பசுமை, சூழல் மாசு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு என்ற பல சொற்பதங்களை அன்றாடம் கேள்விப்படுகிறோம். அதேவகையில்தான் ‘3R’ எனற் சொற்பதமும் அமைகிறது. எந்த ஒரு செயற்பாடாயினும் ‘3R’ முறைமைக் கமைய மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற நியதி உலகளாவிய ரீதியிலே உருவாக்கப்பட்டு வருகிறது.
‘3R’ எனப்படுவது ஞிலீனீuணீலீ, ஞிலீணீyணீlலீ, ஞிலீusலீ என்ற 3 சொற்க ளையும் சுருக்கமாகக் குறிக்கும் சொற் பதமாகும். அதாவது, பாவனைக்குறை ப்பு, மீள்சுழற்சி, மீள்பாவனை ஆகிய மூன்று விடயங்களையும் கருத்தில் கொண்டே எம் அன்றாடச் செயற் பாடுகள் அமைய வேண்டுமென்ற நியதி உருவாக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் அவற்றினாலான வருமானம் என புதிய பல இலக் குகளைத் தேடி மனிதன் தொடக்கிய பயணத்தின் வேகம் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கியது. ஓசோன் படை அரிப்பு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம் எனப் புதிய பல பிரச்சினைகள் அவனது பயணத்தின் வேகத்தைக் குறைத்தன.
இயற்கையைக் கருத்தில் கொள்ளாமல் மனிதன் தொடுத்த கணைகளுக்கு இயற்கையும் எதிர்க்கணை தொடுத்தது. இயற்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சற்றும் தளராத மனிதன், புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தான்.
அந்த வழியிலேலே உருவாக்கப்பட்ட கொள்கை தான் ‘3R’ முறையாகும். பாவித்த பின் தூக்கியெறியும் கலாசாரம் 1980களில் பின்பு பரவத் தொடங்கியது. மேற்குலக நாடுகளிலே ஆரம்பிக்கப்பட்ட போதும், காலப் போக்கில் மூன்றாம் உலக நாடுகளினுள் நன்றாக ஊடுருவியது.
அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த கலாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது.
அது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன.
தொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா? ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன.
எந்த ஒரு பொருளினதும் தேவையற்ற, தேவைகளுக்கு மேலதிகமாக பாவனை குறைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் பாவனையற்ற அறைகளிலும் மின் விளக்குகள் எரிந்தபடி இருக்கும். ஆனால் அவற்றைச் சிறிதளவிலேனும் கருத்தில் கொள்ளாதவர்களாக நாம் இருந்து விடுகிறோம். அவ்வாறு இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்பதையே ’3R’ முறைமையின் ‘பாவனையைக் குறைத்தல்’ செயற்பாடு எதிர் பார்க்கிறது.
ஒரு தடவை பாவித்தபின், பயனில்லையெனப் பல பொருட்களை எறிந்துவிடுகிறோம். ஆனால், அவற்றை இயன்றளவு மீள மீள ஏதோ ஒரு வழியில் பாவிப்பதே சூழலுக்கு நன்மை பயக்குமெனத் தெரிவிக்கப் படுகிறது. ஒரு பக்கம் எழுதியோ அல்லது அச்சிடப்பட்ட கடதாசிகளை அவற்றின் தேவை முடிந்ததும் கசக்கியெறிந்து விடுகிறோம்.
ஆனால் மாறாக அவற்றின் அச்சிடப்படாத மறுபக்கத்தை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாமே? இத்தகைய செயற்பாடுகளைத்தான் ‘மீள் பாவனை’ எனும் பதவி ஊக்குவிக்கிறது.
ஒரு பொருளின் பாவனை முடிந்த பின், அப்பொருளை அதேவடிவில் மீள உபயோகிக்க முடியாத ஒரு நிலையில், அதனை பயனுள்ள இன்னொரு பொருளாக்கிப் பயன்படுத்துதல் இன்று நடைமுறையில் உள்ளது. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசிப் பொருட்கள் பல அவ்வாறு உருமாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளைத் தான் ‘மீள் சுழற்சி’ எனும் பதம் ஊக்குவிக்கிறது.
‘3R’ முறைமையானது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு ஒன்றும் புதிதானதல்ல. எம் முன்னோர்கள் கைக்கொண்டு வந்து பின் காலப் போக்கில் புறந்தள்ளிய முறைமைகளை மேற்குலக நாடுகள் புதிய வர்ணத்தீட்டி அறிமுகப்படுத்துகின்றன. நாமும் ஆவலுடன் அறிய முயல்கிறோம்.
வாழையிலைலே உணவருந்தியவர்கள் இன்று வாழையிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் பெருமையாக உண்கிறார்கள். மாவிலே கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டியவர்கள் வீடுகளை பிளாஸ்டிக் கோல ஸ்டிக்கர்களும் பிளாஸ்டிக் மாவிலை தோரணங்களும் அலங்கரிக்கின்றன. கடவுளைக்கூட நாம் விட்டுவைக்கவில்லை.
அவரது திருவுருவங்களையும் வாசனை திரவியம் பூசிய செயற்கைப் பூக்கள் தான் அலங்கரிக்கின்றன. இவற்றையெல்லாம் கெளரவம் எனக் கருதி பெருமை பேசுவோர் பலரைக் கண்டிருப்போம். ஏன் அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்கலாம்.
நாம் ‘3R’ முறையைக் கடைப்பிடிப்பதற்காகப் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. கால ஓட்டத்தில் நாம் தொலைத்துவிட்ட எம் பண்பாட்டு, கலாசார நடைமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கைக்கொண்டாலே போதும் ‘3R’ முறைமை எம் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து விடும்.
No comments:
Post a Comment