Monday, July 21, 2014

இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி - 1

(தினக்குரலில் பிரசுரமாகிய என் முதலாவது கட்டுரை 2005, இதன் நாளதுவரையாக்கம் அடுத்த கட்டுரையில்..)

ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவுகோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழிமூலக்கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்று பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில்தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக்கல்வியின் அறிமுகம் ஆகும்.

இதற்கு 1831 ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட கல்விச் சீர்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியைப் போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக்கல்வியை இலங்கை எங்கனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்கள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ப்பிரதேசங்களிலேயே அதிகளவாக நிறுவப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972 ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில் கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய 1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.

1960 களில் இலங்கையின் பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் தமிழ் மாணாவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ்- விஞ்ஞான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு சிங்கள கலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புகளுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1943 இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாசைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரன்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச் சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை 1956 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.

சுதந்திரத்தின் பின்னரும் ஆங்கில அரச கரும மொழியக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல்வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத்தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாசாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதே சமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ஆம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப் பட்டது. பிலிப் குணவர்த்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்த்தகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.

இது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை வளங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படல், 1960 களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக்கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.

கிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதத்தினை கொண்டிருப்பினும், முதற்தர கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.

தனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போது தான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.

பிந்திய ஞனம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கும் 2002 இல் தரம் 6க்கும் 2003 இல் தரம் 7 க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன. 2002 இல் 150 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப் பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003 ஆம் ஆண்டு மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கிலமொழி மூலக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில அறிவுடையோர் சதவீதத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்ஞானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத்தகங்கள் நற்றும் விஞ்ஞான தொழில்நுட்டபப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.

ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும்.

இதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகின்றது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கரவின் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்களை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளூர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.

இம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச-சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை நோக்கி தள்ளப்படலாம். கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிகப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாதது ஆகும்.

இன்றைய சூழலில் "ஆங்கிலமொழிமூலம்" எனும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல்யப்படுத்துதலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்கப் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத்திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல். மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூகக் கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை ஆகும்.

ஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும்.எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும்.ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.

இலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது.அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு.முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது செயற்பட்டது.சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில்,ஒரே பாடசாலையில் கல்வி கற்றனர்.அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு கல்வித்திட்டமே. ஒரு தேசிய அடையளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித்திட்டம் ஆங்கில மொழிமூலக்கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளை தத்தமது தாய்மொழியில் கற்பற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்பட முடியாதது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ்-சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ்-சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அது வினைத்திறன் மிக்கதாகும்.

நன்றி: இளந்தென்றல்-2006
தமிழ்ச்சங்கம்
கொழும்பு பல்கலைக்கழகம்

2 comments:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Post a Comment