2009ம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹாகன் மாநகரிலே நடைபெற்ற மாநாடு பெரும் தோல்வியில் முடிவடைந்தது. ஏறத்தாழ 45,000 பேர் அம்மாநாட்டுக்காக கோபன் ஹாகன் நகரிலே கூடியிருந்தார்கள். ஆனால் எந்த உறுதியான முடிவுகளையுமே எட்டாமல் வெளியேறினார்கள்.
கோபன் ஹாகன் மாநாட்டிலே,
“யாவரும் கதைத்தார்கள்; உண்மையில் எவரும் கேட்கவில்லை” என பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
2009ம் ஆண்டிலே நடந்த மாநாடுகளில் எட்டப்படமுடியாமல் இருந்த உடன்பாடுகளை அமெரிக்கா, பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கோப்பன்ஹாகன் மாநாட்டின் கடைசி நிமிடங்களில் விவாதித்தன. அந்த விவாதங்கள் கூட விழலுக்கிறைத்த நீராயின.
கடந்த காலங்களில் நடந்த அபெக் (APEC) மாநாடுகளின் உடன்படிக்கைகளில் கூட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய விடயங்களும் உள்ளடக்கப்பட்டு வருகின்றன.
கோபன்ஹாகன் மாநாட்டின் அறிக்கையில் மி8 போன்ற மாநாட்டு அறிக்கைகளில் உள்ள விடயங்கள் மாற்றப்படாமல் அப்படியே சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் முறைமை கூட கோபன்ஹாகன் மாநாட்டில் தாக்கம் செலுத்தியது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி எந்த ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த முடியாமல் ஒபாமா இருந்தார்.
ஒபாமாவைப் பொறுத்துவரையிலே கோபன்ஹாகன் மாநாடு சில காலங்கள் பிந்தி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது பலரின் கருத்தாகும். கோபன்ஹாகன் மாநாட்டை நடாத்திய டென்மார்க் அரசும் நாடுகளுக்குரிய முக்கியத்துவத்தை வழங்கியிருக்கவில்லை. முக்கியமான நாடுகள் எனச் சில நாடுகளே குறிப்பிடப்பட்டிருந்தன. கால நிலை மாற்றத்தின் விளைவுகளால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் நாடுகள் கூட கருத்தில் கொள்ளப்படவில்லை.
ஒழுங்கமைப்பு குழுவில் காணப்பட்ட உட்பூசல்கள் கூட கோபன்ஹாகன் மாநாட்டில் செல்வாக்குச் செலுத்தின.
கடந்த தசாப்தமானது வெம்மை மிக்க தசாப்தமாகப் பதிவாகியிருந்தது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் அக்கால நிலைக்கு வட அமெரிக்கப் பகுதி விதிவிலக்காக இருந்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்திருந்தது.
ஒருவேளை வட அமெரிக்காவும் பாதிக்கப்பட்டிருந்தால் அமெரிக்க மக்கள் அரசுக்கு அழுத்தமொன்றைக் கொடுத்திருக்கக்கூடும். அவ்வழுத்தமே கோபன்ஹாகன் மாநாட்டை வெற்றியடையச் செய்திருக்குமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஐரோப்பிய யூனியனின் அரசியல் நிலையும் கோப்பன் ஹாகன் மாநாட்டுக்குச் சாதகமாக அமையவில்லை. அமெரிக்காவை எதிர்த்துச் செல்ல வழக்கம் போலவே ஐரோப்பிய யூனியனும் விரும்பவில்லை.
விளைவு கோப்பன் ஹாகன் மாநாடு தோல்வியில் முடிவடைந்தது. அதன் பின்னர் சிறியளவிலான மாநாடுகள் கூட்டப்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடும் நடந்து முடிந்து விட்டது.
காலநிலை மாற்றத்தால் உருவான பல பிரச்சினைகளும் அச்சுற்றுத்தல்களும் ஆராயப்பட்டன.
சுற்றுச்சூழலுக்கான காபன் வெளியீடானது காலநிலை மாற்றத்தில் பெருஞ்செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்கிறது. இந்த வெளியீடு காபன் சேர்வைகளான வாயுக்கள், காபன் துகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.
கியோட்டோ உடன்படிக்கையின் இலக்கு 2012 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலகளாவிய ரீதியில் 2012 அளவிலே காபன் வெளியீட்டை குறித்த மட்டத்துக்குக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கையின் அடிப்படையாம். வளர்ந்த நாடுகள் இலாபத்தையே முதன்மை நோக்காகக் கொண்டவை.
அவற்றைப் பொறுத்தவரை காபன் வெளியீட்டை குறித்த மட்டத்துக்குக் குறைத்து கட்டுப்படுத்துதல் என்பது இயலாத காரியம். அது தமது பொருளாதாரத்தையும் ஸ்திரத்தன்மையையும் பெருமளவில் பாதிக்கும் என்ற எண்ணப்பாடு அவற்றிற்கு உண்டு.
பாலி உடன்படிக்கையின்படி 2012 என்ற கியோட்டோ உடன்படிக்கையின் இலக்கை 2012 க்கு அப்பாலும் நீடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கான்குன் மாநாட்டின் முடிவுகள் என்னவாக இருப்பினும் காபன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துமாறு ஏறத்தாழ 60 நகரங்களும் மாநிலங்களும் பணிக்கப்பட்டிருந்தன.
அதற்கான வழிமுறைகள் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறு படலாம். ஆனால் வினைத்திறன் மிக்க சக்திப் பாவனையையும் காபன் வெளியீடு குறைவான வாகனப் பாவனையையும் அந்த வழிமுறைகள் உள்ளடக்கியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
கோப்பன்ஹாகன் மற்றும் கியோட்டோ உடன்படிக்கைகளின் இலக்குகளை எட்டிய எட்டும் நிலையில் இருக்கும் நகரங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு அவற்றிற்கான புதிய இலக்குகளும் தீர்மானிக்கப்பட்டன.
இவை இப்படி இருக்க, ஜப்பான், ரஷ்யா, கனடா ஆகிய நாடுகள் 13 ஆண்டுகள் பழைமையான கியோட்டோ ஒப்பந்த அடிப்படையில் காபன் வெளியீட்டைக் குறைப்பதை விரும்பவில்லை. ஒரு முழுமையான உடன்பாட்டை எட்டுவதற்கு இந்நாடுகள் பெரும் தடையாகவே இருந்தன.
மாறாக வளர்முக நாடுகளோ கியோட்டோ ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.
“இயற்கையையும் காடுகளையும் பூமி என்ற இந்தக் கோளையும் பாதுகாக்கவே நாம் கான்குன்னுக்கு வந்திருக்கிறோம். இயற்கையை ஒரு பண்டமாக்கவோ அல்லது காபன் சந்தையுடன் கூடிய முதலாளித்துவத்தை உறுதி செய்யவோ நாம் இங்கு வரவில்லை” என்றார் பொலிவிய ஜனாதிபதி.
1997 இல் கியோட்டோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டபோதே ஜப்பான் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ரஷ்யா, கனடா, துருக்கி ஆகிய நாடுகள் ஜப்பானுடன் வெளிப்படையாகவே இணைந்தன. சில வளர்முக நாடுகளும் இந்த எதிர்ப்பு நாடுகளுக்கு தமது ஆதரவை மறைமுகமாக வழங்கின.
ஆனால் பல வளர்முக நாடுகளுக்கு கியோட்டோ உடன்படிக்கையில் உடன்பாடு இருந்தது. ஏனெனில் அது சட்ட ரீதியாக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. அத்துடன் அவ்வுடன்படிக்கையின் கீழ் சேகரிக்கப்படும் நிதி வளர்முக நாடுகளின் நிலையான அபிவிருத்திக்குப் பயன்படுத்தக்கூடியதாகும்.
ஐ. நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுக்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருக்குமாயின் பல விளைவுகளை அது சந்திக்கவும் நேரிடும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் ஜப்பானின் நம்பிக்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.
“பணக்கார நாடுகள் காபன் வெளியீட்டைக்குறைக்க வேண்டும். ஒவ்வொரு வருடம் தலா 100 பில்லியன் டொலர்களை மீதப்படுத்தி வறிய நாடுகள் காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாகக் கையாள உதவவேண்டும்” என்ற கருத்தை நோர்வே பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார்.
2009 இன் கோபன் ஹாகன் மாநாட்டிலே காபன் வெளியீட்டைக்குறைத்து நிதியமொன்றை உருவாக்கும் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
2010 இன் கான்குன் மாநாட்டிலே, எந்தெந்த வழிகளில் அந்நிதியத்திற்கான நிதியைச் சேகரிக்கலாமென ஆராயப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு காபன் கழிவை வெளியேற்றுவதில் ஆகாய விமானங்களும் கப்பல்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
ஆதலால் சர்வதேச ரீதியிலே அவற்றிற்கு வரிவிதிப்பதுடன் வங்கிப்பரிமாற்றங்களுக்கான வரிவிதிப்பும் ஒரு வழிமுறை என பிரேரிக்கப்பட்டது.
இன்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளுள் ஒன்றாக காபன் சந்தை காணப்படுகிறது. காபன் சந்தைக்கும் கியோட்டோ உடன்படிக்கையே வித்திட்டது எனலாம். அவ்வுடன்படிக்கையின்படி சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக காபன் வர்த்தக நடைமுறைகள் பல உருவாக்கப்பட்டன.
சுருங்கக் கூறினால் காபன் சேர்வைகள் அதிலும் குறிப்பாக காபனீரொட்சைட் வாயு ஒரு பெறுமதியான பண்டமாகக் கருதப்படும் காலத்தை நாம் எட்டியிருக்கிறோம். ஒவ்வொரு நாடும் குறித்தளவு காபன் சேர் வெளியீடுகளைத்தான் வருடாந்தம் சூழலுக்கு வெளியேற்ற முடியும் என்ற வரையறை உள்ளது. குறித்த நாடொன்று தனது வரையறை யிலும் குறைவான காபன் சேர் வெளியீடுகளைச் சூழலுக்கு வெளியேற்றுமாயின் மீதமிருக்கும் அளவை அதிகமாக வெளியேற் றும் நாடுகளுக்கு விற்கமுடியும். இதை காபன் வர்த்தகம் என்பர். காபன் வர்த்தகத்தை அடிப்படை யாகக் கொண்ட சந்தை காபன் சந்தை எனப்படும்.
காபன் சேர் வெளியீடுகளுக்கான அனுமதிப்பத்திரம் காபன் சந்தையில் ஏலத்தில் விடப்படும்.
பசுமை நிதியத்துக்கான 100 பில்லியன் டொலர் இலக்கை அடைய ஏலத்தொகையை தொன்னுக்கு 20-25 டொலர் என அதிகரிக்க வேண்டும் என ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டன. வங்கிப்பரிமாற்றத்துக் கான வரிவிதிப்பை அபிவிருத்தி யடைந்த நாடுகள் விரும்பாத அதேநேரம் ஆகாய விமான கப்பல் போக்குவரத்துக்கான வரிவிதிப்பை சிறிய தீவுகளாகக் காணப்படும் வளர்முக நாடுகள் விரும்பவில்லை.
சிறிய தீவுகளைப் பொறுத்தவரையிலே, அவை கப்பல்களை வர்த்தகத்திற்காகவும் விமானங்களைச் சுற்றுலாத்துறைக்காகவும் முற்றுமுழுதாக நம்பியிருக்கின்றன. ஆகையால் இவ்வரியானது பொருளாதார ரீதியாகத் தம்மைப் பாதிக்குமென்று அச்சமடைகின்றன.
இவை எல்லாம் ஆலோசனை அறிக்கை மட்டத்திலிருந்து உடன்படிக்கை மட்டத்துக்குச் செல்வதற்குக்கூட சகல நாடுகளிலும் அரசியல் மட்டத்திலான ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது.
கோபன் ஹாகன் மாநாடு தோல்வியடைந்த போதிலும் அதில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதென்பதே கான்குன் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.
அந்த பசுமை நிதியத்துக்கும் இந்த கான்குன் மாநாடு தான் உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. அதிலும் கூட பலவித கருத்து முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்துள்ளன.
சில நாடுகள் வருடத்துக்கு 100 பில்லியன் டொலர் போதாது என்றன. சிலவோ வருடத்துக்கு 800 பில்லியன் டொலர் நிதி தேவை என்பதுடன் அது முழுவ தும் மேற்குலகிடமிருந்தே வசூ லிக்
கப்பட வேண்டும் என்றன.
கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வருடாந்தம் 75-100 பில்லியன் டொலர்கள் செலவாகும் என கடந்த வருடத்துக்கான உலக வங்கியின் அறிக்கை தெரிவித்திருந்தது.
சர்வதேச சக்தி முகவர் அமைப்போ அபிவிருத்தியடைந்த னாடுகளில் தூய சக்தித்தொழில் நுட்பங்களை ஆதரிக்க வருடாந்தம் 110 மில்லியன் டொலர் செலவாகும் என அறிக்கையிட்டிருந்தது.
இந்த அறிக்கைகள் யாவுமே 2010 இலிருந்தே நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றன.
கால் நிலை மாற்றத்தால் அழிந்து போகும் அபாயத்தை எதிர் நோக்கியிருக்கும் சிறிய தீவுகளுள் முன்னிலை வகிப்பது மாலை தீவுகளாகும்.
“பணக்கார நாடுகள் மட்டுமன்றி வறிய நாடுகளும் கூட காபன் சேர் வெளியீடுகளைக் குறைக்க முயல வேண்டும்” என மாலை தீவுகளின் ஜனாதிபதி கான்குன் மா நாட்டிலே தெரிவித்திருந்தார்.
“வளி மண்டலத்திலே காபனீரொட்சைட்டை வெளியேற்றும் உரிமையை உறுதி செய்ய முனைதல் முட்டாள்தனமானது” என்ரும் அவர் தெரிவித்திருந்தார்.
“காபன் வெளியீட்டை மேற்குலக நாடுகள் குறைக்க வேண்டும். அதேசமயம் வளர்முக நாடுகளோ காபன் வெளியீட்டின் சதவீதத்தைக் குறைக்க வேண்டும்” என்ற கருத்தில் G 7 நாடுகளின் கூட்டமைப்பு உறுதியாக நின்றது.காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியிருக்கும் மாலைதீவுகளுக்கும் இத்தகைய நாடுகளின் கூட்டமைப்புடன் இணைந்து நிற்க வேண்டிய நிலையே கான்குன் மாநாட்டில் உருவானது.
2020 அளவிலே காபன் நடுநிலையான நாடு என்ற நிலைக்கு மாறுவரே மாலை தீவுகளின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டுக்கான உலகளாவிய வெப்பநிலை உயர்வு எதிர்வரும் 2-3 தசாப்தங்களுக்குள் இரட்டிப்பாகும் என்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான புதிய ஆய்வொன்று.
காலநிலை அனர்த்தங்களால் உருவாகப்போகும் சேதங்களோ 300% இலும் கூடிய அளவு அதிகரிக்கும் எனவும் அதே ஆய்வறிக்கைதான் தெரிவிக்கிறது.
இந்த எதிர்வு கூறலை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏறத்தாழ 50 வறிய நாடுகள் வெகுவாகப் பாதிக்கப் படலாம் என அடையாளமிடப் பட்டுள்ளன. அவற்றுள் பர்மா, பூட்டான், பங்களாதேஷ், றைகர், செனகல் போன்ற நாடு களும் அடங்குகின்றன.
காலநிலை மாற்றத்தால் வறிய நாடுகள் மட்டும் பாதிக்கப்படப் போவ தில்லை. மாறாக ஐக்கிய அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளும் பொருளாதாரக் குழப்பங் களை எதிர்நோக்கலாமென்கிறது அந்த ஆய்வு.
இவை இப்படி இருக்க, கான்குன் மாநாடு நடுநிலையான தீர்மானங்கள் பலவற்றை எட்டியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை சுற்றுச்சூழல் மாசைக் குறைப்ப தற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
அரசாங்கங்கள் காபன் வெளியீட்டைக் குறைப்பதில் சாத்தியமான நிலைப்பாட்டை இம்முறை வெளிப்படுத்தி யிருக்கின்றன. அதே சமயம் தமது செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற கடப்பாட்டையும் உணர்ந்திருக்கின்றன.
ஒரு பொதுத் தேவையைக் கருத்தில் கொண்டு நாடுகள் இணைந்து செயற்பட முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றன.
‘பசுமை நிதியம்’ தொடர்பாக மேலும் ஆராயப்பட்டு வறிய, பணக்கார நாடுகள் ஆகிய இரு தரப்பினதும் சம பங்களிப்புடன் அதனைத் தாபிப்பதற்கான வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் சில நாடுகள் கான்குன் மாநாடு வெற்றியளித் துள்ளது என்ற கருத்தப்பட அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி இருந்தன. மாறாக வேறு சில நாடுகள் இம்மாநாட்டில் திருப்பதிகரமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று தமது அதிருப்தியை வெளியிட்டன.
மொத்தத்தில் கான்குன் மாநாடும் ஏனைய மாநாடுகளைப் போலவே அமைந்து விட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
ஆனால், இம்மாநாடுகளையும் உடன்படிக்கைகளையும் கருத்தில் கொள்ளாது ஒவ்வொரு நாடும் தன்னை ஒரு தனிநபராகக் கருதிச் செயலில் இறங்க வேண்டும்.
‘எமக்கென்ன?’ என்ற அலட்சியப்போக்கைத் தவிர்த்து தமது காபன் சேர் வெளியீடுகளை இயன்ற வரை குறைத்தாலே காலநிலை மாற்றம் கட்டுப்பாட் டுக்குள் வந்து விடுமென்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
No comments:
Post a Comment