Thursday, May 20, 2010

ஈஸ்டர் தீவு குடிகள் வேருடன் அழிந்த கதை
2010ம் ஆண்டு, உயிர்ப் பல்வகைமைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட செய்தியைக்கூட எம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். அதேபோல வருடாந்தம் மே மாதம் 22ஆம் திகதி உயிர்ப்பல்வகைமை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்ப் பல்வகைமையும் ஆரோக்கியமான சூழல் தொகுதிகளும் மிகவும் அத்தியாவசியமானவை. அவையின்றிச் சிறந்ததோர் எதிர்காலம் அமையாது. இந்த எண்ணம் சுயநலமானதுதான். ஆனால் மறுக்கப்பட முடியாதது. உயிர்ப்பல்வகைமை எனப்படுவது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் எமக்குத் தருவதாகும்.

மனிதனால் ஆக்கப்பட்டதாகவோ இல்லை காடுகளாகவோ இருக்கின்ற போதிலும், பூமியும் வளமான மண்ணுமே, உணவு உற்பத்திக்கான அடிப்படையாகும். நீரின்றி உலகு அமையாது. நீர் தான் உயிரின் வாழ்வு எனக் கூறுமளவிற்கு உயிரின் நிலைப்பு நீரின்றி அமையாது. வளி தான் புவிக்கோளத்திலுள்ள வாயுக்களுக்கிடையிலான சமநிலையைப் பேணி, தான் உணவோடும் நீரோடும் இணைவதன் மூலம் உயிர்களை வாழவைக்கிறது. இயற்கை மனிதனுக்குத் தரும் சக்தியின் அடிப்படை வடிவம் நெருப்பாகும். சுவட்டு எரிபொருளாக, உயிர்த்திணிவாக, இன்னும் பல மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களாக இயற்கை நெருப்பை வழங்குகிறது.

என்று மனிதன் கற்களை உரோஞ்சி நெருப்பைக் கண்டுபிடித்தானோ, அன்றே இயற்கையின் அழிவுப் பாதைக்கான வாயிலைத் திறந்துவிட்டான் என்றே கூறமுடியும்.

இந்த நிலமும் நீரும் வளியும் தீயும் உயிர்ப்பல்வகைமை எமக்கு வழங்கும் சேவைகளை எடுத்தியம்புகின்றன. உயிர்ப்பல்வகைமையை இழத்தலானது இந்தச் சேவைகளை இழத்தலையே குறிக்கிறது. சேவைகளை இழப்பதால் ஏற்படும் பொருளாதர ரீதியிலான பின்னடைவு மதிப்பிடப்பட முடியாதது. ஐரோப்பிய ஆணைக் குழுவும் ஜேர்மனிய அரசும் இணைந்து உயிர்ப்பல்வகைமையின் அழிவு தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தன.

அந்த ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அவற்றின்படி உயிர்ப் பல்வகைமையின் இழப்பானது தொடர்ந்து கணக்கெடுக்கப்படாது விடப்பட்டால், 2050 ஆம் ஆண்டளவில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியானது, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7 சதவீதமாகவிருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஆரோக்கியமான சூழல் தொகுதியோ உயிர்ப்பல்வகைமையோ இல்லாவிடில் நீண்டகால நோக்கில், பொருளாதாரம் நிலைகுலைவது உறுதியாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிர்ப்பல்வகைமையானது பொருளாதார ரீதியாக மட்டுமன்றி ஆன்மீக ரீதியாகவும் பெறுமதி வாய்ந்தது. எமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதால் மட்டுமே உளத் திருப்தி ஏற்பட்டுவிடாது. அதற்கு ஆன்மீகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இங்குதான் உயிர்ப்பல்வகைமை அவசியமாகிறது- எம்மைச் சூழ்ந்திருக்கும் சூழலின் அழகும் அதனால் ஏற்படும் மகிழ்வும் உளத்திருப்திக்குக் காரணமாய் அமைகின்றன. அந்த அழகிய சூழலுக்கான மூலமாக உயிர்ப்பல்வகைமை காணப்படுகிறது. முன்னைய காலங்களில் மனிதனுக்கும் சூழலுக்குமிடையே இத்தகைய இறுக்கமான பிணைப்பொன்று காணப்பட்டமையை எமது கலை, கலாசார, சமயப் பாரம்பரியங்கள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.ஆனால் நாம் உயிர்ப்பல்வகையைப் பேணமுயலாது தொடர்ந்தும் அழிய விட்டால் முழு உலகுமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுமென்பது வெளிப்படையான உண்மையாகும்.

இந்த உண்மையை விளக்கும் சிறந்ததோர் உதாரணமாகவே ஈஸ்டர் தீவு தெரிகிறது. எம்மொவ்வொருவருக்கும் ஈஸ்டர் தீவு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது.

ஈஸ்டர் தீவென்பது, சிலித்தீவுக்கு அண்மையில் உள்ள முக்கோண வடிவிலான சிறிய தீவாகும். 1722 ஆம் ஆண்டு டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீனென்பவர் முதன் முதல் இத்தீவிலே வந்திறங்கினார். அவர் கிறிஸ்து உயிர்த்த ஞாயிறாகிய ஈஸ்டர் தினத்தன்று இத்தீவிலே வந்திறங்கியமையால் ‘ஈஸ்டர் தீவு’ எனப் பெயரிட்டார்.

ஒரு காலத்திலே இந்தத் தீவு அடர்ந்து காடுகளைக் கொண்டிருந்தது. அங்கே வசித்து வந்தவர்கள் மிகவும் முன்னேற்றமடைந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் அற்பக் காரணங்களுக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். காடுகள் அழிக்கப்பட, இத்தீவும் பாலைவனமாக மாறியது. பறவைகள், மிருகங்கள், பூச்சி, புழுக்கள், தாவரங்களென ஏராளமான உயிரினங்கள் அழிந்தன.

இத்தீவில் நாகரிகம் உச்சமாக இருந்த கால கட்டத்திலே தீவு வாசிகள் பிரமாண்டமான கற்சிலைகளை நிறுவினர். மரங்களை அழித்துப் பெறப்பட்ட மரக்கட்டைகள் மூலம் சிலைகளைத் தூக்கி நிறுத்தினர். விளைவாக மரங்கள் அழிக்கப்பட்டன. அந்தக் கற்சிலைகள் இன்றும் காணப்படுகின்றன. இன்று இத்தீவு முற்றிலும் மனிதனால் அழிக்கப்பட்ட தீவு என எமக்கெல்லாம் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது-

மேற்கு ஐரோப்பாவிலே உரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த கி. பி. 5ஆம் நூற்றாண்டளவில் பொலினீசியர்கள் தென்கிழக்காசியாவிலிருந்து வந்து, இத்தீவிலே குடியேறினர். பொலினீசியர்களால் முதன் முதலிலே இந்த ஈஸ்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்ட போது அது மிகவும் குறைந்தளவிலான வளங்களையுடைய சிறிய உலகமாகவே இருந்தது. ஆனால் அழிவடைந்த 3 எரிமலைகளைக் கொண்டிருந்தது. வெப்பநிலையும் ஈரப்பதனும் மிக உயர்வாக இருந்தன. போதியளவு மண் காணப்பட்டபோதும் நீரை ஊடுபுகவிடும் தன்மை அந்த மண்ணிலே குறைவாகக் காணப்பட்டது. வருடம் முழுவதும் நீரிருக்கக் கூடிய நீரோடைகள் எவையுமே அங்கு காணப்படவில்லை. அழிவடைந்த எரிமலைகளுக்குள் காணப்படும் ஏரிகளுக்குள் மட்டுமே நன்னீர் காணப்பட்டது. இத்தகையதோடு அசாதாரண சூழ்நிலை காரணமாக, மிகவும் குறைந்தளவிலான தாவர, விலங்கினங்களே காணப்பட்டன.

ஏறத்தாழ 30 வகை சுதேச தாவரங்களும் சில பூச்சிகளும் இரண்டு வகைப் பல்லிகளும் மட்டுமே காணப்பட்டன. முலையூட்டிகள் எவையுமே காணப்படவில்லை. தீவைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பிலே, மிகவும் குறைந்தளவிலான மீன்களே காணப்பட்டன.

பொலினீசியர்கள் அத்தீவுக்கு வரும் போது கோழிகளையும் எலிகளையும் கொண்டுவந்தார்கள். உருளைக் கிழங்கும் கோழி இறைச்சியும் அவர்களது பிரதான உணவாக இருந்தது. உருளைக் கிழங்குப் பயிர்ச்செய்கை இலகுவானதாக இருந்தமையால் அம்மக்களுக்கு வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் போதியளவு இருந்தது.

காலப் போக்கில் சனத்தொகை அதிகரிக்க, சமுதாயக் கட்டமைப்புக்கள் உருவாகின. மக்கள் கூட்டுக் குடும்பங்களாக, தமக்குரிய நிலத்தில் விவசாயம் செய்யத் தலைப்பட்டனர். சிறு குழுக்களாகப் பிரிந்து குழுத் தலைவர்களுக்குக் கீழே ஏனையோர் செயற்பட்டனர்.

நேரம் மீதமிருந்தமையால் வேறு நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்துமாறு தலைவர்களால் மக்கள் வழிகாட்டப்பட்டனர். அவர்கள் மத்தியில் இருந்த வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய கல்லாலான நினைவுச் சின்னங்கள் தான் இன்றும் அவர்களின் திறனை உலகறியச் செய்தபடி இருக்கின்றன. கடற்கரையையொட்டிய பிரதேசங்களில் பெரிய பெரிய கற்சிலைகள், பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றின் அமைவிடங்கள் வானியல் ரீதியில் முக்கியத்துவம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று எஞ்சியிருக்கும் அத்தகைய 15 சிலைகள் தான் இன்றும் ஈஸ்டர் தீவின் பெயர் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவிருக்கின்றன. நவநாகரிகமான ஆணின் தலையையுடைய அச் சிலைகள் பொலினீசியச் சமுதாயம் அடைந்திருந்த முன்னேற்றத்தையெண்ணி வியக்கவைக்கின்றன. அவர்களது நாகரிகம் உச்சத்திலிருந்த காலமொன்றிலே 600க்கும் மேற்பட்ட பாரிய கற்சிலைகள் வடிக்கப்பட்டன. ஆனால் அந்த நாகரிகம் சடுதியாக நிலைகுலைந்து அழிந்து போனது. அழிவுக்கான காரணம் காடழிப்பினால் உருவாகிய சூழல் பிச்சினைகளே எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சிலைகள் ஒவ்வொன்றினதும் மேற்பகுதி மட்டுமே 10 தொன் எடையுடையது. அச்சிலைகளைச் செதுக்குவதொன்றும் சிக்கலான காரியமல்ல. ஆனால் செதுக்குவதற்கு எடுக்கப்பட்ட நேரம் கணக்கிடப்பட முடியாதது. சிலைகளைச் செதுக்கி முடிந்த பொலினீசியர்களுக்கு அவற்றை நகர்த்துவதென்பது பெரிய சவாலாக அமைந்தது. சில சிலைகள் 20 அடி உயரமானவை. பல தொன்கள் நிறையுடையவை. இந்தப் பாரிய சிலைகளை நகர்த்துவதற்கு அத்தீவுவாசிகள் பாவித்த உத்தி அவர்களுக்கே வினையாக அமைந்து அவர்களது விதியைத் தீர்மானித்தது.

1550 ஆம் ஆண்டளவிலேயே அத்தீவு வாசிகளின் நாகரிகம் மிகவும் உச்சக் கட்டத்திலிருந்தது எனலாம். இச்சிலைகளை நகர்த்துவதற்கு மரங்களைத் தறித்துப் பெறப்பட்ட மரக்கட்டைகளைப் பயன்படுத்தினார்கள். குழுக்களிடையே காணப்பட்ட போட்டி காரணமாக சிலைகளை விரைவாக நகர்த்தும் நோக்கில் கணக்கின்றி மரங்கள் தறிக்கப்பட்டன. விளைவாக, சூழல் தரமிழந்தது. நாகரிகம் நிலைகுலைந்தது.

18ஆம் நூற்றாண்டளவிலே ஐரோப்பியர்கள் இத்தீவைக் கண்டுபிடித்த போது இத்தீவிலே மரங்கள் எவையும் காணப்படவில்லை. ஆனால் இந்த நாகரிகம் தொடங்கிய காலகட்டங்களில் ஈஸ்டர் தீவு முழுவதும் அடர்ந்த காடுகளும் மரங்களும் காணப்பட்டதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலத்துடன் சனத்தொகை அதிகரிக்க விவசாயம், எரிபொருள், கட்டடத் தேவைகள், வீட்டுத் தேவைகள், மீன்பிடி போன்ற பல காரணங்களுக்காக மரங்கள் தறிக்கப்படத் தொடங்கின. அம்மக்களுக்கு, தாம் செதுக்கிய சிலைகளை தீவிலுள்ள பொருத்தமான இடங்களுக்கு அனுப்ப வேண்டிய தேவையும் இருந்தது.

அவற்றைக் கட்டி இழுத்துச் செல்லும் வல்லமை படைத்த விலங்குகள் அங்கு காணப்படவில்லை. அதனால் பலர் ஒன்று சேர்ந்து மரக்குற்றிகளை பயன்படுத்தி சிலைகளை நகர்த்தலானார்கள். இச் செயற்பாட்டிற்குப் பெருமளவிலான மரக்குற்றிகள் தேவைப்பட்டன. விளைவாக 1600 ஆம் ஆண்டளவிலே அத் தீவிலிருந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் சிலைகளை நர்த்தும் செயற்பாடும் பூரணமாகாமலேயே நிறுத்தப்பட்டது.

இது அந்த மக்களின் சமூக வாழ்வை மட்டுமன்றி அன்றாட வாழ்வையும் பாதிக்கத் தொடங்கியது- 1500 களில் மரங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கவே, மர வீடுகளில் வசித்து வந்த மக்கள், வீடமைக்கப் போதிய மரங்களின்றி அவதிப்பட்டார்கள். அதனால் தமது வாழ்விடத்தைக் குகைகளாக மாற்றிக் கொண்டார்கள். ஒரு நூற்றாண்டின் பின்னர் மரங்கள் முற்றாக அழிந்தன. எஞ்சிய பொருட்களை மட்டுமே பாவிக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

குகைகளுக்குள் தஞ்சமடைய முடியாதவர்கள், ஏரிக் கரைகளில் வளர்ந்திருந்த புற்களைக்கொண்டு குடிசைகளை அமைத்தனர். அவர்களது பிரதான உணவு மூலமாக இருந்த மீன்களைப் பிடிப்பதற்கான வலைகளுக்கும் புற்களாலான படகுகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது. ஏனெனில் மீன்பிடி வலைகள் ஒரு வகை மர இழைகளால் உற்பத்தி செய்யப்பட்டன. அம்மரங்கள் அழிக்கப்பட, ஏரியில் சென்று மீன் பிடிக்க முடியாது போனது.

மரங்கள் அழிக்கப்பட்டதால் மண் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் மண்ணரிப்பின் வீதம் அதிகரிக்க மண்ணிலிருந்த எஞ்சிய கனிப்பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டன. விளைவாக, சிறிய தாவரங்களினதும் பயிர்களினதும் விளைச்சல் குறைவடையத் தொடங்கியது- மற்றொரு பிரதான உணவு மூலமான கோழிகள் மட்டும் இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்படவில்லை. கோழி இறைச்சிக்குப் பெரும் போட்டி நிலவியதால் கோழிகளைக் களவிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையொன்றும் ஏற்பட்டது.

மறைந்து போய்க்கொண்டிருந்த வளங்களைக் கொண்டு 7000 பேரின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தலென்பது இயலாத காரணமாகியது. விளைவாக தீவு வாசிகளின் குடித் தொகையின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது.

மட்டுப்படுத்தப்பட்டிருந்த வளங்களுக்காக குழுக்களுக்கிடையிலான சண்டைகள் அதிகரித்தன. வெற்றி கொண்ட குழு, தோற்ற குழுவை அடிமையாகப் பாவித்தது. எதிரிக் குழுக்களுக்குரிய கற்சிலைகள் அழிக்கப்பட்டன. சேதமாக்கப்பட்டன.

ஈஸ்டர் தீவு வாசிகள் மரங்களை அழித்ததால் முதலில் இயற்கைச் சூழலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். இறுதியில் அழிந்தே போயினர்.

ஒரு காலத்தில் உச்ச கட்டத்தில் இருந்த நாகரிகம், இயற்கையைச் சீண்டிப் பார்த்ததால் இன்று சுவடுகள் தெரியாமலேயே அழிந்து போய்விட்டது.

இன்று புரியாத புதிராகவும் தர்க்கரீதியான விளக்கங்கள் எவையுமற்றதாகக் காணப்படும் ஈஸ்டர் தீவிலே எஞ்சியிருக்கும் கற்சிலைகள், காடழிப்பின் கொடூரத்தைச் சான்று பகரும் நடைமுறை உதாரணங்களாகவே காணப்படுகின்றன. காடழிப்பினால் ஏற்படும் சமூக கலாசாரப் பாதிப்புக்களையும் ஈஸ்டர் தீவு எம் கண்முன் நிறுத்தத் தவறவில்லை.

இலங்கை வனவளம் நிறைந்த சிறிய தீவாகும். ஒரு காலத்தில் தாராளமாகக் கிடைத்த இயற்கை வளங்கள் இன்று அரிதாகவே கிடைப்பதை நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கைக் காலத்தில் கண்டிருப்போம். இதேநிலை மேலும் தொடருமாயின் ஏற்படக் போகும் விளைவுகளை எதிர்நோக்கவும் நாம் தயாராக வேண்டும். நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடுகளுக்கான அளவுகோலின் எல்லையை இலங்கை தொட்டுள்ளது. அதாவது இன்னும் 20 – 30 ஆண்டுகளில் இலங்கையில் நீர்ப்பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகையதோர் நிலையையே வனவளமும் எதிர்நோக்குகிறது. இயற்கை வளங்கள் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. அவற்றுக் கிடையிலான சமநிலை பேணப்பட் டால்தான் உயிர்ப்பல்வகைமை பேணப்படும். அப்போதுதான் பூமியில் உயிரினம் நிலைக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே, உயிர்ப்பல் வகைமையானது வேகமாக அதிகரித்து வரும் சனத்தொகை, கடுமையான வறுமை, வேலையின்மை, ஜீவனோபாயத்தொழிலாக விவசாயத்தையே நம்பியிருத்தல் போன்ற சமூகக் காரணிகளால் பெரும் நெருக்கடிக்குள்ளாகிறது.

சேனைப் பயிர்ச் செய்கை எனும் பெயரிலே காடுகள் அழிக்கப்படுதல், நிலத்தின் செழிப்பு குன்றுதல், தேசிய வளங்களின் மிகையான சுரண்டல், இரத்தினக்கல், முருகைக்கல் அகழ்வு போன்ற பல பிரச்சினைகள் இந்த சமூகக் காரணிகளின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றன.

இலங்கை ஒரு விவசாயநாடு, இலங்கையின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரம் செழிக்க வேண்டுமாயின் விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயம் செழிப்பதற்கோ, உயிர்ப்பல் வகைமை பேணப்பட வேண்டும். இலங்கையின் தாவர இனங்களுள் மூன்றிலொரு பகுதி மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் வாழிடம் அழிக்கப்படுவதாலும், அவை தேவைக்கு அதிகமாக சேகரிக்கப்படுவதாலும் அழிந்து போகின்றன. அவற்றில் பல, சுதேச தாவரங்கள் இவை பிரதிநிதிப்படுத்தும் பரம்பரையலகுத் தொகுதிகள், தாவரங்களின் பிறப்பியல் மேம்படுத்தலுக்கு மிகவும் அவசியமானவை யாதலால், அத்தாவரங்கள் இலங்கையின் சொத்தாக விளங்குகின்றன.

எமது கடல் வளம் தான், மக்களின் 70 சதவீதப் புரதத்தேவையைப் பூர்த்தி செய்வதுடன் ஏறத்தாழ 500,000 மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்குகிறது. இலங்கையின் தேசிய வனப்பூங்காக்களும் ஏனைய பாதுகாக்கப்பட்ட சூழல் தொகுதிகளும் உயிர்ப் பல்வகைமையைப் பேணுவதுடன் மட்டுமன்றி உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்யும் புதிய மார்க்கங்களாகவே இருக்கின்றன.

இலங்கையின் தென்மேற்கு பகுதியானது, உலகிலுள்ள 18 உயிர்ப் பல்வகைமைச் செறிவான பிரதேசங்களுள் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புக்களைக்கொண்ட இந்த அழகியதீவை இன்னும் சில நூற்றாண்டுகளில் இன்று வெறிச்சோடிப் போயிருக்கும் ஈஸ்டர் தீவைப்போல மாற்றவேண்டுமா?

இளஞ்சந்ததியினரான நாங்களே சிந்திக்க வேண்டியவர்களாவர்!

No comments:

Post a Comment