3 தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வந்து இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மக்கள் மீளக் குடியமர்ந்துவிட்டார்கள். ஒரு புதிய வாழ்வை ஆரம்பித்த அம்மக்கள் மத்தியில் இந்த நத்தார் பண்டிகை பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்களைப் பொறுத்த வரையிலே இத்தனை சவால்களுக்குள்ளும் பிறக்கும் இயேசு கிறிஸ்துவை எப்படிக் காணப்போகிறார்கள் என்பதே இந்த நத்தார் பண்டிகை ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பாகும்.
கருணா நிலையத்திலும் கூட அத்தகையதோர் எதிர்பார்ப்பே காணப்பட்டது. ஏ-9 வீதியில் பயணிப்பவர்கள் பலர் கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வித்தியாசமான பாணியிலே அமைக்கப்பட்டிருக்கும் தேவாயலமொன்றைக் கண்டிருப்பர். அது என்ன என்று அறியும் ஆர்வம் கூடச் சிலரிடம் இருந்திருக்கும்.
ஒரு காலத்திலே முன்றலை அலங்கரித்து வருகின்ற அடர்ந்த மாமரங்களும் நிமிர்ந்து நின்ற கட்டடங்களும் பூத்துக் குலுங்கிய சோலையும், துள்ளித் திரியும் சிறுமியர் முதல் மூதாட்டியரும் என அனைவரையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்திருந்தது கருணா நிலையம்.
அத்தகையதோர் இடத்தை இடிந்து சிதைந்து போன கட்டடங்களும் பாறி விழுந்த மரங்களுமாக இந்த யுத்தம் வெறிச்சோடச் செய்திருந்தது. எரிந்த சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவையாக, இடிபாடுகளுக்குள் இருந்து தற்போது கருணா நிலையமும் மீள எழத் தொடங்கியிருக்கிறது.
தன் பெயருக்கு அமைவாக 1955 ஆம் ஆண்டு அதரவற்ற பெண்களுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் செல்வி மூரியல் ஹச்சின்ஸ் அவர்களால் பிரித்தானிய மிஷனரியின் கீழ் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அங்கே, இறையருளினாலோ என்னவோ, கிளிநொச்சியிலே கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தொலைநோக்கை உணர்ந்தார் செல்வி ஹச்சின்ஸ். மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய அவர் கிளிநொச்சியிலே ஏ-9 வீதியுடன் ஒட்டிய குறித்த காணியை வாங்கினார். ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கான இல்லமொன்றை ஆரம்பித்தார்.
1955 – 60 காலப் பகுதியானது கிளிநொச்சியில் பல விவசாயக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியாகும். அத்தகையதோர் காலப் பகுதியில் கருணா நிலையம் போன்றதான இல்லமொன்றின் தேவையும் இன்றியமையாததாக இருந்தது.
கருணா நிலையத்தின் ஆரம்பகால வளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு படிக்கட்டுகளும் செல்வி ஹச்சின்ஸ் அவர்களின் பெயர் சொல்லும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேலாக கருணா நிலையத்துக்காகவே வாழ்ந்து அங்கேயே தன் இன்னுயிரை நீத்தவர் செல்வி ஹச்சின்ஸ். இறுதிக் காலங்களில் உடல் தளர்ந்து கண்பார்வை குன்றியிருந்த போதிலும் பிறரிடம் அன்பு செலுத்தும் தன் உன்னத குணத்தில் மாற்றமேதுமின்றி வாழ்ந்தவர்.
கருணாநிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலே, தையல் வேலை செய்யப்பட்ட துணிகளை சைக்கிளிலே கொண்டு சென்று யாழ்ப்பாணத்தில் விற்றுவிட்டு தன்னந்தனியாக சீமெந்து மூடைகளை சைக்கிள் இருக்கையில் வைத்துக் கட்டிக் கொண்டு வருவாராம் செல்வி ஹச்சின்ஸ். ஆரம்பகாலங்களில் அவருடன் பழகியவர்கள் இப்படி அவரை நினைவு கூர்வர்.
இவ்வாறு செல்வி ஹச்சின்ஸ் அவர்களின் உழைப்பால் வளர்ந்த கருணா நிலையத்தில் தற்போது 40 பெண் பிள்ளைகளும் 22 மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகளிரும் இருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தாலும் சுனாமி அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள்.
யுத்தத்தால் சிதைந்து போயிருக்கும் கருணா நிலையக் கட்டடத் தொகுதியை புனர்நிர்மாணம் செய்வதற்கு மட்டுமே ஏறத்தாழ 22 மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத் தொகுதி 12 கட்டடங்களை உள்ளடக்கியது. அவற்றுள் சில முற்றாக இடிந்து போயுள்ளன. சில சுவர்களை மட்டுமே கொண்டிருக்கின்றன.
பாடசாலை செல்லும் சிறுமியரோ, தற்காலிகமாக வீடொன்றிலே தங்கியபடி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலே கல்வி கற்கின்றனர்.
அங்லிக்கன் திருச்சபையின் உதவியுடன் ஏறத்தாழ 8 மில்லியன் ரூபா செலவில் கருணா நிலையத்தின் 2 கட்டடங்கள் முற்றாகத் திருத்தப்பட்டிருகின்றன. ஆதலால் வயது வந்த மகளிரும் மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகளிரும் மீள கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டுவிட்டார்கள்.
‘சமாதான இல்லம்’ என அழைக்கப்படும் கட்டடம் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களை முற்றாகப் புனர்நிர்மாணம் செய்து ஓரளவாவது பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு பெரிய நிதி தேவைப்படுகிறது.
ஆனால் எந்தவித வெளி உதவிகளும் இல்லாது அங்லிக்கன் திருச்சபையின் உதவியுடன் மட்டுமே புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதிப் பற்றாக்குறை, அப்பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதற்குத் தடையாகவே இருக்கின்றது.
கட்டடங்கள் புனரமைக்கப்படும் வரை யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக கல்வி கற்றுவரும் மாணவியரை கிளிநொச்சிக்கு அழைத்து வருதல் என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது.
அவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்ட பின்னரே அவர்களைக் கிளிநொச்சிக்கு அழைத்து வர முடியுமென அதி வண நேசக்குமார் அடிகளார் தெரிவித்திருந்தார்.
கருணா நிலையத்திலிருந்து கல்வி கற்று இலங்கையின் பல்கலைக்கழகங்களில் தமது உயர் கல்வியைத் தொடரும் மாணவியர் 18 பேரும் கூட கருணா நிலையத்தின் பராமரிப்பின் கீழேயே இருக்கிறார்கள்.
இவர்கள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களிலே கல்வி கற்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தகால யுத்தம் உக்கிரமடைவதற்கு முற்பட்ட காலங்களிலே கருணா நிலையத்தில் தையல் உட்பட மகளிருக்கான தொழில் பயிற்சி வகுப்புகள் பல நடத்தப்பட்டன.
அதேபோல பாலர் பாடசாலையும் நடத்தப்பட்டது. தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த பெப்ரவரி மாதமளவில் பாலர் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது. அங்கே தற்போது 130 சிறார்கள் கல்வி பயில்கிறார்கள்.
கிடைக்கும் வளங்களையும் அன்பர்களின் நன்கொடைகளையும் கொண்டு கருணா நிலைய நிர்வாகம் தம்மால் இயன்றவரை யாவரையும் பேணி வருகின்றது. ஆயினும் தனது முன்னைய நிலையை எட்டுவதற்கே கருணா நிலையம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
கருணா நிலையத்தை நன்கு அறிந்த எவராலும் இதை மறுதலிக்க முடியாது.
ஒரு மேற்கத்தைய நாட்டைச் சேர்ந்த பெண்மணி நல்லெண்ணத்தில் விதைத்துச் சென்ற விதைதான் கருணா நிலையம்.
அது துளிர்விட்டு பெருவிருட்சமாக வேரூன்றுவதற்கிடையிலேயே யுத்தம் தன் கோரமுகத்தைக் காட்டிவிட்டது. இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் நாம் இணைந்து செயற்பட்டால் தளர்ந்திருந்த இவ் விருட்சத்தின் வேர்கள் வெகு விரைவிலேயே உறுதிபெற்று விடும் என்பது திண்ணம்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பர். நாம் செய்யும் சிறிய பங்களிப்பு கூட அத்தகைய பல பங்களிப்புகளுடன் இணையும் போது பல மடங்குகளாகிவிடும். ஏனெனில் இந்த யுத்தம், எம்மவர்களின் பலரை, ஆதரவற்றவர்களாக, கைவிடப்பட்டவர்களாக மாற்றிவிட்டது. அத்தகையோரின் நலனைக் கருத்தில் கொள்கையில் கருணா நிலையம் போன்ற இல்லங்கள் எத்துணை அவசியமானவை என்பது புரியும்.
குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரையிலே பாதுகாப்பு என்பது மிகப் பெரிய தேவையாக இருக்கிறது.
மதங்களுக்கு அப்பால் அமைதியான ஆன்மீகத்துடன் இணைந்த சூழல் தான் ஆதரவற்றோருக்கு வளமான வாழ்வை வகுத்துக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
‘ஐயம் புகினும் செய்வன செய்’ என்கிறது கொன்றை வேந்தன்.
‘மனம் உண்டானால் இடம் உண்டு’ என்கிறது முதுமொழி.
யாராயினும் நாம் மனம் வைத்தால் ஆதரவற்ற எம்மவர்களின் வாழ்வு வளம் பெற எமமாலான உதவிகளைச் செய்ய முடியும்.
பிறக்கவிருக்கும் புத்தாண்டிலே யாவரது வாழ்விலும் ஏற்றத்தாழ்வுகளின்றி சாந்தியும் சுபீட்சமும் நீடிக்க வேண்டும் என்பதே எமது அவாவாக இருக்க வேண்டும்.
கருணா நிலையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குக் கை கொடுக்க விரும்புவோர் அதிவண நேசக்குமார் அடிகளாரை 021-3211096 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொள்ள முடியும்.
நிதியுதவி செய்ய விரும்புவோர், Karuna Nilaiyam - A/C No. 1610050001 (Commercial Bank - Kilinochchi) என்ற வங்கிக் கணக்கிலே வைப்பிலிட முடியும்.
அவர்களும் எம்மைப் போன்றவர்களே.
எம்மைப் போலவே அவர்களது வாழும் உரிமையும் மறுக்கப்பட முடியாதது என்ற உண்மையை நாம் உணர்ந்தாலே ஏற்றத் தாழ்வு நீங்கிய புதியதோர் உலகு சமைந்துவிடும்.
No comments:
Post a Comment