
மனித வாழ்வின் சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்கள் ஒவ்வொன்றும் குடிசனத் தொகையின் அளவிலேயே தங்கியுள்ளன. உலகளாவிய ரீதியிலே சனத்தொகையானது அதிகரித்து
வருகின்ற போதிலும் சில அபிவிருத்தியடைந்த நாடுகளிலே சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு குறைவடைந்தும் செல்கிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நகர்ப் பகுதிகள் சனத்தொகை அடர்த்தி கூடியவையாக மாறிவருகின்றன.
உலகளாவிய ரீதியிலே அதிகரித்து வரும் சனத்தொகையால் தான் பற்றாக்குறை மற்றும் மிகை நுகர்வு போன்ற புதிய பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.
எங்கு பார்த்தாலும் நிலப்பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை என இயற்கை வளங்கள் பற்றாக்குறையாகத் தொடங்கின. அதேபோல ஒரு பகுதி சனத்தொகையால் வளங்கள் மிகையாக நுகரப்பட ஒரு பகுதி சனத்தொகைக்கு வளங்களே இல்லாமல் போயின.
இத்தகைய சமமற்ற வளப் பங்கீடு காரணமாக மேலும் பல சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. அதிகரித்து வரும் சனத்தொகையால் சூழல் மாசடைதல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று.
உலக சனத்தொகை வளர்ச்சிப் போக்கினடிப்படையில், உலக குடித்தொகை கடிகாரமானது. உலக சனத்தொகையைத் தினமும் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடாந்தமும் ஒரு தசாப்தத்துக்கொரு முறையுமெனக் கணிப்பிடப்படுகின்றது. இது வரைகாலத்துக்குள் 1950 களே உயர் சனத்தொகை வளர்ச்சி வீதத்தையுடைய தசாப்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தசாப்தத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்துக்கு 1.8 சதவீதமாக இருந்தது. அதேபோல 1963 ஆம் ஆண்டே சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருந்த ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2.2 ஆகும். 2040 ஆம் ஆண்டுக்கும் 2050 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே உலக சனத்தொகை 9 பில்லியனை எட்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தனிமனித வாழ்வியலிலும் காணப்படும் சமூக பொருளாதா ரீதியிலான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைவது உலகளாவிய சனத்தொகை வளர்ச்சியேயாகும். அது மட்டுமன்றி நாடுகள், பிராந்தியங்களின் அபிவிருத்தியும் உலகளாவிய, பிராந்திய ரீதியிலான, நாடளாவிய சனத்தொகை வளர்ச்சியில் தங்கியுள்ளமையை மறுக்க முடியாது.
உலக சனத்தொகையானது 1987 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி 5 பில்லியனை எட்டியது. அதன் பின்னர், உலக சனத்தொகை சீரான வீத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது.
உலக சனத்தொகை 5 பில்லியனை எட்டியதையடுத்து அது தொடர்பாக மேலும் அறிந்து கொள்வதற்கு உலக மக்கள் ஆர்வம் கொண்டனர். அதையடுத்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம் 1989 ஆம் ஆண்டு முதல் ஜுலை 11 ஆம் திகதியை உலக சனத்தொகை தினமாகப் பிரகடனப்படுத்தியது.
உலகளாவிய சனத்தொகை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அந்த நடப்பு வருடத்திலுள்ள, சனத்தொகை தொடர்பான பிரச்சினைகளைத் தொனிப் பொருளாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கமைய 2010 ஆம் ஆண்டுக்கான தொனிப் பொருளாக ‘ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்’ என்ற தொனிப்பொருள் அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமான குடிசனத்தொகை மதிப்பீட்டிலே, குழந்தைகள் முதல் முதியோர் வரை சகலரும் பங்கு பற்றும் வகையில் மக்களை ஊக்குவிக்கும் நோக்கை அது அடிப்படையாகக் கொண்டது.
அதுமட்டுமன்றி குடிசனத்தொகை மதிப்பீட்டிற்கான தரவுகளைச் சேகரித்தல் தொடர்பான அறிவூட்டுதலை உபநோக்காகக் கொண்டமைந்திருக்கிறது.
வறுமைப் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்நோக்க சமூகக் கொள்கைளையும் செயற்றிட்டங்களையும் வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய செயற்பாடுகளுக்கு குடிசனத் தொகை தொடர்பான தரவுகள் மிகவும் அவசியமாகும்.
‘ஒவ்வொரு கருத்தரிப்பும் முக்கியமானது; ஒவ்வொரு பிறப்பும் பாதுகாப்பாக இருக்கிறது; ஒவ்வொரு இளைஞனும் எச். ஐ. வி. தொற்று அற்றவனாக இருக்கிறான்; ஒவ்வொரு பெண்ணும் மாண்புடனும் மரியாதையுடனும் மதிக்கப்படுகிறாள்’ என இத்தினத்திலே நாம் உறுதி செய்துகொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
குடிசனத்தொகை தொடர்பான விடயங்களை நோக்கவென, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை அமைப்பாக ஸினிபிஜிதி எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கங்கள் மட்டுமன்றி மாகாண சபைகளுடனும் ஏனைய அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பல செயற்றிட்டங்களை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் சனத்தொகைப் பிரச்சினைகளை அணுகுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்குகிறது.
2050 ஆம் ஆண்டளவிலே, உலகின் சனத்தொகை 9 பில்லியனாக மாறப்போகிறது. பரந்தளவிலான வறுமை, வேலையின்மை, பட்டினி போன்ற பல பிரச்சினைகள் உருவெடுக்கப் போகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பிரச்சினைகளை முறையாக அணுக, ஒழுங்காக ஆய்வு செய்யப்பட்ட துல்லியமான தரவுகள் மிகவும் அவசியமாகின்றன.
அத்தரவுகள் எங்கிருந்தோ பெறப்படுபவை அல்ல. அவை எம் ஒவ்வொரு வரிடமிருந்தும் பெறப்பட்டவையாகும். நாம் ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளைச் சரியாக வழங்கினால் தான் ஆய்வு முடிவுகளும் துல்லியமாக அமையும். ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் பெற்ற தரவுகளை ஒழுங்குபடுத்தி முறையே ஆய்வுசெய்து முடிவுகளைப் பெறுவதொன்றும் இலகுவான காரியமல்ல.
அதனால் தான் குடிசனத்தொகை மதிப்பீடு நீண்ட காலத்துக்கொருமுறை நடைபெறுகிறது. குடிசன மதிப்பீடு நடைபெறும் ஆகக் குறைந்த காலப் பகுதி 10 வருடங்களாகும்.
இந்த வருடத்துக்கான உலக சனத்தொகை தினத்தின் தொனிப் பொருள், ஒவ்வொருவரும் குடிசனத்தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. குறிப்பாக, சிறுவர்களதும் பெண்களினதும் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென எதிபார்க்கிறது.
1790 ஆம் ஆண்டின் பின்னரே, சிறுவர்களைக் குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வைக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் பங்களிப்பு ஏனைய வயதினருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.
குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்கும் ஒவ்வொரு சிறுவனும், தேவையுடைய சமுதாயங்களை இனங்காண்பதற்கு மிகவும் அவசியமானதாக இருப்பானெனத் தெரிவிக்கப்படுகிறது.
குடிசனத் தொகை மதிப்பீடானது தேசிய ரீதியிலான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அக் குடிசனத் தொகை மதிப்பீட்டின் மூலம் பெறப்படும் முடிவுகள், சர்வதேச ரீதியாகவும் காலத்துடனும் ஒப்பிடப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல, பொதுமக்கள் விரும்பித் தரவுகளைத் தரும் வகையிலேயும் அமைய வேண்டும்.
ஒரு சமுதாயமோ அல்லது ஒரு தனி நபரோ சிரந்த சுகாதார வசதியுடன் , கல்வி, போக்குவரத்து, மற்றும் வசிப்பிட வசதிகளுடன் இருப்பதையோ அல்லது அந்த வசதிகளற்றிருப்பதையோ முழு உலகுக்கும் தெரிவிக்கும் காட்டியாக குடிசனத்தொகை மதிப்பீடு காணப்படுகிறது.
ஒரு நாட்டுக்குள்ளும் கல்விக்கான, சுகாதார வசதிகளுக்கான இட ஒதுக்கீடுகளும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்களும் கூட குடிசனத்தொகை மதிப்பீட்டினடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மைக்காலங்களிலே, சூழலியலாளர்களும் பொருளியலாளர்களும் உலக சனத்தொகை வளர்ச்சிப்போக்கை ஆராய்ந்து எதிர்கால நிலைமைகளை மதிப்பிடவும் எதிர்வு கூறவும் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.
ஏனெனில், சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு இன்று மனிதனின் எதிர்காலம் தொடர்பான சகல விடயங்களையும் தீர்மானிக்கும் காரணியாக மாறிவிட்டது.
சனத்தொகை வளர்ச்சிவீதம் எங்ஙனம் கணிக்கப்படுகிறது எனப்பலர் அறிவதில்லை. ஒரு நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது அந்நாட்டின் பிறப்பு, இறப்பு வீதங்களிலேயே தங்கியுள்ளது. அத்துடன் பிறப்பு இறப்பு வீதங்கள் ஏனைய சதவீதங்களைப் போன்று நூறுக்கு எத்தனை எனக் கணிக்கப்படுவதில்லை. அவை ஆயிரத்துக்கு எத்தனை எனக் கணிக்கப்படுபவையாகும். பிறப்பு வீதத்துக்கும் இறப்பு வீதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பத்தால் வகுக்கும் போது பெறப்படுவதே சனத்தொகை வளர்ச்சி வீதமாகும்.
சனத்தொகை அதிகரிக்க, அதிகரிக்க மனிதத் தேவைகளும் அதிகரிக்கும். இதனால் வளங்களின் பாவனை மிகவேகமாக அதிகரிக்கும். வளங்களின் பாவனையின் துரித அதிகரிப்பு, சுற்றுச் சூழல் மாசைத் தோற்றுவிக்கும்.

ஆய்வுகளின் அடிப்படையிலே உலக சனத்தொகை வளர்ச்சி வீதம் இப்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சனத்தொகை காலத்துடன் அதிகரிக்கும் அளவு தான் குறைவடைந்துள்ளதே தவிர காலத்துடன் சனத்தொகை குறைவடையவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
2050ஆம் ஆண்டளவிலே, இந்தியாவின் சனத்தொகையானது (1.7 பில்லியன்) அதே நடப்பு ஆண்டிலுள்ள சீனாவின் சனத்தொகையை (1.4 பில்லியன்) விட அதிகமாக இருக்குமென எதிர்வு கூறப்படுகிறது. அப்போது, இவ்விரண்டு நாடுகளில் மட்டுமே உலக சனத்தொகையின் ஒன்றில் மூன்றைவிட அதிகமான பகுதி மக்கள் வாழ்வர் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல சனத்தொகை வளர்ச்சிவீதம் அதிகமுள்ள கண்டமாக ஆபிரிக்கா காணப்படுகிறது. ஏனெனில் இக்கண்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளிலே மொத்தக் கருத்தரிப்பு வீதம் (ஒரு பெண்ணுக்குப் பிறக்குமென எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை) 5 இலும் அதிகமாக இருக்கிறது. இதனால், 2050ஆம் ஆண்டளவிலே ஆபிரிக்காவின் சனத்தொகை இரட்டிப்படைந்து 2 மில்லியனாகுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.
சனத்தொகை வளர்ச்சிவீதம் பிரச்சினைக்குரியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் நாடுகள் யாவுமே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகும். வாழ்க்கைத்தரமும் தலாவருமானமும் உயர்வாக இருக்கும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன.
அவ்விரு காட்டிகளும் குறிப்பிட்ட மட்டத்தைவிடக் குறைவாக உள்ள நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவும் கருதப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் நீண்டகால பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவரும் அதேவேளை தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் கண்டவையாகக் காணப்படுகின்றன.
ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளோ, நீண்டகால அபிவிருத்தியின் நன்மைகளைப்பெறாதவையாக இருப்பதுடன் தொழில்நுட்பத்துக்காக அபிவிருத்தியடைந்த நாடுகளை நம்பியிருப்பனவாகவும் காணப்படுகின்றன.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விடக் குறைவாகும். ஆகையால் தான் சீன அரசு, சீனாவில் வசிக்கும் குடும்பம் ஒன்றிலே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முனைகிறது. அந்த எண்ணிக்கையை விட ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அக்குழந்தைகளுக்கு கல்வி உட்பட்ட பல வசதிகளை அரசு வழங்க மறுக்கிறது.
மாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய மட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடுவதில்லை. இங்கு தான் வளங்களின் சமமற்ற பகிர்வும் உருவாகிறது.
உலக வரைபடத்திலே, இலங்கை ஒரு சிறிய புள்ளியாய் தெரிவதால், இலங்கையின் சனத்தொகை தனியாக உலகளாவிய ரீதியிலே பெரிய தாக்கத்தைச் செலுத்தப் போவதில்லை. ஆயினும் இலங்கையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுள் ஒன்று என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனதும் இலக்காக இருக்கும் பல்கலைக்கழக அனுமதியும் குடிசனத்தொகை மதிப்பீட்டுடன் தொடர்புடையதேயாகும்.
மாவட்டங்களின் சனத்தொகைப் பரம்பலையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய காட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டே மாவட்டங்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியும் இட ஒதுக்கீடும் தீர்மானிக்கப்படுகின்றன.
அதே காட்டிகளின் அடிப்படையிலேயே பின்தங்கிய மாவட்டங்களும் கணிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் தீர்மானிப்பது கூட குடிசனத்தொகை மதிப்பீடேயாகும்.
இலங்கையிலே குடிசனத்தொகை மதிப்பீடு 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலங்கை பூராவும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முழு இலங்கையிலும் குடிசனத் தொகை மதிப்பீடு நடத்தப்படவிருக்கிறதென இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு குடிசனத்தொகை மதிப்பீடு மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும், மேற்கொள்வதில் அரசும் சம்பந்தப்பட்ட ஊழியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களையும் உணர்ந்து எமது பூரண பங்களிப்பை நாம் வழங்க வேண்டும்.
ஏனெனில் அந்தக் குடிசன மதிப்பீடு மிகவும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கப் போவதும் நாங்களே! ஆகையால், 2011 இலே இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் குடிசன மதிப்பீடு முன்னைய காலங்களினதைவிட மிகவும் துல்லியனமாக இருக்கும் வகையில் எமது பங்களிப்பைச் செலுத்துவோமென, உறுதி கொள்வோமாக!
No comments:
Post a Comment