(இரணை மடுக்குளம் பற்றிய ஆவணத்தொகுப்புக்காக குளத்தின் பங்காளி என்ற உரிமையுடன் 2014 இல் நான் எழுதிய கட்டுரை. தயவு செய்து அனுமதியின்றி அச்சு ஊடகத்தில் மீள் பிரசுரம் செய்யாதீர்கள்...)
“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.”- 1032
எழுவாரை எல்லாம் பொறுத்து.”- 1032
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் என உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகவும் எளிமையாகக் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.
ஆசிய நாடுகளின்
உணவுப் பாதுகாப்பு எனக் கருதும் போது அரிசிக்கு மிகப் பிரதானமான இடம் இருக்கிறது. அதற்கு
இலங்கை ஒன்றும் விதி விலக்கல்ல.
இலங்கையிலே கிளிநொச்சியை வடக்கின் நெற் களஞ்சியம் என்பர்
விபரந்தெரிந்தோர்.
வீதியின்
இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வயல்
வெளிகள்... ஏறத்தாழ வருடத்தின் முக்கால்வாசி
நாட்களும் நீர் சலசலத்துக்கொண்டிருக்கும்
வாய்க்கால்கள்... இடையிடையே விஸ்வரூபமாய் நிழல் பரப்பி நிற்கும்
மருத மரங்கள்….. வீதிகளில் செல்கையில் வாய்க்கால்களைக்
கடந்து மோதிச் செல்லும் இளந்தென்றல்… ஆங்காங்கே ஐதாக வீடுகள்… இவை கிளிநொச்சிக்கேயுரித்தான தனி அடையாளங்கள். காலம் இவ்வடையாளங்களை அழித்து விட்டிருந்த போதும்
இந்த பசுமையான நினைவுகள் மட்டும் நீங்காமல் நிற்கின்றன என்றால் அந்தப் பெருமை முழுவதும்
இங்குள்ள குளங்களையே சாரும். கிளிநொச்சியின் வரப்புகள் உயர்வதில் பெருந்துணை
புரிபவை இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு
போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களும்
ஏனைய பல நடுத்தர மற்றும்
சிறிய ரகக் குளங்களுமாவன.
கிளிநொச்சி
என்றால் தனிக்காடு என்று இருந்த நிலையை
மாற்றி அதை
பச்சைப் பசேலென ஒரு விவசாயப்
பிரதேசமாக மாற்றியதன் பின்னணியில்
இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் அமைந்திருப்பதை எவராலும்
மறுக்கமுடியாது. 1866 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்
கீழ் கடமையாற்றிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஹென்றி பாக்கர் என்பரினால் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டம்
திட்டமிடப்பட்டது. ஏறத்தாழ 1902 ஆம்
ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம்
பல படிகளாக நடைமுறைப்படுத் தப்பட்டது.
இரணைமடுக்
குளத்துக்கு நீர் வழங்கும் ஒரே
மூலம் கனகராயன் ஆற்றுப்படுக்கையா
கும். இத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 40% விவசாய நீர்ப்பாசனத் தேவைகளுக்குப்
போதுமானதாக இருக்கிறது. விவசாயத்தின் பிரதான பயிராக நெல்
இருக்கின்ற போதும், உழுந்து, பயறு,
கெளப்பி, மற்றும் மரக்கறி வகைகளும்
பயிரிடப்படுகின்றன.
கிளிநொச்சி
மாவட்டத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தால் வளம் பெறுகின்றன
எனலாம். ஆயினும் அந்த நீர் கூட போதியளவு கிடைக்காமல்
அல்லலுறும் விவசாயிகள் பலர் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்றனர் என்பதை
யாவரும் அறிவர்.
இத்தகையதோர்
நிலையில் மிலேனியம் ஆண்டின் முதலாவது தசாப்தத்தில்
முன்னெடுக்கப்பட்டு பல தடங்கல்ளைக் கடந்து இரண்டாவது தசாப்தத்தின் ஆரம்பத்தில் ஒரு திட்டம்
ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மக்களின் குடி நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரணைமடுக்
குளத்து நீரை குழாய்கள் மூலமாக யாழ் குடா நாட்டுக்குக் கொண்டு செல்வதே அத்திட்டமாகும்.
இத்திட்டம் பற்றி பலரும் போதியளவு அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆதலால் அது பற்றி விபரமாக
இங்கு சொல்ல விழையவில்லை.
யாழ்
நகர் மற்றும் நகரையண்டிய பகுதிகள், சாவகச்சேரி, நாவற்குழி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய்,
கட்டுடை, நவாலி, சங்கானை, மூளாய், அராலி, வட்டுக்கோட்டை, காரை நகர், ஊர்காவற்றுறை,
அனலை தீவு, புங்குடுதீவு, வேலணை, மண்டைதீவு, பூநகரி, பளை ஆகிய பிரதேசங்களுக்கு குடி
நீரை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதே வேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்
சபையின் நிலைப்பை நிதி ரீதியாகவும் நிறுவன
ரீதியாகவும் அதிகரிப்பதோடு உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்துவதிலும் இத்திட்டம் பங்களிக்கும்
என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்றிட்ட இணையத்தளம் தெரிவிக்கிறது.
இத்திட்டமானது 4 பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் கீழும் பல்வேறு செயற்றிட்டங்கள்
திட்டமிடப்பட்டிருக்கின்றன. அவை எவை என அறிதலானது இத்திட்டம் தொடர்பில் நடு நிலையாக
ஆராய வழிவகுக்கும் எனலாம்.
அவையாவன,
1.
நீர் விநியோகத்தை மேம்படுத்தல், கழிவு நீர்,
வடிகாலமைப்பு உட்கட்டமைப்பு
நீர் விநியோகத்தை மேம்படுத்தல் எனக் கருதும்
போது பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
a.
இரணைமடுக்
குளத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் மூலம் நீர்வளத்தை கூட்டி குள வினைத்திறன்
மட்டத்தை அதிகரித்தல்
b.
நீரை
எடுப்பதற்கான கட்டமைப்பு, நீரை சுத்திகரிக்கும்
கட்டமைப்பு, சுத்திகரித்த நீரை வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை அமைத்தல்
c.
சுத்திகரித்த
நீரை யாழ் மா நகரசபை எல்லைக்குள் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பை மேற்கொள்ளல்
d.
உரிய
உள்ளூராட்சி சபை எல்லைகளுக்குள் நீர் இணைப்பை வழங்குதல்
கழிவு நீர் , வடிகாலமைப்பு எனும் போது பின்வரும்
விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
e.
கழிவு
நீர் சேகரிப்பு தொகுதியை அமைத்தல்
f.
கழிவு
நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை அமைத்தல்
g.
வெளிச்செல்லும்
நீரை கடலுடன் கலக்கச்செய்யும் வாய்க்கால் தொகுதியமைத்தல்
h.
பராமரிப்பு
உபகரணங்களை வழங்கல்
2. யாழ்ப்பாணத்தின் நீர் வள முகாமைத்துவத்தை
வலுப்படுத்தல்
யாழ் நீர்வள முகாமைத்துவக்குழுவுக்கு ஒருங்கிணனித நீர் வளமுகாமைத்துவம் தொடர்பிலான கொள்கைகளை
உருவாக்க நீர்வளமுகாமைத்துவத்திட்டம் தொடர்பிலான கற்கைக்கு நிதியுதவியளித்தல்
1.
தேசிய
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிலக்கீழ்
நீர் வளத்தின் அளவையும் தரத்தையும் கண்காணிக்கும் தொகுதியை விருத்தி செய்ய உதவுதல்.
உள்ளூராட்சி சபைகள் நிலக்கீழ் நீர் வளத்தை மேம்படுத்துவதற்காக சட்டதிட்டங்கள், நடைமுறைகளை
உருவாக்க உதவுதல்
2.
பொது
நீர் வளக்காப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை
நடாத்துதலும் சமூக கண்காணிப்பு தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டமும்
3. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்
திறனை வலுப்படுத்துவதன் மூலம் வடபிராந்திய ஒத்துழைப்பு நிலையத்தின் தாபனம், மேம்பாடு,
திறன் காப்பை உறுதி செய்தல்
இவை
தவிர இவற்றுடன் உள்ளடக்கப்படக்கூடிய சிறியளவிலான விடயங்களும் இச்செயற்றிட்டத்தால் மேற்கொள்ளப்படும்.
இரணைமடு
நீர்த்தேக்கம் தொடர்பிலே , தற்போது சராசரியாக 28 அடி உயரத்துக்கு அதில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது.
ஆயினும் 32 அடி வரை தேக்கி வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அணைக்கட்டை 36 அடியாக
உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் மேலதிக நீரை யாழ் குடி நீர் விநியோகத்துக்கு பயன்படுத்தலாம்
என்பதே அடிப்படையாக இருக்கிறது. இந்த விநியோகத்துக்கு தேவைப்படும் நீரின் கனவளவு ஏறத்தாழ
10,000 ஏக்கர் அடி எனலாம்.
ஆனால்
எதிர்பாராத கால நிலை மாற்றம் காரணமாக போதியளவு பருவமழை கிடைக்காமல் போகும் பட்சத்தில்
உரியளவு நீர் குளத்தில் தேக்கப்படாமல் போனால் குடிநீர் விநியோகத்துக்கு என்ன நிகழும்
என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் வெளிப்படையான கொள்கைகள்
எவையும் பேணப்படவில்லை என்று கூடக் கூற முடியும்.
உரியளவு
நீர் இக்குளத்தில் தேக்கப்படாது போனால் குடி நீரா? விவசாயமா? என்ற விவாதம் உருவாகும்
என்பது நிச்சயம். மக்கள் குழாய் வழி குடி நீரில்
தங்கியிருக்கப் பழகுவார்களேயானால் குடி நீர் தான் அவசியம் என முடிவாகும் என்பது தெளிவு.
ஏனெனில் அரிசி இறக்குமதிக்குப் பழகி விட்ட எம்மவர் இன்னும் குடி நீர் இறக்குமதிக்குப்
பழகவில்லை.
சிறு
போக நெற்செய்கை அற்றுப்போக இங்கு வடமாகாணத்தின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
வேறுபகுதிகளிலிருந்து அரிசியைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைப்பாடு உருவாகும். உள்ளூர் உற்பத்திக்கான விலையை விட அதிக
விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே வேளை வன்னியைப் பொறுத்த வரையிலே பெரும்பகுதியினர்
விவசாயிகள். அவர்களது வாழ்வாதாரம் குலைந்து போக இது வழிவகுக்கலாம்.
வருமானம்
இல்லாத நிலையில் அதிக விலையில் அரிசியை கொள்வனவு செய்தல் சாத்தியமற்றதோர் விடயமாகும். விவசாயிகள் மாற்றுத்தொழில் தேடிச் செல்ல விழைய
காலப்போக்கில் விவசாயம்
அற்றே போகலாம். பரம்பரை பரம்பரையாக
விவசாயம் செய்து தம்மை மட்டுமன்றி
தேசத்தையே வளப்படுத்திய இந்த விவசாய முதலாளிகள்
கூலிகளாக மாறும் நிலை ஏற்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. இவையெல்லாம் உடனடியாகத்தெரியும் மாற்றங்கள்
அல்ல. காலத்துடன் மெதுவாகத்தொடர்ந்து ஓரிரு தசாப்தங்களின் பின் வெளிப்படையாகத் தெரியப்போகின்றவை.
கடந்த
காலங்களில் எண்ணற்ற இடப்பெயர்வுகளையும் தொடர்
அழிவுகளையும் சந்தித்த இம்மக்கள் சாம்பலில் இருந்து மீண்டெழும் போனிக்ஸ்
பறவையாய் இன்றும் உயிர்த்திருப்பதன் காரணமே இரணைமடுக்குளமும் அதனோடண்டிய வயல் நிலங்களும்
இவர்களது விடாமுயற்சியும் தான்.
சிறுபோகத்துக்கு
அதிக நீர் தேவைப்படும் நெல்லுக்குப் பதிலாக அப்போகத்தில் பணப்பயிர்களைப் பயிரிடலாம்
என்ற கருத்தும் பரவலாகக் கூறப்படுகிறது. பணப்பயிர்களுக்கு ஏதுவான தரை அமைப்பு , மண்
ஆகியன இரணைமடுக்குளத்தால் வளம் பெறும் நிலங்களுக்கு பொருத்தமானவையாக இருக்குமா என்பது
ஆராயப்பட வேண்டிய விடயமாகும். பணப்பயிர்கள் எங்ஙனம் உணவுப்பாதுகாப்பைப் பேண உதவும்
என்பதில் போதிய தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.
அடுத்த
முக்கியமான விடயம், குடி நீர் விநியோகத்துக்காக நீரை வெளியேற்றும் அமைப்பை குளத்தினுள்
அமைப்பதால் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
இவை
அப்படியிருக்க இத்திட்டத்தினூடாக விழையவிருக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் பார்க்க
வேண்டிய தேவை இங்குள்ளது. இரணைமடுவை ஒத்த பாரிய பழம்பெருங்குளங்கள் போதியளவு புனரமைக்கப்படாவிடில்
அவற்றின் உச்ச கொள்ளளவளவு நீரைத்தேக்கும் போது குளக்கட்டுகள் உடைய நேரிடலாம். இரணைமடுக்குளமானது
காலத்துக்குக் காலம் நிகழ்ந்த அவலங்களுக்கெல்லாம் சாட்சியாக நிற்கிறது. அந்த அவலங்களுக்கு
மத்தியில் அதன் புனரமைப்பு பெரியளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.,அதேவேளை குளத்தொகுதியின்
கட்டமைப்பு தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. தற்போதிருக்கும் நிலையில் தன் உச்சக்கொள்ளளவு
நீரைத் தேக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் குளக்கட்டு உடைப்பெடுக்கும் நிலை
கூட ஏற்படலாம் என்பது நிபுணர்களின் ஊகம். ஆதலால் இக்குடி நீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்
அதேவேளை குளத்தின் இருப்பையும் உறுதி செய்து விடலாம் என்பது ஒரு தரப்பின் வாதமாக இருக்கிறது.
பருவமழை
பெய்யும் காலங்களில் இரணைமடு வான் பாயும் போது உரிய வாய்க்கால் தொகுதிகள் வினைத்திறனாக
இயங்குவதில்லை. அவையும் கடந்த கால அசம்பாவிதங்களில் சிதைந்து போய்விட்டன. இதனால் கண்டாவளை
பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில பிரதேசங்கள் வெள்ளத்தால் மூடப்படும் அபாயம் காணப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இவ்வாய்க்கால் தொகுதி புனரமைக்கப்படுகிறது, இதன் மூலம் இரணைமடுக்குளம்
வான் பாய்வதால் ஏற்படும் வெள்ள அழிவுகள் தவிர்க்கப்படலாம்.
இதுவரைகாலமும்
கைவிடப்பட்டிருந்த திருவையாறு இடது கரை நீர்ப்பாசனத் திட்டம் மீள உயிர்பெறும் சாத்தியக்கூறுகள்
அதிகமாக இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தை
பொறுத்தவரையிலே அதன் கலாசாரம் பழம்பெருமை வாய்ந்தது. இயற்கையோடு ஒன்றியது. யாழ் மக்கள்
உழைப்புக்கும் முயற்சிக்கும் அறிவுக்கும் பெயர்போனவர்கள்.
அதனால்
தான்
“ஆறு பிறந்து திரிந்து வயல்கள் அடைந்து
பயிர்கள் விளைந்திட
ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன
இருந்தன தோள்கள் என்று
கூறி உழைத்துப் பின் ஆறிக் கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்.” என்கிறார்
மகாகவி உருத்திர மூர்த்தி.
ஆனால்
கடந்த கால அவலங்களால் இன்றைய மக்கள் அக்கலாசார விழுமியங்களை மறந்து போய்விட்டார்கள்.
எல்லாவற்றிற்கும்
முதல் யாழ்ப்பாணத்தின் நீர்வளம் தொடர்பில் இங்கு சற்று ஆராய்ந்தறிய வேண்டி இருக்கிறது.
முப்புறமும் கடலால் சூழப்பட்ட யாழ் குடா நாடு , அதனையண்டிய தீவுகளிலே மயோசின் காலச்
சுண்ணக்கற்பாறைகள் காணப்படுகின்றன. இவை கடல்
மட்டத்தின் கீழ் பரந்து காணப்படுகின்றன. பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நீரானது நிலத்தை ஊடுருவி இப்பாறைகளில் உள்ள குழிகளைச்
சென்றடையும். அங்கு ஏற்கெனவே இருக்கும் உவர் நீரின் மேல் அடர்த்தி வித்தியாசம் காரணமாக
நன்னீர் ஒரு வில்லை போல படர்ந்திருக்கும். ஆழம் அதிகரிக்க அதிகரிக்க நன்னீரின் உவர்த்தன்மையும்
அதிகரிக்கும். இந்த நன்னீர் படையானது குடா நாட்டின் மையப்பகுதியில் மிகையாகக் காணப்படும்.
அதன் அளவு கரையோரப் பகுதிகளை அண்மிக்க அண்மிக்க குறைவடைந்து செல்லும்.
மகாகவி
கூறியிருப்பது போல யாழ் மண்ணிலே மலைகளில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள் எவையும் இல்லை.
இம்மண் முற்று முழுதாகத் தங்கியிருப்பது நிலக்கீழ்
நீரில் மட்டுமே. இதைத் தெளிவாக உணர்ந்தமையால் தாம் நம் முன்னோர்கள் வயல்வெளிகள்
தோறும் துரவுகளையும் கிராமங்கள் தோறும் குளங்களையும் கோயில்கள் தோறும் கேணிகளையும்
அமைத்திருந்தார்கள்.
துரவு
என்றால் என்ன என்று இன்றைய இளஞ்சந்ததியினர் அதிசயமாய்க் கேட்கின்றனர். யாழ்ப்பாணத்தில்
இன்னும் உயிர்ப்பாக இருக்கும் துரவுகளை விரல் விட்டு எண்ண முடியும். பல துரவுகள் தம்
நிலையிழந்து குப்பை போடும் இடங்களாக மாறிவிட்டமை
தான் யதார்த்தமான உண்மை.
இந்
நிலைக்கு குளங்கள் ஒன்றும் விதிவிலக்கல்லவே! கிராமம் நகரமயப்படும் போது நடக்கும் மாற்றங்களுள்
மிகப் பிரதானமானது குளங்களை ஆக்கிரமித்து மண் இட்டு நிரவுதலாகும். இது இலங்கை எங்கிலும்
பரவலாக நடைபெற்றிருக்கிறது. யாழ் நகரப்பகுதிகளில் காணப்பட்ட சில குளங்கள் இன்று இருந்த
இடமே தெரியாமல் போய்விட்டன. அவற்றின் பெயர்களும் கூட.
எஞ்சியிருக்கும்
குளங்களும் குப்பை கொட்டும் கிடங்குகளாகவும் கழிவு நீரைக் கலக்கவிடும் இடங்களாகவுமே
மாறியிருக்கின்றன. இன்றைய யாழ்ப்பாணத்திலே மாசின்றிய குளமொன்றைக் காண்பது மிக அரிதாகி விட்டது.
கோயில்கள் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் கேணிகளுக்கும் இதே நிலை தான்.
அதே
சமயம் ஏதோ ஒரு காரணத்தை கூறி இருக்கும் மரங்களை
எல்லாம் தறிக்கும் மனப்பாங்கு எம்மவரிடையே அதிகரித்து விட்டது எனலாம்.
ஆக
மொத்தத்தில் மழை நீரைச் சேமித்து நிலக்கீழ்
நீரைப் பேணுவதற்காய் எம் முன்னோர்கள் வகுத்த கட்டமைப்பின் பெரும் பகுதி செயலிழந்து
விட்டது எனலாம்.
இன்னும்
பல குளங்கள் நீரைத் தேக்கி வைக்கின்றனவே எப்படி அவை செயலிழந்து போகலாம் என்று நீங்கள் சிந்திக்கலாம். மாசுள்ள நீரைத் தேக்கி வைத்து
நிலக்கீழ் நீருடன் கலக்கவிடும் குளங்கள் இருந்தென்ன ? இல்லாவிட்டாலென்ன?
நிலக்கீழ் நீரைப்பேணுவதற்கான பொறிமுறை செயலிழந்துவிட்டது
என்பதற்காக அந் நீரை எவரும் பயன்படுத்தாமல்
இருக்கவில்லை. பல்வேறு தேவைகளுக்காக நிலக்கீழ்
நீர் மிகையாகப் பயன்படுத்தப்படலானது நன்னீர்
முடிந்து உவர் நீர் உள்ளெடுக்கப்பட வாய்ப்பாகும். யாழ்ப்பாணத்தி இப்படி உவராகிப் போன
கிணறுகள் ஏராளம்.
அதைவிடக்
கொடுமையான விடயம் யாதெனில் உவராகிப் போன கிணறுகள் கைவிடப்பட்டு பின்னர் அவை குப்பைக்
கிடங்குகளாக மாறியமை தான்.
தத்தமது
பிரதேச எல்லைகளுக்குள் இருக்கும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டையும்
பொறுப்பையும் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளே நீர் நிலைகளுக்கு அருகாமையில் தம்
பிரதேசக் கழிவுகளைக் கொட்டுவது மிகவும் வேடிக்கையானது.
நிலக்கீழ் நீரைப்பேணும் பொறிமுறைகள் கைவிடப்பட்ட
நிலையில் விவசாயத்தில் மிகையாகப் பாவிக்கும் உரம் மற்றும் கிருமி நாசினிகளால் அது தொடர்ந்தும்
மாசுபட்டு வருகிறது. புற்று நோய் முதலாய நோய்த்தாக்கங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.
இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
அதிகரிக்கும்
சனத்தொகை காரணமாக காணிகள் துண்டாடப்பட மலசல கூடத்துக்கும் கிணற்றுக்குமிடையிலான தூரம்
15 மீற்றராக வேண்டும் என்ற நியமத்தைப் பேண இயலாது விடுகிறது. விளைவு நிலக்கீழ் நீரிலே
ஈ கோலை என்ற பக்டீரியா தொற்று ஏற்பட ஏதுவாகிறது. இதனால் தொற்று நோய்கள் விரைவாகப் பெருகுகின்றன.
யாழ் மாநகர சபை எல்லைக்குள் இத்தகைய அச்சுறுத்தல்கள்
அதிகமாக இருக்கின்றன.
அதுமட்டுமன்றி
கொழும்பில் எம்மவர்கள் மத்தியில் வெகு பிரபலமான தொடர்மாடிக் கலாசாரம் தற்போது யாழ்
நகரையும் ஊடுருவத்தொடங்கி விட்டது. இதனால் ஒரு குடும்ப அலகு வசித்த இடத்தில் 10 க்கும்
மேற்பட்ட குடும்ப அலகுகள் வசிக்கத்தலைப்படும். காலப்போக்கில் உரிய நிலக்கீழ் நீர் மிகையாகப் பாவிக்கப்படும்.
யுத்த
சத்தங்கள் ஓய்ந்து அமைதி நிலவ ஆரம்பித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில் யாழ் மாவட்டத்திலும்
கைத்தொழிற்றுறை மேம்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு தொழிற்சாலைகள் அதிகரிக்க நிலக்கீழ்
நீர்ப்பாவனையும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.இவை யாழ் மண்ணின் நிலக் கீழ் நீர் தொடர்பிலான யதார்த்தங்கள்.
இவற்றின்
சாத்தியப்பாடுகள், அவற்றால் உருவாகப்போகும் சமூக கலாசார மாற்றங்கள் தொடர்பிலே ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு ஆராயப்பட வேண்டும்.
நடந்தவை நடந்தவையாகவே இருக்க மேற்கொண்டு என்ன செய்யலாம்
என்பது தொடர்பில் கலந்துரையாடவேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கிறது.
யாழ்ப்பாணத்துக்கான
குடி நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மை பேணப்படுதல் மிக
அவசியமாகும். இத்திட்டம் தொடர்பிலே ஆர்வமுடைய சகலருக்கும் (Interest Persons) இத்திட்டம்
தொடர்பிலான சகல விடயங்களும் இலகு மொழியிலே தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டம்
, அதனுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட கற்கை அறிக்கைகள், ஆய்வறிக்கைகள்,
யாவுமே இலகு மொழி நடையில் பகிரங்கப் படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்துக்காக
குளத்து நீரை வெளியேற்றும் அமைப்பை குளத்துக்கு
வெளியில் நிர்மாணிப்பதானது அதன் மீதான கட்டுப்பாட்டை இலகுவாக்குவதுடன் வெளிப்படைத்தன்மையையும்
அதிகரிக்கும். நீர் வெளியேறும் அளவை அளவிடும் மானியை அதில் பொருத்துவதன் மூலம் எவரும்
அந்த அளவை பார்வையிட வழி கிடைக்கும். இது வெளிப்படைத்தன்மையை மேன் மேலும் உறுதி செய்வதோடு
விவசாயிகளின் நன்மதிப்பைப் பெறவும் வழி வகுக்கும்.
நீர்
வழங்கலுடன் தொடர்புடைய உபதிட்டங்கள் யாவற்றையும் உரிய விவசாயிகளின் பங்களிப்புடன் மேற்கொள்வதே
சாலச் சிறந்தது.
பருவமழைக்
காலங்களில் மேலதிகமான நீரை வெளியேற்றும் போது அப்பாதையின் போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட
சிறிய குளங்களை அமைத்தல் சிறந்தது. அவ்வாறாயின் மேலதிக நீர் வீணே கடலுடன் கலப்பது குறைக்கப்படும்.
அத்துடன் இரணைமடுக் குளத்து நீரினால் வளம்
பெற முடியாத விவசாய நிலங்கள் வளம் பெற வழியும் கிடைக்கும்.
இந்த
நீர் வழங்கல் திட்டத்தால் விவசாயிகளுக்கு சிறுபோகத்தின் போது பயிர் செய்ய முடியாது போனால் அவர்களுக்கான முறையான
நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ச்சியாக வழங்க வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்
எனும் பட்சத்தில் விவசாயிகள் பாதுகாப்பு நிதியம் ஒன்றை தாபித்து இந்த நீர் விநியோகத்தால்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு கிடைக்கு இலாபத்தின் ஒரு பகுதியை அந்த நிதியத்தில்
வைப்பிலிடலாம். தேவையேற்படும் காலகட்டங்களில் அதிலிருத்து உரிய நியாயமான நட்ட ஈட்டை வழங்கலாம்.
இத்திட்டத்துடன்
ஓய்வு பெற்ற எந்திரி ஆறுமுகத்தின் ‘யாழ்ப்பாண ஆறு’ என்ற திட்டத்தின் முன்மொழிவை ஒப்பிட்டு
இரண்டினதும் சாத்தியப்பாட்டு கற்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ‘யாழ்ப்பாண ஆறு’ என்ற திட்ட முன்மொழிவு பயனுறுதி மிக்கதாகும் என
முடிவெடுக்கும் பட்சத்தில் அதை தொடர்வதோடு
இரணைமடுக்குளத்தை பலப்படுத்துவதற்கான
நிதி உதவியை இயன்ற வரை விரைவாகப் பெற வேண்டும்.
எடுக்கப்படும்
முடிவுகள் எவையாயினும் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அவர்களது எண்ணப்பாடுகளையும் கருத்தில்
கொண்டே எடுக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றிய அபிவிருத்தியானது ஒருபோதும் வெற்றியளித்ததில்லை
என்பது உலகறிந்த உண்மையாகும்.
யாழ்ப்பாணம்
தொடர்பிலே பல உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் இந்த நீர் வழங்கல் திட்டமானது
அதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாது போய்விடும். உறுதி செய்வதில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு
சபைக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.
இத்திட்டத்தின்
மூலம் வழங்கப்படும் நீரானது வர்த்தகத்தேவைகளுக்காகவோ அல்லது கைத்தொழில் தேவைகளுக்காகவோ
பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
சராசரியாக
சாதாரண வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்தும் நீரை விட மிகையாக நுகர்வோரிடம் அதிக தண்டம்
அறவிடப்பட வேண்டும். இதன் மூலம் இந்நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய
முடியும்.
யாழ்ப்பாணத்தின்
நிலக்கீழ் நீரைப் பேணும் பொறிமுறைகளை மீண்டும் நெறிப்படுத்தி இயங்கச்செய்வதற்கான செயற்றிட்டங்கள்
கால அட்டவணையுடன் தீர்மானிக்கப்பட்டு இரணைமடுக்குள அபிவிருத்தி திட்டத்துக்கு சமாந்தரமாகவே
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு
எனும் போது இச்செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதும் மிக அவசியமாகிறது.
உள்ளூராட்சி
சபைகள் தத்தமது எல்லைகளுக்குள் சேரும் கழிவுகளை முகாமை செய்து சூழலுக்கும் மக்களுக்கும்
பாதகமின்றி வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை உடனடியாகவே திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும்.
யாழ்
மக்கள் தமது குப்பைகளை தாமே முகாமை செய்த காலம் இன்று மலையேறிப்போய்விட்டது. மீளப்பாவிக்கும்
கொள்கையிலிருந்து பாவித்த பின் தூக்கி வீசும் கலாசாரத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டு
விட்டார்கள். அதிகரிக்கும் சனத்தொகை, அதனால் அதிகரிக்கும் தேவைகள், குறைந்து போய்க்கொண்டிருக்கும்
நிலக்கீழ் நீர் வளம், இவற்றின் மத்தியில் யாழ் மண்ணின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில்
கொள்ளும் போது திண்மக்கழிவுகள், மருத்துவமனைக்கழிவுகளின் முகாமைத்துவம் அத்தியாவசியமாகிறது.
விவசாயத்தின்
போதான மிகை நீர்ப் பாவனை, மிகை உரப்பாவனை, மிகை கிருமி நாசினிப் பாவனை ஆகியன கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டு சூழலுக்கு இழிவளவான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அல்லது பாதிப்பையே
ஏற்படுத்தாத நடைமுறைகள் ஏற்புடையதாக வேண்டும். இங்கு கட்டாயப்படுத்தல் அவசியமாகிறது.
சட்ட
திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த மாகாண சபை இல்லை என்று இது வரை காலமும் கூறி
வந்த காரணம் இப்போது செல்லாக்காசாகி விட்டது. உரிய சட்டங்களை ஆக்கி தண்டங்களை அமுல்
படுத்துவதோடு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கி சூழல் பாதிப்பை இழிவளவாக்கும் பாரிய
பொறுப்பு வட மாகாண சபைக்கு இருக்கிறது.
கிளிநொச்சி
விவசாயிகளாகட்டும்.. யாழ் மக்களாகட்டும்..எம்மவர் எண்ணப்பாடுகளில் ஏற்பட்டிருக்கும்
மாற்றங்களை சீர் செய்து இயற்கை வளங்களை வீண்விரயம் செய்யாது வினைத்திறன் மிக்க வகையிலே
பயன்படுத்தச் செய்யும் கடப்பாடு அதிகாரத்தரப்பிலிருக்கும் சகலருக்கும் இருக்கிறது.
இத்திட்டம்
தொடர்பிலான ஒவ்வொரு சிறிய விடயத்தையும் உடன்படிக்கையில் உள்ளடக்கி சகல தரப்பினரும்
ஒருமித்து அதில் கைச்சாத்திட வேண்டியது மிக அவசியம். அத்துடன் அது செல்லுபடியாகும் காலம், பின்னூட்டல்கள்
தொடர்பான தெளிவும் அவசியமாகும்.
“
வரப்புயர நீர் உயரும்
நீர்
உயர நெல் உயரும்
நெல்
உயர குடி உயரும்
குடி
உயர கோல் உயரும்
கோல்
உயர கோன் உயர்வான்”
என்ற
ஒளவையாரின் பாடல் இக்கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் என்பதில் எதுவித ஐயமும்
இல்லை.
No comments:
Post a Comment