Friday, December 10, 2010

மேற்குலகின் பிடிவாதத்தால் மாநாடுகள் தோல்வியடைகின்றன



‘கடந்த 25 வருடங்களுள் என்றுமில்லாத பனிப்பொழிவு’
‘பல ஆண்டுகளின் பின் வான்கதவுகள் திறப்பு’
‘என்று மில்லாத பெருமழை’

இவையெல்லாம் சமீபகாலமாக நாம் காணும் செய்தித் தலைப்புகள் ஆகும். அவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வது கூட இல்லை. ஆனால் அவை எல்லாம் ஏதோ அறிகுறியை வெளிக்காட்டி நிற்பனவாகவே தெரிகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007 ஆம் ஆண்டிலேயே விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்வதும் சிறந்த விடயமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களிலே அதிகரிக்கலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் தெரியும் புதுவித மாற்றங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தோற்றப்பாடுகள் தானோ என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன.
மனிதன் இயற்கையைக் கருத்தில் கொள்ளாது, அதனுடன் இயைந்து வாழ முயலாது தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் இயற்கையின் சீற்றங்களாக இருக்கின்றன.
பணமும் அரசியலும் மலிந்துபோய்விட்ட இப்பூமியில் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள் வெகுசிலரே.
காலநிலை மாற்றம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அரசியல் தலைவர்களோ அத்தகையதோர் அவசர நிலையைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹாகன் மாநாடு (2009) கிட்டத்தட்ட தோல்வியில் முடிவடைந்த கதையை நாம் அறிந்திருப்போம்.
அம்மாநாட்டிலே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் காலநிலை மாற்றம் பற்றிப் பேசி தீர்மானமொன்றையெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளிலே கூடி, புவி வெப்பமடைவது பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் மிக மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்பேச்சுக்களின் அடிப்படையில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே யாவரும் அறிய வேண்டிய உண்மை ஆகும்.
புவி வெப்பமடைதலைப் பொறுத்த வரையிலே கியோட்டோ உடன்படிக்கை மிக முக்கியமானதாகும். அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.
19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலே கைத்தொழில் புரட்சி உருவாகியது. பிற்காலங்களில் தோன்றிய சகல தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும் அக்கைத்தொழில் புரட்சியே வித்திட்டது எனலாம். கைத்தொழில் புரட்சி உருவாக்கிவிட்டிருந்த எதிர்மறையான விளைவாக புவி வெப்பமடைவதைக் குறிப்பிட முடியும்.
அதாவது சுவட்டு எரிபொருட்களின் பாவனை அதிகரித்துச் சென்ற நகரமயமாக்கலும் அபிவிருத்திப் பணிகளும் காடழித்தல் துரித கதியில் நடைபெற வழிவகுத்தன.
விளைவாக வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்தது. புவிச் சூழலின் வெப்பநிலையும் அதிகரித்தது. புவிச் சூழலைப் பொறுத்தவரையிலே அதன் வெப்பநிலை காலத்துடன் அதிகரித்து வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல சமயங்களில் நாம் உணர்ந்தும் இருப்போம்.
மனித நடவடிக்கையால் அதிகளவில் வெளிவிடப்படும் பச்சை இல்ல வாயுக்களான காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரசன் சேர் வாயுக்கள் போன்றனவே புவிச் சூழலை வெப்பமடையச் செய்கின்றன.
இவை சூரிய கதிர்கள் புவி மேற்பரப்பில் பட்டு மீளத்தெறிப்படைந்து செல்வதைத் தடுக்கின்றன. ஆதலால் புவிச் சூழல் வெப்பமடைகிறது.
வாகனங்கள், ஆகாய விமானங்கள், எரிசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகளிலே சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட் வெளிவிடப்படுகிறது.
சூழலில் இருக்கும் காடுகளும் மரங்களும் தான் வளி மண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் விவசாயம், கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கல் போன்ற பல தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டன.
புவிச் சூழலிலே வளிமண்டலத்தில் இயற்கையாக அமைந்த படலமாக ஓசோன் படை காணப்படுகிறது.
சூரியனிலிருந்து வரும் உயர் சக்திமிக்க நச்சுத்தன்மையான புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் தடுப்பதும் இந்த ஓசோன் படையேயாகும்.
குளோரோபுளோரோ காபன் என்ற வாயுவின் வெளியேற்றத்தாலும் ஏனைய சில நைதரசன் சேர் வாயுக்களின் வெளியேற்றத்தாலும் இந்த ஓசோன் படை அரிப்படையத் தொடங்கியது. அதனால் புவி மேற்பரப்பை வந்தடையும் புற ஊதாக் கதிர்களின் சதவீதம் அதிகரித்தது.
புவி மேற்பரப்பு வெப்பமடையத் தொடங்கியது.
ஆய்வாளர்கள் காலங்கடந்த பின்னரே விளைவுகளைக் கண்டுணரத் தொடங்கினர். ஒசோன் படையிலே உருவாகிய ஓட்டைகள் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகக் காரணமாயின என கண்டுபிடித்தனர்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் இருந்த காபனீரொட்சைட்டின் அளவு 275 ppm (parts per million)  ஆகும். அது தற்போது 392  ppm  ஆக அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைதலானது பல விளைவுகளை உருவாக்கி உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வரலாறு காணாத, அதிக வெப்பநிலையுடைய ஆண்டாக 2010 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது. நிலைமை விபரீதமாகிக் கொண்டு போவதை உணர்ந்த விஞ்ஞான உலகு, அரசாங்கங்களை எச்சரிக்கவும் தவறவில்லை. காலநிலை மாற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் என அரசாங்கங்கள் உணர்ந்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நடுநாயகமாக வைத்து செயற்பாடுகளில் ஈடுபட முனைந்தன.
1992 இலே, ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு பிறேசிலின் ரியோ - டி - ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஸினிபிவிவிவி  UNFCCC (United Nations Frame work Convention on Climate Change) என்ற ‘காலநிலை மாற்றத்துக்கான செயற்றிட்டப் பேரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்துக்கான மாநாடு (Conference of Parties – COP)  நடத்தப்பட்டு வருகிறது.
1997ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நடத்தப்பட்ட அத்தகைய மாநாட்டிலே தான் கியோட்டோ உடன்படிக்கையும் எட்டப்பட்டது.
கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் புவிச் சூழலில் வளிமண்டல காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பதற்குக் காரணமான நாடுகள் கியோட்டோ மாநாட்டில் பட்டியலிடப்பட்டன. அவை 1991 இலே காபனீரொட்சைட் வாயு உட்பட்ட நான்கு பச்சை இல்ல வாயுக்களை எந்தளவு வெளியேற்றினவோ அந்த அளவை 2012 ஆம் ஆண்டளவில் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்பதே அந்த கியோட்டோ உடன்படிக்கை யாகும். இந்த 5.2 சதவீதமென்பது ஒரு கூட்டான அளவாகும். ஒவ்வொரு தனித்தனி நாட்டையும் கருதும்போது குறைக்க வேண்டிய சதவீதம் மாறுபடும்.
வளிமண்டலத்தை அதிகளவில் மாசுபடுத்தும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. 5.2% என்ற கூட்டு அளவின் அடிப்படையில் தனது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை அமெரிக்கா 7 சதவீதத்தால் குறைக்க வேண்டி இருந்தது.
கியோட்டோ உடன்படிக்கையைப் பொறுத்த வரையிலே, இந்தியாவும் சீனாவும் தமது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முன்வரவில்லை. அதற்கு அவை முன்வைத்த காரணம் தாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பதாகும்.
மேற்குலக நாடுகளில் உருவான கைத்தொழில் புரட்சியே வளிமண்டலத்தின் பச்சை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணமாகியது. மேற்குலக நாடுகளின் செயற்பாட்டுக்கு மூன்றாம் உலக நாடுகளும் பலிக்கடாவாயின என்பது தான் வெளிப்படை உண்மையாகும்.
ஆனால் கியோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போது இணைந்த அமெரிக்கா பின்னர் அதிலிருந்து விலகிவிட்டது.
நிலைமை கையை மீறுவதை உணர்ந்த ஐ. நாவின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 1990 ஆம் ஆண்டின் பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012 அளவிலே 80 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென 2007இல் அறிவித்தது.
இம்முடிவு தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக 2007 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் கூட்டப்பட்டது.
நடைமுறையில் இருந்து வரும் கியோட்டோ உடன்படிக்கையின் கால இலக்கை நீடிக்கவும் உறுப்புரிமையிலிருந்து விலகிய அமெரிக்காவை இணைத்து நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அங்கு உடன்பாடுகள் பல எட்டப்பட்டன.
அதற்காகத் தயார் செய்யப்பட்ட வழிகாட்டி பாலி வழிகாட்டி எனப்பட்டது. அவ்வழிகாட்டியின் அடிப்படையிலே 2009ஆம் ஆண்டுக்கான கோப்பன்ஹேகன் மாநாடும் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பிடிவாதம் கோபன்ஹேகன் மாநாட்டைத் தோல்வியடையச் செய்தது.
ஆயினும் 2010 இலே, பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும் என அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல், ஜூன், ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களிலே கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது. ஆனால் முடிவுகள் எவையுமே எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இத்தகையதோர் நிலையிலே இவ்வாண்டுக்கான ஐ.நாவின் 16வது காலநிலை மாற்ற மாநாடு கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி மெக்சிக்கோவின் கான்குன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இன்று அதன் இறுதி நாளாகும்.
கோபன்ஹேகன் மாநாட்டிலே தவறவிடப்பட்ட உடன்பாடுகள் கான்குன் மாநாட்டிலே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொனிப் பொருட்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவு தான் என்ன? என்பதை முழு உலகுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் புதிய தலைவரான ஹேர்மன் வன்ரொம்புய் ‘இம்மாநாடும் கோபன்ஹேகன் மாநாட்டைப் போல ஒரு அனர்த்தமாகவே இருக்கும்’ எனத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் கோபன்ஹேகன் மாநாட்டை மிக மோசமாக விமர்சித்திருந்தமையையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மேற்குலக நாடுகளின் மனப்பாங்கு எத்தகையது என்பதை இந்த விக்கிலீக்ஸ் தகவல் தெளிவாக எடுத்தியம்புகிறது.
தன்னை விஞ்சியவர் எவருமில்லையென்ற அகம்பாவம் மனிதனை மற்ற உயிர்கள் பற்றிச் சிந்திக்க விடுவதில்லை. இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்து அவன் அடையும் முன்னேற்றங்கள் அவனுக்கே உலை வைக்கும் போது கூட அவன் தன் அகந்தையை ஒழிப்பானா என்பது சந்தேகமே! எப்படி இன்னும் புதிய முன்னேற்றங்களைக் கண்டு அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது பற்றி மட்டும் தான் சிந்திப்பான்.
இந்த இயல்பு தான் இயற்கையுடன் இயைந்திருந்த மனிதனை விலக்கி இன்று எதிர்த்திசையிலே பயணிக்கச் செய்துவிட்டது.
‘நாம் மீண்டும் ஆதி மனிதர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும்’ என்ற ஒஷோவின் வரிகள் தான் நிதர்சனமாகத் தெரிகின்றன. அவை நடந்தால் தான் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சாபத்துக்கான விமோசனமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment