Thursday, April 29, 2010

அரண்மனையென்பது ஆடம்பரம் அல்ல!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய ஊரே பத்மநாபபுரம் ஆகும். சிறிய ஊராயினும், சரித்திரப்புகழ் வாய்ந்தது. அது தற்போதைய கேரளத்தில் காணப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக நான்கு நூற்றாண்டு காலம் நிலைத்து நின்றது.



மன்னன்
மார்த்தாண்ட வர்மா

தென்னிந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் பலம் பெற்று விளங்கிய சேரப் பேரரசின் அதிகாரத்துக்குட்பட்ட சிறிய இராசதானியாக வேணாடு விளங்கி வந்தது. வேணாடு இராசதானியிலுள்ள ஒரு சமஸ்தானமாக, திருவாங்கூர் சமஸ்தானம் காணப்பட்டது. கி.பி. 840 –860 இல் அய்யனடிகள் திருவடிகளின் காலம் தொட்டு 1931-1949 இல் சிறி சித்திர திருநல் பாலராமவர்மா வரை பல மன்னர்கள் இந்த சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தனர்.

நவீன திருவாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கியவராக மகாராஜா மார்த்தாண்ட வர்மா கருதப்படுகிறார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1729- கி.பி 1758 வரையான 29 வருடங்களாகும். அக்காலப் பகுதியிலே திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன.

அவர் தனது தளராத உறுதியினாலும் இராஜதந்திரத்தாலும் கிளர்ச்சிகளை வெற்றிகொண்டு சமஸ்தானத்தின் எல்லைகளை விஸ்தரித்தார். பின்னர் பொருளாதார, நிர்வாக சீர்திருத்தங்களை உருவாக்கி செல்வம் கொழிக்கும் சமஸ்தான மாக மாற்றினார்.

அரண்மனைகள், கோவில்கள் மற்றும் கோட்டைகளைக் கட்டி னார். அவ்வாறு கட்டப் பட்ட கோட்டையும் அரண்மனையும் பத்மநாபபுரத்திலே காணப்படுகின்றன. திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர்கள் தம்மை, விஷ்ணுவாகிய ஸ்ரீபத்மநாபனின் தாசர்களாகக் கொண்டு தம் இறைவனின் பெயரையே தமது இராசதானிக்கும் சூட்டினர். அதனால் கற்குளம் என அழைக்கப் பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரும் பத்மநாபபுரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனை யானது, பத்மநாபபுரக் கோட்டைக் குள்ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளிமலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதியென்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக அமையும். ஏறத்தாழ 14 மாளிகைகளைக் கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.




அரண்மனையின் முகப்பு


காண்போரைக் கொள்ளை கொள்ளும் விதத்திலே எளிமையான கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் சிறிய மாளிகையாகவிருந்து, காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டு இன்று காட்சியளிக்கும் நிலையை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்வரண்மனை அடைந்ததாக வரலாறு கூறுகிறது.

கற்பனை செய்து பார்க்கப்பட்ட முடியாதளவு நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம். திரைப்படங்களில் மட்டுமே பார்த்துப்பழகிய பிரமாண்டமான அரண்மனைகளுக்கு மத்தியில், யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஓர் அரண்மனையாகவே பத்மநாபபுரம் அரண்மனை தெரிந்தது.

அரண்மனையென்றவுடனேயே மனக்கண்ணில் தெரியும் பிரமாண்டமான அரங்குகளையும் தகதகக்கும் அலங்காரங்களையும் பத்மநாபபுர அரண்மனையில் காணமுடியாது. ஆனால், அரண்மனைக்கே யுரித்தான செல்வச் செழிப்பை, அரண்மனையின் உள்ளக, வெளியக வடிவமைப்பில் காண முடியும்.



தென்னிந்தியாவை ஆங்கிலேயர் தம் வசப்படுத்தியபோது, திருவாங்கூர் போன்ற பல சமஸ்தானங்கள் காணப்பட்டன. அத்தகைய சமஸ்தானங்கள் வெள்ளையர்களுக்கான வரியைக் கட்டி ஆட்சிபுரிந்து வந்தனர். அவற்றுள் திருவாங்கூரும் ஒன்றாகும்.

இன்று பொது மக்கள் பார்வையிடக் கூடியதாகவிருக்கும் பத்மநாபபுரம் அரண்மனையிலே, சீனர்கள் உட்பட வெளிநாட்டவர் பலரும் அன்பளிப்பாகக் கொடுத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுடன் இந்த சமஸ்தானம் நல்லுறவைப் பேணி வந்தமைக்கு இந்த அன்பளிப்புப் பொருட்களும், அரண்மனை அமைக்கப்பட்ட பாணியிலிருந்து வேறுபட்ட பாணியில் அமைக்கப்பட்ட விருந்தினர் மாளிகையும் சான்று பகர்கின்றன.

அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் பிரதான வாசல் பிரமாண்டமானது, மரவேலைப்பாடு களுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம் பரியத்துக்கே யுரித்தான கலை நயத்துடன் அமைக்க ப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப் போரைப் பிரமிக்க வைக்கும். ஒன்றி லொன்று வேறுபட்ட90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை மிகவும் பிரசித்தமானது.

பொதுமக்களின் பார்வைக்கென, சீனர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சிம்மாசனம், முற்று முழுதாக கருங்கல்லாலான சாய்மனைக்கதிரை, உள்ளூர் பிரதானிகளால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது. தனியே மரத்தால் ஆனது. அந்தப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும்.

பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையிலே சலாகைகள் மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக் கின்றன.


மந்திரசாலை யைக் கடந்து படிகளால் கீழே இறங்கி னால் வருவது மணிமாளிகை ஆகும். கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப் பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக் கூட்டின் பின்னணி யிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3 கிமீ சுற்றுவட்டார த்திற்குள்ளிருக்கும் சகலராலும் கேட்க முடியும்.

மணிமாளிகையைத் தாண்டிச் செல்ல வருவது, ஒரு மாடியையுடைய அன்னதான மண்டபமாகும். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். ஊறுகாயை பேணுவதற்குப் பாவிக்கப்படும் சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்துகிறது. அன்னதான மண்டபத்தைக் கடந்தால் தெரிவது தாய்க்கொட்டாரம். இந்த தாய்க்கொட்டாரமே மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகையாகும்.

இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய நாற்சார் வீடமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகை களால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகள் காணப்படு கின்றன.

தாய்க் கொட்டாரத்தின் வட பகுதியிலே ஹோமபுரம் காணப்படுகிறது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது. அதன் கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோவிலொன்று காணப்படுகின்றது. இன்றும் கூட நவராத்திரி காலங்களில், இக்கோவிலிலுள்ள சரஸ்வதி திருவுருவம் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

அடுத்துக் காணப்படும் உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகை யில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்ட தாகவும் தெரிவிக்கப் படுகிறது.

முதலாம் மாடியில் மருத்துவக் குண முடைய மரத்தாலான மருத்துவக் கட்டி லொன்று காணப் படுகிறது. இரண்டா வது மாடி, மன்னனின் ஓய்வெடுக் கும் பகுதியா கக் காணப் படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.

அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடைய வனாகக் காணப்படுகின்றன.


மண்டபத்தின் வழியே சென்றால் இந்திர விலாசத்திற்குச் செல்ல முடியும். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்திலே, விருந்தினர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திரவிலாசமாகும். அதன் கதவுகளும் யன்னல்களும் பெரியவை. அம்மாளிகை அமைக்கப்பட்ட பாணி சற்று நவீனமானது. விருந்தினர் மாளிகையின் யன்னல்கள், அந்தப் புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியதாக அமைந்திருந்தமை மனதை வருடியது.

இந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். தற்போது காணப்படும் கருங்கல் மண்டபமும், அதனையொட்டிய சரஸ்வதி ஆலயமும், கி.பி. 1744 இல் மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லினாலானது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென இந்த, நவராத்திரி மண்டபம் பயன்பட்டது.

மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதெனக் கூறப்படு கிறது.

நவராத்திரி மண்டபத்தைப் பார்கையில் ஏற்படும் உணர்வு விபரிக்க முடியாதது. கலை தெரிந்தவர்கள் மட்டுமன்றி கலையை இரசிப்பவர்களும் கூட அம்மண்டபத்தைப் பார்க்கையில் விபரிக்கமுடியாததோர் உணர்வைப் பெறுவர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அந்தப்புரப் பெண்களின் பாவனைக்கான நீர்த்தடாகத்தைத் தாண்டிச் செல்ல வருவது தெற்குக் கொட்டாரம் ஆகும். இது அரண்மனைத் தொகுதியை விட்டு விலக்கிக் காணப்படினும், அத்தொகுதியின் ஒரு பகுதியாகும். தெற்குக் கொட்டாரம் மூன்று சிறிய கட்டடங்களைக்கொண்டது. அவை மூன்றுமே, மிகவும் கவர்ச்சிகரமான மரச் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் அழகான தோற்றத்தையுடைய பகுதிகளாகும்.

யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இந்த பத்மநாபபுரம் அரண்மனையின் வாசல்களும் பாதைகளும் மிகவும் ஒடுக்கமானவை. அவற்றினூடு செல்கையில் ஒருவர் பின் ஒருவராகவே செல்லமுடியும்.

பல உள்நாட்டு, வெளிநாட்டுக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன என்று வரலாறு கூறுவதால், கிளச்சியாளர்களைச் சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைதான் இந்த ஒடுக்கமான வடிவமைப்போ எனவும் எண்ணத் தோன்றுகிறது. பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட அதனையே பறைசாற்றுகிறது.

வெளியிலிருந்து அரண்மனை யன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக யன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கின்றன.

அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.

ஏறத்தாழ 400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின் விளக்குகளைக் காணமுடியாது. இயற்கை ஒளி முதலாகிய சூரியனின் ஒளியே போதியளவான வெளிச்சத்தை வழங்குகிறது. ஆகையால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் ஆகியனவாகும்.

எரிக்கப்பட்ட தேங்காய் ச்சிரட்டை, எலுமிச்சை, முட்டைவெண்கரு மற் றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப் பட்ட சாறு ஆகிய வற்றைக் கொண்டுதான் பளிச்சிடும் கரிய நிறத்தரை உருவாக்கப் பட்டிருக்கிறது.

மலசல கூடங்கள் முதலாம் மாடியிலேயே காணப்படுகின்றன. கழிவுகள், மூடப்பட்ட கற்கால்வாய்களினூடு கடத்தப்படும் வகையில், அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. இரவுக ளில் ஒளியூட்டுவதற்காகக் கலைநயம் மிக்க விளக்குகள் வகை வகையாகக் காணப்படுகின்றன.

இந்த அரண்மனையும் அருகிலுள்ள நூதன சாலையும் தமிழ்நாட்டிலே காணப்பட்டாலும் கேரள அரசினாலேயே பராமரிக்கப்படுகிறது. தொல்லியல்துறையில் ஆர்வமுடைய எவரையும் சட்டென ஈர்க்கும் வல்லமை படைத்த பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத்திலிருந்து 55 கி. மீ தொலைவிலும் கன்னியாகுமரி யிலிருந்து 35 கி. மீ தொலைவிலும் காணப்படுகிறது.

செவ்வாய் முதல் ஞாயிறு வரையான நாட்களில் இவ்வரண் மனையைப் பொதுமக்கள் பார்வையிட முடியும். அரண்மனையின் வெளிச்சூழலிலே, சுற்றுலாப் பயணிகளுக்காகவே அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அங்கே கேரளப் பாணியை பிரதிபலிக்கும் மரம், புல், ஓலைகளினாலான கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

கேரளக் கலாசாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் அரண்மனையும் அதன் சூழலும், ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்ததோர் இடமாகும்.

Tuesday, April 13, 2010

சூழலின் வெம்மையைக் குறைத்து பசுமையைப் பேணும் நகர வனங்கள்

“நான்கு திசைகளிலும் புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ஊடுருவி
மனித நாற்றுக்களை
மெளனமாய்த் தலைசாய்க்க
கத்தியின்றி... இரத்தமின்றி
யுத்தமொன்று ஆரம்பம்!
நாள்தோறும் பேருந்து, வாகனங்கள்,
வண்டிகளின் கரிய புகையால் வெளி நிரம்பும்!
ஓங்கியுயர் மரங்களை வெட்டிவிட்டார்
மழையும் தான் பொய்க்காதோ
மண்ணுலகம் தன்னில்?...”


இணையத்தில் பூத்திருந்த இந்தக் கவிதை சுட்டுவது வேறெதையுமல்ல. அதிகரிக்கும் மனிதத் தேவைகளை ஈடுசெய்யும் நோக்குடனே உதித்த நகரமயமாக்கலைத்தான்!

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனித வாழ்விலே, காடுகளின் முக்கியத்துவம் இன்றியமையாததாக இருந்தது. காடுகள் பூமியில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் ஒன்றுக்குமேற்பட்ட பயன்களை வழங்கி வருகின்றன.

மனித நாகரிகத்தின் வளர்ச்சி சாதித்த அபிவிருத்திக்கான விலையை மனிதன் காடுகளை அழித்துச் செலுத்துகிறான். இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதற்கு உடனடிக் காரணங்களாக, மரங்கள் வெட்டப்படல், இடம்பெயரும் விவசாயிகள், பணப் பயிர்கள், மந்தை நிலங்களின் தேவை, எரிபொருட் தேவை, பெரியளவிலான நீர்த்தேக்கங்களின் நிர்மாணம், சுரங்கத் தொழில், குடீயேற்றத் திட்டங்கள், சுற்றுலாத்துறை போன்றன கருதப்படுகின்றன.

இவை தவிர அபிவிருத்தித் திட்டங்களும், ஆடம்பரத் தேவைகளால் உருவாகிய மிகை நுகர்வுமே காடழிப்புக்கான அடிப்படைக் காரணங்களாகும். இவை தவிர கைத்தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளால் மேற்கொள்ளப்படும் இயற்கை வளங்களின் துஷ்பிரயோகமும், மூன்றாம் உலக நாடுகளின் கடன் சுமை, வறுமை, அதிகரிக்கும் சனத்தொகை ஆகிய காரணங்களும் காடழிப்பின் பின்னணியில் இருக்கின்றன.

60 சதவீதமாகவிருந்த உலகின் காடுகள் ஒரு சில தசாப்தங்களுக்குள்ளேயே 30 சதவீதமாகக் குறைவடைந்தமையே, அதிகரித்துள்ள மனிதத் தேவைகளுக்கும் இயற்கை வளங்களின் துஷ்பிரயோகங்களுக்கும் மிகச் சிறந்த உதாரணமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே, காடுகளைப் பேணுவதற்கான சட்டதிட்டங்கள் துட்டகைமுனு மன்னனின் காலத்திலேயே (கி. மு. 161 – கி. மு. 137) பேணப்பட்டனயென வரலாறு கூறுகிறது. அம் மன்னனின் காலத்திலே இருந்த சமூகம், மிகுந்த அக்கறையுடன் வனவளங்களைப் பாதுகாத்து இயற்கைச் சூழலின் சமநிலையை சீராகப் பேணி வந்திருக்கிறது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பின் ஆங்கிலேயரென அடுத்தடுத்து இலங்கை வெளிநாட்டவர் வசமானமை, இலங்கையின் நிலப்பாவனை முறைமைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. புதிய புதிய நிலப் பாவனைக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக இயற்கை வனப்பிரதேசங்களின் அளவு குறையத் தொடங்கியது- 1886ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 80% சதவீதமாகவிருந்த வன வளம், 1900 ஆம் ஆண்டு 70 சதவீதமாகவும், 1956 இலே 44 சதவீதமாகவும் குறைவடைந்து சென்றது. அவ்வாறு வனவளம் துரிதகதியில் அழிக்கப்படுவது அதே போக்கிலே தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டளவில் அது முற்றாக அழிந்துவிடும் எனக் கணக்கிடப்பட்டது.

வனவளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு கொள்கைகள், சட்டதிட்டங்கள், அமைப்புக்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. ஆயினும் வனப் பிரதேசங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. மாறாக, அழிக்கப்படும் வேகம் குறைவடைந்தது. 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி இலங்கையின் வனப் பிரதேசம் மொத்த நிலப்பரப்பில் 32 சதவீதமாக (னிஜிஜிளி, 2002) காணப்பட்டது.

மொத்த நிலப்பரப்பின் 80 சதவீதமாகவிருந்த இலங்கையின் வனவளம் ஒரு நூற்றாண்டு காலப் பகுதிக்குள்ளேயே 40 சதவீதத்தால் குறைவடைந்து இன்று மொத்த நிலப்பரப்பின் 32 சதவீதமாகக் காணப்படுகிறது. இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

19ஆம் நூற்றாண்டிலே ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகப் பயிர்ச் செய்கைகளும் காலப் போக்கில் உருவாக்கப்பட்ட பாரிய விவசாய அபிவிருத்தித் திட்டங்களும் சடுதியான காடழிப்புக்கு வழிவகுத்தன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களும், அபிவிருத்தி மற்றும் நகரமயமாதல் செயற்பாடுகளும் வன வளங்களின் குறைவடையும் போக்குக்குப் பின்னணியாக அமைந்தன.

இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு சீமெந்துக் காடுகள் தோற்றம் பெற்றன. நகரமயமாதலின் போர்வையில் சீமெந்தானது இயற்கை படர்ந்திருந்த சகல இடங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியது. நகரமயப்படுத்தப்பட்ட பல இடங்களில் மண்ணையும் மரத்தையும் காண்பதுகூட அரிதாயிற்று. இவற்றின் விளைவு அசெளகரியமான சூழலாக மீண்டும் மனிதனையே தாக்கியது.

இயற்கையோடு விளையாடுதலென்பது சுலபமான காரியம் அல்லவே! விளையாடத் தொடங்கியவனுக்கு, எதிர்கொள்ளப் போகும் விபரீதங்களும் தெரியாமலிருக்கவில்லை. ஆனால் அபிவிருத்தி, முன்னேற்றம் என்ற தொலைநோக்கிலான இலக்குகளின் முன்னே, இந்த விபரீதங்களுக்கான முக்கியத்துவம் குறைவாகவே காணப்பட்டது.

மனிதத் தேவைகள் அதிகரிக்க, அபிவிருத்தி எனும் பெயரிலான அத்திவாரமும் இடப்பட்டது. மண் வீதிகள் கொங்கிaட் பாதைகளாகவும் மேம்பாலங்களாகவும் மாற்றம் பெற்றன. வானுயர்ந்த கொங்கிaற் கட்டங்கள் தோன்றின. இன்னும் பல உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.

குளிர்ச்சி தரும் மரங்களற்று, சூழலின் வெம்மை அதிகரித்தது. தொடர்ந்து ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பல சூழல் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. பின் அவை சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளாக உருவெடுத்தன. இந்நிலை இலங்கைக்கு மட்டுமே உரித்தானதல்ல. முழு உலகுமே இதே நிலையைத்தான் எதிர்நோக்கியது.

1700 களிலே, நகரப் பகுதிகளில் நிழலுக்காகவும் அழகுக்காகவும் மரங்களை வளர்க்கும் திட்டமொன்று இங்கிலாந்திலே தொடக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டின் பின்னர் 1850 ஆம் ஆண்டளவிலே தனியார் நிறுவனங்களும் அமைப்புக்களும் அழகுக்காக வளர்க்கப்படும் மரங்களைச் சந்தைப்படுத்தும் நோக்குடன் அத்தகைய மரங்களை நகர்ப்பகுதிகளிலே வளர்ப்பதை ஊக்குவித்தன.

நாற்றுமேடையில் வளரும்
மரக் கன்றுகள்

பின்னர் 1890 களில் இங்கிலாந்திலே உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களால் இவ்வாறு நிழல் தரு நோக்கத்துக்காக நகர்ப் பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்கள் பொதுச் சொத்து என்று வரையறுக்கப்பட்டது. அதனடிப்படையிலே பின்னர் ஐக்கிய அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் பொதுச் சொத்தாக மரங்கள் வளர்க்கப்பட்டன.


பின்னர் நில அமைப்பு முகாமைத்துவம் என்ற துறையும் அதைத் தொடர்ந்து நகர வனவியல் (ஸிrban பிorலீstry) என்ற புதியதோர் துறையும் உருவாகியது, அதைத் தொடர்ந்து பல கிளைத் துறைகளும் அவற்றையொட்டிய தொழில்சார் வாய்ப்புக்களும் உருவாகின. இன்று நகரமயமாதலின் முக்கிய பகுதியாகவே இந்த நகர வனங்கள் மாறிவிட்டன.

நகர வனவியலானது, வனவியலின் ஒரு கிளையாக மட்டுமன்றி மரங்களின் உடற்றொழிலியல், சமூகவியல், பொருளியல் ரீதியான முக்கியத்துவத்தையும் அவற்றால் சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையையும் கருத்தில் கொண்டு, மரங்களை நாட்டி, அவற்றைச் செவ்வனே முகாமைத்துவம் செய்தலை நோக்காகக் கொண்டது.

நகர வனவியலைப் பொறுத்தவரையிலே, மூன்று விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, தாவர (மர) இனங்கள் கவனமாகத் தேர்வுசெய்யப்பட வேண்டும். அவற்றை நாட்ட வேண்டிய இடம், சூழல் அவற்றின் சராசரி ஆயுட்காலம், பராமரிப்புக்காக ஏற்படும் செலவின் மதிப்பீடு போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இடத்தேர்வு மிகவும் முக்கியமானது.

நாட்டவேண்டிய இடம் ஒழுங்காகத் தேர்வு செய்யப்படாவிடில், மரங்கள் வளர்ந்து மின் இணைப்புக்களுடனோ அல்லது மின்சாரக் கம்பிகள், வீதிச் சமிக்ஞை விளக்குகளுடனோ சிக்குற நேரிடும். மரங்கள் வளர்க்கப்படும் இடங்கள் கட்டடங்கள் நிறைந்த நகர்ப் பகுதிகளாகையால், இத்தகைய பிரச்சினைகள் நகரவனச் சூழல் தொகுதியால் கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் நன்மைகளை, மூடி மறைத்துவிடும்.

அத்துடன், இனங்களின் தெரிவானது ஒரே இனத்தை மட்டுமே சார்ந்ததாக இல்லாமல், இனங்களின் பல்வகைமையை உள்ளடக்கியதாகக் காணப்பட வேண்டும். அவ்வாறு இனங்களைத் தெரிவு செய்யும்போது, மண் பாதுகாப்பு, நடைபாதைப் பகுதிகள், உயிர்த்திணிவு (உதிரும் தாவரப் பகுதிகள்), நீர்பேணல் முறைமைகள், வளியின் தரம், சூழலின் அழகு போன்ற விடயங்களும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

இரண்டாவதாக, மரங்களின் விபரக் குறிப்பு (யிnvலீntory) பேணப்பட வேண்டியதுடன், நில அமைப்பு முறைமைகளும் திட்டமிடப்பட வேண்டும். அவை, மரங்களின் பராமரிப்பு வட்டங்கள் (எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது? என்பது பற்றிய விபரங்கள்). மரங்கள் ஏனைய நகர சேவைகளில் (மின்சாரம், போக்குவரத்து) ஏற்படுத்தும் தாக்கங்கள், வனத்தின் கட்டமைப்பு, வரவு செலவுத் திட்டம், போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக, திட்டமிடல் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, மரங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டியதுடன் மரப்பகுதிகளும் வினைத்திறன் மிக்க வகையில் பாவிக்கப்பட வேண்டும்.

மரங்கள் கிரமமாகப் பராமரிக்கப்பட்டு, தேவையான காலங்களில் அகற்றப்பட்டு புதியவை நாட்டப்படலாம். கிளைகளை ஒழுங்காக வெட்டி அவற்றாலேயே தாவரத்திற்கான நீரைத் தேக்கி வைக்கும் வகையில் நிலத்தை மூடலாம். ஆயினும் இந்த நகர வனங்களின் மரங்களுக்கான பராமரிப்புச்செலவு மிகவும் உயர்ந்ததாகும். இவை பொதுச் சொந்தாகையால் பொதுவான நிதியமொன்றினாலேயே பராமரித்து நிர்வகிக்கப்படுகின்றன. அத்துடன் பொதுமக்களினதும் அரசாங்கத்தினதும் முழுமையான ஆதரவின்றி இந்த நகர வனங்களை நிர்வகிக்க முடியாது.

நகர வனங்கள் உருவாவதற்கு, பின்வரும் தேவைகள் அடிப்படையாய் அமைந்தன.

1. இயற்கையைப் பேணுதல்

2. வெள்ளப்பெருக்கு, மண் சரிவு, மண்ணரிப்பு போன்ற அனர்த்தங்களிலிருந்து நகரைப் பாதுகாத்தல்.

3. வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புக்களுக்கு உருவாகும் சேதங்களைக் குறைத்தல்.

4. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்

5. தனிமனித வாழ்வையும் சுகாதாரத்தையும் பேணுதல்

இந்தத் தேவைகள் யாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது, ‘சூழலைப் பசுமையாக்கல்’ என்ற கொள்கையாகும். நகரப் பகுதிகளில், மரங்கள் விதை மூலம் உருவாக்கப்படுவதில்லை. நாற்று மேடைகளில் வளர்க்கப்பட்டு இளங்கன்றாகவோ அல்லது முதிர்ச்சியடைந்த மரமாகவோ மாறிய பின்னர்தான் நகரப் பகுதிகளுக்குக் கொண்டு வந்து நாட்டப்படுகின்றன.

பொருத்தமான இடத்தில் நாட்டப்படும் வளர்ந்த மரக்கன்று.

இந்த நகர வனங்கள் தனித்தனி மரங்களாக மட்டுமே நாட்டப்பட வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லை. மரங்கள் நிறைந்த பூங்காக்களும் நகரப் பகுதிகளிலே காணப்படும் மர நடுகைத் திட்டங்களும்கூட நகர வனங்களே! வளங்கள் குறைவாகக் கிடைக்கும் நகர்ப்புறக் குடியிருப்புகளில் நகர வனங்களை உருவாக்குதலானது குடியிருப்பாளர்களின் உணவுத் தேவையைச் சிறிதளவிலாவது பூர்த்தி செய்யும் முயற்சியாகும். உணவுக்காகப் பயன்படுத்தப்டும் காய்கள், பழங்கள் இலைகளையுடைய மரங்களை இத்தகைய இடங்களில் வளர்க்கலாம்.

பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நகர்ப்புறங்களில், இந்த நகர வனங்கள் காற்றுத் தடைகளாகவும் செயற்பட்டு, பயிர் நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

சக்தித் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கிய எரிபொருளாக, மரங்கள் காணப்படுகின்றன. நகரங்களின் சக்தித் தேவையை ஈடுசெய்யவும் இந்த நகர வனங்கள் பயன்படுகின்றன.

மழைநீரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இவை பெரும்பங்காற்றுகின்றன. மழைநீர் தரையில் படும் வேகத்தைக் குறைத்து மழைநீர் பாய்ந்தோடுவதைத் தடுக்கின்றன. இதனால் மண்ணும் அரிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

சூழலைக் குளிர்மையாக வைத்து, சூழலின் வெம்மையைக் குறைப்பதுடன், நிழலையும் தருகின்றன. வளிமண்டலத்தை மாசுபடுத்தும் துணிக்கை மாசுக்களுடன் பரிமாறலில் ஈடுபட்டு அவற்றை உறிஞ்சுகின்றன.


அதேபோல சூழல் மாசடைதலை வெளிக்காட்டும் காட்டிகளாகவும் இந்த நகர வனங்கள் காணப்படுகின்றன. அவற்றின் செழுமை வளர்ச்சிப் போக்கை அடிப்படையாகக்கொண்டு, சூழல் மாசடைதல் மட்டம் அறியப்படும்.

கட்டங்கள் நிறைந்த நகரச் சூழலிலே மரங்களை வளர்ப்பதானது, சூழலுக்கு அழகையும் கண்ணுக்குக் குளிர்ச்சியையும் தருவதை நாம் யாவருமே அறிந்திருப்போம். இம்மரங்கள் நகர்வாழ் மக்களின் உடல், உள ஆரோக்கியத்தையும் அதிகரித்திருக்கின்றனவென ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நகர வனங்கள் காணப்படும் நிலப்பரப்பும் நகர வனங்களின் தரமும் அதிகரிக்க, நகரின் நுண் காலநிலை சீராக்கப்படும். மண், நீர், வளியின் தரம் ஆகியன செவ்வனே முகாமைத்துவம் செய்யப்படும்.

பல பறவைகளினதும் உயிரினங்களினதும் வாழ்விடமாக, மரங்கள் தொழிற்பட விளைய, உயிர்ப்பல்வகைமை பேணப்படும். நகரின் பொழுதுபோக்கு, கலாசாரப் பெறுமதி அதிகரிக்கும்.

வாகனப் போக்குவரத்து செவ்வனே முகாமைத்துவம் செய்யப்படும். பொருளாதார அபிவிருத்தியும் தானே உருவாகும்.

நாற்று மேடையில் பதித்து வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள், பொருத்தமான போக்குவரத்து முறைமை மூலம் பக்குவமாக நகருக்குக் கொண்டுவரப்படும். அவை அவ்வாறு கொண்டு வரப்பட முன்னரே, நகரில் அவற்றை நாட்ட வேண்டிய இடம் தீர்மானிக்கப்பட்டு நிலமும் மண்ணும் தயார்படுத்தப்படும்.

பொதுவாக மழைக் காலங்களிலேயே இவ்வாறு மரங்கள் நடப்படும். நீர் தேங்கி நிற்கும் காலங்களிலோ அல்லது வறண்ட மற்றும் அதிக காற்று வீசும் காலங்களிலோ நகர வனங்களுக்கான மரங்களை நடுதல் உகந்ததல்ல.

மண்ணானது வளம் மிக்கதாகவும், நீரை வடிந்தோடவிடக் கூடியதாகவும், வளியடக்கம் உள்ளதாகவும், தேவையானளவு ஈரப்பற்றையுடையதாகவும், நடு நிலைத் தன்மையுடையதாகவும் காணப்பட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடைய மரங்களாக அவை வளரும்.

மரங்களை நடுவதோடு நகர வனவியலாளர்களின் பணி முடிந்து விடுவதில்லை. மரங்கள் தாமாகவே வளரும் நிலையை அடையும் வரை, அவற்றைப் பராமரிக்க வேண்டும். மரங்கள் நாட்டப்பட்டுள்ள மண்ணின் வளம் தொடர்பான பிரச்சினைகள் ஒழுங்காக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில், மண்ணின் தன்மைக்கமைய,இசைந்து வளரக்கூடிய மர இனங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

நகர வனங்களில் உள்ள மரங்கள் அழகானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் இருக்க வேண்டும்.

சிதைந்த இறந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு ஒழுங்காகப் பேணப்பட வேண்டும். மற்றைய மரங்களுக்கு வளர இடமளிக்கும் பொருட்டும் கிளைகள் ஐதாக்கப்படலாம். நகரப் கட்டமைப்புக்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது அதீத முதிர்ச்சியடைந்த நிலையிலோ அவை தறிக்கப்படலாம்.

நகர வனங்களில் உள்ள மரங்களின் ஆயுட் காலம், இயற்கை வனங்களிலுள்ள அத்தகைய மரங்களின் ஆயுட்காலத்தை விடக் குறைவானதாகும்.

நகர வனங்களில் உள்ள மரங்களுக்கு அவை நாட்டப்பட்ட காலத்திலிருந்து அவை சுயமாக நிலைத்து வளரும் காலம் வரை, கிரமமாக நீர் பாய்ச்ச வேண்டும். மழை வீழ்ச்சி, ஈரப்பற்றைத் தேக்கிவைக்கும் மண்ணின் ஆற்றல், நிலத்தில் நீர் வடிந்தோடும் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து, பாய்ச்சும் நீரின் அளவும், நீர் பாய்ச்சும் காலமும் வேறுபடலாம். வரண்ட காலங்களில், கட்டாயம் நீரைப் பாய்ச்ச வேண்டும். மிகையாக நீரைப் பாய்ச்சினாலும், அது மரத்தின் வேர் அழியக் காரணமாகி வளர்ச்சியைப் பாதிக்கும்.

நீர் பாய்ச்சுவதுடன் மட்டும் நின்றுவிடாது தகுந்த வகையில் பசளையிட்டு, நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்துக்கும், ஈடுகொடுக்கும் வகையிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு மரங்களால் எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணமும், அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நகர வனங்களைப் பராமரிக்கும் போது, பல சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையிலே, இத்துறை மிகவும் புதியது. அதற்குரிய தொழில்நுட்பம், ஆய்வுகளுக்கான பற்றாக்குறை மிகவும் அதிகமாகும். அத்துடன், நகர வனங்களின் பொருளாதார ரீதியிலான பெறுமதி மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதுடன், அரச, தனியார் துறைகளும் பொது மக்களும் இணைந்து செயற்படும் தன்மையும் குறைவாகவே காணப்படுகிறது- பொருத்தமற்ற முறையில் உருவாக்கப்பட்ட நிலப்பாவனைக் கொள்கைகள், நகரச் சூழலில் காணப்படும் சூழல், தொழில்நுட்பம் தொடர்பான தடைகள், நகர வனவியலையும் வனவியலையும் இணைத்த திட்டமிடலும் அபிவிருத்தியும் போன்ற பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. நகர வனங்களின் பராமரிப்புச் செலவு மிகவும் அதிகமாகும்.

இலங்கையிலும் இத்தகைய நகர வனங்கள் சிறிதளவிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. தலைநகரின் காலி முகத்திடலிலே வரிசையாக நாட்டப்பட்டுள்ள பனை, தென்னை, கத்தா மரங்களும், உலக வர்த்தகமையக் கட்டடத்தின் முன்னே வளர்க்கப்படும் மரங்களும் கூட நகர வனங்களே! தும்முள்ள சந்தியிலிருந்து பிரியும் வீதிகளின் இரு மருங்கிலும் காணப்படும் அடர்ந்த முதிய மரங்கள் அந்தப் பிரதேசத்தையே குளிர்மையாகப் பேணி வருகின்றமை நாம் யாவருமறிந்த ஒரு விடயமாகும். விகாரமகாதேவி பூங்கா கூட ஒரு நகர வனமேயாகும்.

நாம், தனி நபர்களாகக்கூட, நகர வனங்களை உருவாக்க முடியும், ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்னர், கொழும்பு - வெள்ளவத்தை கெனல் வீதியிலுள்ள கழிவு நீர்க்கால்வாய் துர்நாற்றம் வீசுவதாகக் காணப்பட்டது. நல்லுள்ளம் கொண்ட பிரதேச வாசிகளின் முயற்சியால் கால்வாயின் கரையோரத்திலே சிறிய மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. காலப் போக்கில் அவை வளர்ந்து இன்று பெருஞ்சோலையாகக் காணப்படுகின்றன. இப்போது அந்தப் பகுதி துர்நாற்றம் வீசுவதில்லை.

கடும் வெம்மை மிகுந்த வவுனியா நகரின் மையப் பகுதியிலே உள்ள வீதியொன்றிலும் கூட இத்தகைய முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்பு, பிரதேச வாசிகளின் முயற்சியால் அடைக்கப்பட்ட கூடுகளுக்குள், வீதியின் இரு மருங்கிலும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன. இன்று அவை அகலக் கிளை பரப்பி நிழல் தரும் பெரு மரங்களாகக் காட்சியளிக்கின்றன. நகர வனவியல் பற்றித் தெரிந்தோ தெரியாமலோ நகரப் பகுதிகளிலே இவ்வாறு பல நல்லுள்ளம் படைத்த மக்கள் மரங்களை வளர்த்து வருகின்றனர்.



இனிவரும் காலங்களில் நீங்கள் நகரப் பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் கட்டடங்களையும் கடைகளையும் மட்டுமே அவதானிக்காமல், நகர வனப் பகுதிகளையும் அவதானியுங்கள்.

நீங்கள் நகர வாசியாக இருப்பின், உங்கள் நகரத்தில் உள்ள நகர வனப் பகுதிகளை இனங்காணுங்கள்! உங்கள் பிரதேசத்திலும் சிறியளவிலாவது நகர வனங்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள்! அவை உங்களை மட்டுமன்றி உங்கள் எதிர்காலச் சந்ததியையும் சந்தோஷமாக வாழவைக்கும். எதிர்காலச் சந்ததியும் உங்களை வாழ்த்தும்!

Tuesday, March 30, 2010

விமானங்களின் புகையால் பூமியின் வெப்பநிலை குறையுமா?


வானம் எங்கும் பரிதியின் சோதி!
மலைகள் மீதும் பரிதியின் சோதி!
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரைகள் மீது தருக்களின்மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி!

என்றான் புரட்சிக் கவிஞன் பாரதி. சூரியனானது சங்ககாலம் தொட்டு, இலக்கியங்களிலும் நடைமுறை வாழ்விலும் சக்தியின் முதலாக, வடிவமாகப் போற்றப்பட்டு வருகிறது. சூரிய ஒளி கிடைக்கப்பெறும் நேரமே இரவையும் பகலையும் தீர்மானிக்கிறது.

மத்திய கோட்டுப் பிரதேசங்களில் இரவும் பகலும் சம நேரங்களாகக் காணப்படும். முனைவுப் பகுதிகளிலோ சமகாலங்களாகக் காணப்படும்.

அதாவது மத்திய கோட்டு வலயத்திலே ஒரு நாளில் ஏறத்தாழ 12 மணித்தியாலங்கள் இரவாகவும், 12 மணித்தியாலங்கள் பகலாகவும் காணப்படும். மாறாக முனைவுப் பிரதேசங்களிலோ தொடர்ந்து ஆறு மாதங்கள் இரவாகவும் அடுத்த ஆறு மாதங்கள் பகலாகவும் காணப்படும். அதேபோல, முனைவுப் பிரதேசங்கள் பனிப் பிரதேசங்களாகவும் மத்திய கோட்டுப் பிரதேசங்கள் வெப்ப வலயங்களாகவும் இருப்பதிலும் சூரியனின் வெப்பக் கதிர்ப்பே பெரும்பங்காற்றுகிறது.

கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியில், ‘பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளி, மற்றும் வெப்பத்தின் அளவை அவதானித்தால் என்ன?’ என்றொரு கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்தது. அதனடிப்படையில் தரவுகள் பதியப்பட்டன. 1950 களிலிருந்து பதியப்பட்டிருந்த அந்த நீண்டகாலத் தரவுகளின் அடிப்படையில் கடந்த நூற்றாண்டின் தசாப்தங்களுடன் பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளியினளவு மாறிவந்த போக்கு அறியப்பட்டது.

இன்று எமக்குக் கிடைக்கும்சூரிய ஒளியினளவானது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் சூரிய ஒளியுடன் தொடர்புடைய ஏனைய தரவுகள் இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன.

புவி மேற்பரப்பை வந்தடையும் சூரிய சக்தியினளவு ஏதோ ஒரு காரணத்தால் குறைந்து வந்த தென்பது கண்டறியப்பட்டது. பூகோளம் வெப்பமயமாதலானது எதிர்பார்த்ததைவிடப் பாரதூரமான விளைவுகளை உருவாக்கப் போவதை மறைமுகமாகச் சுட்டும் சமிக்ஞையாகவும் விஞ்ஞானிகள் இதனைக் கருதுகின்றனர்.

1980 களின் நடுப் பகுதியிலே, சுவிஸ் சம்மேளன தொழில்நுட்ப நிறுவகத்தின் புவியியல் ஆய்வாளரான அட்சுமு ஒகுமுரா என்பவராவார். கடந்த 3 தசாப்த காலங்களுக்குள் புவியை வந்தடையும் சூரியக் கதிர்ப்பினளவு 10 சதவீதத்தால் குறைந்துள்ளமையை அவதானித்தார். அவரது அவதானம் பூகோளம் வெப்பமடைதல் எனும் கருத்துடன் முரண்பட்டது.

பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையில் 1970 களின் பின்னர், சடுதியான அதிகரிப்பொன்று உணரப்பட்டமையே பூகோளம் வெப்பமடைதல் எனும் தோற்றப்பாடு தொடர்பான எண்ணக்கருக்களுக்கு வித்திட்டது. இத்தகையதோர் நிலையில், புவியின் மேற்பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்ப்பினளவு குறைவடைகிறது என்றால், புவியின் வருடாந்த சராசரி வெப்பநிலை குறைவடைய வேண்டுமல்லவா? இதுவே விஞ்ஞானிகளினதும் வினாவாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் அட்சமு ஒகுமுரா என்ற விஞ்ஞானி தனது ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகையில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பலரும் சூரியக் கதிர்ப்பினளவ தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, தமது முடிவுகளை வெளியிட்டனர்.

1980களில் இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் சூரிய ஒளியின் அளவு தசாப்தங்களுடன் குறைவடைந்துள்ள அதேநேரம், காலநிலையோ உஷ்ணம் அதிகரித்துள்ள காலநிலையாக மாற்றமடைந்தமையும் அறியப்பட்டது. இவ்வாறு நிலமேற் பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடைந்து செல்வதை ‘பூகோளம் மங்கலடைதல்’ (மிlobal னீiசீசீing) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.


மங்கலடையும் சதவீதம், ஒரு தசாப்தத்திற்கு 2 – 3 சதவீதமாகக் காணப்படும். இவ்வாறு மங்கலடையும் வீதம், பூமியின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிக் காணப்படுவதில்லை. வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய தோற்றப்பாட்டிற்கான காரணமெனக் குறிப்பிடப்படுகிறது.

வளிமண்டலம், பல படைகளைக் கொண்டது. அதன் மேற்படையை வந்தடையும் சூரியக் கதிர்ப்பு, காலத்துடன் பெரிய அளவில் மாற்றமடையவில்லை எனக் குறிப்பிடப் படுகிறது. அதேபோல் கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களுக்கான தரவுகளின் அடிப்படையில் நீரின் ஆவியாதல் வீதமும் ஆராயப்பட்டது.




பூகோளம் வெப்பமடைதல் காரணமாக நீரின் ஆவியாதல் வீதம் காலத்துடன் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, ஆவியாதல் வீதம், சில தசாப்தங்களுக்குக் குறைவடைந்து சென்றமையை அவதானிக்க முடிந்தது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே போக்கை அவதானிக்க முடிந்தது. நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடைந்தமையே இப்போக்குக்குப் பின்னணியிலிருக்கும் காரணம் என ஊகிக்கப்பட்டது. சூரிய ஒளி மங்கல டைந்து வருவதற்குரிய வலுவான ஆதாரமாக, இந்த ஆவியாதல் வீதத்தின் போக்கு கருதப்படுகிறது.

இவ்வாறு புவி மங்கலடைவதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து 3 நாட்களுக்கு, அமெரிக்க வான்பரப்பினூடான விமானப் போக்குவரத்துக்கள் யாவும் தடைசெய்யப்பட்டிருந்தன. அந்நிலைமை விஞ்ஞானிகளுக்குச் சாதகமாய் அமைந்தது. அவர்கள் அந்த மூன்று நாட்களுக்குமான சூழலின் சராசரி வெப்பநிலையைப் பதிவு செய்தனர். அவ் வெப்பநிலையானது சாதாரண நாளொன்றின் சராசரி வெப்பநிலையை விடச் சற்று அதிகமாகக் காணப்பட்டது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்கையில், விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டமையால் வழமையாக வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும் விமானப் புகைகள் எவையும் வெளிவிடப்படாமையே காரணமெனக் கண்டறியப்பட்டது. விமானங்களின் புகை வளி மண்டலத்தில் படலமாகக் காணப்படுவதால், பூமியை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் செறிவு குறைவடைகிறது.

அதேபோல, டீசல் போன்ற சுவட்டு எரிபொருட்களின் குறைதகனமும், மரங்கள் மற்றும் விறகுகளின் தகனமும் வளிமண்டலத்திலே, காபனீரொட்சைட்டுடன் கரிய காபன் துணிக்கைகளையும் கந்தகக் கூறுகளையும் வெளிவிடுகின்றன. இவ்வாறு வெளிவிடப்படும் மாசுக்களால் வளிமண்டலம் மாசடைவதே, பூகோளம் மங்குவதற்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது. இவை வளியை மாசுபடுத்துவதோடு மட்டுமின்றி மழை வீழ்ச்சியின் போக்கையும் பாதிப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கரிய காபன் துணிக்கைகளானவை நிலமேற்பரப்பிலே உள்ள வளியை மாசடையச் செய்வதில் சிறிதளவிலான பங்களிப்பையே செய்கின்றன. ஆனால், நிலத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. உயரத்திலே வளிமண்டலத்தை வெப்பமாக்குவதில் பெரும்பங்காற்றுகின்றன. அதேபோல, சூரியக்கதிர்ப்பை உறிஞ்சி, சமுத்திர மேற்பரப்பை மங்கலடையச் செய்கின்றன.

கரும் பொருட்கள் வெப்பக் கதிர்ப்பை உறிஞ்சும் தன்மையன. கரிய காபன் துணிக்கைகளும் அவ்வாறானவையே. அவை, சூரிய வெப்பத்தைத் தம்மகத்தே உறிஞ்சி வைத்திருப்பதால் வளிமண்டல வெப்பநிலையை உயர்த்துகின்றன. இவற்றால் பனிப் பாறைகள் உருகும். அதேபோல இக்கரிய காபன் துணிக்கைகள், பனிப் போர்வைகளில் படிகின்றன. இதனால் சாதாரணமாக வெப்பத்தை உறிஞ்சாத வெண்பனிப் போர்வைகள், மாசுற்று வெப்பத்தை உறிஞ்ச ஆரம்பிக்கும். புவிவெப்பமடைதலும், பனி உருகுதலும் மாறி மாறி நிகழும்.

அதேபோல வளிமண்டலத்திலே வெளிவிடப்படும் விமானப்புகைத் துகள்கள் காரணமாக, பகல் நேர வெப்பநிலை குறைந்து காணப்பட்டதுடன் இரவு நேர வெப்பநிலை சாதாரண நிலைமையைவிட அதிகரித்தும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிமலைகள் வெடிப்பதால் உருவாகும் தூசு துணிக்கைகள் நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவைக் குறைப்பதால் எரிமலைகள் வெடிக்கும் காலங்களில், அவை சார்ந்த பகுதிகளின் வெப்பநில¨யும் முன்னரை விடச் சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது. ஆனால் எவ்வளவு பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்தாலும் உருவாகும் தூசுப் படலங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே வளிமண்டலத்தில் காணப்படும்.

உயிரின் நிலைப்புக்கான அடிப்படைக் காரணிகளுள் நீரும் ஒன்றாகும். நீரியல் வட்டத்தை இயக்கும் சக்தி முதலாகச் சூரியன் கருதப்படுகிறது. பூகோளம் மங்குதல் காரணமாக நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடையும். அதன் காரணமாக, சூரிய வெப்பத்தால் நிலத்திலிருந்து ஆவியாகும் நீரினளவு குறைவடைய மழை வீழ்ச்சி பாதிக்கப்படும்.

நீரியல் வட்டத்தின் சமநிலை குழப்பப்படும். காலநிலையின் போக்கில் பாரிய மாற்றங்கள் கூட ஏற்படலாமெனக் கருதப்படுகிறது. பூகோளம் வெப்பமடைதலுக்கும் பூகோளம் மங்குதலுக்குமிடையிலான சமநிலை குலைக்கப்பட, ஈரப்பதனுடைய ஆனால் மழை குறைவான சூழலொன்று உருவாகும்.

பூகோளம் மங்கலடைதலும் பூகோளம் வெப்பமடைதலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. பூகோளம் மங்கலடைதல் என்ற விளைவு சில காலங்களாக, பூகோளம் வெப்பமடைதல் என்ற விளைவை மறைத்தபடி இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்வுகூறுல்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்களிலே, பூகோளம் மங்கலடைதல் தொடர்பான கருத்துக்கள் தோற்றம் பெறவில்லை.

ஆனால் பூகோளம் மங்கலடைதல் என்ற நிகழ்வு நடைபெற்றமை தான் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைத்துக் காட்டிவிட்டதோ என ஆய்வாளர்கள் சிந்திக்கின்றனர். அப்படியாயின், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், எதிர்வுகூறப்பட்டதைவிட அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல சூரிய ஒளி நேரடியாகப் புவியை வந்தடையும் போது, நில மேற்பரப்பிலுள்ள நீர் அதிகளவில் ஆவியாகி வளியிலுள்ள மாசுக்களுடன் இணையும். நீராவியே பிரதானமான பச்சை இல்ல வாயுவாகும். அதேசமயம், ஆவியாதலினாலும் மழையாலும் பூகோளம் மங்குதல் பாதிக்கப்படும். மழையானது வளியின் மாசுத் துணிக்கைகளை துடைத்தகற்றிவிடும். மண்ணிற முகில்கள், இந்தப் பூகோளம் மங்குதல் எனும் தோற்றப்பாட்டிற்கமைய பூகோளம் வெப்பமயமாதலின் 50 சதவீத விளைவுகளை மறைத்துவிட்டதாக வளிமண்டல இரசாயனவியலாளர் வீரபத்திரன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

அவரது ஆய்வானது, தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களை அடிப்படையாகக் கொண்டது. 1980 களில், பூகோளம் வெப்பமடைதலை, வளிமண்டலத்திற்கு சல்பேற்றுகளை வெளியேற்றுவதன் முலம் குறைக்கலாமெனக் கருதினர். ஆனால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் சல்பேற்றுக்கள் அமில மழைக்குக் காரணமாகின்றன. கரிய காபன் துணிக்கைகள் சுகாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்க வல்லவை.

ஒவ்வொரு தசாப்தத்திலும் உருகும் துருவப் பனியின் அளவு கணிக்கப்பட்டு வரைபுபடுத்தப்பட்டது. அவ்வரைபின் போக்கு, 60 களில் குறைவடைந்து பின்னரான காலப் பகுதிகளில் சடுதியான அதிகரிப்பைக் காட்டியது. இந்நிலைமை, பூகோளம் மங்கலடைதல் தொடர்பான கருத்துக்களை மேலும் வலுவூட்டியது.

60 களிலும், 70 களிலும் துணிக்கைப் பதார்த்தங்களால் ஏற்படுத்தப்பட்ட வளி மாசு, பூகோளம் வெப்பமடைதலுக்கு எதிராக காலநிலையைத் தொழிற்பட வைத்தது. பூகோளம் மங்கலடைதல் எனப்படும் தோற்றப்பாட்டை உருவாக்கி பூகோளம் வெப்பமடைதலை மறைத்தது. அதிகரிக்கும் பச்சையில்ல வாயுக்கள், புவியின் வெப்பத்தை அதிகரிக்க, அதிகரிக்கும் துணிக்கை மாசுக்கள் புவிமேற்பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்களைக் குறைத்து, புவியின் வெப்பத்தைக் குறைத்தன. ஒன்றுக்கொன்று எதிரான விளைவுகளைத் தரக்கூடிய மாசுக்கள் ஒருங்கே காணப்பட்டமையால் வெப்பமாதலின் விளைவுகள் குறைக்கப்பட்டன.


இதன் காரணமாக, கைத்தொழில் மயமாக்கப்பட்ட பல நாடுகள், தாம் வெளியேற்றும் துணிக்கைப் பதார்த்தங்களைக் குறைக்க அல்லது சுத்திகரித்து வெளியேற்றத் தொடங்கின. 1991 களின் பின்னர், வளி மாசடைதலைக் குறைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. இவற்றினால், 1990கள் வரை மங்கலடைந்து வந்த புவியின் போக்கு 1990 களின் பின்னர் எதிராகத் திரும் பியது.

மங்கலடைந்து வந்த புவி, வளி மாசுக்கள் குறைக்கப்பட்டதால், மீண்டும் பிரகாசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகள், வளிமாசடைதலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக பூகோளம் மங்கலடைதல் குறைக்கப்படுகிறது. கடந்த சாப்தத்திலே, பூகோளம் மங்கலடையும் போக்கு 4 சதவீதத்தால் குறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 1970 களிலும் 1980 களிலும் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆபிரிக்காவின் சகாரா வரட்சி கூட, பூகோளம் மங்கலடைவதால் ஏற்பட்டிருக்கலாமெனவே கருதப்படுகிறது.

தற்போது, எமது நடவடிக்கைகள் சூழலை வெப்பமாக்கும் மாசுக்களை அதிகளவில் வெளிவிடும் அதேவேளை, சூழலைக் குளிர்மைப்படுத்தும் மாசுக்கள் வெளிவிடப்படுவதைக் குறைக்கின்றன.

இதனால், புவி வெப்பமடையும் வீதம், புவியின் வெப்பநிலை குறைவடையும் வீதத்தைவிட அதிகமாகக் காணப்படும்.

இத்தகையதோர் நிலையில் எம்மால் செய்யக்கூடியது, பூகோளம் வெப்பமடையும் வீதத்தைக் குறைப்பதேயாகும். அதனை நாம் இரு வழிகளில் மேற்கொள்ளலாம். ஒன்றில் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம். அல்லது, பச்சை இல்ல வாயுக்களை உறிஞ்சக்கூடிய மரங்களை நாட்டி வனப் பகுதிகளைப் புதிதாக உருவாக்கலாம். அவற்றைக் கிராமத்தில் தான் உருவாக்க வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமே இல்லை. அந்த வனப் பகுதிகள் நகர வனங்களாகக் கூட இருக்க முடியும்.

எம்மால் இயன்றவரை முயன்று, நாம் யாவருமிணைந்து பூகோளம் வெப்பமடையும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலன்றி உருவாகப் போகும் விளைவுகளை வேறு எந்தவகையிலும் தடுக்க முடியாது.

Sunday, March 28, 2010

மனிதனும் மாறி வரும் காலநிலையும்

"மனிதன் தன்னை இயற்கையில் இருந்து வேறு படுத்திப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்"



நாகரிக உலகில் மனிதன் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவு விரிசலடைய ஆரம்பித்தது. இந்த விரிசல் கைத்தொழில் புரட்சியுடன் துரிதமாக அதிகரித்தது. அதன் விளைவைத்தான் இன்று ‘காலநிலை மாற்றம்’ எனும் பெயரில் முழு உலகுமே அனுபவிக்கின்றது.

இயற்கையும் மனிதனும் தன் தன் வழியில் சுயாதீனமாக இயங்கத் தொடங்கிவிட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால் ஏற்படும், ஏற்படப் போகும் இழப்பு இரு தரப்பினருக்கும் பொதுவானது. ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்வியல் முறைமையே எப்போதும் வரவேற்கப்படுகிறது. அதே சமயம் அதுவே நியதியெனவும் கருதப்படுகிறது.

தன்னலமிக்க மனிதனின் ஊனக் கண்ணுக்கு நியதிகள் தெரிவதில்லை. பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமுமே அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்ட இயற்கையை மதிக்காத நவீன உலகினுள் அடியெடுத்து வைத்தவனுக்கு இயற்கை கொடுத்த தண்டனை தான் ‘காலநிலை மாற்றம்’ என்பர்.

சூழல் பிரச்சினையாகிய காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகக் கருதப்படக் கூடிய வகையிலே நாம் அன்றாடம் பல விடயங்களை அவதானிக்கின்றோம். ஆனால் அவை பற்றி ஆழச் சிந்தித்து, அவற்றின் பின்னணி தொடர்பாக ஆராய முற்படுவதில்லை. அவசர உலகுடன் உழல்கையில் நேரமும் அதற்கு இடங்கொடுப்பதில்லை.

அண்மையில் கொழும்பில் பூமியின் வெப்பநிலை உயர்தல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்றை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் முக்கிய வளவாளராக, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ் கலந்துகொண்டிருந்தார். அவருடன் இலங்கையின் ஆய்வாளர்களும் வளவாளர்களாக இணைந்திருந்தனர். பிரதம விருந்தினராக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அழைக்கப்பட்டிருந்தார். ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்படப் பலதரப்பட்ட விஞ்ஞான மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். ஆர்வலர்களின் சந்தேகங்களை வளவாளர்கள் தீர்த்து வைத்தனர். அத்துடன் ஆர்வலர்களும் வளவாளர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கலந்துரையாடல் ஒரு களமாக அமைந்திருந்தது.

அசாத்தியமான பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆர்வலர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு குறித்த பருவ காலத்தில் மட்டுமே பரவும் நோயாகக் காணப்பட்ட டெங்கு, இன்று வருடத்தின் பல மாதங்களுக்கு நீடிப்பதற்கும் கூடப் பருவகால மழையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமெனக் கருதப்படுகின்றன. மழை, பருவம் மாறிப் பெய்ய ஆரம்பித்துள்ளதை விவசாயிகள் மட்டுமன்றி சாதாரண பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் வெளிநாட்டவரொருவர் பேருவளை கடற்பரப்பில் மூழ்கிய செய்தியும் காலநிலை மாற்றத்தின் அறிவிப்பாகவே தென்பட்டதாக பல வருடங்களாகச் சுழியோடிவரும் ஆழ்கடல் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுவாக தை, மாசி மாதங்களில் இலங்கையின் தென் பகுதிக் கடற் பரப்பில் சுழியோடுவதற்குகந்த சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அத்தகைய சூழ்நிலை மாறிவருவதையே அந்த வெளிநாட்டவரின் மரணச் செய்தி புலப்படுத்துவதாக அப்பொறியியலாளர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் யுனெஸ்கோ அமைப்பினால் விஞ்ஞானத்துறை அமைச்சர்களுக்கான கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்திலே காலநிலை மாற்றத்துக்கு உலக மனிதர்களின் மனப்பாங்கு பங்களிக்கிறதா என ஆராயப்பட்டது. ஆனால் கடந்த வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட அத்தகைய கூட்டத்தில் உலக மனிதர்களின் மனப்பாங்கு, காலநிலை மாற்றத்தை தோற்றுவிப்பதில் தனது பங்களிப்பை செய்கிறது என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தன்னைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளும் மனித மனப்பாங்குகள் மாற்றம் பெற்றாலன்றி வேறெந்த வகையிலும் காலநிலை மாற்றத்தை வினைத்திறன் மிக்க வகையில் கட்டுப்படுத்த முடியாதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் வரை யாவரும் உணர வேண்டும். அதற்கு வெகுசனத் தொடர்பூடகங்கள் முன்னிலையில் நின்று செயற்பட வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலே வசிக்கும் பலருக்கு காலநிலை மாற்றம் பற்றியோ அதனை ஏற்படுத்தும் காரணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ அறியும் ஆர்வம் மிக மிகக் குறைவு.

ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளே, தமது காபன் வெளியேற்றத்தின் மூலம் காலநிலை மாற்றத்துக்கு அதிக பங்களிப்பைச் செலுத்துகின்றன. மாறாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்துக்கு மிகக் குறைந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ள போதும் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளாகவும் காணப்படுகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் அழிந்து போகும் அபாயத்திலுள்ளன. இலங்கை போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளும் அழிந்து போய்விடும் நிலையிலேயே காணப்படுகின்றன. அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால் இலங்கையின் தலைநகர் கூட மத்திய பகுதிக்கு -கியோட்டோ உடன்பாடானது (றிiyoto ஜிrotoணீol) உலக நாடுகள் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தை வருடாந்தம் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியது. அத்துடன் ஒவ்வொரு நாடுகளும் அவ்வுடன்பாட்டில் கைச்சாத்திட வேண்டியதும் கட்டாயமாகியது. அதிகளவில் பச்சையில்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டது.

அதேபோல, கடந்த ஆண்டு பலரும் எதிர்பார்த்திருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டிலே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை யென்பது வருந்தத்தக்க விடயமாகும். உலகமே அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் காலநிலை மாற்றமும் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ், அண்டார்டிகா பிரதேசத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுடன் இணைந்து பல வருடங்களாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டில் கலந்துகொள்வோர், அண்டார்டிக்காவில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுடன் காலநிலை மாற்றம் தொடர்பாகக் கலந்துரையாடக் கூடிய வகையில் செய்மதித் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இது போன்ற பனிப் பிரதேசங்களில் செய்மதித் தொழில் நுட்பத்தால் நேரடித் தொடர்பாடல் வசதிகளை மேற்கொள்வதொன்றும் இலகுவான காரியமல்ல. பல சிரமங்களுக்கு மத்தியில் ஒளிப்பட உதவியுடன் நேரடியாகக் கதைத்தல் போன்ற பல வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானிகளும் மாநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மாநாட்டில் பங்குபற்றியோர் மட்டுமன்றி முழு உலகுமே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என எதிர்பார்த்திருந்தது. எனினும் காலநிலை மாற்றத்தை ஆய்வுசெய்த விஞ்ஞானிகளுடன் கதைத்து நிலைமையை ஆராய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் தோன்றவில்லை. அழைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. தொடர்பாடல் வசதிகளைப் பெறுவதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் பட்ட சிரமங்களும் விழலுக்கிறைத்த நீராயின.

இது நாம் ஒவ்வொருவரும் வருந்த வேண்டியதோர் விடயமாகும். நடந்தவை நடந்தவைகளாகவே இருக்க, இனியாவது நாம் எமது மனப்பாங்குகளை மாற்ற முயல வேண்டும். இல்லையேல், காலநிலை மாற்றத்தால் உருவாகப் போகும் புதுப்புது விளைவுகள் தவிர்க்க முடியாதனவாகிவிடும்.

காலநிலை மாற்றம் எனப்படுவது எங்கோ நடக்கும் விடயமல்ல. மனித நடமாட்டமுள்ள கண்டங்களின் செயற்பாடுகளால் மனித நடமாட்டமற்ற துருவப் பகுதிகளிலுள்ள பனி உருகுகிறது. துருவப் பகுதிப் பனிப் பாறைகளே உலகின் காலநிலையைப் பேணும் பிரதான காரணிகளாகையால், அவை உருக, பூமியின் காலநிலையும் மாறத் தொடங்குகிறது.

காலநிலை என்பது, நீண்டகால அடிப்படையில் அவதானிக்கப்படும் விடயம் என்பது மட்டுமன்றி இயற்கையுடன் தொடர்புடைய விடயமுமாகும். காலநிலையின் அடிப்படையிலேதான் மனித நாகரிங்கள் வளர்ச்சியுற்று மனிதன் தனது இருப்பை உறுதி செய்துகொண்டுள்ளான். ஆயினும், காலநிலையின் அடிப்படை பற்றி ஆழச் சிந்திக்கத் தவறியதால் கைத்தொழிலாக்கம், நவீன மயமாக்கம், தொழில் நுட்ப அபிவிருத்தி, இலத்திரனியல் அபிவிருத்தியென ஒன்றுக்கு மேற்பட்ட பல பரிமாணங்களில் அபரிமித வளர்ச்சி கண்டான்.

இந்நிலையில் தான் ‘ஓசோன் படை அரிப்படைதலும் பச்சையில்ல வாயுக்களின் அதிகரிப்பும் கண்டு பிடிக்கப்பட்டது. அபரிமித வளர்ச்சியின் வேகம் குறைந்தது. சூழலுக்குத் தீங்கை விளைவிக்காத வகையிலான பசுமை உற்பத்திகளின் தேவை அதிகரித்தது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பெரிய பனிப்பாறையொன்று, பனிப்படையிலிருந்து பிரிந்து விலகியது.

செய்மதித் தொழில்நுட்பத்தால் இந்நிகழ்வை உணர்ந்த ஆய்வாளர்கள், விமானங்களில் சென்று, பனிப்பாறை விலகுவதைப் பல கோணங்களில் ஒளிப்படம் மற்றும் புகைப்படம் எடுத்து ஆராய்ந்தனர்.

இந்நிலையில் தான் உலகம் காலநிலை மாற்றத்தை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதத் தொடங்கியது. பல்வேறு மட்டங்களிலும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து ஆறு மாதங்கள் பகலாகவும் அடுத்த ஆறு மாதங்கள் இரவாகவும் காணப்படும் துருவப் பகுதிகளிலே வருடக் கணக்காகக் கூடாரமிட்டு, காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளைப் பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. மனித சஞ்சாரமற்ற இந்தத் துருவப் பகுதிகளில் பல நாடுகள் தமக்கான உரிமையை நிலைநாட்டி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது அண்மை நாடான இந்தியா கூட அண்டார்டிகாவில் தக்ஷின கங்கோத்ரி எனும் பெயரிலே ஆய்வு நிலையமொன்றை அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

துருவப் பகுதிகள், பனிப் பிரதேசங்களாக இருக்கின்ற போதிலும், ஈரப்பற்றற்றவை உலர்ந்த வளிமண்டலத்தையுடையவை. அப்பிரதேசங்களிலே தங்கி ஆய்வினை மேற்கொள்வதற்கு அது தொடர்பான ஆர்வமும் விருப்புமுடையவர்களால் மட்டுமே முடியும்.

விஞ்ஞான ஆய்வு என்பது குறுகிய காலத்திற்குள்ளே நிகழ்த்தப்பட்டு முடிவுகளை வெளிவிடத்தக்க ஆய்வல்ல. ஆய்வுக்காலம், ஆய்வைப் பொறுத்து மாறுபடும். சில ஆய்வுகள் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். விஞ்ஞானம் எனும் பெருங்கடலிலே, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை ஒரு கைப்பிடியளவானவை மட்டுமே. ஆகையால் விஞ்ஞான ஆய்வுகள் விடப்பட்ட இடத்திலிருந்து தொடரப்பட வேண்டியவை. விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் நிரந்தரமானவையல்ல. காலத்துடன் அம்முடிவுகளும் புதுப்புதுக் கோணங்களில் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமிக்க முடியாத முடிவுகள் வழக்கொழிந்து போகும். இதுவே விஞ்ஞானத்தின் அற்புதம்.

இத்தகையதோர் நிலையை விஞ்ஞானம் கொண்டுள்ளதாதல் தான் பல விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் கடதாசிகளுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் முடங்கிப்போய்விடுகின்றன. விஞ்ஞானச் சங்கேத மொழியை விளங்கக் கூடிய சமூகத்தவரைச் சில ஆய்வுகள் சென்றடைகின்றன. மிகச் சில மட்டுமே சாதாரண பாமரன் வரை சகலரையும் சென்றடைகின்றன. இன்றைய காலகட்டதில் காலநிலை மாற்றமானது உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்துள் ளது. அது மட்டுமன்றி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதனதும் வாழ்க்கைப் பிரச்சினை யாகக் காலநிலை மாற்றம் மாறிவிடும் என்று எதிர்வு கூறக்கூடிய அளவுக்கு அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உலகின் பொருளாதார சமூக நிலைமைகளில் பெருஞ் செல்வாக்கு செலுத்தும் காரணியாகவும் இக்காலநிலை மாற்றம் தி!றிவருகிறது.

அண்மைக் காலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த உலகளாவிய நிதி நெருக்கடியை விட அதிகளவிலான நிதி நெருக்கடியைக் காடழிப்பு தோற்றுவித்துள்ளது. ஆனால் அதை எவரும் உணர்வதில்லை.

இயற்கை வளங்கள் மனிதத் தலையீடு இன்றி இயற்கையாகவே கிடைக்கப் பெறுவதால் அவை இலவசமானவை என்று நாம் கருதுகின்றோம். ஆகையால் அவற்றின் பண ரீதியான பெறுமதி பூச்சியமாகவே கருதப்படுகிறது. இயற்கை வளங்களுக்கான பண ரீதியான பெறுமதியைக் கணிக்க எத்தனிக்கும் போதே எவ்வளவு பெரியளவிலான நிதி அநியாயமாக விரயம் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை விளங்கும். இன்று முழு உலகுமே வர்த்தகமயப்பட்டமை தான், இயற்கை வளங்களின் பெறுமதியையும் பண ரீதியாக அளவிட வழிகோலியது. இயற்கை வளங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் பயன்களை அடிப்படையாகக் கொண்டே இப்பெறுமதி கணிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட வளங்களை மீள உருவாக்க முயல்கையிலேயே, அவ்வளங்களின் உண்மைப் பெறுமதி விளங்குமென அனுபவசாலிகள் கூறுவர். இந்நிலை தான், சூழல் பொருளியல் எனும் புதியதோர் துறை தோன்றுவதற்கும் வழி வகுத்தது.

இலங்கையின் கடற்பரப்பு ஆழங் குறைந்ததாகையால், கடல் வாழ் உயிரினங்களின் வளம் இங்கு ஏராளம் இலங்கை பவளப் பாறைகளுக்கும் பெயர்போனது. கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்குள் இந்த அழகிய பவளப் பாறைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

அதற்கு பவளப் பாறைகளின் தொடர் அகழ்வும், 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தமுமே காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதையடுத்து, இயற்கை வளங்களை மீள உருவாக்குவதில் ஆர்வமுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்று பவளப் பாறைகளை ஒத்த சீமெந்துப் பாறைகளை கடலுக்கடியில் அமைத்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்குகந்த சூழலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் இயற்கையான பவளப் பாறைகளில் பெருகுமளவிற்கு செயற்கை பாறையில் கடல் வாழ உயிரினங்கள் உடனடியாகப் பெருகவில்லை. அத்துடன் இத்திட்டத்திற்கான முதலீட்டுச் செலவும் பராமரிப்புச் செலவும் மிகமிக அதிகமாகும். அச்செலவுகளை உணர்கையிலேயே அழிந்த பாறைகளின் பெறுமதி விளங்குவதாக அந்தத் திட்டத்தில் பணிபுரிவோர் தெரிவித்திருந்தனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை யிலே, அவை பண வசதி படைத்தவை. எந்த ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டாலும், அதிலிருந்து இலகுவாக மீளக்கூடியவை. ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அவ்வாறானவை யல்ல. 5 வருடங்களுக்கு முன் இலங்கையைத் தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நாம் முற்றாக மீளவில்லை. இத்தகைய நிலை அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை. விரைவிலேயே அவை தம்மை சுதாரித்துக்கொள்ளும்.

எம் ஒவ்வொருவரினதும் மனப்பூர்வமான, ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளலாம். சிறந்த வினைத்திறன் மிக்க அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்களை பொதுமக்களின் பங்களிப்புடன் தான் உருவாக்க முடியும்.

சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தும் வகையிலே தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது அன்றாடச் செயற்பாடுகளிலே மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே, பல்வேறு வகைகளில் எமது பங்களிப்பைச் செலுத்திச் சூழலைப் பாதுகாக்க முடியும்.

ஆடம்பரமான வாழ்க்கை முறைமைகளைத் தவிர்த்து எளிமையாக வாழப் பழகவேண்டும். எந்த ஒரு பொருளையும் பாவனையைக் குறைத்தல், மீள்பாவனை செய்தல், மீள் சுழற்சி செய்தல் ஆகிய தத்துவங்களுக்கமைய பாவிக்க வேண்டும். சிறிய பொலித்தீன் துண்டாயினும், குப்பைகளைக் கண்டபடி வீசியெறியாது. அவற்றிற்குரிய இடத்திலே போடவேண்டும். வீடுகளில் தேவையற்ற மின்சக்திப் பாவனையைக் குறைக்க வேண்டும். தேவையற்ற வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சிறிய செயற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் கைக்கொள்ள முயற்சித்தாலே, காலநிலை மாற்றம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

இவை யாவற்றிற்குமப்பால், சகல வெகுசனத் தொடர்பூடகங்களும் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அறிவூட்ட ஒன்றிணைய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும்.

Monday, March 22, 2010

தூய நீரைச் சேகரிக்க உதவும் முப்பரிமாண நனோ துணிக்கைகள்


நீரைத் தூய்தாக்கும் தொழில் நுட்பத்தின் விளைத் திறனை முப்பரிமாண நனோ துணிக்கைகளின் பிரயோகம் அதிகரிக்கின் றது எனக் குறிப்பிடப்படுகிறது. நீரைச் சுத்திகரிக் கும் மென் படையில் நனோ துணிக்கைகளைச் சேர்க்கும் போது அதன் வினைத் திறன் இரு மடங்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதே முறை மூலம் உவர் நீரையும் நன்னீராக்கலாம். ஆனால் இம்முறைக்கு சக்தி அதிகம் தேவையா தலால் பணச் செலவும் அதிகமாக இருக்கும். அலுமினோ சிலிக்கேற்று கனியத்திலிருந்து பெறப்படும் நனோ துணிக்கைகள் ஏறத்தாழ 20nm. விட்டத்தையுடையவை. அவை மென் படையுடன் சேர்ந்து மென்படையின் இயல்பு களை மாற்றின.

அதனால் மென் படைகள் ஐதரசன் நாட்ட இயல்புடையனவாகவும் மாற் றப்பட்டன. இதனால் நீர் இலகுவாக வடிகட் டப்பட்டது. நனோ H2O என்ற நிறுவனத்தின் கீழ், கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழல் பொறியியலாளரான எரிக்ஹோக் என்பவரே இப்புதிய முறைமையைக் கண்டுபிடித்தவராவார்.

2005 ஆம் ஆண்டளவில் ஆய்வு மட்டத்தில் மட்டுமே இருந்த இந்த விடயத்தை 4 ஆண்டுகளின் பின்னர் வர்த்தக மயப்படுத்தும்படி 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டது.

உற்பத்தியை அதிகரித்து இவ்வருடம் இந்தத் தொழில் நுட்பத்தைச் சந்தைப்படுத்தும் திட்டத்தையும் நனோசி2லி நிறுவனம் கொண்டுள்ளது. பொதுவாக, ஐதரசன் நாட்ட இயல்புடைய பதார்த்தங்கள் மாசுக்களை வடிக்கும் தன்மை குறைவானவையாகக் காணப்படும். இக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக இந் நிறுவனம் ஐதரசன் நாட்ட இயல்புடைய பதார்த்தத்தை உருவாக்காமல் கலப்புப் பதார்த்தமொன்றை உருவாக்கியுள்ளது.

அத்துடன் இந்நிறுவனம் உருவாக்கியிருக்கும் நனோ துணிக்கைகள் முப்பரிமாணக் கட்டமைப்பை உடையவை. இந்தப் புதிய முறைமையை, சாதாரண உற்பத்திச் செயன் முறையுடன் இணைத்துச் செயற்படலாமெனவும் குறிப்பிடப்படுகிறது.