Sunday, October 16, 2011

கண்ணை குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்! - 2

இடம்பெயர்வு என்றதுமே, உயிர், பொருள் சேதங்கள், துன்ப துயரங்கள் தான் மனக் கண்ணில் தெரிகின்றன. ஆனால் அவற்றிற்குமப்பால், பல சந்ததிகளுக்குத் தொடரக்கூடிய பாரிய இழப்பை இடப்பெயர்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி புடம் போட்டுக் காட்டியது.
ஆனைக்கோட்டையானது உலகளாவிய ரீதியிலே வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த இடமாகும். இதுவே யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட முதலாவது பூர்வீகக் குடியிருப்பு மையம் என அறியப்படுகிறது. ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுச்சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
தென்னிந்தியாவிலே நாகரிக எழுச்சி பற்றிய ஆய்வுகளுக்குத் தொடக்கப் புள்ளியாக இருப்பது பெருங்கற்காலப் பண்பாடாகும். தொல்லியல் ரீதியிலான பல்வேறு முடிவுகளைப்பெறுவதற்கு ஈரெழுத்துப் பொறித்த ஆனைக்கோட்டை சாசன முத்திரை உறுதுணையாக அமைந்திருந்தது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை பல்வேறு பரிமாணங்களில் விளங்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் இன்றும் ஈடுபட்டுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் குறு நில அரசு இருந்தமைக்கான சான்றாக இம்முத்திரையைப் பார்க்கிறார் பேராசிரியர் இந்திரபாலா.
சுடுமண் கிணறு என்பது நீரைப் பெறுவதற்கு பண்டைத் தமிழ் மக்கள் கையாண்ட தொழில்நுட்பமாகும். யாழ்ப்பாணம் ஜீவநதிகளற்ற பிரதேசம். அத்துடன் நிரந்தர நீருள்ள பகுதிகளிலேயே குடியிருப்புகள் உருவாகின. ஆதலால் சிறிய தொழில்நுட்பத்துடன் இலகுவாக நீரைப் பெறும் வகையிலே மணற்பாங்கான இடங்களில் பண்டை யாழ் மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
மணற் பாங்கான இடத்தில் ஒரு சிறிய குழியை ஏற்படுத்தி, நீரைப் பெற்றனர். இயற்கைக் காரணிகளால் அக்குழிகள் அழிந்து போகாமல் இருக்க, சுட்ட மண்ணைப் பயன்படுத்தினர். இதுவே சுடுமண் கிணறு எனப்பட்டது. யாழ்ப்பாண அரசன் சிங்கை ஆரியனின் கொட்டகம சாசனம், வல்லிபுரம் தங்கத் தட்டு போன்ற பல சாசனங்கள் படியெழுதப்பட்ட பலகைகளும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இப்படி யாழ். குடாநாட்டின் ஆதிக் குடியிருப்புகள் பற்றிய சான்றுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சி அரங்கு - 2 ஐக் கடந்து சென்றால் வருவது ஒரு ஒடுக்கமான சிறிய அறை. அது தான் கண்காட்சி அரங்கு – 3, அறை முழுவதும் புகைப்படங்கள். ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து வயோதிபனாய் இறப்பது வரை யாழ்ப்பாண வாழ்வியலில் பின்பற்றப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிய புகைப்படத் தொகுப்பு அரங்கை அலங்கரித்தது. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களிலிருந்து வர்ணப் புகைப்படங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு சடங்குகளுக்கும் தனியான பாரம்பரியங்கள் இருக்கும். அச்சடங்குகளின் போது அவற்றிற்கே உரித்தான, சிறப்பான பொருட்கள் பாவிக்கப்படும். இன்று அந்த பாவனைப் பொருட்கள் அருகி வருவதால் இந்த சடங்குகளும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார் பேராசிரியர் புஷ்பரட்ணம். அவரது வருத்தத்தில் நியாயமில்லாமல் இல்லை.
கொத்து, சத்தகம், தாம்பாளம், கிடாரம் போன்ற எத்தனையோ பொருட்கள் இன்று அருகிப்போய்விட்டன. அத்துடன் நவ நாகரிக உலகின் அவசரப் போக்குடன் நாமும் இசையத் தொடங்கி விட்டோம். அது இப்பொருட்களின் அவசியத்தையும் இல்லாதொழித்து விட்டது. ஏதாவது முக்கிய சம்பிரதாயங்கள் என்றால் கூட, வீட்டிலிருக்கும் முதியவர்களைத் தான் நாடுகிறோம். சடங்குகளுடன் தொடர்புடைய முறைகளைச் சொல்லித் தர எமக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள்.
மொட்டை போடும் சடங்கு
ஆனால் சடங்கு முடிந்ததும், அவற்றை அப்படியே மறந்து விடுகிறோம். அந்த முறைகள், பாரம்பரியங்கள் எல்லாம் எதிர்காலச் சந்ததிக்குக் கடத்தப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு எம் மத்தியில் மிக அரிதாகவே காணப்படுகிறது. சத்தகம் இல்லாமல் போலியாய் சத்தகம் செய்தும் கொத்து இல்லாமல் நெஸ்டமோல்ட் பேணிக்கு தங்க நிறத்தில் காகிதம் சுற்றியும் சடங்குகள் செய்தவர்கள் கூட எம்மத்தியில் இருக்கிறார்கள்.
ஆரத்தி எடுத்தல்
இதுதான் எம்மவர் நிலைமை. இப்படியெல்லாம் சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கின்றனவா என இக்கண்காட்சியில் இளஞ் சந்ததி மூக்கில் விரல் வைத்து அதிசயித்தது. மூன்றாவது அரங்கிலே காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் அத்துணை பெறுமதி வாய்ந்தவையாக இருந்தன.
அடுத்ததாக அமைக்கப்பட்டிருந்த அரங்கு இந்து நாகரிகத் துறைக்குரியது. உள்ளே தெய்வ உருவச் சிலைகள் காணப்பட்டமையால், அனைவரும் தம் பாதணிகளை வாசலிலே கழற்றிய பின்னர் தான் உட்சென்றார்கள். சம கால வழிபாட்டுச் சின்னங்கள், சிலைகள், சிற்பங்கள், மாணவர்களின் கைகளால் வடிவமைக்கப்பட்ட மாதிரித் தேர் போன்றனவும் அன்றாடப் பாவனையில் காணப்பட்ட சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பல ஆலயங்களிலே காலத்துக்குக் காலம் பல புனருத்தாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவற்றிலே புதிய தேர் கட்டுதலும் ஒன்று.
அவ்வாறு புதிய தேர் கட்டப்படும் போது பழைய தேரிலுள்ள சிற்பங்கள் பிரிக்கப்படும். அத்தகைய பல மரச் சிற்பங்கள் அங்கே வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அவற்றை எல்லாம் ஒருமித்து தேரிலே பார்ப்பதை விட, ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு வித்தியாசமானது. ஒவ்வொரு சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கும் நுட்பம், எம்மவர் கலை நயத்தை எண்ணி வியக்க வைக்கும். அவை மிகவும் பழைமையான பறாளை விநாயகர் ஆலயம் போன்ற சில ஆலயங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

(தொடரும்)

No comments:

Post a Comment