ஆனால், தனது சமநிலையைப் பேணும் உரிமை இயற்கைக்கும் இருக்கிறது என்பதை மட்டும் நாம் உணர்வதில்லை. அத்துடன் இயற்கையின் சமநிலை குலைக்கப்பட்டால், அழிந்து போவது நாங்களும் தான் என்ற நிதர்சனத்தை யும் நாம் உணரத்தலைப்படுவதில்லை.
இயற்கை அனர்த்தம் என்றால் எமக்குத் தெரிந்தவை சேதங்களும் அழிவுகளும் மட்டுமே. இங்கும் மனிதனின் சுயநலம் தான் முன்னிலை வகிக்கிறது.

Monday, April 18, 2011

அடர்ந்து செறிந்த பற்றைக்குள் அழிவடைந்த நிலையில் புராதன ஆலயம்


காடும் மலையும் இல்லையென்றால்....?

காடும் மலையும் இல்லையென்றால்
வீடும் நாடும் இனி யேது?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!


இந்த வரிகளின் யதார்த்தத்தை இப்போது மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறோம் என்றே கூற வேண்டும். இயற்கையின் ஆசிகளை ஒருங்கே பெற்ற திரு நாடு இலங்கை.
கடலோ மலையோ, ஆறோ குளமோ, வயலோ காடோ எங்கு செல்ல வேண்டுமென்றாலும் சில மணித்தியாலய பயணம் மட்டுமே போதுமானது. எல்லா நாடுகளுக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. ஆனால் உலக வரைபடத்திலே ஒரு சிறு புள்ளியாய்த் தெரியும் இலங்கைத் தீவுக்குக் கிடைத்திருக்கிறது.
இயற்கையின் சொர்க்காபுரி என்று இலங்கையை வர்ணித்தல் தகும். எமக்கு அருகிலே இருக்கும் நாடு இந்தியா. அதிலும் தமிழ் நாடு மிக அருகில் என்று கூறலாம். அங்கே சனத்தொகை அடர்த்தி அதிகம். வளங்களின் அளவு குறைவு. ஆனால் இருக்கும் வளங்களைக் கொண்டு அவற்றின் உச்சப்பயனைப் பெற முயற்சிக்கும் அம்மக்களின் அயராத உழைப்பையும் தளராத நம்பிக்கையையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மாறாக இலங்கையிலோ நிலைமை தலைகீழானது. தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது இங்கு சனத்தொகை அடர்த்தி குறைவு. இயற்கை வளச்செறிவு மிக அதிகம். ஆனால் எமக்குத் தான் அந்த அருமை புரிவதில்லை. இயற்கை வளங்கள் அருகக்கூடியவை என்ற சிந்தனை கூட இல்லாமல் அவற்றை வீணடிக்கிறோம்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானப்பயணம் மேற்கொண்டால் யன்னலினூடு எம் பூமித்தாயை அவதானித்துப் பாருங்கள். விமானம் இலங்கைக்கு மேலாகப் பறக்கும் போது உங்களுக்குத் தெரிவது, பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் நதிகளும் நீர்த்தேக்கங்களும் பச்சைப்பசேலென்று தாவரங்களால் நிறைந்து போயிருக்கும் நிலப்பகுதியுமே. விமானம் மெல்ல மெல்ல இலங்கையைக் கடந்து தமிழ் நாட்டை அண்மிக்கும் போது வித்தியாசத்தை நன்கு உணர்வீர்கள்.
மரங்கள் நிறைந்து பச்சையாய்த் தெரிந்த நிலம் வெட்ட வெளியாய் மண்ணிறத்தில் தெரியத் தொடங்கும், கட்டடங்கள் மட்டும் எட்டிப்பார்க்கும். ஆங்காங்கே ஆறுகளும் தான் தெரியும். இந்தக் காட்சி மாற்றத்தை அனுபவித்து உணர்ந்து பார்த்தவர்களுக்கு எமது நாட்டுக்குக் கிடைத்த இயற்கையின் ஆசீர்வாதம் என்ன என்பது தெளிவாகப் புரிந்திருக்கும் ஆனால் நாம் அந்த ஆசீர்வாதத்தை உணர்வது கூட இல்லை.
இலங்கைக்கு இயற்கை அன்னை தந்த கொடைகள் யாவுமே இன்று பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி யிருக்கின்றன. எதிர்காலத்தைப் பற்றி சிறிதளவேனும் சிந்திக்காமல் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் இன்று எம் மத்தியில் பெரும் சவால்களை உருவாக்கி விட்டிருக்கின்றன.
தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எமது நாடு மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டப் படவேண்டியவை தான். ஆயினும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது பங்களிப்பை மட்டுப்படுத்துகின்றனரோ என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றுகிறது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது உண்மையில் சுற்றுச்சூழலைப் பேணுவதுடன் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதாகவும் அர்த்தப்படும். அவை மட்டுமன்றி சூழல் தொகுதிகளையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினுள் அடங்கும்.
இந்த இயற்கைச் சூழலுக்கு மனிதனால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியிலே பெருந்தொகையான அமைப்புகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆசிய வலயத்திலே உயிர்ப்பல்வகைமை கூடிய நாடுகளுள் இலங்கையும் முதன்மை வகிக்கிறது. ஆசிய பிராந்தியத்திலே இலங்கையில் வனவளம் மிகவும் பெறுமதி மிக்கதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் இங்கு இனப்பல்வகைமையின் அடர்த்தி மிக அதிகமாகும். ஆனால் அண்மைக்காலங்களிலே இந்த வன வளம் உட்பட இயற்கை வளங்களுக்கு எம்மால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது எம் தேசத்தின் இயற்கை அழகைக் கெடுத்து வருவது மட்டுமல்லாமல், மீண்டும் எமக்கே அச்சுறுத்தலாக மாறி விடுகிறது.
தற்போது இலங்கையின் நிலப்பரப்பில் 25 சதவீதத்துக்கும் குறைவானளவு நிலப்பரப்பிலேயே காடு இருக்கிறது. ஆனால் இது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் இருந்த காடுகளின் அளவில் அரைவாசியாகும். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட மர நடுகைத்திட்டங்களான மீள் காடாக்கல் செயற்பாடுகளால் உருவான காடு 30 சதவீதமளவிற்கு இருக்கிறது. இவை இயற்கையானவை அல்ல. அத்துடன் இவற்றில் பெரும்பாலானவை ஏகவினமானவை. அதலால் இயற்கைக் காடுகளில் இருக்கும் உயிர்ப் பல்வகைமையை இந்த மர நடுகைத்திட்டங்களில் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் 1800 களிலே இலங்கையின் நிலப்பரப்பில் 80 சதவீதமான பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்தது.
பல்வேறு பட்ட மனித நடவடிக்கைகள் காடழிப்பிற்குக் காரணமாயின. இலங்கையில் ஏற்பட்ட காலனித்துவ ஆதிக்கத்தையடுத்து பெருந்தோட்டப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
குடியேற்றத்திட்டங்கள் உருவாயின புதிய பாதைகள் போடப்பட்டன. இத்தகைய பல நடவடிக்கைகளால் இயற்கைக் காடுகள் அழிக்கப்படத் தொடங்கின. கடந்த இரு நூறு வருடங்களாக இந்த நிலைமை தொடர்ந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததையடுத்து இலங்கையின் சனத்தொகையிலும் துரித அதிகரிப்பொன்று காணப்பட்டது. இவை யாவற்றாலும் இயற்கைக் காடழிப்பு தவிர்க்க முடியாததாகியது.
எதையுமே ஆக்குவதை விட அழிப்பது மிகச் சுலபம் என்று மூத்தோர் கூறுவர். அது காடழிப்பு விடயத்திலும் பொருந்தும். மாற்றுவழிகளைச் சிந்திப்பதை விட காட்டை அழித்து அபிவிருத்தியை மேற்கொள்வது இலகுவாகப்பட்டது போலும். காடுகள் துரித கதியில் அழிக்கப்பட்டு இன்று 25 இலும் குறைந்தளவு சதவீதத்துக்கு வந்து விட்டன.
காடுகள் அழிக்கப்படுவதன் விளைவால் மேலும் பல பிரச்சினைகளும் உருவாயின.
மண்ணரிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், தாவர, விலங்கினங்களின் அழிவு, மண் தரமிழத்தல் ஆகியவற்றுடன் மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் கூட சேதம் ஏற்பட ஏதுவாகியது.
இந்தப் பூவுலகிலே மனித உயிர் நிலைத்திருப்பதற்கும் முதன்மைக் காரணமான விடயங்களுள் மண்ணும் ஒன்று. இலங்கையின் மண் சட்டத்திற்கமைய (1996), மண்ணைப் பாதுகாப்பதற்காகவே பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி, வீடமைப்பு பெருந்தெருக்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், நிதி திட்டமிடல், நீர்ப்பாசன அமைச்சுகள், வன பரிபாலன சபை, மாகாண சபைகள் போன்றன அவற்றுள் சிலவாகும். பல்வேறு பட்ட சேதங்களில் இருந்து மண்ணைப் பாதுகாக்கம் வகையிலேயே இந்த மண் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் அச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆதலால் சிறந்த வளம் கொண்ட மலை நாடு மண் அரிப்பிற்குள்ளாகும் பகுதிகளுள் முன்னணியில் இருக்கிறது என்பது இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
எமது நாட்டின் நகரப் பகுதிகளில் தற்போது அதிகரிக்கும் குப்பைகளின் அளவு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
அதனால் மொறட்டுவ, கண்டி, கொழும்பு, மாத்தளை, கம்பஹா, மற்றும் நீர்கொழும்பு போன்ற பல நகரப்பகுதிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இப்பகுதிகளில் குப்பைகளால் ஏற்படும் மாசு அதிகரித்துக் காணப்படுவதே அதற்கான காரணமாகும். அத்துடன் குப்பைகளைக் கொட்டுவதற்கு போதிய இடவசதி காணப்படாமையும் அவற்றை மீள் சுழற்சி, செய்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும் பெரிய அளவிலே காணப்படவில்லை என்பதுமே காரணங்களாகும். பல மாநகர சபைகளிலே குப்பைகளை முறையாக அகற்றுவதற்கான கட்டமைப்புக்கள் காணப்படவில்லை என்ற உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதனால் நகரப்பகுதிகளில் மட்டுமன்றி புற நகர்ப்பகுதிகளிலும் குப்பைகள் சேர்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இது சுகாதார சீர்கேடாக அமைவது மட்டுமன்றி கட்டாக்காலி விலங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து விட்டது. அவை மட்டுமன்றி குரங்குகள், யானைகள், மான்கள் எனப் பல விலங்கினங்கள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தக் குப்பைகளை நாடத் தலைப்பட்டுள்ளன. திருகோணமலை பிறெட்றிக் கோட்டையின் அயற் சூழலிலே கொட்டப்படும் குப்பைகளை உணவாக உட்கொண்டபடி சுற்றித்திரியும் அத்தகைய மான்களைக் காண முடியும்.
நகரப் பகுதிகளில் உள்ள பல வடிகால்களில் நீர் வடிந்தோடும் வேகம் குறைவடைவதற்கும் அப்புறப்படுத்தும் குப்பைகளின் அளவு அதிகரித்தமையே பிரதான காரணமாகும்.
மழைக்காலங்களிலே நகர்ப்பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்துக்கான பிரதான காரணமும் இதுவாகும். அத்துடன் வடிகால்களில் சேரும் குப்பைகள் நோய்க்காவிகளான நுளம்பு, எலி போன்றவற்றின் இனப்பெருக் கத்துக்கும் வழி வகுத்து விடுகின்றன. குப்பைகளைத் திறந்த வெளியிலே கொட்டும் போது நீர்ப்பரப்புகள் மட்டுமன்றி நிலக்கீழ் நீரும் கூட மாசுபடுகிறது.
திறந்த வெளியிலே கொட்டப்படும் குப்பைகளை சட்டவிரோதமான முறையிலே எரிக்கும் செயற்பாடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இது சுவாசக்கோளாறுகளையும் வளி மாசையும் ஏற்படுத்துகிறது.
இலங்கை ஒரு தீவாதலால் இங்கு சேர்ந்திருக்கும் நிலப்பகுதிகளை எதிர்பார்க்க முடியாது.
ஆதலால் தான் காட்டுயிர் வளத்தைப் பேணுவது மிக மிக அவசியம் எனக் கூறப்படுகிறது. ஏனைய பெரிய நாடுகளைப்போல் ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொரு பிராந்தியத்திற்கு விலங்குகள் இடம்பெயர்வதென்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சாத்தியமற்ற ஒன்று. காட்டுயிர் ஒன்று அழிந்து போகுமானால் போனது தான் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது. மனிதனின் பல்வேறுபட்ட தேவைகளுக்காக காட்டுயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. சிறுத்தை, குரங்கு, காட்டுப்பன்றி, யானை, மரை மற்றும் வேறு சில இனங்கள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
மனிதர்களின் குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட காடுகள் அழிக்கப்பட்டன. கூடவே மனிதனுக்கும் காட்டுயிர்களுக்கும் இடையிலான முரண்பாடும் உருவாகியது.
சில பிரதேசங்களில் யானை - மனிதன் முரண்பாடு வலுப்பெற்றுக் காணப்படவும் இதுவே காரணமாகும். நாம் சாதாரணமானவர்கள் அல்லவே. இத்தகைய முரண்பாடுகளுக்கு நாம் வைத்திருக்கும் பாரம்பரிய தீர்வு ஒன்று இருக்கிறது. முரண்பாட்டுக் குள்ளாகும் யானைகளை புதியதொரு சூழலே வாழச் செய்தலே அந்த முறைமையாகும்.
மனிதனின் சுய நலப் புத்திக்கு இந்த முறைமை ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூடக் கூறலாம். தனக்கு ஒரு இடம் தேவை என்றவுடன் அங்கு வாழும் உயிர்களைக் கருதாது அவ்விடத்தை அவற்றிடமிருந்து பறித்துவிட்டு அவற்றிக்கு புதிய பழக்கப்படாத வாழிடத்தை அமைத்துக் கொடுப்பதானது எவ்வளவு சுய நலமானது? அந்த வாழிடம் அவற்றிக்கும் பழக்கப்பட்டதாக இருக்கும் போது இந்த முரண்பாடுகள் குறைவடையும். இல்லையேல் மேன்மேலும் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமாகும்.
இந்த நடவடிக்கைகளில் ஈபடுவோர் சிலவேளைகளில் அடிப்படைப் பிரச்சினையைப் பற்றி சிந்திப்பதில்லை. பிரச்சினை என்று வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எவருமே பெரியளவில் பாதிக்கப்படாதவாறே தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
இலங்கையைச் சூழ ஏறத்தாழ 1585 கிலோ மீற்றர் நீளமான அழகிய கடல் வலயம் காணப்படுகிறது. அந்த வலயம் கூட கடந்த இரு தசாப்தங்களாகப் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கடல்வளங்கள் பாவனைக்குட்படுத்தப்படுகின்றன. பவளப்பறை அகழ்வு, மணல் அகழ்வு, கண்டல் நிலத்தாவரங்களான தாழை மரங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இன்றும் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன. இது கடலரிப்பையும் சூழல் மாசையும், தோற்றுவிக்கிறது.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு நகரப்பகுதிகளில் புகையிரதப் பாதையிலிருந்து சற்றுத் தூரத்திலேயே கடல் காணப்பட்டது. ஆனால் இன்றோ, புகையிரதப் பாதையைத் தொட்டுவிடும் அளவிலே கடலின் எல்லை காணப்படுகிறது. அதேபோல 1996 ஆம் ஆண்டு ஹிக்கடுவை கடற்பரப்பில் கண்ணாடிப்படகினூடு கண்ட வண்ண வண்ண பவளப்பாறைகளைத் தற்போது காண முடிவதே இல்லை. அங்கு சுண்ணக் கற்பாறைகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.
2004 ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தையடுத்து இலங்கையின் நிலப் பாவனை முறைமைகளில் மாற்றம் ஏற்பட்டதென்பது உண்மையாகும். அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது வனப்பகுதிகள் ஈர நிலங்கள், கண்டல் நிலங்கள், மணற்பாங்கான பகுதிகள் போன்றன மாற்றியமைக்கப்பட்டன. ஆதலால், அயலில் இருக்கும் இயற்கை நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
இலங்கை நன்னீர் வளம் மிக்க நாடு என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். ஆயினும், மாசடைதல் காரணமாக அந்த நன்னீர் வளம் பெருமளவில் மாசடைந்து வருகிறது.
பல்வேறுபட்ட தொழிற்சாலைக் கழிவுகளும் நன்னீர் நிலைகளிலே கலக்க விடப்படுகின்றன. மத்திய சுற்றாடல் அதிகார சபை பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவற்றையும் மீறிச் சிலர் செயற்படத்தான் செய்கிறார்கள். இலங்கையின் நீர் வடிகாலமைப்பு சபையினூடு விநியோகிக்கப்படும் நீரானது குளோரினேற்றம் மற்றும் சில நடைமுறைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நுண்ணங்கியழிவாக்கம் செய்யப்படுகிறது.
ஆனால் அந்நீரில் பார உலோகங்கள் கலந்திருக்கின்றனவா என அறிய எந்தவித சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பார உலோகங்களை அதிகளவில் கொண்டிருக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் நன்னீர் நிலைகளிலே கலப்பது தடுக்கப்படுகிறது. இரத்தினக்கல் அகழ்வு காரணமாக பசறை, பதுளை போன்ற பகுதிகளில் நன்னீர் மாசடைகிறது. புத்தளம் போன்ற பகுதிகளில் விவசாய உரங்களின் மிகை பாவனையானது நன்னீர் வளத்தைப் பாதிப்படையச் செய்கிறது. யாழ்ப்பாணமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நெருக்கமான குடியிருப்புக்களால் மலக்குழிகளும் மிக அருகருகிலேயே அமைக்கப்படுகின்றன. அதனாலும் நன்னீரான நிலக்கீழ் நீர் பெருமளவில் மாசடைகிறது.
நகர மற்றும் கைத்தொழிற்கழிவுகள் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றன. இந்தப் பிரச்சினை இலங்கையின் நகரங்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. எல்லா நகரங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காக நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. இந்தப் பிரச்சினையால் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கும் நகரம் கொழும்பு ஆகும். தினமும் 1500 தொன் திண்மக்கழிவுகள் கொழும்பு நகர சபையினால் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகின்றன.
ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை சேதனக்கழிவுகள். ஆனால் முறையான செயற்றிட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படாததால் இக்குப்பைகளை ஒழுங்காக அகற்ற முடியாத சூழல் ஒன்று காணப்படுகிறது.
எமது நாட்டில் கண்டல் நிலத்தாவரங்களான தாழை மரங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. இலங்கைக்கு இயற்கை அன்னை கொடுத்த வரங்களில் ஒன்றான இந்த தாழை மரங்கள் உயிர்ப்பல்வகைமை நிறைந்த சூழற்தொகுதிகளைப் பேணுவதில் முன்னணி வகிப்பவை. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 0.1-0.2 சதவீதமான நிரப்பரப்பிலேயே அவை காணப்படுகின்றன. ஆயினும் கடலரிப்பைத் தடுப்பதிலும் பறவைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதிலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்துகின்றன. கற்பிட்டி, மட்டக்களப்பு, மது கங்கை, திருகோணமலை, யாழ்ப்பாணம், பொத்துவில், பெரிய களப்பு கடல் நீரேரிகளில் தாழை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அவை இயற்கைச் சம நிலையைப் பேணுவதுடன் மட்டும் நின்று விடாது அயலில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் துணை புரிகின்றன. ஆனால் அவற்றிக்கெல்லாம் நன்றியாக நாம் இருக்க முயல்வதில்லை. சட்டவிரோத மரம் தறிப்பு, குடியேற்றங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான நிலத்தை உருவாக்கல், நகரசபை, மற்றும் புற நகர்க் கழிவுகளைக் கொட்டுதல் எனப்பல்வேறு காரணங்களைக் காட்டி இந்தக் கண்டல் நிலத்தாவரங்கள் மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகிக்கிறோம்.
இவற்றடன் எல்லாம் நாம் நின்று விடுவதில்லை. எமது எதிர்காலச் சந்ததியை மட்டுமன்றி எமது எதிர்காலத்தையும் கூடக் கருத்தில் கொள்ளாது இன்று மகிழ்வுடன் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பாங்குடன் செயற்படுகிறோம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டும் தான் எமது நாடு எதிர் நோக்கும் சூழல் பிரச்சினைகள் என்று கருதக்கூடாது.
இங்கே குறிப்பிடப்படாத எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படத்தான் செய்கின்றன. அவை யாவற்றிற்கும் அடிப்படையாய் அமைவது எமது மனப்பாங்கு மட்டுமே. அதிலே மாற்றம் ஏற்பட்டால் பல பிரச்சினைகள் இருந்த இடமே தெரியாமல் போய் விடும். இந்த சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வு எங்கள் கைகளிலேயே உள்ளது என்பது மட்டும் கண்கூடு.

Tuesday, April 12, 2011

வீதியோரப் பிஞ்சுகள் வேண்டாம்!




(வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினத்தையொட்டி
(12.04.11) இக்கட்டுரை பிரசுரமாகிறது)

பள்ளிக்கூடம் செல்லவில்லை
பாடம் எதுவும் படிக்கவில்லை
ஒன்று மட்டும் சொல்கிறேன்
வெந்து வெந்து சாகிறேன்
பெற்றோரை குற்றம் சொல்லவா - இல்லை
படைத்த அந்த பிரம்மனை குற்றம் சொல்லவா
ஒன்று மட்டும் வேண்டாம்
இந்த கொடுமை எந்த பிஞ்சுக்கும் வேண்டாம்
வீதியில் பிஞ்சுகள் வேண்டாமென
வீதியெங்கும் உரைப்போம் அனைத்து
வீதி எங்கும் உரைப்போம்.

வீதியோரச் சிறுவனொருவனின் மன நிலையை அப்படியே பிரதிபலித்து நிற்கிறது இந்தக் கவிதை.
யாரை அப்படிச் சொல்கிறோம் என்று தெரியாமலேயே வீதியோரச் சிறார்கள் என்று மிகவும் எளிதாகச் சொல்லி விடுவோம். இன்று முழு உலகிலுமே வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பிரச்சினைகளுள் ஒன்று வீதியோரச் சிறுவர்கள் பற்றியது. ஏனெனில், தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலச் சந்ததி ஒன்று தனது எதிர்காலத்தைத் தொலைத்து வீதியில் நிற்கத் தலைப்பட்டு விட்டது. இத்தகைய நிலை அதிகரித்துச் சென்றால், முழு உலகின் எதிர்காலமும் கூட தலை கீழாக மாறி விடும் வாய்ப்பும் காணப்படுகிறது.
அடுத்து, வீதியோரச் சிறார்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள், சந்தர்ப்ப சூழ் நிலைகள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டன. சிறுவர்களுக்கான சகல உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. பல்வேறு வயதெல்லைகளைச் சேர்ந்த சிறார்கள் தமக்குத் தேவையான ஆதரவும் அரவணைப்பும் கிடைக்காததால் வீதிகளையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய சிறார்களை ஆதரவற்றவர்கள், வீதியோரச் சிறார்கள் எனப் பல்வேறுபட்ட வகைகளில் பாகுபடுத்திப் பார்க்கிறது இன்றைய உலகம்.
சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட ஒரு குழுவாகவாகவே இந்த வீதியோரச் சிறார்கள் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் மூன்று விதமாக வகைப்படுத்தப் படுகின்றனர். ஒன்று வீதியோரங்களில் வசிக்கும் சிறார்கள். அதாவது குடும்பமொன்றுடன் இல்லாமல் பொது இடங்களில் உறங்கி எழும்பி, அங்கேயே வாழ்பவர்கள்.
மற்றையது, வீதியோரங்களில் வேலை செய்யும் சிறார்கள், அவர்கள் காலையில் புறப்பட்டு, தெருவோரங்களில் வேலை செய்துவிட்டு, மாலையில் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்பவர்கள். அடுத்தது, வீதியோரக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள். இவர்கள் தமது குடும்பத்தினருடன், வீதியோரங்களிலேயே வசிப்பவர்களாக இருப்பர். உண்மையில் வீதியோரச் சிறார்கள் என்பது, நன்கு வரையறுக்கப்பட்ட ஏகவீனமானதொரு குடித்தொகை அல்ல. வீதியோரம் என்ற சொற்பிரயோகம் உண்மையில் இச் சிறார்களின் பல முகங்களுள் ஒன்றை மட்டுமே வெளிக்கொணருவதாக இருக்கிறது. ஐ.நாவின் தரவுகளின் அடிப்படையிலே உலகளாவிய ரீதியிலே, இந்த வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கை என்ன என்பது கணக்கெடுக்கப்படவில்லை. சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட சிறுவர்களை ஐ.நா. வீதியோரச் சிறார்கள் என்ற வகைக்குள் உள்ளடக்க முயற்சிக்கிறது. உலகளாவிய ரீதியிலே 100 மில்லியனுக்கும் குறைவான, ஆனால் கணிசமானளவு வீதியோரச் சிறார்கள் இருக்கிறார்கள் என்பதில் யாவருமே உடன்படுகிறார்கள். வீதியோர வாழ்வு அபாயங்கள் நிறைந்தது. ஆதலால் குறிப்பாக பெண் குழந்தைகள் தம்மை வெளியுலகுக்கு அடையாளங்காட்ட முனைவதில்லை. ஆதலால் இந்தக் கணக்கெடுப்பு குறைவாக மதிப்பிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. மனித வள, நிதி ரீதியான வளங்களின் அடிப்படையில் மிகவும் திருத்தமான கணக்கெடுப்பை மேற்கொள்வதானது செலவு மிக்கதோர் விடயமாகவே தெரிகிறது.
உலகளாவிய ரீதியிலே இந்த வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கை காலத்துடன் அதிகரித்துச் செல்வது மட்டும் உணரப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுள் ஏறத்தாழ 10 சதவீதமானோர் வெளி உலகுக்குத் தம்மை அடையாளம் காட்டி இருக்கின்றனர். ஏனையோர் தமது பாதுகாப்புக் கருதி, வெளி உலகுக்குத் தம்மை அடையாளம் காட்ட முனைவதில்லை. ஆசிய மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித கதியிலான நகரமயமாக்கலினால் பல வீதியோரச் சிறுவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதேபோல் எச். ஐ.வி எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகி, கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் சிறார்களின் எண்ணிக்கையும் இப்பிராந்தியத்தில் மிக அதிகமாகும்.
சிறுமிகளை விட, சிறுவர்களே வீதியோரச் சிறார்களாக அதிகளவில் காணப்படுகின்றனர். ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் ஆபிரிக்க நாடான கானா விதி விலக்காக இருப்பது தெரிய வந்தது. அங்கு இரு பாலருமே சம அளவில் காணப்படுகின்றனர். பெண் சிறார்களைப் பொறுத்தவரையிலே பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த எதிர்பார்ப்புகளுக்கும் நவீன வாழ்வியலுக்கும் இடையிலான சிக்கல் மிக்க இடைத் தொடர்பே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, இளவயதுத் திருமணங்களில் இருந்து தப்புவதற்காக, கானாவில் பல சிறுமியர் தமது வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். இன்னும் சிலர் தமது திருமணத்துக்கு சீதனம் சேர்ப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.
ஆனால் பல நாடுகளின் பாரம்பரிய கலாசார அமைப்பிலே ஆண் பிள்ளைகள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்த வரையிலே அந்த வரையறை சற்று மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுகிறது. ஆனால் இந்த பாரம்பரிய கலாசார முறைமைகள் பல உடைக்கப்பட்டு வருகின்றன. இள வயதுத் திருமணங்கள் பெண் பிள்ளைகள் பலரால் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அது மட்டுமன்றி நகரங்களின் நவீன வாழ்வியல் மீதான ஈர்ப்பும் பல வீதியோரப் பெண் சிறுமிகளை உருவாக்கி விடுகின்றன. எகிப்து போன்ற நாடுகள் கூட அதற்கு விதிவிலக்கவில்லை.
சமூகத்தில் காணப்படும் பாகுபாடுகளும் குடும்பங்கள் மீது திணிக்கப்படும் சமூக பொருளாதார அழுத்தங்களும் பல சிறார்களை வீதியோரச் சிறார்கள் ஆக்கி விடுகின்றன. இந்தியாவிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறார்களே அதிகளவில் வீதியோரச் சிறார்களாகக் காணப்படுவதாக ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெளதமாலாவிலே, சுதேச குடிகள் மீது காட்டப்பட்ட பாகுபாடுகள் அக்குடும்பங்களைச் சேர்ந்த பிஞ்சுகளை வீதியோரச் சிறார்களாக்கி விட்டிருக்கிறது. அதேபோல, மிகை வறுமை காரணமாகவும் பல சிறார்கள் அப்படி மாறியிருக்கிறார்கள். இந்தியாவிலே மாற்றுத்திறனுள்ள சிறார்கள் பலர் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாறியிருக்கிறார்கள். எகிப்திலும் அத்தகையதோர் நிலை காணப்படத் தான் செய்கிறது. எச். ஐ. வி. தொற்றும் யுத்தமும் கூட. பலரை வீதியோரச் சிறார்களாக்கி விட்டிக்கிறது. இப்படி அவர்கள் வீதியோரச் சிறுவர்களாக்கப்பட ஏதுவாக அமைந்த காரணிகள் மிகவும் சிக்கலானவை.
ஏலவே குறிப்பிட்ட காரணிகள் தவிர, முரண்பாடுகள், அனர்த்தங்கள், கால நிலை மாற்றம், குடிப்பெயர்வு, நகர மயமாக்கல், கலாசார மனப்பாங்குகள், போதிய கல்வியறிவின்மை, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவர்களது தொழில் இடங்களில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் போன்றனவும் காரணமாய் அமைந்து விடுகின்றன. முரண்பாடுகள், உருவாகும் போது வீதிப்போராட்டங்கள் வலுக்கின்றன. சிறுவர்களும் வீதியில் இறங்கிப் போராடத் தலைப்படுகிறார்கள். முடிவில் பல்வேறுபட்ட காரணங்களால் வீதிச் சிறுவர்களாகவே மாற்றப்படுகிறார்கள். வளைகுடா நாடுகளில் தற்போது காணப்படும் அமைதியற்ற நிலைமையானது, வீதியோரச் சிறார்கள் பலரை உருவாக்கிவிடும் என்பதும் நிதர்சனம். அனர்த்த நிலைமைகளும் அதற்கு விதிவிலக்கல்ல.
இயற்கை அனர்த்தங்கள் இடப் பெயர்வுகளை உருவாக்கும். அமைதியான வாழ்வியல் கோலத்தைச் சிதைக்கும். வறுமை நிலையை அதிகரிக்கும். விளைவு வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும். உலகளாவிய ரீதியிலே அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று பங்களாதேஷ். கால நிலை மாற்றத்தால் மேலும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. 2007 ம் ஆண்டு மட்டும் 5635 பேர் இயற்கை அனர்த்தத்தால் கொல்லப்பட் டனர். 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல தற்போது ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் பல மில்லியன் மக்களைப் பாதித் திருக்கிறது. அங்கே, பல சிறார்கள் தம் பெற்றோரைத் தொலைத்துவிட்டு பரிதவித்துப் போய் நிற்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் பிரதான விளை வான, கடல் மட்ட உயர்வானது. கடற் கரைப் பகுதி மக்களை, உட் பகுதிகளை நோக்கி இடம் பெயர வைக்கும். பல மில்லியன் மக்கள் தமது வீடுகளையும் வாழ்வியலையும் மாற்ற வேண்டி இடம் பெயர்வர். பல சிறார்கள் தமது பாடசாலைக் கல்வியை இழக்க நேரிடும். அவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டு பல அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்படலாம். இவை யெல்லாம் நகரப் பகுதிகளில் இருக்கும் வீதியோரக் குடும் பங்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
1960 ஆம் ஆண்டிலிருந்து நாடுகளுக்கிடையிலான குடி பெயர்வுகள் அதிகரித்து வருகின்றன. பின் தங்கிய பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்வதானது பெருமளவில் நடைபெறுகிறது.
துரித கதியில் நடக்கும் நகர மயமாக்கலானது திட்டமிடப்படாத குடியமர்வு களையும் சேரிகளையும் உரு வாக்கி விடுகிறது. டக்கா, மும்பை போன்ற நகரங்களிலே அத்த கைய நெருக்கமான சேரிப்புற ங்கள் பலவற்றைக் காணமுடியும். அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் அச்சேரிப்புறங்கள் அகற் றப்படும்போதும் அம்மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாவர். விளைவு வீதியோ ரச் சிறுவர்களின் எண்ணிக்கை யில் பிரதி பலிக்கும். பல கலாசார கட்டமைப்புக்களில் ஊனத்துடன் குழந்தைகள் பிறப்பதானது வெட்கத்துக்குரிய, அவமானத்துக்குரிய விடய மொன்றாகப் பார்க்கப்படுகிறது. துடிப்பான பெண் குழந்தைகள் குடும்பத்தை அவமதிப்பவர் களாகக் கருதப்படுகின்றனர்.
பெற்றோர்களின் கல்வி அறிவு மட்டம் குறைவாகக் காணப்படுதல், தரமான கல்வி யைச் சிறார்களுக்கு வழங்க முடியாமை, கல்வியை வழங்கு வதற்கான செலவை ஈடு செய்ய முடியாமை, போன்ற பல கார ணங்கள் சிறார்களின் கல்வி கற்கும் உரிமையைப் பாதிக் கின்றன. சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வழங்குவதன் மூலம், எவராயினும் அவரை சமூகமொன்றினுள் உள்வாங்க முடியும். ஆனால் இங்கு அந்த உரிமையே மறுக்கப்படு வதால், அவர்கள் சமூகத்தினால் உள்வாங்கப்படாதவர்களாகவே இருக்கத் தலைப்படுகின்றனர். வறுமை காரணமாகத் தொழிலுக்குச் செல்லும் சிறார்கள் மீது பல்வேறுபட்ட வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்று கடைசியில் அச் சிறார்கள் வீதியோரச் சிறார்களாக மாறுகின்றனர்.
இச்சிறுவர்கள் அப்படியே விடப்படலாகாது. அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது பெற்றோரின் வாழ்க்கை முறையில், தலையிட்டு ஆக்க பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

Tuesday, April 5, 2011

ஜப்பானியர்கள் வித்தியாசமானவர்களா?

நேரந்தவறாமைக்கும் ஒழுங்கான முகாமைத்துவத்துக்கும் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள். எதையும் சிறப்பாக, வினைத்திறனுடன் செய்து முடிக்கும் மனப்பாங்குடையவர்கள். அவர்களது 5 எஸ் முகாமைத்துவ முறைமை மிகவும் பிரபலமானது. உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானளவுக்கு மற்றைய நாடுகளில் அது வினைத்திறன் மிக்கதாக அமைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.
ஏனெனில் ஜப்பானியர்களின் கலாசாரத்துக்கு ஏற்றதாக அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலும் பல அமைப்புகளில் 5 எஸ் முகாமைத்துவத்தைப் பின்பற்ற முயற்சிகள் எடுக்கப்படுவது உண்மை தான். ஆனால், எமது கலாசாரமும் எம் மக்களின் மனப்பாங்கும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்த இடம்கொடுப்பதில்லை என்பதே உண்மையாகும்.
பூகம்ப நெருப்பு வலையத்தினுள் ஜப்பான் அமைந்திருப்பதால், எப்போதும் பூகம்ப அனர்த்தத்தை எதிர் நோக்கிய வண்ணமே தமது செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். அவர்கள் அவ்வாறு தம்மைத் தயார்படுத்தியமை தான் கடந்த மார்ச் 11 ஆம் திகதி, ஒரு பேரனர்த்தம் நிகழ்ந்திருந்த போதும் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 10,035 ஆகவும் காணாமற் போனோரின் எண்ணிக்கையை 17,443 ஆகவும் மட்டுப்படுத்தியிருக்கிறது. ஆனால் பூகம்பம் மற்றும் சுனாமியைத் தவிர்த்து, அவற்றின் பின்னர் ஏற்பட்ட அணு உலைகளின் கசிவினால் ஏற்பட்டிருக்கும் நேரடியான, மறைமுகமான சேதங்கள் மதிப்பிடப்பட முடியாதனவாகவே இருக்கின்றன. அவற்றை எதிர்வு கூறுவது சாத்தியப்படாததாகவே இருக்கிறது.
ஜப்பானின் புவியியல் ரீதியான அமைவிடம் அந் நாட்டின் கலாசாரத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்தது. அங்கு இருக்கும் விவசாய நிலத்துக்கான பற்றாக்குறையானது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சமுதாயக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அயலவர்கள் மிகவும் அருகருகிலேயே வசிக்கின்றனர். இதனால் தனி மனிதன் என்ற அடிப்படையை விட தாம் ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் ஜப்பானியர்கள் தமது கலாசாரத்தை வளர்த்தனர்.
அவர்கள் விதிமுறைகளையும் திட்டங்களையும் விரும்புபவர்கள் எதையும் கிரமமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். எதையும் அமைதியாக, பொறுமையாக எதிர்கொள்பவர்கள், நியாயமானவர்கள். இவ்வளவு பெரிய அனர்த்தம் நிகழ்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோது மிக நீண்ட வரிசைகளில் அமைதியாகக் காத்திருந்தே பெற்றுக்கொண்டனர். எவரும் வரிசைகளைக் குழப்பிக்கொண்டு விதிமுறைகளை மீறி முண்டியடித்து பொருட்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. எவரும் பொருட்களை அறா விலைக்கு விற்க முயலவில்லை. எவரும் தவித்த முயல் அடிக்கவில்லை. இத்தகைய குணாம்சங்கள் எல்லாம் அவர்களது கலாசாரத்துக்கே உரித்தானவை.
ஜப்பானின் ஊடக சங்கத்திலே விதிமுறை ஒன்று உள்ளது. அதாவது எவராயினும் ஜப்பான் பற்றி அறிக்கையிடுவதாக இருந்தால், ஜப்பானிய பழமொழியொன்றின் கருத்தை அந்த அறிக்கையிடுதலில் எங்காவது குறிப்பிட்டேயாக வேண்டும், ‘நகமொன்று வெளித் தள்ளுமாயின் அது சுத்தியலால் அடிக்கப்படும்’ என்பதே அந்தப் பழமொழியின் நேரடி மொழி பெயர்ப்பு ஆகும். அதாவது அவர்களது ஒன்றிணைந்த கலாசார அமைப்பில் இருந்து எவரும் விலக முடியாது என்பதே அப்பழமொழி சொல்ல விழையும் கருத்தாகும்.
இந்தக் கலாசாரம் தான் அண்மையில் நிகழ்ந்த அணு உலை அனர்த்தத்தை அறிக்கையிடுவதிலும் பல சிக்கல்களையும் தடைகளையும் ஏற்படுத்தியிருந்தது. எதையும் வெளிப்படையாக அறிக்கையிட முடியவில்லை. உண்மைகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஒன்று காணப்பட்டது. ஜப்பானிய கலாசாரத்தில் ஒரு அமங்கலமான செய்தியை வெளிப்படையாகச் சொல்வதென்பது பெரும் சிரமமான விடயம். ஆதலால் அணுக் கதிர்வீச்சின் தாக்கம் மற்றும் பாதிப்பை வெளிக்காட்டுவதில் அரசும் ஊடகங்களும் தயக்கம் காட்டின என்பதும் உண்மை. அத்துடன் அவர்களது மொழியானது. வெளியுலகுடனான இலகு தொடர்பாடலுக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
அத்துடன் ஜப்பானின் உள்நாட்டு கைத்தொழிற்றுறைகள் எல்லாம் அரச கட்டுப்பாட்டில் இருப்பவை. இதற்கு அணு உலைகளும் விதி விலக்கல்ல. அனர்த்தத்தின் பின்னரான ஏற்பாடுகளில் அதனைத் தெளிவாக அவதானித்திருக்க முடியும். ஏன் ஜப்பானுக்கு கிடைத்த பல அவசர உதவிகளையும் மருந்துகள் உட்படப் பல நிவாரணப் பொருட்களையும் முறையான அனுமதிப் பத்திரமில்லை என்ற காரணத்துக்காகவே அரசு திருப்பி அனுப்பியிருந்தது. இதுவும் தரத்துக்கு முன்னுரிமை வழங்கும் ஜப்பானிய கலாசாரத்தின் அடிப்படையே. ஜப்பான் மக்கள் எம்மைப் போல பொருட்களைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆதனால் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தபோது பலரால், தமது உயிரையாவது காப்பாற்ற முடிந்தது.
முற்றாகச் சேதமடைந்திருந்த பெருந்தெரு ஒன்று வெறும் ஆறே நாட்களில் மீள நிர்மாணிக்கப்பட்டமை ஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் நல்லதோர் உதாரணமாகும். தமது உயிரைத் துச்சமாக மதித்து கதிர் வீச்சைப் பொருட்படுத்தாமல் இன்னும் அணு உலைகளில் இரவுபகல் பாராது தொழிலாளர்கள் வேலை செய்வதானது ஜப்பானிய மக்களின் தேச பக்திக்கோர் உதாரணமாகும்.
நவீன ஜப்பானில் பல எதிர்பாராத நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது சகஜமானது தான். ஆனால் தற்போது அங்கு வயது கூடிய குடிமக்களின் தொகை அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் மீதான கடன் சுமை கூடி இருக்கிறது. அரசியல் செயலிழந்துகொண்டு போகிறது. இத்தகையதோர் நிலையில் இந்தப் பேரனர்த்தம் ஜப்பானில் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியொன்றைத் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் முதன் முறையாக ஜப்பானில் மின்வெட்டு ஏற்பட்டது கடந்த மார்ச் 11 அனர்த்தத்தின் பின்னர் தான். போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காக டோக்கியோ மக்கள் அலைந்தமையும் மின்வெட்டால் இருளில் மூழ்கிய வண்டபே நகரும் பல செய்திகளை உலகுக்கு எடுத்துச் சொல்லின. வசதிகள் அதிகமாய் இருந்த உலகின் மிகப் பெரிய நகரங்கள் கணப்பொழுதில் நிலைகுலைந்து போயின. ஆனால் இப்போதும், நாங்கள் ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர் ஜப்பானிய மக்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின், சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த நாடு ஜப்பான். ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்ட செய்தியை அறிந்தபோது அணு விஞ்ஞானி ஜன்ஸ்டீனே தனது கண்டுபிடிப்பிற்காக வருந்தியிருந்தார் என்று கூறுவர். அந்த யுத்தத்தால் 60 பிரதான நகரங்கள் அழிந்துபோயின. பத்து மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். அரை மில்லியன் வரையான மனித உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் 1968 ஆம் ஆண்டே உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் மாறியது.
ஜப்பான் பெளதிக ரீதியாக, அந்தப் பேரனர்த்தத்தலிருந்து மீண்டெழுந்து உலக பொருளாதாரத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அந்த அனர்த்தத்தின் மறைமுகமான தாக்கத்தை இன்றும் விப்பானிய மக்கள் சிலர் அனுபவித்து வருகின்றனர். அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் பல சந்ததிகள் கடந்தும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் அங்கு பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதை எவராலும் மறுதலிக்க முடியாது. அத்தகைதோர் நிலைமையானது மனிதனுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்றே கூற வேண்டும்.
இவையெல்லாம் இப்படி இருக்க, தற்போது ஏற்பட்டிருக்கும் அணு உலைக் கசிவுகளும் அவற்றினால் ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சின் தாக்கமும் ஜப்பானின் எதிர்காலத்தில் பெரும் வெற்றிடமொன்றையும் கேள்விக்குறியையும் சேர்த்தே உருவாக்கி விட்டிருக்கின்றன. வளிமண்டலத்தில் கதிர் வீச்சின் மட்டம் சாதாரண எல்லையை விட அதிகரித்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அணு உலைகள் அமைந்திருக்கும் சூழலில் உள்ள மண்ணிலும் கதிர்வீச்சின் தாக்கம் எல்லையைத் தாண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அணுப்பிளப்பான்களைக் குளிர்மைப்படுத்தி கதிர்த்தாக்கமுடைய எரிபொருளின் வெப்ப நிலையைக் குறைக்க பெருங்கனவளவில் நீர் பாய்ச்சப்பட்டது. அவ்வாறு குளிர்மைப் படுத்திய பின் அந்நீரிலே கதிர்த்தொழிற்பாட்டு மாசுக்கள் கலந்திருக்கும்.
அவ்வாறு மாசுக்கள் கலந்த நீரை எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி வெளியேற்ற முடியாது. அத்துடன் அந்த நீரைச் சேமிப்பதில் பெரும் இடப்பிரச்சினையும் தற்போது எதிர்நோக்கப்படுகிறது. இந்த நீரே பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கதிர்த் தொழிற்பாட்டு மாசு கலந்த நீரைச் சுத்திகரிப்பதில் வழிநடத்தவென 5 வல்லுநர்களை பிரான்ஸ் ஜப்பானுக்கு அனுப்பியிருக்கிறது. அதையடுத்து நாட்டின் சகல அணு உலைகளிலும் விசேட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு ஜப்பானிய அரசு உத்தரவிட்டிருந்தது. இதுவும் ஜப்பானிய தரத்தை விரும்பும் ஜப்பானிய கலாசாரத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.
கதிர்வீச்சின் தாக்கமுள்ள பகுதிகளிலே விளையும் மரக்கறிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கடல் நீரிலும் கூட கதிர்வீச்சின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தினமும் இரண்டுவேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவு வெறும் பிஸ்கட்டுகளும் பழச்சாறுமேயாகும். அது கூட மிகவும் நுணுக்கமான கதிர்வீச்சுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் வழங்கப்படுகிறது. தமது உற்றார் உறவினர் பலர் சுனாமி அலையினால் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டனர் என அனாதரவாய் நிற்கின்றனர் பல மக்கள். பெறறோரை இழந்த சிறார்களின் தொகையை இந்த அனர்த்தம் அதிகரித்திருக்கிறது. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பல சமூக பொருளாதாரச் சிக்கல்கள் ஜப்பானை ஆக்கிரமித்திரு க்கின்றன. ஆனால் அழுது கொண்டிரு ப்பதால் எந்தப் பயனுமில்லை, நாம் இணைந்து செயற்பட்டு எதையும் வெல்லுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ஜப்பானிய மக்கள். மீண்டுமொரு பீனிக்ஸ் பறவை யாய் ஜப்பான் உயிர்த் தெழப் போவதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.