அப்படியொரு சந்தர்ப்பம் எமக்கும் கிடைத்தது. வல்லிபுர ஆழ்வாரின் தரிசனத்துடன் மணற்காட்டில் ஆர்ப்பரிக்கும் கடலலையின் அழகையும் காணக்கிடைத்தது. சாவகச்சேரி-புலோலி வீதியிலிருந்து பிரிந்து கிழக்கு நோக்கிச் சென்றால் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கான பாதையை எவரும் காட்டுவர். தனி வெளியிலே ஒரு சில மரங்கள் மட்டுமே தெரிய , நடுவே மஞ்சள் வர்ணம் பூடப்பட்ட கோபுரம் தலை நிமிர்ந்து நிற்கிறது. எம்மையறியாமலே கைகள் கூப்பிய வண்ணம் தலைக்கு மேல் உயரும். விசாலமான வெளி வீதியில் வானுயர்ந்த மரங்களையும் தாண்டி இளங்காற்று வீச, அமைதியே உருவாகக் குடிகொண்டிருக்கிறார் வல்லிபுர ஆழ்வார்.
முன்னொரு காலத்திலே அப்பகுதியில் வல்லி என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் எனப்படும் கடலிலே படகிலேறி சென்றாளாம். அப்போது அவளது மடியிலே மீனொன்று துள்ளி விழுந்ததாம். பின்னர் அது சங்கு சக்கரத்துடன் காட்சியளித்து ஸ்ரீ சக்கரம் ஒன்றை அவளிடம் கொடுத்து மறைந்ததாம். அவள் அச்சக்கரத்தை வழிபட்டு வந்தாளாம். பின்னர் அப்பகுதியில் ஆலயம் அமைக்கப்பட்டு மூலஸ்தானத்திலே அந்த ஸ்ரீ சக்கரம் வைக்கப்பட்டு இன்றும் வழிபடப்பட்டு வரப்படுகிறது. இக்கோயில் 13 ஆம் நூற்றாண்டளவிலே கட்டப்பட்டதாக வும் பின்னர் காலத்துக்குக் காலம் புனரமைப்புச் செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
வல்லிபுர ஆழ்வார் கோயிலைத் தரிசிக்க முன்னர் வீதியின் எதிர்ப்புறத்திலே சிறிய கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரைத் தரிசிப்பதும் வழக்கமாகும்.
யாழ்ப்பாணத்திலுள்ள கோயில்களிலேயே வைஷ்ணவப் பாரம்பரியப் படி திரு நாமம் வழங்கப்படும் ஒரே கோயில் வல்லிபுர ஆழ்வார் கோயிலாகும். வைஷ்ணவம் எனப்படுவது இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றாகும். விஷ்ணுவை முதற்கடவுளாகக் கொண்ட சமயமாகும். இக்கோயிலிலே வழங்கப்படும் திரு நாமமானது கோயிலின் மேற்குப்பகுதியில் கிடைக்கும் வெண்களியே திரு நாமமாக வழங்கப்படுகிறது.
உக்கிர வெயிலிலும் வல்லிபுர ஆழ்வார் ஆலயச்சூழலில் வீசும் இளந்தென்றலும் அங்கு குடிகொண்டிருக்கும் அமைதியும் அந்த இறைவனிடம் மனதை சரண்புகச் செய்து விடும்.
ஆலய தரிசனம் முடித்து த் திரும்பினால், ஆலயத்தின் எதிர்ப்புறத்திலே கிளைகளுடன் கூடிய பனை மரம். என்னே அதிசயம்? பனை என்றால் கிளைகள் அற்ற மரம் என்று அறிந்திருந்த எமக்கு அந்த கிளையுள்ள பனைமரம் ஒரு அதிசயமாகவே தெரிந்தது.
வல்லிபுரம் தாண்டி, குடத்தனை என்ற சிற்றூரைக் கடந்தால் வரும் அழகிய கடலோரக் கிராமம் மணற்காடு. மணல், காடு என்ற இரு சொற்களும் இணைந்து உருவாகியிருக்கும் பெயர் மணற்காடு. மரங்கள், செடிகள், கொடிகள் அடர்ந்திருக்கும்பகுதியைக் காடு என்பர். ஆனால் இங்கோ மணல் மேடுகள் தான் செறிந்து காணப்படுகின்றன. ஆதலினால் மணற்காடு என்ற பெயர் உருவாகிற்று என்பர். சிறு குன்றுகளாய்த் தோற்றமளிக்கும் மணல் திட்டுக்களும் அவற்றின் முடிவில் தொலை தூரத்திலே தெரியும் நீலக் கடலும் மனதை கொள்ளை கொள்ளும்.
வெள்ளை வெளேரென்ற மாசுமருவற்ற மணற்திட்டுக்களைக் கடந்து சென்றால் கடல் அலை கால்களை ஆரத் தழுவும். நாம் மணற்காடு கடற்கரைக்கு சென்றதோ ஒரு காலை பொழுது..அப்பகுதியே மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது.மணற்காடு ஒரு மீனவக் கிராமமாகும். முதல் நாளிரவு மீன் பிடிக்கச்சென்றா மீனவர்கள் அன்று காலை தான் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
மீன் வாடிகளில் மீனைக் கூவி விற்றபடி இருந்தனர் ஒரு குழுவினர். கடற்கரையிலோ தாம் மீன் பிடிக்கப்பயன் படுத்திய கரை வலைகளை கரைக்கு இழுக்கும் பணியில் ஈடு பட்டிருக்கிறார்கள் இன்னொரு சாரார். கூட்டாக இணைந்து தமக்கே உரித்தான பாணியில் களைப்பு தெரியாமல் பாட்டுப்பாடிய படி கரை வலை இழுப்பது கூட அழகாய்த்தான் தெரிந்தது. பிடிக்கப்பட்ட்வே சூடை போண்ர சிறிய ரக மீன்களேயாக இருக்கும் போதும் அவரவர் பங்கை சண்டையின்றிப் பிரித்தெடுத்த பாங்கு அவர்களின் ஒற்றுமையை எடுத்துக் கூறியது.
மணற்காடு கடல் சற்றே ஆபத்தானது. கரையாயினும் கூட, கடல் ஆழமாகவே இருக்கும். நீச்சல் அனுபவம் இருந்தால் கூட எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி நீந்தச்செல்வது ஆபத்தானது என்றே கூற வேண்டும். பெரியவர்களின் துணையின்றி கடலினுள் இறங்குவதே ஆபத்தானது தான். நாம் சென்ற காலைப்பொழுதிலே அலையின் வீச்சமும் சற்று உயர்வாகத்தான் காணப்பட்டது. கரையில் இருந்த படியே கரையைத் தழுவும் அலையில் குளித்தெழுந்தோம்.
வெள்ளையான அந்த மாசு மருவற்ற கடற்கரை மணலும் மாசுபடாமல் இருக்கும் அந்தக் கடற்கரையும் இன்னும் கண்களுக்குள் தான் இருக்கின்றன. அப்போதெழுந்த மன உணர்வுகள் விபரிக்க முடியாதவை. அப்பகுதி சன நடமாட்டம் குறைந்த பகுதி. அந்தக் கிராமத்து மீன்வர்களின் ஆட்சிக்குட்பட்டது. அவர்கள் கூட தமது வேலை முடிந்த பின் கடற்கரையில் நிற்க மாட்டார்கள். காலை வேளை கடந்து சூரியன் உச்சத்தை அடைய அலையின் வீச்சமும் அதிகமாகவே காணப்படும். சன நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதியில் இனம்புரியாத தனிமையை உணரலாம். அத்தகைய வேளைகளில் தனியேயோ அல்லது அப்பகுதியைச் சேராதவர்களுடன் இணைந்து கூட்டாகவோ கடற்கரைக்குச் செல்லுதல் நல்லதல்ல.
2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது வெகுவாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணற்காடும் ஒன்றாகும். அங்கிருந்த மீனவக் குடியிருப்புகளாகட்டும்.. பெரிய தேவாலயமாகட்டும்.. ஆழிப்பேரலைகள் அவற்றை உருக்குலைத்தன. ஆனால் அம்மக்களின் விடாமுயற்சியால் இன்று மீண்டும் எழுந்து நிற்கிறது மணற்காடு.
கடற்கரையின் ஒரு பகுதி முழுவதும் சவுக்குத் தோப்பாக இருக்கிறது. அப்பகுதி சவுக்கு மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ் நிலைகளைக் கொண்டிருப்பதாலோ என்னவோ மணற்காடு கடற்கரைக்குச் செல்லும் பாதை நெடுகிலுமே சவுக்கு மரங்களைக் காண முடியும்.
கடற்கரையின் வெண் மணலிலே அமர்ந்தபடி ஆர்ப்பரிக்கும் கடலலையை நெடு நேரம் இரசித்துக்கொண்டிருந்தோம். "நாங்கள் கிளம்புகிறோம். நீங்களும் கிளம்புங்கள். மதியத்துகுப் பின் இங்கு நிற்பது உசிதமல்ல" என்று எம்மை எச்சரித்தார் ஒரு மீனவப்பெரியவர்.
விடைகொடுக்க மனமில்லாமல் கடலன்னைக்கு விடை கொடுத்தோம். மீண்டும் அதே வெண் மணல் தரை.. வெயிலின் கொடூரம் மணலிலே பிரதி பலித்தது. கால்களை சூடு பொசுக்கியது. வெண் மணற்றரையில் படர்ந்திருக்கும் அடம்பன் கொடியும் இராவணன் மீசையும் தாழை மரங்களும் கூட அழகாய்த்தான் தெரிந்தன.
திரும்பி வரும் வழியிலே மணல் மேட்டினால் பாதி மூடப்பட்டும் மூடப்படாததுமாய் ஒரு தேவாலயம். வாருங்கள்! வரலாறு சொல்கிறேன் என்று அழைப்பது போல் இருந்தது. எட்டிப்பார்க்க நேரம் விடவில்லை. ஆர்ப்பரிக்கும் கடலலையின் இரைச்சல் காதுகளை மீண்டும் மீண்டும் வருடிக்கொண்டே இருந்தது. இயற்கை அன்னை எமக்குக்கொடுத்த வரமாகவே மணற்காடு கடற்கரை தெரிந்தது.
மணற்காடு ஒரு சுற்றுலாத்தலமல்ல. ஆனால் கூட்டாக யாழ்ப்பாணம் செல்லும் எவருமே ஒரு தடவை சென்று வரகூடிய அழகிய பகுதி. அதே வேளை அப்பகுதியின் ஆபத்தையும் மனதில் கொள்ள வேண்டும். மணற்காட்டில் எமது நீச்சல் திறமையை ஒரு போதும் காட்டக்கூடாது. கரையில் நின்று கால் நனைப்பது மட்டுமே பாதுகாப்பானது எனலாம். மீனவர்களுடன் இணைந்து வலையை இழுக்கலாம். அது ஒரு இன்ப அனுபவம்.
சன நடமாட்டம் பெரியளவில் இல்லாததால் தான் அப்பகுதியின் இயற்கை அழகு கெடாமல் இருக்கிறது. அதைக் கெடுப்பவர்கள் நாமாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3 comments:
இன்னும் அந்த அழகான நாள் என் கண்ணை விட்டு அகலவில்லை என்றே சொல்ல வேண்டும்.....
எத்தனை தடவை சென்றாலும் வல்லிபுர ஆழ்வார் ஆலயமும் அந்த மணற்காடும் அலுப்பு தட்டாது....
இதை வாசிக்க மீண்டும் அங்கேயே இருந்த அனுபவம்.....
நன்றி தோழி..... :-)
இன்னும் அந்த அழகான நாள் என் கண்ணை விட்டு அகலவில்லை என்றே சொல்ல வேண்டும்.....
எத்தனை தடவை சென்றாலும் வல்லிபுர ஆழ்வார் ஆலயமும் அந்த மணற்காடும் அலுப்பு தட்டாது....
இதை வாசிக்க மீண்டும் அங்கேயே இருந்த அனுபவம்.....
நன்றி தோழி
வல்லிபுரம், துன்னாலை, மணற்காடு அறிந்திருக்கிறேன் பார்த்ததில்லை. உங்கள் படங்கள் அவற்றின் அழகை தெரிவிக்கின்றன.
Post a Comment