அது ஒரு காலம்.. செய்தித்தளங்களை மட்டுமே சுற்றி வந்த
மனதோடு தலைநகரில் இருந்தபடி இருதலைக் கொள்ளி எறும்புகளாய் தவித்துக்கொண்டிருந்தவர்களுள்
நானும் ஒருத்தி.. வைத்தியசாலைகள் வரை தம் பயணத்தைத் தொடர்ந்தவர்களுக்கு சமூக
வலைத்தளங்களினூடு நட்புகளின் பெரு உள்ளங்கள் சேர்ந்து சகோதர மொழி பேசும் உறவுகள்
மூலம் என்னால் முடிந்தவரை உதவ முடிந்ததில் சிறு ஆறுதல்.
வவுனியா... அன்றைய கால கட்டத்தில் ஒரு ஆறுதல் மையம்.
வடக்கிலிருந்து வந்த தேவைகளும் தெற்கிலிருந்து வந்த தீர்வுகளும் சந்தித்த வன்னிப்
பெரு நிலம் தான் இந்த வவுனியா என்று கூறுவதில் தவறேதும் இல்லை.
நிவாரணக் கிராமங்களாய் பெரியார்களின் பெயர்கள்
சூட்டப்பட்ட முகாம்களில் செறிந்திருந்தோர் பலவகை. சிறுவர்..முதியோர்..கர்ப்பிணித்தாய்மார்...
கைவிடப்பட்ட, விதவையாக்கப்பட்ட பெண்கள்..வலுவிழந்தோர் என எண்ணிலடங்கா
குழுமங்கள்.... கணிதம் கற்றவளாய் கூற விழைந்தால் அது ஒரு சிக்கலான இடைவெட்டுகளுடன்
கூடிய தொடைத் தொகுதி எனலாம்.
குடும்பமாய் வந்தவர்களை விட ஆதரவின்றி வந்தோர் மிக அதிகம்...
அவர்களை எல்லாம் எங்கு இணைப்பதென்பது பெருங்கேள்விக்குறி..
வவுனியாவில் நிலைபெற்றிருந்த ஆதரவற்றோர் இல்லங்கள்
நிறைந்து வழியத்தொடங்கின. புதிய இல்லங்கள் பல உருவாகத்தொடங்கின. அவையும் குறையின்றி நிறையவே செய்தன.
அன்றைய காலத்தில் வேறு எதையும் எண்ணத் தோன்றவில்லை.
திக்கற்று நின்றவர்களுக்கு ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்க ஒரு புகலிடம். அத்தோடு நிர்வாகத்தரப்பின் பணி முடிந்து போக
இல்லங்களின் பணி ஆரம்பமாகியது.
கட்டுப்பாடான கட்டமைப்புக்குள் பல காலம் வாழ்ந்து
இன்னல்கள் பல கடந்து மரண வாயில் வரை சென்று மீண்டவர்களை இயல்பு நிலைக்குத் திருப்புதல்
ஒன்றும் சாதாரணமானது அல்லவே? இல்லங்கள் செய்யும் பணியும் அத்தகையது தான். அதை
எவரும் சுலபமாக எடைபோட்டு எள்ளி நகையாடி விட முடியாது.
அந்த சிக்கலான ஆரம்பம் இன்று அரைத் தசாப்தங்களையும்
தாண்டி தன் முடிவிலிப்பாதையிலே பயணித்துக்கொண்டிருக்கிறது. இல்லங்களை
நிர்வகிக்கும் உள்ளங்கள் இனியும் சலித்துப் போகாமல் இருப்பதற்காக ஒரு
பயிற்சிப்பட்டறை காலத்தின் தேவையாக இருந்தது. பொதுக்கூட்டமொன்றில் பலரின்
கோரிக்கைக்கமைய ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டது.
உடனடியாய் மனக்கண்ணில் தெரிந்த வளவாளர் உள நல
மருத்துவர் வைத்தியக் கலாநிதி சிவசுப்பிரமணியம்
சிவதாஸ். வன்னியின் துயரறிந்து தலைநகரிலிருந்து அதே சிக்கலான காலத்தில்
வவுனியாவுக்கு தன் சுயவிருப்பிலே பணியாற்ற வந்தவர். பல தளர்ந்த மனங்களை
புத்துணர்வு பெற வைப்பதில் அவருக்கு நிகர்
அவர் மட்டுமே.
சலிப்புற்ற அந்த உள்ளங்களை புத்துணர்வு பெறச்
செய்வதற்காக தவசிகுளத்தில் அமைந்திருக்கும் சேவா லங்கா பயிற்சி மையம் தேர்வு
செய்யப்பட்டது. பராமரிப்பு குறைவாக இருந்த
போதும் இயற்கை அன்னையின் அருட்கொடையாய் வீசிய காற்றின் சுகம் குறைகளை மறைய
வைத்துவிட்டது.
தன் அனுபவப் பகிர்வை இணைத்து வைத்தியக்கலாநிதி
சிவதாஸ் இரு பகுதிகளாய் நடாத்திய முழு நாள் பயிற்சிப்பட்டறையின் போது என் ஆழப்பதிந்தவற்றை பகிர்வதில் சிறு மகிழ்ச்சி.
“ஒரு அதிகாலைப்பொழுதிலே முதலாவது நபராக என்னிடம் ஒரு
வயதான அம்மா வந்திருந்தார். வெளி நோயாளர் பிரிவிலே புதினம் பார்க்க வந்த ஆச்சிக்கு
இலக்கத்துண்டைக்கொடுத்து பெயரைப் பதிந்து விட்டார்கள் போலும். இயலாக்கட்டத்தில்
என்னிடம் அனுப்பி இருக்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. உள்ளே நுழைய முன்னரே எனக்கு
மன நோயொன்றுமில்லை; தீராத நாரி உழைவு மட்டுமே என தெளிவாகக் கூறிவிட்டார். அவரது குடும்ப
வரலாற்றையும் கூட ஊகிக்க முடிந்தது. எப்போது இந்த வியாதி வந்தது என்று கேட்டேன்.
கடைசி மகளை ஜேர்மனிக்கு பயணம் அனுப்பிவிட்டு திரும்பி வரும்போது குண்டும்
குழியுமாய் இருந்த பாதையில் மகிழூந்து துள்ளித் துள்ளி வந்ததன் விளைவு என்றார்.
என் ஊகம் சரியாக அமைந்தது.
மனதுக்கும் உடலுக்கும் இருக்கும் அந்த மறைமுகத்
தொடர்பை எப்படி அந்த மூதாட்டிக்கு புரிய வைப்பது என்பது பெரும்புதிராக இருந்தது. தொடர்
சிந்தனையில் இருந்த என் எண்னத்தில் தோன்றியது ஒரு விபத்து பற்றிய விவரணம்.
அம்மா..! நீங்கள் உங்கள் கணவருடன் ஒரு சைக்கிளிலே
பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். எதிரே வந்த இன்னொரு சைக்கிளுடன்
உங்கள் சைக்கிள் மோதி நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்றால் என்ன நடக்கும் என்று
கேட்டேன். பயமாக இருக்கும் . அதனால் நெஞ்சு படபடக்கும் என்றார். பயம் எங்கே
இருக்கிறது என்று கேட்டேன்? மனதிலே என்றார். நெஞ்சு எங்கே இருக்கிறது என்று
கேட்டேன்? உடலிலே என்றார். நீங்கள்
கடைசியாகச் செய்த கடின வேலை என்ன என்று கேட்டேன்? மாவிடித்தேன் என்றார். நவீனம்
தலை தூக்கிய உடலில் ஒரு மூதாட்டி தான் மாவிடித்தேன் என்று கூறுவதே அவரது உடலின் உறுதியைத்
திறம்படச் சொல்லும். அத்தனை உறுதி வாய்ந்த உங்களுக்கு எப்படியம்மா நாரி உளைவு
இருக்கும்? உங்கள் மனதில் உள்ள கவலை தான் உங்களுக்கு அப்படித்தெரிகிறது என்றேன்.
அன்று போனவர் இன்றுவரை என்னிடம் திரும்பி
வரவில்லை.”
இது உடலுக்கும் மனதுக்கும் இடையில் இருக்கும்
தொடர்பைப் புரிய வைப்பதற்காய் வைத்தியக் கலாநிதி சிவதாஸ் சொன்ன கதை.
மனம்-உடல் இவை இரண்டும் ஒன்றுடனொன்று மறைமுகமாகத் தொடர்புபட்டவை.
ஒருவன் மகிழ்வாய் இருத்தல் என்பது அவனது கையில் மட்டுமே இருக்கிறது என்ற
மிகப்பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். நாம் எதைச் செய்தாலும் காதலோடு செய்ய
வேண்டும். அப்போது சலிப்படைதல் இருக்காது என்பது தெளிவு.
மனம் – உடல்
பற்றியெல்லாம் நாம் ஆராய முன்னர் மன நோய்க்கும் மன நலக்குறைபாட்டுக்கும் இடையே
இருக்கும் வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டிலே மன நோயானது
10% க்கு மேற்படாமலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு இலங்கையும்
விதிவிலக்கல்ல. ஆனால் மன நலக்குறைபாடு எனும் போது இலங்கையில் அது ஏறத்தாழ 60-70% ஆக இருக்கிறது என அறியமுடிகிறது.
ஒருவர் மகிழ்வாய் இருப்பதில் 10% புறக்காரணிகளும் 90
% அகக்காரணிகளும் தொடர்புபட்டிருக்கின்றன.
எம் வாழ்வில்
நாம் நீடித்த மகிழ்ச்சியைக் காண வேண்டுமாயின் சில விடயங்களில் அதிக கவனம்
செலுத்தவேண்டியிருக்கிறது. ஒரு விடயத்துடன் இணைப்பை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி தானே
கிடைக்கும் என்பது திண்ணம். அதே போல சுய மதிப்பை எப்போதும் உயர்த்திக்கொள்ள
வேண்டும். அதாவது தன்னை, தனது நேர் மறை இயல்புகளைக் கணித்து தன்னைத் தானாக
ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாற்றங்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவற்றை
ஏற்றுக்கொள்ளவும் பழக வேண்டும். இன்றும் நாம் கொண்டிருக்கும் இந்த நீடித்த
துயருக்கு மாற்றங்களை அன்று ஏற்றுக்கொள்ளாமல் இருந்தமையும் ஒரு காரணம் என்று
சொல்வதில் தவறேதும் இல்லை.
பரிவு, இரக்கம் போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ள
வேண்டும். நாம் அணுகும் விடயங்களை பரிவுடன் அணுகும் போது மகிழ்ச்சி தானே வந்து
சேரும்.
பெறுமானங்களைச் சேர்த்துக்கொள்ள நாம் பழக வேண்டும்.
இந்த பெறுமானங்களை பொருள், பதவி, உறவு, ஆன்மீகம் என்ற நால்வகை அடிப்படைகளில் உருவாக்க முடியும். நவீன உலகிலே நாம் பொருளுக்கும் பதவிக்கும்
கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் கொடுப்பதில்லை.
சில தசாப்தங்களுக்கு முன்னர் எம் பாட்டன் பக்தி
மிஞ்சி மெய்யுருகி கடவுளை வழிபட்ட போது கிடைத்த உணர்வை, எட்டிப்பார்த்து ஒற்றை விரலால் திருநீறு பூசி
விரையும் இன்றைய வாரிசு உணர வாய்ப்பில்லை.
எப்போது பொருளுக்கும் பதவிக்கும் நாம் கொடுக்கும்
முக்கியத்துவத்தைக் குறைத்து உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிகமாகக் கொடுக்க
முயல்கிறோமோ அப்போது நீடித்த மகிழ்ச்சி எம் வீட்டு வாசலை எட்டிப் பார்க்கும்.
குறிப்பாக சிறுவர்களைப் பராமரிப்பவர்கள் என்ற
ரீதியில் ஒவ்வொருவரும் நீடித்த மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது மிக மிக
அவசியமாகிறது.
சிறுவர்களானவர்கள் பெரியவர்களிடமிருந்து குறிப்பாகச்
சில விடயங்களிலே வேறுபட்டுக்காணப்படுகிறார்கள். அவற்றுள் மிகப் பிரதானமானவை
தங்கியிருத்தலும் வார்த்தைப்படுத்தலும் என்றால் மிகையாகாது. வளர்ந்தவர்கள் நாம்
ஒரு விடயத்தை வாய்மொழி மூலம் விளங்கப்படுத்துவது போல் சிறுவர்களால் செய்ய
முடிவதில்லை. ஆதலால் அவர்களுடனான தொடர்பாடலில் உடல்மொழியின் வகிபாகம் மிக அதிகம்
எனலாம்.
குழந்தையொன்று தான் பிறந்த்திலிருந்து 6 மாதங்கள்
வரைக்கும் காண்பவர்களை எல்லாம் பார்த்து சிரிப்பதை நாம் அவதானித்திருப்போம். 6-7
மாதங்களைக்கடக்கும் போது தான் அதற்கு தன் தாய் மிக முக்கியமான ஒருவர் என்ற புரிதல்
ஏற்படத் தொடங்குகிறது. 15 மாதங்கள் கடந்தவுடன் தாயைப் பிரிந்தால் அது நிரந்தர
பிரிவு என முடிவு செய்து விடுகிறது. ஆதலால் தான் அப்பருவத்தில் தாயை தற்காலிகமாகப்
பிரிய நேரிட்டாலும் கூட அதை ஏற்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழும்.
3-4 வயதாகும் போது அக்குழந்தை பாதுகாப்பான பிணைப்பை
உருவாக்க முயல்கிறது. சாதாரணமாக தாயும் தந்தையும் சண்டைபிடித்தால் அதை
பாதுகாப்பற்ற தன்மையாக குழந்தை உணர்கிறது. இந் நிலைமை குழந்தையின் உள
ஆரோக்கியத்திலே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவு.
3-4 வயதாகும் குழந்தை தாயின் தற்காலிக பிரிவை
உணரத்தொடங்கும். குழந்தையின் 5 வயது வரை தேர்ச்சி,
வளர்ச்சி, விருத்தி, மகிழ்ச்சி என்ற நான்கு பரிமாணங்களிலே மூளையின் விருத்தி
நடைபெறும். ஆனால் அதன் விருத்தி அத்தோடு நின்றுவிடாது. முன் மூளையின் விருத்தி 24
வயதிலே பூரணப்படுவதாக அண்மைய நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த
முன்மூளையின் விருத்தி தான் புத்தாக்க செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவம்,
முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற பண்புகளுக்கும் காரணமாக அமைகிறது.
மூளையின் பிரதான விருத்தி நடைபெறும் காலப்பகுதியிலே
அதனை மேலும் தூண்ட வேண்டிய கடப்பாடு குறிப்பாக பெற்றோருக்கு இருக்கிறது.பலதரப்பட்ட
விளையாட்டுகள் மூலமே அவ்விருத்தியைத் தூண்ட முடியும். தலாட்டுப்பாடல் தொட்டு எண்ணெய்/சூரியக் குளியல் வரை எம்மவர் மத்தியில் வழங்கி
வந்த நடைமுறைகள் குழந்தையின் ஐம்புலன்களை தூண்டுவதாக அமைந்திருந்தன. ஆனால் நவீனம்
ஆக்கிரமித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டியே தஞ்சமென வாழும்
பெற்றோர் தம் வழியிலே குழந்தையையும் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். இது
காலப்போக்கில் குழந்தைகளுடைய திறன் விருத்தியைக் கருத்தில் கொள்ளும் போது
பின்னடவைத் தோற்றுவிக்குமோ என்ற அச்சம் அறிவியலாளர்கள் மத்தியிலும் எழாமலுமில்லை.
குழந்தையானது தன் ஒரு வயதின் பின்னரே நிறங்களை
வேறுபிரித்து அறிகிறது. ஆனாலும் அசைவுகளை அவதானித்தபடியே இருக்கிறது. சிறு
குழந்தைகள் கேலிச்சித்திர ஒளிப்படங்களை விரும்பிப் பார்ப்பதற்கும் அதுவே காரணம்.
அதுவே சுலபமாகி விட, பெற்றோர் தம் பிள்ளையை கேலிச்சித்திரத்துக்கு அடிமையாக்கி
அதன் திறன் விருத்திக்கு தாமே எதிரியாகிவிடுகிறார்கள்.
குடும்பச்சூழலிலே வாழும் குழந்தைகள் தாம் வளரும்
புறச்சூழலிலிருந்தும் தம் பெற்றோரிடமிருந்தும்
காலத்துடன் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்கிறது. அதன் மூலம் தான் வாழ்வில்
சந்திக்கப்போகும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிகளையும் கண்டுகொள்கிறது. ஆனால்
இல்லங்களிலே வளரும் சிறார்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை என்றே
கூறமுடிகிறது. மிக இறுக்கமான சூழலிலே வாழப் பழகிக்கொண்ட அச்சிறார்கள் வெளிச் சூழலை
எதிர்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது கண்கூடு.
பிள்ளையைத் தந்தை அடித்தால் அது அழுகிறது. அந்த
அழுகையானது தந்தை அடித்ததால் ஏற்பட்ட வலியின் விளைவு என்பதற்குமப்பால் தான்
தந்தையால் புறக்கணிக்கப்பட்டுவிட்டேன் என்ற எண்ணத்தால் கிடைத்த ஏக்கத்தால் வந்தது
எனலாம். இல்லக்குழந்தைகள் மத்தியிலும் இந்நிலை காணப்படுகிறது. குடும்பச் சூழலில்
வளரும் குழந்தைகளைக் காட்டிலும் இல்லக் குழந்தைகள் அதீத பரிவுடன் கவனிக்கப்
படவேண்டியவர்கள்.
சிறுவர்களை அணுகும் போது பச்சாதாபத்துடன் அணுக
வேண்டும். அவர்களது மன உணர்வுகளை நாமும் புரிந்தவர்களாய் கனிவுடன் வழி நடத்தினால்
மட்டுமே சிறந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களைப் பயணிக்கச் செய்ய முடியும்.
இத்துணை சிக்கலான விடயங்களையும் நகைச்சுவையாய் பகிர்ந்த
அன்றைய பயிற்சிப் பட்டறை சலிப்படைந்து போன உள்ளங்களை நம்பிக்கையூட்டி துடிப்புடன்
மீள வைத்தது என்றால் மிகையாகாது.
1 comment:
வணக்கம்
துயரத்தில் துவண்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பயிற்சி முகாம் தொடருங்கள் சேவையை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment