Friday, May 14, 2010

கன்னியாகுமரியில் வரலாற்று இமயங்களின் நினைவுச் சின்னங்கள்வானளாவிய வள்ளுவன் சிலையென்றால் உடனே யாவரது ஞாபகத்துக்கும் வருவது கன்னியா குமரிக் கடலாகும். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நாடு தமிழ்நாடு’ என்பர்.

அப்புகழாரத்துக்கு மேலும் அணி சேர்க்கும் வகையிலே கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள பாறையொன்றிலே திருக்குறளின் அதிகாரங்களின் எண்ணிக்கையான 133ஐ வகைக்குறிக்கக் கூடியதாக, 133 அடி உயரத்திலான வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வள்ளுவர் சிலையின் உருவம், இவ்வருடம் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டின் இலச்சினையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழையான நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கியிருந்த அதங்கோட்டாசான் என்பவர் வடவேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் எனக் குறிப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.

சேர, சோழ, பாண்டியர்கள் முதல் நாயக்கர்கள், முகாலயர்கள் தொட்டு ஆங்கிலேயர் வரை வெவ்வேறு காலப் பகுதிகளில் அந்தந்தக் காலத்துக்குரிய ஆட்சியாளர்களால் கன்னியாகுமரி ஆளப்பட்டு வந்ததை இன்று விடுபட்டிருக்கும் எச்சங்கள் பல தெளிவாகக் கூறுகின்றன.


இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் இந்தக் கன்னியா குமரிப் பிரதேசத்துக்கு அப்பெயர் வரக்காரணமாக இரண்டு விடயங்களை அறிஞர்கள் ஊகங்களாகக் குறிப்பிடுகின்றனர்.

சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதலாவது கரத்தின் பின்னணியிலிருக்கும் புராணக்கதை மிகவும் சுவாரசியமானது. முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது.

அசுர குலத்தலைவனாக விளங்கிய பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும் முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தான்.

பாணாசுரனின் கொட்டத்தைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார்.

அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொட்டத்தை அடக்கி உலகில் அறமும் ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள்.

அதற்காக அவள் கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள். கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமான் கன்னியாகிய தேவி மீது காதல் கொண்டார். அவருக்கு தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தான். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார்.

கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததோர் விடயமே! ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடிந்திருக்கிறது.

புதிய வியூகத்தால் தேவி – சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த ஓர்நாள், நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.

நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. போகும் வழியிலே வழுக்கம் பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினார்.

சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானோ பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் சுசீந்திரம் திரும்பினார்.

சிவபெருமானுக்காகக் காத்திருந்த தேவி, அவர் வராததால் என்றும் கன்னியாகவே இருப்பதாக உறுதிபூண்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள்.

தேவியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற பாணாசுரனோ, கடுத்தவமிருக்கும் தேவியைக் காண வந்து, அவளை மணம் செய்யும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ மறுத்துவிட, பாணாசுரன் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.

இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர்.

அவர்களை வாழ்த்திய தேவி தன் தவத்தை மீண்டும் தொடர்ந்தாள். தேவி பாதம் பதித்துத் தவம் செய்த பாறை இன்னும் காணப்படுகிறது என கூறுவர். தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும் காலம் காலமாக இந்தக் கதை கூறப்பட்டு வருகிறது.

கன்னியா குமரிக் கடற்கரையை அடைந்தவுடனேயே, அது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் என்ற எண்ணம் பற்றிக் கொள்ளும். வீதிகளெங்கிலும் இன, மத, மொழி பேதங்களின்றிய சனத்திரள்... கடைகள் எங்கிலும் உள்ள கலைநயம் மிக்க கைவினைப்பொருட்கள் கண்களை வேறு திசையில் செல்லவிடாது.

புற்பாய்களில் வரையப்பட்ட ஓவியங்கள், மரங்கள், சங்குகள், கற்களில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் இன்னும் வார்த்தைகளால் விபரிக்க படமுடியாத பல கைவினைப் பொருட்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை யாவரையும் தம் பக்கமிழுக்கும் வல்லமை படைத்தவை.


கடை வீதியைக் கடந்து செல்கையில் தெரிவதோ பகவதி அம்மன் கோவில்! குமரிமுனையில் தவம் செய்த தேவி கொண்ட கோயிலாக பகவதி அம்மன் கோயில் கருதப்படுகிறது.

அக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் பகவதி அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாகக் கருதப்படுகிறாள். இந்த அம்மனின் மூக்குத்தி மிகவும் பிரபலமானது. நாகமணி பதிக்கப்பட்டிருக்கும். அந்த மூக்குத்தி வீசும் ஒளியைக் கலங்கரை விளக்கமெனக் கருதிய கப்பல்கள் திசைமாறிப் பயணிக்கத் தொடங்கினவாம். இதையடுத்து, பகவதி அம்மன் கோயிலின் கிழக்கு வாசல் கதவு மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற் கரையோரத்திலேயே அமைந்திருக்கும் கோயிலுக்கு அருகிலேயே கடலரிப்புக்கான பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. அரபிக் கடல், வங்கக் கடல், மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய முக்கடல்களும் ஒருங்கே சங்கமிக்கும் அழகு காண்போரைப் பரவசப்படுத்தும்.

வங்கக் கடலிலே மேலெழுந்து அரபிக் கடலேயே அஸ்தமிக்கும் சூரியனின் அழகைக் காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக் கடற்கரையில் கூடுகின்றனர். சித்திராப் பெளர்ணமியன்று அரபிக் கடலிலே சூரியன் மறையும் அதே சமயம் அங்கிருந்து சந்திரன் மேலெழும் அற்புதமான காட்சி, இயற்கையின் வனப்பை எண்ணி மெய்சிலிர்க்க வைக்கும்.

கரையிலிருந்து கடலைப் பார்த்தால் தெரியும் பாறையில் விவேகானந்த மண்டபமும் வானுயர்ந்த வள்ளுவர் சிலையும் வியக்க வைக்கின்றன. அதிகாலையிலிருந்து மாலை 4.00 மணி வரை கரையிலிருந்து இப்பாறைக்கு படகுச் சேவை நடத்தப்படுகிறது. இப்பாறை, சிவபெருமானின் திருக்கரங்களைப் பற்றுவதற்காக தேவி கால்பதித்த பாறையாதலால், ஆரம்ப காலங்களில் ‘ஸ்ரீபாதப் பாறை’ என அழைக்கப்பட்டது.

இன்று பாறையின் ஒரு பகுதி தேவியின் காலடித் தடம்பட்ட பகுதியாக வணங்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு தனது யாத்திரையின் போது கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் அம்மனைத் தொழுத பின் இப்பாறையில் அமர்ந்து தியானம் செய்தார்.

தனது கம்பீரப் பேச்சால் உலகையே தன் பக்கம் திருப்பிய அந்த வீரத் துறைவியின் நினைவாக விவேகானந்தர் நினைவு, மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் நினைவுச் சின்னமாக விவேகானந்தரின் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. அச்சிலையின் கண்கள் தேவியின் ஸ்ரீபாதச் சுவட்டைப் பார்க்குமாறு அமைக்கப்பட்டுள்ளமையே அச்சிலையின் சிறப்பாகும்.

விவேகானந்தர் சிலையும் மணி மண்டபமும் அமைந்திருக்கும் பாறைக்குத் தென் மேற்கேயுள்ள பாறையில் 133 அடியுயரத்திலான திருவள்ளுவர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.

வள்ளுவனின் புகழ் காலத்துக்கும் நிலைத்திருக்க வழி செய்திருக்கும் திருக்குறளுக்கு அணி சேர்க்கும் வகையிலே, இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது எனலாம். கடற்கரையிலே பகவதியம்மன் கோவிலை அடுத்து விவேகானந்தருக்கான சிறுகோயில் ஒன்றும் காணப்படுகிறது.

அக்கோயிலை அடுத்து நடுவிலே கதர் நூல் நூற்கும் தறியின் உருவம் செதுக்கப்பட்டு அகிம்சை, சத்தியம், சமாதானம் என்ற மூன்று பதங்களையும் தாங்கி நிற்கும் மூன்று கோபுரங்களுடன் மண்டபமொன்று நிமிர்ந்து நிற்கிறது.

இவை எல்லாம் கண்களில் பட்ட உடனேயே, அம்மண்டபம் மகாத்மா காந்தியுடன் தொடர்புபட்டது என விளங்கிவிடும். காந்தி நினைவு மண்டபம் எனப் பெயர் பொறிக்கப்பட்டு, அமைதியான நிறங்களால் வர்ணம் பூசப்பட்ட அந்த மண்டபத்தினுள் நுழையும் போதே மனதில் அமைதி குடிகொள்ளத் தொடங்கும்.


அஹிம்சையாலும் எளிமையாலும் எதையுமே சாதிக்க முடியும் என உலகுக்கு உணர்த்திய மகாத்மா காந்தியின் நினைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டது. 1948 ஆம் ஆண்டு மாசி மாதம் 12 ஆம் திகதி, மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலிலே கரைக்கப்பட்டது.

அஸ்தி வைக்கப்பட்ட இடத்திலே 1956 ஆம் ஆண்டு இந்த நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. காந்தி தான் வாழும் காலத்தில் 1925 ஆம் ஆண்டு 1937 ஆம் ஆண்டு என இரு தடவைகள கன்னியாக்குமரிக்கு விஜயம் செய்திருந்தார். அவரது மறைவின் பின்னர் கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்ட அவரது அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக கடற்கரை மைதானத்திலே வைக்கப்பட்ட பின்னரே கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நினைவு மண்டபத்தின் நடுப்பகுதியின் உயரம் 79 அடிகளாகும். காந்தி என்ற மகாத்மா இந்தப் பூவுலகில் வாழ்ந்த 79 வருடங்களை நினைவூட்டும் வகையிலேயே இவ்வாறு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மண்டபத்தின் உட்சுவர்களில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் புகைப்படங்களாகத் தொங்கி மண்டபம் கட்டப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்ய விழைகின்றன. மண்டபத்தின் மத்தியிலே மகாத்மாவின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்திலே, நினைவுக் கல்லொன்று அமைக்கப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தி என்ற எளிமையான பெருமனிதனின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தைக் காண்பதே மாபெரும் பாக்கியம் எனத் தோன்றியது. நினைவுக் கல்லோ, அஹிம்சையின் சாதனையை எண்ணி மெய்சிலிர்க்கச் செய்தது.

நினைவுக் கல்லுக்கு நேரெதிரே காந்தியின் கறுப்பு - வெள்ளை ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது. தூரத்திலிருந்து பார்த்தால் கூட ‘பளிச்’ என்று தெரியும். அந்த ஓவியத்தின் அருகில் சென்று பார்த்த போதுதான், அது கருங்கல்லில் வடிக்கப்பட்ட சித்திரம் என்பது புரிந்தது.

வர்த்தக ரீதியாகப் பட்டை தீட்டப்படும் கருங்கல் வகையைச் சேர்ந்த கறுப்பு, வெள்ளைக்கற்களால் செவ்வனே வடிவமைக்கப்பட்ட கலைநயம் மிக்க அந்த ஓவியத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தொழில்நுட்பம் வியக்கவைத்தது.

இந்த மண்டபத்தின் கட்டட அமைப்பு விஞ்ஞான ரீதியாகவும் பிரபல்யமானது. காந்தி ஜெயந்தியாகிய ஐப்பசி 2 ஆம் திகதியன்று காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலுள்ள நினைவுக்கல்லை, ஆதவனின் கதிர்களும் வீழ்ந்து வணங்கும் வகையில் இம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மட்டும் சூரியக் கதிர்கள் மண்டபத்துள் ஊடுருவும். மண்டபத்தின் கரையிலுள்ள சுழல்படிகளால் 1 வது மாடிக்குச் செல்ல முடியும். இந்த 1 வது மாடி குமரிக் கடல் காற்று தாலாட்ட, குமரிமுனையின் அழகை இரசிப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.

கடலையும், வீசும் தென்றலையும் திருவள்ளுவர் பாறையையும் விவேகானந்தர் பாறையையும் ஆதவனின் திகழொளியையும் இரசித்தபடி இயற்கையில் லயிக்கத்தொடங்கிய சில நிமிடங்களிலேயே எண்ணங்கள் புறந்தள்ளப்பட்டு மனம் ஒருங்குவதை உணரமுடியும். மீண்டு வருகையில், பரபரப்பு மிகுந்த தெருக்களில் கூட மனம் அமைதியுடன் பயணிப்பதையும் அவதானிக்கலாம்.

தொன்மைமிக்க வரலாற்றையுடைய பகவதியம்மன் கோவில் மற்றும் முக்கடல்களும் சங்கமிக்கும் குமரிக்கடல் ஆகியவற்றுக்கப்பால் பாரத தேசத்தில் பிறந்து முழு உலகையுமே தம்பக்கம் திருப்பிய மூன்று பெருமகான்களுக்கான நினைவுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டு காலத்தால் அழியாத வரலாற்றை உருவாக்கிய மண்ணாகவே கன்னியாகுமரி மண் தெரிந்தது.

இளம் வயதிலேயே தன் பேச்சுத்திறத்தாலும் ஆன்ம வலிமையாலும் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தவர் சுவாமி விவேகானந்தராவார். அறியாமை இருளிலே மூழ்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பி, இந்து மதத்தின் விலை மதிக்கமுடியாத தத்துவங்களை உலகறியச் செய்தவரும் அவரே.

எந்தவித மதச்சார்புகளுமின்றி மனிதவாழ்வுக்குத் தேவையான அறக்கருத்துக்களை ஒவ்வொன்றும் இரண்டே வரிகளையுடைய 1330 குறட்பாக்களுக்குள் அடக்கிய பெருமை திருவள்ளவரைச்சாரும். திருக்குறள் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்தது. எந்தக் காலத்துக்கும் பொருத்தமானது. அதனால்தான் இதை உலகப் பொதுமறை என்பர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி வென்றவர் மகாத்மாகாந்தி. கத்தியின்றி யுத்தமின்றி அஹம்சையால் சாதித்துக்காட்டியவரும், இன்று இந்தியா பலதுறைகளில் தன்னிறைவு காண்பதற்கு வழிகோலிய வரும் கூட அவரே.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் தாம் சந்தித்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, கொண்ட கொள்கை வழி நின்று சாதித்த மூன்று இமயங்களுக்கான நினைவுச் சின்னத்தை ஒரே இடத்தில் காண வேண்டுமாயின் கன்னியா குமரியில் மட்டுமே காண முடியும்.

சூரியோதயத்தை கன்னியா குமரியில் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள். சூரியனின் உதயம் மட்டுமன்றி அஸ்தமனமும் கூட கன்னியாகுமரியில் அழகாய்த்தான் தெரிந்தது.

கடற்கரையிலுள்ள கருங்கல் மண்டபத்தில் தூண்களிற்கிடையே பிரகாசமாய்த் தெரியும் சூரியனின் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை.

கண்ணியாகுமரி செல்லும் ஒவ்வொருவரும் இயற்கையின் அற்புதத்தை வியந்தபடி பகவதி அம்மனின் அருளையும் வரலாற்று நாயகர்கள் மூவரை நேரிலே கண்ட நிறைவையும் ஒருங்கே பெற்ற திருப்தியுடன் மீளமுடியும்.

No comments:

Post a Comment